• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கண்ணாமூச்சி 12

STN - 35

Member
கண்ணாமூச்சி 12:

“கண்ணாமூச்சி ரே ரே
காட்டுப் பூச்சி ரே ரே
கண்டு பிடி யாரே!”

வாய்க்கு வந்த வார்த்தைகளை போட்டு பாடிக்கொண்டே, தனது கண்ணில் துணியை கட்டிக்கொண்டு, ராகவன் தேடிக் கொண்டிருக்க, அவனது கைகளில் சிக்காமல் போக்கு காட்டி கொண்டிருந்தாள் பிரணிதா.

அவள் செல்லும் திசையை கொலுசின் சிணுங்கலில் அறிந்து ராகவன் வர, அதனை கண்டு கொண்டவள், மெல்ல தரையில் அமர்ந்துக் கொண்டு, அவனை‌ தேட விட்டு வேடிக்கை‌ பார்த்தாள். வெகு நேரம் தேடி களைத்தவன், ஒரு கட்டத்தில் மெல்ல துணியை விலக்கி பார்த்திட,

“சீட்டிங் ராகவா!” என கத்தியபடி அவள் எழ,

“நீ தான் சீட்டிங் பண்ற யுகா, உன்னை ஓட சொன்னா, உட்கார்ந்துட்டு இருக்க. அப்போ நீ தான் சீட்டிங்.” பதிலுக்கு அவனும் சண்டையிட, கோபித்துக் கொண்டு சென்றமர்ந்துக் கொண்டாள். அவளிற்கு தெரியும் இன்னும் ஐந்து நிமிடங்களில் ராகவன்‌ அவளை‌ சமாதானப்படுத்த வருவான் என்று.

அவள் நினைத்ததுப் போலவே, அவனும்‌ வந்துவிட்டான்.
“சாரி யுகா, நான்தான் சீட்டிங் பண்ணிட்டேன். நம்ம திரும்ப விளையாடுவோமா?” என கேட்டு அவளை‌ மீண்டும் விளையாட அழைத்துச் சென்றிருந்தான்.

இவர்களின் செயலை பார்த்துக் கொண்டிருந்த பூர்வாவிற்கு, ராகவனின் செயல் எப்போதும் போல் இன்றும் ஆச்சர்யமூட்டியது. அப்படியே மாணிக்கத்தை பார்த்தது போல் இருந்தது அவனின் இந்த செயலில்.

பூர்வா திருமணத்திற்கு சம்மதித்ததும்‌ அடுத்த மூன்று‌ மாதத்தில் மீனாட்சி அம்மன் கோவிலில் திருமணத்தை எளிமையாக முடித்திருந்தார் மாணிக்கம். அதன்பின் அவர்கள்‌ கிணத்துக்கடவு வந்துவிட, பிரணிதாவை அங்கிருந்த பள்ளியில் சேர்ந்திருந்தனர்.

அன்று அவர் சொன்ன சொல்லை இன்றுவரை தவறாது காத்து வருகிறார் மாணிக்கம். பூர்வாவிற்கும், பிரணிக்கும் நல்ல கணவனாக, தகப்பனாக அவரது கடமையை இன்று வரை தவறாது செய்து வருகிறார்.

பூர்வாவிற்கு பாதுகாவலனாக இருப்பவர், இன்று வரை அதனை தாண்ட முயலவில்லை. ஆனால், பிரணியிடம்‌ அவருக்கு எல்லையெல்லாம் இல்லை, அத்தனை தாங்குவார் மனிதர். பிரணி தான் அவரது உலகமே!

அவர் கைப்பிடித்து இந்த வீட்டில் அடி எடுத்து‌ வைத்த தினத்தில் இருந்து, பிரணியின் முகத்தில் சிரிப்பு மீண்டிருந்தது.‌ ஓரளவு நடப்பதை புரிந்துக் கொள்ளும் பக்குவம் வந்திருந்தது அவளிற்கு. ஆனாலும், இடைஇடையே பூ அப்பாவை மட்டும் அவள் உள்ளம்‌‌ தேடுவதை நிறுத்தவில்லை.

இவர்கள் திருமணம் முடிந்து, வந்த பூவரசனின் நினைவு நாளில் பிரணிதா மீண்டும்‌ துவண்டு போக, அவளை‌ அதிலிருந்து மீட்டுக் கொண்டு வந்தது மாணிக்கம் தான்.

இதோ ஹாலில்‌ பிரணிதா பூவரசனுடன் இருக்கும் படத்தினைதான் நினைவுநாளில் பிரணிதாவிற்கு பரிசளித்தார். அதனைக் கண்டு அத்தனை துள்ளல் அவளிடம் அன்று.

“அப்போ, பூ அப்பா இனி வரவே‌ மாட்டாரா மணிப்பா!” அன்றுதான் உணர்வுகளின் வேகத்தில், மாணிக்கத்தை அப்பா என அழைத்திருக்க, அவளை‌ இறுக அணைத்துக் கொண்டவர்,

“பூவப்பாதான்டா சாமிகிட்ட சொல்லி என்னை‌ அனுப்பி வச்சாரு. அவரோட பூக்குட்டி அவரை ரொம்ப தேடுறாளாம், அதான் பூக்குட்டிய‌ சந்தோசமா பாத்துக்க என்னைய அனுப்பி வச்சிருக்காரு. பூவப்பா சொன்ன மாதிரியே, நானும் இந்த பூக்குட்டிய பத்திரமா பார்த்துப்பேன்.” என்றவரை கண்டு ஓரளவு நிதர்சனத்தை புரிந்துக் கொண்டாள் பிரணிதா.

மாமனின் அன்றைய அழுகையை கண்ட ராகவன் கூட, “ ஆமா பிரணி, மணி மாமா சொல்றது உண்மைதான்.” என அன்று அவளிற்கு ஆதரவாக இருந்தவன், இன்று வரை அப்படியே இருக்கிறான். அவனின் இந்த செயலுக்கு காரணம் மாணிக்கத்தின் ஒற்றை வார்த்தை தான்.

பிரணிதா இந்த வீட்டிற்கு வந்த தினம்,
மாணிக்கம் ராகவனிடம்,‌ “இனி, பிரணிக்குட்டி உன்னோட பொறுப்பு. மாமா இல்லாதப்போ‌ நீ தான் அவளை பத்திரமா பாத்துக்கணும் சரியா.!” என்றவரின் வார்த்தையை அப்படியே‌ மனதில் பதித்துக் கொண்டவன், இன்றுவரை மாணிக்கத்திற்கு நிகராய் அவளை தாங்குகிறான்.

அவனை பொறுத்தவரை பிரணிதா அவனது பொறுப்பு என்பதை விட, அவனது உரிமை அவள். அவளை பத்திரமாய், பாதுகாப்பாய் மாணிக்கத்திற்கு அடுத்தப்படியாக அவன் மட்டுமே பார்த்துக் கொள்ள முடியும், என்ற எண்ணம் வேராய் அவனுள் பரவிக் கிடந்தது.

அவளது சிறு முக சிணுங்கத்தையும் அவனால் தாங்கிட முடியாது. அதை சரி செய்துவிட்டுதான் மறுவேலை செய்வான். மாணிக்கத்தை‌ காட்டிலும், அதிக‌ கவனமெடுத்து அவளை தாங்கி கொண்டிருக்கிறான்.

“அத்தை, மருதாணி அரைச்சிட்டீங்களா?” என்றபடி அவன் வந்து நிற்க,

“இதோ முடிஞ்சிடுச்சு ராகவா.” அரைத்த மருதாணியை கிண்ணத்தில் வழிந்தவாரு அவர் கூற,

“கொடுங்கத்தை, நானே வைக்கிறேன்.”

“வேண்டாம் ராகவா, அப்பறம் உன் கைலயும் மருதாணி ஒட்டிக்கும். நானே வச்சிடுறேன்.”

“பரவாயில்லத்தை, பிரணிக்கு நானே வைக்கிறேன்.‌‌எப்புடியும் என் கைலயும் வைக்க சொல்லுவா, பாருங்க.” என்றபடி பிரணியை‌ தேடி செல்ல, அவன் பின்னே சிறு சிரிப்புடன் சென்றார் பூர்வா.

“பிரணிக்குட்டி, மருதாணி வைக்கலாமா தங்கப் பிள்ளை.” பூர்வா, பிரணியின் அருகில் அமர்ந்து அவள் கைப்பிடிக்க,

“அம்மா, ராகவனுக்கும் வைங்க!” என்றிட, ராகவன் சிரிப்புடன் பூர்வாவை காண,

“ராகவ் பையன்ல பிரணி, நாளைக்கு அவன் கைல மருதாணி இருந்தா, ஸ்கூல்ல எல்லாரும் அவனை கிண்டல் பண்ணுவாங்கடா. வேணும்னா‌ அம்மா வைக்கிறேன்.”

“ம்ஹீம், இல்லை. ராகவ்க்கும் வைங்க.” என அடம்பிடித்திட,

“பிரணிக்குட்டி! அடம்பிடிக்க கூடாது.” பூர்வா மகளின் பிடிவாதத்தை கண்டு அதட்டிட, அவள் முகம் சுருங்கிற்று.

“எதுக்கு, பிரணிக்குட்டிய அதட்டுற பூர்வா?” என்றபடி மாணிக்கம் வர, நொடியில்‌ பிரணியின் முகம் மலர்ந்து விட்டது. மருதாணி கிண்ணத்தை கண்டவர்,

“அடடே, என் பிரணிக்குட்டி மருதாணி வைக்கப் போறாங்களா? அப்போ மணிப்பாக்கு வைக்கனுமே.” என்றபடி அவர் வந்தமர்ந்து உள்ளங்கையை விரித்துக் காட்ட,

“ஆமா, எனக்கும் வைங்கத்தை.” ராகவனும் அவன் பங்கிற்கு கையை நீட்ட, வேறுவழியின்றி மூவரையும் பொய்யாய் முறைத்தப்படி மருதாணியை வைத்தவர், பிரணதாவிற்கு கால் கட்டை விரலிலும் வைத்திருந்தார்.

“மணிப்பா, ராகவா, பிரணிக்குட்டி எல்லாரும் சேம் சேம்” என அவள் மலர்ந்து சிரிக்க, அவள்‌ சிரிப்பை கண்ட ஆண்கள் இருவரின் மனமும் நெகிழ்ந்தது.


இடைப்பட்ட காலத்தில் துரைக்கும் - திலகாவிற்கும் திருமணம் முடிந்திருந்தது. திலகா ஒருவகையில் மாணிக்கத்திற்கு தெரிந்த சொந்தம் தான். வீட்டின் மருமகனாக முன்நின்று விசேசத்தை எடுத்து நடத்தியிருந்தார் மாணிக்கம். திருமண கொண்டாட்டத்தில் பூர்வாவை சீண்டாமல் இருப்பார்களா‌‌ என்ன?

சொந்தங்களின்‌ கேலி, நக்கல் பார்வை, குத்தல் பேச்சு‌, எதுவும் பாதிக்காதளவு அவளிற்கு அரணாய்‌ நின்றவரை‌ கண்டவளின் மனதில் சிறு சலனம்.


இப்போதெல்லாம் பூர்வாவின் உள்ளம் ஒருவித குற்றவுணர்வில் தவிக்க ஆரம்பித்திருந்தது மாணிக்கத்தினை‌ காணும் போதெல்லாம். அதுவும்‌ அவரது தங்கைகள் பேசியதை எதோர்ச்சையாக‌ இவள் கேட்க நேர்ந்தது.

“ஏன்‌ அக்கா, அண்ணா அப்புடி கடைசி வரை ஒட்டாம, அதோட வாழ்க்கைய வாழாமலே போய்டும் போலயே!” விமலா கேட்க,

“இதுக்குத்தான் விமலி, நான்‌‌ இந்த கல்யாணம் வோண்டாம்னு சொன்னேன் ஆரம்பத்துலயே.”

“நம்ம‌ எல்லாரும் தான்‌ சொன்னோம். எங்க, அண்ணே அவ்ளோ பிடிவாதமால பூர்வாவ கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லுச்சு.”

“நமக்கு வேற வழியில்லையே. பூர்வாவால முதல் வாழ்க்கைல இருந்து அவ்வளவு சுலபமா மறந்துட்டு வெளி வர முடியாது, அது ரொம்ப கஷ்டம். அண்ணா கல்யாணம் பண்ணா, இரண்டு பேருக்கும் அது கஷ்டம்னுதான் வேண்டாம்னு சொன்னேன். அண்ணா கேக்கலையே, “எனக்கு பிரணிதா போதும்னு சொல்லிடுச்சு.” அதுக்கப்புறம், நம்ம என்ன செய்ய முடியும்? அண்ணாவா என்னைக்கும் அதுவா பூர்வாகிட்ட நெருங்காது.” என, அவர்களின் பேச்சை கேட்ட பூர்வாவிற்கு குற்றவுணர்வாகிப் போனது.

அப்பழுக்கற்ற பாசத்தினை, பாதுகாப்பினையும், பிரணிதாவிற்கும், அவருக்கும் மாணிக்கம் கொடுத்துக் கொண்டிருக்க, பதிலுக்கு பூர்வாவால் ஒன்றும் தர முடியவில்லையே! என்ற உணர்வு சமீபமாய் அவரை இம்சிக்க ஆரம்பித்திருந்தது.

வெளியே இருந்து பார்க்க அழகிய குடும்பமாய் தெரிந்தாலும், மாணிக்கம் பூர்வாவிற்கான இடைவெளி இன்னும் நிரப்பப்படாமல் அப்படியே தான் இருந்தது. மாணிக்கம் தனக்குரிய எல்லையை தாண்டாமலே‌ இருந்திட, பூர்வாவிற்கு‌ அதுவே குற்றவுணர்ச்சியாய் மாறியது.

பால்கனியில் நின்றபடி வெளியில் பார்த்துக் கொண்டிருந்தவளின் மனம், மாலையில் நடந்த நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டிருந்தது.

ஒரே ஒரு மருதாணிக்காக கூட, பிரணிதாவின் முகம் வாடிவிடக் கூடாதென தானும், ராகவனும், மாணிக்கமும் கையில் வைத்துக் கொண்டது நினைவிற்கு வர, அவளது நெஞ்சில் ஏதோ அழுத்தியது.

பூவரசன் இறந்த பிறகு, தன்னையும், மகளையும் இவ்வளவு பொறுமையாக யாராவது தாங்குவார்கள் என்று அவள் ஒருநாளும் நினைத்ததில்லை.

ஏன் அன்று பேசிய நாத்தனார்கள் இருவரும் கூட, இன்று வரை பூர்வாவிடம் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. பிரணிதாவை அன்பால் தாங்கும் குடும்பம் தான் அமைந்திருக்கிறது.

மனம் அமைதியாக இருக்கும் நேரங்களில்தான் குற்றவுணர்வு அதிகமாக வந்து அவளை வாட்ட ஆரம்பித்தது.

பிரணிதாவின் சிரிப்பு, துறுதுறுப்பு, குறும்புத்தனம், இவை அனைத்தும் திரும்பி வந்ததற்கு காரணம் மாணிக்கம் என்பதை மறுக்க முடியவில்லை.

ஆனால் பதிலுக்கு தான் என்ன கொடுத்திருக்கிறோம்?
அவர் மனைவியாக பெயரளவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே தவிர, உண்மையில் ஒரு மனைவியாக இதுவரை அவருக்காக எதுவும் செய்ததில்லை.

அந்த எண்ணமே நெஞ்சை கனக்கச் செய்தது. மாணிக்கம் மற்றும் பிரணிதாவின் அழகான உறவை கண்டு, லேசாய் பூர்வாவிற்கும் ஆசை வர ஆரம்பித்திருந்தது அந்த உறவினுள் நுழைவதற்கு.

ஆனால், முதல் அடியை இவள் எடுப்பதற்கு தயக்கமாக இருந்தது.

பூர்வாவிற்கு நல்ல தோழனாக, பாதுகாவலனாக இருப்பவரை, தற்போதெல்லாம் கணவனாக எண்ணிக் கொள்ள ஆரம்பித்திருந்தது பூர்வாவின் உள்ளம்.

பூவரசனின் நினைவுகள் மறைந்து போய்விடவில்லை. ஆனால், அந்த நினைவுகளை தாண்டி வாழ்வதற்கு ஒரு தோள் அவளுக்கு கிடைத்திருந்தது. அந்த தோளின் அருமையை உணர்ந்த போதெல்லாம், மாணிக்கத்தின் மீது மனம் மெதுவாய் சாய்ந்து கொண்டே சென்றது.

அந்த மாற்றம் திடீரென வந்ததல்ல. நாள் தோறும் அவர் காட்டிய அக்கறை, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத பாசம், அவளது முடிவுகளுக்கு கொடுத்த மதிப்பு, என மெதுவாகவே அவள் மனதில் இடம் பிடித்திருந்தார் மாணிக்கம்.

அவ்வப்போது தனது மனமாற்றத்தை சிறு சிறு வேலைகள் மூலம் மாணிக்கத்திற்கு காட்டியிருந்தாள் பூர்வா. அப்போதாவது அவரது எல்லையை தாண்டி வருவாரா என்று?
ஆனால், வருடங்கள் கடந்தும் அது மட்டும் நடந்திடவில்லை.

இனி,அவரை நம்பினால் வேலைக்காகாது என பூர்வாவே முதல் அடியை எடுத்து வைத்திருந்தாள்.

அன்றிலிருந்து மாணிக்கத்திற்கு தேவையான அனைத்தையும் அவளே முன்னின்று செய்ய ஆரம்பித்திருந்தாள்.

மனைவியின் மாற்றம் புரியாமல் இருக்குமா மாணிக்கத்திற்கு? என்ன இது தீடிர் மாற்றம், என அவர் உள்ளம் நினைத்தாலும், அதை ரசிக்க தவறவில்லை அவர்.‌

பிரணிதாவிற்காக என ஆரம்பிக்கப்பட்ட வாழ்க்கையில், பூர்வா அவர்‌ மனதை ஆக்ரமிக்க ஆரம்பித்தது உண்மை.

நாட்கள் கடந்து, பூர்வாவை அவர் மனம் முற்றும் முழுதாக மனைவியாக ஏற்றுக் கொண்டிருந்தது. ஆனால், அவர் பூர்வாவிற்கு குடுத்த வாக்கிற்காக‌ தனது மனதை மறைத்துக் கொண்டிருந்தவருக்கு, இன்றைய மனைவியின் மாற்றம் துள்ளிக் குதிக்க வைத்தது.

இருந்தும், இந்த மாற்றம் கட்டாயத்தால் விளைந்ததா என அறிய வேண்டி,
“எதுக்கு பூர்வா இதெல்லாம்? உன்னை கஷ்டப்படுத்திக்காத, நான் பாத்துப்பேன். எனக்கு பிரச்சனையில்லை.” என்றிட,

“இப்போ என்ன? உங்களுக்குன்னு நான் எதையும் செய்யக் கூடாதா?”

“இல்லை, உனக்கெதுக்கு கஷ்டம்?”

“அப்போ, பிரணிக்காக ஏன் நீங்க கஷ்டப்படுறீங்க?”

“ப்ச், பூர்வா என் பொண்ணுக்கு செய்யுறதுல என்ன கஷ்டம் எனக்கு?”

“அப்போ கடைசி வரை உங்க பொண்ணு மட்டும் போதும்ல உங்களுக்கு?”

பூர்வாவின் கேள்வியில் அவர் திகைத்து‌ப் போய்விட!

“சொல்லுங்க, உங்க பொண்ணு மட்டும் போதும், உங்க வாழ்க்கைக்கு அப்புடித்தானா?

ஆனா, எனக்கு அப்பிடியில்ல, எனக்கு என் புருசனா நீங்களும் வேணும். உங்க கூட வாழனும்னு‌‌ தோணுது. என்ன பண்ணலாம் சொல்லுங்க?” அவரிடமே கேள்வியை திரும்ப, அதிர்ந்து விழித்தவர், பின் ஒரு புன்சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்திருந்தார்.

அதன்பின் இருவரது வாழ்விலும் நிறைய மாற்றங்கள் வந்தது, அந்த மாற்றங்களில் ஒன்றாய் அவர்களது வாழ்க்கையும் ஆரம்பித்திருந்தது.‌ அந்த வாழ்க்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டிருந்தாள் பூர்வா.

*****************

“உனக்கு ஒண்ணு தெரியுமா? பாப்பா பொறந்துட்டா, உன்னை விட அவளைத்தான் நல்லா பாத்துப்பாங்களாம். எங்கம்மா, பக்கத்து வீட்டு அத்தைகிட்ட பேசிட்டு இருந்தாங்க.”

“ஆமா பிரணிதா எங்கம்மாவும் அப்பாவும் கூட பேசுனாங்க, நீ‌ மில்லுக்காரரோட சொந்த பொண்ணு இல்லையாம், அவரோட வாரிசு நீ இல்லையாம்னு‌ சொன்னாங்க.”

“அதுமட்டுமில்லை, உனக்கு வர்ற தம்பி, தங்கச்சி தான் உங்கப்பவோட ரத்தமாம். இப்போ உன்னை கொஞ்சுறவாரு, பிள்ளை‌ பிறந்ததும், அவுங்களை தான் கொஞ்சுவாங்களாம். உன்னை கண்டுக்கவே மாட்டாங்களாம்.

உன் அத்தைங்க கூட அவுங்களை தான் நல்லா பாத்துப்பாங்களாம்.‌ உங்கம்மா கூட உன்னை விட குட்டி பசங்க மேல தான் அன்பா‌ இருப்பாங்களாம். இனி உன்னை‌ ஒதுக்கிடுவாங்களாம். நீ‌ கவனமா இருந்துக்கனுமாம்.”

இவையனைத்தும் பூர்வா கருவுற்றதில் இருந்து பிரணிதா தினம்‌ தினம் பள்ளியில் அவளது தோழிகள் கூற‌ கேட்பவை.

பூர்வா‌ கருவுற்றுகிறாரா? ஆம் ஒற்றை அல்ல இரட்டைகள்! மில்லுவீட்டுக்காரரின் விசயம் அவ்வூர் மக்களுக்கு நல்ல தீனியாய் அமைந்தது பேசுவதற்கு.

ஆரம்பத்தில் பூர்வாவை திருமணம் முடித்தது பேசுபொருளாகியது. ஆனால், அதை முகத்திற்கு நேரே பேசுவதற்கு தைரியம் இல்லை, பெரிய தனக்காராரை பற்றி அவரிடமே சொல்லும் தைரியம் இருந்திடுமா என்ன?

அடுத்தது பிரணிதாவை மாணிக்கம் தாங்குவதும் அங்கு புறணி பேசப்பட்டது. பிரணியை‌ அங்கே பள்ளியில் சேர்த்ததும், அவ்வளவாக நட்பு வட்டங்கள் அமைந்திடவில்லை. ஆரம்பத்தில் மில்லுவீட்டுக்காரார் பெண், என அனைவரும் ஒதுங்கியே இருந்திட, பள்ளிக்கே செல்லமாட்டேன் என ஒரே அழுகை வீட்டில்.

பின் ராகவன் தான் வந்து சமாதானம் செய்து, மற்ற பிள்ளைகளையும் நட்பாக்கி விட்டிருந்தான். ஆரம்பத்தில் அவளுடைய‌ நட்பை வீட்டினில் சென்று பெருமையாய் தோழிகள் சொல்ல, அதற்கு அவர்களது அம்மாக்கள்‌ கொடுத்த பதில் அப்படியே இவளிடம் கடத்தப்பட்டது.

“உங்கம்மாக்கு இது இரண்டாவது கல்யாணமாமே?”

“உன்னோட முதல் அப்பா, உனக்கு ஞாபகம் இருக்காங்களா?”

“உன்னோட பெர்த்டே அன்னைக்கு உன் அப்பா இறந்துட்டாங்களாம், நீ ராசி இல்லையாம். எங்கம்மா சொன்னாங்க.” என ஆரம்பத்தில் இருந்தே, பிரணியை ஒருவித அழுத்தத்திற்கு ஆளாக்கின இக்கேள்விகள்.

நிறைய கேள்விகளுக்கு “ஆம், அப்படித்தான்! அதில் உனக்கென்ன பிரச்சனை.” என பதிலடி கொடுத்தவள், சில கேள்விகளுக்கு மெளனத்தையும் பதிலாக தர வேண்டியிருந்தது.

அவள் அதிகம் உணர்ச்சி வசப்படும் விசயம் மாணிக்கத்தை பற்றி தான்.‌

ஒரு தடவை, “உங்கப்பாக்கு அவரோட பிள்ளை வந்திட்டா, உன்னையெல்லாம் பாக்க மாட்டாராம்.” என‌ கூறியவளை உண்டு இல்லை என ஆக்கியிருந்தாள்.

“என் மணிப்பாக்கு நான் மட்டும்தான் பொண்ணு. என்னை மட்டும்தான் கொஞ்சுவாரு. அவருக்கு இன்னொரு குழந்தை எல்லாம் வராது.” என அன்று ஆக்ரோசமாய் கத்தி சண்டையிட்டு, அடிக்க சென்றிருந்தாள்.

ஆனால், அதுவே பின்னாளில் பூர்வா பிள்ளை உண்டாயிருப்பதை அறிந்துக் கொண்டு, அந்த நண்பி நக்கல் சிரிப்புடன் இவளிடம்‌‌ வர, அவமானமாகிப் போனது இவளிற்கு.

அதுவரை தோழிகளின் பேச்சை நம்பாமல் இருந்தவள், அவர்கள் சொன்ன விசயம் நடந்ததில் இருந்து, அவர்களது சொல்லை‌ வேதவாக்கை மனதில் ஏற்ற ஆரம்பித்திருந்தாள்.

அவள் அவர்கள் பேச்சை ஆமோதிப்பதை கண்டு உற்சாகம் அடைந்தவர்கள், அவளிற்கு உதவுவதாக எண்ணி வீட்டில், அக்கம்பக்க்த்தில் மாணிக்கம் வீட்டை பற்றி வரும்‌ செய்திகளை, மற்றவர்கள் பேசுவதை, இவளிடம் திணிக்க ஆரம்பித்திருந்தனர்.

தோழிகள் சொல்லும் விசயத்தை நம்ப ஆரம்பித்தவளுக்கு ஏற்றார் போல் வீட்டிலும் சில விசயங்கள் நடக்க, ஆக‌ தோழிகள் கூறுவது அனைத்தும் உண்மை என்ற விசயம் அவள் மனதில் ஆழப் பதிய ஆரம்பித்தது.

ஆனால், இவள் நினைப்பது போல் ஒருவரும் இவளை‌ ஒதுக்கவில்லை.‌ நடந்த சில இயல்பான விசயத்தை தனக்கு சாதகமாக எண்ணிக் கொண்டது அவள் மனம்.

பிரணிதாவிற்கு பிறகு வருடங்கள் பல கடந்து பூர்வா கருவுற்றிருக்க, அவரது வயது ஒரு காரணமாயிருந்தது அனைவரது பயத்திற்கும். அதுவும் இரட்டை என்றதும் அந்த பயம் கூடுதல் ஆனது.

அதற்கேற்றாற் போல், மருத்துவரும் பூர்வாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, மிகுந்த கவனத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தியிருந்தார்.

அதிக அலைச்சல் கூடாது, மனஅழுத்தம் கூடாது, சாப்பாட்டிலும் ஓய்விலும் எந்த குறையும் இருக்கக் கூடாது என தொடர்ந்து எச்சரித்துக் கொண்டே இருந்தார்.

ஆக, இயல்பாய் கருவுற்றவரை‌ கவனிப்பது போல், வீட்டினர் கொஞ்சம் அதிக அக்கறை எடுத்து, அவரை‌ கவனிக்க ஆரம்பித்திருக்க, அங்கே தோன்றியது முதல் சந்தேகம் பிரணியின் மனதில்.

அடுத்ததாக, அவளது விளையாட்டு தோழன்‌ ராகவன், பள்ளி இறுதியாண்டில் இருப்பவன்‌ பொது தேர்வில் கவனமாயிருந்து, இவளுடன்‌‌ அதிக நேரம் செலவழிக்காமல் போக, அங்கே தோன்றியது அடுத்த சந்தேகம்.

இரவினில் எப்போதும் பூர்வாவின் மீது, கை காலை தூக்கி போட்டு அணைத்தவாறு படுப்பவளிற்கு, பூர்வா தடைப்போட்டு, அதற்கு காரணம்‌ கேட்டவளிடம் வயிற்றில் இருக்கும் பிள்ளையை காரணம் காட்டிட, அங்கே தோன்றியது அடுத்த சந்தேகம்.

இதற்கெல்லாம் உச்சக்கட்டமாக, பூர்வா திடீரென வயிற்றுவலியில் அவதிப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட, அங்கே சூட்டுவலி என்று திருப்பி அனுப்பியிருந்தனர்.

அதனை கொண்டு,
“படுக்கும்போது சுத்திப்போட்டு தூங்கு பூர்வா. இரட்டை பிள்ளை வயிறு, பாக்குறவங்க கண்ணு‌ ஒரே மாதிரி இருக்காது. ஏன், பிரணியே‌ அடிக்கடி பாக்குறா, “ என்னடா இவ்ளோ‌‌ பெருசுன்னு” அவ கண்ணேக் கூட பட்டிருக்கும்.” என ஒரு வேகத்தில் கவிதா சொல்லிவிட, அதனை எதோர்ச்சையாக கேட்ட, பிரணியின்‌ மனதில் அதுவரை இருந்த சந்தேகம் எல்லாம் உருவம் பெற்று உண்மையாகியிருந்தது.

‘அப்போ, நான் பாத்தவே பிள்ளைக்கு‌ ஏதும் ஆகிடுமா? அந்தளவுக்கு என்னை‌ ஒதுக்கி வச்சிட்டாங்களா இவுங்க எல்லாம்.’ என்ற எண்ணம் வலுவாய் அவளும் வேருன்ற ஆரம்பித்திருந்தது.

அன்றிலிருந்து, பிரணிதா மெல்ல மெல்ல அவர்களிடம் இருந்து விலக ஆரம்பித்திருக்க, ஒருவருக்கும் தெரிந்திருக்கவில்லை.

பூர்வா அவ்வப்போது பிரணியை‌ கவனித்துக் கொண்டாலும்,மசக்கை மிகவும் படுத்தி எடுத்தது.

இரட்டை‌பிள்ளை‌ எனும்போது‌ அதிகம் மூச்சு வாங்க, அதற்கு பயந்து அவரை ஓய்வில் வைத்திருக்க, அவராலும் ஓரளவுக்கு மேல் பிரணிதாவிடம் நெருங்க முடியாமல் போனது.

பெரிய பிள்ளை தானே புரிந்துக்கொள்வாள் என பூர்வாவும், சற்றே அசட்டையாக இருந்துவிட,

இதுவரை வீட்டினருக்கு
மையமாக இருந்த பிரணிதாவிற்கு,
நாட்கள் செல்லச் செல்ல, அனைவரது பார்வையும் பூர்வாவின் வயிற்றில் வளரும் குழந்தைகளை நோக்கியே திரும்புவதை அவளால் உணர முடிந்தது.‌ ஆனால் அதை ஒத்துக் கொள்ளத்தான் அவள் மனம் முரண்டு பிடித்தது.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online

Top Bottom