• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கன்னமிட்ட கள்வனே - 3

நிதனிபிரபு

Administrator
Staff member
கள்வன் 3

“யாருக்கும் யாருக்கும் ஜாதக பொருத்தம் பார்க்க போறீங்க?” என்று அதிர்ச்சியோடு கேட்ட நிர்மல்குமாரை இப்பொழுது சைதன்யாவின் குடும்பமே ‘அடுத்து நீயாடா? உன்னையும் நாங்க கரைக்கணுமா பேசி பேசி?’ என்பது போல பார்த்தனர்.

அதற்குள் பல்லவி கையில் இருந்த ரிதியோ தந்தையை கண்டு கொண்டு “ப்பா.. ப்பா.. தூக்கு” என்று பாட்டியிடம் இருந்து திமிறிக் கொண்டு தளிர் நடை போட்டு அவனிடம் ஓட,

“பட்டுக்குட்டி.. வாங்க வாங்க.. அப்பா கிட்ட வாங்க” என்று மகளை தூக்க வந்த நிர்மலுக்கு இடையில் புகுந்த சைதன்யா மகளை தூக்கியவள் “முதல்ல கை கால் எல்லாம் கழுவிட்டு வந்து அப்புறம் பிள்ளையை தூக்குங்க.. கொஞ்சுங்க.. சீராட்டுங்க” என்று முறைத்தாள்.

“உங்க அம்மா தான்டா நம்ம ரெண்டு பேருக்கும் வில்லி.. இரு டா அப்பா வந்திடுறேன்” என்றபடி வேகமாக அறைக்குள் சென்றவன் அதைவிட வேகமாக கை, கால்களை கழுவிக்கொண்டு வந்து மகளை தூக்கி ஆரத்தழுவி முத்தங்கள் கொடுத்தவனை கண்ட சைதன்யாவோ,

“என்னமோ பல வருஷமா பிரிஞ்சிருந்தது போலத்தான்.. காலைல போயிட்டு நைட்டு வந்து பார்க்குறதுக்குள்ள இத்தனை அட்ராசிட்டி அப்பாவுக்கும் பொண்ணுக்கும்” என்று முணுமுணுத்தாள்.

மகளை ஆசை தீர கொஞ்சி விட்டு அதன் பின்னே அந்த கேள்வியை மறுபடியும் கேட்டான்.

இப்பொழுது அங்கு இருந்தவர்கள் எல்லாம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள..

“வேறு யாருக்காம்? உங்க தங்கச்சி நிதாவுக்கும் இவ அண்ணன் நரேந்திராவுக்கும் தான் ஜாதக பொருத்தம் பார்க்க போறோம்” என்றார் பல்லவி.

“ஐயோ டீச்சர்??!! என்ன நீங்க.. போயும் போயும் அதுங்க ரெண்டுத்தையும் கோர்த்து விட பார்க்குறீங்க? நாங்க எல்லாம் நல்லா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா? இதுங்க ரெண்டுத்துக்கும் கல்யாணம் பண்ணி வச்சு இவங்க போடுற சண்டைக்கு யார் போய் நடுவுல மத்துஸம் பண்றது?” என்றான் அதிர்ந்து, நறுக்கென்று கணவன் கையில் ஒரு கிள்ளை பார்சல் செய்தாள் சைதன்யா.

“ச்சூ.. வலிக்குது டி..! உண்மைய தானே டி சொன்னேன் அதுக்கு ஏன் டி கிள்ளி வைக்கிற? உங்க அண்ணன் ஒரு முசுடு கோபக்காரன்னா.. என் தங்கச்சி ஒரு பிடாரி.. ரெண்டும் சேர்ந்தால் நம்மளை எல்லாம் நிம்மதியா இருக்கவே விடாதுங்க” என்றான்.

“நான் அதுக்கு ஒன்னும் உங்கள கிள்ளல.‌. அவங்க ரெண்டு பேரை பத்தி நீங்க சொல்லி தான் எனக்கு தெரியணுமா? நமக்கு கல்யாணமாகி எத்தனை வருஷம் ஆகுது? இன்னும் எங்க அம்மாவை நீங்க டீச்சர்னு கூப்பிடுறீங்க?” என்று முறைத்தாள்.

“நமக்கு கல்யாணம் ஆகி நாலு வருஷம் தான் டி ஆகுது. ஆனா நான் இருபது வருஷமா அவங்கள டீச்சர்னு கூப்பிடுறேன். அப்போ அதுதானே முதல்ல வரும்..!” என்று இவர்கள் தனியாக தங்களுக்குள் வாக்குவாதம் செய்துக் கொண்டிருக்க..

நல்லா புரிஞ்சு மனம் ஒத்து திருமணம் செய்துக் கொண்ட இவர்களே ஒரு சிறிய விஷயத்துக்கு இப்படி அடித்துக் கொள்கிறார்கள் என்றால்… எப்பொழுதும் கீரியும் பாம்புமாக எலியும் பூனையுமாக இருக்கும் அவர்கள் எவ்வாறு அடித்துக் கொள்வார்கள்? என்று மீண்டும் கவலை பிறந்தது நளினிக்கு.

இருவரது இந்த பிரச்சனை இப்போது வந்தது அல்ல.. 20 கால சரித்திரம் உண்டு அதற்கு..!

கிருஷ்ணகிரி, அப்போதுதான் சிறிது சிறிதாக பொட்டல்காடுகள் வயல்கள் எல்லாம் வீடுகளாக ஃபிளாட்டுகளாக மாறிக் கொண்டிருந்த வேளை.

ஆங்காங்கே இங்கொன்று அங்கொன்றாக முளைத்துக் கொண்டிருந்த வீடுகளில், அருகருகே குடி அமர்ந்தனர் கிருஷ்ணக்குமாரும் ரவிச்சந்திராவும்.

ரவிச்சந்திரா பல்லவி தம்பதியினருக்கு 9 வயதில் நரேந்திராவும் ஆறு வயதில் சைதன்யாவும்..

கிருஷ்ணகுமார் மற்றும் நளினி தம்பதியருக்கு 10 வயதில் நிர்மல்குமாரும் நான்கு வயதில் நிதன்யாவும் இருக்க…

பல்லவி அதே ஊரில் அரசாங்கத்தால் அப்ரூவ்ட் செய்யப்பட்ட ஒரு மெட்ரிக் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றினார். ரவிச்சந்திரா போக்குவரத்து வட்டாரத்துறையில் மேலாளராக இருந்தார்.

கம்மவார் எனப்படுவோர் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வாழும் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் தமிழகத்தில் வேலூர்,‌ கிருஷ்ணகிரி, தேனி, கோவை, ஈரோடு, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். நாயக்கர், நாயுடு, ராவ், சௌத்ரி, ராயுடு மற்றும் ரெட்டி ஆகியன இவர்களின் பட்டங்களாகும்.

அதில் ரவிசந்திரா ராயுடு பிரிவைச் சேர்ந்தவர்கள். பிறப்பில் இருவரும் தெலுங்கர்களாக இருந்தாலும் அவர்கள் குடும்பம் பல காலமாக வாழ்ந்து வருவது தமிழ்நாட்டில் தான். அதனால் வீட்டிலும் தெலுங்கு பேசினாலும் அவ்வப்போது தமிழிலும் உரையாடுவதுண்டு.

கிருஷ்ணகுமார் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறார் அவரின் மனைவி நளினியோ இல்லத்தரசி.

அந்த கால 90களில் வாழ்ந்த குடும்பம் போலத்தான் இரு குடும்பமும் மிகவும் நட்புடனும் பாசத்துடனும் பழகி வந்தனர்.

ஆனால் அது அவர்களில் ஏனோ நரேந்திராவுக்கு புசுபுசுவென தலைக்கொள்ளா சுருட்ட முடியோடு அதில் அழகான இரண்டு பொம்மை கிளிப்பை குத்திக்கொண்டு கொழுகொழுவென்று ஓடி திரியும் அந்த நண்டு சிண்டு நிதன்யாவை எப்பொழுதும் வம்பு இழுக்க பிடிக்கும்.

அவளை எப்பொழுதும் கூப்பிடுவது “நூடுல்ஸ் மண்ட.. குருவிக்கூடு..” என்றுதான்.

நூடுல்ஸ் என்றால் என்னவென்று அப்பொழுது பெரிதாக தெரிந்திருக்கவில்லை அவளுக்கு.
ஆனால் குருவிக்கூடு என்று கேட்டதும் அந்த சின்ன உருவத்திற்குள் இருந்த கோபம் பெருசா பொங்கி எழ அவ்வளவுதான் “போடா நெட்ட கொக்கு” என்று தன் அண்ணன் வயது ஒத்தவனை வாடா போடா என்று திட்டி விட்டு வீட்டுக்கு வந்தவளோ நளினியிடம் சொல்லி அழுதாள்.

“சிறு பிள்ளை விவகாரத்தில் பெரியோர்கள் ஏன் நாம் தலையிட வேண்டும். அவங்களே அடிச்சுக்கிட்டு அவங்களே அப்புறம் சமாதானமாயிடுவாங்க” என்று புரிந்து நளினியும்

“அட.. நம்ம அண்ணன் போல தான் நரேனும். சும்மா கிண்டல் பண்ணி இருப்பான்” என்று எவ்வளவு சமாதானப்படுத்தினாலும் அவளுக்கு மனது ஆறவே இல்லை.

அதுவும் அழகான தன் சுருட்டை முடியை இவன் என்ன நூடுல்ஸ் மண்டை குருவிக்கூடு என்கிறான் என்று கடுப்பாக இருந்தது.

வளர வளர அந்த கடுப்புகள் அதிகரித்துக் கொண்டிருந்ததே ஒழிய கொஞ்சமும் குறையவில்லை.

போதாக்குறைக்கு இருவரையும் பல்லவியிடமே டியூஷன் அனுப்பினார் நளினி.

சைதன்யா நிதன்யாவை விட இரண்டு ஆண்டுகள் மூத்தவள். அதனால் அவளோடு ஒட்டிக்கொள்வாள் நிதன்யா. தன்னுடன் ஒட்டிக்கொண்டு போகும் போது வரும்போதெல்லாம் “அக்கா அக்கா” என்று அழைத்துக் கொண்டு தொணதொண என்று பேசும் இந்த பொம்முக்குட்டியை சைதன்யாவிற்கும் பிடித்தது.

ஆனால் அதற்கும் நரேந்திரா “என்னடி உன் கூட ஒரு ஒட்டுப்புல்லு சுத்திட்டு நிக்குது.. பார்த்து போ.. புல்லு ஓவரா ஒட்டிக்க போகுது” என்று அதற்கும் கிண்டல் செய்ய

“போடா நெட்ட கொக்கு” என்று அவனை கத்தி விட்டு ஓடி வீட்டுக்குள் சென்று பதுங்கி விடுவாள் நிதன்யா. எங்கே துரத்தி வந்து அடித்தால் என்ன செய்வது என்ற பயம் தான்.

நரேந்திராவுக்கும் நிர்மல்குமாருக்கும் ஒரு வயது தான் வித்தியாசம். பெரிதாக எல்லாம் தான் பெரியவன் நீ சிறியவன் என்னை அண்ணா என்று தான் அழைக்க வேண்டும் என்று கோட்பாடுகள் இல்லாமல் நண்பர்கள் போல்தான் இருவரும் பழகினர்.

பள்ளிக்கு செல்லும் போதும் ஒன்றாக சைக்கிளில் செல்வது, ஒன்றாக விளையாடுவது, அதிலும் அருகில் நிறைய தரிசு நிலங்கள் இருக்க இவர்கள் வயது பிள்ளைகளோடு கிரிக்கெட் தான் அதிகம் விளையாடுவார்கள்.

ஒரு பக்கம் நரேந்திராவின் டீம் பில்டிங் செய்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பேட் செய்த பையன் அடித்த பாலை தேடிக் கொண்டு வந்தான். அந்த பாலை எடுத்து வைத்து பார்த்துக் கொண்டிருந்த நிதன்யாவின் தலையில் கொட்டி

“இது என்ன பால்னு உனக்கு தெரியுமா? கேரக் பால்.. மண்டையில் பட்டா மண்டை பொளந்துரும். ஓரமா போய் விளையாடு. உன் வயசு பொண்ணுங்களோட சேர்ந்து ஸ்கிப்பிங் பாண்டினு விளையாடு.. போ.. போடி” என்று கோபமாக பேசி விரட்டி விட்டான்.

அவன் கொட்டியதில் வலித்த தலையை தேய்த்துக் கொண்டு சிறிது தூரம் சென்றவள் என்ன நினைத்தாளோ அருகில் இருந்த ஜல்லிக்கல்லை எடுத்து ஒரே வீசாக வீச இவள் போய்விட்டாளா என்று திரும்பிப் பார்த்த நரேந்திராவின் நெத்தியில் பட்டது ரோடு போட வைத்திருந்த அந்த ஜல்லிக்கல்.

நன்றாக அவன் நெற்றியை பதம் பார்த்து விட்டது அந்த கல்..!

அவன் ஆ என்று அலறியபடி “அடியே குருவிக்கூடு.. வந்தேன் வச்சுக்கோ” என்று அலற அவ்வளவுதான் ஓட்டமாக வீட்டுக்குள் ஓடி வந்து கட்டிலுக்கு அடியில் பதுங்கி விட்டாள்.

பால் எடுக்க சென்றவன் காயத்தோடு வந்ததும் என்ன ஆச்சு என்று அனைவரும் விசாரிக்க..

“கீழே விழுந்துட்டேன் கப்பி கல்லு குத்திடுச்சு” என்று அவன் பொய் கூறி, வீட்டுக்கு வந்ததும் பல்லவியிடம் நன்றாக பாட்டு வாங்கிக் கொண்டு அதன் பின்னே மருத்துவமனைக்கு சென்று காயத்திற்கு தையல் போட்டு வந்தான்.

நளினி அவனைப் பார்க்க வந்தார் “நல்லா பாரு நளினி.. இவன் பண்ணி இருக்கிற வேலைய.. லீவு விட்டா போதும்.. வீட்ல இருக்கிறதே கிடையாது.. ஊர்ல இருக்கிற வெயில் எல்லாம் இவன் தலையில தான். இப்ப என்ன பண்ணிட்டு வந்து நிக்கிறான் பாரு.. கொஞ்சம் கீழ இறங்கி கண்ணுல பட்டு இருந்தா என்ன ஆகிறது?” என்று மகனை பற்றி ஆற்றாமையோடு நளினியிடம் அவர் பேச…

அன்னைக்கு பின்னே ஒளிந்திருந்து இவனை எட்டிப் பார்த்த நிதன்யாவை கண்டவனுக்கும் “இருடி.. ஒருநாள் உன்னை வெளுக்கிறேன்” என்று பொறுமிக் கொண்டவனுக்கு,அவள் மீதான கோபம் குறையவே இல்லை நெற்றிக்காயத்தை பார்க்கும் போதெல்லாம்..!

ஆனால் அவளை மாட்டி விடுமளவு பெரிய தப்பு எல்லாம் நிதன்யா செய்யவே இல்லை. அதனால் அவளைப் பழி வாங்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தவனுக்கு வாகாக சிக்கியது ஒரு சந்தர்ப்பம்..

11வது முடித்து 12வது வகுப்புக்கான கோடைகால வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் நிதன்யா இவள் வகுப்பு மாணவிகளோடு பேசிக்கொண்டே வீட்டுக்கு வரும் வழியில், ஒரு மாணவன் நிதன்யாவுக்கு லவ் லெட்டர் நீட்டி விட..

அவளோ பயந்து வாங்காமல் மறுக்க.. சட்டென்று அந்த பையனோ அவள் கையில் இருந்த நோட்டை பிடுங்கி அதில் வைத்து கொடுத்துவிட்டு அவன் பறந்து விட்டான் சைக்கிளில்..!

இதையெல்லாம் அந்த பக்கம் வந்த நரேந்திரா பார்த்துவிட்டவனுக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போலாக அந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டான்.

இவள் வீடு வரும் வரை காத்திருந்து வந்தவுடன் நளினியிடம் போட்டும் கொடுத்து விட்டான்.

அவ்வளவுதான் நளினிக்கு சாமி வந்து ஒரு ஆட்டம் ஆடி தீர்த்து விட்டார். காதல் என்னும் பேயை மகளின் மனதில் இருந்து ஓட்ட.. அதிலும் உங்க வீட்டு அடி எங்க வீட்டு அடியில்லை விளக்கமாற்றால் அத்தனை அடி வாங்கி இருந்தாள் நிதன்யா.

ஒரு வழியாக நிர்மல் வந்து தான் அன்னையிடமிருந்து தங்கையை காப்பாற்றி “அம்மா..யாரோ ஒருத்தன் செஞ்சான்னு நீங்க இவளை போட்டு அடிப்பீங்களா? அம்மா போமா..” என்று அன்னையை தள்ளிவிட்டு தங்கையை காப்பாற்றினான்.

வீட்டுக்கு வந்து விஷயம் கேள்விப்பட்ட கிருஷ்ணகுமாரும் மனைவியை கடிந்துக் கொண்டார்.

“என்ன ஏதுன்னு இரண்டு பக்கம் விசாரிக்காம இப்படித்தான் ஒரு வயசு பொண்ண அடிப்பியா நீ?” என்று அவரும் சண்டையிட அதற்கு பின்னே நளினிக்கு தன் தவறு புரிந்தது.

அவரும் மகளிடம் சமாதானம் பேச, ஒரு வாரம் அன்னையிடம் முகம் கொடுத்து பேசவில்லை மகள். அதற்கே மனம் பரிதவித்து போனார் நளினி.

நளினியிடம் இவள் வாங்கிய அந்த அடி.. அதுவும் இவள் அடிவாங்கும்போது மறைந்து நின்று எகத்தாளமாக சிரித்த நரேந்திராவின் அந்த முகம்.. அதிலிருந்து இந்த காதல் என்றாலே பெரும் அலர்ஜி தான் நிதன்யாவுக்கு.

அதிலும் தன்னை மாட்டி விட்ட நரேந்திராவையும் அவ்வப்போது மாட்டி விடுவாள்.

நரேந்திரா சாஃப்ட்வேர் இன்ஜினியரிங் முடித்து சென்னை பக்கம் சென்று விட.. நிர்மல்குமார் எம்.பி.ஏ முடித்தவன் அப்பாவை போலவே டி.என்.பி.சி எக்ஸாம் எழுதி அரசாங்க வேலையில் அமர்ந்தான். தாலுகா ஆபீஸில் வில்லேஜ் ஆஃபீஸராக இருக்கிறான்.

சைதன்யா அம்மாவைப் போலவே டீச்சர் ட்ரைனிங் முடித்து ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறாள்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக நரேந்திராவை பிடிக்கவில்லை என்றாலும் அவனுக்கு போட்டி போட்டு அவன் படித்ததையே படிக்க வேண்டும் என்று இப்பொழுது நிதன்யாவும் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பெங்களூரில் வேலை செய்துக் கொண்டிருக்கிறாள்.

காலேஜ் முடித்து வீட்டில் இருந்த சமயம் “டீச்சர் இங்கே பாருங்க உங்க தவப்புள்ள செய்கிற வேலைய.. லூட்டிய.. எத்தனை கேர்ள் பிரண்டு பாருங்க பேஸ்புக்ல.. பார்க்க நல்லவன் போல வேஷம் போட்டு பண்றதெல்லாம் பாருங்க.. அவ்வா.. அவ்வா” என்று அவன் ஃபேஸ்புக் அக்கவுண்ட்டை காட்டி அவனை மாட்டி விடுவாள்.

பல்லவியும் டீச்சர் என்ற நினைப்பை விடாமல் அவனும் வளர்ந்த பிள்ளை என்றும் பாராமல் கண்டிக்க வெகு குஷியாய் போனது நிதன்யாவுக்கு.

இப்படியாக சிறு சிறு விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தாலும் கூட ஒருவரை ஒருவர் வெறுப்பேற்றி திட்டி மாட்டிவிட்டு என்று சிறு சிறு பழிவாங்கல்கள் இன்னும் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது, இருவரது வாழ்விலும்..!

இரு குடும்பங்களுக்குமே இது பழகிவிட்ட ஒன்று..!

இப்படிப்பட்ட இருவருக்கும் திருமணம் செய்து வைத்தால்?

அதிலும் இம்முறை ரிதியின் காதுக் குத்து விழாவிற்கு வந்த இருவருமே மீண்டும் முறைத்துக் கொண்டு நின்றனர்.

“அத்தைக்கு தான் முதல் உரிமை” என்று நிதன்யா ஒரு பக்கம் நிற்க..

“தாய்மாமனுக்கு தான் முதல் உரிமை” என்று நரேந்திரா ஒரு பக்கம் நிற்க..

இருவரும் சீறும் பாம்புகளாய் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்..!


தொடரும்..
 
Top Bottom