ஒரு காதல் கனா காண்போம் - 4

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 91

Member
Jun 12, 2026
48
27
18
அந்த சிறிய ஓட்டு வீட்டிற்குள், சத்தம் எழுப்பாத வகையில் பூனையைப் போல் கொள்ளை வழியே வந்து நுழைய முயன்றாள் யாஸ்மின்.


நடுநிசியில் தன் ரகசிய காதலனை சந்திக்க சென்றவள், எப்படியும் அதிகாலை நான்கு மணிக்கு எல்லாம் அவர்கள் குடும்பமாய் எழுந்து, தொழுகை செய்யும் நேரத்திற்கு முன்பு வந்து விட வேண்டும் என்று தான் நினைத்திருந்தாள்.


யாருமற்ற அந்த கடற்கரை ஓரம், அவர்கள் இருவரையும் நேரம் மறக்க செய்ய, நிலவொளியில் வெகு நேரம் எதையெதையோ பேசி சிரித்தவர்கள், நேரம் உணர்ந்து பிரியும் போதே, சற்று தாமதம் ஆகிவிட்டிருந்தது.


தற்போதும் அவள் வீட்டிற்குள் செல்வதை சற்று மறைவாக நின்று பார்த்துக் கொண்டிருந்த இளங்கோவன், அவள் பின்புற கதவை திறந்து உள்ளே செல்லும் முன் தன்னை பார்த்து கை அசைத்து விட்டு சென்றதை கண்ட பின் தான், அவன் வீட்டிற்கு சென்றான்.


இங்கு உள்ளே நுழைந்த யாஸ்மின், முன்புற அறையில் உறங்கி கொண்டிருந்த அவள் தந்தை எழும்பாத வகையில் சத்தம் போடாமல், எப்படியோ அவள் அறைக்கு சென்று விட்டாள்.


அங்கு கீழே படுத்திருக்கும் தன் அன்னை தங்கையுடன் சென்று படுத்துக் கொண்டவள், புன்னகையுடன் கண்களை மூடி கொண்டாள்.


இது போன்ற சந்திப்புகள் எல்லாம் என்றோ ஒரு நாள் மட்டும் கிடைக்கும் பொக்கிஷ நினைவுகள் அல்லவா அவர்களுக்கு.


அடுத்த சந்திப்பு வரை இந்த இனிய நினைவுகளை சுமந்து தான் இருவரின் இதயமும் தத்தமது வழிகளில் பயணிக்கும்.


°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°


“யாஸ்மின் சீக்கிரம் எந்திரிச்சு கிளம்பு. நேரம் ஆயிடுச்சு டி. பள்ளிக்கூடத்துக்கு போகலையா?” அவள் அன்னை கத்தியதில், சாளரத்தின் வழி எட்டிப் பார்த்தாள். சூரிய ஒளி நன்றாகவே வந்து விட்டிருந்தது.


இன்று எப்படியும் தன்னவன் வேலைக்கு செல்லும் முன்பு எப்படியாவது அவனை கண்டு விட வேண்டும் என்று வேகமாக எழுந்தவள் குளித்து கிளம்பினாள்.


யாஸ்மின். நெடுவயல் கிராமத்தில் வசிக்கும் காதர் என்னும் நெசவாளரின் மூத்த மகள்.


தாய் பாத்திமா மற்றும் தங்கை மரியம்.


பிழைப்பிற்காக காதர் நெசவுத் தொழிலை மேற்கொள்ள, பாத்திமா காட்டு வேலைக்கும் தோட்ட வேலைகளுக்கும் சென்று வருவார்.


'வறுமை குடும்பத்திலும் திறமையான பிள்ளைகள் இருக்கின்றனர்' என்று அவர்களை தெரிவு செய்து படிக்க வைக்கும் ஒரு நல்ல மனம் கொண்ட ஜமீன்தாரின் தயவால் கல்லூரி படிப்பு வரை முடித்திருந்தாள் யாஸ்மின்.


அந்நிலையில் தான் அவள் படிப்பிற்கு உதவி செய்த ஜமீன்தாரே, நெடுவயல் கிராமத்தில் பள்ளிக்கூடத்தில் அவளுக்கு ஒரு வேலையையும் ஏற்பாடு செய்து தந்திருந்தார்.


அவள் வேலைக்காக தான் குடும்பம் மொத்தமும் இந்த கிராமத்திற்கு புலம்பெயர்ந்திருந்தது.


அந்த கிராமத்தில் அதிகம் படித்த ஒரே பெண் என்றால் அது தற்போதைக்கு யாஸ்மின் மட்டுமே.


குழந்தை திருமணம், அடுப்படையில் மட்டும் பெண் வாசம் என்று சமூகம் இருக்கும் அந்நிலையில், ஒரு இளம் பெண் படித்து ஆசிரியையாக பணி புரிவதெல்லாம் அந்த காலத்தில் எட்டா கனி தான்.


தற்போதும் நிலதாரர்களின் பெண் பிள்ளைகள் மட்டும், அதிலும் மிக அரிதாக தான் வாயில் தாண்டி படிக்க வருவார்கள்.


சில காலம் முன்னரே இங்கு வந்த இந்த குடும்பத்திற்கு, பெரிதாக இந்த ஊரில் சொந்தம் என்று சொல்லிக் கொள்ள அவர்களின் ஒரு சில உறவினரை தவிர யாரும் கிடையாது.


இந்த கிராமத்திற்கு வந்து இரண்டு வருடங்களிலேயே இளங்கோவனின் மீது காதல் வயப்பட்டு விட்டாள் யாஸ்மின்.


முதலில் தயங்கி, மருண்டு பின் வாங்கினாலும், காதல் கொண்ட மனம் இறுதியில் அவனிடமே அவளை சரண் அடைய வைத்திருந்தது.


அரக்க பறக்க உண்ணாது கூட புறப்பட்ட யாஸ்மின், தன்னுடன் பள்ளிக்கு தன் சிபாரிசில் படிக்க வரும் தங்கையையும் இழுத்துக் கொண்டு புறப்பட்டாள்.


அவள் வாயிற் படியை தாண்டும் முன், “யாஸ்மின்!” என்று அவள் தந்தையின் கண்டிப்பான அழைப்பு வந்தது.


அவள் திரும்பி தன் தந்தையை பார்க்க, “முகத்துக்கு துணியை போட்டுட்டு போ.” என்று சற்று அதட்டலாக தான் கூறியிருந்தார்.


எப்போதும் தன்னுடன் இருக்கும் திரையை அவள் அவதியில் மறந்தது நினைவிற்கு வர, நாக்கை கடித்துக் கொண்டவள், தன் அன்னை தந்த திரையை முகத்தில் போட்டுக்கொண்டு கிளம்பினாள்.


யாஸ்மினும் அவள் தங்கை மரியமும் புறப்பட்டு செல்ல, அவள் தந்தையும் தாயும் வீட்டினுள் இருந்தே இருவரையும் பார்த்திருந்தனர்.


“நம்ம பிள்ளைங்களுக்கு சொத்து சேர்த்து வைக்கலைனாலும், நம்ம கட்டுப்பாட்டுக்குள்ள வச்சிக்கிறது தான் அவங்களுக்கு நல்லது.


யாஸ்மின் இத்தனை படிச்சு வெளியுலகம் போறது ஒரு அப்பாவா எனக்கு சந்தோஷம் தான்.


ஆனா அவ வாழ்க்கைய நினைச்சா எனக்கு ரொம்ப பயமா இருக்கு பாத்திமா. அவளோட முகம் வெளி உலகத்துக்கு தெரியாம இருக்கிற வரைக்கும் தான் அவளுக்கு பாதுகாப்பு.” என்றவருக்கு, ஆங்கிலேயர்களால் பெண்களுக்கு எத்தகைய கொடுமைகள் நடக்கிறது என்று பெண்ணை பெற்றவராய் அச்சம்.


நெடுவயல் கிராமத்தில், பெண்களுக்கு அவ்வளவு மோசமாக நிலைமை இல்லாவிட்டாலும், அவர்கள் இதற்கு முன்பு இருந்த ஊரில் இரண்டு பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு பயந்து பயந்து வாழ்ந்த வாழ்க்கையே நினைவில் வந்தது.


தினமும் யாஸ்மின் காலையில் சென்று மாலை வீடு திரும்பும் வரை, காதரும் பாத்திமாவும் மடியில் நெருப்பை கட்டிக்கொண்டு இருப்பதெல்லாம் அவர்களுக்கு தான் தெரியும்.


வயது முதிர்ந்த காதர் ஒருவரின் வருமானத்தில் குடும்பத்தை ஓட்ட இயலாது என்பதை புரிந்து, நன்கு படித்து தனக்கான ஒரு அடையாளத்தையும் தேடி கொண்டாள் யாஸ்மின்.


வீதியில் இறங்கி தங்கை கரம் பற்றிய படி நடந்த யாஸ்மினுக்கு தான், எங்கு தொழிற்சாலை மணி அடித்து விடுமோ என்று மனம் அடித்துக்கொண்டது.


“அக்கா கொஞ்சம் பொறுமையா தான் போயேன். கால் வலிக்குது.” என்று மரியம் வேறு புலம்பிக் கொண்டே வந்தாள்.


அவ்வளவு வேகமாக வந்தும், அவள் பள்ளியை நெருங்கும் முன்னரே மணி அடித்து விட்டது.


வேகமாய் வந்து சுற்றி முற்றி பார்க்க அங்கு தன் மிதிவண்டியில் அவளுக்காக காத்திருந்த இளங்கோவன், அவள் கண்களை கண்டதும் தான் புன்னகைத்தவாறு தொழிற்சாலைக்குள் நுழைந்தான்.


அவதியாய் வந்தவள் தன்னவன் முகத்தை கண்டதும் தான் வாடிய மொக்கு மலராய் மலர்வதை போல் முகம் மலர்ந்தாள்.


உடன் வந்த யாஸ்மின் தான் தன் அக்காளின் செய்கையை பார்த்துவிட்டு, “இதுக்குத் தான் என்னையும் இப்படி பிடிச்சு இழுத்துட்டு வந்தியா?” என்று கோபம் கொண்டாள்.


“வாடி!” என்று அவளை அழைத்துச் சென்றாள் யாஸ்மின்.


இப்படி நாள் இரு பொழுதும், ரகசிய சந்திப்புகளுமாய் இளங்கோவன் மற்றும் யாஸ்மின் இருவரது காதலும் வளர்ந்து கொண்டிருந்தது.


°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°


“இன்னைக்கு ஊர் இருக்க நிலமைக்கு வயசுக்கு வந்து இவ்வளவு பெரிய பொம்பள புள்ளைய வச்சுக்கிட்டு எத்தனை நாள் தான் நெருப்ப கட்டிட்டு இருப்ப?


என் மகனுக்கும் கல்யாண வயசு ஆச்சு. முறை தான? உன் பொண்ணு என் வீட்டுக்கு மருமகளா அனுப்பி வை.” யாஸ்மினின் தந்தை காதரின் ஒற்றை தமக்கை தன் மகனுக்காக யாஸ்மினை பெண் கேட்டு வந்திருந்தார்.


அந்த சிறிய அறையில் நெஞ்சம் படபடக்க தன் தந்தை ‘என்ன பதில் சொல்வாரோ?’ என்று பயந்தபடியே எட்டி பார்த்தாள் யாஸ்மின்.


அவள் தங்கை மரியமும் அக்காவுடன் தந்தையின் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தாள்.


அவளுக்குத் தான் தெரியுமே யாஸ்மின் மனதில் இளங்கோவன் தான் இருக்கிறான் என்று.


சில தினங்களாகவே காதருக்கும், மகளை திருமணம் செய்து வைக்கும் யோசனை ஓடிக் கொண்டுதான் இருந்தது.


தற்போது சரியாக அவர் தமக்கையும் மகளைப் பெண் கேட்டு வரவே, சிந்தித்தார்.


கதவின் அருகில் நின்று தன் பதிலை எதிர்நோக்கி காத்திருக்கும் மகளை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தார்.


யாஸ்மின் ‘வேண்டாம்’ என்று கண்களாலே தந்தையிடம் இறைஞ்சி நின்றிருந்தாள்.


“இதுல யோசிக்க என்னடா இருக்கு? பொட்ட பிள்ளைய எத்தனை நாள் தான் வீட்டில் வச்சிருக்க போற?


ஊர்ல இல்லாத மகளாட்ட, தேவையில்லாம படிக்க வேற வச்சிருக்க. வீட்டு வேலைய பாத்துட்டு, புருஷன் கூட குடும்ப நேரத்தை விட, ஒரு பொண்ணுக்கு படிப்பு எந்த விதத்துல உசத்தியா இருக்க போகுது?” என்று எள்ளலாக வெளிவந்த தமக்கையின் குரலில் தான், காதரின் தீர்மானம் சற்று ஆட்டம் கண்டது.


‘இரண்டும் மகள்கள்’


‘ஆண் வாரிசு இல்லாத குடும்பம்’ என்று பல எள்ளல் பேச்சுகளுக்கு உள்ளான காதர், ஒருபோதும் மகள்கள் கணவன்மார்களின் காலுக்கடியில் கிடக்க வேண்டும் என்று சிந்திக்கும் பிற்போக்கு வாதி கிடையாது.


கண்டிப்பை காட்டுவார், அதுவும் மகள்களின் பாதுகாப்பிற்காக.


சமய நம்பிக்கைகளை பின்பற்ற சொல்லுவார், அது அவர்களின் ஒழுக்கத்திற்காக.


இன்று யாஸ்மின் ஒரு ஆசிரியையாக சமூகத்தில் உயர்ந்து நிற்கிறாள் என்றால், அதற்கு முற்றும் முதல் காரணம் காதர் தான்.


தன் சக்திக்கு முடியாவிடும் மகளின் திறமைக்கு வந்த வாய்ப்பை தட்டிப் பறிக்க முயலாது அவளை பறக்க விட்டார்.


ஆண் பிள்ளையை விட பெண் பிள்ளை எந்த வகையிலும் குறைச்சல் இல்லை என்பதை தன் மகள் மூலம் சமூகத்தாரின் முன்பு நிரூபித்த கர்வம் அவருக்கு என்றுமே அதிகம் தான்.


என்ன, இது எதையும் பெரிதாக வெளியில் காட்டிக் கொள்ளாத இயல்பான தந்தை அவர்.


மாறிவரும் ஆங்கிலேயர்களின் சட்டதிட்டங்களால் தன் மகளை திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று நினைத்த காதரின் நினைப்பு, நினைப்பாகவே போனது அவர் தமக்கையின் பேச்சில்.


“போதும் நிறுத்துங்க. பொம்பள பிள்ளைன்னா வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கணும்னு எழுதி வச்ச விதியா?


இறைவன் புண்ணியத்துல என் சக்திக்கு மீறி என் மகளுக்கு அவ ஆசைப்பட்ட படிப்பு கொடுத்து இருக்கேன்.


வசதி இல்லைனாலும் என் மகள மதிக்க தெரிஞ்ச ஒருத்தனுக்கு தான் என் பொண்ண கொடுப்பேன்.” என்று முடிவாக கூறிவிட்டார்.


அதற்கு அவர் தமக்கையோ, “இத்தனை இடம் இவளுக்கு குடுக்குறது நல்லதுக்கு இல்ல. மக மகனு தலைல தூக்கி வச்சு ஆடுற இல்ல? இவ தான் உன் மானத்த கப்பல் ஏத்த போறா. அதையும் நான் பாக்க தான் போறேன்?” என்று புலம்பி கொண்டு எழுந்து சென்றுவிட்டார்.


யாஸ்மினுக்கு அப்போது தான் உடலை விட்ட சென்ற உயிர் மீண்டு வந்ததை போல் இருந்தது.


ஆனால் மறு நிமிடமே, “என்னங்க நீங்க? நமக்கு சொந்தம்னு சொல்லிக்க இந்த ஊர்ல உங்க அக்காவ தவிர யாருமில்ல.


எத்தனை நாள் நம்மளும் பொண்ண வச்சிருக்க போறோம். ஆவளேக்கும் காலத்துல நல்லது பண்ண வேண்டாமா?” என்று பாத்திமா தன் கணவரிடம் கேட்டார்.


“நம்ம கஷ்டப்படும் நேரத்துல வந்து நிக்காத உறவு, இப்ப தேவைனதும் வராங்க.


நான் யாஸ்மினுக்கு வேற நல்ல பையனா பாக்குறேன்.” என்று எழுந்து வெளியில் சென்றார் காதர்.


தந்தையின் வார்த்தைகளை கேட்ட யாஸ்மினின் மனதை இனம் புரியாத பயம் ஆட்கொண்டது.


இதற்கு மேலும் தன் காதலை ரகசியாமக வைத்திருந்தாள், தன் தலையெழுத்தே மாறிவிடும் என்று நினைத்தவள் உடனே இளங்கோவனிடம் பேச முடிவெடுத்தாள்.


அதே சமயம், தங்கள் காதலை பற்றி அறிந்து கொண்டால், தங்கள் இருவரது குடும்பமும் எப்படி எதிர்வினை புரிவார்கள் என்றும் கலங்கினாள்.


-கனா 🤎

 

Author: STN - 91
Article Title: ஒரு காதல் கனா காண்போம் - 4
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: ஷமீம்

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
காதர் அப்பா உண்மையா கிரேட்👏👏👏👏👏👏அப்பவே இப்படி ஒரு கொள்கை👏👏👏👏👏

என்ன பண்ண போறா யாஸ்
 
  • Love
Reactions: STN - 91

STN - 91

Member
Jun 12, 2026
48
27
18
காதர் அப்பா உண்மையா கிரேட்👏👏👏👏👏👏அப்பவே இப்படி ஒரு கொள்கை👏👏👏👏👏

என்ன பண்ண போறா யாஸ்
மிக்க நன்றி சகி 🤎😍