• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கண்களுக்குள் பள்ளி கொண்டேன் - 4

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் - 4

“இப்போ எதுக்கு நீ இவ்வளவு ஷாக் ஆகற?” சிரித்துக்கொண்டே சக்தி கேட்க,

“தம் புடிச்சு அவ்ளோ கஷ்டப்பட்டு பேசினேனேடி பொசுக்குன்னு ஒரே வார்த்தையில் முடிச்சிட்ட…” அதிர்ச்சி தாங்காமல் கேட்ட தாரணியால் நம்பவே முடியவில்லை.

திருமணம், குடும்ப வாழ்க்கை குறித்து பேச்சு வரும் நேரங்களில் எல்லாம் பிடி கொடுக்காமல் நழுவிச் செல்லும் சக்தியை அறிந்தவள் தானே தாரணி. அதனாலேயே அவளால் நம்ப முடியவில்லை சக்தியின் வார்த்தைகளை.

பக்கம் பக்கமாக அவள் பேசிக்கொண்டு இருந்த விஷயத்திற்கு, “சரி” என்று ஒரே வார்த்தையில் முற்றுப்புள்ளி வைத்தவளை நம்பவே முடியவில்லை அவளால். அந்த அதிர்ச்சியில் தான் என்ன பேசுகிறோம் என்பதையே புரியாமல் பேசிக்கொண்டு இருந்தாள் தாரணி.

அவள் நிலையை உணர்ந்தவளாக மாறாத புன்னகையோடு, “கல்யாணம் பண்ணிக்கோன்னு நீ சொன்ன, சரின்னு நான் சொன்னேன். இதுல என்ன ஷாக் உனக்கு?” சக்தி கேட்க,

“நான் நினைச்சு வந்ததே வேறடி…” என்றாள் தாரணி.

மார்பின் குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு மாடியின் கைப்பிடி சுவரில் சாய்ந்த படி “வேறன்னா?” என்று கேட்டாள் சக்தி.

“நீ கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லச் சொல்ல நான் கல்யாணத்தை பத்தியும் காதோல பத்தியும் பக்கம் பக்கமா உனக்கு விளக்கம் சொல்ல… அதைக் கேட்டு உருகி தவிச்சு நீ ஓகே சொல்ல அப்படின்னு நிறைய ப்ரிப்பேர் பண்ணிட்டு வந்தேன்டி.” என்று அவள் செல்லும் பொழுது அவளது ‘காதோல்’ என்ற வார்த்தையில் தோழி சகஜ நிலைக்கு திரும்பி விட்டதை உணர்ந்த சக்திக்கு புன்னகை சிரிப்பாக மலர்ந்தது. அதை இதழ்களை கடித்து மடித்துக்கொண்டு,

“அதுதான் பேசினியே…” என்று சொல்ல,

“ஹே! இது ஜஸ்ட் இன்ட்ரொடக்ஷன் கேர்ள்…” அவளும் சக்திக்கு எதிர்ப்புறமாக நின்று மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு சொல்ல,

“எத இண்ட்ரொடக்ஷனா!” புருவத்தை உயர்த்தி சக்தி கேட்க,

“எஸ் கேர்ள். இது ஜஸ்ட் டீஸர் தான். மெயின் பிக்சர் இனிமே தான் இருக்கு…” என்றாள் தாரணி மிதப்பான குரலில்.

“போதும் தங்கம் இதுக்கு மேல முடியாது.” கைகளை தலைக்கு மேலே தூக்கி ஒரு பெரிய கும்பிடாக போட்டு சக்தி சொல்ல,

நெருங்கி அவள் அருகே வந்தவள் கையைப் பிடித்து கீழே இறக்கி அவளை தோளோடு அணைத்துக் கொண்டு, “அப்படியெல்லாம் நீ சொல்லப்படாது…” தாரணி மிகவும் தீவிரமான குரலில் சொல்ல,

“எத..” நிஜமாகவே அதிர்ந்து போனாள் சக்தி.

“அப்புறம்… எவ்ளோ நேரம் நானும் மைண்ட்ட ப்ரிப்பேர் பண்ணிட்டு வந்து இருக்கேன். அதெல்லாம் யார்கிட்ட கொண்டு போய் கொட்றது?” என்று கேட்டவளை வினோதமாக பார்த்த சக்தி,

“அதுக்கு?!” என்று கேட்க,

“நான் பேசுவேன். நீ கேக்கணும்.” என்றாள் கட்டளையாக.

“இது என்னடி லாஜிக்?” பரிதாபமாக சக்தி கேட்க,

“இதுதான் தாரணி லாஜிக். இதுல என்ன உனக்கு டவுட்டு?” பதிலுக்கு கேட்டாள் தாரணி.

“மனசாட்சியோட பேசு தரு.. கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்ல தான் வந்திருக்க… நானும் ஓகே சொல்லிட்டேன். ஆனாலும் நீ பேசுவேன்னு சொன்னா என்னடி அர்த்தம்?”

“அதெல்லாம் சரி வராது… எத்தனை படத்தோட டயலாக்ஸ் எல்லாத்தையும் சேட் ஜிபிடி கிட்டயும் கூகுள்லையும் போட்டு தேடி எடுத்து ரெடி பண்ணிட்டு வந்துருக்கேன்… ஒரே வார்த்தையில முடிச்சா என் உழைப்புக்கு என்ன மரியாதை?”

“அதுக்காக எல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்ன.. ஓகே சொல்லிட்டேன் அவ்வளவுதான் டாட்.” சக்தி முடிக்க, சிறு அமைதி அவர்கள் இருவருக்கும் இடையே.

“சரி போன போகுது. எப்படியோ ஓகே சொல்லிட்டல்ல.. அந்த வரைக்கும் சந்தோஷம்… நாளைக்கு இந்த பிட்டு எல்லாத்தையும் ஆகாஷ் கிட்ட இறக்கிற வேண்டியதுதான்… எவ்வளவு நேரம் தான் அப்புறம், சொல்லுங்க, சாப்டீங்களான்னு பேசிட்டு இருக்கிறது… வச்சு செஞ்சிடலாம்… கன்டென்ட் கிடைச்சிடுச்சு…” என்று மனதை தேற்றிக்கொண்டவள்,

“ரியலி ரியலி ரியலி ஹேப்பி ஃபார் யூ…” என்று அவளை கட்டிக்கொண்டு துள்ளிக் குதித்த தாரணி சில நிமிடங்கள் அந்த சந்தோஷத்தை அனுபவித்து விட்டு சட்டென்று விலகி நின்றாள், சக்தியின் முகத்தைப் பார்த்தபடி.

சிரித்தபடியே சக்தியும் தாரணியின் முகத்தைப் பார்க்க, “எனக்கு என்னவோ இது நான் சொல்லி… நீ அதை பீல் பண்ணி… ஓகே சொன்ன மாதிரி தெரியலையே…” யோசனையாக தாரணி கேட்க, அதே சிறு புன்னகை தான் அவள் முகத்தில்.

“உண்மைய சொல்லுடி” தாரணி கேட்க,

“சொன்னா மனசு கஷ்டப்படுவடி..”

“அப்போ… அப்போ…” பேச்சு வராதது போல அவள் நடிக்க,

“அப்படியேதான்.” என்றாள் சக்தி கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல்.

“ஒரு வார்த்தைக்காகனாச்சும் இல்ல தருமா… நீ சொன்னதை கேட்டு தான் என் கல் மனசு கரஞ்சு கல்யாணத்துக்கு ஓகே சொல்லுச்சுனு சொல்லுடி கல்நெஞ்சகாரி..” தாரணி சொல்ல, அமைதியாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் சக்தி.

“சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க… சொல்லுங்க இந்த திடீர் ஞானோதயத்துக்கு காரணம் யாரு?” நான்கு திசைகளிலும் திரும்பி நின்று சொல்லுங்க என்று சொன்னவள் கேள்வியாக நிறுத்த, அவள் செய்த அலப்பறையில் சிரிப்பை அடக்க முடியவில்லை சக்தியால்.

“சிரிச்சது போதும். விஷயத்தை சொல்லுங்க சீனியர் ஆர்க்கிடெக்ட் மேடம்…” கடுப்பாக தாரணி கேட்க,

“நீ சொன்னது, நிலா அம்மா கேட்டது எல்லாம் மனசுக்குள்ள இருந்துச்சு… யோசிச்சிட்டு தான் இருந்தேன். கரெக்டான வயசுன்னு தோணுச்சு. சோ ஓகே சொல்லிட்டேன்.” நிதானமாக பதில் சொன்னாள் சக்தி.

“என்னவோ போ… இப்பவாச்சும் மலை இறங்கி வந்தியே மகராசி… நீ ஓகே சொன்னதே சந்தோஷம்… உடனே மேட்ரிமோனி சைட்ஸ்ல அப்ளை பண்ணி வைப்போம். இப்போ பண்ணுனா தான் அலைன்ஸ் வரும்.” என்று தாரணி அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அறைக்குச் செல்ல முயல, அசையாமல் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தாள் சக்தி.

“இப்போ என்னடி?” தாரணி பல்லை கடித்துக் கொண்டு கேட்க,

“கல்யாணத்துக்கு ஓகே சொன்னதுக்கு அப்புறம் தான் நிறைய கேள்விகள் வருது தரு…” சக்தி எங்கோ பார்த்துக் கொண்டு சொல்ல,

“என்ன?” அழுத்தமான குரலில் தாரணி கேட்க,

அவளை ஆழ்ந்து பார்த்தபடி,

“இத்தனை நாள் அம்மா அப்பா இல்லாதது ஏக்கமா இருந்தது. ஆனா இப்போ எனக்கு கல்யாணத்துக்கு பார்த்தா அது குறையா மாறிடும் இல்ல…

அம்மா அப்பா இல்லாத ஆஸ்ரமத்துல வளர்ந்த என்னை எப்படி ஒரு குடும்பத்துக்கு மருமகளா அக்சப்ட் பண்ணுவாங்க?” என்று சக்தி சொல்ல, அவசரமாக ஏதோ சொல்ல வந்த தாரணியை கையை நீட்டி தடுத்தவள்,

“லெட் மீ ஃபினிஷ் தரு… அப்படியே ஒரு குடும்பம் என்னை மருமகளா ஏத்துக்கிட்டாலும்…

அவங்களுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்குமே…

கல்யாணத்திலேயே அப்பா அம்மா செய்ய வேண்டிய சடங்குகள் நிறைய இருக்குமே… அதெல்லாம் எனக்கு யார் செய்வாங்க?

கல்யாணத்துக்கு முன்ன கூட நிறைய சடங்குகள் இருக்குல்ல… உனக்கு பூ வைக்க வந்தாங்க. நிச்சயதார்த்தம் பண்ணாங்க… போன வாரம் தான் தாலிக்கு பொன் கொடுக்கிறதுன்னு போய்ட்டு வந்த… அடுத்த மாசம் முகூர்த்தப்பட்டு எடுக்கணும்னு சொன்ன…

இது மாதிரி மாப்பிள்ளையோட வீட்டுல நிறைய சடங்குகள் இருக்குமே… அதெல்லாம் என்னன்னு எனக்கு தெரியாதே… யார் எனக்குன்னு வந்து நின்னு செய்வாங்க தரு?

அவங்களுடைய எதிர்பார்ப்பும் தப்பு கிடையாதே…

சோ… எனக்கு ஏற்கனவே ஒரு குடும்பமா இருக்கிறவங்களுக்கு நடுவுல போய் வாழ முடியாது இல்லையா… அப்போ மேட்ரிமோனியல்ல ரிஜிஸ்டர் பண்ணி நோ யூஸ் தான?

உனக்கு வந்த ப்ரொபைல்ஸ்ஸிலையே நான் பார்த்திருக்கேனே…

அவங்களோட எக்ஸ்பெக்டேசன்ஸ்… ஆப்ஷன்ஸ் எல்லாம்…
நோ கேஸ்ட்… நோ ரிலீஜியன் கூட பார்த்து இருக்கேன்…

பட் நோ ஃபேமிலி பேக்ரவுண்டுன்னு பார்க்கலையே…

அம்மா அப்பா இறந்துட்டாங்க. மாமா வீட்ல தான் வளர்ந்து இருக்காங்கன்னு வந்த ஒரு ப்ரொபைலை உங்க வீட்ல ரிஜெக்ட் பண்ணாங்கன்னு நீயே சொன்ன தரு…

ரொம்ப நல்ல ஃபேமிலி பேக்ரவுண்ட் இருந்தும்… அம்மா - அப்பா இல்லாத பையன உங்க வீட்ல உனக்கு ஓகே சொல்லல…

அப்போ அப்பா அம்மா யாருன்னே தெரியாத என்னை எப்படி அக்சப்ட் பண்ணுவாங்க தரு?

சோ மேட்ரிமோனியல் எனக்கு செட் ஆகாது… என்னை போலவே இருக்கிற பசங்க நிறைய பேர் இருக்காங்க. நிலா அம்மாகிட்ட சொன்னா அவங்க பார்த்துப்பாங்க… சோ யூ டோன்ட் வொர்ரி டியர்” என்று சொல்லி முடிக்க பதில் பேச முடியவில்லை தாரணியால்.

சில நிமிடங்கள் அமைதிக்குப் பிறகு,

“டூ மச்சா பேசாத… உன் கூடவே வளந்த வர்ஷாவுக்கு போன வருஷம் ஒரு குடும்பத்தில் இருந்து தான் பொண்ணு கேட்டு வந்து கல்யாணம் பண்ணாங்க… தரகர் கேட்டு வந்து தான அந்த கல்யாணம் நடந்துச்சு?” வேகமாக தாரணி கேட்க, வாய்விட்டு சிரித்தாள் சக்தி.

“தரகர் கேட்டு வந்து நடத்துன கல்யாணமா… அவ்ளோ பச்ச புள்ளையாடி நீ? அது லவ் மேரேஜ் பேபி” கண்களை சிமிட்டி சக்தி சொல்ல,

“அடப்பாவிங்களா! கடமை, கண்ணியம், கட்டுப்பாடுன்னு அவ்ளோ பேச்சு பேசினீங்களேடி… படிப்பு தான் வாழ்க்கை… ஒழுக்கம்தான் மூச்சு… காதலா? எங்க உயிரே போச்சுன்னு… வண்டி வண்டியா டயலாக் அடிச்சீங்களேடி” குமுறினாள் தாரணி.

“அவ பேசல. நோட் தி பாயிண்ட் யுவர் ஆனர்…” சக்தி சொல்ல,

“அதான… அவ என்ன சக்தியா? பேக்கு பண்டாரம் மாதிரி கை, கால், கண்ணு, மூக்கு, வாய்ன்னு அத்தனையும் மூடிட்டு வாழ்றதுக்கு?” கடுகடுத்தாள் தாரணி.

“இப்ப நீ என்னை பாராட்டுறியா இல்ல திட்டுரியா?” மிக முக்கியமான கேள்வியை சக்தி கேட்க,

“நெஜமாவே கெட்ட வார்த்தை வாயில வருது. பேச வச்சிடாத…” உக்கிரமாக தாரணி சொல்ல அமைதியாக வாயில் விரல் வைத்து நின்றாள் சக்தி.

“நடிக்காதடி நடிப்புக் கோழி…” என்று அவள் தலையில் நான்கு குட்டுகளை வைத்தவள்,

“எவ்ளோ பெரிய விஷயத்தை அசால்டா சொல்ற… கூடவே சுத்துனியே செவ்வாழை ஒரு வார்த்தை சொன்னியா… கல்லுளிமங்கி…” என்று இன்னும் நான்கு அடிகளைப் போட்டவள்,

“அதுக்கு இப்போ உனக்கு ஒரு பனிஷ்மென்ட்… எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட் இருக்கு. அதை கேட்பேன் உண்மையை மட்டும் சொல்லணும். சரியா?”தாரணி பீடிகை போட,

அவளை மேலும் கீழுமாக பார்த்தபடி, “பில்டப் ரொம்ப பெருசா இருக்கே…” சக்தி சொல்ல,

“ஏன்னா விஷயம் அவ்ளோ பெருசு… எனக்கு தெரிஞ்சு நம்ம ஹாஸ்டல்லையே நீ செம்ம ஃபிகர்… உன்ன கிராஸ் பண்ணி போற யாராயிருந்தாலும் ஒரு தடவை நின்னு பாத்துட்டு தான் போவாங்க. அவ்ளோ அழகு. உன்னோட கண்ணு போதும் எல்லாரையும் அட்ராக்ட் பண்ணும்.

அப்படியும் இது நாள் வர நீ யாரையும் லவ் பண்ணல… அத என்னால புரிஞ்சுக்க முடியுது. ஏன்னா உனக்கு லவ் செட் ஆகாது.

ஆனா உன்கிட்ட யாரும் ப்ரொபோஸ் பண்ணலையா?” தாரணி கேட்க, சக்தி சிரித்தாள்.

“இப்படி சிரிச்சா என்ன அர்த்தம்? பதில் சொல்லுடி…” விடாமல் தாரணி கேட்க,

“இவ்வளவு நேரம் நான் சொன்னதுல உனக்கு ஒன்னுமே புரியலையா? எனக்கு அம்மா அப்பா இல்ல… சரியா சொல்லணும்னா அம்மா அப்பா யாருன்னு தெரியாது… என்னோட பிறப்பு ரொம்ப பெரிய குவெஸ்டின் மார்க்… என்னதான் அழகா இருந்தாலும், படிச்சிருந்தாலும், வேலை இருந்தாலும் குடும்பம் எனக்கு இல்லடா… காதலிக்கவும் தகுதி வேணும்.

என்னை பத்தி தெரிஞ்சவங்க யாரும் என்கிட்ட காதல் சொன்னது இல்ல. என்னை பத்தி தெரியாம பார்த்த முதல் பார்வையிலேயே காதல் வந்துடுச்சுன்னு சொல்லி என்கிட்ட வந்து காதல் சொன்னவங்க கிட்ட என்னை பத்தின விஷயங்களை சொன்னதுக்கு அப்புறம் அவங்க காதலிக்க விரும்பல. ஒரே நொடியில அவங்களோட பார்வை மாறுச்சு. சில வார்த்தைகளை சொல்ல எனக்கு பிடிக்காது. சோ என்னை சொல்ல வைக்காதேயேன் தரு.

அதனால காதல், குடும்பம் இத பத்தி எல்லாம் யோசிக்க என் மனசுக்கு பிடிக்கல போல… தள்ளி போட்டுருச்சு. இப்போ என்ன ஆச்சுன்னு தெரியல… கல்யாணம் பண்ணிக்கலாம்னு அதே மனசு சொல்லுது. பார்க்கலாம்…” சக்தி சொல்ல அவள் சொல்லாமல் விட்ட வார்த்தைகளும் புரிந்து போக தாரணிக்கு சுட்டது மனம்.

கலங்கிய கண்களோடு சக்தியின் கையை பிடித்துக் கொண்ட தாரணி, “வாயைத் திறந்து எதையுமே சொல்ல மாட்டல்ல… ஃப்ரெண்டுன்னு நான் எதுக்குடி உன் கூடவே இருக்கேன்? இன்னும் எத்தனைய தான் டி அந்த மனசுக்குள்ள வச்சிருக்க? எப்படி தாங்குது அது?” என்று கேட்டவளின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்துவிட துடைத்து விட்டாள் சக்தி.

“இதயெல்லாம் யாராவது மனசுக்குள்ள வச்சுப்பாங்களா? என் மனசு என்ன குப்பை தொட்டியா? இப்போ நீ கேட்ட… ஜஸ்ட் ஐ ஆன்சர்ட். அவ்வளவுதான். இதுக்கெல்லாம் இவ்வளவு பீல் பண்ணாத தரு பேபி…” என்று சக்தி சொல்ல, தோழியையே ஆழ்ந்து பார்த்தாள் தாரணி.

“நான் சொல்றத கேட்டா உனக்கு சிரிப்பு வரலாம். கிண்டலா கூட இருக்கலாம். ஆனா சொல்றேன்… உன்னோட நல்ல மனசுக்கும் குணத்துக்கும் உன்னோட வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும். உன்னை யாரு கல்யாணம் பண்ணிக்க போறாங்களோ நிஜமாகவே அவங்க குடுத்து வச்சாங்க… நீயா உன் குடும்பத்தை உருவாக்க வேண்டிய அவசியம் உனக்கு இருக்காது. ரொம்ப அழகான குடும்பத்தில் பிரிக்கவே முடியாத உறவா நீ போய் சேருவ… முடிஞ்சு போன 28 வருஷங்கள்ல உனக்கு கிடைக்காத… தெரியாத… ஒரு அழகான வாழ்க்கை உனக்கு கிடைக்கும்.” என்றாள் தாரணி மனதார.

“அப்படியே ஆகட்டும் தேவி…” சிரித்துக் கொண்டே அவள் முன்பாக தலையை குனிந்து சக்தி சொல்ல, ஆசீர்வதிப்பது போல தன் கையைக் காட்டிய தாரணி, லேசாக தலையைக் குலுக்கி,

“கடைசில என்னையும் இப்படி மாத்திட்டியேடி… நான் எல்லாம் எவ்வளவு பெரிய ரக்கர்ட் கேர்ள் தெரியுமா? என்னை போய் பீலிங்ஸ் ஆப் இந்தியா பேச வச்சுட்டியே?” என்று வராத கண்ணீரை துடைத்தபடி சொல்ல,

“பேச்சை கொற. பசிக்குது வா போகலாம். இன்னும் கொஞ்சம் லேட்டா போனா எல்லாம் காலியாகி இருக்கும்… கமலா அக்கா அப்புறம் கடுப்புல தான் அடுப்புல நிப்பாங்க…” என்று சொல்லி இழுத்துக் கொண்டு படி இறங்கி சென்றாள் சக்தி‌.

விடுதியின் மொட்டை மாடியில் சக்தியின் வாழ்வுக்கான வார்த்தைகளை தாரணி சொல்லிட, அவர்களைச் சுற்றி நின்ற தேவதைகள் ததாஸ்து என்று வாழ்த்தி வரமளித்திட, அந்த வார்த்தைகளுக்கு வடிவம் கொடுக்கப்பட்டு கொண்டு இருந்தது மற்றொரு இடத்தில்.


















 
Top Bottom