• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கண்களுக்குள் பள்ளி கொண்டேன் - 3

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 3

“எப்படி இருந்தது ஃபர்ஸ்ட் டே?” தாரணி கேட்க,

“நைஸ்…” ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள் சக்தி.

“அவ்வளவுதானா?” தாரணி கேட்க

“அவ்ளோ தான்” என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்ன சக்தியை முறைத்த தாரணி, “உன்கிட்ட போய் கேட்டேனே… என்னை…” என்று அவள் பற்களை கடிக்க,

“ஸ்லிப்பர் வெளிய இருக்கு…” என்றாள் சக்தி அடக்கப்பட்ட சிரிப்போடு.

இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்த தாரணி வெடுக்கென்று எழுந்து வந்து அவள் பின்புறமாக நின்று வலது கையால் கழுத்தைச் சுற்றி இறுக்கி, “விஷம் விஷம்… உடம்பு முழுக்க விஷம்…” என்று சொல்ல,

“அந்த ஸ்டூல எடுத்துப் போட்டு ஏறி நின்னு ட்ரை பண்ணுடி… அதான் எட்டலல்ல…” அவளை வம்புக்கு இழுத்தாள் சக்தி.

“என்னை விட நாலே நாலு சென்டிமீட்டர் கூட இருந்துட்டு இவ்வளவு பேச்சு ஆகாது பிசாசு” என்ற அவள் ஆரம்பிக்க, சில பல அடிதடிகளோடு நகர்ந்த அவர்களது நேரம், தாரணியின் கைபேசி அழைப்பில் சற்றே தடைபட்டது.

தனக்கு அருகே இருந்த தாரணியின் கைபேசியில் ஒளிர்ந்த எழுத்துக்களை கண்ட சக்தியின் கண்கள் குறும்பாக தோழியை நோக்க, “எவ அவ?” என்று கேட்டபடி கைபேசியை பார்த்தவளின் முகம் நொடியில் மலர்ந்து போனது.

செய்து கொண்டிருந்த செயல் அனைத்தும் மறந்து போக ஆர்வமாக கைபேசியைக் கைப்பற்றியவள், மூச்சு வாங்க அலைபேசியை எடுத்து காதில் வைத்த நேரம், “நீ பேசி முடிச்சுட்டு வா. நான் மாடிக்கு போறேன்.” என்று சொல்லிய சக்தி வெளியேறிய போது, கண்களை சுருக்கி செல்லமாய் கெஞ்சினாள் தாரணி.

“சீ ப்பே” என்று சொன்னவள் புன்னகையோடு கிளம்பிச் செல்ல, “சொல்லுங்க ஆகாஷ்…” என்ற தாரணியின் குரலில் அத்தனை மென்மையும் குழைவும்.

ஆகாஷ் - தாரணிக்காக அவளது வீட்டில் பார்க்கப்பட்ட மணமகன். இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம் இருக்க, நிச்சயம் செய்த நாளிலிருந்து காதல் பறவைகளாக உல்லாச உலகில் சுற்றி வரும் இளஞ்சோடி அவர்கள்.

தோழிக்கு தனிமை அளித்துவிட்டு மாடிக்குச் சென்றவள் மாடியில் போடப்பட்டிருந்த குழல் விளக்கின் வெளிச்சம் அண்டாத பகுதியில் சென்று நின்றாள். அகன்று பரந்து விரிந்த மொட்டை மாடி. பதினைந்துக்கும் மேற்பட்ட பெண்கள் அங்கே நடந்து கொண்டும் அமர்ந்து கொண்டும் இருந்தனர்.

சுற்றி சுழன்று அவள் காதுகளை அடைந்ததில் அதிகமானது காதல் மொழிகள் தான்.

சில் என்று வீசிய காற்றில் கைகளைக் கட்டிக் கொண்டு வானத்தை நிமிர்ந்து பார்த்த அவளின் கண்கள் தன்னைப்போலவே ஒற்றையாக இருந்த பாதி நிலவின் மீது படிந்தது.

“படிச்சிடு. எப்படியாவது படிச்சு ஜெயிச்சிடு. ஜெயிச்சுட்டா நீ நெனச்சது போல உன் வாழ்க்கை. தோத்துட்டா அடுத்தவங்க சொல்றது போல உன் வாழ்க்கை… உன்னோட வாழ்க்கை உன் கையில தான் இருக்கு. தோத்துப் போய் அத அடுத்தவங்க கையில குடுத்துறாத…” என்றோ எப்பொழுதோ காதில் விழுந்து அவள் வாழ்க்கையை வழிப்படுத்திய வார்த்தைகள் இன்றும் அவள் செவியில் கேட்டது.

“ஆமால்ல… படிச்சா கண்டிப்பா ஜெயிச்சுடலாம். ஜெயிச்சுட்டா என்னோட வாழ்க்கை என் கையில…” என்று தொடங்கிய அவளது ஓட்டம் இதோ இன்று அடுத்து என்ன என்ற கேள்வியோடு இந்த நொடியில் வந்து நிற்கிறது.

“கல்விதான் கடைசி வரை துணையாக இருக்கும், பிடித்துக் கொள்” என்று சொன்னார்கள். அவளும் கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.

அந்தப் பிடிப்பு அவளை சிறப்பான ஒரு பதவியில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. தொழில்துறையில் அவளது அடுத்தடுத்த கட்ட நகர்வுகளுக்கான தெளிவான வரைபடம் அவள் கையில் இருக்கிறது. ஆனாலும்…

அந்த ‘ஆனால்…’ என்ற அந்த ஒற்றை வார்த்தையில் தொக்கி நிற்கிறது அவளது இளம் மனது.

பாதுகாப்பான குழந்தைப் பருவம் தான். ஆனால், அன்பான குழந்தை பருவம் அவளுக்கு வாய்த்ததா என்று கேட்டால், அதற்கு பதில் இல்லை தான்.

சக்தி அந்த இல்லத்தில் சேர்ந்த வருடம் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து இருந்தனர் அந்த இல்லத்தில். அதோடு அவள் வளர வளர அடுத்தடுத்த வருடங்களில் பிள்ளைகளின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே தான் சென்றது. 18 வயது நிரம்பிய பிள்ளைகள் வெளியேறி சென்றாலும் உள்ளே வந்த குழந்தைகளின் எண்ணிக்கையும் குறையவில்லை.

உடை, உணவு, உறைவிடம் மூன்றும் மிகவும் பாதுகாப்பாக கிடைத்தது. ஒழுக்கமும் கல்வியும் இரு கண்கள் என்று சொல்லி வளர்த்தெடுக்கப்பட்டனர் குழந்தைகள்.

அப்படி வளர்த்தெடுக்கப்பட்ட பிள்ளைகளில் ஒருத்தி தான் சக்தியும். என்னதான் பொன் நிலாவின் செல்லப் பிள்ளையாக இருந்தாலும் கரிசனையும் கண்டிப்பும் சரிவிகிதத்தில் தான் கிடைத்தது அவளுக்கு. அதனால் அவரைப் போலவே ஆளுமையோடு அவள் வளர்ந்தாலும், ஆழ்மனதில் சிறு குழந்தையின் தேடல் இருக்கத்தான் செய்தது. பள்ளி கல்லூரிகளில் படிக்கும் காலங்களில் உடன்படிப்பவர்களின் பெற்றோர்களை காணும் நிமிடங்களில் எல்லாம் ஏக்கம் தோன்றத்தான் செய்யும் அவளுக்குள்ளும்.

அந்த அன்பின் தேடலை படிப்பிலும், வேலையை பெறுவதிலும், அந்த வேலையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதிலும் கடிவாளம் இட்டு வைத்திருந்தவளை கலைத்துக் கொண்டிருக்கிறது சமீப காலமாக அவளைச் சுற்றி நடக்கும் செயல்கள்.

“வயசு 28 ஆயிடுச்சு கல்யாணம் பண்ணிக்கலாமே சக்தி… மாப்பிள்ளை பார்க்கவா?” என்ற பொன் நிலாவின் வார்த்தைகளும்,

உடன் இருக்கும் தாரணியின், “அதுதான் பேய் மாதிரி படிச்சு நல்ல வேலையில போய் உட்கார்ந்துட்டேல? இன்னும் என்ன வேண்டி கிடக்கு? மரியாதையா கல்யாணம் பண்ணி குடும்பம் குழந்தைன்னு வாழ்ற வழிய பாரு…” என்ற அவளின் வார்த்தைகளும், ஆகாஷ் தாரணியின் திருமண நிகழ்வுகளும் அவளுக்குள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை யோசிக்க வைத்தது.

ஆளுமையான சக்திக்குள் இருக்கும் சிறு பிள்ளையின் அன்பிற்கான ஏக்கம் இப்பொழுதெல்லாம் அதிகமாக வெளிவர தொடங்கி இருக்கிறது.

வானில் தெரியும் வெண்ணிலவை பார்த்தபடியே, “குடும்பம்… எவ்வளவு பெரிய விஷயம்?! குடும்பம் எப்படி இருக்கும்? அவங்களுக்குள்ள எப்படியான பிணைப்பு இருக்கும்? அம்மாவோட அன்பு எப்படி இருக்கும்? அப்பாவோட பாசம் பாதுகாப்பு எப்படி இருக்கும்? கூட பொறந்தவங்கன்னா என்ன பண்ணுவாங்க? அவங்க ரோல் என்ன? பெரியம்மா, பெரியப்பா, அத்தை, சித்தி, மாமா, தாத்தா, பாட்டி இவங்க எல்லாம் எப்படி இருப்பாங்க? இப்டி எதுவுமே தெரியாதே…” என்று யோசித்துக் கொண்டிருந்த அவளின் மனம்,

“என்னை பெத்தவங்களால எனக்கு கிடைக்க வேண்டியது… எதுவும் எனக்கு கிடைக்கல. அதுல என்னோட தப்பு எதுவும் இல்ல.” என்று நிமிர்ந்து பதிலும் சொன்னது அவளின் கேள்விகளுக்கு.

எப்பொழுதுமே எந்த இடத்திலுமே தன்னை தாழ்வாக அவள் கருதிக் கொண்டது இல்லை. தாய் தந்தை இல்லாமல் இல்லத்தில் வளர்ந்தது என் குற்றம் இல்லையே என்ற தெளிவு அவள் மனதில் இருந்தது. அதனாலேயே பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கிடைத்த கசப்பான சம்பவங்களை எளிதாக கடந்து விட முடிந்தது அவளால்.

கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு, “ஆனா என்னால ஒரு குடும்பத்தை உருவாக்க முடியும்… எனக்கே எனக்கான ஒரு குடும்பம். என்னை மட்டுமே நேசிக்கிற ஒரு ஆண். எங்க ரெண்டு பேரோட காதலுக்கு சாட்சியா குழந்தைகள். நாங்க எல்லாரும் சேர்ந்து உருவாக்குற ஒரு குடும்பம்…” என்று நினைக்கும் போதே உடல் சிலிர்த்தது சக்திக்கு.

எண்ணங்களோடு வண்ணங்களை சேர்த்துக் கொண்டிருந்த அவளின் நிமிடங்களை கலைத்தது தாரணியின் வருகை.

முகம் எல்லாம் பூவாய் மலர்ந்து சிரித்திருக்க, சிவந்திருந்த கன்னங்கள் அவளை பேரழகியாய் காட்டியது.

“டால் அடிக்குது கன்னம் ரெண்டும்… என்ன விஷயம்?” தன்னை நெருங்கி வந்து நின்ற தாரணியின் தோளில் இடித்தபடி சக்தி கேட்க,

“அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது லூசு மாதிரி பேசாத…” என்று சொல்லியபோதிலும் ஜொலித்தது அவள் முகம். அவளது வார்த்தைகளிலேயே தெரிந்து போனது அவளால் தோழியிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாத விஷயம் என்று. அதற்கு மேல் ஒரு வார்த்தை கேட்கவில்லை சக்தி.

தாரணிக்கு சக்தியிடம் பிடித்த மிக முக்கியமான பண்பு இது. சொல்லாமல் ஒரு விஷயத்தை தவிர்க்கிறார்கள் என்று சக்திக்குத் தெரிந்தால் மீண்டும் ஒரு முறை கூட கேட்க மாட்டாள் அதை பற்றி.

எத்தனையோ முறை வியந்து அவளிடமே கேட்டு இருக்கிறாள் தாரணி.

“ஒரு கியூரியாசிட்டியே இருக்காதா உனக்கு? என்னவா இருக்கும்னு செகண்ட் டைம் கூட கேட்க மாட்டியா நீ?” ஆச்சரியங்களில் விழி விரித்து அவள் கேட்கும் நேரங்களில்,

“சொல்லக்கூடிய விஷயமா இருந்தா மொத தடவ கேட்கும்போதே சொல்லிடுவாங்க. முடியாததுனால தான அவாய்ட் பண்றாங்க. அது அவங்களோட பர்சனல். அவங்களோட உணர்வுகளுக்கு நம்ம மரியாதை கொடுத்து தானே ஆகணும். இதுல என்ன கியூரியாசிட்டி இருக்கு? அவங்க பெர்சனல் தெரிஞ்சு வச்சு எனக்கு என்ன பெருசா கிடைக்கப் போகுது, அதுவும் அவங்கள கேள்வியா கேட்டு டார்ச்சர் பண்ணி தெரிஞ்சு…” என்று இலகுவாக சொல்லிவிட்டு செல்லும் சக்தி, தாரணிக்கு என்றும் ஆச்சரியமே.

சில நிமிடங்கள் அவளையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்த சக்தி தன் பார்வையைத் திருப்பி மீண்டும் நிலவின் மீது பதிக்க, தாரணியும் தன் பார்வையை நிலவின் மீது படரவிட்டாள். சில நொடி ஆழ்ந்த அமைதி அவர்களுக்கு இடையே நிலவியது.

“கல்யாணம் பண்ணிக்கோ சக்தி…” அந்த அமைதியை கிழித்துக்கொண்டு வந்தது தாரணியின் வார்த்தைகள்.

“ரொம்ப அழகான விஷயம் கல்யாணம். நமக்கே நமக்காக ஒரு ஜீவன். எப்படி இந்த நாலே மாசத்துல இப்படி ஒரு மாற்றம் வந்ததுன்னு தெரியல. ஆனா அழகா இருக்கு. அம்மா, அப்பா அண்ணா, அக்கான்னு அழகான குடும்பம் தான் எனக்கு. இன்னும் சொல்லப்போனா எல்லாருக்கும் செல்ல பிள்ளை நானு. ஆனாலும் அக்காவுக்கும் அண்ணாவுக்கும் கல்யாணம் பண்ணப்ப தனியா விடப்பட்டது போல ஒரு ஃபீலிங்.

அப்பா அம்மா… சொல்லவே வேணாம் அவங்களுக்கு நாங்க மூனு பேரும் ஒரே மாதிரி தான். எல்லாரும் சமம் அவங்களுக்கு.

அவங்க எல்லாரும் எப்பவும் போல தான் இருந்தாங்க. ஆனா எனக்கான பிரெஃபரன்ஸ் அங்க கொறஞ்சது போல ஒரு ஃபீலிங்.

ஒரு வயசுக்கு மேல அப்பா அம்மா கிட்ட இருந்து ஒரு சின்ன டிஸ்டென்ஸ் வந்துடும். அதேபோல தான் சிப்லிங்ஸ் கிட்டயும். ஆனா அப்ப எல்லாம் தெரியாத விஷயம், அவங்களுக்கு கல்யாணம் நடக்கும் பொழுது என்னவோ எல்லாரும் நம்மள விட்டுட்டு போனது போல ஃபீல் ஆகும். யாருக்குமே நாம முக்கியமான ஆள் கிடையாதுன்னு மனசு சொல்லும்.

தனிமை ரொம்ப அழகான விஷயம் சக்தி..‌ அதை நாம தேடிப் போகும் போது…

அதே தனிமை ரொம்ப ரொம்ப கொடுமையானது அடுத்தவங்க நமக்கு கொடுக்கும்போது.

அண்ணா, அக்கா ரெண்டு பேருக்குமே அவங்க அவங்களுக்கான துணை வந்ததுக்கு அப்புறம் அவங்க கிட்ட தானே அதிகமான நேரம் ஸ்பென்ட் பண்ணுவாங்க. இட்ஸ் கொய்ட் நேச்சுரல் தானே. புத்தி சொன்னாலும்… மனசு நாம அவங்களுக்கு இரண்டாவதா போயிட்டோம்னு ஒரு ஃபீலிங் இருந்துகிட்டு தான் இருந்துச்சு.‌

ஆனா எப்போ ஆகாஷ் என்னோட லைஃப்ல வந்தாரோ அப்போவே எல்லாம் மாறினது போல ஒரு சந்தோஷம்.

எங்க அம்மாவுக்கு அப்பா போல…” என்று சொன்னவள் சில நொடிகள் இடைவெளி விட்டு மலர்ந்த முகத்தோடு சிரித்துக் கொண்டே சக்தியை பார்த்து கண் சிமிட்டி,

“உனக்கு தெரியுமா சக்தி, எங்க அம்மா எவ்வளவு சண்டை போடுவாங்க எங்க அப்பா கூடன்னு? உங்களுக்காக தான் உங்க அப்பாவ பொறுத்து போறேன்… இல்லன்னா என்னைக்கோ இந்த ஆளை விட்டு கிளம்பி எங்க அம்மா வீட்டுக்கு போய் இருப்பேன்னு எத்தனையோ தடவை சொல்லி இருக்காங்க. ஆனா எனக்கு தெரிஞ்சு ஒரு நாள் கூட எங்க அப்பாவ விட்டு தனியா எங்க அம்மா இருந்தது இல்லை. எங்க அப்பாவும் தான்.

எங்க வீட்ல பசங்க நாங்க மூனு பேரும் படிப்புக்காகவும் வேலைக்காகவும் வெளி ஊருக்கு வந்திருக்கோம். எங்கள தனியா அனுப்பி வைக்க முடிஞ்ச எங்க அம்மாவால, எங்க அப்பாவ விட்டு வர முடியல. அப்பாவுக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைச்ச நேரம் எல்லாம் அவங்க கூடவே பெட்டி படுக்கைய கட்டிக்கிட்டு எங்களையும் கையில இழுத்து புடிச்சுகிட்டு போவாங்களே தவிர்த்து தனியா இருந்தது இல்லை. ஆனா எங்கள ரொம்ப சந்தோஷமா வழி அனுப்பி வச்சாங்க.

அப்போ புரியாததெல்லாம் இப்போ புரிஞ்சுச்சு. எங்க அம்மாவுக்கு எப்படி எங்க அப்பாவோ அது போல எனக்கு ஆகாஷ்…

இந்த உறவு ரொம்பவே அழகா இருக்கு சக்தி. யூ நோ எங்க அண்ணா அக்கா கூட சண்டை போட்டு ஒரு மாசத்துக்கு மேல கூட பேசாம இருந்திருக்கேன்.

ஆனா இந்த நாலு மாசத்துல தினம் ஒரு சண்டை போட்டாலும் ஒரு நாள் கூட பேசாம இருக்க முடியல ஆகாஷ் கிட்ட. இதுவும் ஒரு மாதிரி நல்லா தான் இருக்கு…

சோ என்னோட அட்வைஸ்… ரெக்வஸ்ட்… ஆர்டர்… எப்படி வேணாலும் வச்சுக்கோ. கல்யாணம் பண்ணிக்கோ சக்தி… அதுக்காக அந்த லைப் ரொம்ப ஸ்மூத்தா இருக்குன்னு எல்லாம் நினைச்சுக்க கூடாது. அடிதடி, சண்டை சச்சரவன்னு கொஞ்சம் கொடூரமா கூட போகலாம். முடிய பிச்சுக்க வைக்கலாம். ஆனாலும் கொஞ்சமே கொஞ்சம் அட்ஜஸ்ட்மென்ட்டும் அண்டர்ஸ்டாண்டிங்கும் இருந்ததுனா ரொம்ப அழகா இருக்கும் உன்னோட வாழ்க்கை.” என்று ஏதோ ஒரு கனவு உலகத்தில் சஞ்சரிப்பவளைப் போல மிக மெதுவான குரலில் பேசிக்கொண்டே வந்த தாரணி அவள் முகத்தைப் பார்த்து சொல்லி முடிக்க, அதற்கு சக்தி கொடுத்த பதிலில் கண்கள் இரண்டும் வெளியே தெறித்து விடும் அளவுக்கு விரிந்தது தாரணிக்கு.























































 
Top Bottom