• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

என் தேசமிங்கே பூந்தோட்டமாக - 11

நிதனிபிரபு

Administrator
Staff member
தனது மோதிர விரலில் இடம் பெற்றிருந்த அந்த சின்ன வைரம் போன்ற கல் பதித்த
கணையாழியை ஒரு தரம் வருடி விட்டுக் கொண்டாள் வசுமதி.

அதைப் பார்க்கப், பார்க்க தனக்குக் கூடிய விரைவில் திருமணம் நிகழப் போகிறது என்ற
பூரிப்பு உண்டானது அவளுக்கு.

தங்களது நிச்சயத்தின் போது தன்னிடம் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசி இருந்த
சம்யுக்தனை எண்ணிச் சிறு வருத்தம் இருந்த போதிலும் கூட அவனுடன் தனக்குத்
திருமணம் நிகழ்ந்த பின் தனது கஷ்டங்கள் காணாமல் போய் மகிழ்ச்சி மட்டுமே தன்
வாழ்வில் நிலைக்கப் போகிறது என்பதை நினைத்து ஆசுவாசம் அடைந்து கொண்டாள்
வசுமதி.

“என்னடி அந்த மோதிரத்தையே உற்றுப் பார்த்துட்டு இருக்கிற? என்னாச்சு?”எனக்
கேட்டார் கண்மணி.

அதற்கு,”ம்மா! எனக்குக் கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சுன்றதை நினைச்சா ரொம்பவே
ஆச்சரியமாக இருக்கு! அதுக்கு அத்தாட்சியாக இந்த மோதிரம் தானே இருக்கு? அதனால்
தான் இதையே பார்த்துட்டு இருக்கேன்”என்று அவரிடம் கூறிப் புன்னகைக்க,

“ஓஹோ! சரி. அதைப் பார்த்தது போதும். என் கேள்விக்குப் பதில் சொல்லு”என்றவரிடம்,

“கேளுங்கம்மா”என்றாள் வசுமதி.

“நிச்சயத்துக்கு அப்பறம் உங்கிட்ட மாப்பிள்ளை நல்லா பேசுறாரா?”என்றவரின்
கேள்வியில்,

முகம் சுணங்கி,”அவர் இது வரைக்கும் எங்கிட்ட பேசினதே இல்லம்மா. அப்பறம்
என்னால் எப்படி நல்லா பேசுறாரான்னுச் சொல்ல முடியும்?”என்றுரைத்தாள் மகள்.

“அப்போ நீ அவருக்குக் கால் செஞ்சிப் பேசலாம் தானே? நான் எதுக்கு சொல்ல
வர்றேன்னா கல்யாணத்துக்கானப் பொருட்கள் வாங்கனும்ல? அதை வச்சு அவர் கிட்டே
பேச ஆரம்பி”என்று அவளுக்கு அறிவுறுத்தினார் கண்மணி.

“உங்களுக்குப் புத்திக் கெட்டுப் போச்சாம்மா?”என அவரிடம் எரிந்து விழுந்தாள் வசுமதி.

அதில் திகைத்துப் போய்,”நான் இப்போ என்ன சொல்லிட்டேன்னு நீ என் மேல் எதுக்கு
இப்படி எரிஞ்சு விழுகுற?”என்று வினவிய தாயிடம்,

“அப்பறம் என்னம்மா? நீங்க விஷயத்தை தெரிஞ்சிக்கிட்டே என்னை அவர் கிட்டே மாட்டி
விடப் பார்க்கிறீங்களே? அப்போ எனக்கு எரிச்சல் வராதா?”எனப் பதில் கேள்வி கேட்க,

“என்னடி சொல்ற? எனக்குப் புரியலை”என்றார் குழப்பமாக.

“ம்மா! நான் பாட்டுக்கு அவருக்குக் கால் செய்யப் போய் அப்பறம் அவருக்கு என்னோட
கேரக்டரைப் பத்தி தெரிஞ்சிரும் தானே? நான் ரொம்ப அமைதியான சுபாவமுள்ள
பொண்ணு. யார் கிட்டேயும் ரொம்ப பேசிக்க மாட்டேன்னு நீங்களும், அப்பாவும்,
அப்பறம் அவரைப் பெத்தவங்களும் அவர் கிட்டே புளுகி வச்சு இருக்கீங்களே? நானே
அவருக்குக் கால் செஞ்சிப் பேசிட்டா அவருக்குச் சந்தேகம் வந்துடும் தானே? நீங்க அதை
யோசிக்க மாட்டீங்களா?”என்று அவருக்குப் புரிய வைத்தாள் வசுமதி.

அதைக் கேட்டதும் தனது முட்டாள்தனத்தை எண்ணி நொந்து கொண்டு,”ச்சே! நான்
இதை யோசிக்காமல் விட்டுட்டேன்டி. நல்லவேளை நீ எனக்கு ஞாபகப்படுத்திட்டே”எனக்
கூறினார் கண்மணி.

அப்போது அவர்களது கவனத்தைக் கலைக்கும் விதமாக வசுமதியின் செல்பேசி ஒலித்தது.

அதில் சம்யுக்தனின் பெயர் தெரிவதைக் கண்டு,”ம்மா! இங்கே பாருங்களேன்! அவர் தான்
கால் செய்றார்”என்று வியப்புடன் மொழிந்தாள்.

“அப்படியா? ஹேய்! இது உண்மையாகவே மாப்பிள்ளையோட நம்பரான்னுப்
பாரு”என்று தானும் நம்ப முடியாமல் உரைத்தார் கண்மணி.

“அவரோட நம்பர் தான்ம்மா. அத்தை தான் நிச்சயம் முடிஞ்சதும் எனக்கு அவரோட
நம்பரை அனுப்பினாங்க”எனப் பதிலளித்த மகளிடம்,

“அப்போ அட்டெண்ட் செஞ்சிப் பேசு. இங்கே வேண்டாம். மாடிக்குப் போய்ப் பேசு”என்று
கூறி அனுப்பி வைத்தார்.

உடனே தங்களது வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று அந்த அழைப்பை ஏற்றுக் காதில்
வைத்தாள் வசுமதி.

“ஹலோ”என்ற சம்யுக்தனின் குரலைக் கேட்டதும் காதில் தேன் வந்து பாய்ந்ததைப்
போன்ற பரவச நிலை அடைந்து,

“ஹலோ!”என்றாள்.

“நான் சம்யுக்தன் பேசுறேன்”

“தெரியும். சொல்லுங்க”என்க,

“நம்மக் கல்யாணத்துக்குத் திங்க்ஸ், டிரெஸ் எல்லாம் வாங்கனும்னு அம்மா தான்
உங்ககிட்ட கால் செஞ்சிப் பேச சொன்னாங்க”என்றதும் வசுமதியின் உற்சாகம் முழுவதும்
வடிந்து போயிற்று.

“ஓஹ்!”என்றவளின் குரலில் இருந்த ஏமாற்றத் தொனியை உணராமல்,

“இது எங்க வீட்டில் நடக்கப் போற முதல் விசேஷம். அதனால் என்னென்னப்
பண்ணனும்னு எங்களுக்கு எதுவும் தெரியாது. அதனால் தான், உங்கப்பா, அம்மாவுக்குத்
தெரிஞ்சா எங்கம்மாவுக்குக் கால் செஞ்சிப் பேச சொல்லுங்க. அவங்களுக்கும் எதுவும்
தெரியலைன்னா, உறவுக்காரங்க யார் கிட்டேயாவது கேட்டுப் பாருங்கன்னும் எங்கிட்ட
சொல்லி விட்டாங்க”என்றதும் அவளுக்குச் சப்பென்று ஆகி விட,

“என்னோட அப்பா நம்பர் தான் உங்கப் பேரன்ட்ஸ் கிட்டே இருக்குமே? அவங்க
நேரடியாக என் அப்பாவுக்குக் கூப்பிட்டுப் பேசி இருக்கலாமே?”என்று தன் ஏமாற்றத்தை
மறைத்துக் கொண்டு அவனிடம் வினவினாள் வசுமதி.

“இதை தான் நானும் அவங்க கிட்ட சொன்னேன். ஆனால் நாம ரெண்டு பேரும் பேசிப்,
பழகனும்னு சொல்லி என்னை உங்களுக்குக் கால் பண்ண சொன்னாங்க”என்றான்
சம்யுக்தன்.

“ஓஹ்”என்றாள் அசுவாரசியமாக.

“நான் கால் பண்ணி உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேன் போல! சாரி”என்று மன்னிப்புக்
கேட்க,

“பரவாயில்லைங்க. எனக்குக் கொஞ்சம் எழுத்து வேலை இருக்கு. நான் அப்பறம்
பேசுறேன்”என்று கூறி அழைப்பை வைத்து விட்டாள் வசுமதி.

தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அன்னையிடம் சென்று, தனக்குச்
சம்யுக்தன் எதற்காக அழைப்பு விடுத்தான் என்பதை அவரிடம் பகிர,

“அப்படியா விஷயம்? நான் உடனே அவர் கிட்டே சொல்லி கலாவதிக்குக் கால் பண்ணச்
சொல்றேன்”எனத் தனது செல்பேசியில் கணவருக்கு அழைத்துப் பேசத் தொடங்கினார்
கண்மணி.

“ப்ச்! இவங்களை என்னப் பண்றதுன்னுத் தெரியலை”எனப் பொருமிக் கொண்டுத் தன்
அலமாரியைச் சுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டாள் வசுமதி.

இதே நேரத்தில்,”நான் உங்ககிட்ட சொன்னதை தான் அந்த வசுமதியும் எங்கிட்ட
சொன்னாங்கம்மா”என்று அன்னையிடம் விளக்கினான் சம்யுக்தன்.

“ஓஹோ! நீங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரியே யோசிக்கறீங்கப் பாரேன்”என்று
அவனிடம் கோடிட்டுக் காட்டினார் கலாவதி.

“ம்ஹ்ம்”என்றதோடு அந்தப் பேச்சை விட்டு விட்டுச் செல்ல,

“ம்மா! அண்ணா சொன்னதையே தான் அண்ணியும் சொல்லி இருக்காங்கன்னு
நினைக்கும் போது எனக்கு உண்மையிலேயே அதிர்ச்சியாக இருக்கு! அப்படின்னா,
அவருக்கு ஏத்த மாதிரி அண்ணி மாற ஆரம்பிச்சுட்டாங்கன்னு நினைக்கிறேன்”என்று
அவரிடம் தன் ஐயத்தைக் கூறினான் பிரதீபன்.

“அப்படியும் இருக்கலாம்டா. அதுவும் நல்லது தானே!”என்று கூறிப் புன்னகைத்தார்
கலாவதி.

அதற்குப் பிறகு ஜெயராமிற்கு அழைப்பு விடுத்து திருமணத்திற்கு என்னென்ன செய்ய
வேண்டும் என்பதை விவரித்து விட்டிருந்தார் வசுமதியின் தந்தை விஜயன்.

இன்னும் சில நாட்களில் நடக்கப் போகும் திருமணத்தை எண்ணிப் பெரியவர்கள்
இருவரும் மகிழ்வாகவும், பரபரப்பாகவும் இருந்தார்கள் என்றால், வசுமதிக்கோ கொஞ்சம்,
கொஞ்சமாகப் பயம் தொற்றிக் கொள்ளத் தொடங்கியது.

ஏனெனில், என்ன தான், தனக்குப் பிடித்த, சொகுசான வாழ்க்கையை வாழப் போகிறோம்
என்று மகிழ்ச்சி அடைந்திருந்தாலும் கூட, அவளால் சம்யுக்தனுடனான திருமண
வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட முடியுமா? என்றக் குழப்பம் அவளது மூளையைக்
குடையத் தொடங்கி விட்டது.

ஆனாலும் இந்தக் கல்யாணத்தை நிறுத்தும் நோக்கத்தில் அவளும், அவளது பெற்றோரும்
தயாராக இல்லை.

சம்யுக்தன் ஒன்றும் உலகத்தில் இருக்கும் ஒரே ஒரு ஆண்மகன் கிடையாது. இன்னும்
கொஞ்சம் காத்திருந்தால் இந்தப் பரந்த உலகில் அவளை அவளாகவே ஏற்றுக் கொள்ளும்
அவளுக்குச் சரியான ஆடவன் கிடைத்து இருப்பான்.

ஆனாலும், அவளுக்குத் தங்களது தற்போதைய நடுத்தர வர்க்க வாழ்க்கைப்
பிடிக்கவில்லை. அதனாலேயே தன்னுடைய குழப்பத்தைத் தள்ளி வைத்து விட்டுச்
சம்யுக்தனை மணக்க முடிவெடுத்தாள் வசுமதி.

அதற்குத் தூபம் போடும் வகையில், திருமணத்திற்காக மாப்பிள்ளை வீட்டார் செய்யும்
செலவுகளின் கணக்கை அவளிடம் பெருமிதமாகப் பகிர்ந்து கொண்டார்கள் அவளது
பெற்றோரான விஜயன் மற்றும் கண்மணி.

அதைக் கேட்டும், ஜெயராம் மற்றும் கலாவதியும் தனக்காகப் பார்த்துப், பார்த்து வாங்கிய
ஆடை, அணிகலன்கள் மற்றும் நகைகளையும் கண்டவுடன் அவளது அறிவுக் கண்
நிரந்தரமாக மூடிக் கொண்டது.

அவளது கண்களை இப்போது அந்தப் பொருட்களின் விலைப் பட்டியல்கள் மட்டும் தான்,
முழுமையாக ஆக்கிரமித்து இருந்தது எனலாம்.

அதே மயக்கத்துடன் ஒரு நல்ல சுப முகூர்த்த நாளில் சம்யுக்தனைத் திருமணம் செய்து
கொண்டு அவனுக்கு மனைவியாக, அவனது வீட்டில் மருமகளாக அடியெடுத்து
வைத்தாள் வசுமதி.

அன்றைய இரவில்,”நீங்க வேலைக்குப் போறதும், போகாததும் உங்க விருப்பம் தான்.
நான் அதில் தலையிட மாட்டேன்”என்றவனைக் கண்களில் பளபளப்புடன் ஏறிட்டாள்.

ஆனால் அடுத்த கணமே,”நான் என் வேலைக்கு நேரத்துக்குக் கிளம்பிப் போயிடுவேன்.
அது மட்டுமில்லாமல் நான் தேவையில்லாமல் லீவ் போடவே மாட்டேன்! அதே மாதிரி
தான் அனாவசியமாகப் பேச மாட்டேன. நீங்க என்னை மாதிரியான கேரக்டர்ன்றதால்
உங்களுக்கும் இது ஓகேவாகத் தான் இருக்கும்னு நம்புறேன்!”என்றவனை அரண்டு
போனவளிடம்,

அதுவரையில் புது மணப்பெண்ணிற்கே உரித்தானப் பாவனைகளும், உடல்மொழியும்
அவளிடமிருந்து கண் காணாமல் போயிருந்தது.

அதேபோல் அவளுக்குத் தூக்கமும் தொலைந்து போயிருக்க, தான் நினைத்ததை
அவளிடம் கூறிய திருப்தியில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த கணவனைப்
பார்க்கையில் அவளுக்கு உலகமே இருண்டதைப் போலான தோற்றம் உண்டாகி
விட்டது!

- தொடரும்
 
Top Bottom