• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஒரு பார்வையிலே என்னை வீழத்திவிட்டாய் - 22

நிதனிபிரபு

Administrator
Staff member
பார்வை 22

சித்து வரும் வரை அவளை தள்ளி நின்று பார்த்துக்கொண்டவன், அவன் வந்ததும் காரை கிளப்பி மெல்லிசையை ஒலிக்க விட்டான்.

கிளை ஆகாயம் போனாலும்…

வேர் என்றுமே…

இந்த மண்ணோடு தான் உள்ளது…

நான் ஊரெங்கும் சென்றாலும்…

எண்ணம் எல்லாம் அடி உன்னோடுதான் உள்ளது…

இந்தத் தீராத ஆறாத பேராசைக்கு…

இன்று நான் என்னப் பேர் வைப்பது…

நெருப்பு இல்லாமல் புகை இல்லாமல்…

ஒரு தீ என்னை சூழ்கின்றது…

அவனது இதழ்களும் ஒரு மெல்லிய புன்னகையுடன் பாடல் வரிகளை முணுமுணுத்தது.

ஒவ்வொரு பாடல் கேட்கும் போதும் அவள் நினைவுகளின்றி வேறேது அவனுக்கு அவளது நினைவுகளால் நிரம்பி வழியும் அவனிதயம். இன்றும்........

வசீகரனுக்கு கோபம் இருந்த அப்போதும் சரி, இப்போதும் சரி, அவளை எந்த காரணத்தாலும் விட்டு விடவோ, விட்டு விலகவோ விரும்பவில்லை. என்றைக்கு இருந்தாலும், “என் வாழ்க்கை அவள்தான்” என்று அவன் மனதில் பதித்து வைத்திருந்தான். அவளும் அப்படித்தான். அவனைத் தவிர வேறு ஒருவனை பேச்சுக்குக் கூட நினைக்க அவளால் முடியவில்லை. ஆனாலும், அப்படி சொன்னானே என்று இன்றளவும் அவள் மனம் ஆறவில்லை.

எப்போதும் அவள் ஆசிரமத்துக்கு சென்று வந்தால் அன்று மனம் மிகவும் அமைதியாகவும் நிர்மலமாகவும் இருக்கும். ஆனால் அன்று அப்படி இல்லை. அவனைப் பார்த்த தருணம் முதல் மனம் தீயாய் எரிந்து கொண்டிருந்தது. அன்று அவன் பேசிய வார்த்தைகள் அப்படிப்பட்டவை—
“நான் உனக்கு முக்கியமில்லையா? அவன்தான் முக்கியமா? உன் வாழ்க்கையில் எனக்கான இடம் இதுதானா? அவன்தான் முக்கியம்னா, நீ அவனை லவ் பண்றியா?”
என்று கேட்டபோது, அந்த வார்த்தைகளின் அழுத்தத்தை தாங்க முடியாமல் அவளது மனம் தவித்தது. அவன் முழுதாக சொல்லாவிட்டாலும், அவன் கூற வந்தது இதுதான் என்பதை அவள் நன்றாக அறிந்தாள். அந்தக் கணம் தாங்காமல் இப்போது நினைத்தாலும் அவளுக்கு மனம் வலிக்கிறது.

இப்போதும் இப்படியே பேசுகிறான் என்று அவன் மீது இருந்த வருத்தம் கோபமாக மாறியது. “அப்படியே வைத்துக்கொள்ளட்டும் . என்ன செய்கிறான் இவன்? இவனை மனதால் நினைத்த பாவத்துக்கு இன்னும் என்னை என்ன செய்யக் காத்திருக்கிறான்? இப்போதும் இப்படியே பேசினால் நான், என் காதல் அவனுக்கு எப்போதும் புரியப் போவதில்லை,” என்று அவன் மீதான வருத்தம் கோபமாக உருவெடுத்தது.

பின்புதான் ஒன்றை உணர்ந்தாள்—இவ்வளவிற்குப் பிறகும் அவன் மீது தன்னுக்குக் காதல் உள்ளதா? தன் எண்ணங்களை ஆராய்ந்தவளுக்கு தன்னைப் பற்றியே விசித்திரமாக இருந்தது. முதலில் அவன் மீது வருத்தமும், பிறகு அவன் பேசிய விதத்தால் கோபமும் இருந்தபோதிலும், அவன் மீதான காதல் எள்ளளவும் குறையவில்லை. “அவன் வேண்டாம்” என்று புத்தி சொன்ன போதும், மனம் அவனைத் தவிர இன்னொருவருக்கு வாழ்வில் இடமளிக்க மறுத்தது. அதனால் தான் “யாரும் வேண்டாம்” என்று முடிவெடுத்தாள். ஆனால் அவளின் முடிவுகளை மாற்றும் வல்லமை படைத்த ஒருவன் இருக்கும் போது, அவள் இவ்வாறு நினைக்க மட்டுமே முடியும்.

இப்படியே அவள் வேலைக்கு சேர்ந்தது ஒரு மாதத்தை கடந்திருந்தது. அப்போது வரை வசீகரனை அவள் சந்திக்கவில்லை. அது அவனது இடம் என்பதையும் அவள் அறியவில்லை; அதைவிட, அவன் அவளை அறியவிடவில்லை என்பதே உண்மை.

ஆசிரமத்தில் அவளைச் சந்தித்த அடுத்த நாளே வசீகரன் தொழில் விஷயமாக வெளிநாடு சென்றான். பத்து நாட்களில் திரும்புவதாகச் சொன்னவன், மூன்று வாரங்கள் கடந்தும் ஊர் திரும்பவில்லை. திரும்பினால் நிச்சயமாக மதுவைச் சந்திக்க நேரிடும். இவனைப் பார்த்தவுடன் அவள் வேலையே வேணாம் என்று சென்றுவிட்டால், உள்ளதும் போய்விடும் என்று நினைத்தவன், இந்தியா திரும்புவதைத் தள்ளிப் போட்டான்.

அதற்குள் அவளுக்கு அழைக்க பலமுறை அவளது அலைபேசி எண்ணை தனது கைப்பேசியில் அழுத்துவதும் , அழிப்பதுமாக காலத்தை கடத்தினான். ஒருவாறு அன்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளுக்கு அழைத்தான்.

புதிய எண்ணிலிருந்து அழைப்பு வர, யோசனையுடன் அழைப்பை ஏற்றாள் மது.
“ஹலோ…” என்ற அவளின் குரலுக்கு மறுபக்கம் நிசப்தம்.
“ஹலோ… ஹலோ…” என்று மீண்டும் சொன்னாலும் பதில் இல்லை. அவன் பக்கம் பேரமைதி. அவளின் குரலை செவியால் கேட்டுக் கொண்டு, உள்ளத்தால் உணர்ந்து கொண்டிருந்தான்.

“ஹலோ… யாருங்க? பேச விரும்பலேன்னா எதுக்கு கூப்பிடறீங்க?” என்று அவள் சற்றுக் கோபத்துடன் கேட்டாள்.

மறுமுனையில் மெல்லிய சிரிப்பு.
“எப்போ இருந்து உனக்கு இவ்வளவு கோபம் வருது, மை லீட்டில் லவ்?” என்ற அவன் குரலில் அவள் ஸ்தம்பித்தாள். அது அவனின் அவளுக்கான தனிப்பட்ட அழைப்பு.

“என்னோட நம்பர் உங்களுக்கு எப்படி—” அதற்கு மேல் வார்த்தை வரவில்லை.

“ஏன்? அது என்ன சிதம்பர ரகசியமா, மது? என்னால் கண்டுபிடிக்க முடியாதுன்னு எப்படி நினைச்ச?” என்றான்.

சிறிது தயக்கத்திற்கு பின், “என்ன… எதுக்கு எடுத்தீங்க?” என்றாள் நிதானமாக.

“ஏன் மது? நான் உன்னை காரணம் இல்லாம கூப்பிடக் கூடாதா? அப்படி நான் உன்னை கூப்பிட்டதே இல்லையா?” என்றவனிடம் அவளுக்குள் சுறுசுறுவென்று ஒரு கோபம் எழுந்தது. “எதுவுமே நடக்காத மாதிரி, இந்த நான்கு வருடங்கள் இடையில் இல்லாத மாதிரி எப்படி இவ்வளவு இயல்பாக பேச முடிகிறது?” என்று எண்ணினாள்.

“இல்ல… இவ்வளவு நாட்களுக்கு பிறகு என்ன திடீர்னு? மறந்து மக்கிப் போன நானெல்லாம் உங்களுக்கு நினைவில இருக்கிறேனா என்ன? அதுவும் இல்லாம உங்க கிட்ட பேச எனக்கு எதுவும் இல்லை,” என்ற அவளின் வார்த்தைகள் அவனைச் சுட்டன.

“எதுவும் இல்லையா, மது?” என்ற அவன் ஆழ்ந்த குரல் அவளை மீண்டும் ஏதோ ஒன்றில் மூழ்கடிப்பது போலத் தோன்றியது. “வேண்டாம்… இவனின் எதுவும் வேண்டாம்,” என்று மனதில் கூறிக்கொண்டாள்.

“மது…” என்று மென்மையாக அழைத்தவன், “உன்னை பார்க்கணும்,” என்றான்.

“எதுக்கு?” அவளின் குரலில் கோபம் கொப்பளித்தது. தானே பார்க்கச் சென்றபோதெல்லாம் புறக்கணித்தவன், கடைசியாக பார்த்த நாளும் அவளின் மனதை காயப்படுத்தி அவளை ஓடவிட்டவன்—இன்று பார்க்க வேண்டும் என்று சொன்னால் உடனே சம்மதிக்க வேண்டுமா?

“இவ்வளவு காலமும் பேசாம, பார்க்காம இருந்துட்டு இப்போ எந்த போதிமரத்துல உங்களுக்கு ஞானம் கிடைச்சுது?” என்றாள்.

அவனுக்கு சிரிப்பு வந்தது. “நல்லா பேச கத்துக்கிட்டா…” என்று மனதில் சிலாகித்தான். அவள் அறியாதது—அவன் அவளை ஒரு நாளும் மறக்கவில்லை; பார்க்காமல் இருக்கவில்லை; அவள் அறியாமல் நிழல்போல் தொடர்ந்தான் என்பதுதான்.

“என்ன பதில் காணோம்? திடீர்னு நான் எப்போ இருந்து உங்க கண்ணுக்கு திரும்பவும் தெரிஞ்சேன்?” என்றாள் அவள்.

அவன் அமைதியாக அவள் பேசுவதைக் கேட்டு கொண்டிருந்தான்.

“ஹலோ… இருக்கீங்களா?”
“இருக்கேன், மது… சொல்லு,” என்றான்.

“எதுக்கு என்னை ஃபாலோ பண்ணுறீங்கன்னு நீங்க தான் சொல்லணும்.”

அவள் கேட்ட விதத்தில் அவனுக்கு மென்மையான புன்னகை தோன்றியது. “திடீர்னு இல்ல, பெண்ணே… நான் உன்னை பார்த்த நாள் முதல் இப்போதுவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறேன்,” என்று எப்படி சொல்வான்?

“ஒரு நிமிடம் மது… நான் வீடியோ கால்ல வரேன். ப்ளீஸ், கட் பண்ணாதே,” என்றான் கெஞ்சும் குரலில். அவனின் இந்த மென்மை அவளை அசைத்தது. எதற்கும் கெஞ்சாதவன் இப்படி பேசுவது அவளுக்கு ஆச்சரியம்.

அவள் யோசிக்கும் முன் அவன் வீடியோவில் அழைத்துவிட்டான்.

தளம்பலான மனதுடன் அழைப்பை ஏற்றாள். சிறிய திரையில் அவள் அவனை முறைத்து நிற்கும் விதம் அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது.

முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன், அமைதியாக அவளை விழி எடுக்காமல் பார்த்தான்; அது அவளுக்கு மேலும் சினம் ஏற்றியது. எப்படி பார்க்கான் பாரு… என்று உள்ளுக்குள் பொறுமியவள்,
“ம்… சொல்லுங்க,” என்றாள்.

அவளின் கத்தரிப்பான பேச்சில் அவன் ஆயாசமாக உணர்ந்தான். பின்னர் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு,
“சரி, நான் பண்ணது தப்புதான்.மனபூர்வமாகேக்குறேன் என்னை மன்னித்துவிடு,” என்றான்.

அவனை வெட்டவா, குத்தவா என்று பார்த்தாள். மூச்சுப்பிடிக்கப் அவள் பேச ,அவனோ ஒரே வார்த்தையில் முடித்துவிட்டான். அவளுக்கு ஆத்திரம்தான் வந்தது.
“உங்க மன்னிப்பை தூக்கி குப்பையிலே போடுங்க,” என்றவள், கண்ணில் தேங்கிய கண்ணீர் இதோ கொட்டிவிடுவேன் என்று இமை கடந்து ஒரு துளி நிக்க அவனுக்கு காட்டப் பிடிக்காமல் அதனை இலாவகமாக உள்ளிழுத்துக்கொண்டாள் —. அதையும் அவன் உணர்ந்தான் தான் . அவளைப் பார்க்கப் பார்க்க அவன் மனம் தவித்தது; தன்னால்தான்… தன்னால்தான்… என்று உள்ளுக்குள் குத்திக் கிழித்தது.

“வேற என்னதான் பண்ணலாம் என்கிறாய்?” என்றான்.
“உனக்காக எதுவும் செய்ய தயாராக இருக்கிறேன். ஆனா எதற்காகவும் உன்னை இழக்க முடியாது, மது. அதையும் நினைவில் வைத்துக்கொள், ”என்றான்.

“எனக்காக நீங்க ஏதாவது செய்ய நினைச்சா, என் கண்ணு முன்னாடி வராதீங்க,” என்றவளிடம் அவன் மறுப்பாகத் தலையசைத்தான்.


“எனக்குன்னு மரியாதை இருக்கு. எனக்குன்னு உணர்வு இருக்கு. அதுக்கு மதிப்பு தராத யாரும், எதுவும் எனக்கு தேவையில்லை,” என்றவள் குரலில் கடுமை ஏறியிருந்தது. அவனை காயப்படுத்தவே மேலும் பேசினாள்.
“உங்களை பார்க்கவும் வேண்டாம், பேசவும் வேண்டாம்.”

அவள் வார்த்தைகளில் அவன் காயப்பட்டான். ஆனால் அவளின் வலியை உணர்ந்தவனாக, பொறுமையாக அவளை கையாண்டான்.
“ஓகே… கூல், மது.”

“ஓகே, அப்படியே இரு,” என்றவன் கண்கள் சிரித்தன. குரலிலும் சற்று தெரிந்ததோ— நானும் உன்னை விட மாட்டேன்; நீயும் என்னை விட்டுவிட மாட்டாய் என்பதுபோல. அவனது சிரிப்பு அவளுக்கு மேலும் எரிச்சலாகியது.
“நான் உங்களை திட்டறேன்; இப்ப உங்களுக்கு கோபம்வந்திருக்கனுமே, என்ன அதிசியம் வரல ?” என்றாள் ஆத்திரமாக.

“இல்ல, வரல,” என்றவனை முறைத்தவள்,
“உங்களை பார்க்கவே பிடிக்கல,” என்றாள் அதே ஆத்திரத்துடன்.

“சீரியஸ்லி?” என்றவன் புன்னகையில் அவளது கோபம் இரட்டிப்பானது. எல்லாம் இவன் இஷ்டமா? இவன் பேசணும்னா பேச வேண்டும்; முடியாதென்றால் முடியாது! என்று அவளுக்கு இன்னும் கோபம் வந்தது.

அவளது கோபம் அவனுக்கு புன்னகையை வரவழைத்தது.
“நீதானே கோபப்படுற? பட்டுக்கோ… பேசிக்கோ… திட்டிக்கோ… நோ பிராப்ளம். உனக்கில்லாத உரிமையா?” என்றவனை என்ன செய்தால் தகும் என்று அவளுக்கு தோன்றியது.

அவள் அடுத்து பேசும் முன், “இங்க பார், மது… திட்டு, கோபப்படு, சண்டை போடு; ஏன், அடிக்க வேண்டுமென்றாலும் செய். ஆனா, அதை எல்லாம் என் கூட இருந்து செய். நீ என்ன செய்தாலும் எனக்கு ஓகே தான், மது. என்னை என்ன செய்யப் போகிறாய்?” என்றான்.

அவனின் குரலில் சற்று ரசனையுடன் கூடிய குறும்பும் இருந்ததோ. அவள் அதைக் கவனிக்கும் முன், “சீக்கிரம் நேரில் சந்திக்கலாம்… பை,” என்றவன், அவளது பதிலை எதிர்பார்க்காமல் கால் கட் செய்தான்.
 
Top Bottom