• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கண்களுக்குள் பள்ளி கொண்டேன் - 19

skp

New member
உலகத்தின் எந்த ஒரு பெரும் பணக்காரராலும் பெற முடியாத செல்வம், கைவிட்டுச் சென்ற கடந்த காலம்…

ஒரு வருடத்தின் மதிப்பு
தேர்வில் தோற்ற மாணவனுக்கு தெரியும்.

ஒரு மாதத்தின் மதிப்பு
குறைப்பிரசவத்தில் குழந்தையைப் பெற்ற தாய்க்கு தெரியும்.

ஒரு வாரத்தின் மதிப்பு
வார சம்பளத்துக்காக காத்திருக்கும் தொழிலாளிக்கு தெரியும்.

ஒரு நாளின் மதிப்பு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு வாசலில் நின்று காத்திருப்பவனுக்கு தெரியும்.

ஒரு மணி நேரத்தின் மதிப்பு
இறுதி நேர்காணலுக்கு வெளியே காத்திருக்கும் இளைஞனுக்கு தெரியும்.

ஒரு நிமிடத்தின் மதிப்பு
தவறவிட்ட ரயிலை பார்த்து நிற்பவனுக்கு தெரியும்.

ஒரு நொடியின் மதிப்பு
விபத்தை கண்முன்னே தவிர்த்தவனுக்கு தெரியும்.

ஒரு மில்லி செகண்ட்டின் மதிப்பு ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடம் பெற்றவனுக்கு தெரியும்.

அது போல தான்
ஒரு மனிதனின் மதிப்பு மட்டும்
அவன் இல்லாத நேரத்தில்தான் தெரியும்.

13 நாட்கள்… நீண்ட நெடிய 13 நாட்கள் கழித்து பார்க்கின்றனர் சக்தியும் ஜெகதீஸ்வரனும்.

15 நாட்களுக்கும் மேலாக செல்லக்கூடிய வேலையை 13 நாட்களில் முடித்துவிட்டு வந்திருந்தான் ஜெகதீஸ்வரன்.

அந்த உழைப்பின் களைப்பும் இரு விமானங்கள் மாறி வந்த பயணத்தின் களைப்பும் கண்களில் அப்பட்டமாய் தெரிந்தது.

சாதாரணமாய் பார்ப்பவர்களுக்கு எப்பொழுதும் போல் தான் இருந்தது அவனது தோற்றம். ஆனால் காதல் கொண்டு பார்க்கும் அந்த பழுப்பு நிற கண்களுக்கு அப்பட்டமாய் தெரிந்ததே அவனது ஓய்ந்த தோற்றம்!

இருவரும் கண்களால் ஒருவரை ஒருவர் கைது செய்தபடி நின்று இருக்க, பிரித்திருந்த 13 நாட்களும் ஊர்ந்து கொண்டிருந்த நேரம் இப்பொழுது இறக்கை கட்டி பறந்தது.

கண்ணுக்கு முன் தெரிந்த சூரியன் காணாமல் போயிருந்தான். ஆனாலும் அவனது ஆரஞ்சு வண்ண கதிரின் மிச்சங்கள் அவர்களை சூழ்ந்து இருந்தது.

என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது? என்று எதுவும் புரியவில்லை சக்திக்கு. ஆனால் அவனோடு பேச வேண்டும் என்று துடித்த மனது,

“போன காரியம் நல்லபடியா முடிஞ்சதா சார்?” என்று வார்த்தைகளை கோர்த்து கேட்க வைத்திருந்தது.

“முடிஞ்சது.” என்றான் ஒற்றை வார்த்தையில்.

“இன்னும் ரெண்டு நாள் ஆகும்னு ஷர்வா சொன்னாங்களே?”

“இன்னும் ஒரு வாரம் கூட ஆகி இருக்கலாம்.”

“பின்ன எப்படி சார் இவ்வளவு சீக்கிரம்?”

“உன்ன போல நானும் டேஸ் கவுன்ட் பண்ணிட்டு இருந்தேன் போல…”

“சார்…”

“இன்னும் ரெண்டு நாள் இருக்குன்னா… 13 நாளும் எண்ணிக்கிட்டு இருந்தியா?”

“சார்…”

“ம்ம்… சொல்லு…”

“ரொம்ப டயர்டா இருக்கீங்க சார் ஜெட் லாக் இருக்குமே…”

“பயங்கர டயர்டா இருக்கு…”

“தூங்கி ரெஸ்ட் எடுத்து இருந்திருக்கலாமே…”

“ரெஸ்ட் எடுக்கலாம். ஆனா தூக்கம் வரணுமே…”

இப்படி பேசினால் அவளும் என்னதான் பதில் சொல்வாள்? ஒன்றும் பேசாமல் அவன் முகத்தையே அவள் பார்த்துக் கொண்டு நிற்க,

“13 நாளும் தூங்காத தூக்கத்தை தூங்கணும்.” என்றவன் வார்த்தைகளில், ‘அதத்தானே நானும் சொல்றேன்…’ என்று மனதோடு தான் சொல்ல முடிந்தது அவளால்.

“ஆனா தூக்கம் வரனுமே… என்னென்னமோ ட்ரை பண்ணி பாத்துட்டேன். வரல…” அவன் சொல்ல இன்னும் கூர்மையாக அவனைப் பார்த்தாள் சக்தி.

இப்படி எல்லாம் பேசுபவன் அவன் இல்லையே? என்ன நேர்ந்தது இவனுக்கு? என்பது போல இருந்தது அவளது பார்வை.

“ரொம்ப கஷ்டமான வேலை இல்ல. இஷ்டப்பட்டு ஆரம்பிச்ச வேலைதான். பக்கா பிளான், ஸ்கெட்ச் எல்லாம் இருந்தது… என்னோட எக்ஸிகியூஷன் எப்படி இருக்கும்னு உனக்கே தெரியும். ஹரிபரியா எந்த வேலையும் நான் செய்யல. ஸ்டார் ஹோட்டல், நல்ல ரூம், நல்ல சாப்பாடு எல்லாமே தான் இருந்துச்சு.

ஆனாலும் தூக்கம் இல்ல… தூக்கம் வரல… உன்ன பாக்கணும் போல இருந்தது. உன்ன பாக்காம தூங்க முடியும்னு தோணல…” என்று அவன் சொல்ல கண்கள் அகலமாய் விரிந்தது அவளுக்கு.

வாய் திறந்து அவள் ஏதோ சொல்ல வர வெறும் காற்று தான் வந்தது அவளுக்கு.

“இனியும் நீ இல்லாம தூங்க முடியும்னு தோணல சக்தி. என்னோட நாட்களின் முதலும் முடிவுமா நீ வேணும்னு மனசு சொல்லுது…” என்று சொல்லி அவளை விழிகளை ஆழ்ந்து பார்த்தவன்,

“உன்னோட மனசு என்ன சொல்லுது சக்தி…” என்று அவன் கேட்க, பதில் சொல்லும் நிலையில் தான் இல்லை அவள்.

ஒவ்வொரு எட்டுகளாக வைத்து அவளை அவன் நெருங்க இவளுக்கு மூச்சில் வெப்பம் கூடிக் கொண்டே சென்றது. அவள் அருகே அவன் வர கையில் இருந்த கோப்பையை இறுகப்பற்றினாள் சக்தி.

கை கெட்டும் தூரத்தில் வந்தவன் நின்று நிதானித்து அவளை உச்சி முதல் பாதம் வரை பார்வையால் வருடி கைகள் இறுக பற்றி இருந்த கோப்பையை நோக்கி கையை நீட்டினான்.

தன்னையும் அறியாமல் சக்தியின் கைகள் இறுக்கம் தளர அந்த கோப்பையை வாங்கியவன் கைப்பிடிச் சுவர் மீது வைத்து விட்டு அவளை பார்த்தான்.

பழுப்பு நிறகளை விழிகளை விரித்துப் பார்த்தபடி, சொல்வதற்கு வார்த்தைகள் இன்றி அவள் இருக்க,

“இந்த கண்கள் அதிகமா இம்சை பண்ணுது இங்க…” என்றவன் தனது இடது மார்பை காட்டிச் சொல்ல, அவன் விரல் சுட்டிய இடத்தை பார்த்தது அந்த விழிகள்.

13 நாட்களுக்கு முன்பாக அந்த இடத்தில் முகம் புதைத்து இருந்தது அச்சொட்டாக நினைவு வர தேகம் குங்குமமாய் சிவந்தது அவளுக்கு.

அந்த கதகதப்பு… அந்த இதயத்தின் துடிப்பை வாழ்நாள் முழுவதும், வாழ்வின் இறுதிக் கட்டத்திலும் கேட்க வேண்டும் என்ற ஆசை அவளுள்ளும் ஆழிப்பேரலையாய் உண்டாகத்தான் செய்தது.

பார்த்த விழி பார்த்தபடி அவள் நின்று இருக்க, அவனே பேசினான்.

“ஒரு பொண்ணு வருவா… உன்னோட உலகமா அவ மாறுவா.‌ அவ கூட இருந்தா மட்டும் தான் உன்னால நிம்மதியா தூங்க கூட முடியும்னு உன்ன பாக்குறதுக்கு முன்னாடி யாராவது என்கிட்ட சொல்லி இருந்தா…

சொல்ல மாட்டாங்க…

இப்ப கூட சொல்ல மாட்டாங்க தான்…

ஒருவேளை அப்படி யாராவது சொல்லி இருந்தா கண்டிப்பா நம்பி இருக்க மாட்டேன். மே பி சிரிச்சு கூட இருப்பேன்…” என்றவனின் வார்த்தைகளில் சிலையாகி இருந்தவளிடம்,

“உனக்கு ரெட் ஸ்ட்ரிங் தியரி தெரியுமா சக்தி?” என்று அவன் கேட்க, இல்லை என்பதாக அசைந்தது அவள் தலை.

“சைனா, ஜப்பான், கொரியா மாதிரி நாடுகள்ல ஒரு நம்பிக்கை இருக்கு. கடவுள் பிறக்கும்பொழுது ஒவ்வொரு குழந்தைக்கும் அவங்களோட துணைய சேர்த்து தான் படைப்பாராம். பிறக்கிற குழந்தையோட சுண்டு விரல்ல ஒரு ரெட் கலர் ஸ்ட்ரிங் கட்டி இருப்பாராம். அதோட இன்னொரு முடிச்சு அவங்க துணையோட சுண்டு விரல்ல கோர்த்திருக்குமாம்.

அப்படி கடவுளால் உருவாக்கப்பட்ட பந்தம் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சண்டைகள் வந்தாலும் அவங்களுக்குள்ளயே மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் வந்தாலும் அறுந்து போகாதாம்.

அதனாலதான் சிலரை வெரி ஃபர்ஸ்ட் டைம் பார்த்ததும் பல காலம் அவங்க கூட வாழ்ந்தது போல ஒரு உணர்வு வருமாம்.

அப்படி ஒரு உணர்வு தான் இது போல…” என்று தங்கள் இருவரையும் விரல்களால் சுட்டி அவன் சொல்ல கேட்டுக் கொண்டே இருந்தாள் மௌனமாக.

அவள் மௌனத்தில், “இவ்வளவு பேசுவேன்னு எனக்கே இன்னைக்கு தான் தெரியும். எனக்கு நானே ரொம்ப புதுசா தெரியறேன். யூ மேட் மை லைஃப் சக்தி… இந்த உணர்வுகள் ரொம்ப புதுசாயிருக்கு… உன்னால உருவான இந்த உணர்வுகள் அழகா இருக்கு. எனக்கு பிடிச்சிருக்கு.” என்று சொன்னவன்,

“உனக்கும் பிடிச்சிருக்குன்னு தெரியும்.” என்று ஆணித்தரமாக அவன் சொல்ல வெடுக்கென நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் சக்தி.

“சொல்லாம எப்படி தெரியும்னு பாக்குறியா?” அவன் புன்னகையோடு கேட்க,

‘ஆம்’ என்று தலை அசைந்தது அவளையும் அறியாமல்.

அட்டகாசமாய் சிரித்தவன், “இதோ இப்படித்தான்…” என்று சொல்ல தலை குனிந்து கொண்டாள் சக்தி

“தினம் தினம் என்னோட ரூம் கதவை நீ பார்க்கும்போது உன் கண்கள் பேசுறத விடவா இறுக்க மூடி வச்சிருக்க இந்த லிப்ஸ் பேசிட போகுது?” அவன் கேட்க ஒரு பதிலும் இல்லை அவளிடம்.

“ஆனாலும் இதழ்கள் மலர்ந்தா தான வண்டு தேன் குடிக்க முடியும்?” அவனையும் மீறி வார்த்தைகள் வந்துவிட, நிமிர்ந்து அவள் பார்த்த நேரம் கண்களை சுருக்கி நாவினை பற்களால் கடித்துக் கொண்டு இருந்தான் அவன்.

“தமிழ்ல ட்ரை பண்ணேன்… அது இப்படி வரும்னு நினைச்சு கூட பாக்கல… ஆனா அழகா தானே இருந்துச்சு…” என்றவன் சிரிப்பில் அத்தனை அழகு.

“வந்ததுல இருந்து நிறைய பேசிட்டேன். நீ சொல்லு சக்தி…” என்று அவன் கேட்க, ஒரு நொடி அமைதி காத்தவள் பின் தன் மௌனம் கலைத்தாள்.

உள்ளங்கள் பேசும் மொழி அறிந்தால்
உன் ஜீவன் துடிக்கத் தேவை இல்லை
இரு கண்கள் பேசும் பாஷைகளை
இருனூறு மொழிகள் சொல்வதில்லை
தான் கொண்ட காதல் மொழிவதற்கு
தமிழ் நாட்டுப் பெண்கள் துணிவதில்லை…

அவன் பேச பேச அவர்கள் இருவர் மட்டுமே இருக்கும் உலகத்தில் சஞ்சரிப்பது போல இருந்தவளுக்கு, தன்னையும் மீறி தன் மனதில் உள்ளதை மெல்லிய குரலில் பாடல் மூலமாக அவள் சொல்லி இருக்க, எத்தனை தான் நிச்சயமாக தெரிந்திருந்தாலும் இணையான துணையவள் இதழ்களில் இருந்து வந்த வார்த்தைகளில் உள்ளம் துள்ளி குதிக்கத்தான் செய்தது அவனுக்கு.

“இப்போ இந்த நிமிஷத்த நிறுத்தி வைக்க முடியும்னா நல்லா இருக்கும் சக்தி… இன்னும் இன்னும் என்னென்னமோ பண்ணனும் போல இருக்கு… காட்… இப்படியே உன்ன கூட்டிட்டு ஆள் இல்லாத தேசமா பார்த்து போகணும் போல இருக்கு…” என்று பின்னந்தலையை கோதியபடி அவன் பேச பேச இதழ்களைக் கடித்துக் கொண்டு அவனைப் பார்த்தாள் அவள்.

காதலின் முதல் படி நிலையில் அவர்கள் கால் வைத்திருக்க, காலம் விளையாட்டை ஆரம்பித்திருந்தது.

குடும்பப் பெயர், பாரம்பரியம் என்று வாழும் குடும்பம்… குடும்பம் என்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்த பெண்…

இருபுறம் கூர் தீட்டிய கத்தியை கையில் ஏந்தி இருந்தான் ஜெகதீஸ்வரன். மிக கவனமாக கையாள விட்டால் முதலில் காயப்பட போவது அவன் தான்.

காதல் சொல்ல இரு மனங்கள் போதும். அந்த இரு மனங்கள் திருமணத்தில் இணைய தான் பல
மனங்கள் சம்மதம் சொல்ல வேண்டுமே நாம் வாழும் நாட்டில்.

கிடைத்திடுமா சம்மதம்? சேர்ந்திடுமா காதல் கொண்ட மனங்கள் காயம் பெறாமல்?
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online

Top Bottom