ஒரு பார்வையிலே என்னை வீழ்த்தி விட்டாய் - எபிலாக் ( இறுதி அத்தியாயம் )

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,549
6,389
113
எபிலாக்
கன்னம் சுருங்கிட
நீயும் மீசை நரைத்திட
நானும் வாழ்வின் கரைகளைக்
காணும் காலம் அருகினில் தானோ
கண் மூடிடும்
அவ்வேளையும் உன்
கண்ணில் இன்பங்கள்
காண்பேன்
அன்று மாலை, வசீகரன் அலுவலகத்திலிருந்து திரும்பியபோது வீடு வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்தது. வாசலில் இருந்தே ஒரு மெல்லிய அமைதி அவனைக் வரவேற்றது. மாடிக்குச் சென்று படுக்கையறையின் கதவைத் திறந்தவனுக்கு ஆச்சரியம்! அறை முழுவதும் மெல்லிய நறுமண மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருக்க, பன்னீரும் மல்லிகையும் கலந்த பூக்களின் வாசம் அந்த அறையையே சொர்க்கமாக மாற்றியிருந்தது.
"மது... எங்க இருக்க?"என்று காதலோடு அழைத்தபடி உள்ளே வந்த வசீகரனை, மதுமதி தன் இதழ்களில் தேக்கிய புன்னகையோடு எதிர்கொண்டாள். அவளது முகம் வழக்கத்தை விட இன்று அதிகப் பூரிப்புடனும், ஒரு புதிய பொலிவுடனும் இருப்பதைக் கவனித்தான் வசீகரன்.
சுற்றிலும் பார்த்தவன், "ஆமா... நம்ம பாப்பா ஆர்த்தி எங்கே?"என்றான்
"அத்தையும், மாமாவும் அவளைக் கோவிலுக்குக் கூட்டிட்டுப் போயிருக்காங்க வசீ,"என்றாள் மதுமதி.
"வருண் வந்துட்டானா?"என்று தம்பியைப் பற்றிக் கேட்டான்.
"ம்ம்... அவன் அவனோட ரூமில் இருக்கான்,"என்றவள், தன் விழிகளின் ஆர்ப்பரிப்பில் வசீகரனின் உள்ளுக்குள்ளும் ஒரு சுவாரஸ்யமான உண்டானது.
"என்ன மது... இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? மெழுகுவர்த்தி எல்லாம் வச்சிருக்க ? நம்ம ஃபர்ஸ்ட் வெட்டிங் அனிவர்சரி முடிஞ்சுகூட ஒரு வாரம் ஆச்சே!" என்று அவளது இடுப்பில் கைவளைத்துக் கேட்டான்.
மதுமதி அவனைச் செல்லமாக விலக்கி, அங்கிருந்த சோஃபாவில் அமர வைத்தாள். "எல்லாத்துக்கும் ஒரு நாள் இருக்கணுமா என்ன ? சரி... உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட் வச்சிருக்கேன். முதல்ல கண்ணை மூடிக்கோங்க!" என்றாள் அதட்டலாக.
வசீகரன் மிகுந்த ஆர்வத்துடன் கண்ணை மூடினான். அவனுக்குள் ஏற்கனவே ஒரு மெல்லிய ஊகம் இருந்தது. அவளது பதிலுக்காக அவனது மனமும், இதயத் துடிப்பும் போட்டி போட்டுக் கொண்டு ஆர்ப்பரித்தன.
மதுமதி அவனது விரிந்த கைகளுக்குள் ஒரு சிறிய, அழகிய வெல்வெட் பெட்டியை வைத்தாள். "இப்ப மெதுவா கண்ணைத் திறங்க..." என்றாள்.
வசீகரன் மெதுவாகக் கண்களைத் திறந்து அந்தப் பெட்டியைப் பார்த்தான். உள்ளே... ஒரு ஜோடி மிகச்சிறிய, மென்மையான, வெள்ளை நிறக் குழந்தைகளின் காலணிகள் இருந்தன. அதற்குக் கீழே, இரண்டு அடர் சிவப்பு நிறக் கோடுகளுடன் மின்னிய பிரகனன்சி கிட்ஒன்று இருந்தது!
வசீகரன் அப்படியே உறைந்து போனான். சில நொடிகள் அவனுக்குப் பேச்சே வரவில்லை. அந்தக் குட்டி காலணிகளையும், மதுமதியின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான். அவனது கண்கள் தானாகக் கலங்கின.
"மது... இது... இது உண்மையா?"என்றவனின் குரல் சந்தோஷத்தின் உச்சத்தில் தழுதழுத்தது.
மதுமதி தன் கண்களில் தேங்கிய ஆனந்தக் கண்ணீருடன் மெதுவாகத் தலையசைத்து "ஆமாம்" என்றாள்.
அடுத்த நொடி, வசீகரன் அப்படியே அவளை வாரித் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். அந்த இறுக்கமான அணைப்பில்... அத்தனை வருட காலக் காதலின் தவிப்பும், தங்களுக்குள் வரப்போகும் அந்தப் புதிய உயிருக்கான எல்லையற்ற எதிர்பார்ப்பும், நிறைந்திருந்தது. அவர்களின் தூய்மையான காதலின் சாட்சியாக, அவர்களின் சொந்தக் குருதியில் ஒரு குழந்தை வரப்போகிறது!
அவளது தோள்களிலிருந்து மெல்ல விலக்கியவன், "அம்மாக்கிட்ட சொல்லிட்டாயா மது?"என்றான் ஆவலோட.
அவள் தன் தலையை இடவலமாக அசைத்து, "இல்லை வசீ... உங்ககிட்ட முதல்ல சொல்லிட்டு, அதுக்கப்புறம்தான் அவங்ககிட்ட சொல்லணும்னு இருந்தேன்,"என்றாள் வெட்கத்துடன்.
அவளது மலர்க்கரங்களை அள்ளித் தன் இதழ்களோடு ஒற்றிக் கொண்டவன், "என் வாழ்க்கையையே முழுமையாக்கிட்ட மது... தேங்க்யூ மது... தேங்க்யூ சோ மச்!" என்றான் உணர்ச்சிப் பெருக்கில் அவளது நெற்றியில் முத்தமிட்டபடி.
அன்று இரவு உணவு வேளையின் போது... மீனாட்சி அம்மாள், சொக்கலிங்கம், வருண் மற்றும் குட்டி ஆர்த்தி என அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க, கணவன் மனைவி இருவரும் அங்கே வந்தனர்.
மதுமதியின் முகத்தில் இருந்த அசாத்திய மலர்ச்சியையும், நாணத்தையும் பார்த்த மீனாட்சி அம்மாள், "என்ன மது... முகம் இவ்வளவு பிரகாசமா இருக்கு? என்ன விஷயம்?"என்றார் முகத்தை உற்று நோக்கி.
"அத்தை... அது வந்து..." என்று மதுமதி தயங்கித் தன் கணவனைப் பார்க்க,
வசீகரன் அவளின் கையை இறுக்கமாகப் பற்றியபடி, "நீங்க திரும்பவும் தாத்தா பாட்டி ஆகப்போறீங்கம்மா!" என்றான் தன் மலர்ந்த முகத்துடன் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் பார்த்து.
"அப்படியாடா...!" என்று மீனாட்சி அம்மாள் மகிழ்ச்சியில் எழுந்து வந்து, தன் மருமகளை அப்படியே அள்ளி அணைத்துக் கொண்டார். அவளது நெற்றியில் முத்தமிட்டுத் தன் சந்தோஷத்தைக் வெளிப்படுத்தினார்.
சொக்கலிங்கமும் எழுந்து வந்து, "ரொம்ப சந்தோஷம்பா..." என்று தன் மகனின் தோள்களைத் தழுவி மகிழ்ந்தார்.
வருண் உற்சாகமாகத் துள்ளிக்குதித்து, "வாழ்த்துகள் அண்ணா! வாழ்த்துகள் அண்ணி!" என்று தன் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தான்.
ஆம், வருண் இப்போது எல்லாம் மதுமதியை 'அண்ணி'என்றுதான் உரிமையோடு அழைக்கிறான். மதுமதி "வேண்டாம் வருண், மதுனே கூப்பிடு" என்று மறுத்ததற்குக்கூட, "எங்க வீட்டு ராஜமாதாவின் (மீனாட்சி) ஆணை... அதை நான் மீற மாட்டேன்!" என்று விளையாட்டாகக் கூறிவிட்டான்.
அப்போதே மதுமதியின் பெற்றோருக்குத் தொலைபேசி மூலம் இந்த இன்பச் செய்தி பகிரப்பட்ட, மறுமுனையில் விஷயத்தைக் கேட்டதும் மதுமதியின் தந்தை கணேச மூர்த்திக்கு சந்தோஷத்தில் பேச்சே வரவில்லை. "நான் உடனே கிளம்பி வர்றேன் மதுமா ..." என்று தழுதழுத்த குரலில் கூறியவர், அடுத்த நாளே தன் மனைவியுடன் மகனுடனும் வசீகரனின் வீட்டிற்கு நேரில் வந்து இறங்கினார்!
வாசலிலேயே அவர்களை வரவேற்ற வசீகரனின் கைகளைப் பிடித்துக்கொண்ட கணேச மூர்த்தி, சந்தோஷத்தில் நெகிழ்ந்திருதார்.
உள்ளே வந்தவர், தன் ஆசை மகள் மதுமதியின் தலையை வாரி அணைத்து, உச்சி முகர்ந்து தன் ஆசீர்வாதங்களை வழங்கினார். " மாடி படி ஏறி இறங்கும் போது பார்த்துப் பத்திரமா இருக்கணும் மா... இனிமே நீ ரொம்ப கவனமா இருக்கணும் " என்று ஒரு தந்தையாக ஏகப்பட்ட ஆரோக்கிய அறிவுரைகளையும், பாசக் கட்டளைகளையும் அள்ளி வீசினார். தன் மகளின் அருகிலேயே அமர்ந்து அவளது கைகளைப் பாசத்தோடு கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். மகளின் முகம் பார்க்கும்போதெல்லாம் அவருக்குள் சந்தோஷம் அலைமோதியது. முகுந்தனும் தனது அக்காவை வாழ்த்தியவன் அருகில் அவனின் காலை கட்டிக்கொண்டு மாமா தூச்சி என்ற ஆர்த்தியை கைகளில் ஏந்திய படி வசீகரன் அருகில் அமர்ந்துவிட்டான். அக்கா மகளிடம் கொஞ்சிக் கொண்டிருந்தவனை,
"ஆமா முகுந்தா... எக்ஸாம்ஸ் எல்லாம் முடிஞ்சதுல? அடுத்து என்ன பிளான் வச்சிருக்க? வேலை விஷயமாக ஏதாவது ட்ரை பண்ணிட்டு இருக்கியா, இல்ல ஹையர் ஸ்டடீஸ் பண்ணப் போறியா?" என்றான் வசீகரன்
எக்ஸாம்ஸ் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதுங்க மாமா. அடுத்து ஒரு நல்ல கம்பெனில வேலை தேடலாம்னுதான் இருக்கேன் மாமா," என்றான் முகுந்தன்.
"பிஜி பண்ணலாம் இல்ல?" என்று வசீகரன் சொன்னதும், "அது..." என்று அவன் இழுக்க, "ஏன், உனக்கு ஐடியா இல்லையா?" என்று வசீகரன் கேட்டான் .
"நீங்க என்ன சொல்றீங்களோ, அப்படியே பண்ணிக்கலாம் மாமா!" என்றான் முகுந்தன்.
"சரி, ஒரு டூ த்ரீ டேஸ் போகட்டும், என்ன பண்ணலாம்னு சொல்றேன்," என்றவன் எழுந்து சென்றான் .
இவர்கள் பேசுவதை தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருக்கும் வருணுக்கு, சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது. 'இப்போதே வெடிச்சு சிரிச்சிருவேன்' என்பது போல உதட்டைக் கடித்துக்கொண்டு, தன் இரண்டு கைகளாலும் வாயைப் பொத்திக்கொண்டு மெதுவாக முகுந்தன் அருகில் வந்தான்.
சற்று முன்புதான் முகுந்தன் வருணிடம் தனியாக வந்து, "டேய் வருண்..மச்சான் .. .பார்த்தியா, நான் தாய்மாமன் . நீ என்ன இருந்தாலும் வெறும் சித்தப்பாதான், புரியுதா?" என்று காலரைத் தூக்கிவிட்டு கெத்து காட்டியிருந்தான். அப்படிப்பட்டவன், அண்ணன் முன்னாடி 'பூனைக்குட்டி' போல நிற்பதைப் பார்த்து வருணால் சிரிப்பைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
வசீகரன் சற்று உள்ளே சென்றதும், வருண் மெதுவாக முகுந்தன் தோளைத் தட்டினான். அதற்குள் ஆர்த்தி அவனிடம் இருந்து நழுவி தாத்தா என்று சொல்லி கொண்டு கணேசமூர்த்தியிடம் சென்றாள். அவரும் அவளை என் தங்கமே என்று அள்ளி கொண்டார்.
இங்கே வருண்,மிஸ்டர் தாய்மாமன்' முகுந்தன் அவர்களே! அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி என்கிட்ட வந்து, 'நான் தாய்மாமன்பா, என் கெத்தே தனி' அப்படின்னு காலரைத் தூக்கிட்டு சீன் போட்டியே? இப்போ அண்ணன் கிட்ட என்ன அவ்வளவு பவ்யம்? 'ஆமாங்க மாமா, சரிங்க மாமா'னு வாய்க்கு வாய் உருகிட்டு இருக்க? எங்கடா போச்சு உன் தாய்மாமன் கெத்து?!"என்றான்.
முகுந்தன் பதறிப்போய் வருணின் வாயைப் பொத்தி, சுற்றிலும் பார்த்து, "டேய், மெதுவாப் பேசுடா! உங்க அண்ணன் காதுல விழுந்திடப் போகுது. மிஸ்டர் ஆங்கிரி பேர்ட்கிட்ட (Angry Bird) என்னைக் கோர்த்து விட்டுறாத!" என்றான்.
"ஏதே... ஆங்கிரி பேர்டா? இரு..." என்று அவன் எழப் பார்க்க, "மச்சான், நீயும் நானும் அப்படியா பழகினோம்?" என்று முகத்தைப் பாவமாக வைத்தவன், "டேய், மீ பாவம்டா!" என்றிட, வருண் சிரித்துவிட்டான்.
"அவர் என் அக்கா புருஷன்டா அதுவும் இல்லாம அவர் விட்டாலும் எங்க வீட்டு ஏலியன் என்னை சும்மா விட மாட்டா என்றான் மதுமதியையும்.. ஆனா, உன்கிட்ட நான் அப்படி இருக்க முடியுமா மச்சான்? உன்கிட்ட சும்மா விளையாடினேன். நீ வேற நான் வேறையா?" என்று அவன் தோளில் கைபோட , எப்பா டேய் இது உலக மகா நடிப்புடா சாமி என்று அவனை கேலி செய்து, இருவரும் பேசியபடியே வெளியே சென்றனர்.
பெரியவர்களின் இந்த அளப்பரிய சந்தோஷப் பேச்சுகளிலிருந்து தனக்கு ஏதோ புரிய குட்டி ஆர்த்தி, மெல்லத் தத்தி தத்தி நடந்து மதுமதியிடம் வந்தாள். அவளது புடவையை இழுத்து, "அம்மா... விளையாட எனக்குப் பாப்பா வரப் போகுதா?"என்று தன் மழலை மாறா மொழியில் கேட்க, மதுமதியின் நெஞ்சம் உருகியது.
"ஆமாடா என் செல்லம்..." என்று அவளை அள்ளித் தன் மடியில் அமர்த்தி அணைத்துக் கொண்டாள் மதுமதி.
உடனே ஆர்த்தி குட்டி வசீகரனைப் பார்த்து, "அப்பு... அப்போ நான் அக்கா...!" என்று பெருமையாகக் கூற,பெரியவர்கள் அனைவருக்கும் அந்த குட்டி தேவதையின் மழலை மொழியில் மகிழ்ச்சியில் பூரித்தனர்.
"ஆமா செல்லம்! நீதான் இனிமே இந்த வீட்டுக்கு பெரிய அக்கா குட்டி,"என்று வசீகரனும் அவளைத் தூக்கித் தன் மார்போடு அணைத்துக் கொஞ்சினான். அந்த வான்மதியின் (வசுந்தராவின்) மகளான ஆர்த்தி, அவர்களின் முதல் மகளாகப் பாசத்தோடு அக்காள் அரியாசனத்தில் அமர்ந்தாள்.
அன்று இரவு... அந்தப் பெரிய கட்டிலில் வசீகரன் நடுவில் படுத்திருக்க, ஆர்த்தி அவனது இடதுபுற கைகளுக்குள்ளும், மதுமதி அவனது வலதுபுற கைகளுக்குள்ளும் தஞ்சமடைந்திருந்தனர். வசீகரன் மதுமதியை அணைத்திருப்பதை ஆர்த்தி பார்த்தாள். உடனே, வசீகரனின் மார்பின் மீது தன் தலை வைத்து, அவனது முகத்தைத் தன் பக்கம் திருப்பிக்கொண்டு தூங்க முயன்றாள் ஆர்த்தி.
அவளது இந்தச் செய்கையைக் கண்டு மதுமதிக்குச் சிரிப்பு வந்தது. "இவ ஒருத்தி... எனக்குப் போட்டிக்குன்னே வருவா!" என்று பொய் கோபத்துடன் ஆர்த்தியை வம்புக்கு இழுத்தாள்.
உடனே ஆர்த்தி, "என் அப்பு..." என்று அவனை யாருக்கும் தரமாட்டேன் என்பது போல இன்னும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள்.
மதுமதி அவளை வேண்டும் என்றே மேலும் சீண்ட நினைத்து, "சரி, குட்டிப் பாப்பா வந்தா கூட உங்க அப்பாவைத் தர மாட்டியா?"என்று கேட்டாள்.
அதற்கு ஆர்த்தி சற்றும் யோசிக்காமல், "தருவேன்... பாப்பாவுக்கு, குட்டிப் பாப்பாவுக்கு அப்பா!" என்று மழலையாகச் சொல்ல, அவளது பதிலில் இருவரது முகங்களிலும் புன்னகை நிறைந்தது.
மதுமதி மீண்டும் அவளைச் சீண்டும் விதமாக, "இங்க பாரு வசி, யார் வந்தாலும் இந்தப் பக்க ஷோல்டர் எனக்குத்தான்!" என்று உரிமைப் போராட்டம் நடத்த, ஆர்த்தி சட்டென்று உதட்டைப் பிதுக்கினாள். அவளை அப்படிப் பார்க்கவும் மதுமதிக்குத் தாங்க முடியவில்லை.
"சரிடா தங்கம்... அப்பா பாப்பாவுக்குத்தான், போதுமா? அம்மா தள்ளிப் போறேன்..." என்றதும் ஆர்த்தியின் முகம் சுருங்கியது. "அம்மாவா..." என்று பாசமாய் அழைத்தவள், "அம்மாவும் பாப்பாவுக்குத்தான்!" என்று சொல்ல, இருவரின் மனமும் நிறைந்து போனது.
அவனின் இருபுறமும் இரு தேவதைகள் இருக்க, அந்த அறைக்குள் நிலவிய அமைதி முற்றிலும் புதியதொரு அர்த்தத்தைத் தந்திருந்தது. விரைவில் அந்த அறைக்குள் கேட்கப்போகும் இன்னும் ஒரு பிஞ்சு மழலையின் அழுகுரலுக்காகவும், கொஞ்சும் சிரிப்பொலிக்காகவும் அவர்கள் மூவரும் ஒவ்வொரு நொடியும் ஆவலோடு காத்திருந்தனர் . .
காதலால் கட்டுண்ட மனங்கள், எளிதில் அவிழ்க்க முடியாத பேரன்பின் பிணைப்பில் வீற்றிருக்க... அவர்களின் வாழ்க்கை வாழும் அழகியல், தங்களின் இரு தேவதைகளின் (ஆர்த்தி மற்றும் வரப்போகும் பாப்பா) துணையில் இன்னும் பல்லாண்டு காலம், இன்பமும் துன்பமும் கலந்து என்றென்றும் இணைந்து வாழ வேண்டும் என்று நாமும் மனதார வாழ்த்துவோம்!

முற்றும்
 

Author: Vishakini
Article Title: ஒரு பார்வையிலே என்னை வீழ்த்தி விட்டாய் - எபிலாக் ( இறுதி அத்தியாயம் )
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Magizh kutty

Member
May 24, 2026
39
15
8
Chirayinkeezhu
Super story. Vasi madhu love super. Aarthi kutty ku nalla kudumbam kidachathu happy. Vasiyoda nutpu bonding arumai. Vikram enga irunthalum happya irupan. 💐💐💐💖💖💖
 
  • Like
Reactions: STN- 75