• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

என் மன்னவன் நீதானோ - 6

Vishakini

Moderator
Staff member
என் மன்னவன் நீ தானோ
அத்தியாயம் 6

அதன் பின்னர், பல்கலைக்கழகமும் வீடுமாக அவளுக்கு நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது. அன்று காலையில் பல்கலைக்கு செல்வதற்காக வெளிக்கிட்டு தயாராகி “போட்டு வாறன் பெரியம்மா” என்று விட்டு அவசர அவசரமாக லிஃப்டினுள் நுழைந்தாள். மூன்றாம் மாடி வந்ததும் லிஃப்ட் திறக்கும் போதே மனதிலே ஒரு பரபரப்பு ஏற்பட்டது. அது திறந்ததும் மிகுந்த கம்பீரத்துடன் உள்ளே வந்த அகிலனைக் கண்டதும், அவளுக்கு ஓர் இனம் புரியாத பெருமகிழ்ச்சி மனதில் ஏற்பட்டாலும், உதட்டில் ஒரு சிறு புன்னகை தோன்றியது. திருகோணமலைக்கு போய் வந்து இரண்டு மாதங்களுக்கு மேல் இருக்கும், அதன் பிறகு அன்று தான் அவனைக் காண்கிறாள் அவள். அவளைக் கண்ட அவன் “குட் மோர்னிங்” என்றான் சாதாரணமாக.

அவளும் “குட் மோர்னிங்” என்றாள் உற்சாகத்துடன், அவனை கண்களால் ரசித்தவாறு.

“எப்படி இருக்கிறீர்…?” என்றான் அவன்.

“ம்…, நல்லா இருக்கிறன்…, நீங்கள்…?” எனக் கேட்டாள்.

“ம்…, நானும் நல்லா இருக்கிறன்” என்றவன் தொடர்ந்து,
“ஒரு செமினாருக்கு கூட்டிக்கொண்டு போகச் சென்னீர் தானே வாற வீக்எண்ட் ஒண்டு இருக்கு, நீர் ஃப்ரியா இருந்தால் வாரும்?” என்று அவன் கேட்கும் போது லிஃப்ட் திறந்தது.

லிஃப்ட்டுக்கு வெளியே சென்ற அவனை பின் தொடர்ந்தவாறு “எங்க நடக்குது?” என அவள் கேட்டாள்.

“எங்க எண்டு சொன்னால் தான் வருவீரோ...” என குறும்புடன் கேட்டவாறு அவன், தனது கார் நிறுத்தியிருக்கும் இடத்துக்குச் சென்றான்.

“அப்படியில்ல....” என இழுத்தவள் “ஆண்டியும் வாறாவா?” என வினவினாள் அவனைப் பின் தொடர்ந்தவாறு.

“ஏன்… ஆண்டி வந்தால் தான் வருவீரோ....” என்றான் அவன் ஒரு விதமான குரலில்.

அவனை நிமிர்ந்து பார்த்தவாறு “என்ன நான் எதை கேட்டாலும் இடக்கு மிடக்காக பதில் சொல்லுறீங்கள்......” என்றாள் சிறு சிரிப்புடன்.

காரைத் திறந்த அவன் “காரில ஏறும் சொல்லுறன்” என்றான்.

அவளுக்கு அவனுடன் செல்ல விருப்பம் இருந்தாலும் பெரியம்மாவுக்கு தெரியாமல் சென்றால், அவர் ஏதாவது சொல்லுவாரோ என தயங்கினாள். எனவே அதில் ஏறாமல் “இல்ல… நான் பிறகு கதைக்கிறன் இப்ப எனக்கு லேட் ஆகுது நான் போகணும், வாறன்” என்றவாறு கிளம்புவதற்கு ஒரு எட்டு எடுத்து வைத்தாள்.

“கம்பஸுக்குத் தானே போறீர், அங்க தானே நானும் போறன். ஏறும், கொண்டு போய் விடுறன்” என்றான் அவன் அவளைப் பார்த்தவாறு.

“இல்ல… வழக்கம் போல நான் பஸ்ல போவன்” என்றாள் அவள் மறுப்பாக.

“ஏறும் எண்டு சொல்லுறன்” என சற்று அதட்டலாக கூறியவன் அவள் ஏறுவதற்காக முன் பக்க கதவை திறந்துவிட்டு, அவளைப் பார்த்தான்.

அவனின் அந்த அதட்டலில் சற்று மிரண்டு போனவள், காரில் ஏறி உட்கார்ந்தாள். அவளைப் பார்த்துக் கொண்டே கதவைச் சாத்திய அவன், சுற்றி வந்து அவனது இருக்கையில் அமர்ந்து, காரைக் கிளப்பினான்.

சற்று நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை. அவளைத் திரும்பிப் பார்த்த அவன் “என்ன எதுவும் பேசாமல் இருக்கிறீர்?” என்றான்.

“.....” அவள் எதுவும் கூறாமல், என்ன பேசுவது என்பது போல அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

அவன் சிரித்தவாறு “செமினார் வத்தளையில்” (வத்தளை கொழும்புக்கு அருகில் உள்ள இடம்) என்றான்.

“ஓ...” என்றாள் அவள்.

“என்ன வாறீர் தானே” எனக் கேட்டான் அவன்.

“இல்ல… நான் பெரியம்மாட்ட கேட்டுட்டு சொல்லுறன்”

“பெரியம்மா ‘போகலாம்’ எண்டு சொன்னால் தான் வருவீரோ” என்றான் கேலியாக.

‘ஆமாம்’ என்பது போல அவள் தலையை ஆட்டினாள்.

அதை அவன் பாராததால் “என்ன பதில் சொல்லாமல் இருக்கிறீர்...” என்றான்.

“ம்…” என யோசித்தாள்.

“ஆண்டியோட நான் கதைக்கிறன்” என்றான்அவன்.

“ம்… எத்தனை மணிக்கு போகணும்?” என விசாரித்தாள்.

“செமினார் சனிக்கிழமை காலையில எட்டு மணிக்கு, ஏழு மணிக்கு இஞ்ச இருந்து வெளிக்கிட வேணும்” என்றவன் அவளுடைய படிப்பைப் பற்றி விசாரித்தவாறு, அவளை விஞ்ஞான பீடத்தில் இறக்கிவிட்டுச் சென்றான்.

அவள் காரில் வந்து இறங்குவதைக் கண்ட அவளின் நண்பர்கள் அவளை சூழ்ந்து கொண்டு, ‘என்ன காரில வந்திருக்கிறாய்?’, ‘யாரடி அவன்?’, ‘ஆள் நல்ல ஸ்மார்ட்டாக இருக்கிறான்’, ‘உன்ர லவ்வரா?’ போன்ற பல கேள்விகளை ஒரே நேரத்தில் கேட்டார்கள். அவள் சிரித்தவாறு நின்றாள்.

“நீ ஒண்டும் சொல்லாமல் இருக்கிறதை பார்த்தாலே தெரியுது, ஏதோ இருக்கு எண்டு” என்றாள் ஒருத்தி.

“நாங்கள் எல்லாம் எங்கட லவ்வர்ஸை பற்றி சொல்லேக்க அதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்திட்டு உன்ர லவ்வைப் பற்றி நீ மூச்சும் விடேல்ல” என்றாள் இன்னொரு நண்பி கோபமாக.

“சரி… இப்ப எண்டாலும் ஏதாவது சொல்லுறாளா...” என்றாள் இன்னொரு நண்பி.

“அவள் சரியான கள்ளி… அவளிட்டை ஒண்டும் கேட்காதையுங்க...” என்றாள் கோபத்துடன் ஒருத்தி.

அவர்களுடன் ஒன்றாக படிக்கும் மதனுக்கு அவளில் விருப்பம் இருக்கு என்று தெரிந்த அவளின் நண்பிகளில் ஒருத்தி “இவ்வளவு நாளும் மதனை பின்னால சுத்த விட்டிட்டு இருந்திருக்கிறாய் தானே…, பாவம் அவனைப் பார்… நீ கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் நிக்கிறான்” என்றாள் ஒருத்தி.

அவற்றை எல்லாம் கேட்ட சௌமி “கொஞ்ச நேரம் எல்லாத்தையும் நிப்பாட்டுறீங்களா...” என்றாள் கடும் கோபத்துடன் முகம் சிவக்க.

அவளின் அந்த கோபத்தை கண்ட அவர்கள் அமைதியாக நின்றார்கள்.

“என்னையும் கதைக்க விடுங்களன்… என்ன ஏது எண்டு ஒண்டும் தெரியாமல் சும்மா வாய்க்கு வந்ததை உங்கட பாட்டுக்கு கதைக்கிறியள்...” என்றவளுக்கு சினம் கொஞ்சமும் குறையவில்லை.

சற்று நேரம் அமைதியாக நின்று மூச்சை நன்றாக உள்ளே எடுத்து வெளி விட்டவள் “முதல்ல மதனின்ர பிரச்சினைக்கு வாறன், எனக்கு இதில விருப்பம் இல்லை என்னைப் பின் தொடர்ந்து எனக்கு கரைச்சல் தராமல் படிப்பில கவனத்தை செலுத்த சொல்லி பல தடவை அவனிட்டை சொல்லிட்டன், அதை அவன் காது கொடுத்து கேக்காததுக்கு நான் ஒன்றும் செய்ய ஏலாது. அடுத்தது என்னைக் காரில கொண்டு வந்துவிட்டவர் இஞ்ச சட்ட பீடத்தில லெக்சரராக இருக்கிறார். நானும் அவரும் ஒரே அப்பார்ட்மெண்டில் தான் இருக்கிறம், அவர் எங்கட ஃபேமிலி ஃப்ரண்ட். இரண்டு மாசத்துக்கு முதல் நான் திருகோணமலைக்கு போனனான் அது உங்களுக்குத் தெரியும் தானே, அவையளோட தான் போனனான். நான் லிஃப்டில் வரேக்க அவரும் வந்தவர், என்னைக் கண்டிட்டு கூட்டிக் கொண்டு வந்தவர் அவ்வளவு தான் ...” எனக் கூறி நிறுத்தினாள்.

“சாரி....” என்றாள் ஒருத்தி.

“அவர் இவ்வளவு ஸ்மார்ட்டா யங்கா இருப்பார் என்று நீ எங்களுக்கு சொல்லேல்ல… அது தான்........”

“இதை நீ முதலே சொல்லியிருக்கலாம் தானே…”

“எங்களை மன்னிச்சிடு...”

“சரி கோபிக்காதே… லேட்டாயிட்டுது வா… உள்ளுக்க போவம்” என அவளைச் சமாதானப்படுத்திய அவளின் நண்பர்கள் அவளை விரிவுரை மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அன்று சனிக்கிழமை காலையில் கருத்தரங்கிற்கு செல்வதற்காக சௌமி அவசரமாக தயாராகிக் கொண்டிருந்தாள். காலை ஏழு மணிக்கு கார் தரிப்பிடத்திற்கு வரச்சொல்லி இருந்தான் அகிலன். அவள் தயாராகிக் கொண்டிருப்பதைப் பார்த்த சகுந்தலா “எக்ஸாம் வருகுது, அதுக்கு படிக்கிறதை விட்டுட்டு செமினாருக்கு அகிலனுடன் போறாளாம்” எனத் தனது கணவரிடம் கூறி குறை பட்டுக் கொண்டிருந்தார்.

“சரி…, அதையும் பார்த்தால் நல்லது தானே, அதைப் பற்றியும் அவள் அறிந்து கொள்ளுவாள். அவள் என்ன சின்னப் பிள்ளையா… அவளின்ர படிப்பைப் பற்றி அவளுக்கு விளங்கும் தானே.... கொஞ்ச நேரம் படிக்காட்டி அதால பெரிசா ஒண்டும் நடக்காது, பிறகு வந்து படிப்பாள் … எந்த நேரமும் படிச்சுக் கொண்டே இருக்க ஏலாது தானே...” என தனது மனைவியை சமாதானப் படுத்திக் கொண்டிருந்த போது, முழங்கால் அளவுக்கு கறுத்தப் பாவாடையும், ஊதா நிற பூக்கள் நிறைந்த வெள்ளை நிற சட்டையும் அணிந்து அழகாக தயாராகி அங்கு வந்த சௌமி அதைக் கேட்டு “அப்படி சொல்லுங்க பெரியப்பா… ” என்றாள்.

“கவனமாக படிக்கோணும் சௌமி, அப்பத்தான் முதல் வகுப்பில பாஸ் பண்ணலாம்” என்றார் அவர் அக்கறையுடன்.

“ஓம் பெரியப்பா, நான் படித்துக் கொண்டுதான் இருக்கிறன், தொடர்ந்து படித்து சரியான போரிங்கா இருக்கு… வித்தியாசமான இடத்துக்கு போய் வந்தால் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கும்......” என்றாள் அவள், அவர்களுக்கு ஆறுதல் தரும் விதமாக.

“ஒண்டும் யோசிக்காதைங்கோ பெரியம்மா… செமினார் மத்தியானம் முடிஞ்சிடும் நான் வந்து படிப்பன்” என்றவள் அவரை முத்தமிட்டு விட்டு “போட்டு வாறன்” என்றவாறு லிஃப்டில் நுழைந்தாள்.

லிஃப்டில் இருந்து வெளியே வந்தவள் அகிலன் காரில் ஏறி அவளுக்காக காத்துக் கொண்டிருப்பதைக் கண்டவள் கதவைத் திறந்து காரில் ஏறி “குட் மோர்னிங்....”என புன்னகையுடன் கூறியவள் “நான் வர லேட்டாயிட்டுதா?” என கேட்டாள் அவனைப் பார்த்து.

அவளுடைய வசீகரமான அந்த புன்னகையில் உற்சாகமடைந்த அவன் “குட் மோர்னிங்....”என்று அவளைப் பார்த்துவிட்டு “நீர் சரியான நேரத்துக்குத் தான் வந்திருக்கிறீர்… நான் தான் டூ மினிட்ஸ் ஏளியா வந்திட்டன்” என்றான் சிரித்தவாறு.

“....”

“வெளிக்கிடுவமா…?” என கேட்டான் அவன்.

அவனின் அந்த அழகிய புன்னகையை ரசித்தவாறு “ம்....” என்றாள் அவள்.

சன நடமாட்டம் அதிகளவில் இல்லாத அந்தக் காலை நேரத்தில் தானும் அவனும் மட்டும் பயணம் செய்வது அவளின் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.

“சாப்பிட்டனீரா....” என விசாரித்தான்.

“ம்… நான் பிஸ்கட் சாப்பிட்டனான். நீங்கள்?” என வினவினாள் அவள். சகுந்தலா சாப்பிட்டு விட்டு செல்லும் படி வற்புறுத்தியும் நேரமாகிவிட்டது என்று தேநீருக்குள் ஓரிரு மாறி பிஸ்கட்டைத் தோய்த்து சாப்பிட்டிருந்தாள்.

“நான் சாப்பிட இல்லை.... டீ தான் குடிச்சனான். றோயல் பேக்கரியில மாலு பணிஸ் (fish bun) வாங்குவம்...” என்றவாறு அவர்களின் வீட்டுக்கு அருகில் உள்ள பேக்கரியில் காரை நிறுத்திய அவன் “நீர் மாலு பணிஸ் சாப்பிடுவீர் தானே....” எனக் கேட்டான்.

“எனக்கு வேண்டாம், நீங்கள் உங்களுக்கு மட்டும் வாங்குங்கோ…” என்றாள் அவள்.

“நீர் மாலு பணிஸ் சாப்பிடுவீரா… அல்லது உமக்கு சீனிசம்பல் பணிஸ் வாங்கட்டுமா?” என்றான் மீண்டும்.

“நான் மாலு பணிஸ் சாப்பிடுவன்” என்றாள் அவள்.

“நீர் காரில இரும், நான் போய் வாங்கிக் கொண்டு வாறன்” என்றவாறு காரில் இருந்து இறங்கி, பேக்கரிக்குள் சென்று இருவருக்கும் மாலு பாணும் தேநீரும் வாங்கி வந்தான். சௌமிக்கு மாலு பாணையும் தேநீரையும் கொடுத்துவிட்டு, தானும் அவற்றைச் சாப்பிட்டவாறு “நல்லா இருக்கா?” எனக் கேட்டான்.

“ம்… நல்லா இருக்கு...” என்றாள் அவள்.

“அங்க லஞ்ச் தான் தருவினம், எனக்கு இப்பவே பசிக்குது...., கம்பஸுக்கு போகேக்க அம்மா ஏழரைக்கு மணிக்கு சாப்பாடு செய்திடுவா, வீக் எண்டில் நான் அம்மாக்கு கரைச்சல் கொடுக்க வேண்டாம் எண்டிட்டு, வோக் போயிட்டு வரும்போது இந்த பேக்கரிக்கு வந்து இப்பிடி ஏதாவது வாங்குவன்… எனக்கு இந்த மாலு பணிஸ் நல்ல விருப்பம்” என்றான்.

“ம்… பெரியப்பாவும் சில நேரம் இதெல்லாம் வாங்கி கொண்டு வருவார்” என்றாள் அவள் அதைச் சாப்பிட்டவாறு. இவ்வாறு அவர்கள் கதைத்தவாறு சாப்பிட்டு விட்டு புறப்பட்டனர்.

அவனுடன் செலவிட கிடைத்த ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியுடன் கழித்தவாறு அவனைப் பற்றியும் அறிந்து கொள்ள முயன்றாள். அவன் தன் மீது காட்டும் அக்கறையை வெகுவாக ரசித்து அனுபவித்தாள். அவளுடைய காதலுக்கு மிஞ்சிப் போனால் ஒரு வருடம் தான் இருக்கும். ஆனால் அவளுக்கு அவனைப் பல வருடங்களாக தான் அவனுடன் பழகுவது போல் தோன்றியது, புதிய நபருடன் பழகுவது போல் இருக்கவில்லை.


நான் அவனை விரும்புவதை அவன் அறிந்தால் என்ன சொல்லுவான்......? அவனும் என்னை விரும்புவானா....? நான் அவனுடன் பழகுவதை மற்றவர்கள் சாதாரணமாகத் தான் நினைக்கிறார்கள், அவர்களை நான் ஏமாற்றுகிறேனா…? எனது மனதில் இருப்பதை மற்றவர்கள் அறியும் போது, ஏதும் சிக்கல் எழுமோ…, எனது விருப்பத்தை என் பெற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்களா....? அவனுக்கு என்னை விட வயது சற்று அதிகம் என்பதைத் தவிர வேறு எந்தக் குறையும் அவனிடம் காண முடியாது… போன்ற எண்ணங்கள் அவள் மனதில் ஒரு சிறு சங்கடத்தை ஏற்படுத்தியது. படிப்பு முடியும் வரை எதையும் யாருக்கும் வெளிக்காட்டாமல் அமைதியாக இருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டாள்.
 
Top Bottom