• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

என் மன்னவன் நீதானோ - 15

Vishakini

Moderator
Staff member
என் மன்னவன் நீ தானோ
அத்தியாயம் 15

அத்தியாயம் 15.1
வீட்டுக்கு வந்த சௌமி நேராக தனது அறையில் சென்று கட்டிலில் விழுந்து அழுதாள். மீண்டும் அவள் கேட்டு, அவன் நிராகரித்ததில் அவள் மனம் சொல்லொண்ணா வேதனையில் தவித்தது. அவன் தன்னை நிராகரித்தது ஓர் விதத்தில் அவமானமாக இருந்தாலும், அந்த நிராகரிப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் நெஞ்சு வெடித்து விடும் போல் இருந்தது. நீண்ட நேரம் அழுது களைத்துப் போய் இதற்கு அழுகை தீர்வு அல்ல என உணர்ந்து, கட்டிலிலிருந்து எழுந்து, குளியல் அறைக்கு சென்று முகத்தை கழுவி கொண்டு வந்தாள்.


பெரிய தாயும் தந்தையும் வெளியே சென்றிருப்பது அவளுக்கு வசதியாக போய்விட்டது. தனக்கு குடிப்பதற்கு ஒரு தேநீரைத் தயாரித்துக் கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தாள். அழுதழுது களைத்துப் போய் இருந்தவளுக்கு அந்த தேநீர் இதமாக தொண்டையில் இறங்கியது.

நான் அவன் மீது தெரியாத்தனமாக நேசத்தை வைத்துவிட்டேனே...., நான் என்ன யோசிச்சு பிளான் பண்ணியா நேசத்தை வளர்த்தேன்.. அது எனக்குத் தெரியாமலேயே, என்ர சொல் பேச்சைக் கேட்காமலேயே வளர்ந்திட்டுதே...., இனி அதை அழிக்க முடியாதே...., அது அழிந்தால் நான் நானாக இருக்க மாட்டேனே… எனது இயக்கமும் நின்று விடுமே…, என எண்ணி வருந்தினாள்.

அவன் என்னுடன் நடந்து கொள்ளும் முறையில் ஓர் விதமான அதீத அக்கறையை வெளிப்படுத்தினானே…,எதிர்பார்ப்பற்ற அன்பை காட்டினானே…! ஒரு சில நேரங்களில் அவன் என்னைப் பார்க்கும் பார்வையில் வித்தியாசத்தை உணர்ந்தேனே…! அதை நம்பி தானே அவனில் ஏற்பட்ட காதலை முளையிலேயே கிள்ளி எறியாமல், மேலும் வளர்த்துக் கொண்டேன்… என எண்ணி வருத்தப்பட்டாள், அவளின் மென்மையான இதயம் வலித்தது.



இப்போது ஏன் அவன் என்னை முற்றிலும் மறுக்கிறான்…?? அவனுக்கு உண்மையில் என் மீது அந்த மாதிரி எண்ணம் இல்லையோ..? என யோசித்தாள்.

என்ன யோசித்தும் அவளால் விடையை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அவன் அவளை மறுக்க மறுக்க அவன் மீதுள்ள நேசம் அதிகரித்ததே தவிர குறையவில்லை. அதில் அவளுக்கு தன் மீதே எரிச்சலாக இருந்தது.

இனி அடுத்து என்ன செய்வது…?? வேறு யாராவது ஒருவரின் உதவியுடன் அவனை அணுகிப் பார்த்தால் என்ன..? யாரின் உதவியைப் பெறலாம்…?? பெரியம்மாவிடமா…? அல்லது பத்மா ஆண்டியிடமா…? பலவாறு யோசித்தவள் இதைப் பற்றி யாருடன் கதைத்தால் தனக்குச் சாதகமாக இருக்கும் என கடுமையாக சிந்தித்து, இறுதியில் பத்மா ஆண்டியுடன் கதைக்கலாம் என முடிவு எடுத்தாள்.

சௌமிகா, பத்மாவிடம் கதைப்பதற்காக காத்திருந்தவள், அதற்கான ஓர் சந்தர்ப்பம் ஏற்படவே, அவரின் வீட்டுக்குச் சென்றாள்.

“சௌமி வா…, உன்னைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தனான்” என அவளை வரவேற்றார் பத்மா.

அவரருகே உட்கார்ந்தவள் “என்னைப் பற்றி யோசிக்க என்ன இருக்கு…?” என சோகம் கலந்த புன்னகையுடன் வினவினாள்.

“நீ அடிக்கடி இஞ்ச வருவாய்… உன்னோட கதைக்கலாம் , உன்னோட கதைக்கிறது எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு…, நீ ஊருக்கு போனால் அப்பிடி இருக்காது தானே…, அது தான்...” என்றார் அவர்.

அவர் அவ்வாறு கூறியதும் புன்னகையுடன் “எனக்கும் இஞ்ச உங்களோட இருக்கத்தான் விருப்பம் ஆண்டி…” என்றாள்.

அவள் ஏதோ தன்னை தேற்றுவதற்காகச் சொல்கிறாள் என நினைத்த பத்மா “இந்த ஆண்டியை மறக்காமல் உனக்கு நேரம் கிடைக்கிற போது என்னோட கதையம்மா...” என்றார் அவர்.

“சரி ஆண்டி…, உங்களோட உரிமையுடன் கதைக்கத்தான் எனக்கு விருப்பம்” என்றாள் சிறு தயக்கத்துடன்.

பத்மா அவளைப் பார்த்து சிரித்தவாறு அவளின் தலையை வாஞ்சையுடன் தடவினார்.

சௌமி “ஆண்டி உங்களுக்கு என்னைப் பிடிக்குமா…?” என அவரைப் பார்த்து கேட்டாள்.

“இதென்ன கேள்வி… உன்னை பிடிக்காமல் இருக்குமா…? ரொம்ப ரொம்ப பிடிக்கும். அது சரி உனக்கு என்னை பிடிக்குமா…?” எனக் கேட்டார்.

“உங்களைப் பிடிச்சுப் போய் தான் நான் உங்கட மருமகளாகோணும் எண்டு நினைக்கிறன்” என்றாள் தலையை குனிந்தவாறு.

சிறு அதிர்ச்சியும், ஆனந்தமும் அடைந்த அவர் “ உண்மையாத் தான் சொல்லுறியா சௌமி…?” எனக் கேட்டார்.

“ம்...” என்றாள் மெதுவாக.

“அகிலை நீ விரும்புறீயா…? என்ன…?” என ஆர்வத்துடன் கேட்டார்.

அவளும் “ம்…” என்றாள் குனிந்த தலை நிமிராமல்.

தன் மகனைப் பற்றி அறியும் ஆவலுடன் “அவனும் உன்னை விரும்புகிறானா?” என ஓர் வித எதிர்பார்ப்புடன் வினாவினார்.

அவள் ‘இல்லை’ என்பது போல் தலையசைத்தாள்.

அவருக்குத் தன் மகனைப் பற்றி நன்கு தெரியும் என்பதால் இந்தப் பதில் ஆச்சரியமளிக்கவில்லை. அவனுக்கு சௌமியை திருமணம் செய்யும் எண்ணம் இருந்திருந்தால் அவன் தன்னிடம் இதைப் பற்றி தெரிவித்திருப்பான் என்பது அவருக்குத் தெரியும்.

அவளின் குனிந்த தலையை நிமிர்த்திய பத்மா “நீ அகிலனுக்கு மனைவியாக வந்தால் நல்லா இருக்கும் எண்டு நான் நிறைய தடவை யோசிச்சு இருக்கிறன்… உனக்கு கொஞ்சம் வயது குறைவு எண்டதால நான் அதைப் பற்றி சகுந்தலாவோட கதைக்கேல்ல…, அவளுக்கும் இப்பிடி ஏதாவது விருப்பம் இருந்தால் என்னோட கதைப்பாள் தானே எண்டு நினைப்பன். உனக்கு ஒரு அஞ்சு வயசு கூட எண்டால், நான் எப்பவோ இதைப் பற்றி கதைச்சிருப்பன் ” என்றவர் தொடர்ந்து

“உன்னையும் அகிலனையும் ஒன்றாக பார்க்கும் போது அவ்வளவு அம்சமாக இருக்கும், அண்டைக்கு உன்ர பர்த்டே பார்ட்டி அன்று நீ சாரி உடுத்திக் கொண்டு அகிலனுக்கு பக்கத்தில நிற்கும் போது, உங்களைப் போல மிகப் பொருத்தமான ஜோடி வேற எங்கேயும் காண முடியாது எண்டு நான் நினைச்சனான்…, இரண்டு பேரையும் மட்டும் தான் நான் பார்த்துக் கொண்டு இருந்தனான்...” என அவர் தன் விருப்பத்தை வெளிப்படையாக கூறினார்.

அவர் கூறுவதைக் கேட்டவளுக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது.

அத்தியாயம் 15.2

“நான் இண்டைக்கே அகிலோட கதைக்கிறன்...” என சௌமியிடம் கூறிய பத்மாவிற்கு முதலில் அகிலனின் பதிலை அறிய வேண்டி இருந்தது. அவருக்கு சௌமி மருமகளாக வருவதில் விருப்பம் இருந்தாலும் தன் மகனுடன் கலந்து பேசாமல் எதையும் உறுதிப் படுத்த விரும்பவில்லை.

அவரைப் பார்த்த சௌமி “ஆண்டி, நான் உங்க மகனோட சேர்ந்து வாழணும் எண்டு உண்மையா ஆசைப்படுறன். …, நீங்கள் தான் அவரை எப்படியாவது சம்மதிக்க வைச்சு, எனக்கு எல்லா விசயத்திலும் சப்போர்ட்டாக இருக்கோணும் ” என்றாள்.

“இது சகுந்தலாவுக்கு தெரியுமா…? அவள் என்ன சொன்னவள்…?” என அவர்களின் நிலைப்பாட்டை அறியும் நோக்கத்துடன் கேட்டார்.

“நான் இதை உங்களிட்டை தான் சொல்லுறன்… நீங்கள் தான் எல்லாரோடையும் கதைக்கணும்” என வேண்டினாள்.

“ம்…, சரி நான் கதைச்சுப் பார்க்கிறன்” என்றார் அவர்.

“எவ்வளவு விரைவாக கதைக்க முடியுமோ அவ்வளவு விரைவாக கதையுங்கோ ஆண்டி, ப்ளீஸ்…” வெட்கத்தை விட்டு கெஞ்சினாள்.

“சரியம்மா...” என்றார் அவர்.

“நாங்கள் நாளைக்கு காலையில வெளிக்கிட்டு விடுவம், நீங்கள் இண்டைக்கே கதைக்கிறீங்களா…?”

“சகுந்தலாவோட கதைக்க முதல் நான் அகிலோட கதைக்கணும், அவன் என்ன நினைக்கிறான் எண்டு எனக்குத் தெரியோணும், எனக்கு அவனின்ர விருப்பமும் முக்கியம். சகுந்தலாவின்ர விருப்பத்தையும் கேக்க வேணும், எடுத்தேன் கவுத்தேன் எண்டு எதையும் செய்யேலாது நிதானமாக யோசிச்சுத் தான் கதைக்கோணும்…, இதால யாருக்கும் எந்த மனஸ்தாபமும் ஏற்படக்கூடாது சௌமியம்மா…” என அவளுக்கு விளக்கமாக கூறினார் அவர்.

“நீங்கள் சொல்லுறது சரிதான்… இருந்தாலும் என்னால அகிலனை விட்டுட்டு, அவரைப் பார்க்காமல் இருக்கேலும் போலத் தெரியேல்ல ஆண்டி” என்றாள் அவனை விட்டு பிரியும் வருத்தத்துடன்.

அவளின் காதலை உணர்ந்தவர் “சரி, நீ யோசிக்காதே. நான் கதைக்கிறன்” அவளுக்கு ஆறுதல் கூறினார்.

“மிக மிக விரைவாக அதாவது இந்த மாசமே கல்யாணத்தை வைக்கலாமா ஆண்டி…?” என வெட்கத்தை விட்டு கேட்டாள்.

அவளைக் கூர்ந்து பார்த்தவர் “இது அவசரமா செய்யற விசயமில்லை சௌமி... ” என்றார்.

“ஆண்டி இந்த விசயத்துல என்னால பொறுமையாக இருக்கேலாது...” என அவள் கூச்சமின்றி அவசரப்பட்டாள்.

அவளின் தீவிரத்தைப் பார்த்தவருக்கு ‘ஏன் இவள் அவசரப்படுறாள்’ என யோசிக்காமல் இருக்க முடியவில்லை.

“என்ன…? ஏதும் பிரச்சனையா…? உன்ர அவசரத்தைப் பார்க்க எனக்கு யோசனையாக இருக்கு...” என விசாரித்தார் அவர்.

‘ஒன்றுமில்லை’ என்பது போல் அவள் தலையசைத்தாள்.

“நீ இதை முதலே சொல்லி இருந்தால், சகுந்தலாவோட நான் கதைத்திருப்பன்…, இப்ப அவசர அவசரமாக கதைக்கேலாது… எனக்கு கொஞ்சம் டைம் தா, நான் எல்லாரோடையும் கதைச்சு ஒரு நல்ல முடிவா சொல்லுறன் ” என்றவாறு அவள் தலையை தடவினார்.

“நீ அகிலோட இதைப் பற்றி கதைச்சனியா…?”

அவள் ‘ஆம்’ என்பது போல தலையசைத்தாள்.

“அவன் என்ன சொன்னவன்” எனக் கேட்டார் ஆர்வமாக.

“என்னைக் கட்ட முடியாது எண்டு சொல்லுறார்”.

“ஏனாம்…?” எனக் கேட்டார்.

“நான் சின்னப் பிள்ளையாம்” என்றாள் நக்கலாக. அவளின் குரலில் தெரிந்த ஏளனத்தை உணர்ந்தவர் “அகிலுக்கும் உனக்கும் ஏதும் மனஸ்தாபமா…? நீ அவனுக்கு பிடிக்காத மாதிரி ஏதும் கதைச்சனீயா…?” என விசாரித்தார்.

‘இல்லை’ என்பது போல் தலை ஆட்டினாள்

அவர்களுக்கிடையில் ஏதோ சிக்கல் இருக்கு என அவர் விளங்கிக் கொண்டார்.

தன்னை வேண்டாம் என்று மறுக்கிறவனை எப்பிடியாவது விரைவாக திருமணம் செய்ய வேண்டும் என்ற வெறி அவள் மனதில் எழ “ஆண்டி நான் உங்கட மருமகளாக வரோணும் எண்டு ஆசைப்படுறன்…, அகிலனை நான் மனசுல நினைச்சுட்டன்… அவரும் என்னை மறுக்கமாட்டார் எண்டு நினைச்சன்... அந்த எண்ணத்தில தான் இரண்டு வருசத்துக்கு மேலாக நான் அவருடன் பழகி இருக்கிறன்..,. அதால நான் தான் அவரைக் கட்ட வேணும், அதுவும் சீக்கிரமாக … அதுக்கு நீங்கதான் ஹெல்ப் பண்ண வேணும்” என்றாள் ஓர் வித தீவிரத்துடன்.

அவள் சொன்னதைக் கேட்டவருக்கு சற்று யோசனை ஏற்பட சரி என்றார்.

“சரி ஆண்டி நான் இப்ப கிளம்புறன்…, நீங்கள் உங்கட மகனோட கதையுங்க, நான் ஊருக்குப் போய் கதைக்கிறன்…” என்றவள் அவரைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டு விடைபெற்றாள்.

அவள் சென்றதும் பத்மா இதை எவ்வாறு, எப்படி யாருடன் கதைக்க வேண்டும் என்ற யோசனையில் ஆழ்ந்தார். அவருக்கு சௌமிகாவை மிகவும் பிடிக்கும் என்பதுடன் அகிலனுக்கும் நன்கு பொருத்தமானவள் என நினைத்தார். எனவே இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என விரும்பினார். முதலில் அகிலுடன் கதைத்து அவன் விருப்பத்தை அறிய விரும்பினார்.
 
Last edited:
Top Bottom