• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஒரு பார்வையிலே என்னை வீழ்த்தி விட்டாய் - 36

Vishakini

Moderator
Staff member
பார்வை 37

அன்று மதுமதியின் வீட்டில் மெகந்தி வைக்கும் நிகழ்வு. அவளது தோழிகள் மற்றும் நெருங்கிய சொந்தங்களுடன் ஏற்பாடு செய்திருந்தார் கணேசமூர்த்தி. மதுமதி ஒரு 'பேபி பிங்க்'வண்ண அனார்கலி சுடிதாரில், விரித்து விடப்பட்ட கூந்தலில் சிறிய கிளிப் அணிந்து மல்லிகைச் சரத்தைத் தொங்கவிட்டிருந்தாள். முகத்தில் அதே நிறப் பொட்டு; பார்க்கப் பார்க்க பரிமளாவுக்குத் தெவிட்டவில்லை. திருஷ்டி கழித்தவர், அவள் தண்ணீர் கேட்கவும் அங்கிருந்து சென்றார்.

இன்னொருவனுக்கும் அவளைப் பார்க்கத் தெவிட்டவில்லை. சித்தார்த் செய்த வீடியோ கால் அழைப்பில், வசீகரன் அவளை 'லைவ்'-இல் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் தன் தோழிகளுடன் பேசிச் சிரித்துக் கொண்டிருக்க, ஆடியோ காலுக்கு மாறிய வசீகரன், சித்தார்த்திடம் மெகந்தி போடுபவரிடம் போனைத் தரச் சொன்னான்.

மெகந்தி போடுபவரிடம் சித்தார்த் அலைபேசியைத் தர, அவர் "என்னவென்று?"கேட்டார்.

"மாப்பிள்ளைக்கு உங்ககிட்ட பேசணுமாம்,"என்று சித்தார்த் சொல்ல, அவரும் போனை வாங்கினார்.

மது "என்ன?"என்று சித்தார்த்திடம் புருவம் உயர்த்திக் கேட்க, சித்தார்த் "தெரியவில்லை" என்று உதடு பிதுக்கினான்.

வசீகரன், "ஹலோ" என்றதும், அந்தப் பெண்மணி "சொல்லுங்க சார்" என்றார்.

"சிஸ்டர், நான் சொல்ற டிசைன் மதுவுக்குத் தெரியாமல் அவள் கையில் போடணும்.

அவளோட நாடித்துடிப்பு (Pulse) தெரியுற அந்த மணிக்கட்டுல, ஒரு சின்ன இதயம் வரைஞ்சு அதுக்குள்ள 'உயிர்'அப்படின்னு எழுதுங்க. அவ துடிக்கிற ஒவ்வொரு நொடியும் நான் அவ கூடவே அவளோட உயிரா இருப்பேன்னு அவளுக்கு உணர்த்தணும். அவள் நாடியின் இதயமா நான் எப்பவும் இருக்கணும்னு ஆசை. அது அவளுக்குத் தெரியாத மாதிரி ரகசியமா இருக்கட்டும்,"என்றான்.

"சரிங்க சார்,"என்றார் அவர் புன்னகையுடன். அவர் மீண்டும் மொபைலை சித்துவிடம் தர, மதுமதி என்னவென்று கேட்டாள்.

"அது... கை நிறைய மருதாணி போடச் சொன்னார். உங்க கை சிவப்பா இருக்கிறதை வச்சு, அவருக்கு உங்க மேல எவ்வளவு அன்புன்னு உங்களுக்குத் தெரிஞ்சிடுமாம்,"என்று அவர் அவளைக் கேலி செய்ய, "இவனை...!" என்று மனதுக்குள் எண்ணியவள், முகச் சிவப்பை மறைக்கப் படாதபாடுபட்டாள்.

"அச்சோ மது, எவ்வளவு வெட்கம்!" என்று அவர் கேட்க, "போங்கக்கா,"என்று புன்னகைத்தாள்.

அன்றைய நாள் தந்த சுகமான நினைவுகளுடன் வந்து மெத்தையில் விழுந்தவளுக்கு, அலைபேசியில் குறுந்தகவல் ஒன்று வந்தது. அனுப்பி இருப்பவனின் பெயரைப் பார்த்ததும் அவள் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

திறந்து பார்த்தால், "2 மோர் டேஸ் டூ கோ "என்று அனுப்பியிருந்தான். என்ன சொல்ல வருகிறான் என்று தெரிந்திருந்தும், "எதற்கு?"என்று பதில் அனுப்பினாள்.

அவன் அனுப்பிய பதிலில் அவளுக்கு 'அச்சோ'என்றானது. மீண்டும் அவனிடம் இருந்து இன்னொரு குறுந்தகவல்: "என்ன பதிலைக் காணோம்?"

என்ன சொல்ல? இதுபோல அந்தரங்கமாக இதுவரை பேசியதில்லை. இன்று அவன் கேட்கவும் அவளுக்குக் கூச்சத்தில் வாய் எழவில்லை. "மது..." என்றவன் குரலின் குழைவு அவளை என்னவோ செய்தது.

வேறு என்ன சொல்வதென்று தெரியாமல், "சொல்லுங்க,"என்று இவள் பதில் அனுப்ப,

"என்ன சொல்லச் சொல்ற? எனக்கு இப்பவே நீ வேணும் போல இருக்கு மது. மை ஸ்வீட் டெம்ப்டேஷன்..."என்றவன் உஷ்ண மூச்சை வெளியிட்டான்.
அவள் மௌனம் காக்க’

"ஏய் பொண்டாட்டி... ஏதாவது சொல்லுடி,"என்றான் அவன்.

"என்ன... பொண்டாட்டியா?"அவள் அதிர, "என்ன ஜெர்க் ஆகுற? இன்னும் ரெண்டு நாள்ல அப்படிதானே?"என்றான் அவன் குறும்பு சிரிப்புடன்.

"ம்ம்..." என்றாள் அவள்.

"என்ன 'ம்ம்'? ஒரு எழுத்துல பேசுற? நாம என்ன வார்த்தை விளையாட்டா விளையாடுறோம்? ஏதாவது ரொமான்டிக்கா பேசுடி!"

"வசீ... என்ன பேசறது? எனக்குத் தெரியலை,"என்றாள் தடுமாறி.

"சரி, என்னை எப்போ மாமான்னு கூப்பிடப் போற?"

"மாமாவா...?"

"அது சரி, நான் உன் அத்தை மகன் தானே? அப்போ மாமா தானே?"

அவனை 'மாமா'என அழைக்க அவளுக்குச் சட்டென்று வரவில்லை. "அது..." என்றவளின் தடுமாற்றத்தை உணர்ந்தவனின் இதழ்களில் மர்மப் புன்னகை. "சரி, இப்ப 'மாமா'சொல்லு மது,"என்றான்.

அவனின் குழையும் குரலில் தடுமாறியவள், "வசீ... எனக்குத் தூக்கம் வருது. நான் போனை வைக்கிறேன்,"என்று சொல்லிவிட்டுப் படக்கென்று அணைப்பைத் துண்டித்தாள். மனது படபடவென அடித்துக்கொண்டது.

அவனின் கிசுகிசுப்பான பேச்சை எண்ணியவளுக்கு முகம் சிவந்தது. கைகளால் முகத்தை மறைத்துக்கொண்டவள் முகம் முழுவதும் வெட்கச் சாரல். 'மாமா'என்று அவனை இயல்பாக அழைக்க முடியும் என்று தோன்றவில்லை. அவனின் காதல் அடாவடிகளை எண்ணியவள் அப்படியே கண்களை மூட, சுகமான உறக்கம் தழுவிக்கொண்டது.
இங்கே வசீகரனுக்குக் கண்களை மூடினால் அவனின் தேவதைதான் தெரிந்தாள். அவனுக்கே ஆச்சரியம்; அவளிடம் இப்படியெல்லாம் பேசுவான் என்று அவனே நினைக்கவில்லை. பேசிய பின்பு அவள் இப்போதே அருகில் வேண்டும் போலவும், அவளை அணைக்க வேண்டும் போலவும் மனம் பிடிவாதம் பிடித்தது.

"அச்சோ... கொல்றாளே!" கண்களை மூடியவன், "போடி இம்சை,"என்றான் இதழ்களில் குறுஞ்சிரிப்புடன். அவளின் தயக்கத்தையும் வெட்கத்தையும் உணர்ந்தவனின் மனதோ இப்போது உல்லாசமானது.

மறுநாள் அனைத்துச் சடங்குகளும் மண்டபத்திலேயே நடைபெற இருந்தன. .
மறுநாள் காலை, மங்கல வாத்தியங்கள் முழங்க திருமண மண்டபமே விழாக்கோலம் பூண்டிருந்தது. மணமக்களுக்கான 'பட்டினிச் சீர்'என்னும் சடங்கு கோலாகலமாகத் தொடங்கியது. மஞ்சளும் நறுமண மூலிகைகளும் கலந்த நீரை மணமக்கள் மீது ஊற்றி மகிழும் உற்சாகமான நிகழ்வு அது! உறவினர்களும், நண்பர்களும் கூடி நின்று விளையாடும் இந்தச் சடங்கிற்காகவே இளவட்டங்கள் ஆவலோடு காத்திருந்தனர்.
முதலில் மணமகன் வசீகரனுக்குச் சடங்கு ஆரம்பமானது. அத்தை லலிதாவும், மாமா மனோ பால முருகனும் முதல் செம்பு நீரை ஊற்றி வாழ்த்தித் தொடங்கி வைத்தனர்.மேலும் சில முறைக்காரர்கள் அச்சடங்கை செய்ய அவ்வளவுதான், அதுவரை அமைதியாகக் காத்திருந்த நண்பர்கள் கூட்டம் களத்தில் குதித்தது!

"டேய் சித்தார்த், மாப்பிள்ளையை சும்மா விடாதீங்கடா! ஊத்துங்கடா தண்ணிய!" என்று பின்னால் இருந்து ஒரு பெரியவரின் குரல் ஒலிக்க, மித்ரனும் அவன் நண்பர்களும் வசீகரன் மீது மாற்றி மாற்றி நீரை ஊற்றி விளையாட தொடங்கினர்.
"டேய் டேய்... போதும்டா ஐஸ் வாட்டர் வேணாம் , குளிருது !" என்று வசீகரன் பாவமாகக் கெஞ்ச,

"இன்னும் கல்யாணமே ஆகல, அதுக்குள்ள நடுக்கம் வந்துருச்சா மாப்பிள்ளைக்கு?"என்று கிண்டலடித்தபடியே மித்ரன் மேலும் நீரை ஊற்றினான்,மித்ரன், வித்யா, நித்யா, முகுந்தன், சித்தார்த் ,வருண் மற்றும் மதுமதி வசீகரனின் நண்பர்களும் என ஒட்டுமொத்தப் பட்டாளமும் ஒன்றாகச் சேர்ந்துகொள்ள அந்த இடமே களைகட்டியது. இப்போது மித்ரன் பிரியாவின் மீது நீரை ஊற்ற பிரியா மிதரனின் மீது நீரை ஊற்றினாள் .அதனை பார்த்துவிட்டு வித்யா வருணின் மீது நீரை ஊற்ற துரத்த அந்த இடமே சிரிப்பொலியால் அதிர்ந்தது.

வசீகரனுக்கு ஒருவழியாகச் சடங்கு முடிந்ததும், மணமகள் மதுமதியை அழைத்துவந்தனர். தாய்மாமன் முறையில் சித்ரா - சிவனேசன் தம்பதியினர் முதல் நீரை ஊற்றித் தொடங்கி வைக்க, இங்கும் பிரியா, கீதா , சந்தியா, வித்யா என தோழிகள் ஆட்டத்தை ஆரம்பித்தனர்.

"ஏம்மா... எங்க மதுவை ரொம்ப நனைக்காதீங்க, அப்புறம் சளி பிடிச்சுக்கப் போகுது!" என்று பெரியவர்கள் அக்கறையாகக் குரல் கொடுக்க, அதையெல்லாம் காதில் வாங்காமல் இளையவர்கள் அவளை நனைத்து விளையாடி மகிழ்ந்தனர்.

இந்த அமர்க்களமான நீர் விளையாட்டு முடிந்ததும், சம்பிரதாயங்கள் முறைப்படி தொடர்ந்தன. வசீகரனுக்கு அவனது தாய்மாமன் பாலமுருகன் உருமாலை கட்டி 'மாப்பிள்ளை'ஆக்கினார். மறுபுறம் மதுமதிக்கு அவளது தாய்மாமன் சிவநேசன் காலில் மெட்டி அணிவித்து, உணவு கொடுத்து அவளது விரதத்தை முடித்து வைத்தார்.
பச்சை வண்ணப் பட்டு வேட்டி, சட்டையில் கம்பீரமாக வலம் வந்த வசீகரனின் கண்கள் மட்டும், மண்டபத்தின் வாசலிலும் மணப்பெண் அறையின் பக்கமுமே நிலைத்திருந்தன. நேற்று போனில் அத்தனை அடாவடி பேசிவிட்டு, இன்று அவளின் முகத்தை நேரில் பார்க்க அவனது நெஞ்சம் தவம் கிடந்தது.

"மாப்பிள்ளை! கண்ணு வாசலையே அலசுதே? இன்னும் கொஞ்ச நேரத்துல உன் ஆளு வந்துருவா, அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருடா!" என்று மித்ரன் அவனது தோளில் தட்டிச் சிரித்தான்.

"டேய், காலையில இருந்து அவள ஒருக்காவாவது பார்க்க விட்டீங்களாடா? ஒரு போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்குறா..." என்று செல்லமாகச் சலித்துக் கொண்டான் வசீகரன்.
பட்டுப்புடவையில் அவளை அங்கே அழைத்து வருவதற்கு இன்னும் நேரமாகும் என்று தெரிந்தும், அவனது பொறுமை அவனுக்குள் விஸ்வரூபம் எடுத்தது. எப்படியாவது அவளைத் தனியாகப் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன், சித்தார்த்தைத் தேடிப்பிடித்தான்.

"டேய் சித்து... மது ரூம் பக்கம் கொஞ்சம் போயிட்டு வாயேன்" என்று மெதுவாக இழுத்தான் வசீகரன்.

"அண்ணா ? இன்னும் கொஞ்ச நேரத்தில் நிச்சயம் ... அதுக்குள்ள உங்களுக்கு என்ன அவசரம்?"என்று சித்தார்த் நக்கலாகக் கேட்க,

"விளையாடாதடா... அவ நேத்து சரியா பேசாமலேயே போனை வச்சிட்டா. இப்ப கால் பண்ணாலும் அவ எடுக்கல, இப்போ அவளைப் எனக்கு பார்த்தே ஆகணும். யாரும் இல்லாத நேரமாப் பார்த்து, என்னை அவ ரூம்குள்ள கூட்டிட்டுப் போறது உன் பொறுப்பு" என்று கட்டளையிட்டான் வசீ.

"ஐயோ அண்ணா ! அங்கே அம்மா, அத்தை எல்லாரும் இருக்காங்க. நான் மாட்டிக்கிட்டா அவ்ளோதான்" என்று சித்தார்த் பின்வாங்கப் பார்க்க, வசீகரன் அவனுக்கு ஒரு அடி கொடுத்து, "சொன்னதைச் செய்" என மிரட்டலாகப் பார்த்தான்.

வேறு வழியின்றி சித்தார்த் மதுமதியின் அறைக்குச் சென்று உளவு பார்த்தான். நல்ல வேளையாக, சடங்குகளுக்கான சில பொருட்களை எடுத்து வர பரிமளாவும் மரகதமும் கீழே சென்றிருந்தனர். தோழிகள் சிலர் மட்டுமே அவளுக்கு உதவிக் கொண்டிருந்தனர்.
சித்தார்த் வேகமாக வந்து, "வசீ அண்ணா ... இதுதான் சான்ஸ். பெரியவங்க யாரும் இல்லை. உள்ளே போயிடுங்க" என்று சிக்னல் கொடுத்தான்.
வசீகரன் நெஞ்சு படபடக்க, மதுமதியின் அறைக் கதவை மெதுவாகத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான்.

மணப்பெண்ணாக, ராமர் வண்ணப் பட்டுப்புடவையில், நகைகள் ஜொலிக்க, தலையில் அந்த புடவைக்கு பொருத்தமாக அதே வண்ண பூ சூடி தேவதையாய் அமர்ந்திருந்தாள் மதுமதி. அவளது தோழிகள் அவளை சுற்றி இருக்க அவளுக்கு இறுதிவட்ட அலங்காரங்களைச் செய்துகொண்டிருந்தனர்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டு மதுமதி நிமிர்ந்து பார்க்க, அங்கே வாசலில் வசீகரன் பட்டு வேட்டி சட்டையில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவளது இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.

அவளது தோழிகள் பிரியாவும் கீதாவும் வசீகரனைப் பார்த்ததும், "அச்சோ மாப்பிள்ளை... நீங்க இப்போ இங்கே வரக்கூடாது. இன்னும் கொஞ்ச நேரத்துல பொண்ணு மேடைக்கு வரப்போறா, அப்புறம் பார்த்துக்கோங்க" என்று சிரித்துக் கொண்டே அவனைக் கிண்டல் செய்தனர்.

வசீகரன் அசராமல், "ப்ளீஸ் சிஸ்டர்ஸ்... ஒரே ஒரு நிமிஷம் அவகிட்ட கொஞ்சம் பேசணும்.நீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாமே " என்று கெஞ்சலாகக் கேட்க, அவனது காதலின் தவிப்பைப் புரிந்து கொண்ட தோழிகள், சிரித்துக் கொண்டே "சரி சரி... அத்தைங்க வர்றதுக்குள்ள பேசிட்டு கிளம்புங்க" என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினர்.

அறைக்குள் இப்போது வசீகரனும் மதுமதியும் மட்டுமே...

மதுமதிக்கு வெட்கத்தில் கைகள் நடுங்கின. நேற்று போனில் பேசிய பேச்சுக்கள் அவளது நினைவில் நிழலாட, அவனது கண்களை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் தரையைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

வசீகரன் மெல்ல அவளருகே வந்தான். அவளது பட்டுப்புடவையின் சரசரப்பும், மல்லிகைப் பூவின் வாசமும் அவனது கண்களில் இரசனையை கூட்டியது.

" மது என்றவன் குரல் கரகரத்தது.... நிமிர்ந்து கூட பார்க்க மாட்டியா? நேத்து போனை வச்சதுல இருந்து எனக்குத் தூக்கமே இல்லை தெரியுமா?"என்றான், அவளது முகத்திற்கு மிக அருகில் வந்து அவளது நாடித் துடிப்பை எகிற வைக்கும் குரலில்.

மதுமதி தன் கைகளை பிணைத்துக் கொண்டு, "வசீ... யாராவது வந்துடப் போறாங்க, சீக்கிரம் போங்க" என்று தட்டுத்தடுமாறிக் கூறினாள்.

அவளது பதற்றத்தைக் கண்டு ரசித்தவன், மெதுவாக அவளது கைகளைப் பற்றினான். நேற்றே அவளது மணிக்கட்டில் அவன் சொன்னபடியே மெகந்தியில் வரையப்பட்டிருந்த அந்தச் சிறிய இதயத்தையும், அதனுள் இருந்த 'உயிர்'என்ற எழுத்தையும் அவனது விரல்கள் வருடின.

மது இங்க பாரு இது எப்படி இருக்கு என்று அவன் காட்ட

அவளும் அவளது கையில் அவன் காட்டிய இடத்தை அப்போதுதான் பார்த்தாள். அவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன.நேத்து .. நீங்க இதைதான் சொன்னீர்களா என்பது போல அவள் அவனை பார்க்க ,

"நான் சொன்ன டிசைன் சூப்பரா இருக்கு மது... உன் நாடித் துடிப்பு இப்போ எவ்ளோ வேகமா அடிக்குதுன்னு எனக்குத் தெரியுது" என்று குறும்புடன் சிரித்தான்.

அவள் வெட்கத்தின் உச்சத்துக்கே சென்று, "வசீ..." என்று முணுமுணுத்தாள்.

"இன்னும் ஒரே நாள் அப்புறம் நீ எனக்கு மட்டும் சொந்தமாகப் போற... இந்த முகத்துல இருக்குற வெட்கம் எனக்கு மட்டும்தான் சொந்தம்" என்றவன், அவளது நெற்றியில் தன் இதழ்களால் லேசாக அழுத்த முத்தமிட்டான்.

அந்த நொடி மதுமதிக்குத் தன் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது.
சட்டென்று வாசலில், "பரிமளா... அந்தப் பூத்தட்டைக் கொஞ்சம் எடு" என்று மரகதத்தின் குரல் கேட்க, மதுமதி பதறிப்போய் அவனது கைகளை விடுத்து, "ஐயோ... அம்மா வராங்க, போங்க" என்று அவனைத் தள்ளினாள்.

வசீகரன் புன்னகையுடன், "மேடையில வச்சுப் பார்க்குறதை விட, இந்தத் திருட்டுச் சந்திப்பு செம சுகம்டி பொண்டாட்டி... மேடையில பார்ப்போம்" என்று கண் சிமிட்டிவிட்டு, பின் பக்கக் கதவு வழியாகச் நழுவினான்.

அவன் சென்ற பின்பும், மதுமதி தன் நெற்றியைத் தொட்டுக் கொண்டே, கண்ணாடி முன்னால் நின்று தன் சிவந்த முகத்தைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டாள். அவளது இதயத்தின் படபடப்பு இன்னும் அடங்கியபாடு இல்லை. .
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom