என் தேசமிங்கே பூந்தோட்டமாக - 34 (Final)

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN 22

Member
May 5, 2026
51
35
18
Tamilnadu
தங்கள் வீட்டிற்குச் சென்று அங்கிருந்து சோபாவில் உட்காரும் வரையிலும் தன் மனைவியிடமே ஒண்டிக் கொண்டிருந்தான் சம்யுக்தன்.

அந்தளவிற்குச் சிறிது நேரத்திற்கு முன்பு நடந்த சம்பவம் அவனைப் பாதித்திருக்கிறது!

அதை மிகவும் வேதனையுடன் நோக்கினர் மற்றக் குடும்ப உறுப்பினர்கள்.

“இங்கே பாருங்க! வசுமதி இறந்ததுக்கு நீங்களும், அத்தை, மாமா, தீபன் காரணம் இல்லைன்றதை நிரூபிச்சு உங்க எல்லாருக்கும் அந்தக் குற்ற உணர்வில் இருந்து விடுதலை கிடைக்கனும்னு தான் இப்படி பண்ணேன்! அதே மாதிரியே உங்க எல்லாருக்கும் உண்மை தெரிஞ்சிடுச்சு! இனிமேலாவது நீங்க எல்லாரும் நிம்மதியாக வாழனும்!”என்று கணவனின் தலையைக் கோதிக் கொடுத்து, மென்மையான குரலில் அறிவுறுத்தினாள் பிரார்த்தனா.

அதில் கொஞ்சம் மனம் தேறி அவளிடமிருந்து பிரிந்து அருகிலிருந்த சோபாவில் அமர்ந்து,”என்ன தான் வசுமதியோட இறப்புக்கு நான் நேரடிக் காரணம் இல்லைன்னாலும் நானும் ஒரு காரணம் தான்! நான் அப்படி ஒரு நிபந்தனையைப் போடாமல் இருந்திருந்தால் எல்லாருமே நல்லா இருந்து இருப்போம்! நான் வசுமதியைப் புரிஞ்சிக்கவும் முயற்சி செஞ்சி இருப்பேன்! அவங்க அப்பா, அம்மா தங்களோட மகளுக்குப் பணணது துரோகம்ன்னா நானும் வசுவைப் புரிஞ்சிக்காமல் விட்டதும் துரோகம் தான்! அதனால், நானும் வசுமதியோட அப்பா, அம்மாகிட்டே மன்னிப்புக் கேட்க கடமைப்பட்டு இருக்கேன்! அதனால் நான் இப்போவே அங்கே போய் அவங்க கிட்ட பேசிட்டு வரவா?”என்று தன் மனைவியிடம் கேட்டான் சம்யுக்தன்.

அவளும்,”போயிட்டு வாங்க”என்று உடனே ஒப்புதல் அளித்து விட,

இவர்களது பிணைப்பைப் பார்த்து விட்டு இனிமேல் இவர்களுக்கு இடையே தாங்கள் நுழைவது சரியில்லை என்றெண்ணிக் கொண்டு மறுப்புக் கூறாமல் அமைதியாக இருந்தனர்.

அவர்களிடமும் சொல்லிக் கொண்டுக் கிளம்பிய சம்யுக்தனிடம்,”நானும் உங்க கூட வர்றேன் அண்ணா! ஏன் ஃப்ரண்ட்டோட பைக்கை அங்கேயே விட்டுட்டு வந்துட்டேன். அதைக் கொண்டு போய் அவன்கிட்டே தரனும்”எனக் கூறி அவனுடன் சென்று விட்டான் பிரதீபன்.

“நீ என்னடி இப்படியெல்லாம் செஞ்சி வச்சிருக்கிற? வசுமதியோட குடும்பத்தைப் பத்தி உனக்கு எப்படி தெரிஞ்சிது?”என்ற தன் தாயின் கேள்விக்கு,

உடனே, தன் கணவன் மற்றும் புகுந்த வீட்டாரிடம் அவளைப் பற்றி விசாரித்ததைப் பற்றித் தன் பெற்றோரிடம் விளக்கிக் கூறினாள் பிரார்த்தனா.

‘தன் கணவன் எந்தக் குற்ற உணர்வும் இன்றித் தன்னுடன் மகிழ்ச்சியாக, நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காகத் தான் இத்தனையையும் செய்திருக்கிறாள் தங்கள் மகள் என்பதை எண்ணிப் பெருமிதம் அடைந்தார்கள் சக்திவேல், கோமளா.

“நாங்களும் முதல்ல பிரானாவோட முயற்சியை ஒத்துக்கலை! ஆனால் இவ ரொம்ப பிடிவாதமாக இருந்தாள்! அதனால் தான், வேற வழியில்லாமல் இவ வசுமதியைப் பெத்தவங்களைப் போய்ப் பார்க்கிறதுக்குச் சம்மதிச்சோம்! இவ எங்களுக்குச் செஞ்சிக் கொடுத்த சத்தியத்தை நிறைவேத்திட்டா! நீங்க இவங்களை நினைச்சு இனிமேல் கவலையே படத் தேவையில்லை சம்பந்தி! இதுக்கப்புறம் இவளும், எங்கப் பையனும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நல்லா வாழுவாங்க! அதை நினைச்சு எங்களுக்கும் இப்போ தான் நிம்மதியே பிறந்திருக்கு!”என்று அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார் ஜெயராம்.

“சரிங்க சம்பந்தி”எனக் கூறிப் பெருமூச்சு விட்டார்கள் இருவரும்.

அதையெல்லாம் மென்னகையுடன் கேட்டுக் கொண்டாள் பிரார்த்தனா.

சில மணி நேரங்கள் கழித்து, தாங்கள் வந்திருந்த வாடகைக் காரிலேயே வசுமதியின் பெற்றோரிடம் சென்றிருந்தனர் சம்யுக்தன், பிரதீபன்.

அவர்களது வீட்டை நெருங்கியதும், கதவு திறந்திருந்ததால் உள்ளே பேசுவது வாசலில் நின்றிருந்த இவர்களுக்குக் கேட்டது.

”நாம நம்மப் பொண்ணுக்குப் பண்ண துரோகத்துக்கும், அநியாயத்துக்கும் நாம உயிரோடவே இருக்கக் கூடாது! அதுமட்டுமில்லாமல் நம்மப் பண்ணத் தப்புக்கு இவ்வளவு நாளாகச் சம்யுக்தனும், அவனோட குடும்பமும் பழியைச் சுமந்துட்டு இருந்ததை நினைச்சா, ரொம்ப கஷ்டமா இருக்கு! நாம இதுக்கு மேலே உயிரோட இருக்க வேண்டாம்! நம்மப் பொண்ணுக் கூடவே போயிடலாம்!”என்றதைக் கேட்டதும் துரிதமாகச் செயல்பட்டு வீட்டினுள் நுழைந்து அவர்களது தற்கொலைப் படலத்தை தடுத்து நிறுத்தினர் சகோதரர்கள் இருவரும்.

“என்னப் பண்றீங்க?”என அவர்களைச் சத்தம் போட்டான் சம்யுக்தன்.

அவனைப் பார்த்து திகைத்துப் போய்,”எங்களை என்னப் பண்ணச் சொல்றீங்க? நாங்க எங்கப் பொண்ணுக்கும், உங்களுக்கும் செஞ்சத் துரோகத்துக்கு நாங்க சாகுறது தான் ஒரே வழி!”என்றவர்களிடம்,

“நீங்க ரெண்டு பேரும் சாகக் கூடாது! உங்கப் பொண்ணு இறந்தால் என்ன? உங்கப் பையன் நான் உங்களுக்காக எப்பவும் இருப்பேன்! அதே மாதிரி என் பொண்டாட்டி பிரார்த்தனாவும் உங்களை அடிக்கடி வந்து பார்த்துப்பாள்! உங்களுக்கு நாங்க எல்லாரும் இருக்கோம்! நான் உண்மையைத் தெரிஞ்சிக்கிட்டப்போ ஏற்பட்ட அதிர்ச்சியில் தான் இங்கேயிருந்து ஓடிட்டேன்! ஆனால் அதுக்கப்புறம் எனக்கு எல்லாமே புரிஞ்சிடுச்சு! நீங்கப் பண்ணதுக்குச் சாகனும்னா நான் பண்ணதுக்கு நானும் சாகனும் தானே? அதானே நியாயம்? அப்போ நானும் உங்க கூடவே சேர்ந்து செத்துடவா?”என்று அவர்களிடம் தழுதழுப்புடன் கேட்க,

“ஐயோ! நீ என்ன வார்த்தை சொல்லிட்டப்பா? நீயும், பிரார்த்தனாவும் நூறு வருஷம் நல்லா வாழனும்!”என்று அவனிடம் அறிவுறுத்தினர் விஜயன் மற்றும் கண்மணி.

“அப்போ நீங்களும் சாகக் கூடாது! உங்களுக்கு நாங்க இருக்கோம்”எனத் தானும் அவர்களுக்கு உறுதி கூறினான் பிரதீபன்.

அதில் நெகிழ்ந்து போய்,“ரொம்ப நன்றிப்பா”என்றுரைத்தனர் இருவரும்.

“நீங்க இனிமேல் இப்படியான முடிவை எப்பவும் எடுக்க மாட்டீங்கன்னு எனக்குச் சத்தியம் பண்ணித் தாங்க”என்றிருந்தான் சம்யுக்தன்.

“நாங்க சத்தியமாக இப்படி பண்ண மாட்டோம்ப்பா!”என அவனுக்குச் சத்தியம் செய்து கொடுத்த பின்னர் தான், அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தனர் சகோதரர்கள் இருவரும்.

“நான் பைக்கைக் கொண்டுப் போய் ஃப்ரண்ட் கிட்டே கொடுத்துட்டு வர்றேன். நீங்க வீட்டுக்குப் போங்கண்ணா”என்று சம்யுக்தனை காரிலேற்றி அனுப்பி வைத்து விட்டு வண்டியில் ஏறித் தனது நண்பனிடம் போனான் பிரதீபன்.

அந்தக் காரில் பயணித்து ஒரு மணி நேரத்தில் தன்னுடைய வீட்டை அடைந்து இருந்தான் சம்யுக்தன்.

அவனைக் கண்டதுமே குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவனிடம் நடந்ததை விசாரிக்க, அவனும் அதையெல்லாம் அவர்களிடம் ஒப்புவித்தான்.

அதைக் கேட்டு,”நல்லவேளை நீங்க ரெண்டு பேரும் சரியான நேரத்தில் அங்கே போய் அவங்களைத் தடுத்தீங்க! நாங்களும் அப்பப்போ அவங்களைப் பார்க்கப் போயிட்டு வருவோம்! அதனால் நீயும், பிரனாவும் உங்களோட வாழ்க்கையில் அடுத்தக் கட்டத்துக்குப் போக ஆரம்பிங்க”என்று தன் மகன் மற்றும் மருமகளுக்கு அறிவுறுத்தினார்கள் ஜெயராம், கலாவதி.

‘இனி எல்லாம் சுபமே’ என்ற மகிழ்வான மனநிலையுடன் தாங்களும் அவர்கள் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டுத் தங்கள் வீட்டிற்குக் கிளம்பினர் சக்திவேல், கோமளா.

அன்றிரவு தங்களது அறையில் தன் தோள் சாய்ந்திருக்கும் மனைவியிடம்,”அதான் எல்லாமே சரி ஆயிடுச்சே? இப்போதாவது நீ என்னைக் காதலிச்சக் கதையை எங்கிட்ட சொல்லலாமே?”என்று வேண்டினான் சம்யுக்தன்.

அதில் முகிழ்நகை முகிழ்த்து,”பெருசா ஒன்னும் இல்லைங்க. எனக்கு உங்களோட சுபாவம் ரொம்ப பிடிச்சு இருந்துச்சு! அதனாலேயே, நீங்க எப்படியும் எந்தப் பொண்ணையும் ஏறெடுத்துப் பார்த்திருக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரிஞ்சுது! அதனால் நான் உங்களுக்குத் தெரியாமலேயே உங்களை ஃபாலோவ் பண்ண ஆரம்பிச்சேன்! உங்களைப் பத்தி வீட்டில் சொல்லிக் கல்யாணம் பண்ணிக்க நினைச்சேன்! அதுக்குள்ளே உங்களோட கல்யாண செய்தி எனக்கு வந்து சேர்ந்திடுச்சு! அதைக் கேட்டுத் துடிச்சுப் போயிட்டேன்! அதுக்கப்புறம் என்னை நானே தேத்திக்கிட்டேன்! ஆனால் கொஞ்ச மாசம் கழிச்சு உங்களோட வொய்ஃப் இறந்துட்டாங்கன்னும், உங்களுக்கு ரெண்டாவது கல்யாணத்துக்குப் பொண்ணுப் பார்க்கிறாங்கன்றதைக் கேள்விப்பட்டதும் இந்த வாய்ப்பை விட்டுடக் கூடாதுன்னு எங்க வீட்டில் பிடிவாதம் பிடிச்சு உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்! ஆனாலும் என் காதல் எனக்கு ரெண்டாவது வாய்ப்பில் தான் கல்யாணத்தில் முடிஞ்சதை நினைச்சு இப்பவும் எனக்குக் கஷ்டமாக இருக்கு!”என்று விளக்கினாள் பிரார்த்தனா.

அதில் தனது முகத்தில் நவரசத்தையும் பிரதிபலித்து,”நான் வேணும்னா உனக்கு ரெண்டாவது வாய்ப்பில் கிடைச்சு இருக்கலாம்! ஆனால் என்னோட முதல் காதலும் நீ தான்! என்னை முழுசாக ஆளப் போறதும் நீ ஒருத்தி தான்!”என்றவனின் வார்த்தைகளில் இருந்த பொருளைப் புரிந்து கொண்டு அவனைக் காதலுடன் அணைத்துக் கொள்ள,

தன் மனைவியை இனிமேலும் காத்திருக்க வைக்காமல் அவளுடன் ஈருடல் ஓருயிராகக் கலந்து விட்டிருந்தான் சம்யுக்தன்!

அதில், தனது தூய்மையான மற்றும் உறுதியான காதலுக்குக் கிடைத்த வெற்றியைத் தன் கண்வனுடன் சேர்ந்து கொண்டாடித் தீர்த்தாள் பிரார்த்தனா.

வசுமதியின் இறப்பிற்கு அவளது பெற்றோரும், மற்றவர்களும் காரணம் தான் அதை மறுக்க இயலாது!

அதே சமயம், அவள் தனது மனதில் இருப்பதை தைரியமாக அனைவரிடமும் மறைக்காமல் தெரிவித்து இருந்தால் அவளது வாழ்வும், உயிரும் போயிருக்காது!

அதனால் யாராக இருந்தாலும் உங்களது வாழ்வில் எந்தப் பிரச்சினை வந்தாலும் அதை தைரியமாக வெளியே சொல்லி, எதிர்த்து நின்றுப் போராடித் தன்னை மீட்டெடுத்துக் கொள்ள நினையுங்கள்!

எந்தப் பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது!

அதேபோல், பெற்றோர்கள் அனைவரும் தங்களது மகனோ, மகளோ ஏதாவது மனக் குழப்பத்தில் இருந்தால் அதை அவர்களிடம் கேட்டு, அவர்களுக்கு அனுசரணையாக அறிவுரை வழங்கி அவர்களை அதிலிருந்து மீட்டெடுத்து அவர்களுக்கு உலகத்தின் மற்றொரு அழகான கோணத்தைப் பற்றித் தெரியப்படுத்தி அவர்களைப் புதிய வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை அமைத்துக் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டு உங்கள் அனைவரிடம் இருந்தும் விடைபெற்றுக் கொள்கிறேன்!

முற்றும்
 
Last edited by a moderator:

Author: STN 22
Article Title: என் தேசமிங்கே பூந்தோட்டமாக - 34 (Final)
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: thanga then mozhi