என் மன்னவன் நீ தானோ
அத்தியாயம் 20
சௌமிகா வீட்டுக்காரரின் சம்மதத்தை அறிந்த பத்மாவிற்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அந்த குடியிருப்பில் வசிப்பவர்களுக்கும் உறவினர்களுக்கும் தனது மகனுக்கு திருமணம் முற்றாகி விட்டது எனக் கூறி மகிழ்ந்தார். அவருக்கு மகனின் திருமணத்தை விரைவாக முடித்து விட வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான். அவர் சகுந்தலாவிடம் திருமணத்தை விரைவாக வைக்கும் படி வற்புறுத்தினார்.
‘ஏன் இவ்வளவு அவசரமாக கல்யாணம் வைக்க வேண்டும் கொஞ்ச நாட்கள் செல்லட்டும்’ என்ற சிவநாதனிடம் ‘உடனே செய்ய வேண்டும் இல்லாவிட்டால் இரண்டு வருடத்துக்கு அகிலனுக்கு காலம் நல்லம் இல்லை அதன் பின்னர் தான் செய்யலாம் என ஜோதிடர் கூறுகிறார்’ என்று கூறிய சகுந்தலா திருமணத்திற்கு நாள் குறித்து விட்டார்.
திருமணத்துக்கு இன்னும் இரண்டு மாதங்கள் தான் இருந்தது.
தங்கள் ஊரிலேயே திருமணம் என தீர்மானித்து விட்டதால், அவர்களின் வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர்களை எழுப்பி, வீடு திருத்தும் வேலை , திருமண ஆயத்தம் என்பன இருப்பதால் நேரத்துடன் பத்மா ஊருக்கு செல்ல ஆயத்தமாகி கொண்டிருந்தார். அவர் அங்கே தங்குவதற்கு ஏற்பாடு செய்வதற்காகவும் அவரை கொண்டு போய் விடுவதற்காகவும் அகிலனும் தனது தாயுடன் கூடச் சென்றான்.
தெரிந்த பெண் என்றாலும் சம்பிரதாயத்துக்காக பெண் பார்க்கும் நிகழ்விற்க்கும் நாள் ஒதுக்கினார்கள்.
‘நான் பெண் பார்க்க வரவில்லை’ என மறுத்த அகிலனிடம் ‘இல்லை நீயும் கட்டாயம் வரவேண்டும்’ என வற்புறுத்தி அவனையும் சில நெருங்கிய உறவினர்களையும் அழைத்துக் கொண்டு சௌமிகாவின் வீட்டுக்குச் சென்றார் பத்மா.
அங்கே சென்ற அவர்களை ரவீந்திரனும் சகுந்தலாவும் வீட்டு வாசலுக்கு வந்து வரவேற்றனர். சிவநாதனும் கமலாவும் அமைதியாக நின்றனர். வீட்டுக்குள் நுழைய முன்னரே சௌமி வீட்டுக்காரரின் வரவேற்பிலும் அவர்களின் முகபாவங்களிலும் அவர்களின் மனநிலையை புரிந்து கொண்டான் அகிலன். உற்சாகமில்லாமலும் சிரிப்பில்லாமலும் ஏனோ தானோ என இருக்கும் சௌமியின் பெற்றோர்களைக் கண்டவனுக்கு அங்கே இயல்பாய் இருக்க முடியவில்லை.
சகுந்தலா வாஞ்சையுடன் அவனின் கையை பிடித்து அமர சொல்லவும் அங்கேயிருந்த போபாவில் அமர்ந்தவன்,
தனது தாயை சிறு சினத்துடன் பார்க்க, அவரும் அவனை உணர்ந்தவாறு ‘எனக்காக பொறுத்துக் கொள்’ என்பது போல் தலையை அசைத்து சிரித்து கண்களால் சமிக்ஞை செய்தார். அதில் ஆயாசமாக உணர்ந்தவன் விரைவாக இங்கிருந்து கிளம்பி விட வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்கள் கதைப்பதை வேடிக்கை பார்த்தான். அவனை கண்டு கொள்ளாதவர்களிடம் அவனுமே ஓர் மரியாதை நிமித்தம் கூட எ பேச்சுக் கொடுக்க விரும்பவில்லை. ஆனால் அவனைப் பெற்றவரோ இது எதையும் எதிர்பார்க்காமல் சௌமியின் பெற்றவர்களிடம் நலன் விசாரித்து, சகஜமாக பேசினார். அவரின் ஒரே எண்ணம் இந்த திருமணம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சிறப்பாக நடக்க வேண்டும் என்பதுதான். ரவீந்திரனும் சகுந்தலாவும் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் ஒற்றை வரியில் பதிலளித்துக் கொண்டிருந்தான் அகிலன்.
சாதாரண பேச்சுகளின் பின்னர், பத்மா, எந்த மண்டபத்தில் திருமணத்தை வைப்பது, முகூர்த்தப் புடவை எப்போது, எங்கே வாங்குவது, திருமண அழைப்பிதழ், உணவு, விருந்தினர் எண்ணிக்கை போன்ற திருமண விடயங்களைப் பற்றி கலந்து பேசிக் கொண்டிருந்தார்.
அவரின் திருமணத்திற்குப் பின்னர் அதாவது கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு அவரின் வீட்டில் நடக்க இருக்கும் சுபகாரியம், அதுவும் ஒரே மகனின் திருமணம்…! அதை மிகவும் சிறப்பாக நடத்த வேண்டும் என்பது அவரின் எண்ணமாக இருந்தது.
சகுந்தலாவும் ரவீந்திரனும் எல்லா விடயங்களிலும் ஆர்வத்துடனும் அக்கறையுடனும் ஈடுபட்டுக் கொண்டிருக்க கமலாவும் சிவநாதனும் எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர்.
நீண்ட நேரமாகியும் சௌமிகா வெளியே வராத படியால், “சௌமி என்ன செய்கிறாள்…?” எனக் கேட்டார் பத்மா. “உள்ள தான் இருக்கிறாள்… கதையுங்க வாறன்..” என்று கூறிவிட்டு எழுந்து உள்ளே சென்ற கமலா, அங்கே அவரின் உறவினர் ஒருத்தர் தயாரித்து வைத்திருந்த தேநீர் கோப்பைகளை எடுத்து, உள்ளே இருந்து வெளியில் என்ன கதைக்கிறார்கள் என்பதை கேட்டுக் கொண்டிருந்த சௌமியிடம் கொடுத்து “ இதைக் கொண்டு போய் எல்லாருக்கும் கொடு” என்றார்.
கிளிப் பச்சை நிறத்தில் அழகான சுடிதார் அணிந்து, மிதமான ஒப்பனையில் இருந்த சௌமி அவற்றை எடுத்துக் கொண்டு, மணப்பெண்ணுக்குரிய வெட்கத்துடனும், மென்னகையுடனும் எல்லோருக்கும் தேநீர் வழங்கினாள்.
பத்மாவிற்கு கொடுக்கும் போது “ஆண்டி, சுகமாக இருக்கிறீங்களா…?” எனக் கேட்டாள்.
“ஓம் எல்லாருக்கும் கொடுத்திட்டு இதில வந்து இரும்மா…” என தனக்கு அருகில் உள்ள இருக்கையை காட்டினார். அவருக்கு “ஓம்…” என்றுவிட்டு நெஞ்சு படபடக்க அகிலனருகே வந்தவள், ஓர் விதமான தயக்கத்துடன் கன்னங்கள் சிவக்க அவனைப் பார்த்தவாறே தேநீர் கோப்பையை நீட்டினாள். அவனோ அவளை நிமிர்ந்தும் பாராமல் ”தாங்யூ” என்றவாறு அதை எடுத்துக் கொண்டான். அவனின் பாராமுகத்தால் அவளின் காதல் கொண்ட மனம் தவித்தது.
அகிலனுக்கு அவர்கள் கொடுத்த சிற்றுண்டியையும் உண்ண முடியவில்லை, தேநீரையும் அருந்த முடியவில்லை. சிவநாதனும் ஒருவிதமாக அவனையே ஆராய்ந்து பார்த்தவாறு இருந்ததால் அவன் அசௌகரியமாக உணர்ந்தான். அவர் ஒரு வார்த்தையாவது பேசினாலும் அவனது அந்த அசௌகரியம் மறைந்து விடுமோ தெரியவில்லை.
அவனையை கவனித்துக் கொண்டிருந்த சிவநாதனுக்கு, அவனின் கவர்ச்சியான முகமும் கம்பீரமான தோற்றமும் அமைதியான சுபாவமும், எல்லாவற்றையும் ஆழ்ந்து கவனிக்கும் பாங்கு எல்லாம் அவரது மனதை குளிர வைத்தாலும் ஒரு சில கவலைகளும் இருக்கத்தான் செய்தது. அகிலனின் உடல் மொழியும் அவருக்கு எதுவும் புரிபடவில்லை. அவனும் தங்களுடனோ அல்லது தங்களின் மகளுடனோ பேச முயற்சிக்கவில்லை, சௌமியை ஆர்வத்துடன் பார்க்க கூட இல்லை, முகத்தில் ஒரு விதமான இறுக்கமே, ஓர் வித அலட்சியத்துடனும், எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்ற பாங்குடனும் இருப்பது போல் ஓர் தோற்றம். அவன் ஏன் இப்படி இருக்கிறான் என்ற சிந்தனையுடன் இருந்தவர் சகுந்தலாவும் ரவீந்திரனும் திருமணப் பேச்சுகளில் அவரையும் சேர்த்தாலும் “ம்…” என்றவாறு தனது சிந்தனையில் மூழ்கிவிடுவார். திருமணப் பேச்சு எழுந்த நாளில் இருந்து தனது அன்பு மகளின் அழகிய வதனத்தில் ஒளித்த பிரகாசத்தையும் இப்போது அப்பட்டமாக வெளிக்காட்டும் ஆனந்தத்தையும் அவர் கவனிக்க தவறவில்லை.
தேநீரை அனைவருக்கும் பரிமாறிய சௌமி, பத்மாவின் அருகில் உரிமையுடன் அமர்ந்து கொண்டாள். அவளை வாஞ்சையுடன் அரவணைத்துக் கொண்ட பத்மா, தான் கொண்டு வந்திருந்த புத்தம் புதிய அழகான நெக்லஸை அவளின் கழுத்தில் அணிவித்து அழகு பார்த்தார். தாய் நெக்லஸ் கொண்டு வந்ததையே அறியாத அகிலன் தனக்கு இதைப்பற்றி எதுவும் சொல்லவில்லையே என்ற பாவனையுடன் தாயையும், ஆழ்மனதில் ஏற்பட்ட ஒருவிதமான தூண்டுதலில் சௌமியையும் பார்த்தான். அப்போது தான் அவன் அவளை பார்க்கிறான். அடிக்கொருதரம் மற்றவர்களின் கவனத்தை கவராமல் அவனையே பார்த்து ரசித்த அவள் விழிகளும் அவனின் விழிகளும் ஓர் கணம் சந்தித்தன. அவனின் மனதில் இனிய தென்றல் வீசிய உணர்வுடன் உடனே தனது விழிகளை திருப்பிக் கொண்டான். சௌமி மெதுவாக தனது விழிகளை அவனிடமிருந்து அகற்றி பத்மாவிற்கு நன்றி கூறினாள். அனைவரும் அவர்கள் இருவரையும் தான் பார்த்துக் கொண்டிருந்தனர். உறவினர்கள், அவர்கள் இருவரும் பொருத்தமான ஜோடி என கூறி தமது வாழ்த்துக்களை கூறினார்கள்.
அவர்களின் வாழ்த்துக்களை கேட்டவனுக்கு, அவனது மனக்கண்ணில் கண்கள் நிறைய காதலுடனும் வாய் நிறைய புன்னகையுடனும் தன்னையே பார்த்த சௌமியின் அழகிய வதனம் தோன்றியதும், அவனின் இதயத்தில் இனம் புரியாத இதம் பரவி மனம் இலகுவாக இருந்தது. அவளைப் பார்க்க வேண்டும் என்ற பெரும் ஆவல் எழ தன்னையறியாமலேயே நிமிர்ந்து அவளை பார்க்க, அவள் அவனின் தாய்க்கு ஏதோ சொல்லி சிரித்துக் கொண்டிருந்தாள். திரும்பி அவளின் தந்தையைப் பார்க்க, அங்கே இருக்கும் கலகலப்புக்கும் மகிழ்விற்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்றதொரு நிலையில் அவர் இருந்தார்.
நேரடியாக அவருக்கும் அவனுக்கும் எந்தவித மனஸ்தாபமும் இல்லாத நிலையில் அவன் அங்கு வந்து ஒரு மணி நேரம் கடந்தும் சாதாரண ஓர் பேச்சு வார்த்தையை கூட அவர் அவனிடம் வைக்காத படியால் அவருக்கு இந்த திருமணத்தில் இஷ்டம் இல்லை என்பதை உணர்ந்த அகிலனுக்கு சற்றுமுன் ஏற்பட்ட அந்த இதம் வடிய மனம் இறுகியது. சௌமியின் பெற்றோர்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இருக்காது என்று அவனுக்கு தெரிந்தாலும் அவர்கள் சம்மதித்து விட்டார்கள் என்பதை அறிந்த அவனுக்கு ஓர் ஆசுவாசம் ஏற்பட்டது உண்மைதான். ஆனால் அவர்கள் தங்களின் விருப்பமின்மை இவ்வளவு தூரம் வெளிப்படையாக காண்பிப்பார்கள் என்பது அவன் எதிர்பாராத ஒன்று. அதை அவனால் தனது தாயைப் போல் இலகுவாக ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. அவனின் மனதில் ஓர் ஓரத்தில் மிகச் சிறிய அளவில் சௌமி மீது இருந்த ஆர்வத்தை மேலும் வளரவிடாமல் தடுத்து வைத்திருந்தவனுக்கு, அவர்களும் சம்மதமாம் என அறிந்த நேரத்தில் இருந்து அவனே அறியாமல் அதன் பாட்டுக்கு அந்த ஆர்வம் வளரத் தொடங்கி விட அவன் தடுமாறித்தான் போனான். அதில் ஒரு விதமான உற்சாகமான மனநிலையுடன் தான் பயணத்தை மேற்கொண்டு இங்கே வந்தான். ஆனால் அவர்களின் வீட்டுக்கு வந்ததிலிருந்து தன் முட்டாள் தனத்தை நினைத்து தன் மீதே அவனுக்கு அளவிட முடியாத கோபம் ஏற்பட்டது. அந்தக் கோபம் சௌமியின் மீது திரும்பியது.
அவன் திரும்பி தாயைப் பார்க்க, ஏதோ ஓர் உந்துதலில் அவனைப் பார்த்த பத்மாவிடம் ‘கிளம்புவோம்’ என்பதைப் போல் தலையசைக்க பாறை போல் இறுகிய அவனின் முகத்தை கண்டவருக்கு அவனின் மனநிலை புரிய ‘ஆம்’ என்பது போல் தலையசைத்துவிட்டு, அவர் எல்லோரிடமும் விடைபெற ஆரம்பித்தார். அப்போது அகிலன், சகுந்தலாவிடமும் ரவீந்திரனிடமும் விடைபெற்றுக் கொண்டு, எழும்பியதில் அவனைப் பார்த்த சௌமிகா, அவனது முகத்தில் தெரிந்த சினத்தில், அவள் மனம் கலங்கியது. அங்கே நடந்த ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவனின் மனநிலை புரிந்தாலும் அவளாலும் எதுவும் செய்து விட முடியாத நிலை தான். அவன் விறு விறு வென நடந்து, வீட்டின் வெளி கேட்டிற்குச் சென்று விட்டான். பத்மா, சௌமியை ஆதரவாக அணைத்துவிட்டு, மகனைத் தொடர உறவினர்களும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினர்.
பத்மாவும் உறவினர்களும் காரில் ஏறியவுடன் அதை இயக்கிய அகிலனின் முகத்தில் தெரிந்த சீற்றத்தில் அனைவரும் அமைதியாகவே இருந்தனர். உறவினர்களை அவரவர் வீட்டில் இறக்கி விட்ட பின்னர் அகிலனும் பத்மாவும் தங்கள் வீட்டுக்குச் சென்றனர்.
காரை நிறுத்திய பின்னர் அதிலிருந்து இறங்கி கதவை வேகமாக அடித்து சாத்திவிட்டு, வீட்டுக்குள் விறுவிறுவென சென்று அங்கிருந்த போபாவில் தொப்பென அமர்ந்தவனுக்கு கோபம் சற்றும் மட்டுப் படவில்லை. மெதுவாக படியேறி வந்த தாயிடம் “இதுக்குத் தான் வேண்டாம் வேண்டாம் எண்டு திரும்ப திரும்ப சொன்னேன் கேட்டீங்களா…? இப்படி ஒரு அவமானத்தை நான் இதுக்கு முதல் சந்திக்கவேயில்லை. மாமா ஆட்கள் எல்லாம் என்னை பற்றி என்ன நினைப்பினம்…? கூப்பிட்டு வச்சு நல்லா செய்திட்டினம்… இது எனக்கு தேவையா..?” சீறினான்.
அவனருகே வந்து அமர்ந்தவர் “தம்பி ஒரு கலியாணம் எண்டால் இப்பிடி பலதும் நடக்கும் இதையெல்லாம் பெருசா எடுக்கக்கூடாது. நீ இதைப்பற்றி யோசிச்சுக் கொண்டிராமல் உன்ர அலுவல்களைப் பார். எனக்கும் நிறைய வேலை இருக்கு….” என்று கூறி அவனை மேலும் இதைப்பற்றி கதைக்க விடாமல் “ நாளைக்கு பெயிண்ட் அடிக்கிறதுக்கு வீட்டைப் பார்க்க ஒராள் வரும் என்ன கலர் பெயிண்ட் அடிக்கலாம் எண்டு சொல்” என்றார்.
தாயைப் பார்த்து முறைத்தவன் “நான் என்ன, சொல்லுறன் எண்டு உங்களுக்கு புரியேல்லையாம்மா….? உங்களால என்னெண்டு இதை ஈஸியா கடந்து வரக்கூடியதாக இருக்கு….?” என சினம் மாறாமல் கேட்டான்.
“அது எல்லாம் நல்லா புரியுது தம்பி…, அவையின்ர இடத்துல இருந்தும் நாங்கள் யோசிக்கணும் தானே…” என்றார் அவரை ஆறுதல் படுத்தும் விதமாக.
“அவைக்க இதுல விருப்பம் இல்லை எண்டால் அதை சொல்ல வேண்டியது தானே… இப்படி வீட்ட கூப்பிட்டு, அசிங்கப் படுத்த கூடாது.” என்றான்.
சௌமியின் பெற்றோர் நடந்து கொண்ட விதம் அகிலனை மிகவும் காயப்படுத்தியது. அவனால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை. தனது தாய் கூட அதை இலகுவாக கடந்து விட்டார் என எண்ணுகையில் அவன் மனம் மிகவும் சுணங்கியது.
இவை எல்லாவற்றுக்கும் சௌமி தான் காரணம் என நினைக்கையில் அவன் மீதுள்ள வெறுப்பு அதிகரித்தது.
“இதுக்கெல்லாம் சௌமி தான் காரணம்.. அவளை…” என்றவன் பற்களை கடித்தான்.
“அவள் என்ன தம்பி செய்வாள்…?, அவைக்கும் இதை எல்லாம் ஏற்றுக் கொள்ள கொஞ்ச காலம் எடுக்கும்” என்றார் பத்மா.
“ஓம்.. நீங்கள் எதையாவது சொல்லி சமாளிக்கப் பாருங்கோ…., ஆனால் ஒண்டு மட்டும் என்னால சொல்லேலும் ...அவை இண்டைக்கு நடந்து கொண்ட முறை கொஞ்சங்கூட சரியில்லை…” என்றவன் மேலும் கதைத்து தாயை நோகடிக்க விரும்பாமல், எழுந்து அறைக்குள் சென்று கதவை சாத்தியவனுக்கு ஆத்திரம் அடங்க மறுத்தது. அங்கும் இங்குமாக நடந்து தன்னை நிதானப்படுத்த முயன்றான்.
பத்மாவிற்கு, அவன் உணர்வுகள் புரியாமல் இல்லை. அவனுடன் சேர்ந்து கதைத்தால் அவனின் சினம் மேலும் அதிகரிக்கும் என்பதால் தான் அதை குறைக்கும் விதமாக கதைத்தார். அவருக்குமே சௌமி வீட்டுக்காரர் மீது சற்று வருத்தம் இருந்தாலும், அவர்களின் இடத்தில் இருந்து சிந்தித்து அந்த வருத்தத்தைப் போக்கினார்.