• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

என் தேசமிங்கே பூந்தோட்டமாக - 15

நிதனிபிரபு

Administrator
Staff member
தேசம் 15:
அடுத்த நாள் காலையில் விரைவாகவே எழுந்து கறிக்கடைக்குச் சென்று ஆட்டுக்கறி வாங்கி வந்து மனைவியிடம் கொடுத்து சமைக்கச் சொன்னார் விஜயன்.
அதே நேரத்தில் தனது உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்து வந்த வசுமதியோ, முந்தைய நாள் தான் பேசிய வார்த்தைகளால் தனது பெற்றோர் மனம் காயப்பட்டுப் போயிருப்பார்கள் என்ற எண்ணமே இல்லாமல்,
“என்னப்பா, மதியத்துக்கு மட்டன் குழம்பா?”என்று நாக்கைச் சப்புக் கொட்டிக் கேட்க,
“ஆமாம் வசு” என்றவரோ மகளின் முகத்தை ஆராய்ந்தார் விஜயன்.
ஆனால் அதில் அவளது நேற்றைய பேச்சை நினைத்து எந்த வருத்தமும், சங்கடமும் தெரியவே இல்லை.
நன்றாக உறங்கி எழுந்ததற்கானப் புத்துணர்ச்சி மட்டுமே வெளிப்பட்டது.
“ம்மா! எனக்குக் காஃபி போட்டுக் கொடுத்துட்டு வேலையைப் பாருங்க ப்ளீஸ்!”என்றுரைத்தாள் வசுமதி.
“ம்ஹ்ம்”எனப் பெருமூச்சு விட்டுக் கொண்டே அவளுக்குக் காபி தயாரித்துக் கொடுத்து விட்டு மதியச் சமையலைப் பார்க்கப் போனவரிடம்,
“காலைச் சாப்பாடு என்னம்மா?”என்று வினவ,
“இட்லி தான் டி! இப்போவே வேணும்னா சொல்லு. ஊத்தி தந்துட்டுப் போறேன்”என்று அவளிடம் எரிச்சலுடன் மொழிந்தார் கண்மணி.
அதில் முகம் சுருங்கினாலும்,”என்னம்மா நீங்க? நான் எவ்வளவு நாள் கழிச்சு வந்திருக்கேன். எங்கிட்ட இப்படி கடுகடுன்னுப் பேசறீங்களே!”என்று சினுங்கினாள் வசுமதி.
“ஓஹ்! அப்போ நீ எங்க கிட்ட நேத்துப் பேசினது மட்டும் சரியா? அது எங்களை எவ்வளவு கஷ்டப்படுத்தி இருக்கும்ன்னு யோசிச்சுப் பார்த்தியா?”என்றதும்,
“அச்சோ! அதை இன்னுமா நினைச்சு வருத்தப்பட்டுட்டு இருக்கீங்க? சாரிம்மா!”என்று அவரிடமும்,
“சாரிப்பா” எனத் தந்தையிடமும் கூறி விட்டு,
“இப்போ தான் என் புருஷன் எங்கிட்ட நல்லா நடந்துக்க ஆரம்பிச்சு இருக்கார்! அப்படி இருக்கும் போது நீங்க சொல்லித் தந்ததை எல்லாம் உடனே செஞ்சிட்டா என் புகுந்த வீட்டு ஆளுங்களுக்குச் சந்தேகம் வந்துடாதா? அதே மாதிரி உங்களைப் பார்க்கனும்ன்றப் பேச்சை எடுத்தாலே நீங்க என்னோட மூளையைச் சலவை செய்றீங்க! அதனால் உங்களைப் பார்க்கப் போக வேண்டாம்னு அவர் சொல்றார்! அவருக்குச் சந்தேகம் வந்துட்டா நம்மப் பிளான் நிறைவேறாமல் போயிடும்ன்றப் பயத்தில் தான் அப்படி வார்த்தையை விட்டுட்டேன்!”என்று அவர்களுக்கு விளக்கம் அளித்தாள் வசுமதி.
அதைக் கேட்டதும் தங்களது மகளைத் தவறாக நினைத்து விட்டோம் என்று உருகிப் போய்,”ஆமாம் வசு! நீ சொல்வது சரி தான்! நாங்க இதைப் பத்தி யோசிச்சுப் பார்க்காமல் உங்கிட்ட சிடுசிடுன்னுப் பேசிட்டோமே! மனசில் வச்சுக்காதேடா!”என அவளிடம் உரைத்தார் கண்மணி.
“அதெல்லாம் இல்லம்மா. நீங்க போய்ச் சமைக்கிற வேலையைப் பாருங்க”எனப் பெருந்தன்மையுடன் கூற,
“உனக்குச் சாப்பிட வேறெதுவும் வேணுமாடா?”என்று பாசமாக கேட்டார் விஜயன்.
“ஐஸ்கிரீம் மட்டும் வேணும்ப்பா. அங்கே அதையெல்லாம் சாப்பிடத் தோன்றவே மாட்டேங்குது”என்றதும் மகளுக்காகப் பனிக்கூழ் வாங்கி வரச் சென்று விட்டார்.
அவர்கள் இருவரிடமும் சொன்னதைப் போல், வசுமதி ஒன்றும் அவர்களுக்காக எதையும் செய்வதற்குத் தயாராக இல்லை!
ஏனென்றால், அவளுக்குத் தனது கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசை தான்!
அவனுடைய காதலை நன்றாக அனுபவித்துக் கொண்டு அதற்குப் பிறகுக் குழந்தை மற்றும் மற்றதைப் பற்றி யோசித்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து இருந்தாள் வசுமதி.
அதனால் தான், தன் பெற்றோரிடம் அவர்கள் தனக்குச் சொல்லிக் கொடுத்ததையே அவர்களிடம் காரணமாகச் சொல்லி அவர்களது வாயை அடைத்து விட்டிருந்தாள்.
அதை அறியாமல் மகளுக்கு நன்றாகச் சமைத்துப் போட்டு அவளைச் சாப்பிட வைத்து அழகுப் பார்த்தனர் விஜயன் மற்றும் கண்மணி.
அதே சமயம்,”ம்மா! நான் ஃப்ரண்ட்ஸோட படம் பார்க்கப் போகப் போறேன். வீட்டுக்கு வர நைட் ஆகிடும்”என்றான் பிரதீபன்.
“நீ மேட்னி ஷோ தானே போற? அப்பறம் எப்படி வீட்டுக்கு வர்றதுக்கு நைட் ஆகும்? அது வரைக்கும் தியேட்டரில் என்னப் பண்ணுவ?”என்று சம்மன் இல்லாமல் ஆஜரானான் சம்யுக்தன்.
“படம் பார்க்கப் போனால் அதை மட்டும் பண்ணிட்டு வரனுமா என்ன? அதுக்கப்புறம் வேற எங்கேயும் போக மாட்டோமா?”என வாதிட,
“அப்போ எங்கெல்லாம் போற, எப்போ வருவன்றதை தெளிவாகச் சொல்லிட்டுப் போடா!”என்று அவனை அதட்ட,
“சரிண்ணா! நீ அண்ணியைக் கூட்டிட்டு வர்றதுக்குக் கிளம்பலையா?”என்று அவனிடம் விசாரித்தான் பிரதீபன்.
உடனே,”அதுக்கு இன்னும் டைம் இருக்கு”என்றதும்,
“ஓஹோ! அதனால் தான் உனக்குப் பொழுதுப் போகலைன்னு என்னை உட்கார வச்சு விசாரணை நடத்திட்டு இருக்கியா?”என முணுமுணுக்க,
“என்னடா வாய்க்குள்ளேயே முனகுற? சத்தமாகவே சொல்லு?”என்று அவனை அதட்டினான் சம்யுக்தன்.
“ம்ஹ்ம்! உனக்குப் பொழுது போகலைன்னு என்னைப் பிடிச்சு விசாரிக்கிறியான்னு தான் முனகினேன். போதுமா?”எனக் கடுகடுத்தான் பிரதீபன்.
“டேய்!”என்றவனை,
“சம்யு! நீ உன் கோபத்தை முதல்ல கட்டுப்படுத்து. அவன் எங்கிட்டே தானே சொன்னான். நான் பேசிக்கிறேன்”என்று கூறிக் கையமர்த்தி விட்டு,
“நீ ராத்திரி ஒன்பது மணிக்கு வீட்டில் இருக்கனும்! இப்போ போயிட்டு வா”எனப் பிரதீபனுக்கு அனுமதி அளித்தார் கலாவதி.
உடனே தனது தமையனைப் பார்த்து ஒழுங்கு காண்பித்து விட்டு,”அப்பா! காசு கொடுங்க”என்று கேட்டு வாங்கிக் கொண்டுச் சிட்டாய்ப் பறந்து விட்டிருந்தான்.
“நீங்க…”என்று ஆரம்பித்த சம்யுக்தனிடம்,
“அவனைப் பத்தின பேச்சை விடு. நீ எத்தனை மணிக்கு வசுவைக் கூட்டிட்டு வரக் கிளம்புற?”என விசாரித்தார் ஜெயராம்.
“அவங்களுக்கு மதியம் சாப்பிட்டதும் தூங்குறப் பழக்கம் இருக்கு. அதனால் எழுந்ததும் ஃபோன் பண்ணச் சொல்லி இருக்கேன்”என்றான்.
“ஓஹ்! நீ இன்னும் உன் பொண்டாட்டியை வாங்க, போங்கன்னு தான் பேசிட்டு இருக்கியா?”எனக் கூர்மையானப் பார்வையுடன் மகனிடம் வினவினார் கலாவதி.
அதில், சில கணங்கள் அதிர்ந்து பின் சுதாரித்துக் கொண்டு,”நாங்க ரூமில் இருக்கும் போது ஒருமையில் பேசிப்போம். மத்தவங்க கிட்டே ஒருத்தரையொருத்தர் பத்திச் சொல்லும் போது மட்டும் மரியாதைப் பன்மையில் பேசுவோம்! ஏன்னா, அவங்க என்னை வாங்க, போங்கன்னுப் பேசும் போது நான் மட்டும் அவங்களை ஒருமையில் பேசுறது நியாயமாக இருக்காது. அதான்ம்மா”எனப் பதிலளித்தான் சம்யுக்தன்.
“அப்படியா? சரி”என்று கூறிய போதிலும், இந்த விஷயம் அவருக்குள் சிறு நெருடலை உருவாக்கி விட்டிருந்தது.
அதைப் பற்றி மகனிடம் கேட்காமல் மருமகளிடம் பேசுவதற்காக அவளின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கலானார் கலாவதி.
மாலை ஆனதும்,”நான் அவருக்குக் கால் செஞ்சி வரச் சொல்றேன்ம்மா”எனத் தன் தாயிடம் கூறி விட்டுக் கணவனுக்கு அழைத்தாள் வசுமதி.
“ஹலோ”
“நான் தூங்கி எழுந்துட்டேன். நீங்க இப்போ அங்கேயிருந்து கிளம்பி வந்தால் சரியாக இருக்கும்ங்க”
“சரிங்க. நான் கிளம்பி வர்றேன்”என்று கூறி அழைப்பைத் துண்டித்து, தன்னுடைய பெற்றோரிடம் கூறி விட்டு மனைவியின் பிறந்தகத்திற்குச் சென்றான் சம்யுக்தன்.
அவனை நல்லவிதமாக வரவேற்று,”நேத்து தான் சாப்பிடாமலேயே கிளம்பிட்டீங்க மாப்பிள்ளை. இப்போதாவது சாப்பிட்டுப் போகலாம்ல?”என்ற கண்மணியின் கோரிக்கையைத் தவிர்க்க முடியாமல்,
“சரிங்கத்தை”எனக் கையைக் கழுவிக் கொண்டு சாப்பிட அமர்ந்தவனைக் கண்ட அவரும், அவரது கணவரும் மிகவும் சந்தோஷமாக அவனுக்கு உணவு பரிமாறினர்.
தனது கணவன் தனக்காகத் தான் இப்போது உணவருந்துகிறான் என்றெண்ணி மிதப்பாக அவனருகே அமர்ந்திருந்தாள் வசுமதி.
அவன் அமைதியாக உண்டு முடித்து எழுந்து கையைக் கழுவி விட்டு வந்ததும்,
“சம்பந்திங்களைக் கேட்டதாகவும், உங்கத் தம்பியைக் கேட்டதாகவும் சொல்லுங்க மாப்பிள்ளை”என்று அவனிடம் உரைத்து விட்டு இருவருக்கும் திருஷ்டி கழித்து அனுப்பி வைத்தார்கள் வசுமதியின் பெற்றோர்.
அந்த இரு சக்கர வாகனத்தில் தன் முகம் கொள்ளாத புன்னகையுடன் பயணித்துக் கொண்டிருந்த பெண்ணவளுக்குள், தன் கணவனின் தோளில் உரிமையாக கையை வைத்துப் பயணிக்கும் ஆவல் எழுந்தது.
அதனால், சம்யுக்தன் அறியாத வண்ணம் வண்டியின் கைப்பிடியில் இருந்து தனது வலது கரத்தை எடுத்து அவனது தோளில் வைக்கப் போனாள் வசுமதி.

அவனது தோளின் அருகில் தனது கையைக் கொண்டுப் போக முடிந்ததே தவிர, அதை அவ்விடத்தில் இடம் பிடிக்கச் செய்து தனது உரிமையை நிலைநாட்ட முடியவில்லை அவளால்!
ஏனெனில், தனது அந்த முயற்சியைச், செயலை, ஏதோ கண்ணுக்குப் புலப்படாத ஒன்று தடுத்து நிறுத்துவதைப் போன்று அவளுக்குத் தோன்றியது!
அப்படியே அந்தரத்தில் நின்று விட்டக் கரத்தை அதிர்ச்சியுடன் பார்த்தவளுக்குச் சிறிது நாட்களாகத் தன்னை விட்டொழிந்து போயிருந்த தலைவலியை இப்போது மீண்டும் வந்து தன் சிரசைப் பதம் பார்ப்பதை உணர்ந்து கொண்டாள் வசுமதி.
அதில் ஏற்பட்ட அதிர்ச்சியில் ஒரு மணி நேரம் கடந்ததையும், தன் புகுந்த வீட்டை வந்தடைந்ததையும் கவனிக்காமல் விட்டு விட்டவளை,
“வீடு வந்திருச்சு. நீங்க இறங்கி உள்ளே போங்க. நான் பைக்கைப் பார்க் பண்ணிட்டு வர்றேன்”என அறிவுறுத்தி வீட்டிற்குள் அனுப்பி வைத்து விட்டுத் தனது இரு சக்கர வாகனத்தை அதற்குரிய இடத்தில் நிறுத்தச் சென்றான் சம்யுக்தன்.
இவளோ சாவி கொடுத்த பொம்மையாக வீட்டினுள் நுழைந்த மருமகளைக் கண்டதும்,
“அடடே! வசும்மா! நீ இல்லாமல் எனக்குப் பொழுது போகவே இல்லை. சாப்பிட்றியா? இல்லைன்னா நான் உங்களுக்கு ஏதாவது செஞ்சித் தரவா?”என்று அவளிடம் அக்கறையாக கேட்டார் கலாவதி.
அவள் பதில் கூறுவதற்கு முன்பாகவே,“நாங்க ரெண்டு பேருமே அங்கேயே சாப்பிட்டு வந்துட்டோம்மா”என்று கூறிக் கொண்டே உள்ளே வந்தான் சம்யுக்தன்.
“அப்போ சரி. நீங்கப் போய்த் தூங்குங்க. நான் பிரதீபனுக்குக் கால் செஞ்சி வரச் சொல்லிட்டுத் தூங்கப் போறேன்”எனச் சொல்லி அவர்களை அறைக்கு அனுப்பி வைத்து விட்டுத், தனது இளைய மகனுக்குச் செல்பேசியில் அழைத்த கலாவதியோ,
“டேய்! ஒன்பது மணிக்குள்ளே வரனும்னு சொன்னேன் தானே? இன்னும் வீட்டுக்கு வராமல் என்னப் பண்ணிட்டு இருக்கிற?”என்று கேட்க,
“இதோ கிளம்பிட்டேன்ம்மா. அஞ்சு நிமிஷத்தில் வீட்டில் இருப்பேன்”என்றுரைத்து அழைப்பை வைத்தவனோ, தான் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றி விட, அவனை உணவுண்ண வைத்து அனுப்பியவரோ, தானும் உறங்கச் சென்றார்.
ஆனால் தனது அருகில் கவலையின்றி தூங்கிக் கொண்டிருந்த கணவனை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டுத் தன் உறக்கத்தை தொலைத்து விட்டு இரவு முழுவதும் கண் விழித்திருந்தாள் வசுமதி.
  • தொடரும்
 
Top Bottom