கள்வன் 8
“நான் அவளை வேணாம்னு சொல்லலாம்.. அந்த குள்ளச்சி.. நூடூல்ஸ் மண்ட என்னை எப்படி வேணாம்னு சொல்லுவா..? அவ்வளவுக்கா நான் மோசமா இருக்கேன்? எப்படி எப்படி அவ என்னை வேணாம்னு சொல்லலாம்?” என்று இதுவரை நூறாவது முறையாவது தன்னை தன் அறைக் கண்ணாடியில் பார்த்து பார்த்து கத்தி கோபப்பட்டு புலம்பிக் கொண்டுருந்தான் நரேந்திரா..!
அப்படி ஒன்னும் பார்க்க சுமார் ரகம் இல்லை அவன். பல்லவியின் மொத்த அழகையும் ரவிச்சந்திராவின் ஆங்கு தோங்கான நெடிய உடல் அமைப்பையும் கொண்டு பிறந்தவன் தான்.
அலையலையென கருகரு கேசம் கண்டிஷ்னரில் பளபளத்துக் கொண்டிருந்தது..! நீள முகவெட்டு கூர் நாசி அதன் கீழே அடர்ந்த மீசையை ட்ரீம் பண்ணி இருந்தான். கூடவே அவனின் கூரிய கண்களும் அடர்ந்த புருவமும் இன்னும் இன்னும் அவனின் ஆண்மை வசீகரத்தை ஏற்றவே செய்தது.
முகத்தை இப்படி அப்படி என்று பார்த்தவன் பலமுறை பல திசைகளில் பார்த்தான்.
“எப்படி பார்த்தாலும் நாம கொஞ்சம் நல்லாவே தானே இருக்கோம். அப்புறம் ஏன் அவ அப்படி சொன்னா? ஆனாலும் அந்த குருவிக்கூடுக்கு நாமே அதிகம் தான்.. போடி நூடூல்ஸ் மண்ட” என்று முடிவு எடுத்தவன், தன் அறையை விட்டு வெளியே வந்தான்.
கூடத்தில் பல்லவியும் ரவிச்சந்திராவும் அமைதியாக சோகமாக அமர்ந்திருந்தனர்.
“இப்போ எந்த டைட்டானிக் கப்பல் முழுகி போச்சுன்னு இரண்டு பேரும் இவ்வளவு சோகமா இருக்கீங்க? நான் என்ன கல்யாணமே வேண்டாம்னா சொன்னேன். எனக்கு அந்த குருவிக்கூடு மண்ட தான் பிடிக்கலனு சொன்னேன்” என்றதும் பல்லவி நரேந்திராவை முறைத்து பார்த்தார்.
“எதுக்கு இவ்வளவு சோகமா உக்காந்து இருக்கீங்க ரெண்டு பேரும் இப்போ? எனக்கு என்ன அவ்வளவு பெரிய வயசா ஆயிடுச்சு?” என்றவன் அப்போதும் பல்லவி முகம் மாறாமல் இருப்பதைக் கண்டு அவர் அருகில் வந்து அமர்ந்தான்.
“ஏம்மா, இந்தா பாதகா உன்னாவேன்டி? நேனே நன்னு பொகடகூடது… கானி மீ அப்பாயி ராஜாலா உண்டாடு. அதனி கோசம் அம்மாயிலு க்யூ கட்டி நிலபடதாரு…” (அம்மா அம்மா.. ஏம்மா இவ்வளவு சோகமா இருக்கீங்க? நானே என்னை பெருமையா சொல்லிக்க கூடாது.. உங்க பையன் ராஜா வாட்டம் இருக்கான். அவனுக்கு பொண்ணுங்க கியூவில வந்து நிக்கும்..) என்றவனை கண்டவர் பக்கென்று சிரித்து விட்டார்.
“ஏன்டுக்கு இப்புடு நீவ்வு நவ்வுதுன்னாவு? அப்படி ஏமி நேனு காமெடி செப்பலேதே…” (எதுக்கு இப்போ நீங்க சிரிக்கிறீங்க? அப்படி ஒன்னும் நான் காமெடி சொல்லலையே?) என்று பற்களை கடித்தான் நரேந்திரா.
தமிழ்நாட்டில் இருப்பதால் பெரும்பாலும் இவர்களுக்குள் தமிழ் தான் பேச்சு வழக்கு.. அவரிடம் ஏதாவது காரியம் சாதிக்க வேண்டும் என்றாலோ இல்லை அம்மாவிடம் செல்லம் கொஞ்ச வேண்டும் என்றாலோ.. அப்பொழுதெல்லாம் தன் தாய் மொழியான தெலுங்குவைத் தான் கையில் எடுப்பான் நரேந்திரா.
இன்றும் அப்படி எடுத்துப் பேசியவனை கண்டு அவர் சிரித்து வைக்க இவனுக்கு கோபம் பொங்கியது.
“ஏன்ட்டி மா?” என்று அவன் கேட்க மீண்டும் மீண்டும் சிரித்தவரை பார்த்து அவன் முறைக்க..
“ஏமி லேதுரா தம்முடு… மன நிதன்யாவே நீவ்வு வத்தது அணி சேப்பிந்தி காதா… அதி குர்து ஒச்சின வென்டனே நவ்வு ஒச்சேசிந்திரா…
(ஒன்னும் இல்லடா தம்பி.. நம்ம நிதன்யாவே உன்னை வேண்டாம் என்று சொல்கிறாளே.. அதை நினைச்ச உடனே சிரிப்பு வந்துடுச்சு டா) என்றவரின் பேச்சில் இன்னும் சினம் துளிர்த்தது நரேந்திராவுக்கு.
“அதென்ன நம்ம நிதன்யாவே? அவ என்ன ஊருல இல்லாத பேரழகியா இல்ல அவ்வளவு குணவதியா? சரியான முசுடு.. அடங்கா பிடாரி.. நூடூல்ஸ் மண்ட அவ..” என்று அவன் பாட்டுக்கு அவளை பற்றி குறைக்க கூறிக்கொண்டே செல்ல மகனின் புஜத்திலேயே வேகமாக அடி ஒன்று வைத்தார் பல்லவி.
“என்ன தம்புடு.. எப்படி நிதன்யாவை அப்படி பேசலாம் நீ? இப்படி எல்லாம் நான் உன்னை வளர்க்கலையே? ஒரு பொண்ண பார்த்து அதுவும் இப்போதைக்கு உனக்கு எந்த உறவும் உரிமையும் இல்லாத பொண்ண பத்தி எப்படி நீ இப்படி பேசலாம்?” என்று ஆசிரியராய் அவனுக்கு பாடம் எடுக்க ஆரம்பித்தார் அவன் காதுகளில் ரத்தம் வழிய.. வழிய…
ஏற்கனவே அவளே உன்னை நிராகரித்து விட்டால் இனி யார் உன்னை கல்யாணம் செய்துக் கொள்வார் என்று ஒரு பக்கம் பேச்சு போக.. இன்னொரு பக்கம் எப்படி நீ அவளை அப்படி பேசலாம்? ஒரு பெண்ணாய் மட்டும் இல்லாமல் கண்டிப்பான ஆசிரியராகவும் அத்தனை கண்டித்து பல்லவி பேச.. அத்தனை கோபம் முகிழ்த்தது நரேந்திராவுக்கு. அவை அத்தனையும் நிதன்யாவின் புறமே திரும்பியது.
“போதும் போதும் பல்லவி.. ரொம்ப அவனை பேசாதே..!” என்று கணவன் வந்து தலையிட்டதும் தான் சற்று கோபம் தணிந்தவர்,
“உன்னிடம் இருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை” என்று தன் அறைக்குள் கோபத்தோடு சென்றுவிட்டார்.
“தம்புடு..!” என்று சமாதானம் பேச வந்த தந்தையின் பேச்சை தவிர்த்து விட்டு வேகமாக வெளியே சென்று விட்டான் நரேந்திரா.
மனம் ஆறாமல் புகைந்துக் கொண்டிருந்தது. அந்த தகிப்பை அணைக்க அவன் நிக்கோட்டின் புகையை நாட, அது அவனது தகப்பை அணைப்பதற்கு பதிலாக இன்னும் அவனுக்கு தகிப்பையும் அனலையும் ஏற்றிக் கொண்டிருந்தது.
ஏதோ ஏதோ ஞாபகங்கள் ஏதேதோ பழைய நினைவுகள் என்று அதிலேயே அவனது மனம் சுற்றி சுழன்றுக் கொண்டிருக்க நிகழ்காலத்தை மறந்திருந்தவனை, விரலை சுட்ட கங்கு கவனம் திருப்பியது..!
“ஸ்ஸ்” என்ற எரிச்சலோடு கையில் இருந்த சிகரெட் துண்டை இரண்டு விரலால் சுண்டி விட்டவன், முட்டும் நினைவுகளிலிருந்து தப்பிக்க கால் போன போக்கில் நடந்துக் கொண்டிருந்தான்.
அவன் நேரமோ இல்லை அவள் நேரமோ.. அவனை அறியாமலேயே அவனை அவளிடமே கொண்டு போய் சேர்த்தது.
வீட்டுக்கு வெளியே சற்று மரங்கள் அடர்ந்த பகுதியில் உலாத்திக் கொண்டிருந்தாள் நிதன்யா.
அவள் வீட்டிலுமே ஏன் நரேந்திராவை நிராகரித்தாய் என்று அத்தனை கேள்வி அனைவரிடமிருந்தும்??
“இது என்னமா வம்பா போச்சு.! எனக்கு புடிச்சிருந்தா தானே நான் கல்யாணம் பண்ணிக்க முடியும்? அண்ணாவுக்கு அண்ணிய புடிச்சுது நீங்க கல்யாணம் பண்ணி வச்சீங்க.. அது மாதிரி எனக்கும் பிடிக்கணும் இல்லையா?” என்று அவள் கேட்ட கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.
"ஏன் ஏன் நரேந்திராவை உனக்கு புடிக்கல?" என்று நிர்மல் கேள்வி கேட்க..
அவளது மனமோ அத்தனை சலிப்பாக உணர்ந்தது. ஏன் பிடிக்க வேண்டும்? ஏன் அவனை பிடிக்க வேண்டும் எனக்கு?
“இதுக்கெல்லாம் காரணம் சொல்ல முடியுமா? பிடிச்சிருந்தா இந்த காரணத்தினால் அவங்கள பிடிக்குதுன்னு சொல்லலாம். அவனை பார்த்தாலே எனக்கு எரிச்சல் தான் வருது.. கோவமா வருது.. சின்ன வயசுல எவ்வளவு வம்பு வளர்த்திருப்பான் என்கிட்ட.. அதெல்லாம் நினைக்கும் போது அவன் மேல ஆத்திரம் ஆட்டோமேட்டிக்கா வருது..” என்றவளின் எரிச்சலான பதிலில் சைதன்யாவுக்கு கூட சற்று மன வருத்தம்தான்.
தன் அண்ணனை இவள் இப்படி சட்டென்று நிராகரிப்பாள் என்று அவளும் எதிர்பார்க்கவே இல்லை.
என் அண்ணனுக்கு என்ன குறைச்சல்? ஆளும் அழகன் தான்.. கை நிறைய சம்பாதிக்கிறான்..
சொத்துபத்தும் இருக்கிறது..
பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பம்.. அதிலும் சிறுவயதிலிருந்து பழகிய குடும்பம் வேற என்ன வேண்டும் என்ற எண்ணம் தான் சைதன்யாவிற்கு..!
சைதன்யா ஒரு பெண்ணாக இருந்தாலும் நிதன்யாவின் மனதை பற்றி அவள் அறிய முற்படவில்லை. ‘எப்படி தன் அண்ணனை அவ மறுக்கலாம்? அதோடு அவன் வயசு என்ன இவ வயசு என்ன அவன் இவன்னு மரியாதை இல்லாமல் பேசுகிறாளே?’ என்று கோபமும் முகிழ்த்தது அவளுக்கு.
“ரிதிக்கு சாப்பாடு ஊட்டணும். அவ டயர்டா இருக்கா” என்று நிதன்யாவின் மடியில் இருந்த மகளை தூக்கிக்கொண்டு தங்கள் அறைக்கு சென்று விட்டாள்.
எல்லோருக்குமே சைதன்யாவின் இந்த செயலில் சற்று அதிர்ச்சி கலந்த வருத்தம் தான். ஆனாலும் அவள் முன்னே அவள் அண்ணனை பற்றி பேசியதும் இப்பொழுது அனைவரும் நிதன்யாவை தான் முறைத்தனர்.
“கொஞ்சமாவது உனக்கு அறிவு இருக்கா? உன் வயசு என்ன அந்த தம்பி வயசு என்ன? இப்படி மட்டு மரியாதை இல்லாம அவன் இவன்னு பேசுற? அதுவும் சைதன்யா முன்னாடியே பேசுற? அவளுக்கு வருத்தமா இருக்காதா? என்ன பொண்ணு நீ வாய அடக்குறது இல்ல!” என்று அன்னை கடிந்துக் கொள்ள..
“என்ன நிதா இது? அந்த பையனுக்கு என்ன குறைச்சல்? நல்லா சம்பாதிக்கிறான்.. ஆளும் நல்லா இருக்கான். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. தெரிஞ்ச குடும்பம் வேற.. ஒன்னுக்குள்ள ஒன்னு நீங்க ஒத்துமையா இருப்பீங்கனு தானே நாங்க கேட்டோம்” என்று தந்தையும் அவளை சமாதானம் செய்து சம்மதம் சொல்ல வைக்க முயல…
“இப்படி மூஞ்சில அடிச்ச மாதிரி பேசக்கூடாது நிதா. சைதன்யாவுக்கு என்ன இருந்தாலும் அவன் அண்ணன் இல்லையா? கோயில்ல வச்சு கூட இப்படித்தான் நீ பேசுற. உனக்கு புடிக்கலைன்னா நாசுக்கா மறுத்துற வேண்டியதுதானே?” என்று அண்ணனாய் நிர்மல் அறிவுறுத்த…
“நிறுத்துறீங்களா எல்லாரும்..!” என்று கத்தியிருந்தாள் நிதன்யா.
“ம்மா.. உங்களுக்கு உங்க மருமக மனசு நோக கூடாது. ப்பா உங்களுக்கு அவன் நல்லா இருந்தா சம்பாதிச்சா போதும் பொண்ண அவன் தலையில கட்டி வச்சிரணும்.. கடமைய முடிச்சிடணும்..” என்றவள்,
“ண்ணா உனக்கு உன் பொண்டாட்டியும் உன் மச்சானும் மட்டும்தான் முக்கியம். உன் தங்கச்சி உனக்கு முக்கியம் இல்ல..!”
“உங்க யாருக்குமே என் மனசும் நானும் முக்கியம் இல்ல அப்படித்தானே? என் மனசுல உள்ளதை என் வீட்டு ஆளுங்க கிட்ட நான் மனசு விட்டு பேச கூடாதா? அதுக்கு கூட அவங்க என்ன நினைப்பாங்க.. இவங்க என்ன நினைப்பாங்கன்னு பயந்து மனசுக்குள்ளே போட்டு புதைத்து விடணுமா? இந்த உரிமை கூட எனக்கு பொறந்த வீட்ல இல்ல.. ஆனா அவங்களுக்கு மட்டும் இருக்கு. அவங்களுக்கு மட்டும் நீங்க எல்லாரும் சப்போர்ட் பண்றீங்க.. என்னை யாருமே கேர் பண்ண மாட்டேங்கறீங்க.. நான் இங்க வந்து இருக்கவே கூடாது. ஏன் இந்த வீட்ல நான் பொறந்தே இருக்க கூடாது..!” என்று முட்டிய அழுகையை பல்லை கடித்து கட்டுப்படுத்திக் கொண்டு வேகமாக வெளியில் சென்றவளை கண்டு மூவருமே திகைத்தனர்.
மூவரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து இருக்க “என்ன இவ இப்படி பேசிட்டு போறா? நீ என்ன டா பார்த்துட்டு அப்படியே நிக்கிற அவளை போய் கூட்டிட்டு வாடா..” என்று நளினி கத்த..
“டேய் அவ பாட்டுக்கு போறா டா என்னனு பாரு” என்று கிருஷ்ணகுமாரும் சொல்ல.. நிர்மல் வேகமாக வெளியேறி அவள் எங்கே என்று தேடினான்.
சற்று தூரத்தில் வேகவேகமாக நடந்துச் சென்றுக் கொண்டிருந்த தங்கையை கண்டவன் அவளை நிறுத்தி பிடித்து வீட்டுக்குள் அழைத்தான்.
“ஏன் பாப்பா இப்படி எல்லாம் பேசுற? உன்மேல உள்ள அக்கறைல தானே நாங்க சொல்றோம். முதல வீட்டுக்கு வா..”
“முதல்ல போய் உன் பொண்டாட்டிய சமாதானப்படுத்து, அதுக்கப்புறம் தங்கச்சி மேல உன் அக்கறையை காட்டு.. வந்துட்டான் பெருசா அக்கறை சக்கரைனு பேசிட்டு” என்றவள் அவன் கையை உதறிவிட்டு வேகமாக சென்றவள் திரும்பி அவனை பார்த்து,
“அப்படி எல்லாம் உசுர விட்டு செத்துட மாட்டேன். சொத்தை நீ மட்டும் அனுபவிக்கணும்ன்னு ஆசைப்படாதே.. எனக்கும் அதுல பங்கு உண்டு” என்று திரும்பி நடந்தவளை கண்டு சிரித்தபடி,
“இவள..! இவ இந்த ஜென்மத்துல திருந்த மாட்டா.. எவன் வந்து மாட்ட போறானோ. ம்ஹூம்” என்றபடி அவன் வீட்டுக்கு செல்ல..
அப்போது நிர்மல்குமாரின் பேச்சுக்கு தேவதைகள் ததாஸ்து சொன்னது போல.. அவளிடம் வந்து மாட்ட போறவனே, வாண்ட்டடாக அவனே வந்து அவளிடம் மாட்டினான்.
நளினி வாசலில் கவலையாக நின்று இருக்க, “ம்மா..கொஞ்ச நேரம் அவளை ஃப்ரீயா விடுமா.. அவளே வந்துடுவா. அவ பிடிக்கலன்னு சொன்னதும், நாமளும் பிரஷர் பண்ணியிருக்க கூடாது” என்றவன் தங்கை சொன்னது போல மனைவியை சமாதானம் செய்ய சென்றான்.
நிதன்யா வீட்டில் நடந்த பிரச்சனையை அறியாமல் இவளால் தனக்கும் தன் பெற்றோருக்கும் சண்டை தன் அம்மா இப்படி பேசிவிட்டார் என்று கோபத்தோடு மீண்டும் புகைத்துக்கொண்டே வந்திருந்தவனோ மரங்களின் நடுவில் அவளை கண்டதும் கோபம் வர,
அவளை அந்த மரத்தினுடைய சிறை செய்தவன் மேனியோ அவள் மேனியோடு நூலளவு இடைவெளியை மட்டுமே விட்டிருக்க.. அவனின் இந்த அதிரடியை அதிர்ச்சியோடு பார்த்திருந்தவளின் தாடையை அழுத்தமாக பற்றி கண்களுக்குள் கூர்ந்து பார்த்தவன்,
“அப்படி என்னடி பெரிய அழகி நீ? ஊர்ல இல்லாத பெரிய அழகி? உனக்கு என்னை பிடிக்கவில்லையோ? உன் வாயாலயே நீதான் எனக்கு வேணும்..! உன்னை மட்டும் தான் இந்த உலகத்திலேயே பிடிக்கும்னு சொல்ல வைக்கிறேன் டி” என்று சவால் விட்டவனோ, அவளது அதரங்களை அழுத்தமாக தன் அதரங்களால் சிறை செய்தான்.
தொடரும்...