• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கண்களுக்குள் பள்ளி கொண்டேன் - 17

skp

New member
பெண்கள் விடுதியின் மொட்டை மாடி…

நட்சத்திரங்கள் அனைத்தும் மறைந்து கொள்ள கூடி வந்தது மழை தரும் கார் முகில்கள். இரவின் கருமை இன்னும் அதிகமாய் கூடி போக, அதை தற்காலிகமாக விரட்ட போராடி கொண்டிருந்தது மொட்டை மாடியில் போடப்பட்டிருந்த ஒற்றை குழல் விளக்கு.

எப்பொழுதும் போல விளக்கின் வெளிச்சம் தன் மீது படாத வண்ணம் ஒரு ஓரமாக நின்று இருந்தாள் சக்தி.

அவளுக்கு அருகே தரையில் கால்களை மடக்கி முழங்காலில் முகத்தை வைத்து நிமிர்ந்து அவளை பார்த்துக் கொண்டிருந்தாள் தாரணி.

கையில் வைத்திருந்த திருமண பத்திரிகையை ஒரு முறை பார்த்தவள் மீண்டும் சக்தியின் முகத்தை பார்த்தாள்.

“ஹ்ம்ம்…” என்று மழை வர காத்திருக்கும் மண்வாசனையை ஆழமாக நுரையீரலை நிறைத்து பெருமூச்சு ஒன்றை விட்ட தாரணி,

“இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணம்… இப்பதான் பேச்சு எடுத்தது போல இருக்கு அதுக்குள்ள வந்துடுச்சு…” என்று சொல்ல, மென்மையாக சிரித்தாள் சக்தி.

தாரணியின் முகத்தையே பார்த்தவளின் விழிகளுக்கு பெரும் நிம்மதி. முகம் முழுவதும் பூரித்து கண்கள் முழுவதும் கல்யாண கனவுகள் நிறைந்திருந்தது அந்த விழிகளில்.

“எக்சைட்டடா இல்லையா?” மென் புன்னகையோடு சக்தி கேட்க,

“இருக்கு…” என்று சொன்னவளின் முகம் அடுத்த நொடி சுருங்கியது.

“இருக்கு ஆனா இல்ல…” என்று அவள் சொல்ல,

“பிச்சுடுவேன் உன்ன…” கை நீட்டி எச்சரித்தாள் சக்தி.

“இல்ல சக்தி.. எக்ஸைட்டடா இருக்கு. கூடவே கொஞ்சம் பயமாவும் இருக்கு.”

“தரு…” சற்று பயம் கலந்து சக்தி அழைக்க,

அவளது குரல் பேதத்தை உணர்ந்த தாரணி, “ஹேய்…” என்று உடனே சிரித்தவள்,

“அது அந்த மாதிரி பயம் இல்ல. புது கல்யாணம், புது மாப்பிள்ளை, புது வீடு, புது மனுஷங்க…” என்று சொல்லிக் கொண்டு வந்தவள் அடுத்த நொடி இன்னும் சத்தமாக சிரித்து,

“கலக்குற சந்துருன்னு சொல்ல தான் முடியாது. கலக்குது வயிறு அப்படின்னு வேணா சொல்லலாம்…” அவள் சொல்ல, அவளது சிரிப்பு சக்தியையும் தொற்றிக் கொண்டது.

சிரித்து ஓய்ந்தவர்கள் சில நொடி அமைதியை தத்தெடுத்தனர்.

தாரணி தன் கைகளை நீட்ட அதைப் பற்றிக் கொண்டு அவள் அருகே அமர்ந்தாள் சக்தி. அவள் தோளில் சாய்ந்து கொண்ட தாரணி,

“நான் கல்யாணம் பண்ணிட்டு போயிட்டா…” என்றவள் நிறுத்தி அவள் முகத்தைப் பார்த்து,

“நீ இங்க தனியா இருப்பன்னு நினைச்சா தான் கஷ்டமா இருக்கு.” என்று சொல்ல சக்தியின் முகம் மெதுவாக அமைதியானது.

இந்த விடுதி… அவர்களின் அறை… இதோ இப்பொழுது உட்கார்ந்திருக்கும் இந்த மொட்டை மாடி… அனைத்திலும் தாரணி இருந்தாள். அவளது நினைவுகளோடு ஒவ்வொரு இடமும் பின்னிப்பிணைந்து கிடந்தது.

ஆஸ்ரமத்தில் கூட இத்தனை நெருக்கமான நட்பு அவளுக்கு கிடைத்திருக்கவில்லை. அவளைச் சந்தித்திருந்த இந்த ஐந்தே வருடங்களில் அவள் வாழ்வின் பெரும் பகுதியை நிறைத்திருந்தாள் தாரணி.

அவளின் பிரிவு என்பது சக்திக்கும் தன் உடலின் ஒரு பாகத்தையே பிரிவது போன்றது தான்.

ஆனாலும் அதை இப்பொழுது சொல்ல முடியாதே…

“தனியா இருப்பேன்னா… இப்ப மட்டும் 24 மணி நேரம் நீ என் கூட தான் இருக்கியா? அடி போடி… என்னமோ அமேசான் காட்டுக்குள்ள தனியா விட்டுட்டு போறது போல ஃபீல் பண்ணிட்டு இருக்க…

காலையில எந்திரிச்சா… அடிச்சு புடிச்சு ஆபீஸ்க்கு போயிட்டு வந்து படுக்கையில் விழுகிறதுக்கு தான் நேரம் இருக்கு… இதுல என்னமோ தனியா இருப்பேன்னு பீலிங்கு…

ஒரு கால் பண்ணா நீ வரப் போற இல்ல, நான் வந்து நிக்க போறேன்… மூனாவது சந்துல இருக்கிற வீட்டுக்கு போறதுக்கு இவ்வளவு சீன் ஆகாது தருமா…

உண்மையைச் சொல்லனும்னா இனிமே தான் உன்னோட குறட்டை சத்தத்திலிருந்து தப்பிச்சு நிம்மதியா நான் தூங்குவேன்… நானே அந்த விடுதலை கிடைக்க போறத நினைச்சு சந்தோஷப்பட்டா… பீலிங்ஸ் அம்மணிக்கு… போடி போ…” தன்னை சமாளித்துக் கொண்டு சக்தி பேச, தாரணி அவளை அடித்தாள்.

“லூசு… நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன்.” என்று தாரணி சொல்ல,

“அதுக்கு நான் என்னடி பண்ண முடியும்? போய் ஹாஸ்பிடல்ல அட்மிஷன் போடு…” சக்தி சிரித்தாலும்… அவள் கண்களில் இருந்த மெலிதான வெறுமையை தாரணி கவனித்துவிட்டாள்.

“சக்தி…”

“ம்?”

“நீ ஸ்ட்ராங்னு எனக்கு தெரியும்.”

அவள் மெதுவாக சக்தியின் கையைப் பிடித்தாள்.

“ஆனா எல்லா நேரத்துலயும் ஸ்ட்ராங்கா இருக்க வேண்டிய அவசியம் இல்ல.”

சக்தி அமைதியாக இருந்தாள்.

“யாராவது ஒருத்தர்கிட்ட சாயணும் போல ஃபீல் வந்தா…”

தாரணி மெதுவாக சிரித்தாள்.

“டோன்ட் ஸ்டாப் யுவர்செல்ப்… (Don’t stop yourself - உன்னை நீ தடுக்காத…)”

அந்த வரி சக்தியை அதிகமாக தாக்கியது. அதில் அவள் இதழ்கள் மூடிக்கொள்ள,

“என்னடி?” என்று கேட்டாள் தாரணி.

“ஒன்னும் இல்ல.”

“பொய்.”

அழுத்தம் திருத்தமான குரலில் தாரணி சொல்ல சக்தி சிரித்தாள்.

“தரு நீ சாப்ட்வேர் இன்ஜினியர் தான? அதை விட்டுட்டு எதுக்குடி இந்த சிஐடி வேலையெல்லாம் பாக்குற?” சிரித்தபடி சக்தி கேட்க,

“சிரிச்சு மழுக்காத தங்கம்… ஐ நோ… கண்டுபிடிச்சிட்டேன்…” இல்லாத காலரை ஏற்றிவிட்டு தாரணி சொல்ல,

“என்னத்த கண்டுபிடிச்சீங்க மேடம்?” அப்பொழுதும் விளையாட்டாகவே கேட்டு வைத்தாள் சக்தி.

சக்தியின் கையை பற்றி இன்னும் நெருக்கமாக தன் அருகே இழுத்தவள் அவள் விழிகளை பார்த்து,

“உன்னோட மனசுக்குள்ள…” என்று விட்டு ஒரு நொடி இடைவெளி விட்டவள், கண்களோடு கண்கள் கலந்த படி,

“…யாரோ வந்துட்டாங்க.” என்றாள் அதி நிச்சயமான குரலில்.

சக்தியின் இமைகள் தன்னையும் அறியாமல் பட்டாம்பூச்சியாய் சிறகடித்தது. அந்த பழுப்பு நிற கண்களில் தென்பட்ட பாவங்களில் அழகிய கவிதைகள் வடித்திருப்பான் தான் உடையவன் பார்த்திருந்தால்.

“தரு…” மெதுவாக சக்தி அழைக்க,

“ஹேய் ரிலாக்ஸ்…” என்று சிரித்தவள்,

“யாருன்னு கேட்க மாட்டேன்… உனக்கு நிச்சயமா இருந்தா கண்டிப்பா என்கிட்ட சொல்லி இருப்ப… அந்த நம்பிக்கை இருக்கு.” என்று சொல்ல ஆழ்கடலின் அமைதி அங்கே குடி வந்தது.

மழை வரப் போவதற்கான காற்று அதிகமான மண்வாசனையை தன்னோடு இணைத்துக் கொண்டு அவர்களை தீண்டுச்செல்ல தேகம் சிலிர்த்தது.

“ஆனா…” தோழியின் முகத்தைப் பார்த்துக் கொண்டே சொல்லிய தாரணி,

“உன்னோட மனச கொஞ்சம் நல்லா தெளிவா புரிஞ்சுக்கோ சக்தி.”

சக்தி அமைதியாக அவளை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நீ ரொம்ப தெளிவான பொண்ணு தான். ஆனா வாழ்க்கை விஷயத்துல அளவுக்கு அதிகமாக யோசிச்சு உன்னை நீயே குழப்பிக்காத…” என்று அழுத்தமான குரலில் தாரணி சொல்ல அந்த வார்த்தைகள் சக்தியை ஆழமாய் ஊடுருவியது.

“மனசுக்கும் புத்திக்கும் நடுவுல நின்னு அல்லாடாத… சீக்கிரமா தெளிவான முடிவெடு…” என்று சொல்லியவள் எழுந்து செல்ல சக்தி இருந்த இடத்திலேயே சிலையாகிப் போனாள்.

“உன்னோட மனசுக்குள்ள யாரோ வந்துட்டாங்க…” தாரணியின் குரல் செவிகளை மீண்டும் மீண்டும் தாக்க கண்களை மூடிக்கொண்டாள்.

அந்த நிகழ்வு நடந்து ஒரு வாரம் கடந்திருந்தது.

ஆனாலும் நினைக்கும் நிமிடங்களில் எல்லாம் உயிர் வரை தித்தித்தது.

அந்த நூறு வருட பழமையான வீட்டின் உள்ளே நின்று தன் மனதின் அடி ஆழத்திலிருந்து அங்கே வாழ்ந்தவர்களின் வாழ்க்கையைப் பற்றி பேசிக் கொண்டிருந்த நேரம் இடிந்து விழுந்தது பால்கனி.

அதற்கு சரி நேராக சக்தி நின்று இருக்க, கண்ணிமைக்கும் நேரத்தில் “சக்தி…” என்று பெருங்குரலில் கத்திக்கொண்டே அவளை நெருங்கி இறுக அணைத்திருந்தான் ஜெகதீஸ்வரன்.

அணைத்து இருந்தானா? சக்தியை தனக்குள் சிறை எடுத்திருந்தான் ஜெகதீஸ்வரன்.

சிறு தூரலாய் மழை அவள் தேகத்தை ஆகர்சிக்க, அவன் நினைவுகள் அவள் உள்ளத்தை குளிர வைத்துக் கொண்டிருந்தது.

பெரிய சத்தத்தோடு அந்த பால்கனியின் ஒருபுறம் இடிந்து விழுந்தது.

கற்கள், மர சட்டங்கள் நொறுங்கி விழுந்த சத்தமும், விழித்துக் கூட பார்க்க முடியாத அளவு தூசியும் நிறைத்தது அந்த இடத்தை.

அந்த சத்தத்தில் சுற்றியிருந்தவர்கள் பதறி ஓடினார்கள். பெரும் குழப்பம் சூழ்ந்தது அந்த இடத்தை.

ஆனால், ஜெகதீஸ்வரனின் வலிய கரங்களுக்கு நடுவே பாதுகாப்பாய் இருந்த சக்தியின் செவியை நிறைத்தது திடும்திடும் என்று அடித்துக் கொண்டிருந்த ஜெகதீஸ்வரனின் இதயத்துடிப்பு

ஆனால் அவளுக்கு நேர்மாறாக இருந்தது ஜெகதீஸ்வரனின் நிலை. அந்த நொடி அவனது மொத்த உலகமே நின்று போனது போல இருந்தது. அவன் இதயம் என்றும் இல்லாத வேகத்தோடு அடித்துக் கொண்டது.

தந்தைக்கு மாரடைப்பு என்று கேள்விப்பட்ட போது கூட பயப்படவில்லை அவன். எப்படியாவது போராடியேனும் அவரை காப்பாற்றி விடலாம் என்று நம்பிக்கை அவனுக்கு இருந்தது.

ஆனால் இந்த நொடி… அவள் முழுதாக அவன் கைகளுக்குள் இருக்கும் இந்த நொடியிலும் கூட உயிர் வரை பரவி இருந்தது ஒரே உணர்வு மட்டும்தான்.

பயம் பயம் பயம் மட்டுமே…

அந்த ஆறடி ஆண்மகனை உலுக்கி போட்டிருந்தது அந்த நிகழ்வு. பால்கனி ஒரு பகுதி உடைந்து விட அதன் கீழே சக்தி! உயிர் போய் உயிர் வந்தது என்றால் என்ன என்பதை உணர்ந்து கொண்டிருந்தான்.

அவன் மார்புக்குள் பொதிந்து இருந்தவளும் அவனது அந்த பயத்தை அப்பட்டமாக உணர்ந்தாள்.

இறுக அணைத்து இருந்த கரங்கள் நடுங்கிக் கொண்டிருந்தது. இதயம் வேகவேகமாக துடித்துக் கொண்டிருந்தது. உடல் முழுவதும் வியர்த்து தூசியோடு கலந்து வழிந்தது.

அவனைப் பற்றி அவன் பயம் கொள்ளவில்லை என்பது அவளை அவன் அணைத்திருந்ததிலேயே புரிந்தது. அப்படியானால் இந்த பயம்? அவளுக்கானதா!

அவன் இறுகிய அணைப்பிலிருந்து வெளிவர முயற்சிக்க கூட முடியவில்லை. அணைப்பு இன்னும் இன்னும் அதிகமாய் இறுக்கியதே தவிர குறையவில்லை.

“சார்…” மெதுவான குரலில் சக்தி அழைத்த பிறகுதான் தன்னிலை திரும்பினான் ஜெகதீஸ்வரன்.

தன் மார்புக்குள் பொதிந்து முகத்தை மட்டும் நிமிர்த்தி அவனை அவள் பார்க்க, அந்த நொடி ஜென்மம் முடிந்தாலும் அவன் மனதில் இருந்து மறையாது.

அந்த பழுப்பு நிற விழிகள் அச்சத்தினாலும் கண்ணீரினாலும் நிறைந்திருக்க அவனைப் பார்த்த பார்வை, மொத்தமாய் அசைத்துப் பார்த்தது.

அவள் விழிகளை கடந்து முகம் முழுவதும் அவசர அவசரமாக அவன் விழிகள் அங்குலம் அங்குலமாக ஆராய்ந்தது. சுற்றியிருந்த சத்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் அவன் செவியை சேர்ந்தன. அதில் தன்னிலை அடைந்த ஜெகதீஸ்வரன் அப்பொழுதும் அவளை தன்னில் இருந்து விலக்கவில்லை.

இன்னும் இறுக்கமாய் அணைத்து நெற்றியில் தன் முதல் முத்தத்தை பதித்து,“ஆர் யூ ஓகே கண்ணம்மா?” என்று கேட்டவன் குரல் கரகரத்தது.

இமைகளைக் கூட சிமிட்ட மறந்தவளாய் பேச முடியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் முகம் முழுக்க தூசி படிந்திருந்தது. ஆனால், அவன் கண்களில் இருந்த அந்த பதட்டம் மட்டும் தெளிவாக புரிந்தது.

அந்த பார்வை… அந்த இதழ் ஒற்றல்… அவளுக்குள் ஏதோ ஒன்றை உடைத்தது. அத்தனை நேரமும் திரண்டு இருந்த கண்ணீர் கரையை கடந்து, கன்னங்களின் வடிந்தது

தனது 27 வருட வாழ்க்கையில் அவள் பெற்ற முதல் முத்தம் அது. இமைக்காமல் அவனையே அவள் பார்த்துக் கொண்டிருக்க,

“எங்கயாவது வலிக்குதா கண்ணம்மா?” என்று கேட்டவன் குரல் பரிதவித்தது.

உயிரள்ள சிலையாகி போனவளுக்குள் அவனது பரிதவிப்பு உயிர் வரை ஊடுருவிச் சென்றது. அவள் மெதுவாக தலையசைத்தாள்.

அடுத்த நொடி அவன் திரும்பிய வேகம்… அவன் மீது படர்ந்து இருந்த கற்களும் மரச் சட்டங்களும் தூசிகளும் திசைக்கு ஒன்றாக பறந்து செல்ல, அங்கே இருந்த பலராமன் கூட அதிர்ந்து விட்டார்.

“வாட் த ஹெல்த்…” என்றவன் பற்களை கடித்து வந்த வார்த்தைகளை மிகக் கடினப்பட்டு அடக்கி கொண்டவன்,

சுற்றி இருந்த அனைவரையும் பார்வையால் எரித்தபடி, “இந்த பில்டிங் கண்டிஷன் செக் பண்ணாம யாரு வொர்க் ஸ்டார்ட் பண்ண சொன்னா?” வார்த்தைகளை கடித்து துப்ப,

அவன் குரலில் இருந்த கோபம் சுற்றி இருந்தவர்களை உறைய வைத்தது.

பலராமன் அருகில் நின்ற ஜூனியர் ஆர்க்கிடெக்ட் ஒருவன், “சார் நான்…” நடுங்கிய குரலில் ஏதோ சொல்ல வர,

“யூ செட் அப்!” என்றவனின் கர்ஜனையில் அந்த இடமே அமைதியாகி விட்டது.

ஜெகதீஸ்வரனின் தனிச்சிறப்பு எத்தனை கடினமான சூழ்நிலைகளையும் அமைதியாக கடப்பதுதான்.

சொற்களைக் காட்டிலும் செயல்கள் பேசும் அவனைப் பற்றி.

எதிரிகள் கூட அவனது நிதானத்தை கண்டு வியந்து போவார்கள். பாராட்டுவதைப் போல பொறாமை கூட படுவார்கள். அப்படிப்பட்டவன் இன்று எரிமலையாய் வெடித்த சிதறி இருந்தான்.

ஒருவராலும் அவனது தகிப்பில் இருந்து தப்பிக்க முடியவில்லை.

“சேஃப்டி கிளியரன்ஸ் இல்லாம யாரையும் உள்ள விடக்கூடாதுன்னு தெரியாதா?” என்று கேட்டவனி தாடைகள் இறுகியது.

“யாருக்காவது ஏதாவது ஆயிருந்தா? “என்று கேட்டவன் பற்களை கடித்து சொல்ல வந்த வார்த்தைகளை கட்டுப்படுத்திக் கொண்டான்.

சக்திக்கு தெளிவாக தெரிந்தது ஒன்று. அவன் இன்னும் பயந்துகொண்டு தான் இருக்கிறான் என்பதை இன்னும் அவளை இறுக பற்றி இருந்த கைகளில் நடுக்கத்தில் உணர்ந்து கொண்டாள் பெண்.

அந்த பயம் அவளுக்காக… அவள் ஒருத்திக்கான பயம் அது என்பதை அவளால் உணர முடிந்தது.

“முதல்ல எல்லாரும் வெளிய போங்க. சேப்டி கிளியரன்ஸ் முழுசா பண்ணி முடிச்சுட்டு அதுக்கப்புறம் யாரா இருந்தாலும் உள்ள வாங்க… நௌ அவுட்.” என்று அவன் சீற, சில நிமிடங்களில் எல்லாரும் வெளியேறிவிட்டார்கள். அந்த இடமே அமைதியாகி போனது.

முற்றத்தின் ஓரத்தில் இருந்த பழைய மர நாற்காலியில் அமைதியாக அமர வைத்திருந்தான் சக்தியை‌.

அவள் கையில் சிறிய கீறல்.

முதலுதவி பெட்டியை எடுத்துக் கொண்டு அவள் முன் மண்டியிட்டான் ஜெகதீஸ்வரன்.

ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அமைதியாக பஞ்சினை எடுத்தவன் அவள் கையை பிடித்தான்.

சக்தி மெதுவாக நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள்.

அந்த நொடி… அவளால் உணர முடிந்தது அவனது நடுக்கத்தை. அவனது வலிய கரங்கள் நடுங்கிக் கொண்டிருந்தன, மிக மிக மெலிதாக.

அவனது அந்த நடுக்கம் நிச்சயம் கோபத்தினால் வந்தது கிடையாது என்பது மட்டும் மிகத் தெளிவாக அவளுக்கு விளங்கியது.

ஆனால் எதனால் என்று அவளுக்கு விளங்கவில்லை. அவளுக்கு விளங்கியது எல்லாம் ஒன்று மட்டும் தான்…

தான் தேடிய பாதுகாப்பு அவன் மார்புக்குள் ஒடுங்கிக் கொண்டிருந்த பொழுது கேட்ட இதயத்தின் துடிப்பின் நடுவே கிடைத்தது.

“கம்ப்ளீட் செக்யூர் ஃபீல் வேணும்…” தான் சொன்ன வார்த்தைகள் அவள் மனதுக்குள் எதிரொலித்தது.

அவன் மெதுவாக கீறல் விழுந்த இடத்தை சுத்தம் செய்து அதன் மேல் பண்டேஜ் ஒட்டினான்.

பிறகு நிமிராமல் இருந்தபடியே மிகவும் மெதுவாக கேட்டான்.

“பயந்துட்டியா கண்…” என்றவன் வார்த்தைகள் பாதியில் நிற்க

சக்தி சில நொடிகள் தன் முன்னே மண்டியிட்டு குனிந்து இருந்த அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

பிறகு, மிக மெதுவாக தலையசைத்தவள், “இல்ல.” என்றாள் காற்றுக்கும் கேட்காத குரலில்.

அவன் இமைகள் மெதுவாக உயர்ந்தது. கண்கள் நான்கும் சந்தித்து ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து கொள்ள,

“நீங்க இருக்கீங்களே…”

அவளையும் அறியாமல் இதழ்கள் மொழிந்தனவோ இரு வார்த்தைகளை…

இல்லை… அவளையும் மீறி இதழ்கள் மொழிந்திருந்தன அந்த
வார்த்தைகளை உள்ளத்தின் ஆழத்தில் இருந்த எண்ணத்தை சொல்லும் வண்ணம்.

அவளது அகத்திற்குள் அடித்துக் கொண்டிருந்த நினைவுகளின் பெரு மழை அவள் மனதினை நனைத்திருக்க, அவளைச் சுற்றி இருந்த புறத்தில் கொட்ட ஆரம்பித்திருந்த மழையோ அவள் தேகத்தை நனைத்து இருந்தது.
 
Top Bottom