• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கண்ணாமூச்சி 15

STN - 35

Member
கண்ணாமூச்சி 15:

விடிந்தால் திருமணம்! மனது ஒருவித சந்தோசத்தில் மிதக்க, உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள் யுகபிரணிதா. அவளருகே எப்போதும் போல் நான்கு வாண்டுகள் அயர்ந்து உறங்கி கொண்டிருந்தனர்.

அத்தனை ஆர்ப்பாட்டமும், கொண்டாட்டமும்‌ அவர்களிடம். இரவு நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது. உறவினர்கள் பாதி மண்டபத்திலும், வீட்டிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

வெளியே அடுத்த நாள் சமையலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகிறதது போலும், முணுமுணுவென பேச்சுக்குரல்கள்‌‌ கேட்ட வண்ணம் இருந்தது. உறக்கம் வராமல் புரண்டவள், அலைப்பேசியை‌ எடுத்து, ராகவனின் டி.பியை பார்க்க, சற்று முன் எடுக்கப்பட்ட இருவரது புகைப்படமும் அதில் இடம்பெற்றிருந்தது.

எத்தனை காதல் தான் அவனிடம்! அவளும் ஒன்றும் சளைத்தவள் இல்லையே! இதுவரை இருவரும் வாய்திறந்து விரும்புவதாக கூறிக் கொள்ளவில்லை, ஏன் பல வருடங்களாக நேரடியாக கூட பார்த்துக் கொள்ள கூட இல்லையே? பின் எப்படி இருவரிடமும் இத்தனை பிடித்தம்?
என்ற கேள்வியை கேட்டால், இருவரிடமும் பதில் இருக்கப் போவதில்லை.

ராகவனிற்கு, சிறுவயது முதலே‌ பிரணிதா அவனது கடமையாக்கப்பட்டிருந்தளே! அவள் வீட்டை விட்டு செல்லும் வரையிலுமே, அவனது உடமைதானே அவள். அவள் சென்றபின் வீட்டினரும் அவளது விருப்பத்திற்கே உட்பட, தவித்துப்‌‌ போனது என்னவோ இவன் தான்.

இரண்டு முறை நேரில் சென்றும், அன்று‌ அவள் இருந்த கோபத்தில் பார்க்க மறுத்திட, அடுத்து அவன் கடைப்பிடித்தது தான் பவுனம்மாள் மூலம் வீடியோ கால். ஆரம்பத்தில் பிரணிதாவிற்கு தெரியாமல் தான் அவளை‌ தினமும் வீடியோகாலில் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனால், ஒருகட்டத்தில் அவளிற்கு தெரிந்து விடவே, அத்தனை ஆர்ப்பாட்டம் அவளிடம். அவள் எத்தனை பிடிவாதம் பிடித்தும், ராகவன் அவளை வீடியோ கால் மூலம் பார்ப்பதை நிறுந்தவில்லை‌. அப்படி அவள்‌ அதிகம் முரண்டு பிடிக்கும் சமயங்களில் நேரிலே வர ஆரம்பித்திருந்தான்.

அதனை‌ கண்டு வீட்டினர் கூட, பிரணிதாவின் விருப்பப்படி அவளை விட கூறினர், ஆனால் அதை முற்றிலும் மறுத்துவிட்டான், அவளது பிடிவாதத்திற்கு தலைசாய்க்கவில்லை.

கல்லூரியில் இருந்தவனிற்கு, அவள் மீது காதல்‌ எல்லாம் இல்லை, மாறாக அவனது உரிமையும், உணர்வும் அவள்தான் என்பதில் அவனிற்கு ஐயமில்லை.

காதலால் வந்த பிடித்தம் கிடையாது இருவரதும், மாறாக இவன்/இவள் என்னவன்/என்னவள்‌ என்ற உணர்வுகளால் வந்த பிடித்தம் தான் இருவரிடமும்.

அவளது பிடிவாதமும், வீம்பும் எப்போதும் ராகவனிடம் செல்லுப்படியாகாது. முடிந்த அளவு போராடுபவள், அதற்குமேல் அவன் வழிக்கே‌ சென்று விடுவாள். இது‌ அவள் சிறுவயது முதலே நடப்பது ஒன்று என்பதால், வளர்ந்த பின்னும் அவளிற்கு அது பெரிதாய் தோன்றவில்லை.

தன்னளவு பிடித்தம் பிரணியிடமும் உண்டு என்பதை ஆணித்தரமாகவே சொல்லுவான் ராகவன்! அத்தனை தெரியும் அவளது மன‌‌ உணர்வுகளை. இருவரும் வளர்ந்த பின்னும் கூட, திருமணம் எனும் பேச்சை கேட்டாலே, இருவருக்கும் அடுத்தவர் முகம் தான் மணக்கண்ணில் வரும்.

வீட்டினருக்கும் இவர்களது உறவு நிலை புரியவே, வேறு வரன் என்ற பேச்சையே அவர்கள் இருவரிடமும் எடுக்கவில்லை.
ஏன்? பிரணியின் ஜாதகத்தை கவிதா கேட்டு வாங்கியது கூட அவளிற்கு தெரியும், அப்போத அவள் மனம்‌,

“ஜாதகம் ஒத்து வரலைன்னா மட்டும் இவுங்க பையன் என்னை விட்டுட போற மாதிரி தான்.?” என முணங்கி கொள்பவளுக்கு தெரியும், அவளது வருங்கலாம் அவன்தான் என்று. இதுவரை அவர்களது பிடித்தத்தை வார்த்தைகளில் உரைத்துக் கொள்ளவில்லை மாறாக செயல்களில் தெரியும் அவர்களது பிடித்தம்.

அனைவரையும் தனது கோபத்தாலும், வீம்பாலும் ஆட்டிப்படைத்தவள் அடங்கும் இடம் அவன்தான் என அவளிற்கு நன்றாகவே புரியும்.

அதேபோல் தான் அவனிற்கும்! அவளை‌ அடக்கி தனக்குள் வைக்கும் வித்தை நன்றாகவே தெரியும். எப்போதும், ராகவனிற்கு அவனது யுகாவிடம் எல்லைகள் என்பது அறவே இல்லை, அவனது உடமை, இஷ்டம் அவள்.

பிரணியும், தன்னிடம் அதிகளவு உரிமை அவனிற்கு உண்டு, என ராகவன் அவளிடம் உரிமை எடுத்து நடக்கும் போதெல்லாம் அவனிடம் அடங்கிப் போய் நிருபித்துவிடுவாளே! ஆக, மொத்தம் இருவரும் அடுத்தவரின் மனதினை துல்லியமாய் உணரும் மனோதத்துவம்‌ கொண்டவர்கள்.

என்னை பிடிக்கவில்லை என்று சொல்லி விடுவானா? / விடுவாளா? என்ற கர்வம் இருவரிடமும் அதிகம் உண்டு. அவர்கள் கொண்ட உணர்வுகளுடனான பிடித்தம் மட்டுமே,இதோ அவர்களை‌ திருமணம் வரை‌ கொண்டு வந்திருக்கிறது.

அலைப்பேசியில் அழைப்பு வர எடுத்துப் பார்த்தாள் அவன் தான். இவள்‌ ஆன்லைனில் இருப்பதை அறிந்து அழைத்திருந்தான்.

“தூங்கலையா‌டி நீ?”

“ம்ம்ம்!”

“ஏன்?”

“தூக்கம் வரலை”

“ஆஹான், ஏனாம்?”

“தெரியலையே.”

“உன் ராகவனை நினைச்சிட்டு தூங்கு.”‌கிசுகிசுப்பாய்‌ அவன் குரல் ஒலிக்க,

“ராகவனை நினைச்சதால தான் தூக்கம் வரலை.” அவளின் கிசுகிசுப்பு‌ குரலில், அவனிற்கு வெட்கம் வந்தது.

“தூங்க முடியாத அளவுக்கு ராகவன் என்ன‌ பண்ணானாம்?” சிறு சிரிப்புடன் அவன் கேட்டிட, இம்முறை அவளிற்கு கன்னம் சிவந்தது.

“சொல்லுட்டி!” என்றவனின் குரல் ஆழ்ந்து ஒலித்தது, பதிலில்லை அவளிடம்.

“முத்தம் கொடுத்தானா? இல்லை மொத்தத்தையும் கொடுத்தானா?” என்றவனின் குரலில் இருந்த கரகரப்பு, இவளை எதுவோ செய்திட, அடிவயிற்றில் குறுகுறுப்பு தாங்க முடியாமல், கால்விரல்களை மடக்கி கொண்டாள்.

“ராகவா…!” அதட்டலாய் அழைக்க நினைத்தவளின் குரல் அடங்கி ஒலித்திட, ஆர்ப்பாட்டமான நகைப்பு அவனிடம்.

“ப்ச், போங்க. எனக்கு தூக்கம் வருது, நான் போனை கட் பண்றேன்.”

“ஏய்! இருடி.”

“ம்ம் என்ன?” அவள் சிணுங்கிட,

“மருதாணி வச்சியா காலுக்கு?”

“அதான் நேத்தே வச்சிட்டேனே, அப்பறம் ஏன் இன்னைக்கு?”

“ஏன்? இன்னைக்கு வச்சா, உன் காலு தாங்காதா அந்த வெயிட்டை.”

“உங்க இஷ்டத்துக்கு எல்லாம் வைக்க முடியாது?”

“ஹலோ மேடம், நீ மொத்தமும் என்னோட இஷ்டம்தான்!.”‌ எத்தனை முறைதான் அவளை வாயடைக்க செய்வானோ?

“நான் போனை வைக்கிறேன்.” அவள்.

“வையின்னு தான், நானும் சொல்றேன்.‌போனை மட்டுமில்ல மருதாணியையும் தான்.”

“எதுக்குங்க?”

“உன் கால் சிவப்பா இருக்கணும்?”

“ஏற்கனவே சிவந்திருக்கு.”

“பரவாயில்லை இன்னொருக்க நல்லா சிவக்கட்டும், நாளைக்கும் நீ வைக்கணும்.”

“ஏதே? நாளைக்குமா. லூசா நீங்க?”

“ப்ச் என்னடி இப்போ? வைக்க முடியாதா உன்னால?”

“அதான், ஏற்கனவே‌ வச்சிட்டேனே?”
மறுபுறம் அமைதி அவனிடம்.

“சரி, இப்போ வைக்கிறேன். ஆனா, நாளைக்கு ஏன்?”

“அதை நாளைக்கு சொல்றேன்.‌நீ வச்சிட்டு எனக்கு போட்டோ அனுப்பு.”

“என்ன‌ நம்பாம போட்டோ கேட்குறீங்களா?”

“ஆமா!”

‘பேச்சுக்காவது, இல்லை என்று மறுக்கிறானா இவன்?’ என்ற கோபம் வர,

“போடா!” என்றபடி, அவள் போனை கட் செய்திருக்க, அடுத்த நிமடம் குறுஞ்செய்தி அவனிடமிருந்து.

“எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு. ஒழுங்கா, என்னை டென்சன் பண்ணாம போட்டோவ அனுப்பிவை.” என்றபடி அவன் ஆப்லைன் சென்றுவிட, அவன்‌ சொன்னதை நிறைவேற்றியிருந்தாள்.

அதிகாலை முகூர்த்தம் என்பதால், பிரணிதா சீக்கிரமே எழுந்து விட்டிருந்தாள். அதன்பின் அவளிற்கு‌ ஓய்வென்பதே சிறிதும் இல்லை.

காலை உணவை கூட, திலகாதான் ஊட்டி விட்டிருந்தார், ஆனால் உணவினை‌ கொண்டு வந்தது பூர்வா. அதை பெரிதாய் மறுக்கவெல்லாம் இல்லை அவள்.

அவளது திருமணத்தில், பூர்வா தாயாய் முன்னின்று அத்தனையும் செய்திட, மறுப்பு ஏதும் சொல்லாமல், விருப்பத்துடனே அமைதியாய்‌ அதனை ஏற்றுக் கொண்டாள்.

முகூர்த்த நேரம் நெருங்கிட, ஒவ்வொரு மனதிலும் சந்தோசமும், பூரிப்பும். அதிலும் மாணிக்கத்தை கேட்கவும் வேண்டுமா? அன்று பதின் வயது‌ சிறுமியாய் இருந்தவளை கைபிடித்து அழைத்து வந்தவர், இன்று பருவ மங்கையாய் அவளை தாரை வார்க்க போகிறார்.

பெண்ணை அழைத்து வர ஐயர் அழைப்பு விடுத்திருக்க, லெவண்டர் வண்ண பட்டில் வெள்ளிஜரி இழையோட, பூரித்த‌ முகத்துடன் வந்தவளை கண்ட மாணிக்கத்தின் கண்கள் பனிந்துவிட்டது.

‘நம்ம பூக்குட்டிய, கல்யாண கோலத்துல பாக்குறதுக்கு இல்லாம போயிட்டியே பூவரசா?’ என அவரின் உள்ளம் அலறி துடித்துக் கொண்டிருந்த சமயம், பிரணி மாணிக்கத்தை‌ கண்டு அழகிய புன்னகையை சிந்திட, அவரது மனம்‌ நெகிழ்ந்துவிட்டது.

“மணிப்பா!” என்றவளின் அழைப்பில்,

“பூக்குட்டி!” என்றவாறு அவளருகே விரைந்திட, அவரது போராட்டத்தை உணர்ந்தாளோ? என்னவோ? அவரை நகர விடாது, தனதருகேயே பிடித்து வைத்துக் கொண்டாள்.

“கண்ணை மூடி, கைகூப்பி தலைகுனிங்கோ!” என்ற ஐயரின் வார்த்தையில், கைகளை கூப்பி கொண்டவள், கண்களை மூடி,
‘பூ அப்பா! ஆசிர்வாதம் பண்ணுங்க’ என‌ மானசீகமாய் வேண்டிக் கொள்ள,

“கெட்டிமேளம்! கெட்டிமேளம்!” என்ற ஐயரின் வார்த்தைக்காக, காத்திருந்த வாத்திய மேளங்கள் முழங்கிட, அவள் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்து, தன்னில் சரிபாதியாக்கி கொண்டிருந்தான் ராகவன்.

தன் கழுத்துரசும் மூச்சுக்காற்றும், அவன் விரல்களின் உரசலும், பிரணிதாவிற்கு நடப்பதை உணர்த்திட, நன்றாகவே அவனை பார்த்தாள் அவள்.

அவளின் விழிகளில் தனது விழிகளை கலந்தவனின் இதழ்கள் அழகிய புன்னகையை சிந்திட, அவளது வதனங்களும் அந்த அழகிய புன்னகையை தத்தெடுத்துக் கொண்டது.

“கங்கிராட்ஸ் மிஸஸ்.ராகவன்!” அவன் குரல் குறும்பாய் ஒலித்திட,

“யூ டு மிஸ்டர்.பிரணிதா!” என்றவளின் குரலும் அவனிற்கு சளைக்கவில்லை. மாணிக்கம் மற்றும் பூர்வாவிடம் ஆசிர்வாதம் வாங்கி கொள்ள, உணர்வுகளின் பெருக்கில், மாணிக்கம் பிரணியை அணைத்து, அவள் தலைவருட, சுகமாய் அதை அனுபவித்து தோள் சாய்ந்து கொண்டவளின் விழிகள், பூர்வாவை நோக்க, அவரது விழிகளும்‌ கலங்கி போயிருக்க, சிறு புன்னகை ஒன்றை அவள் இதழ்கள் அழகாய் சிந்திட, பூர்வாவின் மனம் நிறைந்துப் போனது.

அதன்பின் நடந்தேறிய சடங்குகள் அனைத்துமே, ஒருவித பரவசத்துடனும், குதுகலுத்துடனுமே சென்றது. அடுத்தடுத்து மணமக்களுடன் போட்டோ எடுக்கும் நிகழ்வு நடந்துக் கொண்டிருக்க, மேடை ஏறியவனை கண்டு பிரணியின் உள்ளம் திடுக்கிட்டு தான் போனது.

வந்திருந்தது தமிழ்செல்வன், மஃப்டியில் விழாவில்‌ கலந்துக் கொள்ள வந்திருந்தவனின் விழிகள் அவளை கூர்ந்திட, அதில் பயந்தவள் ராகவனின் கையை இறுகப் பற்றியிருந்தாள்.

அந்நாள் வரை அவள் மறந்திருந்த, இல்லை, இல்லை ராகவனால் மறக்க வைக்கப்பட்டிருந்த சுசியின் நிகழ்வுகள் மேலெழுந்ததில் விதிர்த்து தான் போனாள். அதுவரை அவள் மறந்திருந்த அந்த கடிதம், நினைவு வர ஒருவித பயத்துடன் ராகவனை பார்க்க, அவனோ‌ தமிழ்ச்செல்வனிடம் பேசிக் கொண்டிருந்தான்.

இருவருக்கும் திருமண வாழ்த்தை தெரிவித்தவன், இறுதியில் ராகவனின் காதில் மெல்ல முணுமுணுக்க, அவன் முகம் இறுகிப் போனது. தலையசைத்து அவன் கூறியதை ஆமோதித்திருந்தான்.

மேடையை விட்டு அவன்‌ கீழிறங்கும்‌ வரையிலும், பிரணயின் பயம் தெளியவில்லை. அவன் நகர்ந்தது, வேகமாய் ராகவனின் திரும்பியவள்,

“ராகவா!” என்றழைத்திட,

“இங்க வச்சு எதுவும் பேசாத, இது நமக்கான நாள், தேவையில்லாம வேற‌ எதையும் பேசிடாத.” என பல்லைக் கடித்தவனின் செயலில் அதிர்ந்துப் போனவள், அமைதியாகியிருந்தாள்.

மதிய உணவினை முடித்துக் கொண்டு, மணமக்கள் வீடு திரும்பியிருந்தனர். அங்கு செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தது.

சற்றே ஓய்வாய் அனைவரும் அமர்ந்திருக்க,
“யுகா, ரூம்க்கு வா இன்னும் கொஞ்ச நேரத்துல இன்ஸ்பெக்டர் வந்திடுவாரு.” என அவன் அழைத்ததில் வியர்த்துக் போனவள்,

“எதுக்கு? வர்றாரு?” என்றவளின் கேள்வியை மொத்த குடும்பம் கண்ணில் தாங்கி நிற்க,

“சுசி கேஸ் விசயமா விசாரிக்க வர்றாரு.” என்றதும் பயத்தில் படபடத்துப் போனாள்‌ அவள்.

“ராகவ், இன்னைக்குதான் வரணுமா?” கவிதா ஆட்சேபிக்க,

“விசாரணைக்கு எப்ப கூப்பிட்டாலும் போகணும்மா, இன்னைக்கு எங்களுக்கு கல்யாணம்னு தான், அவரு ஸ்டேசன் வர சொல்லாமா இங்க வர்றேன்னு சொல்லிருக்காரு.” என்றவன்,

“யுகா!” என்றழைத்திட,

“இல்லை, இல்லை நான் வரலை.” என மறுத்தவளிற்கு பயம் வந்துவிட்டது.

“விசராணைக்கு நீ கண்டிப்பா இருக்கனும் யுகா.”

“இல்லை…இல்லை..” என்றவள் வியரத்துப் போயிருக்க,

“பிரணி, பிரணி ஏன் இவ்வளோ ஸ்வொட் ஆகுது உனக்கு.” ஆகாஷ் அவளருகே வந்து கைப்பிடிக்க, மாணிக்கமும் அவள் நிலை கண்டு அருகே வந்திருந்தார்.

“மணிப்பா! மணிப்பா!” என்றவளின் குரல் நடுங்கிட,

“ஒண்ணும் இல்லைடா, எதுக்கு பயம் உனக்கு? மணிப்பா இருக்கேன்ல.” என்றவர், அவனிடம்

“ராகவ் எதாயிருந்தாலும் இங்க கீழேயே விசாரிக்கட்டும். பயப்படுறா பாரு.” என, அதனை பிடித்துக் கொண்டவள்,

“என்கூடவே இருங்க மணிப்பா. நான் மேலே போகலை.” என்றவளிற்கு எங்கே மேலே தனியாக சென்றால், ராகவன் அந்த லெட்டரை கொடுத்துவிடுவானோ என்ற பயம், அதோடு தன்னையறியாமல் எங்கே பயத்தில் உளறிவிடுவோமோ என்ற பயம் அவளை அழுத்திட,

கீழே கூட்டமாய் இருந்தால், எளிதில் பேச்சை‌ திசை திருப்பிவிடலாம், மற்றும் குடும்பத்தினரும்‌ அதிகம் தன்னை கேள்வி கேட்க அனுமதிக்கமாட்டார்கள் என்ற எண்ணம் வர, அதை கெட்டியாய் பிடித்துக் கொண்டாள்.

அவளின் எண்ணத்தை அறிந்தவன்,
“யுகா இப்புடியா பயப்படுறது!” என்றபடி அவளை தன் கைவளைவுக்குள் கொண்டுவந்து, சற்றே நகர்ந்திருந்தவன்,

“என்னடி ட்ராமா பண்ணிட்டு இருக்க? அந்த இன்ஸ்பெக்டருக்கு ஐஸ்வர்யா பத்தி தெரிஞ்சுதான் வர்றாரு, தேவையில்லாம எதையாவது லூசுதனமா பண்ணி பிரச்சனையை பெருசாக்காதே, மரியாதையா மேல‌ வந்திடு, இல்லைன்னா எல்லாரு முன்னாடியும் சுசியை பத்தின உண்மைய சொல்லு வேண்டி வரும்.” என மிரட்டினால் தான் வழிக்கு வருவாள், என்பதை அறிந்து அப்பட்டமாய் அவளை மிரட்டிட, கலங்கிப் போனவள் மேலே வர சம்மதித்து அவனுடன் சென்றிருந்தாள்.
 
Top Bottom