ஒரு காதல் கனா காண்போம் - 6

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 91

Member
Jun 12, 2026
48
27
18
"வாய் திறந்து பதில் பேசுங்க. நம்ம காதலா? இல்ல உங்களோட இந்த போராட்டமா? ரெண்டுல எது உங்களுக்கு முக்கியம்?” அவன் முன்பு அதிகம் பேசாத பெண்ணவள் தான் இன்று அவனிடம் ஆவேசமாக கேள்வி கேட்கிறாள்.

இருவரது காதலுக்கும் சேர்த்து அவள் ஒருவளே போராடுகிறாள். என்ன இங்கு அவள் முதலில் எதிர்ப்பது அவள் காதலனை.

“உன்னோட நியாயமான கேள்விகளுக்கு என்கிட்ட நியாயமான பதில் இல்ல யாஸ்மின்.

உன் மேல நான் வச்சிருந்த காதல் பொய்யில்லை. நீ ஏதேதோ காரணம் சொல்லி என்னை நிராகரிச்ச. ஆனா எனக்கு இது எல்லாத்தையும் தாண்டி உன்ன புடிச்சிருக்கு. விலகி போன உன்னை நான் தான் துரத்தி துரத்தி காதலிச்சேன்.

என் மனசுல இருக்கிறது உன் கிட்ட எப்படி புரிய வைக்கிறது எனக்கு சத்தியமா தெரியல.

இப்ப இந்த நிமிஷம் என் மனசுல வெள்ளைக்காரங்களுக்கு எதிரா போராடும் வெறி மட்டும் தான் இருக்கு.

அதுக்காக நம்ம காதல நான் மறக்கல. எனக்கு என்ன விட, நீ தான் முக்கியம். ஆனா….. இப்ப…..” என்று தடுமாறியவனை கண்டு விரக்தியாக புன்னகைத்தாள் யாஸ்மின்.

“இப்ப என்ன விடவும் உங்கள விடவும் உங்களுக்கு இந்த போராட்டம் மட்டும் தான் முக்கியம் இல்ல? சரி, நீங்க உங்க லட்சியத்தை தேடி போங்க.

ஆனா ஒன்னு மட்டும் மனசுல வச்சுக்கோங்க. இப்ப இந்த நிமிஷமே உங்க காதல் தோத்து போயிடுச்சு.

எப்ப இந்த வெறி நம்மள பத்தி யோசிக்க விடாமல் உங்களையே மறக்க வெச்சதோ, அந்த இடத்திலேயே இந்த காதலுக்கு அர்த்தம் இல்லாம போயிடுச்சு.

இதுக்கு மேல நீங்க உங்க வழியில் தாராளமா போங்க. ஆனா நீங்க திரும்பி பார்க்கும்போது உங்க வாழ்க்கையில எந்த இடத்திலும் நான் இருக்க மாட்டேன்.” தீர்க்கமாக சொன்னவள், மனதில் ஏதோ உறுதி கொண்டவளாக வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டு எழுந்து சென்றுவிட்டாள்.

“யாஸ்மின்!” என்ற அவன் ஒற்றை அழைப்பிற்கு எப்போதும் உருகி நிற்பவள், இன்று அவன் பலமுறை கத்தியும் திரும்பி கூட பாராமல் சென்று விட்டாள்.

பெற்றவர்கள் பாசத்தையும் கண்டிப்பாக காட்டி அவனை செல்லக்கூடாது என்று மறுத்த போது கூட திடமாக இருந்த அவன் உறுதி, தற்போது யாஸ்மின் காதலால் பலமாகவே ஆட்டம் கண்டது.

காதலா? லட்சியமா? என்ற கேள்வி அவனை அடித்து சாய்த்தது.

‘எப்படி கூறுவான்? இரண்டுமே அவனுக்கு உயிரை விட பெரியது தான்.

காதலுக்காக அவன் லட்சியத்தையும் இலட்சியத்திற்காக அவன் காதலையும் இழக்க அவன் தயாராக இல்லை.

அனல் தற்சமயம் இருக்கும் குழப்பம் முதலில் எதை தேர்ந்தெடுப்பது?

காதல். தற்போது தங்கள் விடயம் வெளியில் வந்தால் கூட பல பிரச்சனைகளை இருவரும் சந்திக்க வேண்டும்.

அவள் பெற்றோர் என்ன எடுப்பார்கள் என்று தெரியாது. தன் பெற்றோர்களை சமாளிக்க வேண்டும்.

இதையெல்லாம் கடந்து அவளை கை பிடித்தாலும் தற்போது அவனின் லட்சியமும் அவனை அழைக்கிறதே?

இரண்டில் எதை முதலில் தேர்ந்தெடுப்பது?’ என்று புரியாமல் அந்த திடமான ஆடவனும் அந்த இடத்தில் தள்ளாடி தான் போனான்.

இங்கு அந்த இருண்ட நெடுவயல் கிராமத்தின் வீதிகளில் அழுது கொண்டே வந்த யாஸ்மினுக்கு அவள் வாழ்வே அந்த இருளைப் போல் தான் இருண்டு கிடப்பது போன்று தோன்றியது.

வீட்டில் அடைப்பட்டு கிடந்த இத்தனை நாளும், நான்கு ஐந்து முறை தன்னை வந்து பெண் பார்த்து சென்றபோது அவள் எப்படி புழுவாய் தவித்தாள் என்ற பாடு அவளுக்கு தான் தெரியும்.

அவளின் நல்ல நேரமோ என்னமோ வருபவர்கள் அனைவரும் ஒன்று சற்று நகைக்காகவோ, அல்லது காசு பணத்திற்காகவோ தான் வருகிறார்கள் என்று காதர் அனைவரையும் நிராகரித்து விட்டார்.

ஆனால் இதே அதிர்ஷ்டம் எத்தனை முறை அவளுக்கு நடக்கும்?

இன்று பௌர்ணமி நாள் நிச்சயம் இளங்கோவன் கடற்கரைக்கு வருவான் என்பதை இரண்டு தினங்களாகவே சிந்தித்து, எப்படியும் அவனிடம் இன்று பேச வேண்டும்.

‘அவனை தன் தந்தையிடம் பேச கூற வேண்டும். அதன் பிறகு என்ன நேர்ந்தாலும் அவன் கைகோர்த்து அதை சமாளிக்க வேண்டும்.’ என்று அடுத்தடுத்து முடிவெடுத்து வைத்திருந்த அவளின் உறுதி இளங்கோவனின் உறுதியின் முன்பு சுக்குநூறாக உடைந்து சிதறியது.

தன்னவன் அழுத்தக்காரன் பிடிவாதக்காரன் என்பதை நன்கு அறிந்து வைத்தவள் தான். ஆயினும் அவனின் அந்த குணமே தங்கள் காதலுக்கு முதல் எதிரியாய் வந்து நிற்கும் என்று அவள் எதிர்பாரவில்லை.

மனம் முற்றிலும் உருக்குலைந்து இருந்தாலும் அவள் அவன் மேல் கொண்ட கோபத்தால் வேகமாக நடந்து வீடு வந்து சேர்ந்திருந்தாள்.

கொல்லைப்புற கதவின் ஓரம் தமக்கைக்காக காத்துக் கொண்டிருந்த மரியம், யாஸ்மினை கண்டதும் “அக்கா பேசிட்டியா? அவர் என்ன சொன்னாரு?” என்று ஆர்வமாக கேட்டாள்.

வீதிகளில் தனியாய் செல்லும்போது பலமுறை துணையாய் வந்து வீடு வரை விட்டு சென்ற இளங்கோவனை மரியமிற்கு பிடிக்கும்.

அதுவும் தன் அக்காள் அவனை நேசிப்பது தெரிந்ததும் அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது.

அவளும் தான் என்ன சொல்வாள் தங்களிடம் எதுவும் பேசாமல் தலையை மட்டும் அசைத்துவிட்டு அவளுடன் உள்ளே சென்றாள்.

அந்த சமயம் வரவேற்புரையில் படுத்திருந்த காதர் எழுந்து விட, யாஸ்மினும் மரியமும் அதிர்ந்து போய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

உறக்கத்தில் விழிப்புத் தட்டி எழுந்தவர், தொல்லை கதவு பெறும் நிற்கும் மகள்களை கண்டு புருவம் இடுங்க “இந்த நேரத்தில் இங்க என்ன பண்றீங்க?” என்று கேட்டார்.

யாஸ்மின் திருதிருவின விழிக்க, மரியம் தான், “காட்டுக்கு போயிட்டு வந்தோம் பா. பயமா இருந்ததா, அதான் அக்காவ கூட கூட்டிட்டு போனேன்.” என்று கூறினாள்.

“இந்நேரத்தில் எல்லாம் தனியா போக கூடாது. எதுவா இருந்தாலும் காலைல தான் போகணும். ஒரு விளக்கு கூட இல்லாம இப்படி தான் ரெண்டு பேரும் போயிட்டு வருவீங்களா? போய் படுங்க.” என்று சத்தம் போட இருவரும் அறைக்குள் ஓடி சென்று படித்துக் கொண்டனர்.

தரையில் உடலை சாய்த்து படித்திருந்த யாஸ்மினுக்கு, கண்ணீர் கூட வற்றி விட்டதை போல் சுவற்றை வெறித்துக் கொண்டு கிடந்தாள்.

மனம் முழுவதும் வெறுமை மட்டும் தான் அவளுக்கு எஞ்சி இருந்தது. ஒரே நம்பிக்கையாய் இருந்த இளங்கோவனும் அவளுக்கு ஏமாற்றத்தையே பரிசளிக்க பாவை அவள் துவண்டு தான் போனாள்.

இளங்கோவனை விடுத்து வேறொருவனை அவள் வாழ்வில் நினைத்துப் பார்க்க கூட வேப்பங்காயாய் கசந்தது.

உறக்கம் தொலைத்து இரவை கழித்தவள் பொழுது புலர்ந்ததும் ஜடமாய் எழுந்து அமர்ந்திருந்தாள் இளங்கோவனின் வருகை வரை.

காலையில் காதர் வேலைக்கு கிளம்பும் முன் அவர்கள் வீட்டின் வெளியே வந்து நின்ற இளங்கோவன், “உள்ள வரலாமா?” என்று குரல் கொடுத்தான்.

அந்நிய ஆடவனின் குரல் கேட்டதும், வெளியில் வந்து பார்த்த காதர் இளங்கோவனை கண்டதும், “சொல்லுங்க தம்பி.” என்று கேட்டார்.

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் ஐயா. உள்ள வரலாமா?” என்று மீண்டும் கேட்டான்.

பொதுவாக அவர்கள் வீட்டில் வேற்று ஆடவர்களை உள்ளே அனுமதிக்கும் பழக்கம் கிடையாது.

இருப்பினும் இளங்கோவனின் நல்ல குணமும் பண்பும் காதரும் அறிந்திருந்தமையால், அவனை உள்ளே அனுமதித்தார்.

உள்ளே வந்து அமர்ந்தவன், அந்த சிறிய வீட்டில் இருந்த ஓர் அறையில் கதவு இடுக்கில் வழி தன்னை காணும் அவள் கண்களை கண்டு கொண்டான்.

தன் வந்த விடயம் என்ன என்பதை போல் தன் முகத்தையே பார்க்கும் தன்னவனின் தந்தையை ஏறிட்டவன், “ஐயா. உங்களுக்கு என்ன பத்தி தெரியும்னு நினைக்கிறேன்.” என்று தொடங்கினான்.

“நல்லாவே தெரியும் தம்பி. அன்பழகன் ஐயாவோட பையன் தானே நீங்க? உங்க அப்பா என் கூட தானே நெஞ்சுக்குழி இருக்காரு.” என்று இயல்பாக பேசினார் காதரும்.

தயங்கிய இளங்கோவன் ஒரு வழியாக தைரியத்தை திரட்டி, “நானும் உங்க மக யாஸ்மினும் ரெண்டு வருஷமா காதலிச்சிட்டு இருக்கோம்.

உங்க மக மேல எந்த தப்பும் இல்லை. ஆரம்பத்துல அவளுக்கு பிடிச்சிருந்தாலும் உங்களுக்காக வேண்டாம் விலகி தான் போனாள்.

நான் தான் அவளை விடாம தொந்தரவு பண்ணேன். உங்களுக்கும் எங்களுக்கும் இடையில நிறைய வித்தியாசங்கள் இருக்குன்னு எனக்கு தெரியும்.

ஆனா உங்க பொண்ணு உங்கள விட நான் நல்லா பாத்துப்பேன்.” என்று அவன் கூறியதில் காதரும் பாத்திமாவும் அதிர்ச்சியாக தங்கள் மகளை திரும்பிப் பார்த்தனர்.

யாஸ்மினோ ‘அவ்வளவுதான். முடிந்து விட்டது.’ என்று நினைத்த காதல் அத்தியாயம் தன்னவனால் மீண்டும் மீண்டு வருவதை நினைத்து மகிழ்வதா? அல்லது எங்கள் நம்பிக்கையை இப்படி கெடுத்து விட்டாயே என்று குற்றம் சாடும் பார்வை பார்க்கும் தாய் தந்தையை பார்க்க முடியாமல் கூனி குறுகுவதா? என்று புரியாமல் தலை குனிந்தாள்.

அதிகம் பொறுமையாக இருக்கும் காதர், இளங்கோவன் கூறிய வார்த்தைகளில் வெகுண்டு எழுந்தார்.

“ஏண்டா உன்ன நம்பி வீட்டுக்குள்ள விட்டதுக்கு நீ என் பொண்ணையே கேக்கிறியா?” என்று பாய்ந்து வந்து அவன் சட்டையை பிடித்தார்.

அதை கண்டதும் வேகமாக அறையிலிருந்து ஓடி வந்த யாஸ்மின், தந்தைக்கும் தன்னவனுக்கும் இடையில் வந்து நின்று கொண்டாள்.

“அப்பா. தயவு செஞ்சு அவர விட்ருங்க. தப்பு என் பக்கமும் தான் இருக்கு. நான் உங்க நம்பிக்கைய கெடுத்துட்டேன்.” என்று கூறிய மறு நொடி பொலிரென்று அவள் கன்னத்தில் விழுந்தது ஒரு அறை.

அதற்கு அருகில் வந்து நின்ற பாத்திமா, மகள் செய்து வைத்த காரியத்தில் இன்னும் ஒரு அறை மற்றொரு கன்னத்தில் கொடுக்க, அதை தடுக்க வந்த இளங்கோவனை பார்வையாலேயே எட்ட நிறுத்தினார்.

“ஏன் டி இந்த மனுஷன் உனக்கு என்னடி பண்ணல? பொட்டை புள்ள பத்திய காரணத்திட இல்ல? ஊரு உலகம் அத்தனையும் ‘பொம்பள புள்ளைய எதுக்கு படிக்க வைக்கிறீங்க? பிடிச்சு கட்டி வைக்க வேண்டியதுதானே’னு கேட்டப்ப அத்தனை பேருக்கு எதிர்த்து உன்னை படிக்க வச்சாருடி.

உன்ன சமய கட்டுக்குள் கிடந்து சாக விட்டிருந்தா இன்னிக்கி உங்க அப்பாவை எடுத்துட்டு நம்ம ஆளுங்கள தவிர ஒருத்தனை காதலிச்சிட்டு வந்து நின்னிருப்பியா?

இதுக்கு தான் கல்யாண பேச்சு எடுத்ததும் முகத்தை தூக்கி வைத்துவிட்டு நின்னியா?

ரெண்டு வருஷமா காதலிக்கிறேனா இந்த ஊருக்கு வந்ததிலிருந்து இந்த கூத்து நடக்குதா?

உன்ன நாங்க எந்த விதத்துல டி தப்பா வளத்துட்டோம். ஐயோ நம்ம வழக்கத்துல இதெல்லாம் எங்கேயாவது நடக்குமா?

இந்த விஷயம் வெளியே தெரிஞ்சா எங்க மான மரியாதை எல்லாமே போயிருமே.

இதுக்கு தான் பொம்பள புள்ள பிறந்ததுமே கள்ளிப்பால் ஊத்தி கொன்னிருக்கணும்னு சொல்றது.” என்று மகளின் காதலினால் அதுவும் அவர்களை விட சமயத்தில் வேற்று ஆண்டவனை காதலித்து வந்தவளால், ஏற்பட்ட கோபத்தில் கண்முன் தெரியாமல் வார்த்தைகளை விட்டார் பாத்திமா.

சுமந்து பெற்ற தாயே தன்னை கள்ளிப்பால் ஊற்றி கொன்றிருக்க வேண்டும் என்று கூறிய வார்த்தைகளில் மொத்தமாக நொடிந்து போனாள் பெண்ணவள்.

இளங்கோவனுக்கோ அத்தனை ஆத்திரம் யாஸ்மின் தாயார் மீது.

“போதும் நிறுத்துங்க. உங்க வளர்ப்பு எந்த விதத்திலயுமே தப்பா போகல. உங்கள மனசுல வச்சு தான் அவளுக்கு பிடிச்ச வாழ்க்கையை தூக்கி போட துணிஞ்சா.” என்று அவன் கோபமாக பேசினான்.

இடையில் வந்த காதர், “இங்க பாரு. மரியாதையா வீட்டை விட்டு வெளியே போ. என் பொண்ணுக்கு யாரை கல்யாணம் பண்ணி வைக்கணும் எனக்கு நல்லா தெரியும்.

இதுக்கு மேல அவ இருக்கிற பக்கம் உன் பார்வை கூட படக்கூடாது.” என்று அவனை வெளியில் துரத்தினார்.

அவமானமாக இருந்தாலும் தன்னவளுக்காகவும் தங்கள் காதலுக்காகவும் பொறுத்துக் கொண்ட இளங்கோவன், “நீங்க இன்னைக்கு கோவத்துல இந்த முடிவை எடுக்கலாம்.

ஆனா கொஞ்சம் யோசிச்சு பாருங்க. அவ மனசுக்குள்ள வேற இருக்காது.அவள நீங்க கட்டி வச்சாலும் நிம்மதியா வாழுவானு நினைக்கிறீங்களா?

ஒன்னு அவ உயிரை விடுவா. இல்ல என்ன நினைச்சுகிட்டு நீங்க கட்டி வைக்கிறவன் கூட வாழுவா.” என்று இளங்கோவனும் வாதாடினான்.

“ஐயா சாமி போதும். தயவு செஞ்சு வெளியே போ இதுக்கு மேல வீட்டுக்குள்ள நீங்க தேவையில்லாம பேசிட்டு இருந்த தெருவுல வச்சு அசிங்கப்படுத்திடுவேன்.” என்று பாத்திமா கூறவும், அழுது கொண்டே தன்னையே பார்க்கும் யாஸ்மினை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன் அங்கிருந்து சென்று விட்டான்.

அவள் வாழ்வில் இருந்துமா?

-கனா 🤎

 

Author: STN - 91
Article Title: ஒரு காதல் கனா காண்போம் - 6
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: ஷமீம்

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
இப்படி தான் இது ஆகும்.....இப்பவே இப்படி தான் இருக்கு.... இது எல்லாம் அந்த காலத்தில்??????
என்ன பண்ண போறார் காதர்?????
 
  • Love
Reactions: STN - 91

STN - 91

Member
Jun 12, 2026
48
27
18
இப்படி தான் இது ஆகும்.....இப்பவே இப்படி தான் இருக்கு.... இது எல்லாம் அந்த காலத்தில்??????
என்ன பண்ண போறார் காதர்?????
உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி சகி 🤎