• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கண்களுக்குள் பள்ளி கொண்டேன் - 15

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 15

“குட் மார்னிங் சார்…” என்று வாழ்த்து சொன்ன பலராமனின் முகத்தில் அந்த வாழ்த்துக்கான அறிகுறி கொஞ்சமும் இல்லை.

அதை கவனித்த ஜெகதீஸ்வரன் அவர் புறமாக தன் கவனத்தை முழுவதுமாக திருப்ப,

“முக்கியமான விஷயம் சார்.” என்று அவர் நிறுத்த,

‘என்ன?’ என்பதாக பார்த்து வைத்தான் ஜெகதீஸ்வரன் ஆனால் வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை.

அவன் கேள்வி கேட்பான் என்று அவர் பார்த்திருக்க, அவனும் கேள்வியை பார்வையில் தாங்கியபடி அவரையே பார்த்துக் கொண்டிருக்க, வேறு வழியில்லாமல் தொண்டையை செறுமி அவரே ஆரம்பித்தார்.

“சக்தி…” என்று அவர் சொல்ல, நிமிர்ந்து அமர்ந்தான் ஜெகதீஸ்வரன்.

அதில் சற்றே அவர் கவனம் களைந்தாலும் சொல்ல வந்த விஷயத்தை சொல்லி முடித்து விட வேண்டும் என்று மனதோடு கங்கணம் கட்டிக்கொண்டு,

“சீனியர் ஆர்க்கிடெக் சக்தி எல்லா விஷயத்துலயும் இண்ட்ரெப்ட் பண்றாங்க…” என்று சொல்ல,

“வாட்?” என்று வாயைத் திறந்தான் ஜெகதீஸ்வரன்.

“எஸ் சார். கூடுவாஞ்சேரி அப்பார்ட்மெண்ட், காரப்பாக்கம் மால் ப்ராஜெக்ட் இப்படி எல்லா ப்ராஜெக்ட்ளையும் அவங்களோட ஐடியாஸ் இருக்கு. நான் டீம் அசைன் பண்ணா அவங்க எல்லாரும் போய் சக்தி கிட்ட கேக்குறாங்க. சக்தியும் எல்லாருக்கும் சொல்லிக் கொடுக்கிறேன்ற பேர்ல அவங்களோட ஐடியாவை இம்பிளிமெண்ட் பண்றாங்க. இட்ஸ் நாட் குட் ஃபார் ஆர் கம்பெனி சார். ஒருத்தரே எல்லா ப்ராஜெக்ட்டையும் ஹேண்டில் பண்றது நாட் ஃபேர்.” என்று அவர் சொல்ல

“ஓகே…” என்றான் ஒற்றை வார்த்தையாக.

இதற்கு மேல் அவளிடம் பேச முடியாது என்பதை இத்தனை ஆண்டுகால அனுபவத்தில் உணர்ந்த பலராமன் வந்த வேலையை எப்படியோ செய்து விட்டோம் என்ற நிம்மதியோடு அறையில் இருந்து வெளியேறினார்.

அவர் தன் அறையை நோக்கி செல்லும் பொழுது சக்தியின் இடத்தை கடக்க, அவள் அலைபேசியில் “எஸ் சார்…” என்று சொல்லியபடி தனது மடிக்கணினியையும் சில வரைவு தாள்களையும் எடுத்துக்கொண்டு இருப்பது தெரிந்தது.

அவள் முகத்தில் தெரிந்த குழப்பத்தில் தான் சென்ற வேலை சிறப்பாக முடிந்தது என்பதை உணர்ந்து சந்தோஷக் கூச்சலிட்டது பலராமனின் மனது.

நாளுக்கு நாள் அலுவலகத்தில் சக்திக்கு கூடிக் கொண்டே இருக்கும் முக்கியத்துவம் அந்த மனிதரை மாற்றி இருந்தது. மனிதர்களுக்கே உரிய பொறாமை குணம் தலைதூக்க மனதோடு வெம்பி கிடந்தவர்,

“எல்லா விஷயத்தையும் நான் நான்னு வந்து நிக்கிறது. என்னவோ இவ மட்டும் தான் இந்த ஆபீஸ்லயே வேலை பாக்குற மாதிரியும் இந்த ஆபீஸையே தலையில தூக்கி சுமக்கிறது மாதிரியும் சீன்ஸ் பில்டப் பண்றா… எத்தனை வயசு மூத்தவன் நான்… என்னால ஷர்வா சார்னு மட்டும் தான் சொல்ல முடியுது. இவ… நேத்து வந்தவ… ஷர்வா வா போனு பேசிட்டு இருக்கா. அந்த அளவுக்கு க்ளோஸ் அவங்க ரெண்டு பேரும்.

அதுவும் ஜெகதீஷ் கிட்ட சைன் வாங்க உன்னால தான் முடியும்னு அவன் சொல்ற அளவுக்கு ஜெகதீஷ் கிட்டயும் நல்ல பேர் வாங்கி இருக்கா. அப்போ இத்தனை வருஷம் சர்வீஸ் பண்ண எனக்கு என்ன மரியாதை?

பேருக்கு ப்ராஜெக்ட் விஷயங்களை சொல்றாங்க. எல்லாத்தையும் அவ கூட டிஸ்கஸ் பண்ணி கம்ப்ளீட் பண்ணிட்டு பைனல் ப்ராஜெக்ட் என்கிட்ட வருது ஜஸ்ட் ஒரு சைனுக்காக… இப்படியே விட்டா இன்னும் கொஞ்ச நாள்ல என்னை தூக்கி சாப்பிட்டுருவா…

அவளுக்கு என்ன குடும்பமா குட்டியா? இல்ல லேட்டா போனா ஏன் லேட்னு கேட்க வீட்ல ஆள் இருக்காங்களா? யாரும் இல்லாத அனாதை. அவளால வேலை பார்க்க முடியும் நாள் முழுக்க உட்கார்ந்து. ஆனா நமக்கு அப்படியா இருக்கு? குடும்பம் குழந்தை எல்லாம் இருக்கே… அவங்களுக்கு செய்ய வேண்டியதையும் நான் தான் செய்யணும்.” என்று அவளைப் பார்த்து மனதுக்குள் கருவியபடி நின்றவரை, நிமிர்ந்து பார்த்தாள் சக்தி. நொடியில் மரியாதை கலந்த புன்னகை அவள் முகத்தில் வந்து அமர, வேறு வழி இல்லாமல் பதிலுக்கு புன்னகைத்து வைத்த மனிதர் அவளைக் கடந்து சென்று விட்டார்.

மடிக்கணினியை தன் இடத்திலேயே வைத்தவள் கையில் ஒரு கோப்பினை எடுத்துக்கொண்டு ஜெகதீஸ்வரன் அறை நோக்கி சென்றாள் சக்தி.

கதவில் இரண்டு விரல்களால் தட்டி ஒலி எழுப்ப, “கம் இன்” என்றது ஜெகதீஸ்வரனின் அழுத்தமான குரல்.

உள்ளே வந்தவளை பார்த்த நொடி, அவன் விழிகள் ஒரு கணம் அசைவின்றி அப்பி கொண்டது அவள் மீது.

சைட் விசிட் இருக்கும் நாட்களில் அதற்குத் தோதாக பேண்ட் சட்டையில் வரும் சக்தியின் மற்ற நாட்களுக்கான உடை சுடிதார் அல்லது குர்தி. எந்த உடை அணிந்தாலும் அதில் கண்ணியத்தை பிரதிபலிக்கும் சக்தி இன்று புடவையிலும் அந்த கண்ணியத்தை பிரதிபலித்தாள்.

இந்த அலுவலகம் வந்து சேர்ந்த எட்டு மாதங்களில் இதுவே முதல் முறை.

அடர் தேன் நிறத்திற்கும் தாமிர நிறத்திற்கும் நடுவே இருக்கும் மென்மையான பிரௌன் நிற காட்டன் சில்க் புடவை அணிந்திருந்தாள். அதன் கரையில் இருந்த மெலிதான ஆன்ட்டிக் கோல்ட் வேலைப்பாடு அவளது பழுப்பு நிற விழிகளை இன்னும் பிரகாசமாக காட்டியது.

அந்த கண்கள்… மழை வரப்போகும் நேரத்து மண்ணின் நிறம் போல பார்த்தவுடன் இழுத்து நிறுத்தும் நிறம்.

காதில் புடவைக்கு தோதான குட்டி ஆன்ட்டிக் ஜிமிக்கி. கழுத்தில் எப்பொழுதும் அவள் அணிந்திருக்கும் லிங்க டாலர் கொண்ட மெல்லிய தங்க சங்கிலி. வலது கையில் மெல்லிய பிரேஸ்லெட், இடது கையில் கடிகாரம்.

அதிக அலங்காரம் எதுவும் இல்லை. ஆனால் நேசம் கொண்ட கண்களுக்கு அதுவே அவளை பேரழகியாக காட்டியது.

அவள் உள்ளே நுழைந்ததும் அந்த ஏசி அறையின் வாசத்தையே மாற்றி இருந்தது, நீளமான முடியை பின்னி அதில் அவள் வைத்திருந்த இரண்டு முழ மல்லிகைப்பூ.

நெற்றியில் சிறிதாய் குங்குமம்,
அதன் மேலே மங்கலாக தெரிந்த திருநீறு. காலை கோவிலுக்கு போய் விட்டு வந்திருக்கிறாள் என்று சொல்லாமல் சொல்லியது அந்த முகம்.

கிட்டத்தட்ட நண்பகல் நேரத்தை நெருங்கி இருந்த அந்த நேரத்திலும் அன்றலர்ந்த மலர் போல புத்துணர்ச்சியோடு இருந்தது அவளது தோற்றம்.

“சார்…”

அவள் மீண்டும் அழைத்த போது தான் நிகழ்காலத்துக்கு திரும்பினான் அவன்.

“இந்த பாண்டிச்சேரி வில்லா லேஅவுட்…” என்றவள் அருகே வந்து கோப்பினை வைத்தாள்.

அவள் குனிந்து அந்த வரைவினை எடுத்த நொடி, மல்லிகை வாசம் இன்னும் அருகே வந்தது.

அந்த வாசனையோடு கலந்து சந்தனம், கோவில் தீபம், கற்பூரத்தின் வாசமும் இருப்பது போல ஒரு தோற்றம் அவனுக்குள்.

அவன் பார்வை ஒரு நொடி அவளது திருநீறு படிந்த நெற்றியில் நின்று நிலைத்து பின் விருப்பமே இல்லாமல் விலகி, அவள் காட்டிய கோப்பினை திறந்து பார்க்க ஆரம்பித்தான்.

சில நொடிகள் அதை பார்த்தவன்,

“இந்த வால் அலைன்மென்ட் யார் சேஞ்ச் பண்ண சொன்னது?” என்று கேட்க,

“நான் தான் சார்…” என்றாள் தெளிவான குரலில்.

ஜெகதீஸ்வரன் அந்த காகிதத்தில் இருந்து பார்வையை உயர்த்தவே இல்லை.

“ஒரிஜினல் பிளான்ல வால் ஸ்ட்ரைட்டா போயிட்டு இருந்தது. இப்போ… ஒய் திஸ் கர்வ்?” என்று சுட்டு விரலால் அந்த இடத்தை சுட்டி அவன் கேட்க, சக்தி ஒரு நொடி அமைதியாக நின்றாள்.

பிறகு பென்சில் ஒன்றினை எடுத்தவள்,

“சார் இந்த சைட் ஈஸ்ட்” என்று சொல்லி அந்த காகிதத்தில் ஒரு அம்புக்குறியை இட்டவள்,

“மார்னிங் சன் ரைஸ் இந்த ஆங்கிள்ல வரும்…”

அவன் பார்வை இப்போது முழுக்க அவள் கையிலிருந்த பென்சிலின் மேல் இருந்தது.

“சோ இந்த வால் ஸ்ட்ரைட்டா இருந்தா லைட் வந்து இங்க மட்டும் ஹிட் ஆகும்.” என்றவள் கோர்ட்டியார்ட் ஓரத்தை சுட்டிக்காட்டினாள்.

“மீதி இருக்கிற இடம் ஷேடோல போயிடும். லைட் ஸ்ப்ளிட் ஆகிடும்.” என்று அவள் சொல்ல,

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை உணர்ந்தவன் அவளாகவே சொல்லட்டும் என்று எண்ணி, “ஆனா ஸ்ட்ரைட் வால் தான் ஸ்ட்ரக்சர்லி ஸ்ட்ரோங்கர் சக்தி…” என்று ஜெகதீஸ்வரன் சொல்ல,

“யு நோ இட் சார்… இங்க ஸ்ட்ரென்த் இஷ்யூ இல்ல… ஆங்கிள் கொஞ்சம் சேன்ஜ் பண்ணினா லைட் டைரக்டா கட் ஆகாம ஸ்லைட் ஆகும்.”

அவள் பென்சிலின் மெதுவாக ஒரு வளைவினை வரைந்தாள்.

“இந்த கர்வ் சன்லைட்ட பவுன்ஸ் பண்ணும். அதனால ஹோல் கோட்டி யார்ட்டுக்குமே ஈவன் லைட்ஸ் கிடைக்கும்.”

ஜெகதீஸ்வரன் புருவம் சற்றே சுருங்கியது. அவள் விவரித்து கொண்டே இருந்தாள்.

“மார்னிங் சன் லைட் சாப்டா இருக்கும் சார் அந்த லைட் ஹவுஸ்க்குள்ள ஸ்பிரெட் ஆனா அந்த ஸ்பேஸ் வாமர்ரா (space warmer) ஃபீல் ஆகும்.

டெக்னிக்கலி ஸ்ரெய்ட் வால் பெர்ஃபெக்ட் தான்.

கரெக்ட் மெசர்மென்ட்ஸ், கரெக்ட் சிமிட்ரி, ஈசி கன்ஸ்ட்ரக்சன்…. எல்லாம் ஓகே தான்.

ஆனா வீடு…” என்று சொல்லிக் கொண்டே வந்தவள் சிறு இடைவெளி விட்டு,

“வீடு டெக்னிக்கலி கரெக்டா இருந்தா மட்டும் போதாது சார். காலையில எழுந்தவங்க ஃபர்ஸ்ட் பார்க்குற வெளிச்சம் ஹார்ஷா இருக்கக்கூடாது.” என்றவள் அந்த வரைபடத்தையே பார்த்தாள்.

“வால் மேல ஸ்லைடாகி உள்ள வர்ற அந்த சாஃப்ட் லைட் வீட்டோட மொத்த மூடையே சேஞ்ச் பண்ணும். சந்தோஷமா இருக்குற வீடுகள்ல வெளிச்சம் நிறைய இருக்கும் சார்…” என்று சொல்லும் பொழுது அவளது பழுப்பு நிற கண்கள் இன்னும் அதிகமாய் மின்னியது.

அவள் பேசியது அந்த காகிதத்தில் வரையப்பட்ட கோடுகளைப் பற்றியது அல்ல. இந்தக் கோடுகள் நாளை கல்லாலும் மண்ணாலும் உருவம் பெற்று மாறப்போகும் இடத்துக்குள் வாழும் மனிதர்களைப் பற்றியது. அந்த வீட்டுக்குள் வாழப் போகும் மனிதர்களைப் பற்றி அவள் பேசிக் கொண்டிருந்தாள்.

அவனிடம் வேலை பார்க்கும் அனைவரிலிருந்தும் அவளை தனித்து காட்டுவதும் இதுதானே?! இன்னும் இன்னும் அதிகமாய் அவனை தன்னை நோக்கி இழுத்துக் கொண்டு இருந்தாள் சக்தி.

அவள் வந்த நொடி முதல் புற அழகால் அவனை ஆச்சரியப்படுத்தி இருந்தாலும், அவளது அக அழகு, அவள் யோசிக்கிற விதம், ஒவ்வொன்றையும் அவள் உணர்கின்ற விதம், ஒரு வீட்டை வெறும் கட்டிடமாக பார்க்காமல் உயிர் உள்ளதாய் பார்க்கும் பாங்கு அவனை மொத்தமாய் அடித்து சாய்த்திருந்தது ‌

அவன் அவளில் ஆழ்ந்து போய் இருக்க அவளோ, மேஜை மீது பரப்பப்பட்டிருந்த காகிதங்களில் கண்ணை பதித்து,

“People think architecture is about walls…” என்று சொல்லி மெதுவாக சிரித்தவள்,

“Actually it’s about how a person feels inside those walls.” என்று முடித்தாள் தீர்க்கமான குரலில்.

அந்த நொடி…ஜெகதீஸ்வரனுக்கு அவள் குரல் கூட வேறு மாதிரி கேட்டது. மெல்ல இருக்கையின் பின்னே சாய்ந்தவன், அவளை பார்த்தபடியே இருந்தான்.

அவன் எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்து இருக்க, “சார்…” என்று மெதுவாக அழைத்தாள் சக்தி.

அவன் இமைகளை மூடித் திறந்தான்.

“கண்டினியூ…” என்று அவன் சொல்ல,

“இந்த சைட் ஓபன் கோர்ட்டியார்ட் வச்சா நேச்சுரல் வென்ட்டிலேஷன் இன்னும் பெட்டரா வரும் சார்…” என்றபடி வரைபடத்தின் ஓரிடத்தை சுட்டிக்காட்டினாள் சக்தி.

அவள் பேசிக்கொண்டிருக்க,
அவளது புடவையின் மீது விழுந்து சூரிய ஒளி மின்னியது. அது அவள் பழுப்பு நிற விழிகளில் விழுந்து, அவள் பேசும் ஒவ்வொரு நொடியும் அந்த நீரோட்டம் மிக்க விழிகளையும் ஜொலிக்க வைத்தது. அவன் கவனிக்காமல் இருக்க நினைத்தாலும் முடியவில்லை.

“சார்…” என்று சக்தி அவனை அழைக்க அவள் விழிகளை பார்த்தவன் “என்ன?” என்பதாக புருவங்களை ஏற்றி இறக்க,

“ஓகே தான சார்?” என்று அவள் கேட்க,

“ம்.” என்றவன் உடனே கையொப்பமும் இட்டு விட்டான்.

சக்தி மேஜையின் மீது பரப்பி வைக்கப்பட்டிருந்த காகிதங்களை எல்லாம் ஒன்று சேர்த்து கோப்பினில் அடுக்கிக் கொண்டிருக்க,

“குட் வொர்க்.” என்றான் ஜெகதீஸ்வரன் திடீரென்று. அதில் அவள் நிமிர்ந்து பார்த்தாள். முகம் முழுவதும் மலர்ந்திருக்க சிறு ஆச்சரியம் அதில் தெரிந்தது.

ஆனாலும், “தேங்க்யூ சார்” என்றாள் மெல்லிய புன்னகையோடு. அந்த சிரிப்பில் ஒரு அமைதி இருந்தது.

அவள் திரும்பிப் போக முயன்ற நேரம்,

“சக்தி.” என்று அவன் அழைத்தான்.

“எஸ் சார்…” என்றாள் அவள் அடுத்த நொடி.

ஒன்றும் பேசாமல் அவன் பார்வை ஒரு நொடி அவளது நெற்றியில் நின்றது. திருநீறு இன்னும் மங்காமல் இருந்தது.

“கோவிலுக்கு போயிருந்தியா?” தன்னையும் மீறி ஜெகதீஸ்வரன் கேட்டிருக்க, ஆச்சரியத்தில் கோழி குண்டாக விரிந்த கண்களோடு அவனை ஏறிட்டுப் பார்த்தவள்,

“ஆமா… சார்…” என்று சொல்ல,

“எனி ஸ்பெஷல்?” அடுத்த கேள்வி வந்தது கணமும் இடைவெளி இன்றி.

“ஃப்ரெண்டோட பர்த்டே…” அவள் பதில் சொல்ல, அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான் ஜெகதீஸ்வரன்.

சில நொடி மனதிற்குள் சில பல வாதங்கள் வந்து செல்ல, அதற்கான பதிலை தெரிந்து கொள்வதற்காக, “வாட் அபௌட் யூ?” என்று அவன் கேட்க,

தன் உயரத்திற்கு முழுவதுமாக நிமிர்ந்து நின்றவள், “எனக்கு அம்மா அப்பா யாருன்னு தெரியாது. சோ எனக்கு பிறந்த நாளும் தெரியாது. பொறந்த நாலு நாள்ல ஆஷ்ரமத்துக்கு வந்து சேர்ந்ததா சொல்லுவாங்க. அதனால அவங்களுக்கும் பிறந்தநாள் இதுன்னு உறுதியா சொல்ல முடியாது. ஆர்ஃபனேஜ்ல வளந்தவ. யார் ஏன்னு எனக்கு தெரியாது. சின்ன வயசுல நிறைய யோசிச்சி இருக்கேன். ஆனா இப்போ பழகிடுச்சு…” எக்கின் உறுதியோடு வந்த அவள் வார்த்தைகளில், அவனுக்கு தேவையான சங்கதி கிடைத்தது.

அவள் குரலில் வருத்தமோ கழிவிறக்கமோ கூட இல்லை. நடந்தது இதுதான் என்பதை சொல்லும் இயல்பும், அதில் எதுவும் என் பிழை இல்லை என்று சொல்லும் தைரியமும் திடமும் அச்சொட்டாக தெரிந்தது.

ஆனாலும் அந்த “பழகிடுச்சு” என்ற வார்த்தை… அவன் மனதுக்குள் ஏனோ அழுத்தமாக வந்து நின்றது.

ஒரு குழந்தை… பிறந்து நான்கு நாட்களில் பெற்றவள் விட்டுச் சென்ற வாழ்க்கை! ஆனாலும் அதை நினைத்து உடைந்து போகாமல் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு உயர்ந்து நின்று கொண்டிருக்கிறாள். அவளை பார்த்துக் கொண்டிருந்த அவன் மனதுக்குள் உண்டான மரியாதை, தன்னை பெற்றவரை பெற்றவரிடமும் உருவாகும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வந்தது ஜெகதீஸ்வரனுக்கு.

“உண்மைய சொல்லனும்னா எங்க ஆசிரமம் இல்லன்னா நான் இவ்வளவு ஸ்ட்ராங்கா வளர்ந்து இருக்க மாட்டேன். சில நேரங்கள்ல இல்லாதது கூட ரொம்ப நல்லது தான் சார்.”

அந்த கடைசி வரி வந்த விதம்… அவனுக்குள் எங்கோ ஆழமாக போய் அழுத்தமாய் குத்தி நின்றது.

“தேங்க்யூ சார்…” என்றவள் சொல்லி விடை பெற, அவன் தலை மெதுவாக அசைந்தது.

கதவு வரை சென்றவள் திடீரென்று திரும்பினாள்.

“சார்…”

“ம்?”

“சின்ன சஜஷன்… ரெக்வஸ்ட்ன்னு கூட சொல்லலாம்…”

“ம்ம்…”

“ஒரு வீடு டிசைன் பண்ணும் போது அங்க யார் வாழ போறாங்கன்னு இமேஜின் பண்ணுனா அந்த டிசைன் இன்னும் உயிரோட்டமா வரும் சார்… நம்ம டெக்னிக்கலி ரொம்ப ஸ்ட்ராங்கா திங்க் பண்றோம். அதோட கொஞ்சம் பீலிங்ஸ் ஆட் பண்ணுனா இன்னும் இன்னும் பெட்டரா வரும்… இது என்னோட ஸ்மால் சஜஷன் மட்டும் தான்.”

அவ்வளவுதான் மனதில் நெடு நாட்களாக தோன்றி அவளை பிராண்டி கொண்டிருந்த எண்ணங்களை சொல்லிவிட்டு வெளியேறினாள்.

அறையின் கதவு மெதுவாக மூடப்பட்டது. அவனது அறை மீண்டும் அமைதியாகியது.

ஆனால் அவளது மல்லிகை வாசம் விடாமல் சுற்றிக் கொண்டிருக்க அவளது குரலும் பழுப்பு நிற விழிகளும் அங்கேயே அவள் இருப்பதைப் போல ஒரு உருவகத்தை கொடுத்தது.

“சில நேரம் இல்லாதது கூட நல்லது தான்…”

அந்த வரி ஜெகதீஸ்வரனின் மனதுக்குள் திரும்பித் திரும்பி ஒலித்தது.

ஜெகதீஸ்வரன் மெதுவாக இருக்கையின் பின்னே சாய்ந்தான்.

தினம் தினம் புதிதாக தெரிந்தாள் பெண்.

அவள் வாழ்க்கையை பார்த்த விதம்…
அதை தாங்கி நின்ற விதம்…
அதை அழகாக மாற்றி வாழ்ந்த விதம்… இன்னும் இன்னும் அதிகமாய் தன்னை நோக்கி அவனை ஈர்த்தாள் சக்தி.

ஜோதிடர் வந்து சென்ற அந்த இரவில் இவை அனைத்தும் மனக்கணுக்குள் வர ஒரு அழகான அமைதி ஜெகதீஸ்வரனுக்குள்.

தமையனின் நிலைக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாத வண்ணம் தலைகீழாக இருந்தது தம்பியின் நிலை.

அந்த இரவு நிர்மலமான மனத்தோடு ஜெகதீஸ்வரன் தூக்கத்தை அரவணைக்க, அல்லாடி கொண்டிருந்தான் சர்வேஸ்வரன்.

ஏனென்றால் அன்று காலை அவன் பார்த்த விஷயங்கள் அப்படி…

அலைபேசியில் பேசிக்கொண்டே வந்த சர்வேஸ்வரன், ஜெகதீஸ்வரனின் அறைக்கதவு திறந்த சத்தத்தில் தலையை நிமிர்த்தி பார்த்தான்.

உள்ளிருந்து வெளியே வந்தாள் சக்தி. அவன் கண்களும் வட்டமாக விரிந்து கொள்ள வாய்விட்டு சிரித்தாள் சக்தி.

“ஹாய் ஷர்வா…” என்றவள் சொல்ல,

“ஹாய்…” என்றவன் பதில் சொன்னாலும், இரண்டு விநாடி உறைந்து போய் இருந்தவன் அவளது சிரிப்பு சத்தத்தில் சுய நினைவுக்கு வந்து மயங்குவது போல செய்கை செய்தான்.

அதில் அவன் தன்னை கிண்டல் செய்வதை உணர்ந்த சக்தி, “என்ன?” என்று கேட்டு சிரித்தாள்.

“ஒன்னும் இல்ல…” என்று வேகமாக தலையை ஆட்டியவன், “ரொம்ப டிஃபரண்டா இருக்கீங்க சக்தி மேடம்…” என்றும் சொல்ல,

“எப்படியாம்?” என்று புருவங்களை சுருக்கி அவள் கேட்க,

“ம்ம்ம்…” என்று முகத்தை மிகத் தீவிரமாக வைத்துக் கொண்டவன், “ஆஃபீஸ்ஸோட மொத்த புரோடக்டிவிட்டியும் குறையிற அளவுக்காம்…” என்று சிரிக்காமல் அவன் சொல்ல அவள் சிரித்துவிட்டாள்.

“இந்த கிண்டல் தானே வேணாங்கறது…” சக்தி சொல்ல,

“நிஜமா தான் சொல்றேன்.” என்றவன் சொல்லிக்கொண்டே ஜெகதீஸ்வரனின் அறைக் கதவை பார்த்தான்.

“தலைவர் உள்ள இருக்காரா?”

“ம்.”

“மூட் எப்படி?”

“நார்மலா தான் இருந்தாரு…”

அவள் சாதாரணமாக சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

ஆனால், அதற்குப் பிறகு உள்ளே போன சர்வேஷ் பார்த்தது வேறொன்றை.

அறைக்குள் நுழைந்த நொடி அவன் கவனத்தில் பட்டது அமைதி.

அது வழக்கமான அமைதியாக அவனுக்கு தெரியவில்லை. ஜெகதீஸ்வரன் இருக்கையில் பின்னே சாய்ந்து அமர்ந்திருந்தான்.

அவன் பார்வை மேஜையில் இருந்தது. மேஜை முழுவதும் கோப்புகளும் மடிக்கணினிகளும் நிறைத்து இருந்தது.

ஆனால் அவனது மனமோ அங்கே இல்லை என்பது அவன் முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது. தமையனின் முகத்தை பார்த்த சர்வேஸ்வரனின் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.

அந்த முகத்தில்… ஜெகதீஸ்வரனின் அழுத்தமான முகத்தில் மிக மிக மெலிதான புன்னகை. இது நாள் வரை அவன் பார்த்தறியாத முகம் புன்னகை அது.

அது கூட கண்ணிமைக்கும் நேரம் வரை தான். ஆனால் விடா கண்டனான சர்வேஸ்வரன் அதனை கவனித்து விட்டான்.

அதோடு அந்த மேஜையின் மையத்தில் ஜெகதீஸ்வரனின் பார்வைக்கு நேராக கிடந்தது சில குண்டுமல்லிகளும், மல்லிகைப்பூ இதழ்களும்.

அதையே வெளிவிரித்து பார்த்தவன் தன்னையும் அறியாமல், அண்ணா இன்று கூவி விட,

“ம்ம்… ஷர்வா என்ற அண்ணனின் அழுத்தமான குரலில் தான் நினைவுக்கு வந்தான்.

அவன் முகத்தைப் பார்த்த ஜெகதீஸ்வரன் பேச்சை ஆரம்பிக்க வாய்க்கு வந்ததை கூறினான் சர்வேஸ்வரன்.

“வாட்?”

“ஃபைல்”

“ஓ…” என்றவன் கையை நீட்ட கோப்பினை அவன் கையில் கொடுத்தாலும் பார்வை முழுவதும் ஜெகதீஸ்வரன் மேல் தான் இருந்தது அவனுக்கு. கையொப்பம் இட்டு முடித்தவன்

“எனிதிங் எல்ஸ்?” என்றவனின் அழுத்தமான குரலில் உடனே நேராக நிமிர்ந்து நின்ற சர்வேஷ்,

“இல்ல.” என்று சிறு குழப்பத்தோடு அவன் சொல்ல

“தென் கோ என்று கதவை நோக்கி கையை காட்டினான் ஜெகதீஸ்வரன், அவனுக்கு விளங்கும்படி.

“ஓகே என்றவன் கிளம்பாமல் அங்கேயே நிற்க மீண்டும் நிமிர்ந்து சர்வேஸ்வரனை பார்த்த ஜெகதீஸ்வரன் தென் கோ என்று அழுத்தமான குரலில் மீண்டும் கையை நீட்டி சொல்ல, அவன் கிளம்பிவிட்டான்.

ஆனால் அந்த அறைக்குள் இருந்த அதிர்வு மட்டும் இன்னும் அவன் மனதில் இருந்து போகவில்லை.

“அய்யய்யோ…” இரவின் நிசபத்தை கிழித்துக்கொண்டு திடீரென்று தற்போது வாய்விட்டு புலம்பினான் சர்வேஷ்.

“தலைவர் முகத்துல அந்த ஸ்மைல் ஏன் வரணும்?”
என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டவன் படுக்கையில் பின்னே சாய்ந்தவன் தலையை பிடித்துக் கொண்டான்.

“அதுவும் மல்லிகைப்பூ… சக்தி தலையிலும் அதே மல்லிகை பூ…”

அடுத்த நொடி தானே தன் வாயை மூடிக்கொண்டான்.

“ஷ்ஷ்ஷ்… மெதுவா பேசுடா.” தன்னைத்தானே கண்டித்துக்கொண்டவன் மீண்டும் விட்டத்தை வெறித்து பார்த்தான்.

“பாட்டி ஒரு பக்கம் list குடுக்காங்க…

நல்ல குடும்பம்… ஆசாரம்… பேக்ரவுண்ட்…” என்று சொல்லியவன் மனதிற்குள் அடுத்த நொடியே சக்தியின் முகம் வந்தது.

“இன்னொரு பக்கம் தலைவர் கண்ணு…” என்று புலம்பி கொண்டு இருந்தவன் வார்த்தைகள் அரை கதவு திறந்த சத்தத்தில் பாதியில் நின்றது.

“யாரு தலைவர்?” என்றபடி உள்ளே வந்தால் மகாலட்சுமி.

சற்று பயத்தோடு கதவை பார்த்துக் கொண்டிருந்தவன் மகாலட்சுமி பார்த்ததும் கத்தியே விட்டான்.

“ஏய் பேய் மாதிரி வராதடி!”

“நீ தான் ஹாரர் மூவி பேக்ரவுண்ட் போட்டு தனியா பேசிட்டு இருந்த பேயே...” என்றபடி வந்தவள் அவனது படுக்கையின் மீது அமர்ந்தாள்.

பேயறைந்தது போல இருந்த சர்வேஷின் முகத்தை கையில் பற்றி திருப்பி திருப்பி பார்த்தவள்,

“என்னடா அண்ணா தனியா உட்கார்ந்து புலம்பிட்டு இருக்க?” என்றும் கேட்க, சர்வேஷ் இரண்டு விநாடி அவளை பார்த்தான்.

சொல்லலாமா வேண்டாமா என்று தனக்குள்ளே போராடியவன் ஒரு முடிவுக்கு வந்தவனாக இறுதியில் மெதுவாக குனிந்தான்.

“ஒரு டவுட்” என்க,

“என்ன?” ஆர்வமாய் கேட்டாள் மகாலட்சுமி.

“நம்ம அண்ணா…” என்றவன் வார்த்தையை தேடினான்.

“மனுஷன் தானே?” ஒரு வழியாக கேட்டு விட மகாலட்சுமி ஒன்றும் புரியாமல் கண்களை சிமிட்டினாள்.

“என்னடா அண்ணா கேள்வி இது?” என்றும் மகாலட்சுமி கேட்க,

“இல்ல…” என்று ஆரம்பித்தவன் பின் எதையோ யோசித்தவன் ஆக தீவிரமாக தலையை ஆட்டினான்.

“இல்ல மஹா… நான் இவ்வளவு வருஷம் ரோபாட்னு நினைச்சேன்.” என்று சொல்ல, பக் என்று சிரித்து விட்டாள் மகாலட்சுமி.

சர்வேஸ்வரன் பார்த்த அன்பான பார்வையில் சிரிப்பை அடக்கி கொண்டவள்,

“ஏன்?” என்று கேட்க, அவளையே ஆழமாக பார்த்தபடி,

“இன்னைக்கு காலையில அவரோட கேபின்ல ஒரு ஸ்மைல் பண்ணாரு.” என்று நிறுத்தி நிதானமாக சர்வேஸ்வரன் சொல்ல மகாலட்சுமி சிரிப்பு கொஞ்சமாய் குறைந்தது.

விளையாட்டுத் தனங்களை கைவிட்டவளாக, முகம் தீவிரமாக,

“அண்ணா?” என்று அவனை அழைக்க,

“ம்…” என்றான் சர்வேஸ்வரன்.

எதுவும் புரிந்தது போல இருந்தாலும் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு, “யாரைப் பார்த்து?” என்று தெளிவாக அவள் கேட்க,

அவன் இரண்டு விநாடி அமைதியாக இருந்தான்.

பின் தீவிரமான முகபாவனையோடு, “மல்லிகைப்பூவோட சேர்ந்த டெஸ்டினியைப் பார்த்து…” என்று சொல்ல

கடுப்பாகி போன மகாலட்சுமி, “டேய் தெளிவாவே பேச மாட்டியா நீ? ஸ்ட்ரைட்டா சொல்லு!” என்று தலையணையை எடுத்து அவன் மீது எறிந்தாள்.

அதை பிடித்தவன் சிரித்துக்கொண்டே பின்னே சாய்ந்தவன்,

“வெயிட் அண்ட் வாட்ச் பாப்பா…” என்றான் மனதுக்குள் தோன்றிய யோசனைகளை எல்லாம் தனக்குள்ளே புதைத்த படி.
 
Top Bottom