• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

என் தேசமிங்கே பூந்தோட்டமாக - 21

STN 22

New member
அதைக் கேட்டு வெடித்து அழுத கலாவதியோ,”இப்போ அழுது, அரற்றினா மட்டும் போனவ வந்துடப் போறாளா என்ன? அவனைச் சொல்லி என்னப் பிரயோஜனம்? நாமளுமே அவனோட விருப்பத்துக்குத் தானே ஆடினோம்? வசுவைப் பத்திப் புரிஞ்சிக்கவே இல்லையே!”என்று புலம்பத் தொடங்கி விட,

“நீ கொஞ்சம் அமைதியாக இரும்மா. இதை இப்படியே விட்றலாம். அந்தப் பொண்ணுக்குக் காரியம் எல்லாம் செஞ்சி முடிச்சதுக்கு அப்பறமாக எதுவாக இருந்தாலும் பேசிக்கலாம்”என்று தன் மனைவி மற்றும் இளைய மகனிடம் தீர்க்கமாக உரைத்து விட்டிருந்தார் ஜெயராம்.

ஏனெனில் அவருக்குத் தன் மகனின் விருப்பத்திற்கு ஏற்பக் குணாதிசயங்களைக் கொண்ட பெண்ணைத் தேடும் வேட்டையில் ஒன்றும் அறியாத வசுமதி வந்து மாட்டிக் கொண்டாளோ? அல்லது அவளது பெற்றோரின் வற்புறுத்தலுக்காக இந்தக் கல்யாணத்திற்கு ஒப்புதல் அளித்து விட்டாளோ? என்ற ஐயம் எழுந்து விட்டிருந்தது.

அதனால் தான் அவளால் தன் மகனுடன் மனம் ஒன்றி வாழ முடியவில்லையோ?

அதேபோல், அவளால் தங்களது குடும்பத்துடனும் மன மொத்துப் பேசிப், பழக இயலவில்லையோ? என்றும் எண்ணங்களும் கூட அவரது மனதை அலைக்கழிக்கத் தொடங்கி விட்டாலும்,

இதையெல்லாம் தன் மனைவி, மக்களுடன் இந்தச் சமயத்தில் பகிர்ந்து கொள்வது சரியாக இருக்காது. அதனால் வசுமதிக்கு அனைத்து காரியங்களையும் செய்து முடித்து விட்ட பின்னரே அவர்களிடம் ஆற, அமரப் பேச வேண்டுமென்று முடிவெடுத்து விட்டார் ஜெயராம்.

ஆனால், அவர் தனது மனதில் உதித்த ஐயத்தை தன் குடும்பத்திடம் இருந்து மறைத்து வைத்திருக்க நினைத்தால், தங்களது மகளின் இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஒவ்வொரு நிமிடத்திலும் நரக வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் வசுமதியின் பெற்றோர்.

“நாமளே நம்மப் பொண்ணைக் கொன்னுட்டோம்ன்னு நினைக்கிறேன்ங்க!”என்று தனது கணவனிடம் அழுது புலம்பினார் கண்மணி.

“ஆமாம்மா. அந்தச் சம்யுக்தனையும், அவன் குடும்பத்தையும் குற்றம் சொல்லி என்னப் பண்ணப் போறோம்? அப்படி சொல்லி அழுதால் மட்டும் நம்மப் பொண்ணுத் திரும்பி வந்துடவா போறாள்? தப்பு எல்லாத்தையும் நம்ம மேல் வச்சுக்கிட்டு அவங்களை எதுக்குப் பழிச்சிப் பேசனும்?”என்று மனம் கசந்து போய்க் கூறினார் விஜயன்.

“அவங்க அவங்களோட விஷயத்தையும், கண்டிஷனையும் எந்த ஒளிவு, மறைவும் இல்லாமல் நம்ம கிட்டே சொல்லித் தான் நம்மளோட விருப்பத்தைக் கேட்டாங்க! நாம தான் அவங்களோட குடும்பத்துக்கு நம்மப் பொண்ணு மருமகளாகப் போனால் நல்லா வாழுவாள்ன்னு அவளைக் கட்டாயப்படுத்திச் சம்யுக்தனுக்குக் கல்யாணம் செய்து கொடுத்து இப்போ இப்படி சாவுக்கு வாரிக் கொடுத்து இருக்கோம்!”என்றவரிடம்,

“அப்போ கூட நம்ம வசு நம்ம கிட்டே அவளுக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம்னும், இதைப் பண்ணிக்கிட்டா நிம்மதியாக இருக்க முடியாதுன்னும், தன்னோட சுயமே போயிடும்னும் அத்தனை தடவை சொன்னாள்! ஆனால் நாம தான் அதைக் காதிலேயே வாங்கிக்காமல், புத்திக் கெட்டுப் போய் அவளை அந்த வீட்டுக்குக் கட்டிக் கொடுத்தோம். இனிமேலாவது நாம அந்தப் பையனைப் பழிக்க வேண்டாம்மா! நம்மப் பெண்ணோட இழப்பு அவனுக்கும் நீங்காத வலியைக் கொடுத்து இருக்கும்!”என்று மனைவிக்கு அறிவுறுத்தவும்,

“சரிங்க. நான் எதுவும் பேசலை! ஹாஸ்பிடலில் வச்சுக் கூட அவரை அவமானப்படுத்துற மாதிரிப் பேசிட்டேன்! அவங்களோட அந்தரங்கத்தை எல்லார் முன்னாடியும் உடைச்சு சொல்லிட்டேன். அதை நினைச்சும் அவர் குற்ற உணர்வில் கூனிக் குறுகிப் போயிருப்பாருங்க! நாம இதுக்கப்புறமும் அவரைத் தொல்லைப் பண்ண வேண்டாம்! ஆனால் அந்தப் பையனை வச்சும், அவங்க குடும்பத்தை வச்சும் அவளோட ஈமக்கிரியையைப் பண்ணிடுவோம். அதுக்கப்புறம் அவளோட திவசத்தை அவங்களைச் செய்ய வேண்டாம்னு சொல்லிடுவோம். அவங்களாவது நிம்மதியாக இருக்கட்டும்மா”என்று தானும் அவரிடம் உறுதி அளித்திருந்தார் கண்மணி.

அதற்குப் பிறகு அவர்கள் இருவரும் சம்யுக்தனைப் பழிப்பதை விட்டு, விட்டுத் தங்களது மகள் வசுமதியின் இறப்புக் காரியங்களை எல்லாம் ஒருவழியாகச் சம்யுக்தனையும், அவனது குடும்பத்தாரையும் உடன் வைத்துச் செய்து முடித்து விட்டிருந்தார்கள்.

அதற்கடுத்த நாட்கள் யாவுமே வசுமதியின் பிறந்த மற்றும் புகுந்த வீட்டார்களுக்கு மிகவும் சோதனைக் காலமாகவே இருந்தது.

தனது மகளின் காரியங்கள் முடிந்ததும் அவளுக்கு முதல் வருட திவசத்திற்குச் சம்யுக்தனையும், அவனது பெற்றோரையும் வர வேண்டாம் என்றும், இனிமேல் அதையெல்லாம் அவர்கள் செய்யத் தேவையில்லை என்றும் அவர்களிடம் உறுதியாக மறுத்துக் கூறி விட்டிருந்தார்கள் விஜயன் மற்றும் கண்மணி.

ஆனால் அதைக் கேட்டுப் பொங்கி எழுந்து,”என்ன இப்படி சொல்றீங்க சம்பந்தி? வசு, எங்கப் பையனுக்குப் பொண்டாட்டி, எங்களோட மருமகள்! அவளோட இறப்புக்கான எல்லா சடங்கையும் எங்கப் பையனும், நாங்களும் தான் செய்யனும்! அப்படி இருக்கும் போது நீங்க எப்படி எங்களை எதுவும் செய்யக் கூடாதுன்னுச் சொல்லுவீங்க?”என்று அவர்களிடம் நியாயம் கேட்டார் ஜெயராம்.

“ஆமாம் சம்பந்தி. அவ எங்கப் பையன் கூட வேணும்னா வாழாமல் இருந்து இருக்கலாம்! ஆனால் நாங்க அவளை மருமகளாகப் பார்க்காமல் எங்க மக மாதிரி நடத்தினோம்! அதுக்காகவாவது அவளோட எல்லா சடங்கிலும் எங்களைப் பங்கேற்க விடுங்கன்னு உங்ககிட்ட கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கிறோம்!”எனத் தன் இரு கரங்களைக் கூப்பி அவர்களை வணங்கிக் கேட்டுக் கொண்டார் கலாவதி.

“இங்கே பாருங்க! எல்லாத் தப்பையும் எங்க அண்ணன் மேலேயே போட்டு அவர் இப்போ ரொம்ப உருக்குலைஞ்சுப் போயிட்டார்! இப்போ இப்படி சொல்லி அவரையும் சாக வச்சிடாதீங்க! ப்ளீஸ்!”என்று தன் தமையனுக்காகத் தன் பெற்றோருடன் சேர்ந்து தானும் வசுமதியின் தாய், தந்தையிடம் மன்றாடினான் பிரதீபன்.

ஆனால் இதற்கெல்லாம் சம்பந்தப்பட்ட சம்யுக்தனோ தன் முன்னால் நடந்து கொண்டிருக்கும் இந்த நிகழ்வுகளையும், உரையாடல்களையும் உணர்ச்சித் துடைத்த முகத்துடன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

தனது மாமனார், மாமியாரின் குற்றச்சாட்டுகள் மற்றும் தன் மனைவியைத் தானே சாவிற்கு வாரிக் கொடுத்து விட்டோமே என்றக் குற்ற உணர்வால் அவனால் எதுவும் பேச முடியவில்லை!

வசுமதியிடம் கணவன் என்ற உரிமையை எடுத்துக் கொள்ளாமலும், அவளுக்குத் தன்னிடம் மனைவி என்ற உரிமையைக் கொடுக்காமல் விட்டிருந்ததாலும் அவளைத், தான், தான் தற்கொலைக்குத் தூண்டி விட்டு விட்டோமோ? அவளது மரணம் எதிர்பாராமல் நிகழ்ந்ததா? அல்லது தற்கொலையா? என்றக் கணிப்பும் கூட அவனை உறுத்திக் கொண்டு இருந்ததால் மௌனமாய் இருந்து விட்டான் சம்யுக்தன்.

“நீ என்னடா சும்மா உட்கார்ந்து இருக்கிற? நாங்க மூனு பேரும் உனக்காகத் தான் பேசிக்கிட்டு இருக்கோம்! நீ எதுவும் சொல்லாமல் இருக்கிற? நியாயமாகப் பார்த்தால் நீ தானே உன் பொண்டாட்டிக்கான காரியத்தை, திதியைச் செய்யனும்? ஏதாவது பேசுடா”என்று அவனை வாய் திறந்து தனது உரிமைக்காக குரல் கொடுக்குமாறு தூண்டி விட்டார் கலாவதி.

“சம்பந்தியம்மா!”என்று விஜயன் பேச எத்தனிக்கும் போதே,

“அவங்க சொன்னது கரெக்ட் தானேம்மா? அவங்களை நான் என்னோட மனைவியாக நடத்தியதும் இல்லை! நான் அவங்களுக்கு நல்ல கணவனாகவும் இருந்ததில்லை! அவங்களை என் மேல் எந்த உரிமையும் எடுக்க விட்டதும் இல்லையே! அதை நீங்களும் சொல்லிக் காமிச்சுட்டீங்களே? அப்பறம் என்னம்மா? எனக்கு அவங்க மேலே எந்த உரிமையும் இல்லை. எனக்கும், அவங்களுக்கும் இனிமேல் எந்தச் சம்பந்தமும் இல்லை! அவங்களோட அப்பா, அம்மாவோட விருப்பப்படியே எல்லாமே நடக்கட்டும்! நாம கிளம்பலாம்மா! அவங்கப் பொண்ணோட ஆன்மாவை நிம்மதியாக வழியனுப்பி வைக்கட்டுமே! நாம போகலாம்! வாங்கம்மா ப்ளீஸ்!”என்று தாயிடம் கூறி விட்டுத், தந்தை மற்றும் தம்பியிடமும் வேண்டிக் கேட்டுக் கொண்டான் சம்யுக்தன்.

அதைக் கேட்டு அனைவரும் திகைத்துப் போய் அவனைப் பார்த்தார்கள்.

தனது புடவை முந்தானையால் வாயை மூடிக் கொண்டு மடிந்து அழுகத் தொடங்கிய கண்மணியையும், வீட்டுத் தூணில் சாய்ந்து நின்று கொண்டுக் கண்ணீர் வடித்த விஜயனையும் ஏறிட்டுப் பார்க்க முடியாமல் அங்கேயிருந்து வெளியேறி விட்டான் சம்யுக்தன்.

அவனது பேச்சில் இருந்த நிதர்சனம் உரைக்கவும் தாங்களும் அவனைப் பின் தொடர்ந்து சென்று விட்டனர் ஜெயராம், கலாவதி மற்றும் பிரதீபன்.

சம்யுக்தனைக் காரில் ஏற்றிக் கொண்டு வீடு சென்று சேரும் வரைக்கும் மற்ற மூவரும் அவனிடம் எதுவும் கேட்கவும் இல்லை, பேசவும் இல்லை.

அந்தப் பயணம் அப்படியே மயான அமைதியாக இருந்தது மூவருக்கும்.

ஒரு மணி நேரம் கழித்து தங்கள் வீட்டை அடைந்தவர்களுக்கு அடுத்து என்ன செய்வது? என்று புரியவில்லை.

தன் மீது அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் போட்டுக் கொண்டு வசுமதிக்குத் தன்னால் துரோகம் மற்றும் அநியாயம் நிகழ்ந்துள்ளது என்ற எண்ணத்தில் இருந்த சம்யுக்தனையாவது மீட்டெடுக்க முடிவெடுத்தார்கள் அவனது குடும்பத்தினர்.

அதே நேரத்தில் தங்களது மகள் வசுமதியின் ஈமக்கிரியைகளை முடித்து விட்டு அவளது ஞாபகங்கள் நிறைந்திருக்கும் அந்த வீட்டிலேயே தங்கி அவளுடன் உணர்வுப்பூர்வமாக வாழ ஆரம்பித்து விட்டிருந்தார்கள் விஜயன் மற்றும் கண்மணி.

ஆனால் தங்கள் மகளுக்குத் தாங்களே செய்த அநியாயத்தை அவர்களால் மறக்கவே முடியவில்லை.

அதனாலேயே அவர்கள் ஏதோ வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்று வாழ்ந்து கொண்டு இருந்தார்கள் எனலாம்!

இதில் தனது திருமணத்திற்காகத் தான் கூறிய நிபந்தனைகள், அதற்கு ஏற்றவாறானப் பெண் கிடைத்ததும், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு அவளும் தன்னைப் போன்றதான குணநலன்களைக் கொண்டவள் என்று அவளுடன் மெதுவாகத் தாம்பத்திய வாழ்க்கையைத் தொடங்கலாம் என்றெண்ணிக் காத்திருந்தது எனத் தன் கடந்த கால வாழ்வில் வசுமதியின் வரவு, அவளுடனான தனது சிறிது நாட்களேயான திருமண வாழ்க்கை, இறுதியாக அவளது எதிர்பாராத மரணம் என அனைத்தையும் எண்ணிப் பார்த்து முடித்ததும் படுக்கையில் இருந்து விருட்டென்று எழுந்து அமர்ந்தான் சம்யுக்தன்.

“அப்போ நான் தான் அவங்களைக் கொன்னுட்டேனா?”என்று நடு இரவில் கண் விழித்து அமர்ந்து கொண்டு அந்த நிசப்தத்தில் சத்தமாக முணுமுணுத்தவனின் குரலைக் கேட்டுத் தானும் தனது உறக்கம் கலைந்து எழுந்திருந்தாள் அவனின் இரண்டாம் மனைவி பிரார்த்தனா.

அவனது வார்த்தைகள் தனது காதுகளில் தெளிவாக கேட்டிருந்தாலும் கூடத் தனது முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்டும், உடல்மொழியை இயல்பாக வைத்துக் கொண்டும் அவனைக் கூரிய பார்வையால் துளைக்க,

அதை அறியாமல்,”நான் தான் அவங்களைக் கொன்னுட்டேனா?”என்பதையே மந்திரம் போல் ஜெபித்துக் கொண்டிருந்தான் சம்யுக்தன்.

உடனே,”உங்க முதல் மனைவியோட நினைப்பு வந்துடுச்சா?”என்றவளின் குரலைக் கேட்டதும், ஏதோவொரு பயங்கரமான கனவில் இருந்து வெளி வந்ததைப் போன்றதொரு பாவனையுடன் அவளை ஏறிட,

“என்னாச்சு? உங்களுக்கு வசுமதியோட ஞாபகம் வந்துடுச்சு போலவே?”என்று அவனிடம் மீண்டுமொரு கேட்டிருந்தாள் பிரார்த்தனா.

அதில், உடல் நடுக்கம் கொண்டு, நெற்றியில் தோன்றிய வியர்வை முத்துக்களைத் துடைத்து விட்டு,”எனக்குத் தாகமாக இருக்கு. குடிக்கத் தண்ணீர் வேணும்!”என அவளிடம் பரிதாபமாக வினவினான் சம்யுக்தன்.

- தொடரும்
 
Top Bottom