• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஒரு பார்வையிலே என்னை வீழத்திவிட்டாய் - 17

நிதனிபிரபு

Administrator
Staff member
பார்வை 17

அந்த வருடம் வசீகரன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று முதுகலை எம்பிஏ படிப்பில் சேர்ந்தான். மதுமதியும் இரண்டாம் வருடத்தில் நுழைந்தாள். வசீகரன் அடிக்கடி அவளை அவளது கல்லூரியில் சந்திக்க வந்தான். இதனை பார்த்த வசுந்தரா, “தன்னைத் தேடித்தான் வருகிறானோ?” என்று எண்ணி, “என்ன வசீ, அடிக்கடி இந்தப் பக்கம்?” என்றாள், கண்களில் காதல் மின்ன. பேதையவள் அறியவில்லை — அவன் அவள் கைமீறிப் போய் பல மாதங்கள் ஆனதென்று.

“ஹே வசு, சும்மாதான் இந்தப் பக்கம்,” என்றவன், விழிகள் மதுமதியைச் சுற்றிலும் தேடியது.

“அப்படியா? பார்த்தா தெரியலையே!” என்றாள், கண்களில் ஆர்வம் தேக்கி.

“அது வசு…” என்றவன் தயங்கி, “சொன்னா தப்பா நினைக்க மாட்டியே? என்னடா இவன் இவ்வளவு நாளா சொல்லலை, இப்ப திடீர்ன்னு இப்படி சொல்லறான்னு நினைச்சிடாதே. ரொம்ப நாளா சொல்லணும்னு நினைச்சேன்… ஆனா…” என்றவன் சிறிது திணறி, “நான் ஒரு பொண்ணை லவ் பண்ணறேன் வசு. அவ இந்தக் கல்லூரிதான்…” என்றவன், விழிகளை அவள் எதிர்பார்ப்புடன் பார்த்தபோது, “உன் ஜூனியர் மதுமதி பிரதிக்ஷாதான்,” என்றதும் வசுந்தராவின் மனம் கண்ணாடி போல சுக்கல் சுக்கலாக உடைந்து சிதறியது.

அவள் விழிகள் வலியை பிரதிபலிக்க, அவன் எங்கே அவளை கவனித்தான்? அவன் பாட்டுக்கு அவனுடைய காதல் கதையை, கண்களில் மதுவின் மீதான காதலை தேக்கிக் கொண்டு சொல்லிக்கொண்டிருந்தான்.

வசுவுக்குத்தான் மிகவும் அவஸ்தையாக இருந்தது. அவளிடம் காதலைச் சொல்வான் என்று எண்ணியிருந்தாள். அவனோ, இன்னொருத்தியின் மீதான அளவுகடந்த காதலை அவளிடமே சொன்னான். அவளுக்கு மனமெல்லாம் வலித்தது. அவளுக்கு தனிமை வேண்டி மனது பரபரத்தது. தனிமையில் ஓவென்று கத்தி அழ வேண்டும் போல இருந்தது. சிரமப்பட்டு வலியில் நெகிழ்ந்த குரலை கட்டுப்படுத்தி, “வசீ, ஓகே டா… வாழ்த்துக்கள் டா,” என்றவள், “நான் கொஞ்சம் அவசரமாக போகணும். அப்புறம் பேசலாம்,” என்று கூறி அவ்விடமிருந்து விரைந்து ஓடினாள்.

ஒரு மனதை உடைத்தது கூட தெரியாமல், இவன் மதுவுக்காக காத்திருந்தான்.

அப்போதுதான் மது வெண்ணிற லாங் டாப் மற்றும் கறுப்பு நிற ஜீனில் வந்து கொண்டிருந்தாள். அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஹாய் வசீ!” என்றவாறு வந்தவள், இடது காதைப் கையால் பிடித்து, கண்களைச் சுருக்கி, “சாரி… ரொம்ப நேரமாச்சா?” என்றாள் கெஞ்சலாக.

அவளையே ராசனையாக பார்த்திருந்தவன் இதழ்கள் மெல்ல முனுமுனுத்தது.“மை ஸ்வீட் டெம்ப்டேஷன்…” என்று,

“இவ சாதாரணமா கேட்டாலே நான் பிளாட் ஆயிடுவேன். இப்படி கேட்டா அச்சோ!” என்று உள்ளுக்குள் ஆர்ப்பரித்த உணர்வுகளை, விழிகளைச் சுழலவிட்டவன், தலையை விரல்களால் கோதியவாறு சமன் செய்தான்.

இருவரும் அருகில் இருந்த காபி ஷாப்புக்குச் சென்றனர். அவர்கள் இருவரும் எதிரெதிரே இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தனர். கண்ணாடி ஜன்னல் வழியே வந்த வெளிச்சம் மதுவின் முகத்தில் விழ, பொலிவுடன் கூடிய அவள் சிரிப்பு இன்னும் அவனை மேலும் அவள் மீது பித்தாக்கியது.

ரசனையுடன் அவளது விழிகள் தொடங்கி நாசி முதல் இதழ் தாண்டி பயணித்த அவன் விழிகள் மேலும் கீழிறங்க முயல.. ஓஹ் காட் .. வசீ .. நீ இடியட் தாண்டா என்று தன்னை கட்டுபடுத்தி குரலை செருமி, தன்னை நிலைப்படுத்தியவன்,

“மது, இந்த வாரம் சனிக்கிழமை எங்காவது போலாமா?” என்றான்.

அவள் உடனே, “நோ வசீ, இந்த வாரம் முடியாது. முதலிலேயே சொல்லியிருக்கலாம் இல்லையா? நான் சித்து கூட கொஞ்சம் வெளியே போகணும். அவன் டூ வீக்ஸா கேக்கறான். என்னால தான் போக முடியல. அதனால் இந்த வாரம் கண்டிப்பா அவன் கூட போகணும். நெக்ஸ்ட் வீக் வேணா போலாமா?” என்றாள் சாதாரணமாக.

வசீகரனின் உள்ளம் மட்டும் இருள் படிந்த மேகமாய் சுருங்கிக் கொண்டிருந்தது.

“இந்த வாரம் முடியாது வசீ… சித்து கூட போகணும்,” என்று அவள் சொன்ன அந்தச் சொற்றொடர் அவனுக்கு கசந்தது.

சித்து.

அந்த பெயர் அவன் மனதில் எரிச்சலை உண்டாக்கியது.

அவனுக்குத்தான் அந்த நேரம் உரிமையுணர்வு தலைதூக்கியது. “நான் முக்கியமா? இல்ல அவன் முக்கியமா?” என்று அவன் மனதுக்குள் அவளுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தான். வெளியில் அமைதியாக அமர்ந்திருந்தாலும், உள்ளுக்குள் அவன் பொறாமை ஒரு சின்ன தீப்பொறியாகத் தொடங்கி மெதுவாகக் கொழுந்துவிட்டு எரிந்தது.


கோபத்தில் வார்த்தை விடக்கூடாது என்று “பொறுமை… பொறுமை…” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.

பின் சாதாரணமாக, “என்ன, எப்போ பார்த்தாலும் நீங்க ரெண்டு பேரும் தான் ஒண்ணா சுத்தறீங்க. எல்லாரையும் விட நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நெருக்கமோ?” என்றான், ‘எல்லாரையும் விட’ என்பதில் அழுத்தம் கொடுத்து. அந்தக் குரலின் தொனியை மதுமதி கவனிக்கவில்லை.

“ஆமா, சின்ன வயசிலிருந்து நாங்க ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ். எனக்கு ஒண்ணுனா அவனால தாங்க முடியாது. அவனுக்கு ஒண்ணுனா என்னால தாங்க முடியாது.

ஒவ்வொரு சொல்லும் வசீகரனின் இதயத்தை தைத்தது. அவன் விரல்கள் காபி கப்பின் கைப்பிடியைச் சற்றே பலமாகப் பற்றின. தன்னைத்தானே அடக்கிக் கொள்ள முயன்றான். கோபப்படக்கூடாது… கோபப்பட்டா அவள் என்னை விட்டு தூரம் போய்விடுவாள்… என்று உள்ளத்தில் சொல்லிக்கொண்டான்.

ரெண்டு பேரும் எங்க போனாலும் ஒண்ணாவே போவோம், ஒண்ணாவே வருவோம். அவன் என்னை விட ரெண்டு வருஷம் பெரியவன். அதனால் என்னை பொறுப்பா, பேபி மாதிரி பார்த்துப்பான். அவனுக்கு என்னை ரொம்ப இஷ்டம். எனக்கும் அவனை ரொம்ப பிடிக்கும்,” என்றவுடன்—

“என்னை விடவா?” என்று அவன் பட்டென்று கேட்டுவிட்டான்.

மதுவின் புருவம் சுருங்கியது. பிறகு அவள் சிரித்தாள்.

“ச்சீ… என்ன வசீ இப்படி கேக்கறீங்க? அந்தப் பிடித்தம் வேற, இது வேற. அவன் என் நல்ல நண்பன்; அதனால ரொம்ப பிடிக்கும். நீங்க எனக்கு ஸ்பெஷல் இல்லையா?” என்றவள் கண்களில் காதல் மின்ன அவனை பார்த்தாள். ஆனால் வசீகரனின் மனம் அமைதியடையவில்லை.

மது நான் ஒன்று சொல்லட்டுமா, என்றவனிடம்

ம்ம்.. சொல்லுங்க வசீ என்றாள்,புன்னகை முகமாகவே

“உன் கூட யார நெருக்கமா பார்த்தாலும் எனக்கு கோபமா வருது. அது சித்துவாக இருந்தாலும்… வேற யாராக இருந்தாலும். நீ அதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கோ. ஆனா…” — அவன் சற்றே நிறுத்தி — “நீ என்னைத் தவிர வேற யாருடனும் இவ்வளவு க்ளோஸா இருக்கிறது எனக்கு பிடிக்கல.”என்றவனை ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்த விழிகளால் பார்த்தாள்.

“வசீ…” என்று கலகலவென சிரித்தாள்.

அவன் முறைக்க, சிரிப்பை கட்டுப்படுத்தி, “வசீ… நீங்க பொசசிவ் ஆகறீங்களா?” என்றாள், முகத்தில் புன்னகை தேக்கி.

அந்தச் சிரிப்பு அவனுக்குப் பிடிக்கவில்லை.

அவன் முகம் கடினமாயிற்று.

“உனக்கு என் பீலிங்ஸ் விளையாட்டா இருக்கா, மது?” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.

அவள் சிரிப்பு மெதுவாக அடங்கியது.

அவள் அவனையே கலக்கமாக பார்த்தாள். இது என்ன மாதிரியான அன்பு . இந்த கோவகாரனிடம் தன்னை எப்படி புரியவைப்பது. புரிய வைத்திருக்க வேண்டுமோ என்று என்னும் நாள் வரும் என்பதை அன்று அவள் அறிந்திருந்தால் ,வரபோகும் பிரிவைத் தடுத்து இருக்கலாமோ… என்னவோ.

அவனது உணர்வின் தீவிரம் அவள் அறியவில்லை. அதனாலேயே, அதை எல்லா காதலர்களுக்குள்ளும் சாதாரணமாக வரும் பொறாமைக் குணம் தான் என்று எண்ணி எளிதாக கையாண்டாள். அதற்கேற்ப அவனை அப்போது சமாதானப்படுத்தினாள். பின்னர் பேச்சை மாற்றி,
“வசீ, உங்கள் டெக்ஸ்டைல் மில்லுக்கு எப்போது கூட்டிப் போறீங்க?” என்றாள்.

அவள் பேச்சை மாற்றுவதை உணர்ந்தவன், மென் புன்னகையுடன் அவளை பார்த்தான். கண்களில் குறும்பு மிளிர,
“நீ என் பொண்டாட்டி ஆனதும்,” என்றான்.

அதிர்ந்து அவனை பார்த்தவள், அவனது பார்வையில் தெரிந்த குறும்பைக் கண்டு சற்று ஆசுவாசமடைந்தாள்.
“சரி, மில் பேரையாவது சொல்லுங்க பாஸ்,” என்றாள்.

“சொல்ல மாட்டேன். நீ நேரில் பார்க்கும்போது தெரிஞ்சுக்கோ.”

“என்னப்பா?” என்றவளிடம்,
“சரி, ஒரு குளூ தரேன். ஒரே அட்டெம்ப்ட்ல கரெக்ட்டா சொல்லணும்,” என்றான்.

“சரி,” என்றாள் அவள்.

“அவிநாசி ரோட்லதான் இருக்கு.”

அவள் அவனை முறைத்தாள்.
“அந்த ரோட்ல எத்தனை மில் இருக்கிறது! எப்படி நான் கண்டுபிடிக்க?” என்று பரிதாபமாக பார்த்தாள்.

“பரவாயில்லை, தெரிஞ்சதை சொல்லு.”

அவள் ஏதோ சொன்னாள்.
“சாரி, தப்பு. நீ நேரில் போகும் போது பார்த்துக்கோ,” என்றவனை அவள் தீவிரமாக முறைத்தாள்.

சத்தமாக சிரித்தவன் , சரி.. சரி.. சொல்லறேன் என்றவன் சொன்ன பதிலில் அவள் கண்கள் வியப்பில் விரிந்தது.

ஜெய் மீனாக்ஷி டெக்ஸ்டைல் பிரைவேட் லிமிட் , அதுவா, என்றவளுக்கு இன்னும் நம்பவே முடியவில்லை.அது இரண்டு ,மூன்று கிளைகள் கொண்ட மிக பெரிய நிறுவனம்.அவனின் உயரம் இன்னுமின்னும் அவளை பயமுறுத்தியது.

வெளியே காட்டாமல் புன்னகைக்க முயன்றாள் .

இப்படியே நாட்கள் காதலும் ஊடலும் கலந்து சென்றன.

ஒரு மாதம் கடந்து இருக்கும்

இன்று அவனை சந்தித்தே ஆகவேண்டும் என்று அவள் அடம்பிடித்திருக்க அன்று மாலை, இருவரும் அவனின் காருக்குள் அவள் அவனின் விரல்களோடு விரல் கோர்த்தபடி அமர்ந்திருந்தாள் விசும்பிக்கொண்டிருந்தவளை ஆதூரமாக அவன் தன் தோளில் சாய்ந்திருக்க, அவனது நெற்றி காயத்தை பார்த்தவளின் மனம் ரணமாய் துடித்தது. கொஞ்சம் தவறியிருந்தாலும் என்னவாகி இருக்கும் என்று நினைத்தவுடனே அவளது நெஞ்சம் படபடக்க, கண்களில் நீர் திரண்டது. அதை அவன் தனது சட்டையின் வழியாக உணர்ந்தான்.

“ஏய், என்ன?” என்றவனிடம், “ஒன்றும் இல்லை” என்று தலையசைத்தவள் விலகி அமர்ந்தாள்.

“அதுதான் ஒன்றும் ஆகலையே. பிறகு என்ன?”

“நினைக்கவே முடியவில்லை, வசீ,” என்றவளின் கண்களில் மீண்டும் கண்ணீர் திரண்டது.

ஒரு வாரம் முன்பு கல்லூரியே கலவரமாக இருந்தது. மாணவர்களில் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டை அடிதடியாக மாறியது. ஆசிரியர்கள் மாணவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். காவல்துறையும் வரவழைக்கப்பட்டது. அங்கே இருந்த ஒரு குழுவுக்கு தலைமை தாங்கி நின்றவன் அந்த தொகுதி எம்.எல்.ஏ-வின் மகன். கல்லூரி முதல்வர் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றார்.

அந்த நேரத்தில், ஒரு மாணவன் வீசிய இரும்பு கம்பி வசீகரனை தாக்க முற்பட்டது. அதே வேளையில் விக்ரம் அவனை வேகமாக தன் பக்கம் இழுத்து காப்பாற்றினான். இருவரும் சேர்ந்து கீழே விழுந்தனர். விழுந்த வேகத்தில் விக்ரமுக்கு கைகளில் எலும்பு முறிவு ஏற்ப்பட, வசீகரனுக்கு தலையில் கீழே இருந்த கல் குத்தி சிறிய காயம் உண்டானது. பின்னர் எழுந்து நின்ற வசீகரன், “நன்றி,” என்றான். மித்ரன், அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு கூட்டிசென்று இருவரது காயத்திற்கும் மருத்துவம் பார்த்து வீட்டுக்கு அழைத்துவந்தான். அதுவரை வகுப்பு தோழனாக இருந்த விக்ரம், அன்று முதல் அவனுக்கு நெருங்கிய நண்பனாக மாறினான். ஒரு கணம் தவறியிருந்தாலும் அந்த இரும்பு கம்பி அவனது தலையை பிளந்திருக்கும்.

இதை கேட்ட நாளிலிருந்து, அவனை நேரில் பார்க்கும் வரை மதுமதியின் மனம் பதறித் துடித்தது. பார்த்த பின்னரும், கீழே விழுந்ததில் ஏற்பட்ட சின்ன சிராய்ப்புக் காயத்தை பார்த்தவுடனே அவளால் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் உகுத்தாள்.

“நீங்க ஏன் வசீ அங்க போனீங்க?” என்று அவனை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“மது, இங்க பார். நான் அங்கே போனாலும் போகாவிட்டாலும், இது எனக்கு நடக்கணும்னு இருந்தா வேற மாதிரி நடந்திருக்கும் . அதுவும் எதுவும் ஆபத்தாக நடக்கலையே. பிறகு என்ன உனக்கு?”

“எதையும் ‘டேக் இட் ஈஸி’யா எடுத்துக்க பழகு. இதுக்கு இவ்வளவு கண்ணீர் அவசியமில்லை, புரிந்ததா?” என்று சொல்லிக்கொண்டே அவளது முகத்தை கைகளில் தாங்கி, தனது இரு பெருவிரல்களால் அவள் கண்களில் வழிந்த நீரை துடைத்தான்.

அழுது சிவந்திருந்த அவளது முகத்தை ரசித்தபடி, “மை ஸ்வீட் டெம்ப்டேஷன் ,” என்று வாய்க்குள் முணுமுணுத்தான்.

“விடுங்க,” என்று அவன் கையை தள்ள முயன்றாள்.

“சும்மா இரு, என் பார்பி டால்… முகம் எவ்வளவு சிவந்து போச்சு!” என்று கண்களால் சிரித்தான்.

“அச்சோ, போதும்! யாராவது பார்க்கப் போறாங்க,” என்று அவன் கையை தட்டிவிட்டு சிணுங்கினாள்.

“ஓகே, லீவ் இட்.”என்றவன், சரி,,,,,,,சரி.. கொஞ்சம் சிரிக்கிறது. இப்படி இருந்தா நான் எப்படி டெம்ப்ட் ஆகிறது,” மை ஸ்வீட் டெம்ப்டேஷன்”, என்றான் கண்களில் துளிர்த்த குறும்புடன் .

பட்டென்று அவனது மார்பில் அடித்தவள், அடிப்பட்டும் என்ன பேச்சு பேசறீங்க,

வலி,,, அது வேற டிபார்ட்மெண்ட்.. லவ் இது வேற டிபார்ட்மெண்ட்.. என்றான் கணக்களில் காதலுடன்.

அவள் ஒரு சிணுங்களுடன் அவன் தோள் சேர அவன் அவளை தோளோடு அணைத்து உச்சிமுகர்ந்தான்.

“மது, நாளைக்கு மூவி போகலாமா?” என்று கேட்டான். அவள் தயங்கி,
“வசீ… நான் சித்துடன் அவன் நண்பரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு வரேன் சொல்லிட்டேன். நெக்ஸ்ட் வீக் போலாமா?” என்றாள்.

அவனுக்கு கோபம் வந்தது. ஆனால் அதை வெளியில் காட்டவில்லை. எப்போதும் இப்படி தான் — “சித் அதுக்கு கூப்பிட்டான், இதுக்கு கூப்பிட்டான்” என்று காரணம் சொல்வாள். அப்போது, “என்னை விட அவன் முக்கியமா?” என்று உள்ளுக்குள் சுறுசுறுவென ஒரு கோபம் எழும். இருந்தாலும் அதை அடக்கிக்கொள்வான். இன்றும் அப்படியே செய்தான்.

“என்மேல் கோபமா பா? என்றாள் அவள் தயங்கி, தயங்கி

இல்லையே என்றான்.

சாரி… நீங்க எப்ப கேக்கும்போதும் நான் இதையே சொல்லறேன் என்றாள் வருத்தமாக

தெரிஞ்சா சரி,” என்றான் இறுக்கமான குரலில்..

“அடுத்தவாரம் கட்டாயம் போலாம்”. என்றாள்அவள் சமாதானமாக.
 
Top Bottom