காதல் எங்கள் சொந்தம் - 1

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,210
16,607
113
Germany
காதல் எங்கள் சொந்தம்

அத்தியாயம்.. 1

குளிர் மாறாத காலைப் பொழுது. அறைக் கதவை மெல்லத் திறந்தாள் காவ்யா. அவள் மனசும் திறந்தது. இந்த அறை அவளுடைய பிரத்தியேக அறை. அங்கு அவள் சுதந்திரமாக இருக்கலாம். அழலாம், சிரிக்கலாம், ஏன் தனக்குள் பேசிக் கொள்ளலாம். அவள் அழுவதற்கும் சிரிப்பதற்கும், பேசிக் கொள்வதற்கும் நிறைய இருந்தது. அவளுக்கு அவளே தான் தோழி. மனம்விட்டுப் பேச அவளுக்கு இன்னும் ஒரு தோழி கிடைத்த பாடில்லை. மேஜை இழுப்பறையில் இருந்த அவனின் போட்டோவை எடுத்தாள். சிரிப்பதை பாரு.! கொஞ்சம் பழுப்பு நிறமான கண்கள். சுருள் முடி. நான் கொஞ்சம் திமிர் பிடித்தவன் தான் என்று சொல்லும் முகபாவம்.. எல்லாமே அவளுக்குப் பிடித்திருக்கிறது ....

டொக் டொக் என்று கதவு தட்டும் சத்தம் கேட்டது. நெகிழ்ந்திருந்த மனதையும் கண்ணையும் சரிபண்ணிக் கொண்டு காவ்யா கதவு திறந்தாள். ரோசி நின்று கொண்டிருந்தாள்.

“என்ன ரோசி.? விடிகாலையிலே நீ பூ பறிச்சு சாமி கும்பிடும் நேரமாச்சே. இங்க என்ன பண்ணிட்டு இருக்கே.?”

எஜமானி கோபமாக திட்டிவிடுவாளோ என்று பயந்த ரோசி..

“அம்மா.... ரூம் கேட்டு வந்தவர் தகராறு பண்ணுகிறார்....” என்றாள் பயந்தபடி.

“யாரு.? பேர் சொன்னாரா.?”

“இல்லே மா.”

“சரி ரிசப்ஷன் ஹாலில் உக்காரச் சொல்லு. இதோ வந்திடறேன்.” ரோசி தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி விட்டாள்.

மடமடவென்று படிகளைக் கடந்து ரிஷப்ஷன் ஹாலுக்கு வந்தாள். அங்கே ஒரு இளைஞன் உட்கார்ந்திருந்தான். களையான முகம். தவிக்கும் கண்கள். ஏதோ பிரச்சனை என்று சொல்லுவது போல் அங்கும் இங்கும் அலைபாய்ந்தபடி இருந்தது. இவள் வந்ததும் அவன் எழுந்து கொண்டான். எதுக்கு இந்த மரியாதை என்று அவள் எண்ணிக் கொண்டாள். பொதுவாக ரூம் புக் பண்ண வருகிறவர்கள் ஒரு அறிமுகப் புன்னகை சிந்தி, ரூம் வாடகை, மற்ற வசதிகள் என்னென்ன என்று கேள்வி எழுப்புவார்கள்.. இவன் கையை உதறிக் கொண்டு உதவி கேட்பது போல் அல்லவா நிற்கிறான்.

“சொல்லுங்க சார்....”

“மேடம்... என் தங்கை ஹேமாவுக்கு ஒரு ரூம் புக் பண்ண வந்தேன்.”

“சரி.. பண்ணுங்க.” கவுண்ட்டரில் நின்று கொண்டிருந்த லதாவை பார்த்து..

“என்னாச்சு லதா.? நீ இவரை கவனித்து பதில் சொல்லவில்லையா.? எதுக்கு அவர் என்னை பார்க்க வேணும்னு சொன்னார்.?”

“மேடம்.... இவர் தங்கை கீழே விழுந்து கால் எலும்பு பிராக்சர் ஆகிவிட்டதாம். ரூம் மட்டும் அல்ல.... அவர் தங்கையை கவனித்துக் கொள்ள ஒரு ஆள் கிடைக்குமான்னு கேக்கறார். அந்த பொறுப்பை நாங்க ஏத்துக்க முடியாதுன்னு சொல்லிட்டிருந்தேன் மேடம். அவர் சண்டைக்கு வரார்.... அதான் உங்களை கூப்பிட்டு வர ரோசியை அனுப்பினேன்....” என்றாள் லதா. தனக்கு திட்டு விழுமோ என்று அவள் பயந்தபடி பார்த்தாள்.

“யுவர் குட் நேம் ப்ளீஸ்.”

“சந்திரன்....”

“லுக் மிஸ்டர் சந்திரன். நாங்க ரூம் தான் வாடகைக்கு விடுகிறோம். கேர் டேக்கர் எல்லாம் ப்ரோவைட் பண்ண முடியாது. நீங்க வேற இடம் பாருங்க. ப்ளீஸ்.. கஷ்டமர்கள் வரும் நேரம். தொந்தரவு....”

“என்ன மேடம் இப்படி சொல்றீங்க?. ஒரு எமர்ஜென்சி.... அதான் கேட்டேன். எவ்வளவு பே பண்ணணுமோ பண்ணிடறேன்....”

“ஸாரி மிஸ்டர். எங்க ரௌட்டீன் வேலையை பார்க்கத் தான் நாங்க ஆட்களை வச்சிருக்கோம். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் சர்வீஸ் பண்ண அல்ல.. புரிஞ்சுக்கோங்க.” என்றாள் காவ்யா.

“நாங்க சென்னையிலிருந்து வரோம். நா இங்க ப்ராஜெக்ட் விஷயமா வந்தேன். தங்கை என் கூட வந்தா.. வந்த இடத்தில்..”

“கதை எல்லாம் வேண்டாம் சார். அவங்க இங்க தங்கட்டும் எந்த பிரச்சனையும் இல்ல. நீங்க கேக்கிற மத்த பெசிலிடீஸ் இங்க கிடைக்காது. ஜஸ்ட் லீவ்.” என்று அவள் சொல்ல....

“மேடம்.... என் தங்கை ஒரு மரத்தின் வேர் தடுக்கி தலைகுப்புற விழுந்திட்டா. டாக்டர் கிட்டே போய் கட்டு போட்டிட்டு வந்திருக்கா. ஹெல்ப் இல்லாம நடக்க முடியாது. நா அவ கூட இருக்கமுடியாது. வேலைக்குப் போனும். ஒரு வாரம் தான். பிறகு நா வந்து கூட்டிப் போயிடுவேன். லேடீஸ் பாதுகாப்பா தங்க இந்த இடம் தான் பெஸ்ட்ன்னு சொன்னாங்க.” என்று சொல்லி நம்பிக்கையுடன் பார்த்தான். “இல்லே.... சொன்னா கேளுங்க. இரக்கப்படறேன். ஆனா வேற ஒண்ணும் செய்ய முடியாது.”

நெற்றியை தேய்த்துவிட்டுக் கொண்டு அங்கேயே நின்றான். அவன் கண்களில் கோபம் தெரிந்தது. ப்ளீஸ் என்ற வார்த்தை அவன் வாயிலிருந்த வரவில்லை. ஏதோ உரிமை உள்ளவன் போல் அதட்டிக் கேட்கிறான் என்று எரிச்சல் அடைந்தாள் காவ்யா.

இது ஒரு விடுதி. கொடைக்கானல் சுற்றிப் பார்க்க வருபவர்கள் ரெண்டு நாளோ, மூன்று நாளோ தங்கி, சுற்றிப் பார்த்துவிட்டுப் போவார்கள். சிலர் ஒரு வாரம் கூட தங்குவார்கள். காவ்யா ஒரு ரூல் வைத்திருந்தாள்.

“லதா.. ரோசி கேட்டுக்கங்க. பெரும்பாலும் பெண்களுக்கான விடுதி இது. தனியா அல்லது ரெண்டு மூன்று பேரா வரும் பெண்களுக்கு பர்ஸ்ட் ப்ரபரன்ஸ் கொடுங்க. தனியா வரும் ஆண்களுக்கு இங்கே இடம் கொடுக்கக் கூடாது.... “

அவள் இந்த வழக்கத்தை ஸ்டிரிக்டாக கடைபிடித்து வருகிறாள்.

லதாவிடம் கேட்டால் அவள் சொல்லுவாள்.

“சில ஆண்கள் குடித்துவிட்டு வருகிறார்கள். அட்டகாசம் பண்ணுகிறார்கள். தகராறு ஆரம்பிக்கிறது. போலீசை கூப்பிட வேண்டி இருக்கு. அதான் தனியாக வரும் ஆண்களுக்கு ரூம் கிடைக்காதுன்னு மேம் சொல்லிட்டாங்க. மேலும் இங்கே வேலை பார்ப்பவர்கள் முக்கல்வாசி பெண்கள் தான்.”

புதிதாக வேலைக்கு சேர்பவர்களிடம் இந்த விதியை சொல்லிவிடுவாள் லதா.

“வாட்ச்மேன் கந்தசாமி.... எலெக்ட்ரிஷன் மோகன், மோட்டார் போடும் கண்ணன் இவர்கள் தவிர மற்ற எல்லோரும் பெண்களே.”

சந்திரன் தன் தங்கைக்கு தான் ரூம் கேட்கிறான். அதே சமயம் நர்ஸ் போல் பார்த்துக் கொள்ள ஆள் கேட்கிறான். அது முடியாது என்றால் வாதாடுகிறான். “நீங்க கிளம்புங்க சார்....” என்றாள் லதா.

“மனிதாபிமானமே செத்துவிட்டது. பொண்ணுக்கு பொண்ணு ஹெல்ப் பண்ணுவீங்கன்னு பார்த்தா இப்படி இரக்கமில்லாம விரட்டி அடிக்கிறீங்க.....” என்றான்.

“இடத்தை காலி பண்ணுங்க.”

மோகன் முகத்தை தொங்கப் போட்டபடி கார் பார்க் பண்ணியிருந்த இடத்துக்கு வந்தான்.

“என்ன அண்ணா.? ரூம் கிடச்சுதா.?”

“கிடச்சுது. ஆனா ஒரு ஆள் உன் கால் சரியாகும்வரை கவனித்துக் கொள்ள வேணும்னு சொன்னதுக்கு துரத்தாதா குறையா கத்திடுச்சு அந்த லேடி. இப்ப என்ன பண்ணறது ஹேமா.?”

“சரி அண்ணா.. நா எப்படியாவது மேனேஜ பண்ணிக்கிறேன். நீ சேர்த்துவிட்டுப் போ. வந்த இடத்தில் எங்க போறது ஆள் தேடி.?”

“நா நாளையிலிருந்து கம்பனி மீட்டிங் அட்டென்ட் பண்ணணும்... நா ஒரு பை ஸ்டார் ஹோட்டலில் தான் தங்கவேணும். அங்கே நீ இருக்கலாம் தான். ஆனா உன்னை யார் கவனிச்சுக்கறது.? கால் வீங்கிக் கிடக்கிறது. வலி வேறு. காலை ஊனவே முடியலை.... இந்த லட்சணத்தில் எப்படி மேனேஜ் பண்ணுவே.? அதான் உன்னை என்னோட வரவேண்டாம்ன்னு சொன்னேன். கேட்டியா நீ.?”

“ஸாரி அண்ணா.” விண் விண் என்று வலித்தது.

சந்திரன் கவலையுடன் சே.. என்று சொல்லி கார் கதவில் குத்தினான். “சரியான பேய் அந்தப் பெண்.”

காவ்யா வேறு வேலைகள் கவனிக்க ஆரம்பித்தாள். மாடியில் தனி அறையில் இருந்த அம்மாவை போய் பார்த்தாள்.

வேதவல்லி அம்மாள் இருகாலையும் ஒரு மோடா மேல் நீட்டி வைத்துக் கொண்டு சோபாவில் சாய்ந்திருந்தார்.

“அம்மா.... காப்பி சாப்பிட்டியா.?”

“ஆச்சு டா கண்ணு. உன் சித்தி அமுதவல்லி ஃபோன் பண்ணா.”

“என்னவாம்.? சூரியா நல்லா இருக்காளா மா.? இந்த வருடம் அவள் டென்த் முடிக்கப் போறா.”

“சித்தி ஒரு வரன் சொன்னாள்..”

“ஆரம்பிச்சாச்சா டார்சர். அக்காவும் தங்கைக்கும் இதை விட்டா வேற வேலை இல்லையா.? சும்மா வெறுப்பேத்திக்கிட்டு....”

வேதவல்லி மெருமூச்சு விட்டாள். நாலு வருடம் முன் கணவர் யோகிநாதன் இறந்தபோது அவர் வாழ்க்கையே ஸ்தமித்துப் போனது. யோகிநாதன் சிறிய அளவில் ஆரம்பித்தது தான் இந்த விடுதி. இப்ப விரிவாக்கப்பட்டு பத்து அறை கொண்ட விடுதியாக மாறி இருந்தது. திடுதிப்பென்று அவர் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட காவ்யாவுமே திகைத்துப் போனாள். அப்பொழுது தான் எம்,பி.ஏ முடித்திருந்தாள். கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. “காவ்யா.... விடுதியை வித்திடலாம். உன்னால் எப்படி நடத்த முடியும்.?” என்றார் வேதவல்லி.

“நீ எடுத்து நடத்து காவ்யா. நீ தான் பிசினஸ் மேனேஜ்மெண்ட் பத்தி படிச்சு பட்டம் வாங்கியிருக்கியே. எதுக்கு ஓகோன்னு போயிட்டிருக்கிற பிஸினஸ்சை மூடணும்.?” என்றாள் சித்தி அமுதவல்லி. காவ்யா இதை சவாலாக எடுத்து நடத்த காரணமாக இருந்தவன் தான் பிரசாத்.

விடுதியை விற்க போவதாக வந்த விளம்பரத்தைப் பார்த்து அதை வாங்க வந்தவன் தான் பிரசாத்.

சுற்றிப் பார்த்துவிட்டு அவன் சொன்னான்.

“ஏங்க.... இதை விக்க உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு.?”

“என்ன சொல்றீங்க.? நீங்க வாங்கத் தானே வந்தீங்க.? பிடிச்சிருக்குன்னா.. வாங்கிடுங்க. எங்களுக்கு உதவியா இருக்கும்.” என்றாள் காவ்யா.

“அழகான லோகேஷனில் இருக்கு. அமைதியான இடம். அதே சமயம்.... ரெண்டு கிலோமீட்டரில் மால்கள், ஸ்கூல்.. பஸ் ஸ்டாண்ட் என்று வசதியா இருக்கு. இதை போய் விப்பாங்களா.?”

அவள் குழம்பினாள். அவளுக்கு சற்று எரிச்சல் வந்தது.

“மிஸ்டர் பிரசாத். வாங்கப் போறீங்களா இல்லையா.? இல்லன்னா நடையை கட்டுங்க.... யூ ஆர் வேஸ்டிங் மை டைம்.”

“ஏன் இதை நீங்க எடுத்து நடத்தக் கூடாது.? நா ஹெல்ப் பண்ணறேன். எனக்கு மேனேஜரா வேலை போட்டுக் கொடுங்க. சம்பளம் உங்க சாய்ஸ்.”

இவன் எந்த நோக்கத்தில் இங்க வந்து மானுபுலேட் பண்ணுகிறான்.?

ஏதாவது சொல்லி அனுப்பிவிடுவோம். பைத்தியக்காரன்....

“சரி மிஸ்டர். நீங்க அப்புறம் வாங்க. உங்க ஃபோன் நம்பர் கொடுங்க.”

அவன் நம்பரை வாங்கி அவனை விரட்டாத குறையாக அனுப்பிவிட்டாள்.

“நீங்க தப்பு பண்றீங்க. என்னுடைய ஆபரை நீங்க புறக்கணிக்க முடியாது. யூ வில் கால் மீ.”

காவ்யாவுக்கு சுருக்கென்று கோபம் வந்தது.

“நெவர். உங்க ஹெல்ப் எங்களுக்கு வேணாம். டோன்ட் டிரீம் அபௌட் இட்....” என்றாள்.

அவன் சிரித்துவிட்டுப் போனான். அது ஏளனமா.? அக்கரையா.? தந்திரமா.?. புதிதாக களத்தில் இறங்கியிருக்கும் காவ்யாவுக்குப் புரியவில்லை.

சொந்தம் தொடரும்.
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: காதல் எங்கள் சொந்தம் - 1
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.