கண்ணாமூச்சி 5

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 35

Member
Nov 21, 2019
34
91
18
Dindigul
கண்ணாமூச்சி 5:

அந்த நள்ளிரவில், கண்களில் கண்ணீர்‌ வடிய, வெடித்துக் கொண்டு வந்த அழுகையை‌ கட்டுப்படுத்தியபடி அவள்‌ அமர்ந்திருக்க,

“பிரணி, காம்‌டவுன்‌ ஜஸ்ட் விசாரணை தான் உன்னோட‌ கார்டியனுக்கு சொல்லியாச்சு.” வார்டன் அவளை‌ சமாதானம்‌ செய்திட,

உயிரற்ற உடலாய் அவள்‌ கண்முன் விழுந்து கிடந்த, சுசியே அவள்‌ மணக்கண்ணில் விழ, காதை இறுக‌ பொத்தி “சுசி!” என‌ கத்தியிருந்தாள்.

“பிரணிதா, பிரணிதா இங்கே பாரு” வார்டன் அவளை‌ சமாதானம் செய்ய முயல, அங்கிருந்த‌ லேடி கான்ஸ்டபிள் கூட அவளை சமாதானம் செய்திருந்தனர்.

“இந்தம்மா , தண்ணிய குடி.‌கொஞ்சம் அமைதியாகு” தண்ணீர் டம்ளர் அவளிடம் நீட்டப்பட, அவள் கைகள் நடுங்கியதில் இரக்கமுற்ற‌ வார்டன்‌ அவளிற்கு புகட்டியிருந்தார்.

“ஐயோ சுசி!” ஒவ்வொரு நொடியும் அவளது மனம் அலறி துடித்தது. அவள் உடல், அவள் கைகளில், நெற்றியில் வழிந்த ரத்தம், ஒவ்வொன்றாய் தோன்றி தோன்றி பிரணியின்‌ உடலை உறைய வைத்துக் கொண்டிருந்தது.

‘இப்புடி உன்னை சாக விட்டுடேனே சுசி’ அவள் மனமே அவளை குற்றவாளி‌ கூண்டில் ஏற்றியது.

“அய்யோ! அய்யோ” என‌ முகத்தில் அறைந்து கொண்டு அவள் அலற, அவளை அங்கே கட்டுப்படுத்த முடியவில்லை ஒருவராலும்.

“மிஸ்.பிரணிதா!” என்ற ஒற்றை சத்தத்தில், அவள் கைகளை இறக்கி பார்க்க, அவளேதிரே நின்றிருந்தான்
தமிழ்ச்செல்வன் இன்ஸ்பெக்டர் ஆஃப் கோயம்புத்தூர்.

“அழுகுறதா இருந்தா, சத்தமில்லா‌ம அழணும், இங்க உங்களை சமாதானப்படுத்துற‌ வேலை யாருக்கும் கொடுக்கலை. உங்க அழுகை‌ எங்க வேலைக்கு இடைஞ்சலா இருக்கு. அழணும்னா வெளியே போய் நின்னு‌ நல்லா கத்தி அழுதுட்டு வாங்க, ஒரு சத்தம் கூட இனி வரக் கூடாது, புரிஞ்சதா?” என்றவனின் அதட்டலில், வேகமாய் பிரணியின் தலை ஆடிற்று.

கண்ணீர் வழிய பரிதவித்த முகத்துடன் அமர்ந்திருந்தவளை கண்டு யாருக்கென்றாலும் இரக்கம் வரும்! ஆனால் அவனிற்கு வரவில்லை. அவனது சர்வீஸில் இதைப் போல் எத்தனை பார்த்திருப்பான்.‌ ஏன்? கொலையை செய்துவிட்டு அதை‌ மறைக்க எத்தனை பேர் இப்படி நடகாமாடி இருப்பார்கள்.

“ஏட்டு, அந்த பொண்ணோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் எப்போ கிடைக்கும்னு கேளுங்க. அந்த ரூமை சீல் பண்ணியாச்சு தானோ, விசாரணை முடியிற‌ வரைக்கும், அந்த ரூம்ல இருந்து எந்தவிதமான பொருளும் வெளியப் போக கூடாது.” என அங்கிருப்பவருக்கு ஆணையிட்டவன்,

“மிஸ்.பிரணிதா, உங்களோட முக்கியமான் டாக்யூமெண்ட்ஸ் எதுவும் இருக்கா? சர்ட்டிபிகேட் மாதிரி.‌‌வேலை சம்மந்தப்பட்ட பேப்பர்ஸ்?”

“ப்ரொஜெக்ட்‌ சம்பந்தமா பைல் இருக்கு சார்.”

“ஓகே.‌ அப்போ உங்களோட ஒரு லேடி கான்ஸ்டபிள் வருவாங்க.‌ நாளைக்கு காலையில போய் எடுத்துக்கோங்க.”

“இல்…இல்லை இல்லை‌‌ வேண்டாம்.‌நான் அந்த ரூம்க்கு போகலை.‌ நான் போக மாட்டேன்…‌சுசி….சுசி” என‌ மீண்டும் அவள் தேம்பிட,

“கொஞ்ச நேரத்தில‌ உங்களை விசாரணைக்கு கூப்பிடுவேன். தயாரா இருங்க” என்றவன் நகர,

“சார், அதான் அந்த பொண்ணு தெளிவா லெட்டர் எழுதியிருக்கே சார், கடன் தொல்லை அதோடு உடம்பு முடியாததால இப்புடி ஒரு முடிவு.‌ என் சாவுக்கு வேற யாரும் சம்பந்தமில்லைன்னு. அப்பறம் ஏன் சார்? எங்களை இப்புடி உட்கார வச்சிருக்கீங்க.” வார்டன் கேட்டிட,

“அந்த லெட்டரை ஏன் நீங்க எழுதியிருக்க கூடாது?” தமிழ்ச்செல்வனின் கேள்வியில் அரண்டு போனார் அவர்.

“அந்த லெட்டர்ல‌ இருந்தது அந்தப்‌ பொண்ணோட‌ கையெழுத்து தான் தெளிவாகிடுச்சே சார்.”

“சரி, நீங்களே ஏன் அந்த பொண்ணை‌ தற்கொலைக்கு தூண்டி, அப்படி ஒரு லெட்டரை எழுத வச்சிருக்க கூடாது??”

“சார்…சார் நான் ஏன்‌ அப்புடி பண்ணனும்?”

“ரீசன்‌ தானே நிறைய இருக்கலாம். உங்களுக்கும் அந்த பொண்ணுக்கும்
ஏதாவது சண்டையா இருந்திருக்கலாம். இல்ல உங்களுக்கு அந்த பொண்ணை பிடிக்காமல் போய் இருக்கலாம். அதுவும் இல்லைனா நீங்க ஏதாவது தப்பு செஞ்சு அது அந்த பொண்ணு தெரிஞ்சிருந்திருக்கலாம். இப்புடி‌ நிறைய‌ காரணங்களை‌ சொல்லிட்டே போகலாம்.”

“சார்….சார்‌ அப்புடி அபாண்டமா‌ பழி போடாதீங்க சார். கிட்டதட்ட பத்து வருசமா அந்த பி.ஜியே நடத்திட்டு இருக்கோம்‌ சார்.”

“அது‌ உண்மையா, பொய்யான்னு நாங்க விசாரிச்சிக்கிறோம்.‌ வெறும் ஒரு லெட்டரை வச்சு எப்புடி நாங்க அதை தற்கொலைன்னு நம்புறது, எல்லா கண்ணோட்டத்திலயும் நாங்க பாப்போம்.‌ இதுல மெயின் விக்டிம் மிஸ்.பிரணிதா தான், அடுத்தது நீங்களும் ஒரு விக்டிம் தான். சோ, எங்க விசாரணைக்கு நீங்க ஒத்துழைச்சா தான் நல்லது.” என்றுவிட்டு அவன் சென்றுவிட, பயத்தில் படபடத்த நெஞ்சத்தை அவள் அடக்கி கொண்டு அமர்ந்திருந்த நொடி,

பிரணி!”

அந்த குரலில் இதுவரை இறுக அமர்ந்திருந்தவளின் உடல் லேசாய் அதிர்ந்தது. கண்ணீர் நிறைந்த விழிகளோடு திரும்பிப் பார்க்க, பதட்டத்துடன் வந்துக் கொண்டிருந்தார் மாணிக்கம்.

“மணிப்பா!” அவள் உதடுகள் மெல்ல முணுமுணுத்திட, அழுகை பெருகியது.

“பிரணிம்மா, ஒன்னும் இல்லைடா. நான் வந்துட்டேன்ல உனக்கும் ஒண்ணுமில்லை. சரியா” அவளது கண்ணீரை துடைத்துவிட்ட படி அவர் கூறிட, அடுத்த சில மணிதுளிகளில் வந்திருந்தான் ராகவன்.

அவனை கண்டதும், அதுவரை அவள் அடக்கி வைத்திருந்த அழுகை பீறிக்கொண்டு வர,
“ராகவா!!” என்ற அலறலுடன், மின்னலாய் சுழன்று அவனிடம் தஞ்சமடைந்திருந்தாள்.

தன்னை இறுக்கி அணைத்தவளின், உடலில் தோன்றிய நடுக்கத்தை கண்டுக் கொண்டு, பதிலுக்கு இறுக்கி அணைத்தவன்,

“ஒண்ணுமில்லடி, என்னத்துக்கு நடுங்குறவ? நான் தான் இருக்கேன்ல.”

“சுசி….சுசி….அவ முகமெல்லாம் இரத்தம், என் கண்ணு முன்னாடியே…..நான்…நான்” திக்கி திணறி நடுங்கியவளை, இன்னும் தனக்குள் இறுக்கி கொண்டவன்,

“சரி, சரி ரிலாக்ஸ், ரிலாக்ஸ் ஒண்ணுமில்லை பாத்துக்கலாம்.”அவள் தலையை வருடி சமாதானப்படுத்த முயல,

“சார்!” தமிழ்ச்செல்வனின் அழுத்தமான குரலில் ராகவன் திரும்பினான்.

“எதுனாலும், இங்க வந்து பேசுங்க. தேவையில்லாத டிராமா இங்க வேண்டாம்.” என்றவனின் குரலில் இறுகிப் போனவன், அவன் காட்டிய இடத்திற்கு வந்தான்.

“தென்னைவனம் கொப்பரை மில்லோட ஓன…” என்றவனை, இடைமறித்து தமிழ்செல்வன்,

“தெரியும் சார், உட்காருங்க.” அவன் முன்னிருந்த இருக்கைகளை காட்டிட, மறுக்காது அமர்ந்திருந்தான்.

“ம்ம் சொல்லுங்க”

“நாங்க இவளோட கார்டியன்.”

“கார்டியன்னா? என்ன உறவு?”

“என்னோட மாமா பொண்ணு, அத்தோடு என்னோடே வருங்கால மனைவி.”

“ஓஹ்! ஓகே, அப்போ இவரு?” மாணிக்கத்தை அவன் சுட்டிக்காட்ட,

“நான்….” என் மாணிக்கம் வாய் திறக்க,

“அப்பா!” என்ற பிரணியின் மெல்லிய குரலில், உலகம் ஒரு நொடி நின்றுதான் போனது.

“சாரி, கேட்கலை.”

“அப்பா….என்னோட மணிப்பா” என்றவளின் வார்த்தை இம்முறை அழுத்தமாகவே வந்தது.

“வாட், அப்பாவா? அப்பறம் ஏன் பி.ஜில..?” என்றவன் இழுக்க,

“சம் பர்சனல் ரீசன், சில மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்.”

“என்னவிதமான ரீசன்?”

“அதை சொல்லணும்னு அவசியம் இல்லை சார், என்னோட பர்சனல் ஃபேமிலி மேட்டர், அதை சொல்ல எனக்கு விருப்பமில்லை.”

“ஓகே, உங்க குடும்ப பிரச்சனை எனக்கு தேவையில்லாதது. சொல்லுங்க, என்ன நடந்தது? நீங்க எப்போ பாடியை பாத்தீங்க? கடைசியா அந்த ரூம்ல என்ன நடந்தது?”

பிரணியின் விரல்கள் தன்னிச்சையாக சுருங்கின. அவள் நினைவில் மீண்டும் சில நிமிடங்களுக்கு முன் நடந்த அனைத்தும் மின்னியது.

சுசிலாவின் அழுகை… அவள் கெஞ்சிய விதம்… “யாருக்கிட்டயும் சொல்லிடாதீங்கக்கா…” என்ற நடுங்கிய குரல்.

நடுங்கிய அவளது விரல்களை இறுகப் பற்றிக் கொண்டு ராகவன்,
“பயப்படாத யுகா, சொல்லு.”

“நேத்து..நேத்து நைட்டு என்கிட்ட நல்லா பேசிட்டுத்தான் படுத்தா…” மெல்ல நினைவுகளை மீட்டினாள்.

அடைக்காப்பது போல் எந்நேரமும் பிரணிதாவின் பின்னரே சுற்றிக் கொண்டிருந்தவளின், நிலையை உணர்ந்து அவளிற்கு ஆதரவாய் நின்றாள் பிரணி. என்னதான் பிரணிதா ஆறுதல் சொன்னாலும், பெரும் பயம் சுசியை ஆட்டிப்படைத்தது உண்மை.

‘எங்கே இந்த விசயம் வெளியே தெரிந்துவிடுமோ? அப்படி தெரிந்துவிட்டால், அவளது குடும்பத்தின் நிலைமை? அசிங்கப்பட்டல்லவா போவார்கள்.’ என்ற பயம் கொஞ்சகொஞ்சாய் அவளை நரகத்திற்கு தள்ளியது.

அன்றைய இரவு, சுசியை கொஞ்சமாய் தைரியம் கூறி தேற்றிவிட்டுத்தான் படுக்க வைத்தாள். இடையிடையே முழித்துப் பார்த்த போது கூட, உறக்கத்தில் இருப்பது போல் தான் தெரிந்தது.

திடீரென சிறிது நேரத்தில் பவர்கட் ஆகிவிட, எழுந்துவிட்டாள். அப்போதும் கூட,
“என்னக்கா பவர்கட்டா?” என சாதரணமாகத்தான் பேசினாள்.

“ஆமா, சுசி. வா கீழே போய் கேண்டில் எடுத்துட்டு வரலாம்.” என் அழைக்க,

“இல்லைக்கா, நான் வரலை நீங்க போய்ட்டுவாங்க.”

“ஷ்யூர், இருந்துப்பியா?”

“ம்ம்ம் அக்கா.” என அவள் புன்னகைக்க, அதில் நம்பிக்கையுற்றவள் சுசியை தனியே விட்டுவிட்டு அவள் மட்டும் கீழே சென்றிருந்தாள்.

செல்லும் அவளை பார்த்த சுசியின் உதடுகள் “சாரிக்கா!” என முணுமுணுத்தான்.

ஒரு ஐந்து நிமிடத்திலேயே மெழுகுவர்த்தியை எடுத்துக்கொண்டு அவள் வந்துவிட, சுசி இல்லை. பாத்ரூமில் தண்ணீர் விழும் சத்தம் கேட்டதில், அமைதியாகி விட்டாள்.

ஐந்து,பத்து நிமிடங்கள் பொறுமை காத்தவள், அதற்கு மேல் முடியாது
“சுசி!” என்றவாறு கதவினை தட்ட, தாழ் போடாத கதவு திறந்துக் கொண்டது.

இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. இவளின் அழைப்பிற்கு, எந்தவித பதிலும் இல்லாது போகவே,
“சுசி, சுசி!” என கத்தியவள், வேகமாய் மெழுகுவர்த்தியை எடுக்க செல்ல திரும்பிய வேளை கரண்ட் வந்துவிட,

“சுசி!” என்றபடி வேகமாய் திரும்பியவளின், விழிகள் நிலைக்குத்திப் போயின. கைகளில் இரத்தம் வடிந்துக் கொண்டிருக்க கீழே விழுந்தது கிடந்தாள் சுசிலா.

கை நரம்பினை அறுத்துக் கொண்டிருப்பாள் போலும், நெற்றியில் இருந்தும் இரத்தம் வழிந்துக் கொண்டிருந்தது, அருகிலிருந்த வாஸ்பேசனில் இரத்தம், தலையை அதில் மோதியிருக்கிறாள். பற்றாக்குறைக்கு அவள் கழுத்தை சுற்றி துப்பட்டா இறுக்கமாய் சுற்றப்பட்டிருந்தது.
ஆக, தெளிவாக அத்தனையையும் செய்திருந்தாள்.

விழிகளில் நீர் பெருக, நகர மறுத்த கால்களை வலுக்கட்டாயமாக நகர்த்தி அவளருகே சென்றவள், நடுங்கிய கரங்கள் கொண்டு, அவளை தொட்டு எழுப்பியவளுக்கு குரலே எழும்பவில்லை.

“சுசி…! சுசி….. அய்யோ! என்னடி பண்ணி வச்சிருக்க? அய்யோ எந்திரி சுசி….” என அவள் பெருங்குரலெடுத்துக் கத்திட, அந்த நிசப்த இரவில் அவள்து குரல் துல்லியமாய் அனைவருக்கும் கேட்டிருக்க, வார்டன் முதற்கொண்டு அனைவரும் வேகமாய் வந்தவர்கள், சுசியை கண்டு அதிர்ந்து தான் போயினர்.

வார்டன் வேகமாய் செயல்பட்டு, ஆம்புலன்ஸிற்கு அழைத்தவர், காவல்நிலையத்திலும் தகவல் கொடுத்திருந்தார்.

சுசியை தூக்கும் போதே அவளது உயிர் பிரிந்திருந்ததை கண்டுகொண்ட வார்ட்பாய்கள்,

“மேடம், உயிர் இல்லை. போலீஸூக்கு தகவல் சொல்லிடுங்க.” எனும்போது, தமிழ்ச்செல்வனும் அங்கு வந்திருந்தான், லேடி கான்ஸ்டபிள் சுசியின் கைகளில் இருந்து லெட்டரை எடுத்து பத்திரப்படுத்தி கொள்ள, மருத்தவமனைக்கு சென்றிருந்தனர்.

நடந்து முடிந்தவற்றை சொல்லி முடித்தவர், மறந்தும் சுசியை பற்றிய உண்மையை சொல்லவில்லை.

“அந்த பொண்ணு ஏன் வேலைக்கு போகாம இருந்தாங்கன்னு தெரியுமா?”தமிழ்ச்செல்வனின் கேள்வியில் நிமிர்ந்தமர்ந்தவள்,

“உடம்பு முடியலைன்னு சொன்னா, நான் ஹாஸ்பிட்டலுக்கு கூட கூப்பிட்டேன். இல்லை வேண்டாம்னு சொல்லிட்டா. ஆனா, அப்பறம் அன்னைக்கு வெளியே போயிருக்கா, ஹாஸ்பிட்டல் போயிருப்பான்னு நான் விட்டுடேன்.”

“வெளியே போனது உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“அங்க, வேலைப் பாக்குற ஆன்ட்டிகிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன்.”

“அவுங்க பேமிலியப் பத்தி சொல்லிருக்காங்களா?”

“ஏதோ, கிரமாம்னு தெரியும். அம்மாவும், தங்கச்சியும் மட்டும் இருக்காங்கன்னு சொல்லிருக்க, நிறைய கடன் அதை அடைக்க இங்க வேலைக்கு வந்ததா சொல்லியிருக்கா” சுசியின் விசயம் வெளியே வர விரும்பாதவள், அவள் லெட்டரில் எழுதியிருந்ததை இவள் தொடர ஆரம்பித்தாள்.

“அவுங்க நடவடிக்கைகள் ஏதும் வித்தியாசமா இருந்ததா?”

“நைட்ல அடிக்கடி தூங்காம இருந்திருக்கா, நான் கேட்டதுக்கு கூட வேலை அதிகம், அதால கால்வலி தூங்க முடியலைன்னு சொன்னா, நான் கூட அதுக்கு மருந்து வாங்கி கொடுத்தேன். சில நேரம் முழிச்சிருப்பா, ஆனா பல நேரம் நல்ல தூக்கத்துல தான் இருப்பா. அவ்வளவா பேச மாட்டா, அமைதிதான் எப்பவும்.”

“ஓஹ் சரி, அந்த பொண்ணு யார் மூலமா உங்க பி.ஜிக்கு வந்தாங்க. இங்க அவுங்களோட கார்டியன் யாரு.”
என வார்டன் லட்சுமியிடம் அடுத்து அவன் விசாரிக்க,

“இங்க, யாரோ தூரத்து சொந்தம்னு சொல்லி ஒருத்தங்க வந்து சேர்த்து விட்டுப் போனாங்க, அதுக்கப்பறம் நான் அவரை பார்த்ததில்லை சார்.”

“அந்த பொண்ணோட அம்மா வந்திருக்காங்களா இதுவரை?”

“இல்லை சார், அவுங்க வந்ததில்லை, இந்த பொண்ணும் அதிகமா ஊருக்கு போய் பார்த்ததில்லை.”

“வந்த புதுசுல எப்படி இருந்தாங்க?”

“அமைதிதான் சார், அதிகமா பேசாது அந்த பொண்ணு. அந்த பொண்ணு வந்தப்பறம், ஒரு குஜராத்தி பொண்ணு சுசியோட தங்கியிருந்தா பேரு ஐஸ்வர்யா.” என்றதும் பிரணிக்கு மூச்சு நின்றுவிட்டது.

“ஏதாவது மாற்றம் தெரிச்சிருக்கா, இந்த ஒரு வாரத்துல அந்த பொண்ணுகிட்ட.”

“இல்லை சார், எனக்கு தெரிஞ்ச அப்புடி எதுவும் நான் பாக்கலை.”

“ஓகே, நீங்க போகலாம். ஆனா, எப்போ விசாரணைக்கு கூப்பிட்டாலும் நீங்க கோஆப்ரேட் பண்ணனும். எனக்கு அந்த பொண்ணோட அம்மா நம்பர் வேணும்.” என வாங்கிகொண்டு அவரை அனுப்பிவைத்தவன்,

“மிஸ்.பிரணிதா, உங்க மொபைல் கான்ஸ்டபிள் கிட்ட இருக்கு வாங்கிக்கோங்க. இந்த கேஸ் முடியிற வரை, எப்பனாலும் உங்களை விசாரிக்க வருவோம். இப்போ நீங்க போகலாம்.” என,

ராகவன் அவள் அலைப்பேசியை வாங்கி கொண்டு வர, பிரணிதாவை அழைத்துக் கொண்டு கிளம்பியிருந்தனர்.

காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்ததும், விடியற்காலையின் மங்கலான குளிர் காற்று முகத்தில் அடித்தும், பிரணிதாவின் உடல் நடுக்கம் குறையவில்லை.

அவளது விரல்கள் இன்னும் ராகவனின் கரத்தை இறுகப் பற்றியபடியே இருந்தது.

“பிரணி கார்ல உட்காரு.” மெதுவாக அவன் கூற,

எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் ஏறி அமர்ந்தவள், ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டாள்.
கார் கிளம்பிய சில நிமிடங்களிலும் கூட, அவளது விழிகள் வெறித்தபடியே இருந்தது.

நேராக அவளை அழைத்துக்கொண்டு மாணிக்கத்தின் வீட்டிற்கு தான் சென்றனர்.

அங்கே, குடும்ப மொத்தமும் குழுமியிருந்தது. துரைக்கும் தகவல் கொடுக்கப்பட்டிருக்க, அவரும் வந்துக் கொண்டிருந்தார்.

“அண்ணே,அப்படியே வெளியே நில்லுங்க.” என குரல் குடுத்தப்படி கவிதா ஆரத்தி தட்டுடன் வந்தார்.

“யார் கண்ணு பட்டுச்சே, பிள்ளை போலீஸ்ஸ்டேசன் வரைக்கும் போய்ட்டு வந்துருக்கா, இதோட அவளுக்கு பிடிச்ச பீடை எல்லாம் ஒழியட்டும்.” என்றவாறு அதனை சுற்றிட, எதையும் வேண்டாம் என தடுத்திடும் மனநிலையில் பிரணிதா இல்லை.

அவள் விரல்கள், ராகவனை விட்டு இம்மியளவும் பிரியவில்லை. அவளை உள்ளே அழைத்துச் சென்றிருந்தனர்.

“அத்தை, கொஞ்சம் சூடா டீ கொண்டு வாங்க.” ராகவன் சொல்லிட, ரெடியாக அவர்களுக்கான டீயுடன் வெளியே வந்தார் விமலா.

பிரம்மை பிடித்தாற்போல் அமர்ந்திருந்தவளை கண்டு வேதனையுற்றனர் அங்கிருந்தவர்கள்.

“யுகா!” மென்மையாய் அழைத்தவன்,

“இதை கொஞ்சம் குடிம்மா” என டீயை அவளிடம் நீட்ட, தலையசைத்து மறுத்தாள்.

“கொஞ்சமட்டும் குடி யுகா”

“ப்ளீஸ், வேண்டாம்!” கண்களில் நீர் பெருக அவள் மறுத்த விதம்! மாணிக்கத்தை பலமாய் தாக்கிற்று.

“ராகவா, விட்டுடுப்பா. பாப்பா அழறா. இந்த தண்ணியமட்டுமாச்சும் கொஞ்சமா குடிடாம்மா.” என்க, அப்போதும் வாங்காமல் அவள் இருக்க,

அதனை தான் வாங்கி கொண்டவன், மெல்ல அவள் உதட்டினில் அழுத்தி,
“குடி யுகா!” என லேசாய் குரல் உயர்த்த,
அதற்கு அடிபணிந்திருந்தாள்.
கொஞ்சமாய் குடித்துவிட்டு அவனைப் பார்க்க, அதற்குமேல் அவளை வற்புறுத்தாது விட்டுவிட்டான்.

நேரம் செல்ல செல்ல அவள் உடல்மொழியில் மாற்றம் ஏற்பட,
“வா ரூம் போகலாம்.” அவளை அழைத்துக் கொண்டு, அவளது அறைக்கே அழைத்து செல்ல, எதையும் உணரும் நிலையில் அவள் இல்லை.

“வாஷ்ரூம் போய்ட்டு வா, கதவு தாழ் போடாதே.” என்றபடி அவளை அனுப்பிவைக்க, தனது தேவைகளை முடித்தவள், முகத்தை கழுவு முயன்ற நேரம், இரத்தக்கறையுடன் சுசி அவள் முன் தோன்ற, பயந்துப் போனவள், வேகமாய் வெளியே வர, ராகவனை காணாது,

“ராகவா! ராகவா!” என கண்களை இறுக மூடி அலறிட,

“ஹேய், யுகா, இங்கதான்டி இருக்கேன்.” பக்கவாட்டு அலமாரியில் அவளிற்கான இரவு உடையை எடுத்துக் கொண்டிருந்தவன் இவளது கத்தலில் பயந்து இவளிடம் வந்திருந்தான்.

“பிரணி, பிரணி ஒண்ணுமில்ல, நான் இங்கதான் இருக்கேன்.”

“அங்க.. அங்கே சுசி..!” என பாத்ரூமை சுட்டி காட்ட, பயந்து விட்டாள் என நினைத்த ராகவன்.

“அங்க யாரும் இல்லடி, நீ இப்போ நம்ம வீட்டுல இருக்க, நல்லாப் பாரு உன்கூட நான் இருக்கேன். பயப்படாதே.” அவளை மெல்ல நகர்த்தி கட்டிலில் அமர வைத்தவன்,

“டிரஸ் மாத்திக்கோ பிரணி, இதோட படுக்க வேண்டாம்.”

“இல்லை, வேண்டாம். ப்ளீஸ் நான் இதோடயே இருந்துக்கிறேன்.”

“சும்மா எல்லாத்துக்கும் ப்ளீஸ் சொல்லாதடி. இங்க உன்னையும் என்னையும் தவிர யாருமில்லை.” என லேசாக அவன் அதட்டல் போட, வேலை செய்தது அவளிடம். உடையை வாங்கி கொண்டு மீண்டும் பாத்ரூம் நோக்கி நகர,

“அங்கே வேண்டாம். இங்கயே மாத்து.” என்றவனை திகைத்து அவள் நோக்க,

“அந்த கார்னர்ல போய் மாத்து. நான் வெளிய நிக்கிறேன். கதவை லாக் பண்ணாதே. அஞ்சு நிமிசம் தான் டைம். அதுக்குமேல போச்சுன்னு, நான் உள்ள வந்திருப்பேன்.” என்றபடி அவன் வெளியேற, வேகவேகமாய் உடையை மாற்றியவள், கதவை திறந்திட, இரண்டு நிமிடத்தில் வந்தவளை கண்டு இதழ்கடித்து சிரித்தவன்,

“அவ்ளோ பயமா? நான் வந்திடுவேன்னு.” என, தலையை குனிந்து கொண்டாள்.

“நான் வந்தா தப்பா பிரணி!” அவள் முகத்தை நிமிர்த்தியவாறு
மென்மையாய் அவன் குரல், அவளை வசியம் செய்ய.

“எனக்கு தூங்கனும்!” என்றபடி அவள் நகர்ந்து விட,

“சரி தூங்கு” அவள் படுப்பதற்கு ஏதுவாய் வசதி செய்தவன், அவளருகே அமர்ந்து மெல்ல நெற்றியை வருடி விட, அவனின் அருகாமையில் மெல்ல இமைகள் மூடிக் கொண்டது அவளிற்கு.



















 

Author: STN - 35
Article Title: கண்ணாமூச்சி 5
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.