• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கன்னமிட்ட கள்வனே - 7

நிதனிபிரபு

Administrator
Staff member
கள்வன் 7


“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இப்படி நீ பாட்டுக்கு நிதானமா நடந்து வர? சொல்லு டி என்ன ஆச்சு நெத்தியில..?” என்று நளினி பதறிக் கொண்டே நிதன்யா பின்னால் வந்தார்.

அதற்குள் ரிதி ஓடிவந்து "மாமா" என்று நரேந்திரா மீது ஏறிக் கொண்டாள்.

அவனும் "குட்டிமா" என்று மருமகளை வாரி அணைத்துக் கொண்டு கொஞ்சித் தீர்த்தான் மருமகளை.

“என்னம்மா அடிப்பட்டு இருக்குனு அம்மா சொல்றா? எங்க காட்டு?” என்று தந்தையும் பதறி பெண்ணின் நெற்றியை பார்த்தார்.

சற்று பதற்றத்தோடு தான் அமர்ந்து இருந்தான் நரேந்திரா. தன் மருமகளில் அவன் மூழ்கியிருந்தாலும் பார்க்காதது போல அவளையும் அவள் வீட்டு ஆட்களையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனால் ரொம்ப நேரம் அப்படியே இருக்க முடியாதே? ஏதாவது கேட்டு தானே ஆகவேண்டும்?

“என்னாச்சு அங்கிள்? ரொம்ப பெரிய காயமா? நாம வேணா ஹாஸ்பிடல் போவோமா?” என்று சற்று கவலை தொனியில் கேட்டவனை அப்பட்டமாக முறைத்தாள் நிதன்யா.

‘எவ்வளவு ஏத்தம் இருக்கும் உனக்கு? இந்த பக்கம் என் கன்னத்துல அடிச்சு மண்டையை உடைச்சு விட்டுட்டு.. இந்த பக்கம் எங்க அப்பா அம்மாவுக்கு நேரா ஆறுதல் சொல்றியோ? தனியா மாட்டும்போது இருக்குடா உனக்கு?’ என்று கண்களில் கனல் கக்கினாள்.

“கேட்டுக்கிட்டே இருக்கேன்ல.. வாயில என்ன கொழுக்கட்டையா அடைச்சி இருக்க.. சொல்லி தொலையேன் டி? இத்தனை நாள் கழிச்சு ஊருக்கு வந்த பொண்ணு இப்படி அடிப்பட்டு இருந்தால் மனசு பதறுமா பதறாதா தம்பி.. நீங்களே சொல்லுங்க?” என்று நளினியின் குரலில் அக்கறை கோபம் ஆற்றாமை எல்லாமே கலந்து ஒலித்தது.

அம்மாவின் அக்கறை கோபம் எல்லாம் சரிதான். ஆனால் அதையெல்லாம் ஏன் அவனிடம் கேட்கிறார்கள்? என்று மனம் குமைந்தது அவளுக்கு.

அவனைக் காட்டிக் கொடுக்க ஒரு நிமிடம் போதாது. ஆனால்.. அதனால் ஒரு சின்ன பிளவு இந்த வீட்டில் ஏற்படும்.

தேவையில்லாமல் ஏன் வீட்டில் ஒரு விசேஷம் நடக்கும்போது மனசு சஞ்சலங்களோடு இருக்க வேண்டும்?

'போடா.. நீ எல்லாம் என் கண்ணு முன்னாலே மனுஷன் ஆகவே தெரிய மாட்ட' என்று அவனை அலட்சியப் படுத்தியவள் பின் அன்னையிடம் திரும்பி,

“ரிதியோடு விளையாடும் போது செவுத்துல மோதிட்டேன் மா.. அப்போவே மருந்து வச்சிட்டேன் மா.“ என்றாள் அவள்.

நரேந்திராவோ அவளின் முகத்தைப் பார்த்து நக்கலாக சிரித்தான்.

‘என்னவோ மாட்டி விடுற மாதிரி பெரிய பில்டப் பண்ணி கொண்டு நின்ன? இப்ப என்ன சீனி பட்டாசு சவுத் போன மாதிரி புஸ்ஸுன்னு ஆயிடுச்சு?’ என்று அவன் கண்கள் சொன்ன செய்தியில்..

அவனை பார்த்து அலட்சியமாக உதடு சுளித்தாள்.

“போடா பொறுக்கி...” என்று சைகையில் திட்டி விட்டு பார்வையை வேறு பக்கம் அவள் திருப்ப, அவன் பார்வை முழுவதும் அவள் மீது தான்..!

“நான் ரிதிக்குட்டிய கொஞ்ச நேரம் வெளில கூட்டிட்டு போய்ட்டு வரேன் ஆன்ட்டி” என்றதும்,

“சரிங்க தம்பி” என்று சிரித்த முகமாக வழி அனுப்பி வைத்தார் நளினி.

ரிதியை மேலே தூக்கி போட்டு சிரித்துக் கொண்டே “ரவுண்டு போலாமா மாமா பைக்கில் உட்கார்ந்துகிட்டு?” என்று செல்லம் கொஞ்சி கொண்டு சென்றவனை கண்டு கடுப்பானவள்,

“அந்த ஆளுக்கு குழந்தையை பத்தி என்ன தெரியும்? கண்டதையும் வாங்கி கொடுத்து அவளுக்கு டயஜஷனாகாமல் ஏதாவது ஆச்சுனா என்ன பண்ணுவீங்க? நீங்க பாட்டுக்கு அவரோட அனுப்பி வைக்கிறீங்க?” என்று கடுகடுத்தாள் அம்மாவிடம்.

“பல்லை தட்டி கைல கொடுத்துட்டுவேன் ராஸ்கல்..! அவர் அந்த குழந்தையோட தாய் மாமா.. குழந்தைக்கு நல்லது கெட்டது அவருக்கு தெரியாதா? இந்த மாதிரி எல்லாம் பேசாத நிதா.. சைதன்யா காதில் விழுந்துச்சுனா அவ வருத்தப்படுவா.. எல்லாருக்கும் மரியாதை கொடுத்து பேசு” என்று அன்னை பெரிய சொற்பொழிவாற்ற

‘ஏன்டா வாய் கொடுத்தோம்?’ என்று முகத்தை கடுப்பாக வைத்துக் கொண்டவள் முகத்தை வாசல் பக்கம் திருப்ப..

அங்கே நரேந்திராவோ அடக்கப்பட்ட சிரிப்போடு அவளை பார்த்து கண்ணடித்தவன் பின்பு முகத்தை பாவம் போல வைத்து அவளுக்காக பரிதாபப்பட்டான்.

வாசல் கேட்டை மூடும்போது திரும்பவும் “தேங்க்ஸ் ஆன்ட்டி..!" என்று அவன் சந்தோஷமாக உரக்க சொல்ல..

“பரவால்ல தம்பி பார்த்து போயிட்டு வாங்க" என்று நளினியும் இங்கிருந்து குரல் கொடுக்க.. நிதன்யாவுக்கு தான் பொசு பொசு என்று வந்தது கோபம்.

‘அந்த பொறுக்கி எதுக்கு தேங்க்ஸ் சொன்னான் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும்.. இவங்க ரெண்டு பேரும் இன்னும் கொஞ்சம் நேரம் கழிச்சு லேட்டா வந்து இருந்தா. உன் தொம்பி என் சோலிய முடிச்சுருப்பான் போல..’ என்று மனசுக்குள் அன்னையையும் அவனையும் திட்டியப்படியே தன் அறைக்குள் சென்றாள்.

முணுமுணுவென்று தலை ஒரு பக்கம் வலிக்க.. மறுபக்கம் அவனது நடவடிக்கைகள் அவளுக்கு எரிச்சலை மூட்ட.. ஒரு வித அலைக்கலைப்பு மனதோடு தான் அமர்ந்திருந்தாள் நிதன்யா.

மாலை வேலை விட்டு வந்த சைதன்யாவும், இரவு வீட்டுக்கு வந்த நிர்மலும் அவளிடம் நலம் விசாரித்து, சற்று நேரம் பேசிக் கொண்டு இருக்க அப்போது தான் அவளது மனம் சற்று ஆசுவாசப்பட்டது.

அதோடு கூட தன் மகளின் காது குத்து விழாவிற்கு என்று தங்கைக்கு எடுத்த பட்டுப்புடவையை காட்ட.. விரிந்த வியந்த கண்களோடு கொள்ளை மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டாள் நிதன்யா.

“ரொம்ப அழகா இருக்கு ணா.. தேங்க்ஸ்” என்ற தங்கையின் தலையில் தட்டி,

“அண்ணனுக்கு தேங்க்ஸ் சொல்லுவியா டி? போடி” என்று அவன் செல்ல விரிந்த புன்னகையோடு அண்ணனை பார்த்தாள்.

முதல் நாள் இரவு மருமகள் மகள் இருவரையும் அருகில் வைத்துக் கொண்டு பூஜைக்கு தேவையான பொருட்களையும் அங்கே காதுகுத்துக்கு தேவைப்படுபவற்றையும் தனித்தனியாக எடுத்து வைத்து,

சைதன்யா வீட்டிற்கு கொடுக்க வேண்டிய உடைகள் எல்லாத்தையும் எடுத்து வைத்துக் கொண்டவர், ஒன்றுக்கு இரண்டு முறை சரி பார்த்துக்கொண்டார்.

விடியற்காலையிலேயே அனைவரையும் வாய் என்னும் சாட்டையால் விரட்டி விரட்டி எழுப்பி கிளப்பி வேனில் ஏத்தவே போதும் போதும் என்றானது நளினிக்கு.

அவர்கள் சென்ற வேனை அடுத்து நரேந்திரா வீட்டில் நிறுத்தி அவர்களையும் ஏற்றிக் கொள்ள குலதெய்வக் கோயில் நோக்ச் கி சென்றது அவர்களது வாகனம்.

இன்னொரு வேனில் அருகிலுள்ள நண்பர்கள், அதே ஊரிலுள்ள உறவினர்கள் என்று பின்னால் வர, சந்தோஷமாகவே அவர்கள் பயணம் சென்றது.

முன்சீட்டில் அமர்ந்திருந்த நிதாவின் மடியில் தான் ரிதி அமர்ந்திருந்தாள். ஜன்னலின் வழியே ஒவ்வொன்றையும் காட்டி அவளுக்கு விளக்கி என்று அவளுக்கு நேரம் சந்தோஷமாகத்தான் சென்றது.

தனக்கு பக்கத்து ஒற்றை சீட்டில் அமர்ந்து தன்னை குறுகுறுவென்று பார்த்த நரேந்திராவின் பார்வை அவளுள் சற்று அசௌகர்யத்தை ஏற்படுத்தினாலும் அவனை திரும்பி கூட பார்க்கவில்லை பெண்.

“திரும்பிப் பார்த்தால் தலைவலி எப்படி இருக்கு கேட்கலாம்னு பார்த்தேன் ரொம்பத்தான் மூஞ்சை முறுக்கிக்கிட்டு உட்கார்ந்திருக்கிறா.. திரும்பி பார்க்கலைனா போடி” என்று அவனும் முணுமுணுத்தவாறு ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டான். அவன் முணுமுணுத்தது அப்பட்டமாக அவள் காதில் விழுந்தது.

கோவில் வந்ததும் அங்கே உள்ள பூசாரியிடம் பூஜை பொருட்களை கொடுத்து விட்டு காலை உணவை அனைவரும் முடித்திருந்தனர். உணவை அந்த ஊரிலே ஒரு நல்ல ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தார்கள் இரண்டு வேளைக்கும்‌.

நிர்மல்குமாரும் சைதன்யாவும் வந்திருந்தவர்களை வரவேற்று உணவு பரிமாறிக் கொண்டிருக்க..

நளினி “தன்யா எங்க நிதாவை காணும். நீ மட்டும் தனியா செஞ்சிட்டு இருக்க?” என்று கேட்டார்.

“அவ பாப்பாவை தூக்கிட்டு அவளுக்கு சாப்பாடு ஊட்ட அந்த பக்கம் போனா அத்தை. அங்க நிறைய ஆடுமாடு எல்லாம் இருக்கு இல்லையா? அதை காமிச்சு ஊட்டி விட்டுறேனு போனா” என்றாள்.

“இந்த பொண்ணுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா பாரேன்? நம்ம வீட்டு விசேஷம் இங்கிருந்து உதவாமல் இப்ப எதுக்கு அங்க போய் ரிதிய தூக்கி வெச்சிட்டு நிக்கிறா.. ரிதி பாப்பா கிட்ட ஒரு தட்டுல வச்சு கொடுத்தா அவளே அழகா சாப்பிடுவா.. இவ வேலையில் இருந்து எஸ்கேப் ஆகறதுக்காக இப்படி பண்றா” என்று நளினி நிதன்யாவைத் தேடிக்கொண்டு செல்ல அங்கோ..

“இது என் அண்ணன் குழந்தை எனக்கு தான் முன்னுரிமை.! அத்தைனா சொத்தை கிடையாது” என்று அவளின் குரல் ஹை பிட்சில் கேட்க..

“தாய்க்கு அப்புறம் தாய் மாமா தான் தெரியுமா? அதனால எல்லா உரிமையும் எனக்கும் இருக்கு” என்று நரேந்திராவின் குரல் அவளுக்கு இணையாக கேட்க..

நளினி செல்வதை பார்த்து அவர் பின்னாலே வந்த பல்லவியும் ‘இன்று விழா முடிந்ததும் பிள்ளைகளிடம் கோயிலில் வைத்து கேட்டு விடுவோமா?’ என்ற யோசனையோடு வந்தவர், இங்கே இருவரும் அடித்து பிடித்துக் கொண்டு சண்டையிட்டதை பார்த்து நெஞ்சில் கை வைத்து விட்டனர் இரு பெற்றோர்களும்.

“என்னடி நிதா? என்ன நடக்குது?” என்றபடி நளினி பதற்றத்தோடு போக..

“ஏன்டா சும்மா இருக்க மாட்டியா வந்த இடத்துல?” என்று பல்லவியும் நரேந்திராவை கண்டிக்க..

“அம்மா நான் ஒன்னும் பண்ணலமா நான் பாப்பாவை தான் கேட்டேன் அதுக்கு தான் இந்த பேச்சு பேசுறா இவ?” என்று நரேந்திரா நிதன்யாவின் மீது புகார் அளிக்க...

“அவ்வா.. அவ்வா.. வாய தொறந்தாலே பொய் புரளி தான் வருமா? நான் பிள்ளைக்கு சாப்பாடு ஊட்டிக்கொண்டிருக்கிறேன்.. ஊட்டிட்டு தான் தரேன்னு சொன்னதுக்கு நீங்க தானே உரிமை அது இதுனு பேசுனீங்க? அதுக்காக தான் நானும் பேசுனேன்!” என்று அவள் அவன் மீது புகார் அளிக்க..

“இப்பவே கண்ணை கட்டுதே..!” என்று நளினியும் பல்லவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அதோடு நிதன்யா சும்மாயிறாமல் பல்லவியின் கையைப் பிடித்து “ஆன்ட்டி நீங்க தப்பா எடுத்துக்காதீங்க ஆனா உங்க புள்ள பேசுறது ரொம்ப மோசம். என்ன இருந்தாலும் அவ எங்க வீட்டுக்கு வாரிசு எனக்கு தான் முதல் உரிமை” என்றதும்,

நரேந்திராவோ அவளை நக்கலாக பார்த்து “உங்க வீட்டு வாரிசு ஆனாலும் தாய் மாமன்னு என் மடியில வச்சுதான் மொட்டை அடிப்பாங்க காது குத்துவாங்க அத்தை மடியில் எல்லாம் இல்ல” என்றான்.

“என்னதான் உங்க மடியில வச்சு காது குத்தினாலும் உங்க வீட்டு வாரிசுனு ஆகாதுல..” என்று தன்னை எப்படி இவன் சொல்லலாம் என்று கோபமும் அழுகையுமாக வெடித்தாள் நிதன்யா.

“அதெல்லாம் உனக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் தான். கல்யாணமானா நீயும் அடுத்த வீட்டு பொண்ணு தான். இந்த வீட்டு பொண்ணு கிடையாது” என்றான் நரேந்திரா.

இன்னும் கோபம் சுறுசுறு என்று ஏற கையில் வைத்திருந்த ரிதியை தூக்கி அம்மாவின் கையில் கொடுத்தவள் அவனை நெருங்கி நின்று “எந்த வீட்டுக்கு நான் வாக்கப்பட்டு போனாலும் இந்த வீட்டு பொண்ணுங்கறது என்னைக்கும் மறக்காது.. மாறாது.‌.! ஏன் அப்ப சைதன்யா அண்ணியும் உங்க வீட்டு பொண்ணு இல்லையா?” என்று திரும்பி பல்லவியையும் நரேந்திராவையும் மாறி மாறி பார்த்து கேள்வியாக புருவத்தை உயர்த்தினாள் நதின்யா.

‘சும்மா இருப்பவளை இவனே சீண்டி விட்டு அவளிடம் வாங்கி கட்டுகிறானே’ என்று தலையில் அடித்துக் கொண்டார் பல்லவி.

“வாய அடக்கு டி முதல்ல.. விசேஷம் நல்லபடியா முடியட்டும். அங்க சொந்தக்காரங்க எல்லாம் உக்காந்து இருக்காங்க..‌ இப்படி நீங்க ரெண்டு பேரும் அடிச்சுக்குறதை பார்த்தா அவங்க எல்லாம் என்ன நினைப்பாங்க? நீங்களும் கொஞ்சம் பேசாம தான் இருங்களேன் தம்பி” என்று நளினியுமே இந்த தடவை நரேந்திராவை கண்டிப்பாக பேசினார்.

ஏனென்றால் நிதன்யாவுக்கு திருப்ப அவன் பேசினாலும் ‘அவள் எங்க வீட்டுப் பெண் அல்லவா? எப்படி அவன் இல்லை என்று கூறலாம்’ அன்னையாய் அவருக்கு மனதை சற்று பாதித்தது.

ஆனால் பல்லவி ஏதோ நினைத்துக் கொள்வார்களோ என்று அவரை பார்க்க.. அவரோ அதையெல்லாம் பார்க்காமல் “வந்த இடத்தில் அதுவும் விசேஷம் நடக்குற இடத்துல கொஞ்சம் வாயை கட்டணும் நரேந்திரா.. இது நம்ம பொண்ணு கொடுத்த இடம்” என்றதும் இருவரையும் முறைத்து பார்த்தவன் விடுவிடு என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று விட்டான்.

ஒரு வழியாக இவர்கள் சண்டை ஒரு புறம் இருந்தாலும் நரேந்திராவின் மடியில் வைத்து ரிதிக்கு மொட்டை அடித்து, பின்பு குளிக்கவைத்து புத்தாடை அணிவித்து.. மொட்டை தலையில் சந்தன மஞ்சள் தடவி.. பார்ப்பதற்கே கொலு கொலு பொம்மை போல அவ்வளவு அழகாக அனைவரையும் வசீகரித்தாள் ரிதி.

“அம்மா பாப்பா அழகா இருக்கா இல்ல.. எல்லார் கண்ணும் இவ மேல தான். வீட்டுக்கு போய் முதலில் என் தங்க குட்டிக்கு சுத்தி போடுமா” என்றவளோ, கையில் வைத்திருந்த மருமகளை கீழே இறக்கவே இல்லை.

ரிதியும் மொட்டை அடித்ததிலேயே சற்று பயந்து சிணுங்கிக் கொண்டே இருந்தவள், அத்தையின் கழுத்தைக் கட்டிக் கொண்டு யாரிடமும் செல்லாமலே தனக்கு செல்லம் கொடுக்கும் அத்தையிடமே ஒட்டிக்கொண்டாள்.

அடுத்து நல்ல நேரத்தில் நரேந்திராவின் மடியில் அவளை வைத்து இருபுறமும் சைதன்யாவும் நிர்மல்குமாரும் அமர்ந்துக் கொள்ள இப்பொழுது கேலியாக வளைந்தது அவனது புருவங்கள் நிதன்யாவை பார்த்து.

அவளோ முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு அவனை முறைத்தவள், பின்பு பாவம் போல வைத்துக் கொண்டு நின்றாள்.

தங்கை முகம் வாடி இருப்பதைக் கண்ட நிர்மலோ “நிதா வா டா.. அண்ணன் பக்கத்துல வாடா.. ஏன்டா அங்க நிக்கிற?” என்று அழைத்தது தான் தாமதம் அவனை கெத்தாக ஒரு பார்வை பார்த்து வெட்டியவள் சென்று அண்ணனின் அருகில் அமர்ந்துக் கொள்ள..

“என்னதான் ஊர்க்குருவி உயர உயர பறந்தாலும் பருந்தாகாது” என்று முணுமுணுத்தான்.

முதலில் ஊசி கொண்டு வருவதை பார்த்து அலறிய ரிதி காது குத்த விடவே இல்லை.

“அண்ணா.. நீ கொஞ்சம் நகரு” என்று அண்ணனை நகர்த்தி..

“தங்க குட்டி.. இப்ப காது குத்திக்கிட்டா தான் இங்க பாரு அத்தை எப்படி டிசைன் டிசைனா தோடு போடுறேன் இந்த மாதிரி அழகழகா போட்டுக்க முடியும். அப்பதான் பாப்பா குட்டி இன்னும் அழகா க்யூட்டா பார்பி டால் மாதிரியே இருப்பா..” என்று ஏதேதோ பேசி மருமகளின் மனதை மாற்றிக் கொண்டிருந்தாள் நிதன்யா.

தன் அருகில் அமர்ந்து தன்னை உரசியபடியே பேசிக் கொண்டிருப்பவளை ஒரு மாதிரியாக பார்த்த நரேந்திரா “எந்த பார்பி உங்க ஊர்ல காதுல தோடு போட்டிருக்கு?” என்று தன் அறிய சந்தேகத்தை அவன் கேட்க..

“யோவ் வாய மூடுயா.. அவ்வளவுதான் இருக்குற கோவத்துக்கு ஏதாவது சொல்லிடுவேன் பார்த்துக்கோ” என்று அவனிடம் குரல் தாழ்த்தி கடிந்துவிட்டு,

மருமகளிடம் மீண்டும் தாஜா செய்ய அண்ணியிடம் கண்களை காட்டி “தலையை அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்றவள்,

“அழுத்தி பிடித்து நெஞ்சோடு அணைச்சுக்கோ” என்று நரேந்திராவிடம் கிசுகிசுத்தவள், மூவரும் சேர்ந்து பிடித்துக் கொண்டதும், சற்று பயந்தாலும் ஒத்துழைப்பு கொடுத்தாள் ரிதி.

இப்படி மருமகளிடம் பேசிப் பேசியே தன் கையில் வைத்திருந்த சாக்கோபார் ஐஸ்கிரீம்.. பெரிய சில்க்கி சாக்லேட் பாரினை நீட்டி இரண்டு காதிலும் தோடு போட வைத்து விட்டாள் நிதன்யா.

முதலில் அழுது கரைந்தாலும் புதிதாக தன் காதில் தான் தலையசைக்கும் போதெல்லாம் குட்டி ஜிமிக்கி ஆடுவதை கண்டு ஒரு வித சந்தோசம் தான் ரிதிக்கும்.

அதுவும் அவள் வேண்டியது எல்லாம் இன்று கிடைக்க.. வலி ஒரு பக்கம் இருந்தாலும், அதை சாக்காக வைத்து ஐஸ்கிரீம், சாக்லேட், கேக் என்று விரும்பியதை வாங்கி சாதித்துக் கொண்டாள், அத்தைக்கு தக்க மருமகளாய் ரிதி.

“அப்படியே உன்னை மாதிரியே இருக்கா டி, நீயும் உனக்கு காது குத்தும்போது அந்த அழிச்சாட்டியம் பண்ணுன.. கடைசில காது குத்தினதும், எனக்கு காது வலிக்குது சாக்லேட் தின்னா தான் போகும். ஐஸ்கிரீம் தின்னா தான் வலி குறையும்ன்னு எத்தனை ஆர்ப்பாட்டம் தெரியுமா? அதுக்கு கொஞ்சமும் குறைச்சல் இல்லாம பண்றா உன் மருமக” என்று நளினி அலுத்துக் கொண்டாலும் பெருமையே பேத்தியை நினைத்து.

‘பார்த்துக்கோ என் மருமகள் என்னைப்போல..!’ என்று பெருமையாக கர்வமாக நரேந்திராவை பார்த்தாள் நிதா.

'நீ மேய்க்கிற எருமைக்கு இந்த பெருமை அவசியமா?’ என்பது போல அவனும் அவளை நக்கலாக பார்த்தான்.

ஒரு வழியாக மதிய உணவு முடிந்து உறவினர்கள் எல்லாம் எவ்வித குறையுமின்றி அனுப்பி வைத்துவிட்டு.. அங்கே பந்தல் உணவுக்கு எல்லாம் பணத்தைப் பட்டுவாடா செய்துவிட்டு.. இவர்கள் இருவர் குடும்பமும் கோவில் மண்டபத்தில் ஆசுவாசமாக அமர்ந்திருந்தனர்.

அப்போது கிருஷ்ணகுமாரும் ரவீந்திரநாவும் அருகில் அருகில் இருந்தவர்கள், 'இப்போது பிள்ளைகள்ட்ட பேசிட்டா என்ன?’ என்று எண்ணி தன் மக்கள் இருவரையும் அழைத்து விஷயத்தை கூறி விட்டனர்.

“என்னது நான் இவளை கட்டிக்கிறதா? வாய்ப்பே இல்ல..!” என்று நரேந்திர ஒரு பக்கம் அலற..

“இவனை எல்லாம் நான் கல்யாணம் பண்ணிக்க முடியாது..! எனக்கு தகுந்தவன் இவனில்ல..” என்று முகத்தை அருவருப்பாக சுளித்தாள் நிதன்யா.

தொடரும்‌...
 
Top Bottom