• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கண்களுக்குள் பள்ளி கொண்டேன் - 20

skp

New member
அத்தியாயம் 20

அவர்கள் பேசிக் கொண்டிருக்க அட்சதையாய் மழையை தூவி ஆசீர்வதித்தது வானம்.

தூறலாய் ஆரம்பித்த மழை சில நொடிகளுக்குள் பெரும் மழையாய் சிதற, மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்த இருவரும் கீழே இறங்கினர்.‌

மின் தூக்கியின் உள்ளே இருவரும் நிற்க கதவடைத்த நேரம் அந்த வானத்தையே இரண்டாகப் பிளந்து கொண்டு வெளிவந்த பிரம்மாண்ட மின்னலைத் தொடர்ந்து உலகையே உடைத்துப் போட்டது போல பெரும் இடிச்சத்தம் கேட்டது.

அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த அழகான இடைவெளியை இட்டு நிரப்பியதோ அந்த இடிச்சத்தம்?

தன்னையும் அறியாமல் ஜெகதீஸ்வரன் அருகில் சற்று நெருங்கி நின்றாள் சக்தி. அதை கவனித்தாலும் கவனிக்காதது போல நின்று கொண்டான் ஜெகதீஸ்வரன்.

இரண்டொரு நொடிகளில் அவர்கள் இறங்க வேண்டிய தளம் வந்திருக்க, இறங்கியவர்கள் மௌனமாக சக்தியின் அறையை நோக்கிச் சென்றனர். அலுவலகமே காலியாக இருக்க அவர்களின் காலணிகள் எழுப்பிய சத்தம் அந்த இடத்தை நிறைத்தது.

சக்தி அவள் அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைய, மேஜையின் மீது இருந்த புத்தகம் கண்களில் பட்டது.‌

புத்தகத்தின் மீது விரல்களால் கோலம் போட்டவள் எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டு, “தேங்க்யூ சோ மச்…” என்று சொல்ல,

அவளையும் அவள் கைகளுக்குள் தஞ்சம் அடைந்து மார்புக்குள் பொதிந்திருந்த புத்தகத்தையும் மாறி மாறி பார்த்தவன், “வாங்கி இருக்கக் கூடாதுன்னு இப்ப தோணுது.” பற்களை கடித்துக் கொண்டு தனக்குள் முணுமுணுக்க, நிசப்தமான அந்த அலுவலகத்தில் அட்சர சுத்தமாக கேட்டது அவனது வார்த்தைகள்.

என்ன சொல்கிறான் என்பதை சில நொடிகளுக்குப் பிறகு அர்த்தம் புரிந்தவள் இதழ்களை கடித்து புத்தகத்தை தனது கைப்பையில் வைக்க, “இப்போ ஓகே…” என்று பெருமூச்சு ஒன்றை விட்ட ஜெகதீஸ்வரனை ஆச்சரியமாக பார்த்தாள் சக்தி.

“இப்படி பாத்தா என்ன அர்த்தம்?” ஜெகதீஸ்வரன் நர்த்தனம் ஆடிக்கொண்டிருந்த அவளது பழுப்பு விழிகளை பார்த்தபடி கேட்க,

“இப்படி எல்லாம் பேசுவீங்களா ஜெகன்?” தன்னையும் அறியாமல் அவன் பெயர் சொல்லி அவள் அழைக்க, முகம் மலர்ந்தது ஜெகதீஸ்வரனுக்கு.

“ஜெகன் அவனோட மோகினி கிட்ட இப்படி பேசலன்னா தான் தப்பு…” என்று மீண்டும் அவளுக்கு கேட்கும் வண்ணம் தனக்குள் முணுமுணுத்தவன், “எப்படி எல்லாம் பேசினேன்?” என்று பதில் கேள்வி கேட்க குரலோ உல்லாசத்தின் உச்சத்தில் இருந்தது.

“நான் எந்த கேள்வியும் கேட்கல.” என்று தனக்குள் முணுமுணுத்தவள் வேகமாக தனது பையை எடுத்துக் கொண்டு வர, அவளோடு இணைந்து நடந்தான் ஜெகதீஸ்வரன்.

மீண்டும் ஒரு சிறு பயணம் மின்தூக்கியில் அழகாய்… அமைதியாய்.

மின் தூக்கியின் கதவுகள் விரிந்த நேரம், போய் வருகிறேன் என்பதைச் சொல்லாமல் சொல்லுவது போல அவள் தலை அசைக்க, “கார்ல போகலாம்…” என்றான் ஒற்றை வார்த்தையாய்.

கண்களை அவள் விரித்துப் பார்க்க, “இவ வேற படுத்துவா…” என்று முனங்கியவன், “டைம் ஆயிடுச்சு. உன்ன தனியா அனுப்பிட்டு என்னால நிம்மதியா இருக்க முடியாது. கம் வித் மீ.” என்றவன் சொல்லிவிட்டு முன்னால் நடக்க அவனை பின் தொடர்ந்தன அவளது கால்கள்.

தனது வாகனத்தை அடைந்தவன் அவளுக்கான கதவினை திறந்து விட, ஏறி அமர்ந்தவள் கதவின் ஜன்னல் வழியாக அவனைப் பார்க்க அந்த கண்களைப் பார்த்துக் கொண்டே மெதுவாக கதவினை சாற்றியவன், சுற்றி வந்து தன்னிடம் அமர்ந்து வாகனத்தை கிளப்பினான்.

சற்றே குறைந்திருந்த போக்குவரத்து நெரிசலில் நிதானமாக போய்க் கொண்டிருந்தது அவர்கள் சென்ற வாகனம். சாலையில் கவனத்தை பதித்து இருந்தாலும் அவ்வப்பொழுது அவள் புறமாக படிந்து மீண்ட ஜெகதீஸ்வரனின் பார்வையில் அவள் தேகம் சிலிர்க்கத்தான் செய்தது.

பேச பகிர ஆயிரம் விஷயங்கள் இருந்தபோதிலும் ஒருவருக்கு ஒருவர் துணையாய் இணையாய் அமர்ந்திருந்த அந்த நிமிடங்கள் எதையும் பேச வேண்டும் என்று தோன்றவில்லை இருவருக்கும்.

அவள் இறங்க வேண்டிய இடம் அருகே வர திரும்பி ஜெகதீஸ்வரனை பார்த்தாள் சக்தி. என்ன என்பதாக புருவங்களை உயர்த்தி அவன் கேட்க, “நான் ஏன்?” என்று அத்தனை நேரம் மனதிற்குள் பிராண்டிக் கொண்டிருந்த கேள்வியை கேட்டு வைத்தாள் சக்தி.

“அவ்வளவு நேரம் சொன்னது புரியலையா சக்தி?” என்று அவளை ஆழமாக ஊடுருவி பார்த்தபடி ஜெகதீஸ்வரன் கேட்க,

“பதில் சொல்லுங்க ஜெகன்…” மீண்டும் கேட்டாள் சக்தி. வாகனத்தை ஒடித்து சாலையின் ஓரமாக நிறுத்தி அவள் புறமாக திரும்பி அவள் விழிகளுக்குள் ஆழ்ந்து பார்த்தபடி,

“எப்படி வேணாலும் எடுத்துக்கலாம். இத்தனை வருஷங்கள்ல எந்த பொண்ணும் உன்னை போல என்னை ஈர்க்கல. நீ இல்லாத நிமிஷங்கள்ல நான் உணர்ந்த வெறுமையை வேற யாரையும் பிரிஞ்சு இருந்த நேரங்கள்ல உணர்ந்ததில்லை… எந்த வேலை பார்த்துட்டு இருந்தாலும் உள்ளுக்குள்ள ஊடுருவி நின்ன உன்னோட நினைவுகள் போல வேறு யாரோட நினைவுகளும் இருந்ததில்லை.

பார்த்த முதல் பார்வையில உன்ன பிடிச்சதா? எனக்கு தெரியாது. உன்னோட பேச்சு, ஆட்டிட்யூட், டெடிகேஷன், டேலண்ட் எல்லாமே பிடிச்சது. இது எல்லாமே எல்லாருக்கும் காமனா பிடிக்கிற விஷயம்தான்.

பட்…” என்று சொல்லிக் கொண்டு வந்தவன் இடைநிறுத்த என்ன என்பதாக விழி விரித்து அவள் பார்க்க,

“என்னை ஆணா உணர வச்ச முதல் பெண் நீ… எனக்கான பொண்ணா என் கண்ணுக்கு தெரிஞ்ச முதல் பொண்ணும் நீ தான்…” என்று அவன் சொல்ல வட்டமாய் விரிந்தன அவள் விழிகள்.

“எக்ஸ்பிளநேஷன் போதுமா, இல்ல, இன்னும் விளக்கமா சொல்லனுமா?” என்று அவன் கேட்க, போதும் என்பதாக அசைந்தது அவள் தலை.

சில நொடி அமைதிக்குப் பிறகு “டைம் ஆயிடுச்சு. ரொம்ப டயர்டா இருக்கீங்க… நல்லா ரெஸ்ட் எடுக்கணும் ஜெகன்‌. கிளம்புங்க.” மென்குரலில் சக்தி சொல்ல, அவளையே ஆழ்ந்து பார்த்தவன் காரினை கிளப்ப சாலையில் தன் கவனத்தினை திருப்ப கூர்ந்தது அவன் விழிகள் சில நொடிகள்.

அவர்கள் சென்ற பாதைக்கு எதிர் திசையில் வந்து கொண்டிருந்த கார் அவர்களைக் கடக்கும் பொழுது சில நொடி தாமதித்ததை கண்டு கொண்டவன் கண்கள் இன்னும் கூர்மை பெற்றது.

மெதுவாக தலையை அசைத்தவன் இதழ்களில் குறுஞ்சிரிப்பு.

அச்சிரிப்போடு வாகனத்தை கிளப்பியவன் விடுதிக்கு அருகில் வந்து நிறுத்திவிட்டு அவளை பார்க்க, விடை கொடுப்பதற்கு ஏதுவாக அவள் தலை அசைய, கைப்பற்றி தன் அருகே இழுத்தவன் கண்ணிமைக்கும் நேரத்தில் அவள் நெற்றியில் தன் இதழ் பதித்திருந்தான்.

“குட் நைட் கண்ணம்மா…” என்றவன் நொடியில் அவளைப் பிரிந்தும் இருக்க, ஷனத்தில் கண்களில் படர்ந்த கண்ணீரோடு அவளை ஏறிட்டு பார்த்தவள், “என்னோட லைஃப்ல நான் வாங்குற செகண்ட் கிஸ்…” என்றவள் நடுங்கிய இதழ்களை பற்களால் கடித்த படி, “குட் நைட் ஜெகன்…” என்று சொல்லிவிட்டு வேகமாக கதவினை திறந்து கொண்டு திரும்பி பார்க்காமல் அவள் செல்ல, உறைந்து போனான் ஜெகதீஸ்வரன்.

அவள் விடுதியின் உள்ளே சென்று நுழைந்து கண்களுக்கு மறைந்து போன பிறகும் வண்டியினை கிளப்ப வேண்டும் என்று நினைவின்றி அமர்ந்திருந்தவனை உலுக்கி நினைவுக்கு கொண்டு வந்திருந்தது அவனது கைபேசி.

நிதானத்திற்கு வர சில நிமிடங்கள் பிடித்தது ஜெகதீஸ்வரனுக்கு அப்பொழுதும்.

பெரும் பிரயாசைப்பட்டு நிதர்சனத்திற்கு வந்தவன் அழைப்பை ஏற்று பதில் சொல்லியபடி மீண்டும் ஒருமுறை அவள் சென்ற பாதையை பார்த்துவிட்டு கிளம்ப, தன் அறையின் ஜன்னல் வழியாக அதைப் பார்த்தபடி நின்று இருந்தாள் சக்தி.

தாரணி அன்று தாய்மாமன் வீட்டிற்கு அவர்கள் முறையில் சடங்கு ஒன்று செய்ய வேண்டி இருப்பதாக சொல்லி சென்று இருக்க அறையில் தனிமையில் இருந்தாள் சக்தி.

அவளுக்கு அந்த தனிமை தேவையாக இருந்தது அந்த நிமிடம்.
அந்த இரவு...
உறக்கம் வரவில்லை சக்திக்கு. உண்ண வேண்டும் என்ற நினைவு கூட வரவில்லை அவளுக்கு.
தன் படுக்கையில் படுத்து கண்களை மூடினால் ஜெகதீஸ்வரனின் முகம். கண்களை திறந்தால் அவன் சொன்ன வார்த்தைகள்.
படுக்கையில் திரும்பி படுத்தவள் தலையணையை அணைத்துக் கொண்டாள்.
அவளது வாழ்க்கையில் இத்தனை வருடங்களாக எத்தனையோ மனிதர்கள் வந்து போயிருக்கிறார்கள்.
சிலர் பரிதாபமாக பார்த்திருக்கிறார்கள்.
சிலர் அனுதாபமாக பேசியிருக்கிறார்கள்.
சிலர் உதவி செய்திருக்கிறார்கள்.
சிலர் காயப்படுத்தியும் இருக்கிறார்கள்.
ஆனால்...
அவளை விரும்பி யாரும் நின்றதில்லை.
அவள் தனியாக இருப்பதை பார்த்து, "பாவம்..." என்று சொன்னவர்கள் இருந்தார்கள்.
ஆனால்...
"நான் இருக்கிறேன்..." என்று சொன்னவர்கள் இல்லை.
அவளது வாழ்க்கை முழுவதும் அவளுக்கு கிடைத்தது அனுதாபம்.
முதல் முறையாக ஒருவன் அவளுக்கு உண்மை காதலை கொடுத்திருந்தான்.
கல்லூரியில் சேர்ந்த இரண்டாம் வாரத்திலேயே நிறைய காதல் விண்ணப்பங்கள் அவளுக்கு வந்து சேர்ந்தன.
பெரும்பான்மையான இளைஞர்களுக்கு ‘அழகான பெண்’ என்ற ஒன்று போதுமே காதலை சொல்வதற்கு.
ஆனால் அடுத்த நொடி அவள் சொன்ன, ‘பெற்றவர்கள் யார் என்று தெரியாது ஆஸ்ரமத்தில் வளர்ந்த பெண்’ என்ற வார்த்தைகள் போதுமானதாக இருந்தது முக்கால் வாசி பேர் விலகி செல்வதற்கு.
மீதம் இருந்தவர்களுக்கு காதல் காமம் ஆகி போக, இடது கையால் அவர்களை விலக்கிவிட்டு அவள் கடந்து வந்த பாதை தான் கடுமையானது.
இன்று பட்ட காயங்கள் அனைத்திற்கும் மருந்தாக ஒருவன் வந்து நிற்கிறான். நம்ப முடியாமல் அவள் தவிக்க, இன்னும் அவன் இதழ் பதித்த சிறு ஈரம் குறு வெப்பம் நம்பச் சொல்லி அவளை உந்தியது.
உலகத்தில் கோடிக்கணக்கான பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் அந்த கோடிக்கணக்கான முகங்களுக்குள், அவளை மட்டும் தேடி வந்து நின்றிருக்கிறான் ஒருவன்.
அவளை பார்த்து மட்டும், "என்னோட நாட்களின் முதலும் முடிவுமா நீ வேணும்..." என்று ஒருவன் சொல்லி இருக்கிறான்.
அந்த நினைவு வந்ததும் விழிகள் தானாக மூடிக் கொண்டது.
உதட்டில் சிரிப்பு மலர்ந்தது. நெஞ்சுக்குள் எங்கோ ஒரு இடத்தில் இதமாக வலித்தது.
இத்தனை வருட வாழ்க்கையில் அவள் எத்தனையோ இரவுகளை தனியாக கடந்து வந்திருக்கிறாள்.
காய்ச்சல் வந்த இரவுகள்; அழுது தூங்கிய இரவுகள்; பயந்து விழித்த இரவுகள்; யாராவது இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த இரவுகள்; யாருமே இல்லை என்று தன்னைத்தானே சமாளித்து உறங்கிய இரவுகள்.
ஆனால்...
இன்றிரவு மட்டும் வித்தியாசமாக இருந்தது. இன்றும் அவள் தனியாக தான் இருந்தாள். எப்பொழுதும் தாங்கிக் கொள்ளும் தாரணி கூட அருகில் இல்லை.
அதே அறை; அதே படுக்கை; அதே சுவர்கள்…
ஆனால் தனிமையாக இல்லை.
தன்னை பற்றி யோசித்து… நேசித்து கொண்டிருக்கும் ஒருவன் இந்த உலகத்தில் இருக்கிறான் என்ற எண்ணம்...
இதுவரை அறியாத ஒரு நிம்மதியை கொடுத்தது.
பிறந்த நாளில் இருந்து யாருக்கும் முதலானவளாக இருந்ததில்லை சக்தி!
யாரும் அவளுக்காக காத்திருந்ததும் இல்லை.
யாருடைய உயிர் தேவையாகவும் அவள் இருந்ததில்லை.
ஆனால் இன்று...
ஒருவன் பதினைந்து நாள்கள் செய்ய வேண்டிய வேலையை பதிமூன்று இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் பநினொன்றரை நாட்களில் முடித்து விட்டு வந்திருக்கிறான்.
வேலைக்காக அல்ல, பணத்திற்காக அல்ல,‌ பொறுப்பிற்காக அல்ல.
அவளுக்காக! சக்தி என்ற பெண்ணுக்காக… அவளைக் கண்களால் பார்க்க வேண்டும் என்பதற்காக அத்தனை வேலைகளையும் செய்து முடித்து வந்து நிற்கிறான் அவளுக்கு முன்பாக…
அந்த உண்மை நினைவுக்கு வந்ததும் கண்களில் தானாக கண்ணீர் திரண்டது.
முதல் முறை புத்தகங்களில் படித்த ‘ஆனந்த கண்ணீர்’ என்று வார்த்தைக்கு அர்த்தம் புரிந்தது அவளுக்கு.
புன்னகைத்தபடி கண்கள் சிந்திய அந்த கண்ணீர் இத்தனை வருட வாழ்க்கையில் முதல் முறை.
அவன் வரவிற்கு பிறகு அவள் வாழ்வில் தான் எத்தனை எத்தனை முதல் முறைகள் வந்து போகிறது…
முதல் தேடல்…
முதல் குறுகுறுப்பு…
முதல் சிலிர்ப்பு…
முதல் பரிதவிப்பு…
முதல் ஆசுவாசம்…
முதல் உயிர் தீண்டல்…
முதல் முத்தம்…
சிறுவயதில் இருந்து அவள் கடவுளிடம் பெரியதாக எதுவும் கேட்டதில்லை.
‘கடமையைச் செய் பயனை எதிர்பாராதே’ என்று சொல்லி சொல்லி வளர்க்கப்பட்ட பெண் அவளுக்கு இறைவனிடம் முறையிட்டு கூட எதையும் கேட்டு பெறத் தெரிந்ததில்லை. ஆனால் இன்று, வாழ்க்கை முழுக்க கேட்காமல் இருந்த ஒரு பரிசை, வாழ்க்கையே அவள் கையில் கொண்டு வந்து வைத்தது போல இருந்தது.
மன்னவனின் நினைவில் மங்கை அவள் மதிமுகத்தில் என்றும் இல்லா மகிழ்ச்சி நித்திரையிலும் நிறைந்திருக்க, பெரும் வாக்குவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது ஜெகதீஸ்வரனின் இல்லத்தில்.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online

Top Bottom