• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கண்களுக்குள் பள்ளி கொண்டேன் - 6

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 6

சிங்கார சென்னையின் பரபரப்பிற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் அமைந்திருந்த சிற்றுண்டி வளாகத்தில் அமர்ந்திருந்தாள் சக்தி.

கட்டிடங்களையும் அதன் வடிவமைப்பின் நுணுக்கங்களையும் எப்பொழுதும் ஆர்வமாக பார்க்கும் சக்திக்கு அந்த இடம் சலிக்கவில்லை.

அந்த கால பர்ணசாலை போல குடில்கள் அமைக்கப்பட்டு அதன் நடுவே மூங்கிலால் வேயப்பட்ட மேஜைகளும் நாற்காலிகளும் போடப்பட்டிருக்க ஒவ்வொரு குடிலையும் ஒவ்வொரு மலர்க்கொடி சுற்றி சூழ்ந்து இருந்தது.

வந்து அரை மணி நேரம் ஆகி இருந்த போதும் அவளை இயல்பாக வைத்திருந்தது அந்த இடத்தின் சூழல்தான். ரசித்துப் பார்த்திருந்த அவளின் இடது கன்னத்தை உரசி சென்ற முல்லைக்கொடியின் சிறு அரும்பு அவளுக்குள் சிலிர்ப்பைக் கொடுக்க மெலிதாய் விரிந்தது அவள் இதழ்கள்.

அந்த சூழலின் இனிமையையும் அமைதியையும் கலைத்தபடி வந்து அவள் முன்னே நின்றான் ஓர் இளைஞன்.

“ஹாய் சக்தி!” ஆர்ப்பாட்டமாய் கேட்ட குரலில் இமைகளைத் திறந்து அவள் பார்த்த நொடி எதிர் நின்றவனின் முகம் இன்னும் அதிகமாய் மலர்ந்தது.
ஒரு கணம்… சொல்ல வார்த்தை தேடுவது போல அவன் பார்வை அவள் முகத்தில் நின்றது.
“யூ ஆர்… ஸ்டன்னிங்…”
அவன் சொல்லி முடித்ததும் தான் சொல்லியதை உணர்ந்தவன் போல சின்ன சிரிப்போட தலையை சாய்த்து அவளைப் பார்த்தான்.
அவன் விழிகளையே அவள் கூர்ந்து பார்க்க,
“நான் யூஸ்வலி இப்படிப் பேச மாட்டேன்… ஆனா…” சற்றே தோள்களை குலுக்கியபடி, “இதை ஸ்கிப் பண்ண முடியல.” அவன் இலகுவாக நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்துகொண்டான்.
என்ன என்பது போல சக்தி பார்த்துக் கொள்ள அமர்ந்திருக்க, “ஐ அம் பரதன்…” என்று அவன் கையை நீட்ட பற்றிக்கொள்ள முயலவில்லை சக்தி.
தனது கைக்கடிகாரத்தை அவள் திருப்பி பார்க்க, “டிராபிக்…” என்றான் ஒற்றை வார்த்தையில்.
சரி என்பதாக அவள் தோள்களைக் குலுக்க, “பேச மாட்டீங்களா சக்தி?” என்றான் பரதன்.
“அதிகம் பேச மாட்டேன்.” என்றாள் பதிலாக.
“அப்போ தேவைக்கு பேசலாமே?” சிறு புன்னகையோடு அவன் கேட்க,
“பேசணும். பேசணும் தான்” என்றவள் அவன் முகத்தை தீர்க்கமாக பார்த்து,
“சொல்லுங்க பரதன். என்ன தெரிஞ்சுக்கணும்? உங்களோட கண்டிஷன்ஸ் என்ன?” என்று நிதானமாக கேட்க,
“உங்க மேம் உங்கள பத்தி சொன்னாங்க. பட் நீங்க எதுவும் சொல்லலையே… இந்த ப்ரொபோசல் உங்களுக்கு பிடிக்கலையா?”வந்ததிலிருந்து அவனும் தான் பார்த்துக் கொண்டு தானே இருந்தான் அவளது ஒட்டாத பாவனையை. எதையும் மனதில் வைத்துக் கொள்ளாதவன் பரதன் என்பதால் கேட்டுவிட்டான்.
“ப்ரோபோசல் ஓகேவா இருந்ததுனால தான் இங்கே உட்கார்ந்து இருக்கேன். பட் லேட்டா வந்தது கொஞ்சம்…” என்றவள் அவன் கண்களை பார்த்து
“எனக்கு லேட்டா வந்தா பிடிக்காது. ஒரு விஷயத்துல கமிட்மென்ட் இருந்தா அதற்கான டைம் மேனேஜ்மென்ட் தன்னால வந்துடும்னு சொல்லுவாங்க. நீங்க லேட்டா வந்தது இந்த விஷயத்துல உங்களோட கமிட்மென்ட்ல இல்லன்னு எனக்கு காட்டினது போல ஒரு பீல் சோ…” என்றாள் அவளும் நிர்தாட்சண்யமாக.
“வெல்… இப்போ எப்படி? பேசலாமா?” என்று அவன் கேட்க,
“பேசலாமே…” என்றாள் அவளும்.
தன்னைப் பற்றிய விவரங்களை கூறியவன், அவளை பார்க்க அவளோ நிதானமான பாவத்தோடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன?” என்று கேள்வியை அவன் நிறுத்த,
“உங்களோட பாஸ்ட் பத்தி சொன்னீங்க. எனக்கு அதை பத்தி நோ இஸ்யூஸ். ப்ரெசென்ட் பத்தி பேசினீங்க… ஆல் க்ளியர். பட் ஃப்யூச்சர்… அதோட எக்ஸ்பெக்டேஷன்ஸ்?” என்று அவள் நிறுத்த,
“மனசுக்கு புடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும். மனசுக்கு நிறைவான ஒரு காதல் வாழ்க்கை வாழனும். அந்த காதலுக்கு சாட்சியா குழந்தைகள் பெத்துக்கணும்… அப்புறம் அவங்கள வளர்க்கணும். எனக்கே எனக்கான உறவுகள் வேணும். சின்ன வயசுல அம்மா அப்பா கூட இருந்த நினைவுகள் கொஞ்சம் கொஞ்சம் இருக்கு. அதுக்கப்புறம் ஆக்சிடென்ட்ன்னு சொன்னாங்க மொத்த குடும்பமும் காலின்னு சொன்னாங்க. சொந்தக்காரங்களுக்கு என்னை வளக்குற அளவுக்கு பினான்சியல் இல்ல. அட் த சேம் டைம் மனசும் இல்ல. ஹோம்ல சேர்த்து விட்டாங்க. நிறைய கஷ்டங்கள் அங்கேயும் இருந்துச்சு. சொன்னா சொல்லிக்கிட்டே போகலாம். ஆனா அதை நினைச்சு பார்க்க இப்போ எனக்கு இஷ்டம் இல்லை. சந்தோஷமா வாழனும். நிம்மதியா வாழனும்.” என்றவன் சொல்லி நிறுத்த,
“இதுல என்னோட பார்ட்?” என்று கேட்டாள் அவள்
“வாட்?” என்று அதிர்ந்தாலும் “அந்த பொண்ணு நீங்களா இருக்கலாம் அப்படின்னு நினைச்சு தான் வந்து பேசிகிட்டு இருக்கேன்.” என்றான் அவன் தெளிவாக.
“அதைத்தான் நானும் கேட்கிறேன். அந்த பொண்ணா நினைச்சு என்கிட்ட பேசிட்டு இருக்கீங்க. அந்த பொண்ணு என்ன பண்ணனும்? உங்கள கல்யாணம் பண்ணிக்கணும். உங்கள காதலிக்கணும். உங்களுக்கு குழந்தை பெத்துக்கணும். அவங்கள வளர்க்கணும். இதுல என்னோட லைஃப்?” என்று அவள் கேட்க புரியாமல் விழித்தான் பரதன்
“இதுதானே நம்மளோட ட்ரடிஷன்? கல்ச்சர் எல்லாமே… இதுக்கு அப்புறம் வேற என்ன இருக்கு?” என்று அவன் கேட்க, அவள் பார்த்த பார்வையில் என்ன விளங்கியதோ அவனுக்கு,
“நிஜமாவே தெரியாம தாங்க கேட்கிறேன். இதுக்கு மேல என்ன இருக்கு?” என்று அவன் கேட்க, அவன் நிலை புரிந்ததோ அவளுக்கு, விளக்க ஆரம்பித்தாள்.
“எனக்குள்ள சில கனவுகள் இருக்கு சார்…” என்று அவள் ஆரம்பிக்கும் முன்பாகவே கையை நீட்டி தடுத்தவன்,
“கால் மீ பரதன் ஆர் பரத். இந்த சார் வேணாமே…” என்று அவன் சொல்ல தலையாட்டி சிரித்துக் கொண்டவள்
“ஓகே பரத். எனக்குள்ள சில கனவுகள் இருக்கு. ஐ அம் ஆர்க்கிடெக்ட். என்னோட கற்பனைகள்ல நிறைய நிறைய வீடுகளை உருவாக்கி இருக்கேன். அது எல்லாத்தையும் நிஜமாக்கனும்னு பேராசை எனக்கு இருக்கு. அதனால வேலையை விட மாட்டேன்.” என்று அவள் சொல்லிக் கொண்டு செல்ல,
“ஐயோ ஜி! உங்களை வேலையெல்லாம் விட சொல்ல மாட்டேன்…” என்று வேகமாக உள்ளே பாய்ந்தான் பரதன்.
“நீங்க சொன்னாலும் நான் கேட்க மாட்டேன் ஜி.” என்று அவள் சிரிக்க அவனும் சிரித்தான்.
“மேல சொல்லுங்க ஜி…” சிரித்துக்கொண்டே அவன் சொல்ல,
“நிறைய வீடுகளை நான் உருவாக்கி இருந்தாலும் அந்த வீட்டுக்குள்ள ஒரு குடும்பம் போய் இருக்கும் போது தான் அது முழுமை அடையும். அப்படி ஒரு குடும்பத்தை உருவாக்கணும். அதுக்கு அடிப்படையா ஒரு காதல் வேணும். அந்த காதலை தான் நான் தேடிக்கிட்டு இருக்கேன்.” என்றாள் சக்தி.
“அன்பு, பாசம், காதல் இது எல்லாம் வேணும். இதையும் தாண்டி மரியாதை ரொம்ப முக்கியம். எந்த ஒரு உறவுக்குள்ள மரியாதை இல்லாம போகுதோ அந்த உறவு அடிமைப்படுத்தும்…” என்று அவள் சொல்ல, விரிந்தது பரத்தின் விழிகள்.
“செகண்ட் ட்ரஸ்ட்… என்னோட வார்த்தைகளையும் செயல்களையும் நம்பனும். என்னால முடியும்னு நான் எப்படி நம்புறேனோ அதே மாதிரி என்னோட பார்ட்னர் நம்பனும்.” என்று எங்கோ பார்த்துக் கொண்டு அவள் சொல்ல,
‘இது என்னடா புதுசா இருக்கு?’ என்பது போல பார்த்துக் கொண்டிருந்தான் பரதன்.
“இது எல்லாத்தையும் விட நான் சின்ன வயசுல இருந்து பீல் பண்ணுனது… என்னோட ஒட்டுமொத்த எதிர்பார்ப்புன்னு கூட சொல்லலாம்… செக்யூரிட்டி… கம்ப்ளீட் செக்யூர் ஃபீல் வேணும் பரதன்…” என்று அவள் சொல்லிய நொடி மனதுக்குள் தோன்றிய பிம்பங்கள் அவளை ஆட்டி வைத்தது.
ஆட்டி வைத்த பிம்பங்கள் சற்றும் மறைய விருப்பம் இல்லாமல் மனம் என்னும் ஆலயத்தில் கல்வெட்டுகளாய் தெரிய, அவளுக்குள் ஆழ்கடலின் கொந்தளிப்பைக் கொடுத்து எழுந்து நிற்கச் செய்தது இருந்த இடத்தை விட்டு.
அவள் எழுந்து நின்றதை கவனித்தபடி, “வாட் ஹேப்பன்ட் சக்தி? ஏன் எழுந்துட்டீங்க?” என்று கேட்க,
தன்னிலை உணர்ந்தவளாக சட்டென்று தன் இருக்கையில் அமர்ந்தவள் ஆழ்ந்து மூச்சை இழுத்த படி கண்களை மூடினாள்.
அவள் மீதே தன் பார்வையை பதித்திருந்த பரதன் அவளை ஆசுவாசப்படுத்தும் பொருட்டு சிறு புன்னகையோடு, “இன்ட்ரஸ்டிங்…” என்று சொல்ல, சம்பந்தமே இல்லாமல் இதே வார்த்தைகளை உச்சரித்த அழுத்தமான வேறு இரு இதழ்கள் அவள் கண்களுக்குள் வந்து செல்ல கண்களை மூடித் திறந்தாள் சக்தி.
திறந்த கண்களுக்குள் அந்த இரு இதழ்களுக்கு சொந்தமானவன் முழு உருவம் பெற்று நிஜமாகவே வந்து நின்றான் அவள் முன்னே. இமைகள் படபடக்க அவனைப் பார்த்த கணம் மீண்டும் எழுந்து நின்று விட்டாள் சக்தி.
அவளது திடீரென்ற செயலில் அவள் பார்வை சென்ற திசையை நோக்கி தன் தலையை பரதன் திருப்ப ஆறடி உயரத்தில் அவர்களை நோக்கி தான் வந்து கொண்டிருந்தான் ஜெகதீஸ்வரன்.
கேள்வியாய் அவர்கள் இருவரையும் மாறி மாறி பரதன் பார்க்க இரண்டே எட்டுக்களில் அவர்களை நெருங்கி இருந்தான் ஜெகதீஸ்வரன்.
நண்பனை காண வந்திருந்த ஜெகதீஸ்வரன், கண்டது என்னவோ விழி மூடி அமர்ந்திருந்த சக்தியைத்தான். சற்று கசங்கி இருந்த அவளது முகம் அவனுக்குள் செய்த மாயம் என்னவோ… தன்னையும் அறியாமல் அவளை நோக்கி இழுத்துச் சென்றது அவனது கால்கள்.
அவனைப் பார்த்ததும் நொடியில் மலர்ந்த அவளது முகம், யோசித்த மூளையை முடக்கிப் போட வைத்துவிட்டு அவளை நோக்கி முடுக்கியது.
“ஹாய் சார்…” என்று சக்தி ஜெகதீஸ்வரனுக்கு முகமன் சொல்ல, தலையசைத்து ஏற்றுக் கொண்டவன் பார்வை அவளுக்கு எதிர் புறமாக அமர்ந்திருந்த பரத்தின் மீது சென்றது.
பரதனை பார்த்துவிட்டு மீண்டும் சக்தியின் மீது திரும்பிய அவனது பார்வையின் அர்த்தத்தை உணர்ந்தவளாக, “மிஸ்டர் பரதன். தெரிஞ்சுக்க போறவங்க.” என்று சிறு குரலில் அவனுக்கு பதிலளித்தவள், பரதனை பார்த்து, “என்னோட சிஇஓ… மிஸ்டர் ஜெகதீஸ்வரன்.” என்று சொல்லி அவனுக்கும் அறிமுகம் செய்து வைத்தாள்.
சட்டென்று எழுந்து நின்ற பரதன், “ஹாய் சார்…” என்று சொல்லி கையை நீட்ட, “ஹலோ…” அவன் கையைப் பற்றி ஜெகதீஸ்வரன் குலுக்க, “பாத்து கத்துக்கோங்க மேடம்” சக்தியை பார்த்து பட் என்று சொல்லிவிட்டான் பரதன்.
புரியாமல் ஜெகதீஸ்வரன் சக்தியை பார்க்க, வாய் மூடி மௌனியாக நின்று கொண்டு இருந்தாள் பெண். அதனால் ஜெகதீஸ்வரனுக்கு பதில் சொன்னது என்னவோ பரதன் தான்.
“வந்ததும் ஹாய் சொல்லி கை நீட்டினேன் சார். ஹேண்ட் ஷேக் கூட பண்ண மாட்டேன்னு அடமா நின்னுட்டாங்க.” என்று அவன் சொல்ல, தர்ம சங்கடமாகி போனது சக்திக்கு.
அவள் பதில் சொல்வதற்கு முன்பாக ஜெகதீஸ்வரனின் நண்பன் அவனைப் பார்த்துவிட்டு அங்கே வர, அந்த இருவர் மட்டுமே நிற்கக்கூடிய சிறிய குடிலில் சக்திக்கு அருகே வந்துவிட்ட ஜெகதீஸ்வரன், “ஒன்னும் பிராப்ளம் இல்லையே? மேனேஜ் பண்ணிக்குவியா?” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரல் கேட்டு இருந்தான்.
அவளைப் பற்றி அறிந்திருந்த இத்தனை நாட்களில் இப்படி ஒரு கலக்கத்தோடு அந்த கண்களை அவன் சந்தித்து இருக்கவில்லை. மனதின் போராட்டத்தை அப்பட்டமாக காட்டியது அவளது பழுப்பு நிற விழிகள். அந்தக் கண்களை அப்படி பார்த்த பிறகு அவளைக் கடந்து செல்ல முடியவில்லை அவனால் என்று தான் சொல்ல வேண்டும்.
நொடியில் மூடித் திறந்து தன்னை சமாளித்துக் கொண்டு இருந்தவளின் கண்களுக்குள் தன்னை கண்டதும் உண்டான பெரும் நிம்மதியைக் கூட அவன் மனம் உணர்ந்தது தான் விந்தையான விந்தை.
அதனாலேயே தன் இயல்பையும் மீறி ஜெகதீஸ்வரன் கேட்டு இருக்க, “நத்திங் சார்…ஐ வில் மேனேஜ்.” வேகமாய் வந்தது பதில் சக்தியிடம் இருந்து.
நொடிக்கும் குறைவான நேரத்தில் அவள் விழிகளை ஆழ்ந்து பார்த்த ஜெகதீஸ்வரன், “ஆர் யூ சூர்?” என்று கேட்டு அதற்கு பதிலாக அவளது தலை அசைவை பெற்றுக் கொண்டவன்,
“தென் யூ கேரி ஆன்…” என்று சொல்லி அவர்களை விட்டு விலகிச் சென்றான்.























 
Last edited:
Top Bottom