• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு - 14

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம்-14

நேற்று முழுவதும் நன்றாகத் தூங்கி ஓய்வில் இருந்ததில் இன்று காலையிலேயே முழிப்பு வந்துவிட்டது கவிக்கு. கண் விழித்தவள் திகைத்துப்போனாள். நான் எப்படி இவன் கைகளுக்குள் வந்தேன். இரவு தள்ளித்தானே படுத்தேன் என்று யோசித்தவாறே மெதுவாக அவன் கைகளுக்குள் இருந்து எழுந்து, குளியலறைக்குள் புகுந்துகொண்டாள்.

தன்னைச் சுத்தப்படுத்திக்கொண்டு வெளியே வந்தவள், அங்கே இருந்த கதிரையில் அமர்ந்துகொண்டாள். அவள் கண்களோ தூங்கிக் கொண்டிருந்த ரவியையே நோக்கியது.

போன வெள்ளி வரை அவளுடன் வம்பிழுத்துச் சண்டை பிடித்து விளையாடிக்கொண்டு இருந்த ராஜ் அண்ணாவின் நண்பன் அவன்! இன்று என் கணவன். இதை அவனே சொல்கிறான். அப்படிச் சொல்ல வைத்தது என் கழுத்தில் தொங்கும் இந்தத் தாலி. நினைவுகளின் ஓட்டத்திலேயே குனிந்து தன் கழுத்தில் தொங்கிய தாலியைத் தொட்டுப் பார்த்தாள் கவி.

கனமே இன்றிக் கழுத்தில் கிடந்தபோதும், மனதின் பாரத்தால் கழுத்தை இறுக்குவது போல் சுமையாகத் தோன்றியது அந்த தாலிக்கயிறு!

"தாலியையே பார்க்கிறாயே, அதைக் கட்டிய அத்தானின் மேல் அவ்வளவு பாசமா உனக்கு?"

கண்களில் குறும்பு மின்னக் கேட்டவனை, அத்தானா? எனக்கு அப்படி யாரும் கிடையாதே என்கிற குழப்பத்தோடு பார்த்தாள் கவி.

தன் தலையிலேயே அடித்துக்கொண்டான் ரவி.

"அடி என் சக்கரவள்ளிக் கிழங்கு, நான்தான்டி உன் அத்தான்!"

அவனை அவள் முறைக்கவும், "பார்ரா, கண்ணாலேயே காதலிக்கிறாள் என் காதலி..." குறும்பாகப் குரலில் பேசியபடி எழுந்தவன்,

"நீ முகம் கழுவி விட்டாயா?" என்று கேட்டான்.

அவள் ஆம் என்பதாகத் தலையை அசைக்கவும், தானும் காலைக் கடன்களை முடித்துவிட்டு வந்தான்.

"நீ இரு. நான் போய்க் குடிப்பதற்கும் சாப்பிடுவதற்கும் ஏதாவது வாங்கி வருகிறேன்.." என்றுவிட்டு வெளியேறினான் ரவி.

தாய் திட்டுவார் என்று தெரிந்தாலும், அவரிடம் சொல்லிவிட்டால் அடுத்துச் செய்யவேண்டியதை அவர் பார்த்துக்கொள்வார் என்பதில் அவனுக்கு ஒரு விடுதலை உணர்வு கிடைத்திருந்தது. அதனாலேயே கொஞ்சம் வழமைக்குத் திரும்பியிருந்தான் அவன்.

சிறிது நேரத்தில் உணவுடன் ரவி வரவும், அவர்களின் காலை நேரச் சாப்பாடு அமைதியுடன் கழிந்தது.

"இப்போது உடம்புக்குப் பரவாயில்லையா?" காலை உணவு முடிந்ததும், தேநீரை அருந்தியபடி அக்கறையோடு கேட்டான் ரவி.

தலையைக் குனிந்துகொண்டவள் மெல்லத் தலையை அசைத்தாள் ஆம் என்பதாக.

சிறு தயக்கத்துடன் அவள் முகத்தையே பார்த்திருந்துவிட்டு, "நான் எங்கள் வீட்டுக்குப் போய்விட்டு வரவா..?" என்று மெல்லக் கேட்டான் ரவி.

"நா...ன்?" விழிகளில் பயம் பரவக் கேட்டாள் கவி.

"மாலைவரை நாம் இந்த அறையில் இருக்கலாம். முதலில் நான் வீட்டுக்குப் போய் அம்மாவிடம் நம் விஷயத்தைச் சொல்லி அவரையும் கூட்டிக்கொண்டு வந்து உன்னை அழைத்துப் போகிறேன்..."

"கட்டாயம் வருவாயா? நீ வராவிட்டால் நான் என்ன செய்வது?" கண்களில் நிறைந்த கண்ணீருடன், அச்சத்தோடு கேட்டாள்.

"ஹேய் லூசு! இந்த இரண்டு நாட்களும் எத்தனை தடவைகள் வெளியே போய்வந்தேன். அப்படியே வராமல் போகத்தெரியாதா எனக்கு. உன்னை விட்டுவிட்டுப் போகவேண்டும் என்றால் அதை எப்போதோ செய்திருப்பேன். புரிந்ததா?"

கண்களில் திரண்ட நீருடன் அவனையே பார்த்தாள் கவி. உண்மைதானே அவன் வராமல் இருந்திருக்க நான் என்ன செய்திருப்பேன். நினைக்கவே பயமாக இருந்தது அவளுக்கு.

"உன்னையும் கூட்டிக்கொண்டு போனால் அம்மா இன்னும் கூடுதலாகத் திட்டுவார்கள் கவி. உனக்கு அது சங்கடமாக இருக்கும். அதனால் தான் நான் முதலில் போய் அவரைச் சமாதானம் செய்து அழைத்துவருகிறேன் என்கிறேன்..." என்று பொறுமையாக விளக்கினான்.

ஒன்றும் சொல்லத் தோன்றாமல் தலையை அசைத்தாள் அவள். பார்க்கப் பாவமாக இருந்தது அவனுக்கு.

"இங்கே வா..." என்று அவளை அருகே அழைத்து இறுக அணைத்துக்கொண்டான். சிறிது நேரத்தில் அவனிடமிருந்து அவள் விடுபடப் போராடவும், கோபமாக முறைத்தான் ரவி.

"மூச்சு... மூச்சு முட்டுகிறது. விடு..." என்றாள் மூச்சு வாங்கியபடியே.

வாய்விட்டுப் பெரிதாகச் சிரித்தவன், "எனக்கென்று வந்து வாய்த்திருக்கிறாய்! குண்டம்மா...." என்றவன், ஆசையோடு அவள் இதழ்கள் நோக்கிக் குனிந்தான்.

மல்லிகை மொட்டாய் மின்னிய அந்தச் சின்ன உதடுகள் அவன் செய்யப்போகும் செயலை உணர்ந்து இன்னும் தனக்குள் சுருங்கிக்கொண்டது. அதை ஆசையோடு ரசித்தவன், அந்த மொட்டிலே பட்டும் படாமல் தன் உதடுகளைத் தொட்டு எடுத்தான்.

நெற்றி சுருங்க, கண்கள் இறுக மூட, அதை ஏற்பதா தவிர்ப்பதா என்று தெரியாமல் தடுமாறி நின்றவளைத் தானே விடுவித்து, "பயப்படாமல் இரு முடிந்தவரை விரைவாக வருகிறேன்..." என்று குரல் கரகரக்கச் சொல்லிவிட்டு வேகமாக வெளியேறினான் ரவி.

தன் கட்டுப்பாட்டை இழந்து மறுபடியும் அவளைக் காயப்படுத்தி விடுவோமோ என்று பயமாக இருந்தது அவனுக்கு. அதனாலேயே விரைவாக வெளியேறினான்.

அம்மாவை எப்படியாவது சமாளிக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டே வீட்டுக்குச் சென்றவனை, கண்களில் வலியோடும் கோபத்தோடும் முறைத்தார் சகுந்தலா.

"அம்மா, அது சாந்தனின் அம்மாவுக்கு இன்னும்...."

தாயின் நேர்ப் பார்வையில் மேலே பேசும் சக்தியை இழந்து தலைகுனிந்தான் ரவி.

அவனின் அருகே வந்து, "என்னை நிமிர்ந்து பார் ரவி..!" கட்டளையாக இருந்தது அவர் பேச்சு.

அவனால் முடியவில்லை.

"சொன்னது புரியவில்லையா உனக்கு!" என்றவரின் அதட்டலில் அதிர்ந்து நிமிர்ந்தவன் அவரையே பார்த்தான் ரவி.

"நான் கேட்கும் கேள்விகளுக்கு நீ பதில் சொல்லி முடியும் வரை, என் முகத்தை விட்டு உன் பார்வை வேறு எங்கும் செல்லக்கூடாது! புரிந்ததா?!?" தாயின் இரண்டு கண்களையும் மாறி மாறி பார்த்தவன் மன்னித்துவிடும்படி பார்வையாலேயே இறைஞ்சினான்.

"வெள்ளி இரவும் நேற்று இரவும் எங்கே தங்கினாய்?"

தானாகக் குனிந்த அவன் தலை தாயின், "ரவி!!" என்ற அதட்டலில் மீண்டும் நிமிர்ந்தது.

அவனின் பதிலுக்காக அவர் காத்திருப்பது புரிய...

"விடு...விடுதியில்..." என்றான் திக்கி.

ஒரு நிமிடம் மனம் நடுங்கியது சகுந்தலாவுக்கு. என் மகனா..?

"ஏன்?" உள்ளம் கொதிக்கக் கேட்டார்.

என்ன சொல்வான்...., "அம்மா..." என்றன் தடுமாற்றமாக.

"கோவிலில் பூசை முடிந்ததும் ஏன் நீ வீட்டுக்கு வரவில்லை?"

"அம்மா... அது... அம்மா... எனக்குத் திருமணம் ஆகிவிட்டது...!" அவரின் கோபத்தைத் தாங்கமுடியாமல், உண்மையைப் போட்டு உடைத்தான்.

அவரின் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லும் திராணி இல்லை அவனிடம்!

சகுந்தலாவோ முற்றிலுமாக ஸ்தம்பித்து நின்றார். குடித்திருப்பானோ அல்லது புகைத்திருப்பானோ... வீட்டிற்கு வந்தால் எனக்குத் தெரிந்துவிடும் என்று வராமல் இருந்திருக்கிறான் என்றுதான் அவரின் எண்ண ஓட்டங்கள் இருந்தது. அவன் சொன்னதோ அவர் கனவிலும் எதிர்பார்க்காதது!

"என்னடா சொல்கிறாய்... விளையாடாமல் உண்மையைச் சொல்லு!" கோபத்தில் குரல் நடுங்கியது சகுந்தலாவுக்கு.

"சாரிமா. ஆனால் சத்தியமாக நான் திருமணம் முடித்துவிட்டேன்..." அவன் சொல்லி முடிக்க முதலேயே அவரின் கை அவன் கன்னத்தில் பலமாக இறங்கியது!

கை எரிந்ததிலேதான் அவருமே உணர்ந்தார் தான் மகனை அடித்துவிட்டோம் என்பதை!

கண்கள் கலங்க கன்னத்தில் கைவைத்துத் தாயைப் பார்த்தவனுக்கு கன்னத்தை விட மனம் வலித்தது.

"ஏன்? நான் என்ன செத்தா போனேன்? அல்லது திருமண வயதுதான் உனக்கு வந்துவிட்டதா?" கோபத்தில் கத்தினார்.

"மன்னித்துவிடுங்கள் அம்மா. நானுமே எதிர்பார்க்காமல் இது நடந்துவிட்டது!"

கசப்பான சிரிப்பு ஒன்றை வெறுப்போடு சிந்திவிட்டு, சோபாவில் தொப்பென்று அமர்ந்தவருக்கு, 'என் மகனா.. என் மகனா...' என்று நெஞ்சு கிடந்தது அடித்துக்கொண்டது.

கணவர் இறந்தும் இவனையே உலகம் என்று நம்பி, கண்ணுக்குள் வைத்து வளர்த்ததற்கு நல்ல பரிசு தந்துவிட்டானே என்று பரிதவித்தது அவர் உள்ளம்.

"எங்கே அவள்?" முகத்தில் அப்பட்டமான வெறுப்பைக் கக்கிக் கேட்டார்....

"அங்கே.. அங்கே விடுதியில்..."

அவர் விழிகள் வெறுப்பை உமிழ்ந்தது. கண்மூடி சோபாவிலே தலையைச் சாய்த்துக் கொண்டவருக்கு மனம் கனத்தது. தன்னை மிகுந்த கஷ்டப்பட்டு தன்னிலைக்கு மீட்டவர், பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி, "புறப்படு!" என்றார் ஒற்றைச் சொல்லாக.

தன்னை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்கிறாரோ என்று பயந்தே போனான் ரவி.

"அம்மா, என்னை மன்னித்துவிடுங்கள்! நான் செய்தது பிழைதான். எனக்குத் தெரியும்! ஆனாலும் என்னையும் மீறி செய்துவிட்டேன் அம்மா. அதற்காக என்னை வெளியேற்றி விடாதீர்கள். உங்களை விட்டு என்னால் இருக்க முடியாது..." அவர் காலடியில் அமர்ந்து கண்கலங்க வேண்டினான்.

"உன்னை வீட்டை விட்டுத் துரத்திவிட்டு தனியே வாழும் அளவுக்கு என் மனதில் திடம் கிடையாது. நீ அம்மாவைத் தேவையில்லை என்று ஒதுக்கியபோதும் என்னால் உன்னை ஒதுக்க முடியவில்லையே... அதுதான்டா தாய்ப்பாசம்! இதெல்லாம் உனக்கு எங்கே புரியப்போகிறது..."

"ஆனால், காலம் உங்களுக்கும் ஒருநாள் உணர்த்தும்! அப்போது காலம் கடந்துவிடாமல் இருக்கட்டும். இப்போது நீ புறப்படு! ஒரு பெண்ணை அதுவும் வயதுக்கு வந்தவளை விடுதியில் விட்டுவிட்டு வந்திருக்கிறாயே, அறிவில்லை உனக்கு?" என்று ஆத்திரத்தில் சீறினார்.

அந்த முகமறியாப் பெண்ணை அழைத்துவர எண்ணி அவர் வீட்டுக்கு வெளியே செல்லவும், அவனும் தாயின் பின்னே ஓடினான். ஆட்டோ ஒன்றைப் பிடித்து, தாயையும் ஏற்றிக்கொண்டு அவர்கள் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றான் ரவி.

அங்கே சென்று ரவி கதவைத் திறக்கவும், கட்டிலில் சாய்ந்திருந்த கவியைப் பார்த்துத் திகைத்து நின்றார் சகுந்தலா.

மகன் திருமணம் செய்துகொண்டான் என்பது அவருக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்தாலும், அவன் வகுப்பு தோழியாக இருக்கும். இருவருக்கும் புத்தி சொல்லி அவளை அவள் வீட்டில் விட்டுவிடவேண்டும். படித்து முடித்துத் தொழில் என்று தொடங்கிய பிறகு, அவர்களுக்கு ஊர் மெச்சத் திருமணத்தை செய்து வைக்கலாம் என்றுதான் வரும் வழியில் அவர் யோசித்து வைத்திருந்த முடிவு.

தனக்குப் பிடிக்காவிட்டாலும் மகனுக்குப் பிடித்தவளே அவனுக்கு மனைவியாக வரவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார் தான்.

அதற்காக இப்படி ஒரு கறுப்பான குண்டுப் பெண்ணை அதுவும் ஒரு சிறு பெண்ணைச் சத்தியமாக அவர் எதிர்பார்க்கவில்லை. இவளில் அப்படி என்ன இருக்கிறது என்று இவன் இவளை கட்டிக்கொண்டான் என்றுதான் தோன்றியது அவருக்கு. கறுப்பு என்றாலும் கம்பீரமான என் மகனின் ரசனை இந்தளவுக்கா இருக்கவேண்டும்....?
 

Vishakini

Moderator
Staff member
இவளுக்கெல்லாம் காதலிக்கும் வயதா? பிஞ்சுலேயே முத்தியவள் போலும். கழுத்தில் தாலி வேறு! அந்த நொடியில் அவர்களினது காதலின் மேலும் அந்தப் பெண்ணான கவியின் மேலும் அப்பட்டமான வெறுப்பு உண்டானது அவருக்கு!

வெறுப்பை முகத்தில் அப்பட்டமாகக் காட்டி உள்ளே நுழைந்தவர், "உன் பெயர் என்ன?" என்று கேட்டார் அதட்டலாக.

கட்டிலில் இருந்து வேகமாக எழுந்தவள், அவர் கேட்ட கேள்வி புரியாமல் ரவியைப் பார்த்து மலங்க மலங்க விழித்தாள்.

"கவிநயாம்மா..."

"உன்னிடமா கேட்டேன்?" என்று அவனை அதட்டியவர்,

"ஏன், மகாராணி என்னுடன் எல்லாம் பேசமாட்டாளா? உன்னைப் போன்ற ஆண்களிடம் மட்டும்தான் பேசுவாளா?"

"இல்லைமா, நன்றாகக் கதைப்பாள். உங்களைத் திடீரென்று பார்த்ததில் பயந்துவிட்டாள்..." என்றான் கவி மேலிருந்த பரிதாபத்தில்

மழையில் நனைந்த கோழிக்குஞ்சாய் நடுங்கியவளைப் பார்க்கையில் அள்ளி அணைத்துக்கொள்ள வேண்டும் போலும் இருந்தது. தாய் பக்கத்தில் அதுவும் கோபத்துடன் நிற்பதால் ஒன்றும் செய்யமுடியாமல் நின்றான்.

"நீ கொஞ்சம் வெளியே போகிறாயா?" கோபத்துடன் ரவியிடம் சகுந்தலா சொல்லவும்,

"இல்லைமா. நீங்கள் அவளுடன் கதையுங்கள். நான் இனி ஒன்றும் சொல்லவில்லை..." என்றவன், கவியிடம் 'பயப்படாமல் பேசு' என்று கண்களால் தைரியம் சொன்னான்.

அவளோ அவனையும் அவன் தாயையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டு பயத்தில் நடுங்கிக்கொண்டு நின்றாள்.

"எத்தனை வயது உனக்கு?"

"ப...பதி..னைந்து..." திக்கியபடி சொன்னவளின் வயதைக் கேட்டதும் அன்றைய நாளில் மூன்றாவது முறையாக அதிர்ந்து நின்றார் சகுந்தலா.

உருவத்தில் சின்னவளாக இருந்தாலும் வயது கூடுதலாக இருக்குமோ என்கிற அவரின் எண்ணத்திலும் மண் விழுந்தது.

"என்னதான்டா நடக்குது இங்கே? அறிவே இல்லையா உனக்கு? இவளையா திருமணம் முடித்தேன் என்று சொன்னாய்?" என்று அவனிடம் பாய்ந்தவர்,

"அவன்தான் அறிவில்லாமல் இருக்கிறான் என்றால், ஒரு பெண்பிள்ளை உனக்கு கொஞ்சமும் மூளை இல்லையா? உனக்குக் காதலிக்கும் வயதா? இல்லை கல்யாணம் முடிக்கும் வயதா?" என்று கிட்டத்தட்டக் கத்தினார்.

"அவன் தாலியை கட்டினான் என்றால் அவன் கட்டும் வரை நீ எங்கு பார்த்துக்கொண்டு நின்றாய்? வயதுக்கு வந்தாலே எவன் கிடைப்பான் என்று அலைவீர்களா நீங்கள் எல்லோரும்...சை!" சகுந்தலா கவியைப் பேச்சாலேயே குதறித்தள்ளினார்.

"அம்மா, அவளை ஒன்றும் சொல்லாதீர்கள். அவளுக்கு எதுவும் தெரியாது..." இடையில் புகுந்தான் ரவி.

"நீ மூடு வாயை! அவளுக்கு ஒன்றும் தெரியாமல் தான் உன்னுடன் விடுதி வரை வந்தால் போல...." என்றவரின் பார்வை அவளைச் சுட்டுப் பொசுக்கியது!

"அம்மா, வீட்டுக்குப் போய்க் கதைக்கலாம். நீங்கள் கதைக்கும் த்தம் வெளியே கேட்கப் போகிறது அம்மா..." என்றான் அவன் கெஞ்சலாக.

"வீட்டுக்கா? இவளையும் கூட்டிக்கொண்டா? கண்டகண்ட சாக்கடைகளையும் என் வீட்டில் அனுமதிக்க முடியாது..." என்றார் இருந்த கோபத்தில்.

அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அந்தப் பிஞ்சு மனதைக் குத்திக்கிழித்தது! அந்தப் பேச்சுக்களின் அர்த்தம் முழுமையாகப் புரியாதபோதும், தன்னை அவர் மிகுந்த கேவலமாக நினைக்கிறார் என்று மட்டும் புரிந்தது அவளுக்கு. குன்றிப்போனாள் கவி!

"அம்மா, ப்ளீஸ்மா... முதலில் வீட்டுக்கு போகலாம். பிறகு என்ன செய்யலாம் என்பதை யோசிக்கலாமே..." என்றவனைக் கண்களால் எரித்தார் சகுந்தலா.

அவன் தலையைக் குனியவும் அங்கு இருந்த கதிரையில் அமர்ந்தவர், மேசையில் கையை ஊன்றி, அந்தக் கையில் தன் நெற்றியைத் தாங்கிக்கொண்டார். கவியின் மேல் அருவெருப்பாக இருந்தது என்றால் மகன் மேல் வெறுப்பாக இருந்தது!

மகன் என்று பெற்று விட்டேனே, போதாக்குறைக்கு பாசம் வேறு வைத்து வளர்த்தும் விட்டேனே, நடப்பவைகளை தாங்கித்தானே ஆகவேண்டும் என்று மனம் கனக்க நினைத்தவர், "அவளையும் கூட்டிக்கொண்டு வா..." என்று வேண்டா வெறுப்பாகச் சொல்லிவிட்டு, அறையின் வெளியே சென்று நின்றுகொண்டார்.

"வா கவி..." என்றான் ரவி இதமாக.

அவள் பயத்துடன் அவனைப் பார்க்கவும், "பயப்படாமல் வா. அம்மா வெளியே காத்திருக்கிறார். வா..." எனவும், கண்களைத் துடைத்துக்கொண்டு வெளியே செல்லக் கால் எடுத்து வைத்தவளுக்கு பயத்தில் தடுமாறியது உடல்.

அவள் தடுமாறவும், வேகமாக அவளின் அருகே சென்ற ரவி ஆதரவாக அவளின் கையைப் பற்றிக்கொள்ளவும், பாத்துக்கொண்டு இருந்த சகுந்தலாவுக்கு பற்றிக்கொண்டு வந்தது.

"அவள் நடிக்க இவர் துடிக்கிறார் துரை...' என்று மனதிற்குள் திட்டிக்கொண்டவர், வெறுப்புடன் பார்வையை திருப்பிக்கொண்டார்.

ஒருவழியாக கவியும் ரவியும் வரவே, அறைத் திறப்பை விடுதிப் பொறுப்பாளரிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டனர் மூவரும்.

ஆட்டோவில் சகுந்தலா முதல் ஏறிக்கொள்ளவும், அடுத்ததாக ரவி கவியிடம் "நீ ஏறு கவி..." என்றான்.

"நீ முதலில் ஏறு! அதன் பிறகு அவள் ஏறட்டும்..." என்று கடுமையாகச் சொன்னார் சகுந்தலா. அந்தளவுக்கு அவளைப் பார்க்கவே வெறுப்பாக இருந்தது அவருக்கு.

தாயின் பேச்சைத் தட்டப் பயந்து, தான் ஏறி நன்றாக தாயின் புறமாக அமர்ந்துகொண்டவன், "ஏறு.." என்று அவளுக்கு இடம் விட்டான்.

அமர்ந்தவளின் உடல் நடுங்குவதை உணர்ந்து, அவளின் கையைத் தன் கையால் இறுகப் பற்றி, தாயின் கண்களுக்கு அது பட்டுவிடாமல் இருக்க, இருவரின் கால்களுக்கும் நடுவில் பிணைந்திருந்த கைகளைப் புதைத்துக்கொண்டான்.

பயத்தில் விழி உயர்த்திப் பார்த்தவளுக்கு விழிகளாலேயே அவன் ஆறுதல் சொல்லவும், இன்னும் அழுகை வரும்போல் இருந்தது கவிக்கு.

வீட்டுக்குச் சென்றதும், விறு விறு என்று உள்ளே சென்றுவிட்டார் சகுந்தலா. தாயின் செயல் புதிராக இருந்தது ரவிக்கு. அவரின் கோபம் புரிந்தாலும் கவியை என்ன செய்வது? தன் அறைக்குக் கூட்டிச் செல்வதா என்று தெரியாமல் சில நொடிகள் அப்படியே நின்றான்.

அந்த வீட்டையே மிகுந்த அச்சத்துடன் பார்த்த கவியின் அருகில் வந்து, "அம்மா கோபமாக இருக்கிறார். அதுதான் இப்படி எல்லாம் செய்கிறார்கள். நீ பயப்படாதே..." என்று அவன் சொல்லவும், அவன் அப்படிச் சொன்னதே அவளுக்கு இன்னும் பயத்தைக் கிழப்பியது.

தன் அறையில் இருந்து வெளியே வந்த சகுந்தலா, வீட்டின் பின் கோடியில் இருந்த ஒரு அறையைக் காட்டி, "அவளை அங்கே விட்டுவிட்டு நீ வா என் அறைக்கு..." என்றுவிட்டு, மீண்டும் தன் அறைக்குள் சென்றார்.

அவர் காட்டிய அறை தேவையில்லாத பொருட்கள் போடும் அறை என்று அவனுக்குத் தெரியும். அங்கே அவளை விடுவதா என்று தோன்றியபோதும், கவியிடம் அதைப்பற்றி எதுவும் சொல்லாது, "நீ இங்கே இரு நான் அம்மாவிடம் கதைத்துவிட்டு வருகிறேன்..." என்று, அவளை அந்த அறையில் விட்டுவிட்டுத் தாயிடம் சென்றான்.

"அம்மா.." அவரின் அறைக்குள் சென்று தயக்கத்துடன் அழைத்தான்.

அவனைப் பார்த்து முறைத்தவர், "என்னை அப்படிக் கூப்பிடாதே. உண்மையாகவே என்னை அம்மா என்று மதித்திருந்தால், என்மேல் உனக்குப் பாசம் இருந்தால் நீ இப்படி நடந்திருக்க மாட்டாய்! பிறகு எதற்கு பாசம் உள்ளவன் போல் நடிக்கிறாய்...?" என்றார் ஆத்திரத்தோடு.

அவன் என்னவோ சொல்ல வரவும், "உன் தேவையில்லாத பேச்சுக்களை இனியும் கேட்கும் அளவுக்கு எனக்குப் பொறுமை இல்லை! அதனால் நான் கேட்பதற்கு மட்டும் பதிலை சொல்லு..." என்றவர், வெள்ளி முதல் இன்று வரை நடந்தவைகளை அவன் வாயில் இருந்து பிடுங்கினார்.

கேட்கக் கேட்க மனம் கொதித்து அவருக்கு! சமையல்காரியின் மகள் அதுவும் அப்பன் இல்லாமல் பிறந்து வளர்ந்தவள் என் வீட்டுக்கு மருமகளாக வருவதா? நினைத்துப்பார்க்கவே முடியவில்லை அவரால்.

தாயைப் போல் தானே மகளும் இருப்பாள். அதுதான் வசதி உள்ள ஒருவன் கிடைத்ததும் வளைத்துவிட்டாள். இது தெரியாமல் நான் பெற்றது வேறு புத்தி கெட்டு அலைகிறது என்று கொதித்தவர், "இனி என்ன செய்வதாக உத்தேசம்?" என்று அவனிடமே கேட்டார்.

"தெ..தெரியவில்லை அம்மா..." என்றான் தலையைக் குனிந்து.

"நீ படிக்கவேண்டும். அவளும் படிக்கவேண்டும். ஆனால் அது அவள் பிரச்சினை.. அவள் எக்கேடோ கெடட்டும். எனக்கு அக்கறை இல்லை...."

"அவளும்... அவளும் படிக்கவேண்டும் அம்மா..." என்றான் தயக்கத்தோடு...

"அவளின் மேல் உனக்கு அக்கறை பொத்துக்கொண்டு வருகிறது...ம்?ஆனால் அம்மா என்று ஒருத்தி இங்கே உயிரோடு இருக்கிறாள் என்பதையே நீ மறந்துவிட்டாய்! அப்படித்தானே?"

"இல்லை... இல்லைமா...."

"நிற்பாட்டு...! அவள் படிக்கிறாள் அல்லது என்னவாவது செய்கிறாள் அது அவள் பாடு. ஆனால் அவள் இங்கே நம் வீட்டில் இருக்க முடியாது! அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்!"

"இல்லைமா... அவளை அவள்..." என்று ரவி சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, ரவி வீட்டு அழைப்புமணியை அழுத்தினான் ராஜ்.
 
Top Bottom