• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கண்களுக்குள் பள்ளி கொண்டேன் - 16

skp

New member
அத்தியாயம் 16


அந்த 40 அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பத்து மாதங்கள் கடந்திருந்தது.

முதலில் வெறும் இரும்புக் கம்பிகளும் மண் மேடுகளுமாக இருந்த இடம் இப்போது சென்னையின் வானத்தை தொட முயலும் அளவுக்கு உயர்ந்து நின்றது.

முப்பத்து இரண்டு தளங்கள் வரை பிரதான கட்டமைப்பு எழுந்து நின்றிருந்தது.

வானத்தை கீறுவது போல மூன்று டவர் கிரேன்கள் (Tower Cranes) இடைவிடாமல் சுழன்று கொண்டிருந்தன. மேல்தளங்களில் ஷட்டரிங் வேலைகள் (Shuttering Works), கான்கிரீட் ஊற்றும் பணிகளும் (Concrete Pouring) இரவு பகலாக நடந்துகொண்டே இருக்க…

கீழ்தளங்களில் மின்கம்பி குழாய்கள் (Electrical Conduits) சுவர்களுக்குள் பதிய, சில தளங்கள் ஏற்கனவே சுவர் பூச்சு நிலைக்கு (Wall Plastering Stage) வந்து விட்டிருந்தன.

லிப்ட் ஷாஃப்ட்கள் (Lift Shafts) கருந்துளை போல கட்டிடத்தின் உள்ளே செங்குத்தாக விழுந்து நிற்க, தீயணைப்பு குழாய்கள் (Fire Line Pipes) ரத்த நாளங்கள் போல கட்டிடமெங்கும் ஓடியது.

ஒரு பக்கம் கண்ணாடி முகப்பு அளவீட்டு பணிகள் (Glass Facade Measurements)…

மற்றொரு பக்கம் பார்க்கிங் ரேம்ப் நீர்ப்புகா பாதுகாப்பு வேலைகள் (Parking Ramp Waterproofing)…

அதற்குள் மாதிரி குடியிருப்பின் (Sample Flat) உள் அலங்காரப் பணிகளும் ஆரம்பமாகி இருந்தது.

இன்னும் முழுமையடையாத அந்த கட்டிடம் கூட, ஏற்கனவே ஒரு நகரத்தின் எதிர்காலத்தை சுமந்து நின்றது போல தெரிந்தது.

முப்பதாவது தளத்தின் வெளிப்புறத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மேடையின் விளிம்பில் (temporary deck) நின்றிருந்தனர் சக்தியும் ஜெகதீஸ்வரனும்.

காற்று பலமாக வீசியது. அங்கிருந்து பார்க்க கீழே இருந்த மனிதர்கள் எல்லாம் எறும்புகளைப் போல தெரிந்தனர்.

அடித்தளத்தில் இருந்து தான் நிற்கும் தளத்திற்கு மேலே கட்டப்பட்டுக் கொண்டிருந்த இரண்டு தளங்களையும் மாறி மாறி பார்த்தவள் முகத்தில் அத்தனை ஆனந்தம்.

அவள் வடிவமைத்தது அல்லவா?! கரு கொண்ட தாய் தன் வயிறை தடவி தடவி பார்த்து உள்ளிருக்கும் குழந்தையோடு பேசிக்கொள்ளும் பொழுது எப்படி எல்லாம் உவகை கொள்வாளோ அப்படி ஒரு ஆனந்தத்தின் உச்சத்தில் இருந்தாள் சக்தி.

“சார்…” என்று அழைத்தவளின் குரலில் இருந்த உற்சாகத்தில் தானும் உற்சாகம் கொண்டவனாக திரும்பிப் பார்த்தான் ஜெகதீஸ்வரன்.

“நம்ம காலத்துக்குப் பிறகும் நம்ம பேரு சொல்லும்ல சார்… கன்ஸ்டிரக்ஷன் வேர்ல்டுல சென்னை பத்தி பேசும் பொழுது ஈஸ்வர் பில்டர்ஸ் பத்தி பேசாம முடியாதுல்ல சார்.” என்று அவள் சொல்லும்போது தான் அவள் முகத்தில் எத்தனை எத்தனை உணர்வுகளின் வர்ண ஜாலங்கள்.

காதல் கொண்டவனின் கண்களை கட்டி போட்டது அவளது உணர்வுகள் மிகுந்த முகம்.

“இங்க இருந்து பார்க்கும்போது…
நாம பேப்பர்ல போட்ட லைன் தான் இவ்வளவு பெரிய பில்டிங்கா மாறி நிக்குதுன்னு நினைக்கும்போது வேற மாதிரி ஃபீல் சார்…‌” என்றவள் தான், இந்த கட்டிடத்தினை வடிவமைத்தவள் என்று இந்த நொடி சொன்னால் எவரும் நம்ப மாட்டார்கள்.

சிறு குழந்தையின் சந்தோஷத்தோடும் பிரம்மிப்போடும் சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

காற்றில் பறந்த அவள் முடியை காதோரமாக ஒதுக்கி விட முயற்சித்துக் கொண்டு இருந்தவளை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஜெகதீஸ்வரன்.

பத்து மாதங்களுக்கு முன்பாக அவளைப் பார்த்த நாள் நினைவுக்குள் வந்து போனது. கட்டிடம் வளர்ந்தது போல அவன் உள்ளத்திற்குள் அவளும் அவளது எண்ணங்களும் நினைவுகளும் அசுர வளர்ச்சியை அடைந்திருந்தது.

ஒவ்வொரு நாளுக்கும் வண்ணங்களை ஏற்றி அவன் வாழ்வையே வானவில்லாய் மாற்றி இருந்தாள்.

“இன்னும் எட்டு ஃப்ளோர்ஸ்… சிக்ஸ் மந்த்ஸ் மேக்ஸிமம்… ஸ்ட்ரக்சர் கம்ப்ளீட் ஆகிடும்.” அவளைப் பார்த்தபடி அவன் சொல்ல, மௌனமாக தலையசைத்த சக்தியின் முகத்தில் இருந்த உற்சாகம் மட்டும் நொடிக்கு நொடி விண்ணை தொட்டுக் கொண்டிருந்தது.

அவள் உற்சாகத்தை இன்னும் அதிகப்படுத்த எண்ணியது அந்தக் காதலனின் உள்ளம்.

“சக்தி…” அழுத்தமான குரலில் அவன் அழைக்க,

அங்கே நடைபெற்றுக் கொண்டிருந்த வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த சக்தி அவன் புறமாக திரும்பினாள்.

“100 இயர்ஸ் ஓல்டு ஹெரிடேஜ் ஆர்க்கிடெக்சுரல் சைட் ஒன்னு வந்திருக்கு. போய் பார்க்கலாமா?” என்று அவன் கேட்க அவளது கண்கள் மின்ன ஆரம்பித்தது.

“கண்டிப்பா… கண்டிப்பா சார்…” என்று அவள் சொல்லியதில் இதழ்களில் முகிழ்த்த புன்னகை அவன் முகம் முழுவதும் படர, அம்சமாய் தெரிந்தான் எதிரே நின்று இருந்தவளுக்கு.

புன்னகை மாறாமல், “கிளம்பலாமா சக்தி?” அவன் கேட்க,

“கிளம்பலாம் சார்… எனக்கு இதுபோல ஹெரிடேஜ் ஸ்ட்ரக்சர் பார்க்க ரொம்ப பிடிக்கும் சார்.” என்றவள் சொல்ல,

“தெரியும்.” என்றான் ஒற்றை வார்த்தையாக.

“எப்படி?” ஆச்சரியமாக அவள் கேட்க,

“கட்ட போற கட்டிடங்களிலேயே வாழ போற மக்களை யோசிச்சு பார்க்கிற உனக்கு, பழைய கட்டிடங்கள் பிடிக்காம போனா தான் ஆச்சரியப்படனும்…” வழக்கத்தை விட அதிகமாக பேசிய ஜெகதீஸ்வரனை ஆச்சரியமாக பார்த்தவள்,

“ட்ரூ சார்… நம்ம தமிழ்நாட்டோட பாரம்பரிய கட்டிடக்கலை எனக்கு ரொம்ப பிடிக்கும். நம்ம ஊர் கோவில்கள் ரொம்ப பிடிக்கும். தமிழ்நாட்டு பாரம்பரிய கட்டிடக்கலைய இப்பவும் பிடிச்சு வச்சிருக்க செட்டிநாட்டு வீடுகள் ரொம்ப பிடிக்கும்…” அவள் பேசிக்கொண்டு அவனோடு நடக்க, கால் இடறியது.

“பார்த்து சக்தி…” என்றவன் குரலில் இருந்த பதட்டம் அவளை நிமிர்ந்து பார்க்க வைத்தாலும் சட்டென்று சமாளித்துக் கொள்ள அவள் முயற்சிக்கும் முன்பாகவே கையை பிடித்து நேராக நிமிர்த்தி நிற்க வைத்திருந்தான் ஜெகதீஸ்வரன்.

அவன் முகத்தில் தெரிந்த பதற்றத்தில் அவனையே அவள் பார்க்க, அதில் அவள் விழிகள் அவன் மீதே நிலைத்து இருந்தது.

சில நொடி நேரம் நீடித்த அமைதியை நீட்டிக்க விரும்பாமல், “பார்த்து கவனமா நட” என்று விட்டு அவளை தனக்கு முன்பாக நடக்கச் செய்தவன் அவளை பின் தொடர்ந்து தன் கால்களை எட்டிப் போட்டான்.

கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு முன்பாக வந்தவர்கள் முன்னே வந்து நின்றான் சர்வேஸ்வரன்.

“எல்லாத்தையும் ஒரு தடவை செக் பண்ணிட்டு ஆபீஸ் போ…” என்றவன் முன்னே நடக்க, அவள் அவனை பின்தொடர முயல,

“சக்தி…” தாழ்ந்த குரலில் அழைத்தான் சர்வேஸ்வரன்.

“என்ன ஷர்வா?” நின்ற இடத்திலேயே நின்று திரும்பி பார்த்து சக்தி கேட்க,

“எங்க?” என்று கேட்டான்.

“ஹெரிடேஜ் ஆர்க்கிடெக்சர் சைட1 ஒன்னு வந்து இருக்கு. பார்க்க வரர்ரியான்னு கேட்டாரு… கிளம்பிட்டேன்.” என்று சொல்லிய அவளது குரலில் ஏக உற்சாகம் எட்டிப் பார்த்தது.

அவள் பதில் சொல்லிக் கொண்டிருக்க அவளுக்கு முன்னே நடந்து கொண்டிருந்த அண்ணனை பார்த்து மனதிற்குள்,

“குறி பார்த்து அடிக்கிறதுல தலைவன மிஞ்ச ஆளே கிடையாது… நீ நடத்து ராசா! உன்ன கேக்க யார் இருக்கா… வீட்ல உனக்கு பொண்ணு பாக்குறேன்னு சொல்லி ரெண்டு பேர் மண்டைய ஒடச்சிட்டு உட்கார்ந்திருக்காங்க… நீ உல்லாச உலகம் உனக்கே சொந்தம்னு பாட்டு பாடிட்டு ஜல்சா பண்ணிட்டு இருக்க. இதெல்லாம் கேட்க யார் இருக்கா? ஆனா அப்பிராணியா ஒரு பையன் காபி கேட்டா ஒழுக்கத்தை பத்தி ஒரு வண்டி கிளாஸ் எடுப்பாங்க…” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவன்,

“என்ஜாய்! உனக்கு தான் ஒட்டட புடிச்ச பாழடைஞ்ச கட்டிடங்களை பாக்குறதுக்கு… ரொம்ப பிடிக்குமே போய் பாத்துட்டு வா…” என்று கிண்டல் செய்தவனை முறைத்தவள்,

“அதுக்கெல்லாம் கொஞ்சமாவது ரசனைன்றது இருக்கணும்… ரசனைன்னு சொன்னா ரசம் கொஞ்சம் ஊத்துன்னு சொல்ற ஆள் கிட்ட இத தவிர வேற என்ன எதிர்பார்க்க முடியும்…” என்றவள் அவனுக்கு ஒழுங்கு காட்டி விட்டு ஜெகதீஸ்வரனை பின் தொடர்ந்தாள்.

“நல்லா வருவீங்க டா ரெண்டு பேரும்… உங்க அளவுக்கு ரசனை எல்லாம் எனக்கு தேவையே இல்ல.” என்று வாய்க்குள் சொல்லிக் கொண்டவன் திரும்பி தன் வேலையை பார்க்கச் சென்றான்.

சென்னையை விட்டு வெளியேறிய கார் கிழக்கு கடற்கரை சாலையின் காற்றினை கிழித்துக்கொண்டு முன்னேறியது.

நகர சத்தங்கள் மெதுவாக குறைந்து வயல்களின் ஆதிக்கம் அதிகரிக்க ஆரம்பித்திருந்தது.

பசுமை சூழ்ந்த வயல்வெளிகளும் அதில் அசைந்தாடிக் கொண்டிருந்த நெல் நாற்றுகளும் மனதை குளிர்விக்க அப்பொழுதுதான் மழை பெய்து ஓய்ந்த மண்வாசனை இறக்கி விடப்பட்ட கண்ணாடியின் வழியாக காருக்குள் பாய்ந்து அவள் நாசியை நிறைத்தது.

மூச்சை ஆழமாக இழுத்து விட்டவளை பார்த்தவனுக்குள்ளும் பெருமூச்சு ஒன்று வந்தது.

சாலையோர தென்னை மரங்கள், தொலைவில் கோயில் கோபுரங்கள், விரைந்து சென்ற வாகனங்கள் என காரின் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள் சக்தி. முகத்தில் உற்சாகம் மட்டும் குறையவே இல்லை.

“காபி?” கேள்வியாய் ஜெகதீஸ்வரன் நிறுத்த, அவனை திரும்பிப் பார்த்தவள் சரி என்பதாய் தலையசைக்க காரை ஓரமாக நிறுத்தியவன், தான் வைத்திருந்த பிளாஷ்க்கை கையில் எடுத்தான்.

அதைப் பார்த்தவள் அதன் அருகில் இருந்த காகித கோப்பைகளை எடுத்தவள் அவன் முன்பாக அவன் காபியை ஊற்றுவதற்கு ஏதுவாக நீட்டினாள்.

இரண்டு கோப்பைகளிலும் காபியை அவன் ஊற்றி முடித்து பிளாஸ்க்கை அதன் இடத்தில் வைக்கும் வரை பொறுத்திருந்தவள் அவன் நிமிர்ந்து சரியாக அமர்ந்ததும் அவனுக்கான கோப்பையை அவனிடம் நீட்டினாள்.

இருவரும் ஒரே நேரத்தில் “தேங்க்ஸ்…” என்று சொல்லிக்கொள்ள சிறு புன்னகை இருவரின் முகத்திலும் தோன்றி அவர்களை அழகாய் காட்டியது.

இரண்டு மிடறு காப்பியை குடித்தவள்,

“சார்…” என்று அழைக்க அவளை திரும்பி பார்த்தான் ஜெகதீஸ்வரன்.

“அந்த வீட்ட என்ன பண்ணப் போறீங்க?” சிறு தயக்கமும் பெரும் அச்சமும் போட்டியிட அவள் கேட்க, அவள் முகத்தை பார்த்தவன் இதழ்களில் குறுஞ்சிரிப்பு.

“கண்டிஷன் பாத்துதான் சொல்ல முடியும் சக்தி” என்று அவன் சொல்ல,

அவன் முகத்தை பார்த்தவள், “ப்ளீஸ் ட்ரை டு சேவ் இட் (முடிஞ்சவரை அதை காப்பாத்துங்க)” என்றவளின் குரலில் சிறு மன்றாடல் இருந்தது.

அவளைப் பார்த்தவன் ஒன்றும் பேசாமல் காரினை இயக்க,

“ஓல்ட் பில்டிங்க்ஸ்ல ஒரு சோல் இருக்கும் சார்…” என்று மீண்டும் தன் கருத்தினை தெளிவாக சொல்ல எண்ணி அவள் சொல்ல சிரித்தான் அவன்.

“பில்டிங்க்கும் சோல் இருக்கா சக்தி?” அவளைப் பேச வைக்க எண்ணி அவன் பேச,

“மனுஷங்க இல்லாத வீட்டுக்குள்ள போனாலும் சில இடங்கள் வார்ம்மா ஃபீல் ஆகும்… சில இடம் வெறுமையா ஃபீல் ஆகும்…” என்றவள் சொல்ல காரின் வேகத்தை குறைத்து அவளை திரும்பி பார்க்க,

“அதான் சோல்…” என்றாள் அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்தபடி.

அந்த பதில் அவனை சில நொடிகள் அமைதியாக்கியது. சில நொடி தாமதத்திற்கு பிறகு கார் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தது.

ஆனால் அவன் மனம் மட்டும் ‘நீ நெனச்சது சரி தான். ஒட்டு மொத்தமா இல்லனாலும் ஓரளவுக்கு அவ மனச புரிஞ்சுதா வச்சிருக்க… சபாஷ்’ என்று அவனுக்கு பாராட்டு பத்திரம் வாசித்துக் கொண்டது.

சூரியன் உச்சிக்கு செல்ல இன்னும் சில நாழிகைகளே இருந்த முன் பகல் நேரம்…

ஜெகதீஸ்வரன் - சக்தியை சுமந்திருந்த கார் அந்த கட்டிடத்தின் முன்பாக வந்து நின்றது.

காலம் மறக்க மறுத்த நினைவு போல கம்பீரமாக நின்றது சக்தியின் கண்களுக்கு முன்பாக.

சிவப்பு கற்கள், தேக்கு மர ஜன்னல்கள், உயரமான தூண்கள், நடுவே திறந்த முற்றம், முற்றத்தின் மையத்தில் துளசி மாடம் இருந்ததற்கான அறிகுறிகள். தூண்களில் விளக்குகள் ஏற்றுவதற்கான மாடங்களும் இருந்தன.

சிதிலங்கள் படிந்திருந்தாலும்… காலத்தாலும் அழிக்க முடியாத சித்திரமாய் ஓங்கி உயர்ந்து நின்றது அந்த கட்டிடம்.

கட்டிடத்தின் உள்ளேயும் வெளியேயும் ஆட்கள் நின்று வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்தவளுக்கு விளங்கிப் போனது தன் சகாக்கள் தான் அவர்கள் என்று.

ஓரிருவர் அவர்களை பார்த்ததும் தலையசைக்க அவர்களுக்கு இவர்களும் தலையசைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தனர்.

வாசலின் கதவை தொட்டுப் பார்த்த சக்திக்கு உடல் சிலிர்த்தது. நிச்சயம் எண்பது ஆண்டுகளைக் கடந்திருக்கும் அந்த கதவு… கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளை பார்த்திருக்கும் வீடு அது.

உள்ளே நுழைந்தவளை வேகமாய் தனக்குள் இழுத்துக் கொண்டது அந்த வீட்டின் மையத்தில் இருந்த பெரிய முற்றம்.

“சார்…” என்று அழைத்தபடி, முற்றத்தின் நடுவே நின்றிருந்த சக்தி மேலே பார்த்தாள்.

உடைந்த கூரையின் இடைவெளிகளில் இருந்து சூரிய ஒளி உள்ளே விழுந்து தூசித் துகளோடு கலந்து ஆடியது.

அவள் அழைப்புக்கு தலை சாய்த்து அவள் அருகே வந்து ஜெகதீஸ்வரன் நிற்க, “இங்க பாருங்க…” என்றவள் கை நீட்டி சுற்றி காட்டினாள்.

“இந்த வீடு ஒரு காலத்துல எவ்வளவு உயிரோட இருந்திருக்கும் தெரியுமா?” அவள் தன் வசம் இல்லை என்பதை அவளது வார்த்தைகள் அவனுக்கு எடுத்துக்காட்டின.

அருகில் இருந்த பொறியியல் வல்லுனர்கள் அந்தக் கட்டிடத்தின் சிதைவுகளை பற்றியும் லாப நஷ்டங்களைப் பற்றியும் மிக தீவிரமாக உரையாடிக் கொண்டிருந்தனர்.

சக்தி இவர்களை விடவும் தீவிரமாக செயல்பட கூடியவள் தான் புதிதான கட்டிடங்கள் கட்டும் நேரங்களில். கட்ட சொல்பவர்களுக்கும் கட்டிக் கொடுப்பவர்களுக்கும் எந்த விதத்திலும் நஷ்டங்கள் வந்து விடக்கூடாது என்பதிலும் அதீத கவனமாக இருப்பவள் தான்.

ஆனால், பழமை என்று வரும் பொழுது மட்டும் அவள் வேறாக மாறி விடுகிறாள். எப்படியாவது அந்த கட்டிடங்களை காப்பாற்றி,

‘இதுதான் நாம்… இதுதான் நம் தமிழர் பண்பாட்டின் மிச்சங்கள்… உலகிற்கே நாகரிகத்தை எடுத்துச் சொல்லிய தமிழர்களின் வாழ்வியல் முறைகள்…’ என்று இந்த பாரம்பரிய சின்னங்களை வரும் தலைமுறைக்கு காட்டி விட வேண்டும் என்பதில் மட்டும் அவளுக்கு தணியாத தாகம் உண்டு.

அதனாலயே தன்னையும் மறந்து ஜெகதீஸ்வரனோடு பேசிக் கொண்டிருந்தாள்.

சக்தியின் கவனம் அந்த இல்லத்தில் இருந்த கீறல்களின் மீதோ சிதிலங்களின் மீதோ ஒட்டடைகளின் மீதோ இருக்கவில்லை. அவளின் எண்ணம் முழுவதும் இந்த வீடு எத்தனை தலைமுறைகளை கண்டிருக்கும், அதில் வாழ்ந்தவர்களின் சுக துக்கங்களுக்கு சாட்சியாக நின்று இருக்கும் என்பதிலேயே இருந்தது.

“ஈவினிங் டைம் இங்கே எல்லாரும் சேர்ந்து உட்கார்ந்து பேசி இருப்பாங்கல்ல…

மழை பெய்யும் போது இந்த முற்றத்துல நின்னு குழந்தைங்க குதிச்சிருப்பாங்க… உள்ள வாங்கன்னு அவங்க அம்மா பாட்டி கத்திருக்காங்க…

இதோ… இந்த துளசி மாடத்துல தினமும் விளக்கேத்தி சாமி கும்பிட்டிருப்பாங்க…

இந்த தூண்ல சாஞ்சு உட்கார்ந்து யாராவது ஒரு பொண்ணு பூ மாலை கட்டிக்கிட்டு இருந்திருப்பாங்க… அவ குழந்தைங்க அவ கழுத்த சுத்தி கட்டிப்பிடிச்சு விளையாடி இருப்பாங்க…

வத்தல், வடகம் கூட இந்த முற்றத்துல தான் காய வச்சிருப்பாங்க…

எழுபத்தைஞ்சு வருஷத்துக்கு மேல நின்னு இருக்கும் இந்த வீட்டுல கல்யாணமும் நடந்திருக்கும்ல சார்…

வீடு முழுக்க பூத்தோரணம் கட்டி… தரை முழுக்க கோலம் போட்டு… திருவிழா மாதிரி இருந்திருக்கும் இல்ல இந்த இடம்…”

என்று தன்னையும் அறியாமல் ஒவ்வொரு இடங்களாக பார்த்து பார்த்து அவள் மெல்லிய குரலில் ஏதோ கனவில் சஞ்சரிப்பது போல… அவள் சொல்ல, அவள் சொல்லிய ஒவ்வொன்றும் அவன் கண்முன்னே நிகழ்ச்சிகளாக நடந்து கொண்டிருந்தது தான் ஆச்சரியம்.

அவள் எண்ணங்கள் அனைத்தும் அவனுள் வடிவம் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அந்த இடத்துக்கு உயிர் கொடுத்து கொண்டிருந்தது.

ஜெகதீஸ்வரன் அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஆர்க்கிடெக்சர்றது பில்டிங் மட்டும் இல்லை தான சார்…” என்றவள் மேலே உடைந்த பால்கனியை பார்த்தாள்.

“யாரோ ஒருத்தரோட வாழ்க்கை… கனவு, லட்சியம் இல்ல சார்…”

அவள் இதழ் மொழிந்த வார்த்தைகள் அவனுக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை அவனே கூட எதிர்பார்க்கவில்லை.

ஈஸ்வர் பில்டர்ஸ் குடும்பத்தின் வாரிசு என்ற முறையில் கட்டிடக்கலையை பயின்றவனுக்கு புதிது புதிதாய் கட்டிடங்களை கட்டும் பொழுது உற்சாகம் எழுந்ததுண்டு. தான் வடிவமைத்த கட்டிடங்கள் உயிர் பெற்று உடையவர்களுக்கு பிடித்தமானதாக மாறிய பொழுது சந்தோஷம் கொண்டது உண்டு. அனைத்துமே தொழில் சார்ந்து மட்டுமே இருந்தது அவனுக்கு.

ஆனால் சக்தி… இவளை போல் அவன் அதை நேசிக்கவில்லை என்பது அந்த நொடி அவனை தாக்கியது.

“தமிழ் ரொம்ப அழகான மொழி சார்…” என்று அவள் சொல்ல புரியாமல் பார்த்தான் அவளை.

“கட்டிடக்கலை… அழகுல இந்த பேர்…

கலை… நேசிக்கிறவங்களால மட்டும் தான் அதுக்குள்ள இருக்குற உயிர்ப்பை பார்க்க முடியும்… அதுக்கு உயிர் கொடுக்கவும் முடியும்…

அதனாலதான் சார் நம்ம ஆளுங்க அவங்க வாழ்றதுக்காக கட்டுனதை விட கடவுளுக்காக கட்டுன ஒவ்வொரு கோவிலும் நிலைச்சு நிக்குது. தன்னோட மொத்த கலைத்திறமையும் கொட்டி உருவாக்கி இருக்காங்க சார்.

தஞ்சை பெரிய கோவிலையும் கங்கை கொண்ட சோழபுரத்தையும் உருவாக்கி கொடுத்த சோழர்களோட மாளிகைகள் எங்க சார் இருக்கு?

மீனாட்சி அம்மன் கோவிலையும் குடைவரை கோயில்களையும் கொடுத்த பாண்டியர்களோட மாடமாளிகைகள் எங்க?

கண்ணகி கோவில் பகவதி அம்மன் கோவில் கட்டண சேரர்களோட அரண்மனைகள் எங்க?

காலம் கடந்தும் தங்களோட பெயர் சொல்றதுக்காக உருவாக்கியது தான் சார் இந்த கட்டிடக்கலை…

நிஜமாவே சார் எங்க தமிழ் ரொம்ப அழகான மொழி சார்…

அதன் வார்த்தைகளுக்கும் உயிர் உண்டு… உணர்வும் உண்டு…” இன்று தன்னையும் அறியாமல் அவள் பேசிக் கொண்டே செல்ல கண்கள் விளக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவளையே.

மேலே இரண்டாவது தளத்தில் அமைந்திருந்த பால்கனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் அங்கே பாதுகாப்பிற்காக பிணைக்கப்பட்டு இருந்த தாங்கியை நகர்த்தி இருந்தார்.

மிக மெலிதாக கேட்ட அந்த சத்தம் ஜெகதீஸ்வரனை கலைத்தது. அதில் அவன் முகம் இறுகியது.

சத்தம் வந்த திசையை நோக்கிய ஜெகதீஸ்வரன் கண்கள் ஒரு நொடி நிலை குத்தியது.

அந்த பால்கனியின் ஓரம் மெதுவாக கீழ் இறங்கி கொண்டிருந்தது. அதற்கு சரி நேராக நின்றிருந்தாள் சக்தி.

அவளைப் பார்த்த ஜெகதீஸ்வரனுக்கு விளங்கியது அவள் இன்னும் அதை கவனிக்கவில்லை என்று. அவள் தான் வேறு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறாளே..

அடுத்த நொடி…

“சக்தி!” என்றவனின் குரலில் கட்டிடத்தில் ஆங்காங்கே நின்றிருந்த அத்தனை பேரின் கவனமும் அவன் புறம் திரும்பியது.

சிதிலமடைந்த கட்டிடம் அவன் சத்தத்தில் உடைந்து சிதறாமல் இருந்தது ஆச்சரியம்தான். அப்படி ஒரு ஆக்ரோஷ குரல் அவனிடமிருந்து வெளிப்பட்டது.

ஜெகதீஸ்வரனிடம் பணிபுரிந்த இத்தனை ஆண்டுகளில் இப்படி ஒரு கர்ஜனையை அங்கிருந்த எவரும் கேட்டு இருக்க மாட்டார்கள். ஒரு நொடி அந்த இடமே ஸ்தம்பித்துதான் போனது.

அனைவரும் அவனைப் பார்க்க அவன் பார்வை மட்டும் அவள் மீதே இருந்தது.

அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்த்தாள் சக்தி. அதே நொடி பால்கனி முழுக்க குலுங்கியது.

“சார்…” அவள் வார்த்தையை முடிப்பதற்குள் அவள் அருகே வந்து சேர்ந்திருந்த ஜெகதீஸ்வரன், அவளை தன் மார்போடு சேர்த்து தனக்குள் புதைத்துக் கொண்டான்.

பெரிய சத்தத்தோடு அந்த பால்கனியின் ஒருபுறம் இடிந்து விழுந்தது.

கற்கள், மர சட்டங்கள் நொறுங்கி விழுந்த சத்தமும் விழித்துக் கூட பார்க்க முடியாத அளவு தூசியும் நிறைத்தது அந்த இடத்தை.

அந்த சத்தத்தில் சுற்றியிருந்தவர்கள் பதறி ஓடினார்கள். பெரும் குழப்பம் சூழ்ந்தது அந்த இடத்தை.
 

ஷமீம்

Active member
சர்வா பாதி நேரம் இவங்க ரெண்டு பேர பத்தியும் மனசுக்குள்ள புலம்பறத வேலையா வச்சிருக்கான் 😁😁
 
Top Bottom