• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு - 4

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம்-4


"இந்தச் சின்ன வயதில் எவ்வளவு புத்திசாலித்தனமாக பேசுகிறாள் இந்தக் குழந்தை..." என்றார் காஞ்சனா.

"மாமி, மறந்தும் அவள் முன்னிலையில் குழந்தை, சின்னப்பிள்ளை என்று எதுவும் சொல்லிவிடாதீர்கள். சண்டைக்கு வந்துவிடுவாள். தான் வளர்ந்த பெரிய பெண்ணாம்...." என்ற சாந்திக்கு, பாவையை நினைத்துச் சிரிப்பு வந்தது.

"பாவையின் அப்பா என்ன செய்கிறார் சாந்தி?" சகுந்தலா கேட்கவும், "அவர்.. பாவை மூன்றுமாதக் கருவாக இருந்தபோதே இறந்துவிட்டாராம்...." என்றவளின் குரல் அடைத்திருந்தது.

அதை கேட்டவர்கள் எல்லோரினது முகமும் நொடியில் மங்கிப்போனது. இந்த அழகிய குழந்தைக்கு அப்பா இல்லையே என்பதை விட, அந்த அப்பாவுக்கு இந்த மகளைக் கொஞ்சும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்றுதான் அனைவருக்கும் தோன்றியது. அந்தளவுக்கு தன்னுடைய இயல்பால் அனைவரையும் கவர்ந்திருந்தாள் பாவை.

'அப்பா இல்லாத சிறு பெண்ணையா தான் அப்படியெல்லாம் பேசினோம்...' என்று நினைத்த ரவிக்கு, மனம் பாரமாகிப்போனது.

"எங்கள் வீட்டில் நடக்கும் எல்லா விசேசத்துக்கும் பாவையின் அம்மாவையே சமையலுக்கு பிடிக்கலாம் அம்மா..." என்றான் ரவி. மனதில் தோன்றும் இனம்புரியா குற்ற உணர்விற்கு விடுதலை தேட நினைத்தான் போலும்!

"ஆன்ட்டி, ரவி சொல்வது புரிகிறதா? எங்கள் திருமணம் முடிந்துவிட்டதால் தனது திருமணத்திற்கு பெண்ணைப் பார்த்து, விசேசத்தை விரைவாக வைக்கச்சொல்கிறான்." என்ற நந்தனை முறைத்தான் ரவி.

"இப்போது இதை அம்மாவிடம் சொல்லு என்று நான் உன்னிடம் கேட்டேனா..." என்று கடுகடுத்தான்.

"நீ என் நண்பன்டா. உன் மனம் எனக்கு புரியாதா?" அப்போதும் கேலி பேசியவனை, எல்லோரும் கூடியிருக்கையில் ஒன்றும் செய்ய முடியாமல் பல்லைக் கடித்தான் ரவி.

"சொல்ல மறந்துவிட்டேன் சகுந்தலா, என் நண்பனின் மகள் தாரிகா. பிறந்து வளர்ந்தது எல்லாம் சுவிஸ். அவனின் மனைவிக்கு பனியும் குளிரும் ஒத்துவராததால் இலங்கைக்கே வந்துவிட்டார்கள். இப்போது கொழும்பில் இருக்கிறார்கள். ஒரே பெண், வசதியிலும் குறைவில்லை. எனக்கு மிகவும் நம்பிக்கையானவர்கள். அவனும் தன் மகளுக்கு வரன் தேடுகிறான். நான் நம் ரவியைப் பற்றி சொல்லிவைத்திருக்கிறேன். உனக்கும் பிடித்தால் நாம் மேற்கொண்டு பேசலாம்..." என்று கனகேந்திரம் சொல்லவும்

"அண்ணா, உங்களுக்குப் பிடித்திருந்தால் போதும். ரவிக்கு அந்தப் பெண்ணையும், அந்த பிள்ளைக்கு ரவியையும் பிடித்தால் திருமணப் பேச்சை தொடங்குவோம். நந்தனின் திருமணத்தை பார்த்ததில் இருந்து, என் மகனின் திருமணத்தை எப்போது பார்ப்பேன் என்றிருக்கிறது. நீங்கள் அவர்களிடம் பேசுங்கள்..." மகனுக்கும் சம்மந்தம் சரியாக வரப்போகிறது என்கிற மகிழ்ச்சி, அவர் குரலிலும் முகத்திலும் தெரிந்தது.

"சரி சகுந்தலா. இரண்டு நாட்கள் போகட்டும். நான் இன்னும் விசாரித்துவிட்டு தாரிகாவின் போட்டோவையும் வாங்கித்தருகிறேன், பாருங்கள். ரவியின் போட்டோ ஏற்கனவே நான் காட்டிவிட்டேன். அவர்கள் மூவருக்கும் ரவியை மிகவும் பிடித்துவிட்டது." என்றவர் ரவியின் புறம் திரும்பி, "என்ன இருந்தாலும் முதலில் பெண் பிள்ளையின் சம்மதம் தானே ரவி முக்கியம். அதனால்தான் உன் படத்தை அவர்களுக்கு முதலில் காட்டினேன். மாமா மேல் உனக்கு கோபம் இல்லையே..." என்று கேட்டார்.

"என்ன மாமா இது. நீங்கள் செய்தால் அது சரியாகத்தான் இருக்கும். உங்கள் மீது நான் கோபப்படுவேனா..." என்றான் உண்மையான அன்போடு அவன்.

சிறு வயதிலேயே தந்தையை இழந்த ரவிக்கு இன்னொரு தந்தையாக இருப்பவர் கனகேந்திரன். அதனால் என்றுமே அவரின் பேச்சை அவன் தட்டியது இல்லை.

அப்படியே தொடர்ந்த பேச்சு, தன் திருமணத்தைப் பற்றியே நகர, இயல்பாக இருக்கமுடியாது தவித்த ரவி, "மாமா, நீங்கள் பாவையின் அம்மாவை பார்க்கவேண்டும் என்றீர்களே.... போகவில்லையா?" என்று நினைவுபடுத்தினான்.

"ஆமாம் ரவி. உன் திருமணத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்ததில் மறந்துவிட்டேன். பேசிவிட்டு வருகிறேன்..." என்று எழுந்தவர் சகுந்தலாவிடம், "நீயும் வாயேன் சகுந்தலா. நேரடியாக கதைத்தால் உனக்கும் திருப்தியாக இருக்குமே..." என்றார் கனகேந்திரன்.

"நீங்கள் பார்த்துச் செய்தாலே போதுமானது அண்ணா. அதனால் நீங்களே பேசிவிடுங்கள்..."

"அப்படியானால் எனக்கு இன்னொரு கல்யாண வேலையும் இருக்கிறது என்கிறாய்.." என்றவரின் குரலில், அந்த இருகுடும்பத்துக்கும் பெரியவன் நான் என்கிற தலைமை உணர்வு அக்கறையோடு கலந்திருந்தது.

கவியிடம் கதைக்கச் செல்கையில், சாந்தியின் அப்பா வேல்முருகனையும் அழைத்துக்கொண்டு நகர்ந்தார் கனகேந்திரன்.

அவர்கள் இருவரும் கவியோடு கதைத்துவிட்டு வரவும், எல்லோரும் மிகுதி திருமண வேலைகளை பார்க்க மண்டபத்தை விட்டு நகர்ந்தார்கள்.

அதுவரை மண்டபத்துக்குள் கவிநயா வரவே இல்லை. சாந்தி அவ்வளவு சொல்லியும், தான் வந்தால் யாராவது ஏடாகூடமாக எதையாவது சொல்லி, பதிலுக்கு தனக்காக சாந்தி எதையாவது பேசி பிரச்சினையில் முடிந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் கவி.

அவளின் குணம் அறிந்த சாந்தி, திருமணச் சடங்குகள் எல்லாம் முடிந்தபிறகு தானாக ஒரு தடவை சமையலறைக்குச் சென்று கவியை பார்த்தாளே தவிர, கவி அந்த இடத்தை விட்டு நகரவில்லை. அதற்கு மேல் கவியுடன் போராட சாந்தியாலும் முடியவில்லை. அவளுக்கான சடங்குகள் அவளை அதற்கு விடவும் இல்லை..

திருமணம் நடந்த அன்று, சாந்தி களைத்துப்போனாளோ இல்லையோ கவி மிகவும் களைத்துப்போனாள். தோழியின் திருமணச்சாப்பாடு நன்றாக இருக்கவேண்டும் என்பதும், இதை நன்றாக செய்துகொடுத்தால் இனி இப்படியான சமையல் வேலைகளும் தனக்குக் கிடைக்கும் என்பதாலும் தன்னை மீறியே உழைத்ததால் மிகவும் கஷ்டப்பட்டுப்போனாள் கவி.

பலரை வேலைக்கு நியமித்திருந்தாலும், அன்புத்தோழியின் திருமணம் என்பதால் எல்லா வேலைகளையும் தானே இழுத்துப்போட்டு செய்தவளின் உடலோ ஓய்வைக் கேட்டது.

அடுத்த இரண்டு நாட்களும் அவளால் எதுவுமே செய்யமுடியவில்லை. பாவைக்கும் பள்ளி இல்லாததால், அவர்கள் இருவருக்கும் மிக இலகுவாக உணவைச் சமைத்தவள், மிகுதிப் பொழுதை ஓய்வாகவே கழித்தாள்.

அதன் பிறகு அவர்களின் வாழ்க்கை முறை வழமைக்குத் திரும்பியது.


நந்தன் சாந்தியின் வாழ்க்கை மிக அழகாக நகர, ரவியின் திருமணப் பேச்சும் முற்றாகும் நிலைக்கு முன்னேறியது.

"ரவி, அண்ணா தாரிகாவின் போட்டோவை நந்தனிடம் கொடுத்துவிட்டிருந்தார். அங்கே விறாந்தை(ஹால்) மேசையில் இருக்கிறது. எடுத்துப்பார்.." அன்று மாலை, வேலை முடிந்து வந்தவனிடம் ஆர்வத்துடன் கூறினார் சகுந்தலா.

"அம்மா, இப்போதுதான் வீட்டுக்குள்ளேயே வருகிறேன். முதலில் குளித்து உடை மாற்ற விடுங்கள். பசிக்கிறதுமா… சாப்பிட எதையாவது தாருங்கள், அதன் பிறகு மற்ற வேலைகளைப் பார்க்கலாம்..” என்றவன், தனது அறைக்குள் வேகமாகப் புகுந்துகொண்டான்.

'உன் கல்யாணத்தை நடத்தி முடிப்பதற்குள் நான் ஒருவழியாகி விடுவேன்...' என்று புறுபுறுத்துக்கொண்டே, மகனுக்கான உணவையும் தேநீரையும் தயார் செய்தார் சகுந்தலா.

திருமணத்திற்கு சம்மதம் சொல்லியாகிவிட்டது. குறிப்பு பார்த்து இருவருக்கும் பொருத்தம் என்பதும் தெரியும். பெண் வீட்டாருக்கு அவனை பிடித்திருக்கிறது என்பதும் தெரியும். ஆனாலும் அவன் மனதில் ஒரு ஆர்வம் தோன்ற மறுத்தது. காரணம், அவனுக்கே பிடிபடவில்லை.

ஒரு வித சலிப்பு தோன்றுவதை தவிர்க்க முடியாமல் குளித்து உடை மாற்றி வந்தவனிடம் மாலை உணவையும் தேநீரையும் கொடுத்த சகுந்தலா, தாரிகாவின் போட்டோவை எடுத்துக்கொண்டு அவன் அருகில் அமர்ந்தார்.

"இங்கே பார் ரவி, எவ்வளவு அழகாக இருக்கிறாள். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உனக்கும் பிடிக்கும்...பார்த்துச்சொல்..." என்று அவனிடம் போட்டோவை நீட்டினார்.

வாங்கிப்பார்த்தவனும் கொஞ்சம் அசந்துதான் போனான். அழகென்றால் அப்படி ஒரு அழகு. தன்னை மறந்து சில நொடிகள் பார்த்திருந்தான்.

சற்று நேரம் போட்டோவை பார்த்துவிட்டு தாயிடம் மறுபடியும் நீட்டி, "உங்களுக்கு பிடித்திருக்கிறதுதானே அம்மா. பிறகு என்ன...? எனக்கும் சம்மதம்..." என்றான்.

"உனக்கும் பிடித்திருக்கிறதா ரவி? எனக்காக சொல்லவில்லையே...? நன்றாக பார்த்துச்சொல்..." அவனின் சம்மதத்தில் முகம் மலர்ந்தபோதும், மகனுக்கும் பிடிக்கவேண்டுமே என்கிற எண்ணத்தில் மீண்டும் மீண்டும் கேட்டார் சகுந்தலா.

" அம்மா,அதுதான் பிடித்திருக்கிறது என்று சொன்னேனே… பிறகு என்ன?" சிறு சிரிப்போடு சொன்னபோதும், அவன் மனதின் சலிப்பு நீங்கவில்லை. அதை தாய்க்குக் காட்டாமல் தன் சிரிப்பால் மறைத்தான்.

"அப்படியானால் நிச்சயத்துக்கு நாள் பார்க்கச் சொல்லவா?"

"பாருங்கள் அம்மா. ஆனால் வவுனியாவில் நிச்சயத்தை வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லுங்கள். ஊர் மாறியது, நந்தனின் திருமணம் என்று அலைந்ததில் வேலைகள் நிறையத் தேங்கிக் கிடக்கிறது. அதனால் கொழும்பு சென்று வருவதெல்லாம் இப்போதைக்கு சரியாக வராதும்மா...."

அவனின் சம்மதம் கிடைத்ததே போதுமானது சகுந்தலாவுக்கு. இப்போது அவன் என்ன சொன்னாலும் அவரின் தலை சம்மதமாக மட்டுமே ஆடும். அதன் படி, "சரிடா. நான் சொல்லிவிடுகிறேன்..." என்றார் மகிழ்ச்சியோடு.

அதன் பின்னர் சகுந்தலா ஒரு நிமிடம் தன்னும் ஓய்ந்து இருக்கவில்லை. மகன் மனம் மாறிவிடுவதற்குள் திருமணத்தையே நடத்த நினைத்தவர், உடனேயே கனகேந்திரனுக்கு தொலைபேசியில் அழைத்து, "அண்ணா, ரவிக்கு பிடித்திருக்கிறதாம் தாரிகாவை. நாம் நிச்சயத்துக்கு நாள் பார்க்கலாம். முடிந்தவரை விரைவாக செய்யலாம் அண்ணா...." என்றார் ஆர்வமாக.

"ஒரு வழியாக உன் மகன் திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டானா?சந்தோசம் சகுந்தலா. நான் அப்போது உன் சம்மந்தி வீட்டாரிடம் பேசிவிட்டு சொல்கிறேன்..." என்றார் அவரும் மகிழ்ச்சியுடன்.

"பேசுங்கள் அண்ணா, ஆனால் அண்ணா, நிச்சயத்தை இங்கே வைத்துக்கொள்ளலாமா என்றும் கேளுங்கள். ரவிக்கு கொழும்புக்கு போய்வர நேரம் கிடைக்காது என்கிறான். அவர்களுடன் இதைப்பற்றி பேசிவிட்டு சொல்லுங்கள்.." என்று கூறி தொலைபேசியை வைத்தார் சகுந்தலா.

சகுந்தலா பேசியவற்றை கேட்டிருந்தவனுக்கு பெருமூச்சொன்று வெளியேறியது. மேலே எதையும் சிந்திக்க பிடிக்காதவனாய், "சரிம்மா...எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது. என் அறைக்குப் போகிறேன்..." என்றபடி எழுந்து சென்றான்.

தாரிகா வீட்டினரும் வவுனியாவில் நிச்சயத்தை வைக்க சம்மதிக்கவே, அன்றிலிருந்து இரண்டு கிழமைகள்(வாரங்கள்) தள்ளிவரும் ஒரு நல்ல நாளில் நிச்சயத்தை செய்வதாக முடிவு செய்யப்பட்டது.

ரவியின் நிச்சய சாப்பாட்டினைப் பற்றிப் பேசுவதற்காக நந்தனும் சாந்தியும் கவிநயாவின் வீட்டுக்கு சென்றபோது, "வாருங்கள் அண்ணா. சாந்தி வாவா. நீங்கள் வரப்போவதாக சொல்லவே இல்லையே. சொல்லியிருக்க சமைத்திருப்பேனே சாந்தி. அங்கிருந்து வெளிக்கிட(கிளம்ப) முதலில் எனக்கு சொல்லியிருக்கலாமே..." என்று, எதிர்பாராமல் அவர்களை பார்த்த மகிழ்ச்சியோடு வரவேற்றாள் கவி.
 

Vishakini

Moderator
Staff member
"நீ அப்படியெல்லாம் செய்வாய் என்றுதான் சொல்லாமல் வந்தோம். அதைவிடு, நீதான் எங்கள் திருமணத்தின்போது மண்டபத்துக்குள்ளே வரமாட்டேன் என்று அடம்பிடித்தாயே. அதனால் நந்தனை உனக்கு நான் இன்னும் அறிமுகப்படுத்தவில்லையே. நன்றாகக் கேட்டுக்கொள், என் கழுத்தில் மூன்று முடிச்சைப் போட்டு என்னை சிறைவாசம் செய்தவர் இவர்தான்..." என்றாள் சாந்தி நந்தனை கேலியுடன் பார்த்து.

"நான் மூன்று முடிச்சை போட்டதென்னவோ அவள் கழுத்தில் தான். ஆனால் சிறைப்பட்டது என்னவோ நான்தான் கவி.” என்று கவியிடம் சொன்னாலும், நந்தனின் பார்வையோ, அது சந்தோசமான சிறை என்று சாந்தியிடம் கதை பேசியது.

"அவளின் அன்புச்சிறைக்குள் அகப்படுவதற்கும் கொடுத்துவைத்திருக்க வேண்டும் நந்தன் அண்ணா..." என்றாள் கவி, தோழியை விட்டுக்கொடுக்காது.

"நிச்சயமாகக் கவி, அவளும் அவளின் அன்பும் எனக்கு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு..." உள்ளார்ந்த குரலில் சொன்னான் நந்தன்.

நந்தனின் பேச்சைக் கேட்டு மலர்ந்திருந்த சாந்தியின் முகமே அவர்களின் நிறைவான வாழ்க்கையைச் சொல்ல, “அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட, நான் விரைவாகச் சமைக்கிறேன். சாப்பிட்டுவிட்டுத்தான் நீங்கள் இருவரும் போகவேண்டும்." என்றாள் கவி.

"உனக்கு எதற்கு சிரமம் கவி. இன்னொருநாள் சாப்பிடலாமே..." என்று நந்தன் சொன்னபோது,

"அண்ணா, எதுவும் பேசக்கூடாது. நொடியில் சமைத்துவிடுகிறேன்.. திருமணமானபின்னர் முதன் முதலில் வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள். சும்மா போவதா..." என்றபடி குடிப்பதற்கு அவர்களுக்கு தேநீரைக் கொடுத்தவள், வேகமாக சமையல் வேலையை ஆரம்பித்தாள்.

அவள் விடப்போவதில்லை என்பதை உணர்ந்த சாந்தி, "எங்கே கவி பாவை? வீட்டில் இல்லையா அவள்..." எனக்கேட்கவும், "கண்மணியுடன் விளையாடப் போய்விட்டாள். நீ வந்தது தெரிந்தால் கத்தப்போகிறாள். உன்னைத்தான் அவளுக்கு மிகவும் பிடிக்குமே...." என்றாள் கவி.

பாவையை எண்ணிப் பூத்த புன்னகையோடு, “ம்ம்.. என் பின்னாலேயே சுற்றுவாளே.. பிறகு இன்னுமொரு நாள் அவள் இருக்கும்போது வருகிறோம் என்று அவளிடம் சொல்லிவிடு..." என்ற சாந்தி, "கவி, இன்னொரு விஷயம், இவரின் நண்பர் திருமணம் பற்றி அன்று அப்பா உன்னோடு கதைத்தாரே.. அதைப் பற்றியும் கதைக்கத்தான் வந்தோம். அவரின் நிச்சயத்திற்கும், திருமணத்திற்கும் உன்னால் சமைக்க முடியுமா?" என்று கேட்டாள்.

"முடியாமல் என்ன சாந்தி. நிச்சயம் செய்கிறேன். நந்தன் அண்ணாவின் நண்பருக்கு செய்ய மாட்டேன் என்று சொல்வேனா..." என்றவள், எப்போது எத்தனை பேருக்கு சமைக்கவேண்டும் என்கிற விபரங்களை கேட்டுக்கொண்டாள்.

கவியின் சமையலும் முடிந்துவிட, நந்தனும் சாந்தியும் அவளின் அன்பான உபசரிப்பில் நன்றாக சாப்பிட்டுவிட்டு அவர்கள் வீட்டுக்குக் கிளம்பினார்கள்.



ரவியின் நிச்சய நாளும் வேகமாக வந்து சேர்ந்தது. தாரிகா குடும்பத்தினர் கொழும்பில் இருந்து வவுனியா வந்து, காஞ்சனா வீட்டில் தங்கி இருந்தனர். அதனால் அங்கேயே நிச்சயத்தை வைத்துக்கொள்வதாக முடிவும் செய்யப்பட்டு இருந்தது.

திருமணத்தைப் பெரிதாகச் செய்வதாக திட்டமிட்டு இருந்ததால், நிச்சயத்துக்கு நெருங்கிய சொந்தங்கள், நட்புக்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தார்கள்.

எந்தக் குறையும் இல்லாமல், காலைப்பொழுதில் ரவியும் தாரிகாவும் மோதிரமும் மாற்றி நல்லபடியாக நிச்சயமும் முடிந்தது.

அழகிய சேலையில் பேரழகியாக நடந்துவந்து "ஹாய்.." என்றபடி அழகாய்ப் புன்னகைத்தவளின் மீது, விருப்புத் தோன்றாத போதும் மறுப்போ வெறுப்போ தோன்றவில்லை ரவிக்கு. அழகான மனைவி அமையப்போகிறாள் என்பதிலும் மகிழ்ச்சியே அவனுக்கு.

திருமணம் இன்னும் இரண்டு மாதத்தில் வருகிற ஒரு நல்ல நாளில் என்று முடிவானதிலும், அவளே தன் வருங்கால மனைவி என்கிற முத்திரை குத்தப்பட்டதிலும், தானும் புன்னகைத்து "ஹாய்..." என்றான் ரவியும்.

அவனின் கையோடு தன்னுடைய கையைக் கோர்த்தவள், "வாருங்கள். வெளியே நடந்துகொண்டே பேசலாம்..." என்று அழைத்தாள் தாரிகா.

அவளின் அந்தச் செயல் சற்று அதிர்ச்சியாக இருந்தாலும், தாரிகா பிறந்து வளர்ந்த சுவிஸில் அது சாதாரணம் என்பதை உணர்ந்தவன், "வா..." என்றவாறே தோட்டத்தை நோக்கி நடந்தான்.

"நீங்கள் ஏன் என்னுடன் இதுவரை கதைத்ததேயில்லை..” என்ற தாரிகாவின் கேள்வியில், "எப்போது..?" என்று, சிறு சிரிப்புடன் கேட்டான் ரவி.

"நமக்குத் திருமணம் செய்யலாம் என்று பெரியவர்கள் முடிவு செய்த நாளில் இருந்து இன்றுவரை நீங்கள் என்னுடன் பேசவில்லையே... நாங்கள் வவுனியா வந்தும் மூன்று நாட்களாகிறது. அப்போதும் நீங்கள் வந்து என்னைப் பார்க்கவில்லையே.." குறை என்று இல்லாது, தன் மனதில் தோன்றியதை உரிமையுடன் கேட்கும் பாவம் இருந்தது அவள் குரலில்.

"எனக்கு நிறைய வேலைகள் இருந்தது தாரிகா. அதனால்தான்..." அவன் சொல்வது உண்மையாக இருந்தாலும் அவளுடன் பேசவேண்டும் என்கிற ஆர்வமும் அவனுக்கு இருக்கவில்லை. அது மனதில் தோன்றியபோதும் அவளிடம் அதைச் சொல்லவில்லை ரவி.

"அப்படியானால் சரிதான்...." என்றவள் தொடர்ந்து, "உங்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா?" என்றாள் கேள்வியாக.

அவன் சொன்னதை இலகுவாக ஏற்றுக்கொண்டவளின் இயல்பு அவனைக் கவர்ந்தபோதும், அவளின் கேள்வியில் கொஞ்சம் அதிர்ந்து, தாரிகாவை திரும்பிப் பார்த்தான். அவளின் அழகிய பெரிய விழிகள் கேள்வியைத் தாங்கி அவனைப் பார்த்தது.

அவனுக்கே விடை தெரியாத கேள்வி அது. ஆனால் பிடிக்கவில்லை என்று சொல்வதற்கும் இல்லை என்று தோன்றியது. அவள் தன்னுடைய பதிலுக்காக காத்திருக்கிறாள் என்பது புரியவே, "ம்ம்..." என்றான் உதடு பிரிக்காமல்.

அவன் அந்த 'ம்ம்' என்கிற பதிலைச் சம்மதமாகச் சொன்னானா அல்லது யோசிக்கிற தொனியில் சொன்னானா என்கிற சந்தேகம் எழுந்ததில், "என்ன, என்னை பிடித்திருக்கிறதா...?" என்றாள் மறுபடியும் தாரிகா.

"ம்.... பிடி....." என்று ஆரம்பித்தவனின் காதுகளில் பேச்சுக்குரல் கேட்கவே நிமிர்ந்து பார்த்தான்.

கேட்டின் அருகில், ஒரு பெண்ணும் பாவையும் ஸ்கூட்டியில் வந்து இறங்குவதும், அந்தப் பெண் அவளுக்கு பின்னால், வாகனத்தில் வந்த ஒருவனிடம் எதுவோ பேசுவதும் தெரிந்தது.

பாவையைக் கண்டவனின் விழிகளில் சுவாரசியம் பிறக்க, சிறு சிரிப்புடன் தாரிகாவை மறந்து பாவையையே பாத்திருந்தான்.

பாவையிடம் எதையோ சொன்னபடி திரும்பிய அந்தப் பெண்தான் பாவையின் அம்மாவாக இருக்கவேண்டும் என்கிற ஊகத்துடன் அவளைப் பார்த்தவனுக்கு, அவளை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று தோன்றியது.

பார்த்த முகமாக இருக்கிறதே என்று, பாவையுடன் நடந்து வந்துகொண்டிருந்தவளைக் கூர்ந்து பார்த்தவன் திகைத்துப்போனான்.

கண்கள் சிவக்க, முகம் இறுக, "கறு...ப்பி...." என்றது அவன் உதடுகள்.
 
Top Bottom