பார்வை 40
திருமணம் முடிந்த மூன்றாம் நாளே இரு குடும்பத்தாரும் இணைந்து, அந்தப் பிஞ்சு குழந்தை ஆர்த்தியைச் 'ஜெய வசீகரன் - மதுமதி பிரதிக்ஷா'தம்பதியரின் மகளாக சட்டப்பூர்வமாகத் தத்தெடுத்தனர்.
அவர்களின் திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்திருந்தது. ஒரு நாள், வசுந்தரா இருவரையும் வாழ்த்துவதற்காக 'சாந்தி வனம்'இல்லத்திற்கு வந்திருந்தாள். திருமணம் நடந்த சமயத்தில் அவள் வெளிநாட்டில் தீவிர மருத்துவச் சிகிச்சையில் இருந்ததால் வர முடியவில்லை. இப்போது தன் கைகளில் அழகான திருமணப் பரிசுகளுடன் வந்திருந்தாள்—ஆனால், அவளுக்கே தெரியாமல், அவளது வாழ்க்கையின் மிகப் பெரிய பரிசை (ஆர்த்தியை) அவள் ஏற்கனவே அவர்களுக்குத் தந்துவிட்டது அவளுக்குத் தெரியாது!
உள்ளே நுழைந்த வசுந்தராவை, குழந்தை ஆர்த்தியுடன் அமர்ந்திருந்த மீனாட்சி அம்மாள் தான் முதலில் பார்த்தார்.
"வசு மா... வாடா!" என்று உள்ளம் நெகிழ, மனதின் மகிழ்ச்சி முகத்தில் தெரிய வரவேற்றார். அவளும் ஒரு மெலிதான புன்னகையுடனே அவரை எதிர்கொண்டாள்.
"எப்படி இருக்கடா? எப்ப ஊருக்கு வந்த?"என்று அவளது கைகளைப் பற்றித் தன் அருகில் அமர வைத்துக் கொண்டார். அவரது தாய்மை கலந்த அன்பில் வசுந்தராவின் மனம் நெகிழ்ந்தது.
"நல்லா இருக்கேன் ஆண்டி,"என்றவளின் முகத்தில் புன்னகை இருந்தாலும், அந்த விழிகளில் ஏதோ ஒரு நிரந்தரமான வெறுமை ஒட்டிக்கொண்டிருந்தது. சிறு வயதிலேயே அன்னையைத் தொலைத்தவள் வசுந்தரா. அதனாலோ என்னவோ, அவளையும் தன் சொந்த மகளாகவே பாவித்தார் மீனாட்சி.
அவளையே விழி எடுக்காமல் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவரை நோக்கி, "என்ன ஆண்டி அப்படிப் பார்க்குறீங்க?"என்றாள் வசு.
அவளிடம் தன் மன வருத்தத்தைக் காட்டிக் கொள்ளாமல், "இல்லடா... உன்னைப் பார்த்தே ரொம்ப நாள் ஆச்சுல்ல, அதான்,"என்றார்.
ஆனால், அவரது வருத்தம் வசுந்தராவுக்குப் புரிந்தது. "என்னை நினைச்சு வருத்தப்படுறீங்களா ஆண்டி?"என்றவள், அவரது கைகளில் ஒரு சிறு அழுத்தம் கொடுத்து, "நானே அதைக்கடந்து வர முயற்சிக்கிறேன் ஆண்டி. நீங்க வருத்தப்படாதீங்க... என்னோட விதி, யாரைச் சொல்ல முடியும்?"என்று ஒரு நெடிய பெருமூச்சை வெளிப்படுத்தினாள்.
அதற்குள்ளாக, மதுமதியும் வசீகரனும் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தனர். அதுவரை அமைதியாகக் கீழே விளையாடிக் கொண்டிருந்த குட்டி ஆர்த்தி, "அப்பு...!" என்று தன் மழலை மொழியில் அழைத்துக் கொண்டே ஓடிப்போய் வசீகரனின் காலைக் கட்டிக்கொண்டாள்.
மீனாட்சி அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்த வசுந்தரா, அப்போதுதான் அந்தக் குழந்தையைக் கவனித்தாள். அவளைப் பார்த்த கணமே வசுந்தராவின் மனதுக்குள் ஏதோ ஒன்று பிசைந்தது.
'என்னுடைய குழந்தையும் உயிரோடு இருந்திருந்தா... இவளைப் போலத்தானே இருந்திருக்கும்?' — வசுந்தராவின் உள்ளம் உள்ளே கதறியது. அதை வெளியே காட்டிவிடக் கூடாது என்று பெரும்பாடு பட்டுத் தன் மனதைக் கட்டுக்குள் கொண்டு வந்தவள், அவர்களை ஆச்சரியமாகப் பார்த்தாள். குழந்தை வசீகரனை 'அப்பா'என்று அழைப்பதைக் கேட்டு, மீனாட்சியை கேள்வியாக நோக்கினாள்.
"ஆண்டி... இது யாரு குழந்தை?"என்று அவள் கேட்க வர,
"எங்க பேத்திதான் வசு! நம்ம மது, வசீயோட பொண்ணு,"என்றார் மீனாட்சி. வசுந்தரா அவரை விசித்திரமாகப் பார்க்க, "ரெண்டு பேரும் சேர்ந்து இந்தக் குழந்தையைத் தத்தெடுத்திருக்காங்கடா,"என்று விளக்கினார்.
வசுந்தராவின் விழிகள் ஆச்சரியத்தில் விரிய, அவள் இருவரையும் பார்த்தாள். வசீகரன் அவனது மகளுடன் பேச்சு வார்த்தையில் இருக்க, மதுமதி புன்னகை முகத்தோடு வசுந்தராவின் அருகில் வந்தாள்.
"வாழ்த்துகள் மது!" என்றாள் வசுந்தரா.
"தேங்க்ஸ் அக்கா... நீங்க எப்படி இருக்கீங்க? ஏன் எங்க கல்யாணத்துக்கு வரல?"என்று உரிமையோடு கேட்டாள் மதுமதி.
"ஸாரிடா... நான் அப்போ வெளிநாட்டுல ட்ரீட்மென்ட்ல இருந்தேன். அதான் வர முடியல,"என்று மெலிதாக முறுவலித்தாள் வசுந்தரா. அந்தப் புன்னகையின் பின்னே ஒளிந்திருந்த அவளது ஆழமான வலியை மதுமதியால் உணர முடிந்தது.
"ஸாரி அக்கா..." என்று மதுமதி வருத்தத்தோடு கூற,
"பரவாயில்லை மது, அதை விடு. என்னைப்பத்தி இப்ப எதுக்கு? நீ உன்னைப்பத்தி சொல்லு,"என்று பேச்சை மாற்றினாள் வசுந்தரா. "என்ன சொல்றான் என் பிரண்ட்? இப்பவும் அதே கோபக்காரனா, இல்ல மாறிட்டானா?"என்று வசீகரனைக் காட்டி நக்கலாகக் கேட்டாள்.
"ச்ச ச்ச... இப்பெல்லாம் அவ்வளவு கோபம் வர்றதே இல்லைக்கா! அப்படியே கோபம் வந்தாலும், நான் சொல்றதைக் கேக்குறாரோ இல்லையோ, அவரோட செல்ல மகள் அவரை அழகா கவனிச்சுக்குவா,"என்று தன் கணவனைக் கண்களால் களவு செய்தபடி புன்னகைத்தாள் மதுமதி.
"ஓ... அப்போ இந்த குட்டி ஏஞ்சல் தான் அவனுக்குப் பாஸா?"என்று வசுந்தரா அவர்கள் இருவரையும் பார்த்துக் கேட்டாள். அங்கே வசீகரன் இன்னும் தன் மகளின் கொஞ்சல் மொழிகளுக்குப் பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.
அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த வசுந்தரா, "வசீ ரொம்ப மாறிட்டான் இல்ல மது? அவனை இவ்வளவு பொறுமையா நான் இதுவரை பார்த்ததே இல்லை,"என்றாள் வியப்புடன்.
"ஆமா அக்கா... நம்ம ஆர்த்தி குட்டிகிட்ட ஏதோ மேஜிக் இருக்கு. இல்லன்னா இந்த ஆங்ரி பேர்ட் (Angry Bird) இப்படியா ஸ்மைலி பேஸா (Smiley Face) சுத்துவாரா என்ன?"என்று அவனைக் கலாய்த்தாள் மது. அவளது பேச்சைக் கேட்டு வசுந்தராவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
"என்ன மது... இப்படி அப்பட்டமா எல்லார் முன்னாடியும் கணவனை சைட் அடிக்கிற?"என்று வசுந்தரா வம்பிலுக்க,
"அக்கா...! நீங்க வேற... அப்படி எல்லாம் இல்லை,"என்று மதுமதியின் கன்னங்களில் சட்டென்று செம்மை படர்ந்தது.
மகளோடு பேசிக் கொண்டிருந்தாலும், வசீகரனின் ஒரு கண் தன் மனைவியின் மீதுதான் இருந்தது. அவளது முகச் சிவப்பைக் கண்டவன், தங்களைப் பற்றித்தான் ஏதோ பேசுகிறார்கள் என்பதை உணர்ந்து, மகளைத் தன் கைகளில் ஏந்தியபடி அவர்கள் அருகில் வந்தான்.
வசீகரனை ஒரு தந்தையாக, அத்தனைப் பொறுப்போடு பார்க்கப் பார்க்க வசுந்தராவிற்குத் தன் கணவன் விக்ரமின் நினைவு நெஞ்சை அடைத்தது.'விக்ரமும் என் குழந்தையும் இருந்திருந்தால்... அவனும் இப்படித்தானே இருந்திருப்பான்?' — தன் வாழ்வின் பேரிழப்பு மீண்டும் அவளுக்குள் ரணமாய் வலித்தது. அவளது கண்களில் தேங்கிய ஏக்கத்தையும் வலியையும் உணர்ந்த வசீகரனின் மனமும் தவித்தது.
அவளது சிந்தனையை மாற்றும் பொருட்டு, "வசு, நீ எப்ப யு.எஸ்-ல இருந்து வந்த? நீ வர்ற விஷயத்தை அங்கிள் என்கிட்ட சொல்லவே இல்லையே?"என்றான் வசீகரன்.
"லாஸ்ட் வீக் தான் வந்தேன் வசீ. உங்க கல்யாணத்துக்கு வர முடியல, ஸாரிடா..."என்றவளை தோளோடு அணைத்தவன், "இட்ஸ் ஓகே வசு. நீ இப்ப எப்படி இருக்க? ஹெல்த் ஓகேவா?"என்று அக்கறையோடு கேட்டான்.
"ம்ம்... ஓகே தான். இனி ஓகே ஆகித்தானே ஆகணும்..." என்றவளின் குரலில் ஒரு விரக்தி இருந்தது. "சரி, என்ன சாப்பிடுற?"என்று வசீகரன் கேட்க, அதற்குள் மீனாட்சி அம்மாள் கையில் ஒரு சுவையான பாதாம் கீர் குவளையுடன் வந்தார்.
"இந்தாடா வசுமா... உனக்கு ரொம்பப் பிடிச்ச பாதாம் கீர்,"என்று தர, "தேங்க்ஸ் ஆண்டி,"என்று வாங்கிக் கொண்டாள். ஆனால், வசுந்தராவின் விழிகள் மீண்டும் மீண்டும் வசீகரனின் கைகளில் இருந்த ஆர்த்தியின் மீதே பட்டு மீண்டன. வசீகரனும் அதை உணர்ந்து உள்ளுக்குள் தவித்தான்.
அப்போது, குழந்தை ஆர்த்தி வசீகரனின் பிடியிலிருந்து நழுவி கீழே இறங்கி, தத்தி தத்தி நடந்து நேராக வசுந்தராவிடம் வந்தாள். அதுவரை அவளை அள்ளிக் கொஞ்சுவதா, வேண்டாமா, தன் மனதைக் கட்டுப்படுத்த முடியுமா என்று யோசித்துக் கொண்டிருந்த வசுந்தரா, தன் எண்ணங்களை மறந்து ஆர்த்தியைக் கைகளில் ஏந்தினாள்.
குழந்தையைத் தன் மார்போடு அணைத்த அந்த விநாடி... அவளுக்குள் என்ன உணர்வு என்றே தெரியவில்லை! ஏதோ சொல்ல முடியாத ஒரு தவிப்பு, தன் இழந்த சொர்க்கமே கைகளில் வந்து சேர்ந்துவிட்டது போன்ற ஒரு பிரம்மை! குழந்தையின் முகம் முழுவதும் தன் முத்தங்களால் நிரப்பினாள் வசுந்தரா.
"செல்லம்... உங்க பேர் என்ன?"என்று அவள் கேட்க, "ஆத்தி..." என்றாள் குழந்தை தன் மழலை மாறா உச்சரிப்பில்.
"அச்சோ... என்ன ஒரு அழகு!" என்று கொஞ்சியவள், "ஆண்டிக்கு நீங்க இங்க இருக்கீங்கன்னு தெரியாது தங்கம். தெரிஞ்சிருந்தா என் குட்டிக்கு ஏதாவது வாங்கிட்டு வந்திருப்பேனே..." என்று உருகினாள். அவளது கொஞ்சலில் குழந்தை தன் விழிகளை உருட்டிப் பார்க்க, வசுந்தராவிற்கு அவளைக் கீழே இறக்கிவிடவே மனமில்லை.
அதற்குள் அவளது தந்தையிடமிருந்து கைபேசி அழைப்பு வர, வேறு வழியின்றி குழந்தையை வசீகரனிடம் தந்தாள். "சரி வசீ... அப்பா ஆபீஸ்க்கு வரச் சொல்றார், நான் புறப்படுறேன்,"என்றாள். ஆனால், அவளுக்குத் தன் உயிரையே அங்கே விட்டுச் செல்வது போன்ற ஒரு கனமான உணர்வு ஏற்பட்டது. 'ஏன் நமக்கு இப்படித் தோன்றுகிறது?'என்று அவளுக்கே புரியவில்லை.
வசுந்தராவின் அந்தப் பிரிவுத் தவிப்பைக் கண்டு மதுமதியின் மனமும் கனத்தது. மீனாட்சி அம்மாளும் ஒரு தாயாக அவளது மனப் போராட்டத்தைப் புரிந்து கொண்டார். "என்னடா வசு... குட்டியை விட்டுட்டுப் போக மனசு வரலையா?"என்றார் ஆதுரமாக.
தன் கண்களிலிருந்து கண்ணீர் சிந்திவிடுமோ என்ற அச்சத்தில் விழிகளை மூடித்திறந்த வசுந்தரா, "ஆமா ஆண்டி... என்னன்னு தெரியல, இவளை விட்டுட்டுப் போகவே மனசு வரல,"என்றாள் தழுதழுத்த குரலில்.
"எங்க ஆர்த்தி குட்டியோட மேஜிக் அப்படிப்பட்டதுடா! அதுனால என்ன... நீ எப்ப வேணாலும் இங்க வந்து அவளைப் பார்த்துட்டுப் போ,"என்று ஆறுதல் கூறினார் மீனாட்சி.
"சரிங்க ஆண்டி..." என்றவள், வசீகரனின் பக்கம் திரும்பி, "வசீ... நான் அடுத்த மாசம் சிங்கப்பூர் போகலாம்னு இருக்கேன்,"என்றாள்.
"ஓ... எதுக்கு? ஏதாவது பிசினஸ் ட்ரிப்பா?"என்றான் அவன்.
"இல்லை..." என்று தலையசைத்தவள், "அங்கேயே செட்டில் ஆகிடலாம்னு இருக்கேன்டா. என்னால இங்க இருக்கவே முடியல வசீ... ஏதோ ஒரு நினைவு, ஏதோ ஒரு ஞாபகம் எனக்கு விக்ரமையும் என் குழந்தையையும் ஞாபகப்படுத்திட்டே இருக்கு. என்னால தாங்க முடியல..." என்று வசுந்தராவின் குரல் உடைந்தது.
"டேய்... என்னடா இது? போகும்போது இப்படி அழுதுகிட்டா போவாங்க? சும்மா இருடா வசு,"என்று மீனாட்சி அவளைத் தேற்றினார். "உனக்கு ஒரு மாற்றம் வேணும்னா நீ அங்க போய் இருமா. எல்லாம் மாறும், நீ நல்லா இருப்ப,"என்று மனதார வாழ்த்தினார்.
"தேங்க்ஸ் ஆண்டி... அப்போ நான் புறப்படுறேன்,"என்று வசுந்தரா விடைபெற்றுக் கிளம்பினாள். அவளது கார் நகர்வதையே பார்த்துக் கொண்டிருந்த அனைவரது மனதிலும் ஒரு பெரும் பாரம் ஏறியது.
Author: Vishakini
Article Title: ஒரு பார்வையிலே என்னை வீழ்த்தி விட்டாய் - 39
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ஒரு பார்வையிலே என்னை வீழ்த்தி விட்டாய் - 39
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.