• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு - 13

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம்-13

விழிகளில் உறக்கம் என்பது மருந்துக்கும் இன்றி வாசலையே பார்த்துப் பார்த்து இருந்த மரகதத்தை அடுத்த நாளின் விடியல் மட்டுமே வரவேற்றது.

வேகமாக எழுந்தவர், காலில் செருப்பைக் கூடப் போடமறந்து அந்த கிராமத்தின் ஒதுக்குப்புறம் என்று நினைக்கும் அத்தனை இடங்களிலும் மகளைத் தேடினார். ஏன் இங்கு தேடுகிறோம் என்கிற எண்ணம் இன்றி, அவளை என் கண்ணில் காட்டிவிடு கடவுளே என்கிற மன்றாடலுடன் உயிர் கருக, உணர்வுகள் மரக்க விழிகளை நாளா பக்கமும் சுழற்றி மகளைத் தேடினார்.

அவளின் தாவணி தெரிகிறதா, அணிந்திருந்த பாவாடை தெரிகிறதா என்று ஒவ்வொரு இடத்தையும் உற்றுப் பார்த்தும் மகள் சம்மந்தமாக எந்தவொரு தடயமும் கிடைக்க மறுத்தது அவருக்கு!

மறுபடியும் கோவில் வரை நடந்து சென்று ஐயரிடமும் விசாரித்து, அங்கேயும் ஆனபதில் கிடைக்காததில், கண்களில் கண்ணீர் வழிய அதை துடைக்கவும் மறந்து சாலையின் இரு மருங்கிலும் பார்த்துப்பார்த்து நடந்தவரின் உதடுகளோ, "கவி.. கவி.. கவி..." என்று மகளின் பெயரையே உருப் போட்டது.

இனித் தேடுவதற்கு இடம் இல்லை என்றானதும், பொழுது நன்கு புலரவும், கண்ணில் படும் மனிதர்களிடம் எல்லாம் விசாரிக்க ஆரம்பித்தார். யாருக்குமே கவி போன இடம் தெரியவில்லை.

எங்காவது, யாராவது மகளைக் கண்டிருக்க மாட்டார்களா என்கிற ஏக்கம் நிறைந்திருந்தது அவர் முகத்தில்.

தங்கமும் வேலனும் எழுந்துவிடவும், "கவியின் தோழிகளிடம் விசாரிப்போமா அக்கா......?" என்று கேட்டாள் தங்கம்.

"நீ அக்காவுடன் இரு. நான் அவர்களிடம் விசாரிக்கிறேன்.." தங்கத்திடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டான் வேலன்.

"நம் கந்தையா அண்ணாவின் மகன் ராஜை இவளுக்கு மிகவும் பிடிக்குமே... அவனிடம் விசாரித்துப் பார்ப்போமா..." தங்கம் கேட்கவும்,

"ஆமாம் தங்கம். இவளும் அண்ணா அண்ணா என்று அவனோடு நல்ல ஒட்டு. அவனுக்குச் சிலநேரம் ஏதாவது தெரிந்திருக்கும்..." என்றபடி மரகதம் ராஜ் வீட்டுக்குக் கிளம்பினார்.

அவருடன் தங்கமும் சேர்ந்துகொண்டாள்.

"மூளையே வேலை செய்யமாட்டேன் என்கிறது தங்கம். நீ சொன்னபடியால் தான் ராஜின் நினைவு கூட வந்தது..." இயலாமையோடு சொன்னார் மரகதம்.

"இப்படி என் கண்ணில் படாமல் மறைந்திருந்து என்னைச் சித்திரவதை செய்கிறாளே இவள். நான் எங்கே போய்த் தேட... அம்மா தேடுவார்களே, அவளைக் காணாமல் பதறுவார்களே என்று கூடவா யோசிக்க மாட்டாள். அல்லது யோசிக்கும் நிலையில் என் மகள் இல்லையோ..." என்றவருக்கு அழுகை வந்தது.

"இல்லை இல்லை! அப்படி எதுவும் நடக்காது. நான் பட்ட கஷ்டமே போதும். கடவுள் அவளுக்கு எந்தக் கஷ்டமும் கொடுக்கமாட்டார். என்ன கொஞ்சம் வாய் கட்டுவாள், மற்றும்படி எந்தத் தப்பும் அவள் செய்தது இல்லையே. நான் யாரிடம் போய் விசாரிப்பேன் தங்கம்... எனக்கு யாரை தெரியும்?" அவரின் வாய் தன்பாட்டிற்குப் புலம்பினாலும் கால்களோ ராஜின் வீட்டுக்கு வேகமாக நடந்தது.

"சும்மா நீங்களே ஏதாவது கற்பனை பண்ணி கலங்காதீர்கள் அக்கா...அப்படி ஒன்றும் நடக்காது." என்று ஆறுதல் சொல்லியபடி தங்கமும் கூட நடந்தாள்.

ராஜின் வீட்டுக்கு சென்றால், அங்கு அவன் தாயாரும் அழுதுகொண்டிருந்தார்.

அதை உணராமால், "அன்னமக்கா, ராஜ் எங்கே? ஒருக்கால் அவனை கூப்பிடுங்கோ..."என்று கேட்டார் மரகதம்.

"அவன் வைத்தியசாலையில் நிற்கிறான் மரகதம். ஏன் அவனைக் கேட்கிறாய்?" என்று கேட்டார் அன்னம்.

"இந்தக் கவியை நேற்று இரவில் இருந்து காணவில்லை அன்னம்மாக்கா…” இதைச் சொல்வதற்கு முதலே அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

அதை முந்தானையால் துடைத்துக்கொண்டே, “அவளுக்கு ராஜை மிகவும் பிடிக்கும். அதுதான் அவனுக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்க வந்தேன்..." என்று சொன்னார்.

"என்னது? கவியைக் காணவில்லையா? அப்படி எங்கே போனாள்? இப்படிச் செய்ய மாட்டாளே. நீ அடிப்பாய் என்று தெரியுமே அவளுக்கு." என்று அதிர்ச்சியுடன் கேட்டவர், தங்கத்திடம் விவரங்களைக் கேட்டு அறிந்துகொண்டார்.

தன் வேதனையில் மரகதம் உழன்றுகொண்டிருக்க, "ராஜ் எதற்காக வைத்தியசாலையில் நிற்கிறான் அன்னம்மாக்கா? அவனுக்கு என்ன?" என்று கேட்டாள் தங்கம்.

"அவனுக்கு இல்லை. இவருக்குத்தான் கையும் காலும் இழுத்துவிட்டது. அது போதாது என்று இன்னும் என்னென்னவோ சொல்கிறார்கள் தங்கம். எனக்கு ஒன்றும் புரியவில்லை..." என்ற அன்னம் கணவனை நினைத்து அழுதார்.

அப்போதுதான் மரகதத்துக்கும் அவரின் நிலை உரைத்தது.

"கந்தையா அண்ணாவுக்கா... முதலும் கை கால் வலி என்றுதானே சொன்னார். ச்சே! கஷ்டம் வந்தால் சுற்றி வளைத்துத்தான் வரும் போல. எனக்கு என் மகளை எங்கே போய்த் தேட என்றே தெரியவில்லை அன்னம்மாக்கா. வயதுக்கு வந்தபெண் வேறு..." என்று அரற்றியவரிடம்,

"நீ வீட்டுக்கு போ மரகதம். ராஜ் வந்தவுடன் நான் உன்னிடம் அனுப்பி வைக்கிறேன். கவலைப் படாதே.. ஒன்றும் நடக்காது! அவள் வந்துவிடுவாள்..." தன் வேதனையை விழுங்கிக்கொண்டு ஆறுதல் சொன்னார் அன்னம்.

எங்கு போய் யாரிடம் மகளை பற்றி விசாரித்தாலும் பதில் பூச்சியமாகவே இருந்ததில் இனி என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு தெரியாத காட்டில் திசை தேடும் பறவையாய் நின்றார் மரகதம்.

அவர் மலை போல் நம்பி இருந்த ராஜை வேறு இப்போது பிடிக்க முடியாமல் போனதில், அந்தக் கிராமத்தை மட்டுமே அவரின் உலகமாக வாழ்ந்த பெண்மணிக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை.

"ராஜ் வரட்டும் அக்கா... அவன் வந்ததும் இனி என்ன செய்வது என்று கேட்கலாம். படித்தபிள்ளை அவன், அவனுக்குத் தெரியும் என்ன செய்யவேண்டும் என்று. அதுவரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள்..." என்றாள் தங்கம்.

மகளைத் தொலைத்த தாயால் பொறுமையாக இருக்க முடியுமா, "இல்லை தங்கம். நீ இங்கேயே இரு! நான் இன்னும் ஒருதடவை ஊருக்குள் தேடிக்கொண்டு வருகிறேன்...." என்றபடி வலுவிழந்த கால்களை நம்பி மீண்டும் மகளைத் தேடி ஓடியது அந்தத் தாய்ப் பறவை.

அவளின் தோழிகளிடம் விசாரித்த வேலனும் எந்தப் பதிலும் இன்றி வெறும் கையுடனே திரும்பி வந்தான்.

மதியத்தைத் தொடும் வேளையில், தாயின் மூலம் விஷயம் அறிந்த ராஜ் பதைப்புடன் வேகமாக கவியின் வீட்டுக்கு வந்தான்.

"ஆன்ட்டி, கவியைக் காணவில்லையாம் என்று அம்மா சொன்னார்கள். உண்மையாகவா? இன்னும் அவள் வீட்டுக்கு வரவில்லையா..." கூடப்பிறக்கா விட்டாலும், உடன் பிறந்தவள் போல் சிறுவயதில் இருந்து வளர்ந்தவள் அல்லவா... அவனுக்கும் கண்கள் கலங்கிவிடும் போல் இருந்தது.

மரகதம் அழுகையுடன் அவள் காணாமல் போனதைச் சொல்ல,

"அழாமல் இருங்கள் ஆன்ட்டி. நான் தேடிப்பாக்கிறேன். எப்படியும் இங்கு எங்காவதுதான் இருப்பாள்" என்றவன்,

"நேற்று நீங்கள் அவளுக்கு அடித்தீர்களா...? ஏன் கேட்கிறேன் என்றால், சிலநேரம் உங்களுடன் கோபித்துக்கொண்டு எங்காவது மறைந்து இருக்கிறாளோ தெரியவில்லை..." என்று கேட்டான்.

"இல்லப்பா... அன்று உன் நண்பன் யாருக்கோ கல்லால் அடித்து மண்டையை உடைத்தாளாமே.. அன்றுதான் அடித்தேன். பிறகு அடிக்கவில்லை..." என்றவருக்கு, அதை நினைத்தும் கண்ணீர் வந்தது.

ராஜ் சொல்வது போல அம்மா எப்போதும் அடிக்கிறார் என்றுதான் என்னை விட்டுப் போனாளோ.. ஐயோ, என் செல்வமே.. நீ நல்ல பெண்ணாக வளர வேண்டும் என்றுதானே அடித்தேன். அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையை அம்மாவுக்கு தந்துவிடாதே... எங்கே இருந்தாலும் வந்துவிடு கவி என்று அவரின் மனம் ஊமையாக அழுதது.

அவன் கவியைத் தேடிக் கிளம்பவும், "நான் இந்த ஊர் முழுக்க ஒன்றுக்கு பலதடவை தேடிவிட்டேன் ராஜ். இனி எங்கே தேடுவது என்றே தெரியவில்லை..." என்றார் மரகதம் கண்ணீரோடு.

"நான் பள்ளி வரை தேடிப்பாக்கிறேன் ஆன்ட்டி. அங்கு போகமாட்டாள் தான் என்றாலும், பார்த்துவருகிறேன். அப்படியும் அவளைப் பற்றி எந்தத் தகவுலும் கிடைக்காவிட்டால் என் நண்பன் மூலம் போலிசுக்கு போகலாம்." ரவியை மனதில் வைத்துச் சொன்னான் ராஜ்.

அவர்கள் வசதியும் கொஞ்சம் பிரபலமானவர்களும் என்பதால், சகுந்தலாவின் உதவியுடன் போலீஸ்க்கு போகலாம் என்பது அவன் எண்ணம். ஜனநாயக நாடாக இருந்தாலும், பசை உள்ளவர்களோடு ஒப்பிடுகையில் ஏழைகளுக்கான மதிப்பு எங்கேயும் சற்று குறைவல்லவா!

அவனுக்குத் தெரிந்து, அவள் செல்லும் இடங்கள், விளையாடும் இடங்கள், ரவியை திறத்தி ஓடும் இடங்கள் என்று எங்கு தேடியும் கவி கிடைக்கவில்லை. ஏன், அவளைக் கண்டதாகக் கூட யாரும் சொல்லவில்லை.

தோல்வியுடன் சோர்ந்து ராஜ் திரும்புகையில் மாலையாகி விட்டிருந்தது. ராஜாலும் மகளைப் பற்றி எந்தத் தகவலும் கண்டு பிடிக்க முடியாமல் போனதில் மனதில் இருந்த சிறு நம்பிக்கைப் பொறியும் அழிய, நிலத்தில் விழுந்து கதறித் தீர்த்துவிட்டார் மரகதம்.

"ஆன்ட்டி , இங்கே பாருங்கள்.. அழாதீர்கள்! நாம் போலிசுக்குப் போகலாம். அவர்கள் நிச்சயம் கவியைக் கண்டு பிடித்துத் தருவார்கள். நீங்கள் இப்படியே அழுதாள் நான் என்ன செய்வது..." என்று அன்போடு அதட்டினான்.

"அவள் என் மகள் ராஜ். இந்த உலகில் என் சொந்தம் என்று அவள் மட்டும் தானே எனக்கு." என்று பரிதாபமாய் அழுதவரைப் பார்க்க அவன் கண்களும் கலங்கியது!

கலங்கிய தன் கண்களை மறைத்து, "அழாமல் இருங்கள் ஆன்ட்டி . நான் என் அப்பாவுக்குத் தேவையான பொருட்களை வைத்தியசாலைக்குக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு, என் நண்பனுடன் கதைத்துவிட்டு வருகிறேன். அவன் மூலம் இனிச் செய்யவேண்டியதைப் பார்க்கலாம்." என்று சொல்லிவிட்டு, தங்கத்திடமும் தான் வரும்வரை மரகதத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டுப் புறப்பட்டான் அவன்.

அவனும் என்னதான் செய்வான். உயிருக்குப் போராடும் தந்தையைப் பார்ப்பானா, கண்ணீரோடு கணவனுக்காய்த் தவிக்கும் தாயைச் சமாதானம் செய்வானா, இல்லை கவியைக் காணவில்லை என்று துடிக்கும் மரகதத்தைப் பார்ப்பானா அல்லது கவியைத் தேடுவானா...

வீட்டுக்கு வேகமாக சென்று தகப்பனுக்கு தேவையானவைகளை எடுத்துக்கொண்டு, "அம்மா, நான் வர நேரமாகலாம். எனக்காக காத்திராமல் சாப்பிட்டுத் தூங்குங்கள். தனியே இருக்கப் பயம் என்றால் மரகதம் ஆன்ட்டி வீட்டுக்குப் போங்கள். ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்கலாம்.." என்று தாயிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

தகப்பனிடம் சென்று அவரின் தேவைகளைக் கவனித்துவிட்டு, அவரிடமும் கவி பற்றிச் சொல்லி, ரவிக்கு போன் பேசிவிட்டு வருவதாகச் சொல்லி வெளியே சென்றான் ராஜ்.

அங்கே கண்ணில் கிடைத்த பொதுத் தொலைபேசி ஒன்றிக்கு சென்று ரவியின் வீட்டுக்கு அழைத்தான்.

சகுந்தலா தொலைபேசியை எடுக்கவும், "ஆன்ட்டி , நான் ராஜ் பேசுகிறேன். ரவி இருக்கிறானா... அவனிடம் கொடுக்கிறீர்களா?" என்று பணிவோடு கேட்டான். அவருக்குத் தன்னை அவ்வளவாகப் பிடிக்காது என்பதை அவனும் அறிவான்.

ராஜின் குரலைக் கேட்டதும், மகன் மீதிருந்த மனத்தாங்கல் இவன் மீது கோபமாக இறங்கியது.
 

Vishakini

Moderator
Staff member
"ரவி இங்கு இல்லை! உன் நண்பன் சாந்தனின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாமே.. அவரைப் பார்த்துக்கொள்ள வைத்தியசாலைக்குப் போய்விட்டான். ஆனால் நீ ஹாயாக வீட்டில் இருக்கிறாய் போல.. அதுசரி, உங்களுக்கெல்லாம் ஏமாந்த விசரன் என் மகன் தானே..." என்று கோபத்துடன் பொரிந்தார் சகுந்தலா.

"என்ன ஆன்ட்டி சொல்கிறீர்கள்? எனக்கு ஒன்றும் புரியவில்லை.யாருக்கு முடியவில்லை?" என்று குழப்பத்துடன் கேட்டான் ராஜ். அவனுக்கு இருக்கும் பிரச்சினைகளில் இதுவேறா என்று இருந்தது.

"என்ன புரியவில்லை உனக்கு?" என்று எரிந்துவிழுந்தவர்,

"உங்கள் வகுப்புக்குப் புதிதாக வந்து சேர்ந்த சாந்தனை உனக்குத் தெரியாது?" நடிக்கிறயா என்கிற தொனியில் இருந்தது அவர் கேள்வி.

"அப்படி ஒரு பெயரில் எங்கள் வகுப்பில் யாருமே இல்லை ஆன்ட்டி . அதைவிட இப்போது யாரும் புதிதாக வகுப்பில் சேரவும் இல்லை..." என்றான் இன்னும் தெளியாத குழப்பத்துடன்.

அதிர்ந்து நின்றார் சகுந்தலா. ராஜ் பொய் சொல்லமாட்டான் என்று தெரியும். அவனின் ஏழ்மை அவருக்குப் பிடிக்காதபோதும் நல்லவன் என்கிற எண்ணம் உண்டு! அதனாலேயே பிடிக்காவிட்டாலும் மகனை அவனோடு பழக விட்டார். ஆனால் மகனும் என்னிடம் பொய் சொல்ல மாட்டானே....

"பொய் சொல்லாதே ராஜ்..." மகனைத் தன் மனதிடமே விட்டுகொடுக்காது ராஜிடம் கோபம் கொண்டார் அவர்.

"ஆன்ட்டி , என் அப்பா இப்போது முடியாமல் வைத்தியசாலையில் இருக்கிறார். நான் மலையக டவுனில் இருந்து ஒரு அவசர விசயமாகப் பேசுகிறேன். இந்த நேரத்தில் பொய் சொல்லவோ விளையாடவோ முடியாது ஆன்ட்டி . அதைவிட நான் பொய் சொல்ல மாட்டேன். அதுவும் உங்களிடம்... நண்பர்களிடமே பொய் பேசமாட்டேன்..." என்று மெல்லிய சலிப்புடனும், ரவியைப் பிடிக்க முடியவில்லையே என்கிற ஏமாற்றத்துடனும் சொன்னவன்,

"ஆன்ட்டி , ரவி வந்தால் தயவு செய்து எனக்குக் கூப்பிடச் சொல்லுங்கள். மிக மிக அவசரம். அவனின் உதவி எனக்குத் தேவைப் படுகிறது. நான் வைக்கிறேன் ஆன்ட்டி .." என்றவன் அவரின் பதிலைக் கேட்காது வைத்துவிட்டான்.

தந்தையைப் பற்றியும் கவியைப் பற்றியும் கவலைப்பட்டுக் கொண்டிருந்த அவன் மனதை அவரின் பேச்சு மிகவும் காயப்படுத்தியது. ஏழைகள் என்பதால் வந்த இளக்காரமா? ச்சே! ஆனால் ஒரு தேவை என்றால் அவர்களிடம் தானே போகவேண்டியும் இருக்கிறது என்று எண்ணியவனின் மனம் இயலாமையிலும் நொந்தது.

தன் மீது கோபம் இருந்தாலும் ரவியிடம் தான் அழைத்ததைச் சொல்வார் சகுந்தலா என்பதால், தந்தையைக் கவனிக்க வைத்தியசாலைக்கு சென்றான் ராஜ்.

எல்லாம் முடிந்து அவன் வீடு திரும்ப இரவு பத்துமணி கடந்திருந்தது. அங்கே மரகதம் வீட்டில், இவன் வருகைக்காக அவன் தாய் உட்பட தங்கம் வேலனுடன் சேர்த்து இன்னும் ஊர் மக்களும் கூடி இருந்தனர் .

அவனிடம் விஷயம் அறிந்தவர்கள், தங்களுக்குள்ளே சலசலக்க, மரகதமோ விரக்தியின் எல்லையில் அழக்கூட மறந்து சிலையாக மாறிப்போனார்.

சகுந்தலா திட்டினாலும் பரவாயில்லை. நாளைக்கு ரவியின் வீட்டுக்கே சென்று அவனைப் பார்க்கவேண்டும். அப்படியும் அவனைப் பிடிக்க முடியாவிட்டால் நேரடியாகப் போலிசுக்குப் போகவேண்டியதுதான் என்று முடிவு எடுத்து, ஒரு பக்கச் சுவரில் சாய்ந்து அமர்ந்துகொண்டான் ராஜ்.

தான் பார்க்க வளர்ந்த பெண், கடைசியாக அவன் கூடச் சற்றுக் கோபமாக அவளைத் திட்டிவிட்டான். அன்றைக்குப் பிறகு அவன் அவளைப் பார்க்கவும் இல்லை. அவளின் துடினமும், வாயாடும் அழகும் கண்ணுக்குள் வந்து கரித்தது ராஜுக்கு. எவ்வளவு சூட்டிகையான பெண். அதனால் தானே தங்கை இல்லாத அவனுக்கு அவள் தங்கை ஆகிப்போனதே... இன்று அந்த உடன் பிறவா சொந்தத்தைக் காணவில்லை என்பது மிகுந்த வலியைக் கொடுத்தது அவனுக்கு. அதனாலேயே சகுந்தலா அவமதிப்பது போல் பேசியபோதும் நாளை அவர் வீட்டுக்குச் செல்லவேண்டும் என்று உறுதியான முடிவில் இன்னும் இருந்தான் அவன்.

இங்கு சகுந்தலாவுக்கோ, மனம் கோபத்தில் கிடந்தது கொதித்தது. மகனை நம்புவதா ராஜை நம்புவதா என்று குழம்பியவர், கண்ணனுக்கு தொலைபேசியில் அழைத்தார்...

"ஆன்ட்டி , சொல்லுங்கள்.." என்று கண்ணன் சொல்லவும்,

"உங்கள் வகுப்பில் சாந்தன் என்று யாராவது படிக்கிறார்களா கண்ணா...?" என்று நேரடியாகவே கேட்டார்.

"இல்லையே ஆன்ட்டி . அப்படி யாரும் இல்லையே.."

"நன்றாக யோசித்துச் சொல். வேறு பிரிவில் யாராவது படிக்கிறார்களா? அல்லது வேறு வகுப்பில் புதிதாகச் சேர்ந்த யாராவது சாந்தன் என்று இருக்கிறார்களா?"

"அப்படி யாரும் இல்லையே. எனக்கு நன்றாகத் தெரியும்.. ஏன் கேட்கிறீர்கள் ஆன்ட்டி ..?" குழப்பத்தோடு கேட்டான் கண்ணன்.

"இல்லை. சும்மா விசாரித்தேன். சரி கண்ணா நான் வைக்கிறேன்..." என்றவர் அழைப்பைத் துண்டித்தார்.

கண்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. சரி ரவியிடம் விசாரித்து கொள்ளலாம் என்று விட்டுவிட்டான்.

வேந்தனுக்கும் அழைத்து விசாரிக்க, அவனும் அதையே சொல்ல தன் மகன்தான் பொய் சொல்லி இருக்கிறான் என்கிற உண்மையைக் கஷ்டப்பட்டு ஏற்றுக்கொண்டார் சகுந்தலா.

அழுகை வந்தது சகுந்தலாவுக்கு. என் மகனா? என்னிடமா? பொய் சொல்கிறானா? இன்னும் முழுதாக நம்ப முடியவில்லை அவரால்.

அவனுக்குக் கைபேசியில் அழைத்துக் கிழிக்கலாமா என்று கூடத் தோன்றியது. இல்லை! முகம் பாராமல் கதைக்கையில் பொய் சொன்னால் கண்டுகொள்வது கடினம் என்று அந்த எண்ணத்தைக் கைவிட்டார்.

எப்படியும் நாளை வீடு வருவான் தானே. அப்போது கேட்டுக்கொள்கிறேன் என்று நினைத்தவரின் மனதோ ஆற மறுத்து!



மலையக டவுனுக்கு வந்து, தனக்குத் தெரிந்தவரையில் கவிக்கு ஒரு சுடிதாரையும் உணவையும் வாங்கிக்கொண்டு விடுதி அறைக்கு விரைந்தான் ரவி.

கதவைத் திறந்தவனை, பயந்த விழிகளுடன் கட்டிலில் எழுந்து அமர்ந்திருந்த கவியே வரவேற்றாள். அவளைப் பார்த்ததும் புன்னகைத்தான் ரவி.

"எழுந்துவிட்டாயா?" என்று கேட்டுக்கொண்டு உள்ளே வந்து கதவை பூட்டியவனிடம், ஒன்றும் சொல்லாமல் அவனையே பாத்திருந்தாள்.

அவள் அருகில் மிக இயல்பாய் அமர்ந்து, அவளின் நெற்றியிலும் கழுத்திலும் கைவைத்து பார்த்தான்.

"காய்ச்சல் இறங்கிவிட்டது. இப்போது உடம்புக்கு பரவாயில்லையா..?" என்று கனிவாகக் கேட்டான்.

அதுவரை அவனையே பாத்திருந்தவள் இப்போது தலையைக் குனிந்து, ஆம் என்பதாக தலையை அசைத்தாள்.

குனிந்திருந்த அவள் முகத்தையே சில வினாடிகள் பார்த்தவன், அவள் நாடியில் கைவைத்து உயர்த்தி, "என் மேல் கோபமா..?" என்று அவள் கண்களைப் பார்த்துக் கேட்டான்.

அவன் கண்களையே பார்த்தவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இல்லை என்பதாகத் தலையை அசைத்தாள்.

அவன் செய்தவைகளுக்கு கோபப்படவேண்டும் என்பது கூடப் புரியவில்லை அவளுக்கு. அல்லது புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு மனதும், மூளையும் ஸ்தம்பித்து இருந்ததோ....

திடீரென்று நடந்தவைகள் அவளின் இயல்பை மாற்றி இருந்தது. ஒரு பயம், தனிமை, ஏதோ ஒரு வெறுமை, இதை எல்லாம் தாண்டி உடல் அளவில் நடந்த மாற்றங்கள்.... எல்லாமே அவளுக்கு ஒருவித அதிர்ச்சியைக் கொடுத்ததில் ஒன்றையுமே சிந்திக்க முடியவில்லை அவளால்.

வாங்கிவந்த உணவை அவளிடம் நீட்டி, "சாப்பிடு..." என்றான் மெல்ல.

"பசிக்கவில்லை..." என்றவளின் தலை மீண்டும் குனிந்துகொண்டது.

"ஏன்?"

பதில் இல்லாமல் போகவே, "குளிக்கிறாயா..?" என்றான் மீண்டும்.

அவளுக்கும் குளிக்க வேண்டும் போல்தான் இருந்தது. மாற்று உடுப்பு இல்லையே என்கிற கேள்வியுடன் அவள் பார்க்கவும், "வரும் வழியில் உனக்கென்று ஒரு சுடிதார் வாங்கினேன். பார் அளவா என்று?" என்றபடி அவளிடம் சுடிதார் இருந்த பையை நீட்டினான்.

மெல்ல அதை வாங்கிப் பிரித்தவளுக்கு கண்கள் மெல்லக் கலங்கியது. மூக்கு விரிய அழத் துடித்த உதடுகளை அழுந்த மூடியவளுக்கு தாயின் நினைவுகள் மனதின் ஆழத்தில் இருந்து பீரிட்டு எழுந்தது.

தன் தாயிடம் இதே டிசைனில் ஒரு சுடிதார் வாங்கித் தரச்சொல்லி அவள் பலமுறை சண்டை பிடித்திருக்கிறாள். அது விலை அதிகம் என்பதால் மரகதம் இதுவரை வங்கிக் கொடுத்தது இல்லை.

இன்று அவள் விரும்பிய அந்த உடை கிடைத்திருக்கிறது! ஆனால் கிடைத்த சூழல்?? அல்லது அது கிடைத்ததற்கான காரணம்?

சுடிதாரை மீண்டும் பையில் வைத்தவள், "அம்மா...." என்றாள் அழுகையோடு...

வாய் ஓயாமல் வளவளப்பவளின் உதடுகள் இன்று பேசவே சிரமப்பட்டது.

இப்போது மௌனிப்பது ரவியின் முறையாகிப்போனது. அவளின் கேள்விக்கு என்ன பதிலைச் சொல்வான்?

காது கேளாதவன் போல் இருந்தவன், "குளித்துவிட்டு வா கவி, சாப்பிடலாம்..." என்றான் மீண்டும்.

"நான் அம்மாவிடம் போகவேண்டும்......." அடம்பிடிக்கும் குழந்தையாய் சிரமப்பட்டு வார்த்தைகளை உதிர்த்தாள்.

"முதலில் குளித்துவிட்டு வா...!" கொஞ்சம் கடினம் ஏறி இருந்ததோ அவன் குரலில்..

அச்சம் நிரம்பிய விழிகளால் அவனை நிமிர்ந்து பார்த்தவள், கலங்கும் விழிகளை அவனுக்குக் காட்ட விரும்பாது மெல்ல இறங்கிக் குளியலறைக்குச் சென்றாள்.

அவள் செல்வதையே பாத்திருந்தவனுக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை. விடுதிக்குப் பொறுப்பானவரும் அவன் இப்போது வருகையில் அவனைச் சந்தேகமாகவே பார்த்தார். வாட்டசாட்டமான ஆண்பிள்ளையாக இருந்தாலும், கடினம் ஏறாத அவன் முகம் ஓரளவுக்கு காட்டிக்கொடுக்கும் அல்லவா அவனின் வயதை!
 

Vishakini

Moderator
Staff member
அவரின் சந்தேகப் பார்வையைத் தவிர்க்க, நாளை மாலை தாங்கள் கிளம்புவதாக அவனே அவரிடம் வலியச் சென்று சொல்லிவிட்டான். ஆக நாளைக்கு விடுதி அறையை விட்டு வெளியேற வேண்டும். இல்லாவிட்டாலும் நாளை வீட்டில் தான் தங்கியாகவேண்டும். அம்மாவும் இனி விடமாட்டார்.

எங்கே போவது? இவள் வேறு அம்மா, அம்மா என்கிறாள். என்னாலேயே என் அம்மாவைப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை. அப்படியிருக்க அவள் நிலை?

அவளின் நிலை புரிந்தபோதும், என்ன செய்வது என்று தெரியாததில் தான் அப்பப்போ கோப முகமூடியை அணிந்துகொண்டான் அவன்!

இதற்கு என்னதான் தீர்வு? பேசாமல் என் வீட்டுக்கே இவளை அழைத்துச் சென்றுவிடலாமா? அம்மா திட்டுவார்களே.. அடிக்கவும் கூடும்.. ஆனால் அடிப்பார்களா?

இதுவரை அவனை அவர் அடித்தது இல்லைதான். அடித்தாலும் பரவாயில்லை என்று அவரிடமே போய்விடலாம். அம்மாவை எப்படியாவது சமாதானப்படுத்திவிட்டு, அவரையும் கூட்டிக்கொண்டு கவியின் வீட்டுக்குப் போகவேண்டும் என்று திட்டமிட்டது அவன் மனது.

மனதுக்குள் அம்மா என்ன சொல்வாரோ என்று பயமாக இருந்தாலும், அவரிடம் சொல்லிவிட்டால் இந்தப் பிரச்சினையை இனி அவர் பார்த்துக்கொள்வார் என்று நினைத்ததும் நிம்மதியாகவும் இருந்தது அவனுக்கு!

எதையும் சிந்தித்தோ, திட்டமிட்டோ செயல்பட்டு அறியாதவனுக்கு, அடுத்து என்ன செய்வது என்று சிந்திப்பது கூடப் பெரும் சிரமமாக இருந்தது. ஏன் தலைவலியாகக் கூட இருந்தது.

தாயிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடலாம் என்று முடிவு எடுத்துவிட்டதில் அவன் முகம் தெளிந்திருந்தது. எனவே குளியலறையிலிருந்து கவியின் வரவுக்காக தெளிந்த முகத்துடனேயே காத்திருந்தான் ரவி.

குளித்து, தலைவாரி, புதுச் சுடிதாரில் வெளியே வந்தவளைத் தன்னை மறந்து ரசித்தான் ரவி!

அப்போதும் அவன் மனதில் ஓடிய வாசகம், 'குண்டுப் பூசணி...' தான். ஆனால் 'என் அழகான குண்டுப் பூசணி!' என்று தோன்றியது இப்போது!

கண்களில் ஆர்வம் மின்ன, முகம் மலரத் தன்னையே ஆசையுடன் பார்த்தவனின் பார்வை புரியாது, தளர்ந்த நடையுடன் வந்தவள் அறையின் நடுவே நின்றுகொண்டாள். அவன் அமர்ந்திருக்கும் கட்டிலில் அமர்ந்துகொள்ளச் சங்கடமாக இருந்தது அவளுக்கு.

அவளின் எண்ண ஓட்டம் புரிந்தபோதும், அதை வெளியே காட்டிக்கொள்ளாது கட்டிலில் இருந்து எழுந்தவன், "வா.. வந்து சாப்பிடு.." என்றபடி மேசை அருகே சென்றான்.

அடிமேல் அடியெடுத்து வைத்தவளை,

"வந்து சாப்பிடு கவி!" என்கிற அதட்டல் வேகமாகக் கதிரையில்(நாற்காலி) அமர வைத்தது.

அவள் முன்னே அவன் பார்சலை பிரித்துவைக்க, "நீ...ங்க.." என்று இழுத்தாள் கவி.

"நான் நன்றாக வயிறு முட்ட வெட்டிவிட்டேன். நீ சாப்பிடு..."

உணவைக் குழைத்துக் கையில் எடுத்தவளால் அதை வாயில் வைக்கவே முடியவில்லை. மீண்டும் தாயின் நினைவு.

என்னதான் திட்டினாலும் எவ்வளவு அடித்தாலும் ஊட்டிவிடும் அம்மா! விம்மல் வெடித்தது அவளுக்கு.

ஒரு கையில் உணவைப் பிடித்திருந்தவள், மற்றக் கையால் வழிந்த கண்ணீரைக் குனிந்த தலையுடன் துடைத்தாள். அவனுக்கும் அவளைப் பார்க்கக் கஷ்டமாக இருந்தது.

"நீ விடு. நானே தீத்திவிடுகிறேன்(ஊட்டிவிடுகிறேன்)..." என்றவன், உணவைக் குழைத்து அவளின் வாயருகே ஊட்டுவதற்காக கொண்டு சென்றான்.

கண்களில் கண்ணீர் வழிய, அதிசயமாக அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு உணவை ஊட்டியபடியே, "ம்.. வாயைத் திற. முதலில் சாப்பிடு! பிறகு உன் புருஷன் அழகை ரசிக்கலாம்..." என்றான் கண்ணைச் சிமிட்டியபடி.

கவிக்கு கூட சிறு சிரிப்பு வந்துவிடும் போலிருந்தது. அவனை முறைக்கவும், "அதுதான் சொன்னேனே. பிறகு என்னை ரசிடி. இப்போது உணவை ருசி....!" என்றான் மீண்டும் கேலியாக.

அவன் வாய் கேலி பேசினாலும், கை கவனமாக உணவை ஊட்டிக் கொண்டிருந்தது. அவள் போதும் போதும் என்று சொல்லும்வரை ஓட்டிவிட்டான்.

உண்டு முடித்ததும் மாத்திரையையும் அவளுக்குக் கொடுத்தவன், கட்டிலில் அமர்ந்து, "இங்கே வா கவி..." என்று அழைத்தான். மறுபடியும் தயக்கமாக இருந்தது அவளுக்கு!

அவளை முறைத்துப்பார்த்தான் ரவி. எதுவும் பேசாது கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தவளைத் தன்னருகே இழுத்துத் தன் மீதே சாய்த்து, கட்டிலில் சாய்ந்துகொண்டான் ரவி.

கவியின் மேனி பயத்தில் நடுங்க ஆரம்பித்தது. நேற்றைய இரவுபோல் மீண்டும் எதுவும் செய்யப் போகிறானோ என்று மனம் பதறியது.

சிறு சிரிப்புடன் அவள் மூக்கைப் பிடித்து ஆட்டி, "லூசு, பயப்படாமல் என் மீது சாய்ந்துகொள்!" என்றான் சிறு கண்டிப்புடன்.

அவனுக்கு ஏனோ அவளின் அருகாமை வேண்டும் போல் இருந்தது. கவிக்கோ உடலின் நடுக்கம் நிற்க மறுத்தது. அவனை மீறி எழவும் பயமாக இருந்தது.

"உன்னைக் கடித்துத் தின்றுவிடமாட்டேன் கவி! அதனால் பயப்படாமல் என் நெஞ்சில் நீ சாய்ந்துகொள்ளலாம்.." என்றவனின் கைகள், மெல்ல அவளின் தலையைத் தன் நெஞ்சோடு அழுத்தியது.

"இரவும் சீரான நித்திரை இல்லை. இன்றும் அலைந்ததில் களைப்பாக இருக்கிறது. எனக்குத் தூக்கம் வருகிறது... நீயும் தூங்கு!" என்றபடி அவளின் முதுகை இதமாகத் தடவிக்கொடுத்தான்.

சிறிது நேரம் அப்படியே அவன் நெஞ்சில் பட்டும் படாமல் சாய்ந்து கிடந்தவள், தலையை உயர்த்தி அவனைப் பார்த்தாள்.

"என்ன?" என்று ரவி கேட்க,

"அம்மாவிடம் கூட்டிக்கொண்டு போகிறீர்களா?” என்றாள் நடுக்கமும் அழுகையுமாக.

அவள் முகத்தையே வைத்த கண் எடுக்காது பார்த்தவன், "நான் சொல்வதைக் கேட்கிறாயா...?" என்று கேட்டான் மெல்ல.

தலையை வேகமாக ஆம் என்பதாக அசைத்தவள், எழுந்து அமர முயற்சி செய்யவும், "ச்சு.. இப்படியே இருந்து கேள்!" என்றான் அவளை எழவிடாமல்...

"ம்..ம்...."

"நாளைக்கு நாம் முதலில் எங்களுடைய வீட்டுக்குப் போகலாம்...."

அவள் எதுவோ சொல்ல வாய் எடுக்கவும், "முதலில் நான் சொல்வதை முழுதுமாக கேள் கவி!" என்றான் மெல்லிய அதட்டலாக.

"ம்...சரி.." என்றாள் முனகலாக..

"அங்கே அம்மாவிடம் நடந்ததைச் சொல்வோம். பிறகு என் அம்மா சமாதானம் ஆனவுடன் அவரையும் கூட்டிக்கொண்டு உன் வீட்டுக்குப் போகலாம். சரியா?" என்றான் குழந்தைக்குச் சொல்வது போல.

"எப்போது? என் வீட்டுக்கு.... அம்மாவிடம்... போவது?" அம்மாவைக் கண்டுவிடமாட்டோமா, அவரிடம் சென்றுவிட மாட்டோமா என்று தவித்தது அவள் மனது!

"அதுதான் சொல்கிறேனே கவி. முதலில் என் அம்மாவிடம் விஷயத்தைச் சொல்வோம். பிறகு அவர் சொல்வதின்படி செய்யலாம். பெரும்பாலும் உடனேயே அம்மா உன் வீட்டுக்கு கூட்டிப்போவார்கள்....." என்றான் அவன் ஆறுதலாக.

"அம்மா... அம்மா... அழுவார்கள். என்னைக் காணவில்லை என்று..." சொல்கையிலே அழுகை வந்தது அவளுக்கு!

"ம்.. புரியுதுமா... நாம் முடிந்தவரை விரைவாக உன் அம்மாவிடம் போகலாம். சரிதானா!" அவன் சொன்ன ஆறுதலில் திருப்தி அடையவேண்டி இருந்தது அவள் நிலை!

"சரி, தூங்கு..." என்றவனின் கைகள், அவள் முதுகை வருடும் வேலையைத் தொடர்ந்தது.

அவன் நெஞ்சில் சாய்ந்து இருந்தபோதும் உறங்கவில்லை கவி. கொட்டக் கொட்ட முழித்திருந்தாள்.

நாளைக்கு அம்மாவிடம் போய்விட வேண்டும். அடிப்பார்களோ? இல்லை அன்றுபோல் அழுவார்களோ? ச்சே பாவம் அம்மா.... என்னைக் காணவில்லை என்று தேடுவார்களாய் இருக்கும். போனவுடன் நடந்தவைகளை அப்படியே சொல்லவேண்டும்.

இப்படியே ஓடிய சிந்தனைகளின் நடுவே, அவன் கைகள் அவள் முதுகை வருடுவதை நிறுத்திவிட்டதை அப்போதுதான் உணர்ந்தாள் கவி. சிறிது நேரம் அசையாது அப்படியே கிடந்தவள், மெல்லத் தலையைத் தூக்கி அவன் முகத்தைப் பார்த்தாள். ரவி ஆழ்ந்து உறங்குவது அவனின் சீரான மூச்சில் தெரிந்தது.

அவன் நெஞ்சில் இருந்த தன் முகத்தை மிக மிக மெதுவாகத் தூக்கி, அவன் கையைத் தன் முதுகில் இருந்து விளக்கி, அப்படியே நகர்ந்து பக்கத்தில் இருந்த தலையணையில் தலையைச் சாய்த்தவள், முடிந்தவரை அவனிடமிருந்து தள்ளிப் படுத்தாள்.

மெல்ல மெல்ல அவளையும் நித்திராதேவி ஆட்கொண்டாள்.

அடுத்தநாள், அவர்களுக்கு வைத்திருக்கும் அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் அறியாது ஆழ்ந்து உறங்கினார்கள் இருவரும்......
 
Top Bottom