• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கடலின் மடியில் கதைப்போம் வா - 11

Vishakini

Moderator
Staff member
கடலின் மடியில் கதைப்போம் வா!

கதை 11

"நர்சரில வெச்சு முதல் முறை உங்க கையைப் பிடிச்சுட்டு தைரியமா மேடை ஏறினேன். கூட்டத்துல நூத்துக்கணக்குப் பேர் இருந்தாலும் என் கண்ணுக்கு நீங்க மட்டும் தான் தெரிஞ்சீங்க. கை தட்டும் போது உங்க முகத்துல தெரிஞ்ச சந்தோஷம் இன்னும் என் மனசுல மறையாம இருக்குப்பா"

-ஆதிராவின் டயரி


"விஷ்ணு! எங்கடா தம்பி இருக்க?" இரண்டு முறை அழைத்தும் பதில் இல்லாததால் வாசலை எட்டிப் பார்த்தாள் வைஷாலி.

சோஃபாவில் அமர்ந்து கைகளால் தலையைத் தாங்கிக் கொண்டிருந்தான் அவன். அடுப்பை அணைத்து விட்டு அவனருகில் சென்று அமர்ந்தாள்.

"விஷ்ணு" அவனது கையைப் பிடிக்க, "கூப்பிட்டீங்களாக்கா?" சகோதரியைக் கேள்வியாக நோக்கினான் ஆடவன்.

"எத்தனை தடவை கூப்பிட்டேன். ஏதோ யோசனைல இருக்க. என்னாச்சு? ஆதி நோ சொல்லிட்டாளா?" மெதுவாகக் கேட்க, ஆம் என்று தலையசைத்தான்.

"நீ கவலைப்படாத. உன்னை ஆதிக்குப் பிடிக்கும். இப்போவே சரியெண்டு சொல்றத எதிர்பார்க்க முடியாது. பிறகு ஒருக்கா யோசிச்சுச் சொல்லுவா. ஆரம்பத்துல இப்படிப்பட்ட எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். உனக்கு நோ சொல்லி ஆதி எங்க போய்டப் போறா?" என அவனது தலையை வருட,

"இல்லக்கா. ஆதி எப்பவும் எனக்கு ஓகே சொல்ல மாட்டா" என்று கூற, "ஏன்டா?" புரியாத பார்வையை வீசினாள் வைஷாலி.

"அவளுக்கு வேற ஒரு பையனைக் கல்யாணம் பேசி இருக்காங்க. அவ ஓகே சொல்லிட்டுத் தான் வந்திருக்கா" என்று நலிந்து போன குரலில் உரைக்க, அப்போது தான் மதனும் வந்து அமர்ந்தான்.

"ஆதி வேற பையனுக்கு ஓகே சொன்னாளா? அது எப்படிச் சொல்ல முடியும்?" ஒரு மாதிரியான குரலில் வினவினாள்.

"அவளுக்கு அந்தப் பையன் தான் வேணுமெண்டு நெனச்சி ஓகே சொல்லிட்டா. இதுல என்ன இருக்குக்கா?" எனக் கேட்டான் விஷ்ணு.

"உன் கூட ஃப்ரெண்ட்ஷிப் வெச்சிக்கிட்டா. அப்புறம் ஏன் ஓகே சொல்லல? ஆதிக்கு உன்னப் புடிக்கும் தானே?" அக்காவின் கேள்வி அவனுக்கு சிறுபிள்ளைத்தனம் போல் தோன்றியது.

"ஃப்ரெண்ட்ஷிப் வேற லவ் வேறக்கா. நட்புங்கிறது எங்க ரெண்டு பேரோட சம்பந்தப்பட்டது‌. அதனால அவளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனா கல்யாணங்கிறது அப்படி இல்லையே. அது ரெண்டு குடும்பங்களோட சம்பந்தப்பட்டது. இப்ப ஆதிக்கு நிறைய பொறுப்புகள் இருக்கு.

அப்பாவோட இழப்ப அவ நிரப்ப முயற்சி பண்றா. அப்பாண்டா யாருன்னு தெரியுமே. அவரு என்னைக்குமே தன்னப் பத்தி யோசிக்க மாட்டாரு. தன் குழந்தைங்க நல்லா இருக்கணுங்கிறதுக்காக எவ்வளவோ தியாகங்கள் பண்ணுவாரு. அதுல எதையெதையோ பண்ணி தன் குடும்பத்தை நல்லாக் காப்பாத்த ஆதி ஆசப்படுறா. அந்தப் பையன் வீடும் அவ வீட்டுக்குப் பக்கத்துல தான். எப்பவும் அவளுக்குத் தன் வீட்டு ஆட்களைப் பார்த்துக் கொள்ளலாம். அதுதான் அவ கல்யாணத்துக்கு சரி சொல்ல முக்கியமான காரணம்"

"நீயும் அங்க போகலாமே. அவ ஊருல வந்து இருப்பேன் எண்டு சொல்லு. உன்னால எப்படி ஆதிய விட்டுக் குடுக்க முடியும்?"

"வேற என்ன பண்றது? அவங்க அம்மா சம்மதம் கேட்டிருக்காங்க. ஆதி சரின்னு சொல்லிட்டா. அவங்க பேச்சை அவ தட்ட மாட்டா. இப்ப போய் இப்படி அவ மாத்திக் கதைக்க முடியும்? அவளுக்கு அது தான் வேணுமென்டா இருக்கட்டும். உங்களை விட்டுட்டு நான் எப்படி அங்க போறது?

உதாரணமா அவ என்னைக் கல்யாணம் பண்ணி இங்க வந்தாலும் அவங்க வீட்டுக்கு அவசரமாப் போற ஒரு நிலைமை வந்து என்னால கூட்டிட்டுப் போக முடியாமப் போனா அவ மனசு எவ்வளவு பாதிக்கப்படும்? இதுக்குத் தான் வீட்டுக் கிட்டக் கல்யாணம் பண்ணப் போனேண்டு சொல்ல மாட்டாளா? அப்படியெல்லாம் ஆதிய என்னால கஷ்டப்படுத்த முடியாதுக்கா. அவளுக்குப் பிடிச்சத அவ முடிவு பண்ணிட்டா. அது அப்படியே இருக்கட்டும்" விஷ்ணு மிக நிதானமாகத் தான் பேசினான்.

"வைஷு விடும்மா. விஷ்ணு அதை ஏத்துக்கிட்டு உறுதியா நிக்கிறானே. இதுக்கு மேல அதைப் பத்திப் பேச வேண்டாம்" மதன் மனைவியைப் பார்த்தான்.

"நீங்க நெனக்கிறீங்களா அவன் நல்லா இருக்கான்னு? எங்களுக்காக இப்படி சிரிச்சிட்டு இருக்கான். இவன் உள்ளுக்குள்ள இவ்வளவு அழுறான்னு தெரியுமா?" வைஷாலி கவலையோடு கேட்டாள்.

"அதைப் பற்றி நம்மளுக்குத் தெரியாதா? அம்மாவ இழந்தப்பக் கூட நீ கஷ்டப்படக்கூடாதெண்டு வெளியே போய் இருந்துட்டு வருவான். அவனை அப்படியே விட்டா போகப்போக சரியாயிடும். வேற என்ன சொல்றது? ஆதி அவனுக்கில்லன்னு எழுதப்பட்டிருக்கு. அவ்வளவு தான் சொல்ல முடியும்" என்ற மதன், "நீ போம்மா. எனக்குச் சாப்பாடு எடுத்து வை" என அவளை அனுப்பி வைத்தான்‌.

"ஆதி வேற என்ன சொன்னா?" என்று மதன் கேட்க, "அவ வீட்ல ஓகே சொல்லிட்டா. என் கிட்ட நோ சொல்லியிருந்தாலும் என்னைக் கஷ்டப்படுத்திட்டேண்டு அவ ஃபீல் பண்றா. பாவம் மாமா ஆதி. அவ அப்பா இருந்திருக்கலாம். இவ்வளவு பொறுப்புகளையும் இந்த வயசுல சுமந்துட்டு, அவளோட விருப்பு வெறுப்பக் கூட ஒழுங்கா காட்டிக்க முடியாம இருக்கா. அவ எப்பவும் நல்லா இருக்கணும் மாமா. அது மட்டும் தான் என்ட விருப்பம்" அவனதே விழிகளிலிருந்து இரு சொட்டுக் கண்ணீர்த் துளிகள் கன்னத்தில் உருண்டன.

"நாம நேசிக்கிறவங்களுக்காக நம்மளால கொடுக்கக்கூடிய அதிகபட்சம் பரிசு இந்த வேண்டுதல் தான். நீ ஆதிக்காக இவ்வளவு ஆழமாக வேண்டிக்கிற. உன்னோட ஆசை கண்டிப்பா நிறைவேறும். ஆதி சந்தோஷமா இருப்பா. ஆனா நாங்களும் வேண்டிக்கிறோம் டா நீ நல்லா இருந்தா இருக்கனுமெண்டு.

நீ கவலையா இருந்தா உன் அக்காவும் ஃபீல் பண்ணுவா. நானும் ஃபீல் பண்ணுவேன். எங்களுக்காக நீ சந்தோஷமா இருக்கோனும்‌. வெளியே மட்டும் இல்லாம மனசார சிரிக்கோனும்"

"நான் முயற்சி பண்றேன் மாமா" என்றவாறு மதனின் தோள்களின் சாய்ந்து கொண்டான் விஷ்ணு.

**********

அந்த எட்டு மணிக்கெல்லாம் கொழும்புப் பல்கலைக்கழக கலைப்பீட வளாகம் பரபரப்பாக இருந்தது. நீர்க் குழாயினடியில் தேங்கிக் கிடந்த நீரை ஒற்றைக் காலூன்றி ஒய்யாரமாய்ப் பருகியது ஒரு கொக்கு‌‌.

இன்று ஒரு பிரசன்டேஷன் உள்ளதால் பல்கலைக்கழக வளாகத்தில் கையில் காகிதத்துடன் வீற்றிருந்தாள் ஆதிரா.
கன்னத்தில் கை வைத்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாய் நிவிதா.

"இப்பெல்லாம் ப்ரெசெண்டேஷனுக்கு நீ எவ்ளோ டென்ஷன் ஆக மாட்டியே?" என்று யோசனையோடு கேட்டாள் நிவி.

"அந்த டென்ஷன் இல்லடி. மொத்தமா இங்கிலீஷ்ல செய்யணும். இத்தனை வருஷம் தமிழ்ல படிச்சிட்டு ஒரேயடியா இங்கிலீஷ்க்கு மாறிட்டேன். எக்கானாமிக்ஸ் ஸ்பெஷல் செய்ய ஆசைப்பட்டாலும் அதுல புடிக்காத விஷயம் இந்த இங்கிலீஷ் தான்"

"இங்கிலீஷ் கஷ்டம் தான். ஆனா அது தேவை தானே? இப்போ ட்ரை பண்ணிப் படிச்சா பிறகு யூஸாகும். படிக்கிறது ஒருக்காலும் வீணாகாது டி"

"நீ நல்லாச் சொல்லுவ.‌ உனக்கென்னம்மா நீ தமிழ்லயே கன்டினியூ பண்ணுற. எழுதுறது கூட ஓகே. எதையாவது தத்து பித்துன்னு எழுதிப் போடலாம். பேசும் போது தான் உதறுது" தலையைச் சிலுப்பிக் கொண்டாள் காரிகை.

நிவிதா இளங்கலைக் கல்வியியல் கற்கைக்குத் தெரிவாகி இருந்தாள். அது பொதுவாகத் தமிழ் மொழி மூலத்தில் நடைபெறும். ஆனால் ஆதிரா பொருளியலில் கலைமாணி (சிறப்பு)ப் பட்டப்படிப்புக்குத் தெரிவானாள். அது முழுவதும் ஆங்கில மொழி மூலத்தில் நடைபெறுவதால் இத்தனை வருடங்களும் தமிழில் கற்றவளுக்கு இது கொஞ்சம் சவாலானதாகவே இருந்தது.

"உன்னால முடியும் ஆதி. உனக்கு நெனக்கிறதப் பேசிடு. கத்துக்கும் போது பிழைகள் வரத் தான் செய்யும். அதுக்காக அப்படியே நின்னுடாம உன்ன நீயே செதுக்கிக்கிக்கோனும்" என்று நிவி அவளை ஊக்குவிக்க, "உளி இருக்கா உன் கிட்ட?" எனக் கேட்டாள் ஆதிரா.

"உளியா?" இவள் புருவம் சுருக்க, "செதுக்கச் சொன்னியே. உளி இருந்தா நல்லாருக்கும்" எனச் சிரிக்க, "அடுத்த பர்த்டேக்கு கிஃப்ட் பண்ணிட்டாப் போச்சு" அவளுடன் சேர்ந்து நகைத்தாள் தோழி.

ப்ரசன்டேஷனை ஒரு வழியாக முடித்துக் கொண்டு வந்து சேர்ந்தாள் ஆதிரா. வரும் போது அவள் முகத்தில் திருப்தியின் சாயலைக் காண முடிந்தது.

"எப்படிப் போச்சு?" அவளுக்காகவே காத்திருந்த நிவிதா ஆவலுடன் வினவினாள்.

"பரவாயில்லை. ஏதோ முடிஞ்சளவு பண்ணி முடிச்சிட்டேன். முன்னாடி இருந்த பயம் இல்லாம தைரியமாப் பண்ணுறதே எனக்குப் பெரிய விஷயமா இருக்கு" என்று சொன்னவளுக்கு விஷ்ணுவின் ஞாபகம்.

ஆம்! அவளின் இந்த தைரியத்துக்குக் காரணம் அவன். ஆதிரா பாடசாலைக்காலம் முதல் மேடை ஏறுபவள் தான். ஆனால் மேடைக்கூச்சம் அவளிடம் எப்போதும் உண்டு. பல்கலைக்கழகம் வந்த போது முதலில் நடைபெற இருந்த ப்ரசன்டேஷனை நினைத்து எப்பொழுதும் பயந்து கொண்டே இருப்பாள். அதைச் செய்யும் போது இதயம் வெளியில் எகிறிக் குதித்து விடுமளவுக்கு துடிதுடித்து அவளை நிலையின்றித் தவிக்க வைத்தது.

பயந்து போனாள் பாவை. வருங்காலத்தில் இன்னும் எத்தனை எத்தனை செய்ய வேண்டியிருக்கும்? அதற்கெல்லாம் இப்படி அச்சத்துடன் செய்வதா? விஷ்ணுவிடம் இதைச் சொன்ன போது, அவளுக்குத் தைரியமூட்டினான். அவன் முன்னே சொல்லிக்காட்ட வைத்துப் பயிற்சியளித்தான்.

"உன் முன்னாடி யாரும் இல்லண்டு நெனச்சிக்கோ" என்பான் அவன்.

"முன்னாடி அத்தனை பேர் இருக்கும் போது எப்படி யாரும் இல்லயெண்டு நெனக்கேலும்? ப்ரசன்டேஷன் டைம்ல அவங்கெள்லாம் பேய் மாதிரி கண்ணுக்குத் தெரியுறாங்க" அச்சத்தை அப்போதும் முகத்தில் தேக்கிச் சொல்பவளைப் பார்த்துச் சிரிப்பான் விஷ்ணு.

"உன் அப்பாவ நெனச்சிக்க. அம்மா, தங்கச்சி தம்பிய நெனச்சிக்க. நானும் உன் முன்னாடி இருக்குற மாதிரி நெனச்சிக்க. எங்க முன்னாடி கேசுவலா பேசுற மாதிரி பேசு"

எப்படி எப்படியோ அவளுக்குச் சமாதானம் கூறி தைரியமாகப் பேசும் வரையில் அவன் ஊக்கப்படுத்திக் கொண்டேயிருந்தான். முதல் முறை பயம் இன்றித் தெளிவான மனதுடன் பிறர் முன் பேசிய நாளை அவளால் மறக்கவே முடியாது.

"நான் சூப்பரா ப்ரசன்ட பண்ணேன். பயமே வரல்ல விஷ். சந்தோஷமா இருக்கு" துள்ளிக் குதித்தவள், "தாங்க் யூ! உன்னால தான் விஷ்" என நன்றியுரைத்தாள்.

"நீ நல்லாப் பண்ணுனதுல எனக்கு ரொம்பச் சந்தோஷம். வாழ்த்துக்கள் டா ஆதி" அவளுக்குக் கை கொடுத்து வாழ்த்தினான்.

இன்றும் விஷ்ணுவிடம் சொல்ல வேண்டும் போல் இருந்தது. ஆனால் அவன் சந்தோஷமா வருவானா? இன்னும் கவலையில் தான் இருப்பானா? உள்ளுக்குள் கவலையை வைத்து வெளியில் சிரிப்பானா? என்று பல வினாக்களைக் கேட்டுக் கொண்டாள்.

எது எப்படியாயினும் அவனைப் பார்த்தேயாக வேண்டும் என்று உறுதி கொண்டாள். வேலைக்குச் சென்று விட்டு அவனைச் சந்திக்க முடிவு செய்தாள். அவனை எதிர்கொள்வதை நினைக்கும் போது முன்பு போலன்றி ஏதோ சங்கடமும் உருவானது. அதையும் மீறி அவனைப் பார்க்கும் ஆசை இருந்தது.

மாலையில் சந்திப்போம் என்று அவனுக்குக் குறுந்தகவல் அனுப்பி வைத்தவளுக்கு அவனிடம் சொல்ல ஏராளமான கதைகள் இருந்தன.


தொடரும்...
 
Top Bottom