• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஒரு பார்வையிலே என்னை வீழத்திவிட்டாய் - 27

நிதனிபிரபு

Administrator
Staff member
பார்வை 27

அதிகாலை மங்கலான வெளிச்சத்தில் கார் கோவை நகரத்தில் நுழைந்தது.

நீண்ட பயணத்தின் சோர்வும், சொல்லாத எண்ணங்களும் இருவருக்கும் இடையே ஒரு அமைதியை உருவாக்கியிருந்தது.

அவ்வமைதியா கலைக்கும் வண்ணம்,“ மது.. வந்துட்டோம்…” என்று அவன் மெதுவாக சொன்னான்.

அவனது குரலில் கண்விழித்தவள் ,அமைதியாக தலைஅசைத்தாள். அவள் ஒருவித குழப்பமான மனநிலையில் இருந்தாள்.

மதுமதியை அவளது இடத்தில் விட்டவன் அவளையே பார்க்க காரைவிட்டு இறங்கி மெல்ல நடந்தவள் ஒரு கணம் நின்று அவனை திரும்பி பார்த்தாள்.

அவன் என்ன என்று கேக்க

ஒன்றும் இல்லை என்றவள் மீண்டும் வேக எட்டுக்களுடன் நடந்து அவன் கண்பார்வையில் இருந்து மறைந்திருதாள் .

அங்கிருந்து ஒருவித தடுமாற்றமான மனநிலையிலேயே காரை செலுத்தினான்.அவள் என்ன நினைக்கிறாள் என்று அக்கணம் அவனால் கணிக்க முடியவில்லை. கார் மெதுவாக வசீகரனின் வீட்டின் முன் நின்றது.

.வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்றபோது, ஹாலில் இருந்த குசனில் தலையை சாய்த்தபடி அமர்ந்திருந்தார் மீனாட்சி.

அவன் வந்த அரவம் உணர்ந்து கண் விழித்தவர் “வந்துட்டிங்களா பா?” என்று மென்மையாக கேட்டார்.

“ஆமா அம்மா,” என்றான் வசீகரன்.ஏன்மா இங்கே தூங்கறீங்க என்றான் கனிவுடன்.

சும்மா தான் வசீ என்றவறது பார்வை ஒரு கணம் மதுமதியைத் தேட அதனை உணர்ந்தவன் மதுவ விட்டுட்டு தான் வரேன் மா என்றவனை பார்த்தவர்

“நீ இங்க வா வசீ, உட்காரு… எனக்கு கொஞ்சம் பேசணும்,” என்றார் அமைதியாக.

இப்பவா மா என்று வசீகரன் சற்றே ஆச்சரியமாக அமர்ந்தான்.

மீனாட்சி மெதுவாக பேச ஆரம்பித்தார்.

“வசீ… ஒரு விஷயம் நான் கேக்கணும்… என்றவர் கேட்ட கேள்வியில் அவன் திடுக்கிட்டுப் பார்த்தான்.

நீயும் மதுவும் முன்பே ஒருவரை ஒருவர் தெரிந்தவர்கள்தானே?” என்று மீனாட்சி கேக்க அவன் ஒரு திடுகிடலுடன் ,

“அம்மா… அது…” என்று வசீகரன் ஆரம்பிக்க,

“எனக்கு எல்லாம் தெரியும்,” என்று மீனாட்சி மெதுவாகச் சொன்னார்.

நேற்று மோகன் வந்தான், என்றவரையே அசையாமல் பார்த்துகொண்டிருந்தவனுக்கு மோகன் மாமாவின் மூலம் அம்மாவுக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்பது புரிந்தது.

எனக்கு உங்க ரெண்டு பேர் மீதும் கொஞ்ச நாளாகவே சந்தேகம் இருந்தது, அதுதான் நேற்று மோகனை வர சொல்லி இருந்தேன். “நீங்க ஒருத்தரை ஒருத்தர் பார்க்கிற பார்வை… பேசுற விதம்… அதை நீங்க மறைக்க நினைச்சாலும் ஒரு அம்மாவா எனக்கு தெரியாம போகாது கண்ணா.” என்றவர் அவனை பார்த்து மெதுவாக புன்னகைத்தார்..

“நீ மதுவ காதலிக்கிறாயா வசீ… என்று அவர் கேக்க

வசீகரன் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.

பிறகு ஒரு நெடிய மூச்சுடன் மெதுவாக,
“ஆம் என்று தலையசைத்தவன் விழிகளில் தவிப்புடன் .. அம்மா… நாங்க ஒருகாலத்தில்…” என்று சொல்லி நிறுத்தினான்.
அதற்கு மேல் சொல்ல அவனுக்கே வார்த்தைகள் கிடைக்கவில்லை. மெதுவாக அவனது அன்னையின் மடிசாய்ந்தான்.
அவளுக்கு நான் வேண்டாமா மா என்றவன் குரல் கலங்கி இருந்தது . அவனின் கலகத்தை உணர்ந்தவர் அவனது தலையை மெதுவாக வருடி விட்டார் . அன்னையின் ஆறுதலில் அன்று முதல் இன்று வரை நடந்த அனைத்தையும் அவன் சொல்ல சொல்ல அவருக்கு மகனின் மீதான தவறும் புரிந்தது. மதுமதியின் நிலையும் புரிந்தது

.மகனின் பேச்சில் ஒன்று மட்டும் உணர்ந்து கொண்டார். இருவரிடமும் இன்றும் ஒருவர் மீது இன்னொருவர் கொண்ட அன்பு மாறவில்லை. மதுமதிக்கு மகனின் மீது கோவமும் வருத்தமும் மிகுந்திருப்பதை அவரும் புரிந்துகொண்டார்.ஆனால் மாகனால் வேறு ஒருவளை கற்பனையிலும் தன் மனதால் நினைக்க முடியாது என்பதையும் அறிந்துகொண்டார். இன்றளவும் திருமண பேச்சை எடுத்தால் பிடிகொடுக்காமல் இருக்கும் அவனின் நிலையே அதற்க்கு சான்று. மதுமதியும் அவனை பிரிந்து சந்தோஷமாக இருப்பதாக தெரியவில்லை.

அதனால் அவரது மனதில் உறுதியாக ஒரு முடிவு எடுத்திருந்தார்.

.......................................

. மதுமதி திருநெல்வேலி சென்று வந்ததிலிருந்தே அவளது மனதில் ஒரே சஞ்சலம் இருந்தது. வசீகரன் நிச்சயமாக அவளை விட மாட்டான் என்பதை இந்த சில நாட்களில் அவள் உணர்ந்து கொண்டாள் தான். . ஆனால் அதை ஏற்றுக் கொள்வதா, வேண்டாமா என்று அவளது மனதில் பெரும் போராட்டம் நடந்து கொண்டிருந்தது.

அவன் பேசியவற்றை அவளால் மறக்க முடியவில்லை. அன்று ஆசிரமத்தில் கூட அவளை சீண்டுவதற்காகத்தான் அவன் சொன்னான். ஆனால் அது அவளுக்கு, அவன் இன்றுவரை மாறாமல் அதே மனநிலையில் உள்ளான் என்றே அவளை நினைக்க வைத்தது.

அவன் இல்லாமல் அவளுக்கு வாழ்க்கையே இல்லை. ஆனால் அவனுடன் இருக்கும் வாழ்க்கை அவளுக்கு நிம்மதி தருமா என்ற சந்தேகம் அவளது மனதை வாட்டியது.

சிறிது நேரம் யோசித்தவள், தனது உற்ற தோழன் சித்தார்த்துக்கு அழைத்தாள்.

மறுமுனையில்,
“சொல்லு மது… எங்கே இருக்க? என்ன திடீர்னு?” என்றான் சித்தார்த்.

“சித்… நீ இப்போ எங்கே இருக்க? நான் நம்ம வழக்கமாக போற காபி ஷாப்புக்கு கிட்ட இருக்கேன். வரியா? கொஞ்சம் உன்னோட பேசணும்.”

“அங்கேயா? இரு. அதுக்கு பக்கத்தில்தான் நானும் இருக்கேன். ஒரு பத்து நிமிஷத்தில் வந்துடறேன்.”

அவனிடம் பேசிவிட்டு அலைபேசியை அணைத்தவள், வெறித்த பார்வையுடன் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஹாய் மது! ஏன் டி கூப்பிட்ட?” என்று சொல்லிக்கொண்டே சித்தார்த் அவளுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

“சும்மாதான் டா…”

“சும்மாவா?” புருவத்தை சுருக்கி அவளை பார்த்தவன்,
“சும்மா நீ என்னை கூப்பிட மாட்டியே,” என்றான் அவளை நன்றாக அறிந்தவனாக.

“அது… கொஞ்சம் டிஸ்டர்ப்பா இருந்தேன். அதான் உன்னிடம் பேசலாம்னு…”

“என்னடி இப்படி தயங்குற? அப்படி என்னதான் ஆச்சு?” என்றவனின் அழுத்தமான பார்வையில் , அவள் தலை குனிந்தபடி சொன்னாள்.

“உன் சீனியர் திரும்ப வந்துட்டார் டா…”

“யாரு? வசீ அண்ணாவா?” என்றவனின் குரலில் ஆச்சரியம் மிகுந்திருந்தது.

ஒரு பெருமூச்சு விட்டவள், “ஆமாம்…” என்றாள்.

“என்னடி சொல்ற? எப்ப பார்த்த? எங்க பார்த்த?” என்று சந்தோஷமாக கேட்டான்.

தோழியை நன்றாக அறிந்தவன். அவள் வசீகரனைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டாள் என்பது அவனுக்கு தெரியும். அதே சமயம் இருவருக்குள்ளும் ஏதோ ஒரு பெரிய பிரச்சனை நடந்திருக்கிறது; அதனால்தான் இந்தப் பிரிவு என்பதையும் ஒருவாறு அறிந்திருந்தான். ஆனால் அது என்ன பிரச்சனை என்பது அவனுக்கு இன்றளவும் தெரியவில்லை. அவனால்தான் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது என்பதையும் அவன் அறியவில்லை.

“ரெண்டு மாதம் இருக்கும்… கோர்ட் கிட்ட பார்த்தேன். ஒரு திருப்பத்தில் எங்க ரெண்டு பேரோட வண்டியும் மோதிக்கிட்டது. அன்னைக்கு எதுவும் பேசல. அப்புறம் நான் வழக்கமாக போவேன் இல்ல, ‘கருணை இல்லம்’… அந்த ஆசிரமம். … அங்கே வச்சுதான். அன்னைக்கு கூட என் வண்டி பஞ்சர் ஆச்சுன்னு சொல்லி உன்னை கூப்பிட்டேன்ல… அன்னைக்கு வந்து பேசினார். ஆனா நான் பெருசா பேசிக்கல.”

“ஒரு மாதம் இருக்குமின்னு நினைக்கிறேன் எனக்கு கால் பண்ணியிருந்தார். அது அவரோட நம்பர் என்று எனக்கு தெரியல. பேசின பிறகுதான் தெரிஞ்சது. தெரிஞ்சிருந்தா எடுத்திருக்கவே மாட்டேன்.

என்னவோ,எங்களுக்குள்ள எதுவுமே நடக்காத மாதிரி பேசினார். நடந்ததுக்கு ஈசியா சாரி கேட்டார். ஆனா எனக்கு தான் மனசு ஏத்துக்க முடியல. அவர் என்னவெல்லாம் பேசினார்… அது என்னால ஜீரணிக்கவே முடியல சித்… இப்போ வரைக்கும்…” என்று சொல்லியவள் கண்கள் கலங்கின.

பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த சித்தார்த் இப்போது,
“அப்படி என்னதான் டி உங்களுக்குள்ள நடந்துச்சு? என்கிட்ட நீ சொல்லவே இல்ல. நானும் நீ வருத்தப்படுவேன்னு எதுவும் கேக்கல. இப்பவாவது சொல்லு,” என்றான்.

அவனை வருத்தமாக பார்த்தாள் மதுமதி.

“வேண்டாம் டா… நீ ரொம்ப வருத்தப்படுவ.”

“ஏன்?” என்றான் அவன்.

“எங்களுக்குள்ள சண்டை வந்ததே உன்னை வைத்துத்தான் டா…”

“என்னை வைத்தா?” அவனுக்கு புரியவில்லை. மனது திக் என்றானது.
“ஏய்… ச்சி… புரியிற மாதிரி சொல்லு.”

அவன் மனம் புண்படுமோ என்று அவள் தயங்கினாள்.

அவளது கலக்கம் உணர்ந்து “என்னடி.. எதுனாலும் சொல்லு சரி பண்ண முடியாததுன்னு எதுவுமே இல்ல புரியுதா?”, என்று ஆதூரமாக கேட்டான்.

“உனக்கு நான் கொடுக்கிற முக்கியத்துவம்தான் எங்களுக்குள்ள பிரச்சனை வர முதல் காரணம் . அவருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உனக்கு கொடுக்கிறேன்னு அவர் நினைக்கிறார்.”

என்ன என்று அதிர்ந்தவன்,நான் என்ன செய்தேன் என்று பெரும் குழப்பம், அவனுக்கு எதுவும் புரியவில்லை இருபினும் அவன் அவளின் பேச்சில் எதுவும் குறுகிடாமல் பார்த்தான்.

“நீயே சொல்லு… எனக்கு நீயும் முக்கியம். அவரும் முக்கியம். அது ஏன் டா அவருக்கு புரியல…” என்று சொன்னவள் குரல் கரகரத்தது.

அவன் அவளையே வருத்ததுடன் பார்த்தான்.

“இப்போது அவர்களுக்குள் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் அவனிடம் சொன்னால்… ஒரு நாள் ரொம்ப பேசிட்டார்டா. எனக்கும் தாங்க முடியல. நானும் ‘நீ தான் எனக்கு முக்கியம்’ என்று சொல்லிட்டேன். அவருக்கு ரொம்ப கோபம் ஆயிருச்சு. அப்போ ‘என்னை விட உனக்கு அவன்தான் முக்கியமா?’ அப்படின்னு அவர் என்னைத் திருப்பி கேட்டதுக்குப் பிறகுதான் எனக்கும் அப்படி சொல்லி இருக்கக் கூடாதுன்னு தோணுச்சு.

சொன்ன வார்த்தையை திருப்பி எடுக்க முடியாது தான். நான் அப்படி எல்லாம் பொய் சொல்லி இருக்கக் கூடாது தான்,” என்றவளை என்ன செய்தால் தகும் என்று பார்த்தான் சித்தார்த்.

“ஏண்டி அறிவுக் கொழுந்தே! நம்மளை காதலிக்கிறவங்க கிட்ட, அதுவும் அவர் உன்மேல் அவ்வளவு பொசசிவ்வா இருக்கிறார் என்று தெரிஞ்சுக்கிட்டே, ‘நான்தான் முக்கியம்’ன்னு சொன்னா அவருக்கு கோபம் வராதா?”

“இல்லடா… நானும் சாரி கேக்க நிறைய முயற்சி பண்ணேன். ஆனா அதுக்கப்புறம் பேசுனது என்னால தாங்கவே முடியல. என்னென்னமோ பேசினார். எனக்கு மனசு விட்டு போச்சு. இப்படி ஒரு காதல் நமக்கு தேவையா என்ற அளவுக்கு. அதான் நானும் வேண்டாம் என்று வந்துட்டேன். அவரும் ‘என்னை வேண்டாம்’ன்னு சொல்லித்தான் போனார். இப்ப என்ன புதுசா திடீர்னு ஆரம்பிக்கிறார்னு எனக்கு புரியல. அதுவும் சித்து… அவர்தான் என் எம்.டி,” என்று அவள் சொல்ல,

அவன் அவளை அப்பட்டமாக முறைத்துக் கொண்டிருந்தான்.

“அது எனக்கு இப்ப கொஞ்ச நாளாதான் தெரியும்,” என்றவள் சொல்ல, அவன் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.

“டேய், நீ ஏன் இப்படி இருக்க?” என்று மதுமதி கேட்க,

“வேற எப்படி இருக்க சொல்ற? இவ்வளவு நடந்து இருக்கு. என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னையா? நீ அப்பவே சொல்லி இருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது.

மது, உனக்கு புரியுதா நீ என்ன பண்ணி வைத்திருக்கேன்னு? அவர் பண்ணது தப்புதான். பேசுனதும் தப்புதான். உன்னிடம் நடந்துகிட்ட முறை கூட ரொம்ப தப்புதான். ஆனா அதிலிருந்தே உனக்கு புரியலையா? அவருக்கு நீ மட்டுமே முக்கியமா இருக்கிற மாதிரி, உனக்கும் அவர் மட்டுமே முக்கியமா இருக்கணும்னு எதிர்பார்த்திருக்கார். அந்த ஏமாற்றத்தில்தான் உன்னிடம் ஏதேதோ பேசியிருக்கார்.

ஆனா நீ ஒவ்வொரு முறை அவர் கூப்பிடும்போதும், என்னை சொல்லிக்கிட்டு அவர்கூட போகாமல் இருந்திருக்க. அப்போ அவர் ‘நீ அவரை அவாய்டு பண்ணுற’ன்னு நினைக்க மாட்டாரா? இப்படி பண்ணா அவருக்கு கோபம் வரத்தான் செய்யும். அதோடு பொய் சொல்லியும் இருக்கே. ஏன் இப்படி பண்ண மது?

ஒண்ணு சொல்லு… அவருக்கு இதே மாதிரி ஒரு பெண் நண்பி இருந்து, நீ அவர்கிட்ட நடந்த போல அவர் உன்கிட்ட நடந்திருந்தா ,‘உன்னை விட அவள்தான் முக்கியம்’ன்னு சொல்லியிருந்தா உனக்கு எப்படி இருந்திருக்கும் ? யோசிக்க மாட்டியா நீ ?”

“சரிடா… அப்ப அவர் பேசினது எல்லாம் கரெக்டா?”

“நான் அப்படி சொல்லல. அவர் பண்ணது தப்புதான். அவர் உங்களுக்குள்ள என்னைக் கொண்டு வந்திருக்கக் கூடாது. ஏன் கொண்டு வந்தார் என்று எனக்கு தெரியல. அதுக்கு காரணம் உன்னோட பிஹேவியராக கூட இருக்கலாம். இருந்தாலும் நான் உன்னிடம் அவ்வளவு க்ளோசா நடந்துகிட்டேனா?”

“சரி விடு. இப்ப என்ன முடிவு பண்ணப் போற?”

“எனக்கு தெரியல டா. அதனால தான் உன்னை கூப்பிட்டேன்.”

“அன்னைக்கு பேசினார் என்று சொன்னே. என்ன சொன்னாரு?” என்று கேட்டவனிடம்,

“சாரி கேட்டாரு டா. ‘திட்டுறதானாலும், அடிக்குறதானாலும், என்ன பண்ணுறதானாலும்—எதுவாக இருந்தாலும்—அவர் கூடவே இருந்து பண்ணணும்’ன்னு சொன்னாரு,” என்றாள்.

“அதுக்கு நீ என்ன சொன்ன?” என்றான் சித்தார்த்.

“நான் ‘முடியாது. எனக்கு நீங்க வேண்டாம். எனக்கு உங்களை பிடிக்கல. என்கிட்ட பேசாதீங்க’ன்னு திட்டிவிட்டேன். ‘நீங்க பேசுனதெல்லாம் மறக்க முடியாது’ன்னு சொன்னேன்.”

அவள் நடந்ததை எல்லாம் சொல்லிக்கொண்டிருக்க, அவள் கேட்ட கேள்விகளும் அதற்கு வசீகரன் சொன்னதாக கூறிய பதிலைக் கேட்ட சித்தார்த் சிரித்து விட்டான்.

“மனுசன் ரொம்பத்தான் இறங்கிட்டார்,” என்று நினைத்தான். அவனை நன்றாக அறிந்தவனாக, அவன் எவ்வளவு கோபக்காரன், அதே சமயம் எவ்வளவு கெத்தானவன், அவனது ஆளுமை அனைத்தையும் அறிந்தவன். ஆனாலும் இந்த காதல் யாரையும் வளைக்கக் கூடியது என்று எண்ணிக்கொண்டான். வசீகரன் பேசியதற்காக கொஞ்சமாவது அனுபவிக்கட்டும் என்று நினைத்தான்.

“சரி, இப்ப சொல்லு… உன் மனசுக்கு என்ன தோணுது? அவர் ஓகேன்னு தோணுதா? இல்ல அவர் வேண்டாம், வேற வாழ்க்கை…” என்று அவன் சொல்ல,

அவள் குறுக்கிட்டு,

“என்னால வேற யாரையும் லைஃப்ல யோசிக்க முடியாது சித். பெரியம்மா மாதிரி,” என்றாள் உறுதியாக.

“உன்னை என்ன பண்ணுறது மது? அதுக்கெல்லாம் மாமா உன்னை விடுவாங்கன்னு நினைக்கிறியா? நோ மது… கண்டிப்பா மாமா உன்னை தனியா இருக்க விட மாட்டாங்க. வசீ அண்ணா இல்லன்னா இன்னொருத்தர் கண்டிப்பா உன் லைஃப்ல இருப்பார்.

அது உன்னால முடியும்னா, ஆல்ரெடி நீ கடந்து வந்திருப்ப. ஆனா அவரைத் தவிர வேற ஒருத்தர் உன் லைஃப்ல வந்தா உனக்கு ஓகேன்னு ஃபீல் ஆனா, நீ அவர்கிட்ட ‘வேண்டாம்’ன்னு சொல்லிடு.

ஆனா அவரைத் தவிர வேற யாரையும் யோசிக்க முடியாதுன்னு நினைச்சா, அவரோட தவறுகளை நீ மன்னிச்சுதான் ஆகணும். அவர் சொன்ன மாதிரி கூட இருந்து சண்டை போடுவியோ, அடிப்பையோ—அதையும் கூட இருந்து பண்ணிக்கோ. நீ எடுக்கிற முடிவு அவருக்கு தண்டனையா இருந்தாலும், உனக்கும் வலிக்கும். அவருக்கு தண்டனை தரதா நினைச்சா, உனக்கும் அது தண்டனைதான். ரெண்டு பேருக்கும் வலி தரும் முடிவை நீ எடுத்துறாதே.

உன் சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம்,” என்று அவளின் தலையில் தனது கையில் இருந்த பேப்பர் சுருளால் தட்டி சிரித்தான்.

அவனது செய்கையில் அவளும் புன்னகையுடன் ஆமோதிப்பாக தலையசைத்தாள்.
 
Top Bottom