• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கண்ணாமூச்சி - 7

Vishakini

Moderator
Staff member

கண்ணாமூச்சி 7:

துரையின் குடும்பத்தினர் மேலும் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு கிளம்பியிருந்தனர். ஆகாஷிற்கு பிரணியை விட்டு செல்ல மனமே இல்லை. அலுவலகத்தில் விடுமுறை எடுத்துக் கொண்டு வா என ஒரே அடம்.

அவனை சமாளித்து அனுப்புவதற்குள் ராகவன் தான் ஒருவழி ஆகிப்போனான்.
துரை கூட வேறு பி.ஜிக்கு மாறிக்‌ கொள்கிறாயா என‌ கேட்டு ராகவனின் முறைப்பை பெற்றுக் கொண்டது தான் மிச்சம்.

துரைக்கும் அதில் விருப்பமில்லை தான், இப்போது தான் ஒரு பிரச்சினையை சந்தித்து வந்திருக்கிறாள், மீண்டும் பி.ஜிக்கு மாற்றுவதில் அவருக்கு இஷ்டமில்லை, இருந்தும் அவளது விருப்பத்தை கேட்பதற்காக அவர் அப்படி கேட்க,

“இனி, பிரணிதாவ எங்கயும் அனுப்புற‌ எண்ணம் இங்க யாருக்கும் இல்லை சித்தப்பா, ஏன் அவளுக்கே அதில இஷ்டமில்லை தான்.” என்றவன்,

“அப்புடித்தானே பிரணி!” என்றவனின் முறைப்பே, அப்படித்தான் நீ சொல்லி ஆக வேண்டும் என உணர்த்திட, அதில் மெல்லிய முகச் சிணங்கத்துடன் ஆம் என ஒத்துக் கொண்டிருந்தாள், இல்லை இல்லை ஒத்துக் கொள்ள வைக்கப்பட்டிருந்தாள்.

அவர்கள் கிளம்பிய அடுத்த நொடி, பிரணி அவள் கூட்டுக்குள் மீண்டும் அடைந்துக் கொண்டாள். அவளை இப்போதைக்கு தொந்தரவு செய்ய வேண்டாமென கூறிவிட்டு, ராகவனும் மாணிக்கத்தை அழைத்துக் கொண்டு மில்லிற்கு சென்றிருந்தான்.

மெல்ல மெல்ல சுசியின் விசயத்தில் இருந்து விடுபட முயன்றுக் கொண்டிருந்தாள் பிரணிதா, ஒருவாரக் காலமாக அலுவலகத்திற்கும் செல்லவில்லை, இவள் நிலை அறிந்து‌ இரண்டு நாட்கள் விடுமுறை‌ கொடுத்தவர்கள், ஒர்க் ப்ரம்‌‌ ஹோம்‌ போட்டுக் கொள்ள‌ சொல்லி விட்டார்கள்.

முற்றும் முழுதாக பயத்தில் இருந்து வெளிவந்து விட்டாளா? என கேட்டாள் இல்லைதான். துரையின் குடும்பம் கிளம்பிய தினம் அன்று, இரவில் தனியாக உறங்குவதை நினைத்து கலங்கி கொண்டிருந்தவளுக்கு, அதைப்போக்கும் விதமாய் வந்தனர் நிரஞ்சனும், யாழினியும்.‌

இரண்டு நாட்களாக ஆகாஷீம், ஷர்மியும் அவளுடன் இ
உறங்குவதை கண்டவர்கள், அவர்கள் சென்றதும் அந்த இடத்தை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். அவர்களை‌ கண்டவள்,வா என்று அழைக்கவும் இல்லை, போ என்று துரத்தவும் இல்லை. ஆனால் அதை எல்லாம் அவர்கள் கண்டுக் கொண்டதாகவே தெரியவில்லை.

“அக்கா, யாழி கட்டில் ஓரத்திலே படுக்கட்டும், நீங்க நடுவுல படுத்துக்கோங்க, ஓரத்துல நான் படுத்துக்கிறேன். நீங்க படுத்தா கீழே விழுந்திடுவீங்க.” என்றவனை கண்டு சிரிப்பு வந்தது.

“நீ விழ மாட்டியோ?”

“இல்லை நான் பெரிய பையன் கீழே விழ மாட்டேன்.” என, அவனின் போக்கிற்கே விட்டுவிட்டாள்.

ராகவன் சொன்னது போல், அவளின் மறுப்பை எல்லாம் பொருட்படுத்தாது அவளை அழைத்துக் கொண்டு தான் பி.ஜி சென்றான், அவளது பொருட்களை எடுப்பதற்கு. அவள் எவ்வளவு‌ மறுத்தும், வீம்பு பிடித்தும் கூட ராகவனின் பிடிவாதத்திற்கு முன்பு அது ஒன்றும் இல்லாமல் தான் போனது.

அறையின் உள்ளே நுழையும்போதே, அவள் உடல் நடுங்கிற்று. சுசியின் குரல் அவளுக்கு அருகாமையிலேயே கேட்பது போல் பிரம்மை எல்லாம் ஏற்பட்டது. உள்ளே சென்று வெளிவருவதற்குள் செத்து பிழைத்தாள் என்றால் தகும்.

அவள் படும் கஷ்டங்களை எல்லாம் கண்டு, ராகவனிற்கு வருத்தமாக தான் இருந்தது, இருந்தும் அவள் இதில் இருந்து வெளிவர வேண்டும் என்பதற்காக பிடிவாதமாய் நின்றுவிட, அதில் வருத்தம் கொண்டவள், இரண்டு நாட்களாய் அவனிடம் பேசாமல் முகத்தை திருப்பி கொள்ள, ராகவனும் கண்டுக் கொள்ளவில்லை.

வழக்கம்போல் தனது வேலைகளை பார்க்க துவங்கினாள் பிரணிதா. பிள்ளைகள் இருவரும்‌ பள்ளி சென்றிருக்க, ஆண்கள் இருவரும் பேக்டரிக்கு சென்றிருந்தனர்.‌ ஆக, வீட்டினில் பெண்கள் மட்டுமே.
என்னதான் அங்கே அவள் தங்க ஒத்துக் கொண்டாலும், பிள்ளைகள் மற்றும் ராகவனிடம் மட்டுமே அவளது பேச்சு வார்த்தைகள் எல்லாம்.‌ மாணிக்கத்தை அதிகம் சந்திக்கும் வாய்ப்பை தவிர்த்து விடுவாள், மீறி சந்தித்தாலும் அவளால் கண்ணீர் துளிப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை. மாணிக்கம் பேசினாலும் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லுபவள், முற்றிலுமாக தவிர்த்தது பெண்கள் மூவரையுமே.

ஆரம்பத்தில், வீட்டில் அவள் மட்டும் இருந்த போது, அவர்கள் பேச்சுக் கொடுக்க முயல, அறவே ஒதுங்கி கொண்டாள்.‌ அவர்கள் எவ்வளவே தான் அவளை பேச்சில் இழுக்க முயன்றாலும் நாசுக்காக விலகி கொள்பவள், அறையிலயே அடங்கி கொண்டாள்.

அவளது இந்த விலகலில் பெரும் பாதிப்பிற்குள்ளானது பூர்வா தான். எட்டி இருந்தவரை மனதை அடக்கி கொண்டு இருந்தவரால், இப்போது அப்படி முடியவில்லை.

கண்முன்னே அவர் ஆசை மகள் நடமாடும் போதெல்லாம், அவளை அள்ளி அணைக்க அவர் உள்ளம் ஏங்கும். ஆனால், பார்வையிலயே தூரம் நிறுத்துபவளை நெருங்க இயலாமல் போனது அவருக்கு.

ஆண்கள் அனைவரும் வெளியே சென்று விட, பிள்ளைகளும் இல்லாத தனிமையே பிரணிதாவிடம் அவர் போக்க முயல, அதற்கு இடமளிக்கவில்லை அவள். இவர் இருக்கும் இடத்தில் கூட நிற்க மாட்டாள் மகள்.

அவளிடம் நெருங்கி முயலும் ஒவ்வொரு நிமிடமும், முடியாது போக உள்ளுக்குள் அந்த வேதனையே அரிக்க ஆரம்பித்திருந்தது அவரை.‌ இன்னும்‌ எத்தனை வருடங்களுக்கு தான் அவருக்கு இந்த தண்டனையோ? பாவமன்னிப்பு கேட்க இவர் தயாராக இருக்க, கொடுக்க அவளிற்கு மனமில்லை.

வேலைகள் அவளை இழுத்துக் கொள்ள, அதில் மூழ்கி விட்டாள். பூர்வாவின் பார்வை நொடிக்கொருமுறை மாடியை தொட்டு மீண்டது.‌ மதிய உணவிற்கான நேரம் ஆகிவிட்டிருக்க, இன்னும் கீழிறங்கி வராத மகளை எண்ணி கவலை கொண்டவர், இதுவரை ராகவன்‌ மூலம் அவளிற்கு தகவல் சொல்லுபவர், இன்றே தைரியத்தை வரவழைத்து கொண்டு அவரே சென்றார்.

கதவு தட்டும் சத்தத்தில் திரும்பியவள் திகைத்து தான் போனாள் பூர்வாவை கண்டு. நிச்சயம் அவரை எதிர்பார்க்கவில்லை.

“சாப்பிட வா பிரணி” தயக்கமாய் அவர்‌ அழைக்க, எதுவும் பேசாமல் பட்டென்று‌ திரும்பிக் கொண்டவளை‌ கண்டு முகம் கசங்கிற்று அவருக்கு.‌ அவர் நெருங்க முயலும் போதெல்லாம், அவளின் இந்த அலட்சியம் அவரை கூறுபோட்டு விடும்.

இன்றும் அவளின்‌ அலட்சியம் அவரை தாக்கிட, “ உன்னைத்தான் பிரணிதா, சாப்பிட வா!” மீண்டும் சற்று குரலை உயர்த்தி அவர் அழைத்திட,

“ப்ச்!” என்ற சத்தத்துடன் முகம்‌ திருப்பியவள், அவள் வேலையை‌ பார்க்க, பூர்வாவும் நகராது நிற்க, எப்போதும் தான் இப்படி நடந்துக் கொண்டால், அடுத்த நிமிடம் விலகி செல்பவர், இன்று அப்படி போகாது இருக்க, பிரணிதா மெல்ல திரும்பி‌ பார்க்க, ஒருவித பிடிவாதம் தெரிந்தது அவரிடம்.

‘என்ன இது புதுசா?’ புருவச்சுழிப்புடன் அவரை பார்க்க, அவரும் சளைக்காமல் பதில் பார்வை கொடுக்க, அவளிற்கு தான் எரிச்சலாகிப் போனது.

பூர்வாவும் இன்று முடிவுடன் தான் இருந்தார்போலும்.‌ ‘எத்தனை நாட்கள் தான்‌ இனி இப்புடி அவரை தள்ளி வைப்பாள்?’ என்ற எண்ணம்‌ அவரிடம்‌ நொடியில் தோன்றிவிட, ஒருவித முடிவுடன் தான் நின்றிருந்தார்.

ஆனால், அவருக்கு தெரியாதது உணவு உண்ண கீழே‌‌ செல்ல விரும்பமின்றி, பூர்வாவை பார்க்க விருப்பமின்றி, உணவை ஆர்டர் போட்டு விட்டிருந்தாள் என்று.

ராகவன் இருந்திருந்தால், அவள் கீழே தான் சென்றிருப்பாள். மேலே அவள் மட்டும் உண்ண எல்லாம் அனுமதிக்க மாட்டான்.

சாப்பாடு ஆர்டர் வந்திருப்பதாக செக்யூரிட்டியிடம் இருந்து தகவல் வர, பூர்வாவிற்கு ஒன்றும் புரியவில்லை. தான் ஏதும் ஆர்டர் செய்யவில்லையே, என கூற, ஆர்டர் கொண்டு வந்திருப்பவனிடம் தெரிவிக்கப்பட, அவன் அடுத்த நிமிடம் பிரணியின் நம்பருக்கு அடித்து விட்டிருக்க, பிரணிதா வேகமாய் கீழிறங்கி சென்றாள்.

சிறிது நேரத்திலேயே உணவு பார்சலுடன் அவள் வர, அதனை‌ கண்ட பூர்வாவிற்கு‌ முகத்தில் அடித்தாற் போல் இருந்தது.

“வீட்டுல சாப்பாடு இருக்க, ஏன் வெளில ஆர்டர் போட்ட பிரணி நீ?” மனம் தாளாமல் பூர்வா அவளை‌ கேட்க, காதிலே வாங்காமல் போல் நகர ஆரம்பித்தவளின்‌ அலட்சியத்தை, எப்போதும் போல் இயல்பாய் அவரால் இன்று‌ கடந்திட முடியவில்லை.

“பிரணிதா நில்லு!” என்றவரின் உயர்ந்த குரலில், புருவச்சுழிப்புடன் அவள் திரும்ப,

“ஏன் ஆர்டர் போட்டன்னு கேட்டேன்?”
பதிலில்லை அவளிடம், அவரை‌ பார்க்க பிடிக்காதவள்‌ போல் வேறுபக்கம் திரும்பிக் கொள்ள, அதில் பெரும் அடிவாங்கியவர்,

“உன்னட்டதானேடி பேசுறேன்.‌ பதில் கூட சொல்ல முடியாத உனக்கு? அப்புடி என்ன பிடிவாதம் உனக்கு?” என்றவருக்கு பதில் அளிக்க விரும்பாதவள்‌ அங்கிருந்து நகர்த்திட,

“பிரணி” என்றவாறு‌ அவளது கையை பிடித்திழுத்து நிறுத்த முயல, அவர் விரல்கள்‌ கூட தீண்டாத வண்ணம் சட்டென விலகி நின்றவள், தீயாய் அவரை சுட்டெரித்திட,

“ஏன்? ஏன் நான் உன் கை பிடிக்க கூடாதா?” ஒருவித ஆவேசத்துடன் அவர்‌ கேட்க,

“பிடிக்க கூடாது!” தீர்க்கமாய் வந்தது அவள்‌குரல்.

“நான் உன்னை பெத்தவ‌ பிரணி! உன் அம்மாடி!”

“அதனால? பெத்துட்டா மட்டும் எல்லாம் அம்மா ஆகிட முடியுமா என்ன?” என்றவளிற்கு அதற்கு மேல் அவரிடம் பேச இஷ்டமில்லாமல் போக, அங்கிருந்து டைனிங் டேபிளில், அமர்ந்தே பார்சலை‌ பிரித்து உண்ண முயல, அவளது வார்த்தைகளில் முகம் கசங்கிவிட, ஒருவித பிடிவாதமும் கோபமும் எழ, வேகமாய் சென்று அவள் எடுத்த உணவினை தட்டி விட்டிருந்தவர், தட்டினை வைத்து அவர் சமைத்ததை பரிமாறியவர்,

“இதை தான் சாப்பிடனும் நீ!” என்றவரின் அதிகாரத்தில் ஆத்திரம்‌ வர பெற்றவள், தட்டை தூக்கி எறிந்திருந்தாள்.

“பிரணிதா!” என்றவரின் கத்தலில், கவிதாவும், விமாலாவும் வந்திருந்தனர்.

“அவ்ளோதான் உங்க லிமிட். சும்மா என்னை அதிகாரம் பண்ற‌ வேலை எல்லாம் இருக்க கூடாது, புரியுதா?” பதிலுக்கு கத்தியிருந்தாள்.

“எனக்கில்லாத உரிமையா?”

“இல்லை, என்மேல‌‌ துளியளவு கூட உங்களுக்கு உரிமை இல்லை. உங்க அதிகாரம், பாசம் அக்கறை எல்லாத்தையும் உங்க ரெண்டு பசங்களோட மட்டும் நிறுத்திக்கோங்க.‌”

“நீ சொன்னா அது உண்மையாகிடுமா பிரணி?” என்றவரை சிறிதும் மதிக்காது‌ அறைக்கு சென்றுவிட்டவளை‌ கண்டு கண்ணீர் தான் பெருகிற்று அவருக்கு.

கவிதா, விமாலா இருவராலும் அம்மா, பெண்ணை‌ கட்டுப்படுத்த முடியாமல் ‌போய்விட, ராகவனிற்கு அழைத்து விசயத்தை கூறியிருந்தனர்.

“ஏன்? பூர்வா இப்புடி” கவிதா கேட்க,

“என்னதான் அண்ணி நான் பண்றது, இப்புடி யாரோ மாதிரி தள்ளி இருக்க என்னால சுத்தமா முடியலையே”

“ ராகவ் தான்‌ சொன்னான்ல பிரணிய‌ தொந்தரவு பண்ண வோணாம்னு, அவ‌ இங்க‌‌ தங்கியிருக்கிறதே பெருசு‌‌ பூர்வா.”

“தெரியுது அண்ணி, ஆனா பெத்த மனசு‌ கேட்க மாட்டுதே.‌ என்ன பண்ண? இன்னும்‌‌ எத்தனை நாளைக்கு இப்புடி ஒதுக்கி வச்சு கொல்லப்போறான்னு‌‌ தெரியலை.”

“தப்பை எல்லாம் நம்ம மேல வச்சிக்கிட்டு, அவளை மாற‌ சொல்லுறது சரியில்லை பூர்வா அண்ணி.” விமலா பேச,

“தப்புதான் நானே ஒத்துக்கிறேன். இன்னும்‌ எத்தனை வருசத்துக்கு தான் எனக்கு இந்த தண்டனை?”

“ராகவ் சொன்ன‌ மாரி ஒண்ணு நம்ம அப்பவே அவளை இழுத்து பிடிச்சிருக்கனும். அதை விட்டுட்டு இப்போ‌ போய் அவளை இழுத்து பிடிச்சு‌ அது அவளுக்கு எரிச்சலை‌‌ தான் குடுக்கும் பூர்வா, அவ மனசுல இருக்கிற ரணம் ஆறுற வரை நம்ம ஒதுங்கி இருந்து தான் ஆகணும்.” என்ற‌ கவிதாவின் பேச்சை கேட்டபடி அவசரமாய் உள்ளே நுழைந்திருந்தான் ராகவன்.

அறைக்குள் இருந்தவளிற்கு அத்தனை கோபம், ஆத்திரம்‌ பொருட்களை அடித்து நொறுக்கும் ஆவேசம் எழ, தலையை இறுக்கிப் பிடித்து அமர்ந்தவளுக்கு காரணம் இன்றி அழுகை பெருகியது.‌ வெகுநேரம் கண்ணீரில் கரைந்தவளுக்கு, தீடிரென உடலில் ஏற்பட்ட அசெளகரியம் புரிந்திட, வேகமாய் தேதியை கண்டவள், அவளது பேக்கில் இருக்கும் ஏற்கனவே பிரிக்கப்பட்டிருந்த நாப்ஃகின்‌ கவரில், ஒன்றை எடுத்துக் கொண்டு, வேகமாய் அவள் பாத்ரூம்‌ செல்ல, அந்த கவரிலிருந்து‌ ஒரு லெட்டர் கீழே விழுந்திருந்தது. அவசரத்தில் கவனிக்காமல் போனவள், திரும்ப வரும்போது‌ அந்த லெட்டர் கண்ணில் பட்டுவிட, வேகமாய் அதனை எடுத்திருந்தாள்.

“பிரணி அக்காவிற்கு மட்டும்!” என்ற எழுத்துக்களில் அவள் இதயம்‌ ஒரு நொடி நின்று தான் போனது.

“சுசி!” என்றவாறு வேகமாய் அவள் அந்த கடித்தத்தை பிரித்திருந்தாள்.

“என்னை மன்னிச்சிடுங்க அக்கா! இது‌ தவிர வேற‌ என்ன சொல்ல நான்.‌ நான் இந்த உலகத்துல வாழவே தகுதியில்லாதவளா மாறிட்டேன்க்கா, என்மேலயே எனக்கு அருவெருப்பு வருது.

என் முடிவுல உங்களுக்கு கோபம் வரலாம். ஆனா, எனக்கு இந்த அசிங்கத்தோட வாழ விருப்பமில்லைக்கா. உங்ககிட்ட நிறைய சொல்லனும்னு தோணுதுக்கா, ஆனா‌ அப்புடி சொன்னா, என் முடிவுல இருந்து மாறிடுவேனோன்னு பயமா இருக்குக்கா.‌ கண்டிப்பா இதை‌ படிக்கிறப்போ, என்னை திட்டுவீங்க, அழுவீங்க.‌‌ எனக்கு வேற வழி தெரியலைக்கா.‌

என்னால் அந்த ஐஸ்வர்யா கூட போராட முடியலைக்கா? நான் இருந்தா தானே என்னை டார்ச்சர் பண்றா? அதான்‌ நானே‌ இல்லாம போய்ட்டா? அதை நினைச்சுதான் அப்புடி ஒரு‌ முடிவு.‌ ஆனா இதால உங்களுக்கு ஏதும் பாதிப்பு வந்திட நான் விட மாட்டேன்க்கா, இது உங்களுக்கு மட்டுமேயான லெட்டர், கடைசி வரை எனக்கு பண்ண சத்தியத்தை‌ காப்பாத்திடுங்‌க அக்கா அது போதும் எனக்கு. இந்த லெட்டர் போலீஸ் கையில‌ சிக்க கூடாதுன்னு தான்க்கா மறைச்சு வச்சேன்.

என்னை நினைச்சு துடிச்சிட்டு இருக்கிற உங்ககிட்ட பேசாம எப்புடிக்கா நான் போவேன்? ஆனா, என்னை நினைச்சு நீங்க கவலைப்படாதீங்க இந்த முடிவால எனக்கு சந்தோசமும் நிம்மதியும் கிடைக்கும் க்கா, இனி தினமும் அந்த ஐஸ்வர்யா என்னை ப்ளாக்மெயில் பண்ண முடியாது, அவ ஆசைக்கு என்னை இரையாக்க முடியாதில்லைல்லக்கா, அதையும்‌ மீறி என்னால‌ அந்த போதை இல்லாம இருக்க முடியலைக்கா, என்னை அதுக்கு அடிக்ட் ஆக்கிட்டா அவ…….!”

“யுகா!” என்றபடி வேகமாய் கதவை திறந்து வந்தவனை கண்டு அதிர்ந்துப் போய் படித்துக் கொண்டிருந்த லெட்டரை வேகமாய் துப்பட்டாவில் மறைந்திருந்தாள் பிரணிதா.

அன்னையின் அழைப்பில் வீட்டிற்கு வந்தவனிற்கு, சிதறி கிடந்தன உணவே பாதி கதையை சொல்லிருக்க, மீதியை அன்னை கூற‌ கேட்டவன், வேகமாய் அவளை காண வந்திருந்தான்.

அழுகையில் சிவந்த முகமும், கண்களில் கண்ணீருமாய், வேகமாய் தான் வந்ததும் எதையோ மறைந்தவளை நொடியில் கண்டுக் கொண்டவன்,

“என்னாச்சு உனக்கு?” என்றபடி அருகே வர, வேகமாய் இரண்டடிகள் பின் சென்றவள்,

“என்ன? என்னாச்சு ஒண்ணுமில்லையே?” அவனின் கண்ணில் சிக்காமல் அந்த கடிதத்தை மறைக்க அவள் போராட,

“அப்பறம் எதுக்கு இந்த அழுகை உனக்கு?”

“அது‌ கீழே அவுங்க அப்புடி‌ நடந்துக்கிட்டதும், எனக்கும்‌ கோபம் வந்திடுச்சு.”

“அதான்‌ தெரியுமா, சாப்பாட்டு தட்டை‌ தூக்கி எறிஞ்சிருக்கியே? பதிலுக்கு பதில் நீயும் தானே பண்ணிருக்க, அப்பறம் ஏன் இந்த அழுகை?”

“என்ன இப்போ? நான் அழக்கூட கூடாதா இந்த வீட்டுல. நீங்க மொதல வெளிய போங்க எனக்கு தூங்கனும்.” பயத்தில் அவள் உளறிட, அங்கிருந்த நாப்கின் அவன்‌‌ கண்ணில் பட்டுவிட,

“ப்ச், ப்ஃரீயட்ஸ்ஸா உனக்கு?”

“ஆமா”

“சரி‌‌ தூங்கு, வந்து கதவை லாக் பண்ணிக்கோ வா.” என்றபடி அவன்‌ செல்ல, அவளும் பின்னயே‌ சென்றவளிற்கு, அந்த கடிதத்தை ராகவன் பார்த்து விட கூடாது என்ற பதட்டம் அதிகரித்ததில், வியர்த்துக் போயிருந்தாள்.

அவளின் பதட்டத்திலே முழுதாய் கண்டுக் கொண்டிருந்தவன், சட்டென திரும்பி,

“என்ன மறைக்கிற நீ என்கிட்ட?” கேட்க,

அவனின் இந்த கேள்வியை எதிர்பாராதவள் திகைத்து,
“நா..நான்…எ..என்ன‌ மறைச்சேன்னு” திக்கி திணறி அவள் கூறும்போது சட்டென அவளை இடுப்போடு சேர்த்து வளைத்து பிடித்தவன் அவன் துப்பட்டாவில் மறைத்து வைத்திருந்ததை கைப்பற்றியிருந்தான்.

அவனின் செயலில் அதிர்ந்து போனவள் அடுத்த நிமிடம்,
“என்ன பண்றீங்க? குடுங்க குடுங்க அதை மொதல்ல, அது என்னோடது. யாரை கேட்டு அதை எடுத்தீங்க?” அதை அவன் பிரித்திடக்‌ கூடாதென அவனிடமிருந்து அதனை பறித்திட முயன்று, அவனை சராமரியாக அடித்து அதனை அவள் பிடுங்கிட முயல,

“யுகா!” என்றவனின்‌ அதட்டலில், நிதானம் வர பெற்றவள்,

“ப்ளீஸ் ப்ளீஸ் அதை என்னட்டயே கொடுத்திடுங்க. உங்களுக்கு புண்ணியமா போகும்.‌‌ இந்த லெட்டர் யாருக்கும் தெரியக்கூடாது. இது சுசி எனக்கு மட்டும் எழுதுனது.”என அவள்‌ பயத்தில் உளறி‌ கெஞ்சிட, நொடியில் மாறிய அவளது செய்கையில் அதிர்ந்துப் போனவன்,

“சுசின்னா? அந்த பொண்ணு சுசிலா எழுதினதா?” நொடியில் தன்னை கண்டு கொண்டவனை கண்டு பயத்தில் எச்சிலை கூட்டி விழுங்கினாள்‌ அவள்.

“சொல்லு? சொல்லுடி?” அவனது கர்ஜனையில் உடல் தூக்கி போட, ஆம் என தலையசைத்து ஒத்துக் கொண்டவளின் விழகள் கலங்கிப் போயின.

“உனக்கு மட்டும் ஏன் அவ லெட்டர்‌ எழுதனும்? அப்புடியே எழுதுனாலும், ஏன் யாருக்கும் இது தெரியக் கூடாது.‌ அப்புடி என்ன ரகசியம் இருக்கு இதுல?”

“என்னவோ‌ இருக்கு உங்களுக்கு என்ன? அந்த லெட்டரை படிக்க கூடாதுன்னா கூடாது தான்.‌புரியாத உனக்கு, குடு‌! குடு ராகவா அந்த லெட்டரை, அதை நீ படிக்க கூடாது. படிக்க விட மாட்டேன்.” ஆங்காரமாய் கத்தி, கோபத்தில் சிவந்திருந்த முகத்துடன், தனலாய் கொதித்தவளை‌ கண்டவனிற்கு நிலமையின்‌ தீவிரம் புரிய, சட்டென அவளை பாத்ரூமில் தள்ளி வெளியே தாழ் போட்டவன், வேகவேகமாய் அந்த கடிதத்தில் இருப்பதை படித்திட, அதில் சொல்லப்பட்டிருந்த விவகாரத்தில் சமைந்து தான் போனான்.

















 
Top Bottom