• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கண்களுக்குள் பள்ளி கொண்டேன் - 21

skp

Member
அத்தியாயம் 21

வீட்டின் கதவை அடைந்த ஜெகதீஸ்வரனுக்கு சத்தம் இல்லாமல் அழகாய் விரிந்து வழிவிட்டது அந்த தேக்கு மரக் கதவு.

ஒரு நொடி நின்று நிதானித்தவன் தலையை இருபுறமும் அசைத்து சிரித்தபடி உள்ளே நுழைய, “வெல்கம் ஹோம் ப்ரோ…” என்றான் சர்வேஸ்வரன்.

சிறு புன்னகையோடு அவனைப் பார்த்தவன் ஒன்றும் பேசாமல் முன்னே நடக்க, “நான் பார்த்தது நிஜம் தான அண்ணா?” என்று கேட்டபடி அவனுக்கு இணையாக சர்வேஸ்வரன் நடக்க, திரும்பி தம்பியை பார்த்தான் ஜெகதீஸ்வரன்.

அவன் பார்வையில் ஒரு நொடி திடுக்கிட்டாலும் அதை மறைத்துக் கொண்டவனாக, “நான் பார்த்தேன். நான் பார்த்தத நீங்களும் பார்த்தீங்க. அதையும் நான் பார்த்தேன்.” என்று அவன் சொல்ல மென்புன்னகை ஜெகதீஸ்வரனின் இதழ்களில்.

“தேவையில்லாம பேசாதடா. போ… போய் தூங்குற வழியை பாரு. நாளைக்கு நிறைய வேலை இருக்கு.” என்றவன் முகமும் குரலும் இதழ்களில் படிந்திருந்த மென்புன்னகையும் இதுவரை தன் தமையனிடம் அவன் கண்டதில்லை.

“நீங்க அடிச்சாலும் சொல்லுவேன். ரொம்ப அழகா இருக்கீங்க அண்ணா…” என்று சொன்னவன் கண்ணிமைக்கும் நேரத்தில் படிகளில் ஏறி மறைந்து இருந்தான்.

சிறு புன்னகை அவன் முகம் முழுவதும் மலர்ந்து விரிய நிதானமாக தன் அறைக்குச் சென்றவன் கண்ணாடி முன் நின்று தன்னையே பார்த்தான்.

சர்வேஸ்வரன் சொல்லிச் சென்றதைப் போல அவன் முகமே அவனுக்கு அந்நியமாகி இருந்தது. உள்ளார்ந்த மகிழ்ச்சியோடு விகசிக்கும் முகம் பேரழகு என்று அவனிடம் சொல்ல அந்த நொடி சக்தி அவன் அருகில் இல்லை.

உடைகளை கூட கலையாமல் அப்படியே மெத்தை மீது சாய்ந்தவன் கண்களை மூடினான்.

சக்தியை தழுவ எண்ணியிருந்தவனை திரும்பியும் பார்க்காமல் நித்ரா தேவி கோபத்தோடு முறைத்துக் கொண்டு சென்று விட, தன் கைபேசியை எடுத்தான்.

நேரத்தை பார்க்க அது 12 கடந்து 45 நிமிடங்கள் ஆகிவிட்டது என்று காட்டியது.‌

காதல் வந்த பின் காலம் நேரமெல்லாம் பார்த்த எந்த காதலனையும் அந்த கால தேவனே கண்டிருந்திருக்க மாட்டான்.

அப்படி இருக்க எந்த கட்டுக்குள்ளும் சிக்காத ஜெகதீஸ்வரனா காலத்தை மதிப்பான்?

அவளது பெயரை தீண்டிய விரல்கள் அழைக்க ஒரு நிமிடம் தயங்கியது. காலத்தை மதிக்க மாட்டான் தான். ஆனால் காதலியையும் அவள் தூக்கத்தையும் மதிப்பவன் தானே… அதனால் வந்த தயக்கம் போல…

“நாளைக்கு அவ வேலைக்கு வரணும். இன்னிக்கு நைட் விடிய விடிய நீ பேசினா நாளைக்கு எப்படி அவ வருவா? தூங்கணும் ஜெகா. கால் பண்ணாத. போனை வச்சுட்டு நீயும் தூங்கு. உனக்கும் ரெஸ்ட் வேணும்.” புத்தி அலாரம் அடிக்க,

“இன்னைக்கு தான் ப்ரொபோஸ் பண்ணி இருக்கேன். 13 நாள் அவள பாக்காம இருந்திருக்கேன். இப்ப பேசாம இருக்கணும்னு சொன்னா வாய்ப்பே இல்லை… அறிவுன்னா அப்படித்தான் அட்வைஸ் பண்ணும். அவன் கிடக்கிறான் ம***ண்டி… நீ கால் பண்ணு மாப்பு…” என்ற காதல் கொண்ட மனதின் வார்த்தைகள் அவனைக் குதூகளிக்க செய்ய, அழைத்து விட்டான் சக்திக்கு.

தனக்காக ஒருவன் இந்த உலகத்தில் இருக்கிறான் என்ற எண்ணத்தோடு உறங்க ஆரம்பித்து இருந்த சக்தியை உலுக்கியது அந்த அர்த்த ராத்திரியில் ஒலித்த கைபேசியின் சத்தம்.

கைநீட்டி அதை எடுத்தவளின் பழுப்பு நிற விழிகள் கைபேசியின் திரை ஒளியை உள்வாங்கி வானவில்லாக ஜொலித்தது.

அழைப்பை ஏற்றவள்,

“ஜெகன்…” என்று அழைக்கும் முன்பாகவே,

“தூங்கிட்டு இருந்தியா? டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்று அவசரமாக வந்து விழுந்தது ஜெகதீஸ்வரன் வார்த்தைகள்.

இரவில் மலர்ந்த அல்லியாக முகம் விகசிக்க, “இல்ல…” என்றாள் ஒற்றை வார்த்தையாக.

கேட்டவன் ஆழ்ந்து ஒரு பெருமூச்சை விட அந்த மூச்சு காற்றின் வெப்பத்தை வேண்டியது பெண்ணின் உள்ளம்.

“தூங்காம என்ன பண்ணிட்டு இருக்க?” இயல்பான குரலில் அவன் கேட்க நினைத்தாலும் வரவில்லை அவனுக்கு.

அந்த வித்யாசத்தை நொடியில் உணர்ந்தவள், “தூங்கிட்டு தான் இருந்தேன். கால் வந்த சத்தத்துல தான் எழுந்தேன்…” என்று சொல்ல,

“அப்ப தூங்கிட்டு தான் இருந்தியா? நான் தான் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்று கேட்டவன் காரணத்தை உணர துடித்தானே தவிர உறங்கச் சொல்லி சொல்ல வேண்டும் என்று நொடி நேரம் கூட யோசிக்கவில்லை.

“இருப்பத்தேழு வருஷத்துல இவ்வளவு சந்தோஷமா நான் தூங்கனது இல்லை. அதைவிட இவ்வளவு சந்தோஷமா என்னோட தூக்கம் கலஞ்சதும் இல்லை ஜெகன்.” ஆழ்ந்த குரலில் சக்தி சொல்ல அவளது உணர்வுகளை தனதாக்கிக் கொள்ள முயன்றான் சக்தியின் ஜெகன்.

“சக்தி…” ஒரு வார்த்தை அவன் சொல்ல,

“ம்ம்… சொல்லுங்க ஜெகன் சாப்பிட்டீங்களா?” என்று சக்தி கேட்க,

“சாப்பிடணும் தோணலையே… பசி இல்லம்மா…” என்றவன், “நீ சாப்டியா?” என்றும் கேட்டான்.

“சாப்பிடணும் தோணலையே… பசி இல்லப்பா..‌.” அவன் வார்த்தைகளையே அவள் படிக்க, சிறு சிரிப்பு அவனில்.

“தூக்கம் வருதா?” ஜெகன் கேட்க,

“உங்களுக்கு வருதா?” பதில் கேள்வி கேட்டாள் சக்தி.

“வரலையே… ஏன் வரணுமா?” அவன் கேட்க,

“கண்டிப்பா வரணும் 15 டேஸ் மேல ஆகும்னு சொன்ன வேலையை 12 நாளுல முடிச்சுட்டு 24 ஹவர்ஸ் கிட்ட ட்ராவல் பண்ணி வந்து இருக்கீங்க. தூங்கணும் உடம்பு கெட்டுப் போயிடும்.” சிறு கண்டிப்பு இருந்ததோ சக்தியின் குரலில்.

“நீ சொன்ன அத்தனையும் இருந்துச்சு. ஆனா உன்ன பார்த்ததுக்கு அப்புறம் உன் கூட பேச சொல்லுதே…”

“அப்படித்தான் சொல்லும். அது சொல்ற எல்லாத்தையும் கேட்கணும்னு அவசியம் இல்லை…”

“எல்லாத்தையும் கேக்கணும்னு அவசியம் இல்ல தான். பட் இதை கேட்காம இருக்க முடியல.”

“சரி சொல்லுங்க… அப்படி என்ன பேசணும்?”

“உன்ன பத்தி பேசணும். என்னை பத்தி பேசணும். நம்ம பத்தி பேசணும். நம்ம குழந்தைகளை பத்தி கூட பேசலாம்…”ஜெகன் அடுக்கிக் கொண்டே போக அவன் சொல்லியதில் கற்பனைகள் அழகாய் விரிந்தது அவள் கண்களுக்குள்.

“ம்ம்… சொல்லுங்க ஜெகன்…”

“நான் சொல்லிக்கிட்டே இருந்தா நீ கேட்டுக்கிட்டே இருப்ப உன்னை பத்தி சொல்லு…”

“என்ன சொல்ல…”

“உனக்கு என்ன பிடிக்கும்?”

“கேள்வி கேளுங்கப்பா…”

“அதுதான்டா கேட்டுட்டு இருக்கேன். உனக்கு என்ன பிடிக்கும்?”

“பதில் சொல்லிட்டு கேள்வி கேட்கிறேன்னா நான் என்ன சொல்ல முடியும்?”

“சக்தி…”

“எனக்கு உங்களை பிடிக்கும். நெக்ஸ்ட்?”

இனித்தது அவனுக்கு

“எவ்ளோ பிடிக்கும்?”

“என்னோட பயங்களை பலவீனங்களை எந்தவித தயக்கமும் இல்லாம சொல்ற அளவுக்கு பிடிக்கும்.”

“இன்ட்ரஸ்டிங்…”

“நான் பார்த்த வரைக்கும் கேட்ட வரைக்கும் படிச்ச வரைக்கும் கூட… காதலிக்கும் போது அந்த நபரோட பாஸிட்டிவ் பக்கங்கள் மட்டும்தான் தெரியும்னு சொல்லுவாங்க… அப்படி காதலிச்சு கல்யாணம் வரைக்கும் போனதுக்கு அப்புறம் துணையோட நெகட்டிவ் தெரிய வரும்போது ரொம்ப மனசு உடைஞ்சு போயிடுறாங்க… ஏன் அப்படி ஆகுதுன்னு ரீசன் தேடும்போது சில விஷயங்கள் புரிஞ்சது.” என்று அவள் நிறுத்த,

“ம்ம்…”

‘ம்’ கொட்டினான் ஜெகதீஸ்வரன்.

“என் கூட படிச்சவங்க நிறைய பேர் கிட்ட அப்படி பார்த்திருக்கேன். ஆனா தாரணி… அப்படி இருந்ததில்ல. அவ கிட்ட கேட்டேன்… காதலிக்கும் போது அப்படித்தான் இருப்பாங்களா இருக்கும்.

காதலிக்கும் போது நான் நானா தான் இருப்பேன்னு தைரியமா சொல்லிக்க முடியாத அளவுக்கு ஒரு இன்செக்யூரிட்டி பீலிங்ஸ் இருக்குது.

ஆனா கல்யாணம்னு உறுதி வரும் பொழுது ஒரு தைரியம் கிடைக்கும். நம்மள விட்டு போக மாட்டாங்கன்னு ஒரு நம்பிக்கை இருக்கும். அதனால நடிக்கவோ மறைக்கவோ வேண்டிய அவசியங்கள் இருக்காதுன்னு சொன்னா.

அந்த பாயிண்ட் எனக்கு புரிஞ்சது. அதுதான் சொன்னேன்.” என்று நீளமாக அவள் பேச,

“நம்பிக்கை வந்திருச்சு…” ஒரே வாக்கியத்தில் முடித்திருந்தான் அவன்.

“வந்துடுச்சு…” என்று அவளும் சிரித்தாள்.

“எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியுமா?”

“தெரியுமே…”

“என்ன…”

“பிளாக் அண்ட் வொயிட், மட்டன் பிரியாணி, பில்டர் காபி, பால் பணியாரம், தோசை, மழை, மழைக்கு முன்ன வர்ற மண் வாசம், வானவில், சாயங்காலம் சூரியன் மறையும் நேரத்து வானம், நைட் நேரத்தில லாங் டிரைவ்ஸ், 80 ஸ் சாங்க்ஸ்…

அப்புறம்… தொழில் ரொம்ப பிடிக்கும். உங்க குடும்பம் இந்த எல்லாத்துக்கும் மேல புடிக்கும்…” வரிசையாக அவள் சொல்லிக் கொண்டே போக உச்சி மேட்டுக்கு சென்றன அவனது புருவங்கள்.

“இம்ப்ரஸ்ட்…” என்றவன் குரலில் அந்த வியப்பு அப்பட்டமாக தெரிந்தது.

“இவ்வளவு எப்படி தெரியும்?” ஜெகன் கேட்க,

“தெரியல. என் மைண்ட்ல ரெஜிஸ்டர் ஆயிருக்கு போல… சில விஷயங்கள் பார்த்து இருக்கேன். சில விஷயங்கள் உணர்ந்து இருக்கேன் போல. இவ்வளவு நான் யோசிச்சது இல்ல. நீங்க கேட்டதும் அதுவா வருது… எனக்கே தெரியல…” என்று அவள் சொல்லிய பதில் நிச்சயம் உண்மை என்று விளங்கியது அவனுக்கு.

“எனக்கு தான் உன்ன பத்தி ஒன்னுமே தெரியல. உனக்கு என்ன பிடிக்கும் சக்தி?”

“உண்மைய சொல்லனும்னா இதுதான் பிடிக்கும்னு ஏதும் ஸ்பெசிஃபிக்கா இருந்தது இல்ல ஜெகன்… ஸ்கூல் படிக்கும்போது ஒரு விஷயம் சொன்னாங்க படிச்சா உனக்கு பிடிச்சது போல உன் வாழ்க்கை இருக்கும். இல்லன்னா அடுத்தவங்க சொல்றது போல உன்னோட வாழ்க்கை மாறிடும் அப்படின்னு சொன்னாங்க அப்போ இருந்து படிக்க பிடிக்கும்… நிறைய நிறைய படிக்க பிடிக்கும்.

அதனாலயே படிப்பு ரொம்ப ஈசியா போயிடுச்சு. அப்புறம்…” என்று யோசித்தவள் சிறிய இடைவெளி விட்டு,

“அப்புறம் பிடிக்கும்னா சிவன் பிடிக்கும். எங்க இல்லத்துல எல்லா மதத்துக்கான கோவில்களும் இருக்கு. அதுல சிவன் கோவிலும் ஒன்னு… படிப்ப பிடிச்ச அள விட அந்த சிவன எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த சிவலிங்கத்தை மனசுல நினைச்சா கூட போதும் மனசு அமைதியாயிடும்.

அப்புறம் ஒரு நாள் ஸ்கூல் படிக்கும்போது தஞ்சாவூர் கூட்டிட்டு போனாங்க. டூர்…அந்த பெரிய கோவில் பார்த்தேன்… ஏனோ ரொம்ப பிடிச்சது. அந்த வயசுல அதுக்கு மேல அத பத்தி யோசிக்கல. ஆனா அந்தக் கோவில் கட்டி இருக்கிற விதம் அதோட வரலாறு எல்லாம் தெரிஞ்சுக்க ஒரு வயசுல ஆசைப்பட்டேன். அந்த ஆசைதான் என்னை ஆர்கிடெக்சர் படிக்க வைச்சது. அதனால என்னோட இந்த வேலை ரொம்ப பிடிக்கும்…” என்று தெளிவாக சொல்லியவள்,

“அப்புறம் முக்கியமான ரெண்டு பேர விட்டுட்டேன்…” என்று சிறு சிரிப்போடு அவள் சொல்ல,

“யாரு?” என்றான் அமைதியான குரலில்

“தாரணி… எனக்கு இருக்கிற ஒரே ஃப்ரென்ட்… அவளையும் பிடிக்கும். அடுத்து ஷர்வா எனக்கு கிடைச்ச ஒரே பாய் ஃப்ரெண்ட்..” என்று அவள் சொல்லியபோது, சிறு புன்னகை அவன் இதழ்களிலும்.

“அப்புறம்…” அவள் பேசிய விஷயங்களில் அவளின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பது அப்பட்டமாக தெரிந்தது. அதை காட்டிக் கொள்ளாமல் கவனித்துக் கொண்டவன் அவளை பேச வைக்க முயன்றான்.

“அப்புறம் எனக்கு மாப்பிள்ளை பார்த்துகிட்டு இருக்க வெண்ணிலா அம்மாவுக்கு விஷயத்தை சொல்லணும்.”

“என்ன விஷயத்தை சொல்லப் போறீங்க?”

“இனிமே மாப்பிள்ளை தேட வேண்டாம் மா. எனக்கு ஒருத்தர புடிச்சிருக்கு அவர் பேரு ஜெகதீஸ்வரன் அப்படின்னு சொல்லணும்.”

“அப்படி சொன்னா?”

“அவங்களுக்கு தெரிஞ்ச வரைல விசாரிப்பாங்க…”

“விசாரிச்சு?”

“இப்படி ஒரு மாப்பிள்ளைய என்னால கூட உனக்கு கொண்டு வந்து தர முடியாதுன்னு சொல்லுவாங்க.”

“அவ்ளோ நம்பிக்கையா?”

“உண்மைய சொல்றேன்…”

“அப்புறம்…”

“அப்புறம் நீங்க தான் சொல்லணும்…”

“என்னையும் உன்னையும் பத்தி நிறைய சொல்லிட்ட… நம்பள பத்தி ஒன்னுமே சொல்லலையே…”

“என்ன சொல்லணும்?”

“உன்னோட மனசுல என்ன தோணுதோ சொல்லு…”

“உண்மைய சொல்லவா? எதுவுமே தோணல. ரொம்ப அமைதியா இருக்கு. நிறைய தேடி அலைஞ்ச மனசு இன்னைக்கு நிர்மலமா இருக்குன்னு சொல்லலாம்… வெளிய காட்டிக்கிட்டது இல்லனாலும் அம்மா அப்பா பாசம் எப்படி இருக்கும்? கூட பிறந்தவங்க எல்லாம் எப்படி பார்த்துப்பாங்க நிறைய யோசிச்சி இருக்கேன். பதில் கிடைச்சதில்லை.

அடுத்தவங்களை பார்த்தோ… அடுத்தவங்க சொல்லியும் எந்த ஒரு விஷயத்தையும் என்னால முழுசா உணர முடியாது… அதனால மே பி அந்த இடங்கள் எல்லாம் ரொம்ப வெற்றிடமாவே இருந்திருக்கு.

ஆனா இன்னைக்கு அப்படி எதுவும் இல்லை. மனசு நிறைஞ்சு இருக்குன்னு சொல்லுவாங்கல்ல அதோட அர்த்தத்தை இன்னைக்கு நான் புரிஞ்சுகிட்டேன்.

நமக்கே நமக்காக ஒருத்தவங்க இந்த உலகத்துல இருக்காங்கன்றது எவ்வளவு பெரிய பிளஸ்ஸிங் அப்படின்னு புரிஞ்சது.

இதுவரைக்கும் என்னை புரிஞ்சுக்க யாருமே வேண்டும்னு நான் நினைச்சதில்லை ஜெகன்.

ஆனா இன்னைக்கு... என்னை புரிஞ்சுக்க முயற்சி பண்ற ஒரு மனசு கிடைச்சிருக்கு.

அதுவே ஏனோ மனசை நிறைச்சிடுச்சு.

படிக்க சொன்னாங்க பிடிச்சிருந்தது. படிச்சேன். அதுக்கப்புறம் உனக்கான இடத்தை இந்த உலகத்துல உருவாக்கணும்னு சொன்னாங்க. அதுக்கு பணம் முக்கியம்னு சொன்னாங்க. பணத்தை தேடி ஓட வேண்டிய அவசியம் எனக்கு இல்லாம எனக்கு புடிச்ச துறையே அதுக்கான வழிகளை எனக்கு செஞ்சு கொடுத்திருச்சு… வெளியே இருந்து பார்க்கிறவங்களுக்கு எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல அப்படின்ற மாதிரி தான் சொல்லுவாங்க. நான் கூட எனக்கு என்ன பிரச்சனை? ஒன்னும் இல்ல நல்லா போய்கிட்டு இருக்கு அப்படின்னு தான் நினைச்சு இருந்தேன்..

ஆனா இன்னைக்கு புரிஞ்சது… எனக்குள்ள இருந்த ஒரு… ஒரு… என்ன சொல்றது? ஒரு தேடல்… முழுமையான மாதிரி ஒரு ஃபீல்…

என்ன தேடுறேன்னு கூட தெரியாம இருந்திருக்கேன் போல.

இன்னைக்கு அந்த தேடல் நின்ன மாதிரி இருக்கு.

அதனாலதான் இவ்வளவு சந்தோஷமா இருக்கேன்.

அழனும் போல இருக்கு. ரொம்ப சந்தோஷமா கத்தி சிரிக்கணும் போல இருக்கு.. என்ன என்னவோ தோணுது…” என்று சொல்லிக் கொண்டே வந்தவள் சட்டென்று இதழ்களைக் கடித்து வார்த்தைகளுக்கு அணை போட்டாள்.

“ரொம்ப பேசுறேனோ? என்னென்னவோ உளர்ற மாதிரி இருக்கா?” தயக்கத்தோடு அவள் கேட்க,

“பேசுடா… நீ பேசுறத கேட்க ரொம்ப பிடிச்சிருக்கு. பேசு.” என்று சொல்ல அவனின் குரலில் நீ என்ன பாவம் இருந்தது என்று அவளால் உணர முடியவில்லை.

ஆனால் தான் பேசுவதை கேட்க ஒரு ஜீவன் இருக்கிறது என்ற எண்ணமே அவளுக்குள் சிலிர்ப்பை கொடுத்து கண்ணீரை வரவழைத்தது.

"அழக்கூடாதுன்னு தெரியும்.

ஆனா இந்த கண்ணீர் கூட எனக்கு புதுசா இருக்கு ஜெகன்.”

கண்களில் வழிந்த கண்ணீரோடு அந்த கண்ணீரின் தடம் வார்த்தைகளிலும் தெரிய அவள் சொல்ல,

“உன்னை கட்டிப்புடிச்சு அந்த கண்ணீரை ஏந்திக்க பக்கத்துல நான் இல்ல கண்ணம்மா… அழாதடி…” ஜெகதீஸ்வரன் மென்மையான குரலில் சொல்ல,

“இன்னும் அதிகமா…” என்றவளின் குரலில் கண்ணீரின் தடம் அதிகமாக இருந்தது.

அங்க வரவா? நீ சொன்னால் நான் செய்வேன் என்ற நிச்சயத்தோடு அவன் வார்த்தைகள் வர,

இந்த நேரத்திலயா? என்றாள் அவள் சிறு பிரமிப்போடு.

உன்ன பாக்க நேரம் காலம் எல்லாம் எனக்கு இருக்கா என்ன? கைக்கு எட்டாத தூரத்தில் இருந்து நீ அழ நான் அமைதியா வேடிக்கை பார்ப்பேன்னு நெனச்சியா?

அழனும்னு நினைக்கல. ஆனா ரொம்ப சந்தோஷத்துல அழுகை வந்துகிட்டே இருக்கு… நான் என்ன பண்ண?

என்னால எதுவும் பண்ண முடியல. அதான் சொல்றேன்…

இப்ப பக்கத்துல இருந்தா மட்டும் என்ன பண்ண முடியும் உங்களால? உண்மைய சொன்னா எனக்கு இன்னும் நிறைய அழனும் போல ஆசையா இருக்கு. என்னை அழாதன்னு சொல்ல ஒரு ஆள் இருக்காங்க என்னோட அழுக ஒருத்தர பாதிக்குது அப்படின்னு நினைக்கும் போது இந்த பீல் ரொம்ப புதுசா இருக்கு.”

என்று சொல்லிக் கொண்டு வந்தவள்,

“நான் இப்படி பேசுறது எல்லாம் சரியா தப்பான்னு கூட தெரியல ஜெகன்.

ஆனா உங்ககிட்ட மட்டும் எதையும் மறைக்கணும்னு தோணல.

அதனாலதான் மனசுல வர்றதெல்லாம் சொல்லிட்டு இருக்கேன்.”

சிறு குழந்தையாய் பேசியவளை அள்ளி அணைத்துக்கொள்ள முடியாத இந்த தூரத்தை நினைத்து வெறுத்துப் போனான் ஜெகதீஸ்வரன்.

“என்ன பண்ணனும்னு தோணுதோ பண்ணு. ஆனா என் பக்கத்தில் இருக்கும் போது பண்ணு. நான் உன் பக்கத்துல இருக்கும் போது பண்ணுடா… சண்டை போடு, அடம்பிடி என்னவும் பண்ணு. என்னால பேலன்ஸ் பண்ண முடியும். ஆனா அழாதடா… நீ அழுதா இங்க என்னமோ பண்ணுது…” என்று அவன் சொல்ல,

“ஒரே நாள்ல ரொம்ப படுத்துறேன் இல்ல.. ரொம்ப சைல்டிஸ்ஸா பிகேவ் பண்றேன்ல இல்ல… எனக்கே தெரியுது…

ஆனா உங்ககிட்ட இருக்கும்போது நான் நானாவே இருக்கணும்னு தோணுது.

அதுதான் எனக்கு பயமா இருக்கு.

இதுவரைக்கும் யார்கிட்டயும் இப்படி இருந்ததில்ல…

இதெல்லாம் பண்ணினா என்னை பிடிக்காம போயிடுமா உங்களுக்கு?” அவள் கேட்டு முடிக்கும் முன் அழைப்பை துண்டித்தவன் புலனத்தில் காணொளி அழைப்பாக அழைத்து விட்டான்.

அவள் நிலை அவனுக்கு புரிந்தது. எதையும் எதிர்பார்க்காத வாழ்ந்து விட்டவளுக்கு அவனிடம் எதிர்பார்ப்பை சொல்வதற்கு கூட தெரியவில்லை என்பது விளங்கியது. அதே நேரத்தில் எப்படி ஒரு உறவை எடுத்துச் செல்ல வேண்டும் என்று அவள் விளங்கிக் கொள்ள முடியாமல் தவிப்பதும் அவனுக்கு விளங்கியது.

ஆனால் ஒவ்வொரு முறையும் அவள் யோசித்துப் பேசுவதும் பிடிக்காம போச்சுன்னா என்ன பண்ணுவது என்று எண்ணி கலங்குவதும் அவர்கள் உறவுக்கு சரியானதாக படவில்லை அவனுக்கு. முதல் முறையை தெளிவாக சொல்லி விட வேண்டும் என்று எண்ணியவன் அழைத்து விட்டான்.

அறையின் விளக்கை உயிர்ப்பித்தவள் அழைப்பையும் ஏற்க, திரையை நிறைத்தான் ஜெகதீஸ்வரன்.

ஒன்றும் பேசாமல் அவள் முகத்தையே அவன் ஆராய்ந்த படி இருக்க என்னவோ செய்தது அவன் பார்வை.

“ஜெகன்…” முகம் பார்த்து அவள் அழைக்க,

“என்னவோ கேட்ட கண்ணம்மா… எனக்கு அது சரியா புரியல அதான் வீடியோ கால் பண்ணேன். என்ன கேட்ட?” என்று நிதானமாக அவள் விழிகளை ஊடுருவிய படி அவன் கேட்க வார்த்தைகள் வரவில்லை அவளுக்கு.

“கேளுடா…” அப்பொழுதும் நிதானமாக அவன் கேட்க ஒன்றும் இல்லை என்பதாக தலையசைத்தாள் அவள்.

“ஃபர்ஸ்ட் அன்ட் லாஸ்ட் சக்தி… இன்னொரு முறை இந்த கேள்வி நம்ம வாழ்க்கைக்குள்ள வரக்கூடாது.” அழுத்தமான குரலில் அவன் சொல்ல,

நிமிர்ந்து அமர்ந்தாள் அவள்.

“அம்மா - மகன் அப்பா - மகள் அண்ணா, அக்கா, தங்கச்சி, தம்பி, பிரண்ட்ஸ் இப்படி எல்லாம் உறவுகளுக்கும் தனித்தனியா இருக்க முடியும். ஆனா இந்த எல்லா உறவுகளும் ஒரு உறவுக்குள்ள அடங்கியும் போக முடியும்னா அதுதான் கணவன் மனைவி. அந்த உறவுக்குள்ள சந்தேகம் வரக்கூடாது. ஒவ்வொரு முறையும் பயந்து பயந்து நீ பேசக்கூடாது.

தப்பு பண்ணுனா அந்த உறவுகள் எல்லாம் விட்டுட்டுப் போயிடுமா? அதே மாதிரி தான் கணவன் மனைவி உறவு. ஒருவனுக்கு ஒருத்தி மட்டும்தான். புரியுதா? இந்தக் கேள்வி பொதுவா எப்ப வரும் தெரியுமா? நம்பிக்கை இல்லாத இடத்துல… என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?” என்று அழுத்தம் திருத்தமாக அவன் கேட்க இல்லை என்று வேகமாக அசைந்தது அவள் தலை.

“முன்ன பின்ன தெரியாத இரண்டு பேர் ஒன்னா சேரும் போது நிறைய விஷயங்கள் தெரியாது. பல விஷயங்கள் புரியாது. சில விஷயங்கள் ஒத்துப் போகாது.

இந்த உலகத்துல எந்த கப்பிள்ஸும் மேட் ஃபார் ஈச் அதர் கிடையாது. சண்டை வரும்… பேசி சரி பண்ணிக்கணும். புரிஞ்சுக்கணுமே… தவிர பிடிக்காம போச்சுன்னான்னு கேட்டா என்ன பண்ண முடியும்? ஒவ்வொரு தடவையும் உனக்கு நான் என்னை ப்ரூஃப் பண்ணிக்கிட்டே இருக்கணுமா?” என்று அவன் கேட்க வேகமாக இல்லை என்று அசைந்தது அவள் தலை.

அவள் தலை அசைந்த தேகத்தில் கண்ணீர் தடம் பதிந்த கன்னத்தில் தொட்டு மீண்ட ஜிமிக்கியில் பதிந்த அவன் கண்கள், கண்ணில் மிதந்த அந்த பழுப்பு நிற விழிகளை ஊன்றி பார்த்தது.

தவறு செய்த பிள்ளையாய் விழித்தவளை மார்புக்குள் அள்ளி கொள்ள அவன் ஆவி துடித்தது.

சில நொடிகள் இமைக்காமல் அவளையே பார்த்தவன், “நான் சொன்னதுலாம் புரிஞ்சுதா? வாயை திறந்து பதில் சொல்லு.” அவன் கேட்க,

“புரிஞ்சது.” என்றாள் மழலையாக.

“அழகுடி…” திடீரென்று அவன் கொஞ்ச, புரியாமல் விழித்தது அந்த குமரி வடிவத்தில் இருந்த குழந்தை.

“சரி சொல்லு… உன்ன பத்தி என்ன பத்தி நம்மள பத்தி நிறைய பேசியாச்சு.. குழந்தை பத்தி மட்டும்தான் பேலன்ஸ் இருக்கு.’ என்று அவன் சொல்ல ‘ங’ என்று விழித்தாள் சக்தி.

அவள் பாவணையில் முகிழ்த்த சிரிப்பை கஷ்டப்பட்டு இதழ் கடித்து மறைத்தவன், “இப்படி பார்த்தா என்ன அர்த்தம்?” என்றான் அவன் அழுத்தமான குரலில்.

“ம்ம்…” என்று அவள் விழிக்க,

“சரி... இந்த சீரியஸ் கிளாஸ் போதும். இப்ப முக்கியமான விஷயத்துக்கு வரலாமா?

இப்படியே என்ன சொல்றது? என்ன பேசுறாங்கன்னு புரியாம முழிச்சுக்கிட்டு இருக்க உன்னோட மினி வெர்ஷன் எத்தனை வேணும்னு கேட்டேன் குட்டிமா…” என்று என்ன முயன்றும் தடுக்க முடியாமல் வந்த உல்லாச குரலில் அவன் கேட்க, மொத்தமாய் சிவந்தது பெண்ணின் தேகம்.

அவளது நிலையை உணர்ந்தவனுக்கு இதற்கு மேலும் அவளைப் பார்த்துக் கொண்டோ பேசிக்கொண்டோ இருந்தால் வார்த்தைகள் எல்லை மீறி விடும் என்பது விளங்கியது.

அவளது தவிப்பும் சிவந்த முகமும் அவனுக்குள் பூகம்பத்தை தோற்றுவிக்க, அமைதியாக கட்டிலில் சாய்ந்தான்.

“வச்சிரட்டுமா…” ஒற்றை வார்த்தையை உச்சரிப்பதற்குள் தடுமாறி போனாள் பெண்.

“இதுக்கு மேல பேசினா சரியா இருக்கணும்னு தோணல. என்னால தனியா இருக்க முடியும்னும் தோணல… எவ்வளவு சீக்கிரம் உன்னை என் பக்கத்துல கொண்டு வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொண்டு வரேன்…” என்று அவள் விழிகளை பார்த்தபடி சொன்னவன்,

“தூங்க முடிஞ்சா தூங்கு… என்ன ஆனாலும் நாளைக்கு காலைல ஆஃபிஸ் வந்துடனும்.” என்றவனின் குரல் அவளுக்குள் ரசவாதங்களை நிகழ்த்த கண்ணாடியாய் பிரதிபலித்தது அவள் முகம்.

“வச்சிரட்டுமா?” இப்பொழுது அவன் கேட்க,

சில நொடி தாமதித்தவள் சம்மதமாய் தலையசைக்க, “எத பத்தியும் யோசிக்காம நிம்மதியா தூங்கு. நாளைக்கு பாக்கலாம். குட்நைட் கண்ணம்மா…” என்று சொல்லியவன் அப்பொழுதும் அழைப்பை துண்டிக்க மனம் இல்லாமல் பார்த்துக் கொண்டே இருக்க வேறு வழி இல்லாமல் அவள் தான்,

“நீங்களும் தூங்குங்க. ரொம்ப டயர்டா இருக்கீங்க… குட் நைட்.” என்று சொல்லி ஒரு முழு நிமிடம் அவனை தன் கண்களுக்குள் நிலைத்து கொண்டு அழைப்பைத் துண்டித்தாள்.

உறவுகளை கையாண்டு பழக்கம் இல்லாமல் இருந்தவளுக்கு மொத்த உறவுகளுக்கும் ஒற்றை உருவமாய் அவன் வந்து சேர்ந்ததில் உள்ளத்தை மறைக்காமல் அவள் பேச, உறவுக்குள் அச்சங்கள் அனர்த்தங்களை உருவாக்கும் என்பதை உணர்ந்தவன் முளையிலேயே அவள் பயத்தை கிள்ளி எறிய முனைய காதல் தேவனும் கால தேவனும் கைக்கட்டி வேடிக்கை பார்த்தனர்.
 
Top Bottom