• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

காதல் எங்கள் சொந்தம் - 11

நிதனிபிரபு

Administrator
Staff member
பதினொன்றாம் அத்தியாயம்.

காதல் எங்கள் சொந்தம்.. 11

எதிர்பாராத திருப்பங்கள் வாழ்க்கையில் வரும்.

நடந்ததெல்லாம் கனவா நினைவா என்று ஆச்சரியம் ஹேமாவுக்கு. காவ்யா உயிருடன் தப்பியது கடவுள் செயல்.

அவர்கள் ஏரியிலிருந்து திரும்பி வரும்பொழுது.. ரெண்டு முரடர்கள் வழிமறித்து நின்றனர். ஒருவன் கத்தியுடன் காவ்யாவை நோக்கி பாய்ந்தான்.... என்ன அதிசயம், ஹேமா மரத்தில் வேர் தடுக்கி விழுந்தது போல் அவன், அங்குள்ள வேர் தடுக்கி டமால்ன்னு விழுந்தான்.. இருவரும் ஓட்டம் பிடித்தனர்.... தப்பித்தனர்.

“ஹேமா... இது அந்த பிரசாத்தின் வேலையாகத் தான் இருக்கும்.” என்றாள் காவ்யா காரை ஒட்டியபடி.

“ஏற்கனவே ரெண்டு கொலை செஞ்சவனுக்கு இன்னொரு கொலை பெரிய விஷயம் இல்ல காவ்யா. அவன் உன்னை பாலோ பண்ணிக்கிட்டு தான் இருக்கான் போலிருக்கு. வண்டியை காவல் நிலையத்துக்கு விடு....புகார் கொடுப்போம்.”

“கண்டிப்பா.. அங்க தான் போறோம். ஹேமா....அந்த மரத்தின் வேருக்கு நன்றி சொல்லணும். இட் இஸ் மன்னு ஃப்ரம் ஹேவன்.... என்ன தெரியுமா.? இஸ்ரேல் மக்களின் நாற்பது ஆண்டு கால பாலைவன வாழ்க்கையில், அவர்களுக்கு மன்னு என்ற தேன் கலந்த ரொட்டிகள் சொர்கத்திலிருந்து விழுந்ததாம். அவர்களை உயிர் வாழ வச்சுதாம். மன்னு அதிசய உணவு. திருக்குரான் இது பற்றி சொல்கிறது. நமக்கு அந்த மரத்தின் வேர் தான் மன்னு. நம்மை உயிர் வாழ வச்சிருக்கு...”

“ஓ இண்டரெஸ்ட்டிங். நீ குரான் படிச்சிருக்கே..!”

“பைபிள் கூட படிச்சிருக்கேன். எல்லா மதமும் அன்பை தானே போதிக்கிறது. திருக்குறள் மாதிரி அங்கும் பல அரிய கருத்துக்கள்

சொல்லப்பட்டிருக்கு.....”

காவல் நிலையத்தில் பிரசாத் மேல் புகார் கொடுத்தனர்.

சந்திரனிடம் சொல்ல வேண்டாம் என்று முடிவு எடுத்தாள் ஹேமா.

“உடனே வந்திடும்பான்.. “ என்றாள் ஹேமா.

“மாட்டார். எனக்கு துணையா நீ இருக்கணும்பார்.” என்றாள் காவ்யா.

“அதுவும் சரிதான்.. ஆனாலும் இப்ப சொல்ல வேணாம். அப்பா பயப்படுவார்.” என்றாள்.

மறுநாள் அவள் நிர்மல் வீட்டை நோக்கி நடந்தாள். அந்த நிர்மல் சிடுமூஞ்சியை சந்திக்கணும் என்றாலே பக்கென்றது. ஆனாலும் வீட்டின் மேல் உள்ள ஆசையால் அவள் கால்கள் அந்த திக்கு நோக்கிச் சென்றது.... ஒரு ஆச்சரியம்.! எதிரே இன்பா ஓடி வந்தது. அவளைக் கண்டதும் நின்றது. அவள் குனிந்து அதன் முதுகை மிருதுவாக தடவினாள். அடுத்த கணம் நிர்மல் வந்து நின்றான்.

“இன்பா என்னை விட்டு ஓடியது. உங்களை ஸ்மெல் பண்ணிவிட்டு தான் அப்படி ஓடியிருக்கு..”

“ஸார்.. வாக்கிங் வந்தீங்களா.?”

அவன் மெல்லிதாக புன்னகைத்தான். நீல டீ ஷர்ட்டில் ஸ்மார்ட்டாக இருந்தான். இளம் காலைக் கதிர்கள், அடர்ந்த மரங்களின் ஊடே நுழைந்து தரை எங்கும் காசு காசாக வெளிச்சம் பரப்பியிருந்தது. அவள் முகம் கதிரொளி பட்டு மின்னியது. அழகான பெண் தான்.... பாவம் அவளிடம் அன்று எரிந்து விழுந்தோமே..

“நீங்க வாக்கிங்கா இல்ல ஸ்டாக்கிங்கா.? என்னை கார்னர் பண்ண வந்திருக்கீங்களா.?” கண்டுபிடித்து விட்டானே.!

“நான் ஏன் ஸார் உங்களை ஸ்டாக் பண்ணப் போறேன்.? இன்பாவை பார்க்க ஆசையா இருந்துச்சு.. அதான் வந்தேன்.”

“வாங்க.. ஒரு கப் காப்பி குடிச்சிட்டுப் போலாம்..”

அழகழகான ரோஜாப் பூக்களின் நறுமணத்தகை உள்ளிழுத்தபடி அவனுடன் நடந்தாள். வீட்டின் முகப்புக்கு வந்தார்கள்.

“உங்களுக்கு ரோஜாப் பூக்கள்ன்னா ரொம்பப் பிடிக்குமா.?”

“காலனிகளை கழற்றிவிட்டு வாங்க.... எங்கம்மாவுக்கு ரோஜான்னா ரொம்பப் பிடிக்கும். நிர்மலமான மலரும்பாங்க. எனக்கும் நிர்மல்ன்னு பேர் வச்சாங்க.... அவங்க வளர்த்த செடிகள் தான் எனக்கு இப்ப அம்மா.” அவன் கண்கள் ஈரத்துடன் மின்னியது....

“ஸாரி..... எனக்கு எங்கம்மாவை படத்தில் தான் தெரியும். அப்படிபட்ட புண்ணியம் பண்ணியிருக்கேன்....”

அவன் மணக்கும் பவுன் நிற காப்பியை கப்பில் கொண்டு வந்தான். இன்பா ஹேமா காலடியில் உட்கார்ந்து கொண்டது.

“இன்பா.. நா தான் உன் எஜமான். நீ கட்சி மாறிட்டே. துரோகி.” செல்லமாக இன்பாவை திட்டினான். “காப்பி நல்லா இருக்கா.?”

“சூப்பரா இருக்கு. சமையல் கூட நீங்க தானா.?”

“இல்ல.... எட்டு மணிக்கு மங்களம் அம்மா வருவாங்க. சமையல்.. இரவுக்கு வேண்டிய டிபன் எல்லாம் செஞ்சு வச்சிட்டுப் போவாங்க. அவங்க தான் எனக்கு இப்ப அம்மா.”

“வாங்க வீட்டை சுத்தி காமிக்கிறேன்..”

பழங்காலத்து வீடு. “தாத்தா கட்டியது. இங்க தான் வளர்ந்தோம். பிரபு அண்ணாவின் அம்மா புஷ்பாம்மா இறந்தபிறகு, அப்பா எங்கம்மாவை கல்யாணம் பண்ணிக்கிட்டார். அண்ணாவும் எங்கம்மாவும் ரொம்ப கிளோஸ். கல்யாணம் பண்ணிய பிறகு தான் தனியா போனான்.”

“ஓ.. உங்களுக்கும் உங்க அண்ணாவுக்கு ஏதேனும் பிரச்சனையா.?”

பயந்து கொண்டே கேட்டாள். அவன் முகம் மாறியது. வலது கையால் நெஞ்சை நீவி விட்டுக் கொண்டான். நெஞ்சுக் குழியில் சிக்கி தவித்த உணர்வின் பிடியால்.... இருமல் வந்தது. அருகில் இருந்த தண்ணீர் ஜக்கிலிருந்து நீர் நிரப்பிக் கொடுத்தாள்.

அவன் அதை வாங்கி மடமடவென்று குடித்தான்.

“ஸாரி.. நா கேட்டிருக்கக் கூடாது.... வெரி ஸாரி நிர்மல்....”

“இட்ஸ்.. ஓ. கே. வாங்க மாடிக்குப் போலாம்.” மாடிப்படி அகலமாக இருந்தது. ஆங்காங்கே படியின் விளிம்புகள் பெயர்ந்து.... செப்பனிட வேண்டிய தேவையை காட்டியது.

மாடியின் விஸ்தாரம் கீழே உள்ளது போல் பிரமிக்க வைத்தது. நான்கு அறைகள்.. எல்லாமே பெரிசு. பழங்காலத்து கனமான தேக்கு மர நாற்காலிகள்.. கட்டில்கள்.. அழகிய வேலைப்பாட்டுடன்.... இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால்.. பெரிய வால்கிளாக். அதன் அருகே நின்று வியந்து பார்த்தாள் ஹேமா....

“தாத்தா வாங்கிய கடிகாரம்.. “

எல்லா அறையையும் சுற்றி கான்பித்தான். ஒரே ஒரு அறை மட்டும் தூசி படிந்த ஓட்டடையுடன் சுத்தம் செய்யப்படாமல் இருந்தது.

“இது என் அம்மாவின் அறை. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு.... இனிமேல் வைத்தியம் செய்து பிரயோஜனம் இல்லைன்னு மருத்துவர் சொல்ல.. காயங்களோட போராடி, என் மடியில் தான் இறந்தாங்க.... நா அஜாக்கிறதையா வண்டி ஒட்டியதால்.... விபத்து ஆயிடுச்சு.... அந்தக் குற்ற உணர்வு என்னைக் கொல்கிறது.”

அவன் திடீரென குலுங்கி குலுங்கி அழுதான்.

“என் அம்மாவை கொன்னுட்டேன். பாவி நான்....”

திடுகிட்டுப் போனாள் ஹேமா. பிரபுசங்கர் சொன்னானே, புத்தம் புதிய காரில் அம்மாவுக்கு லிப்ட் கொடுத்தான்னு. விபத்துக்குள்ளாகும்ன்னு நினைச்சிருப்பானா.?.. இவன் லேசான காயங்களுடன் தப்பிக்க, அம்மா படுகாயம் அடைந்து.... உயிர் போனது. அழும் நிர்மலை எப்படி சமாதானப்படுத்துவது என்று அவள் எண்ணிக் கொண்டிருக்கும் போதே அவன் பொத்தென்று விழப் போனான். அவள் தாங்கியபடி, தரையில் மெல்ல படுக்க வைத்தாள். அப்படியே விழுந்திருந்தால் தலையில் நல்ல அடி பட்டிருக்கும். கைகால் இழுத்துக் கொண்டது.

“ஸார்.... நிர்மல் ஸார்....” என்று கத்தினாள். தவித்தாள். இவள் குரல் கீழே கேட்க.. சமையல் செய்து கொண்டிருந்த மங்களம் மாமி மாடிக்கு ஓடி வந்தாள்..

“தம்பி தம்பி....” என்றவள் ஓடிப் போய் ஒரு தலையணையை எடுத்து அவன் தலைக்கடியில் வைத்தாள். அவனை பக்கவாட்டில் படுக்க வைத்தாள். அவன் மேல் சட்டையை தளர்த்தினாள்.. அவன் முதுகை தடவிக் கொடுத்தாள். வலிப்பு நின்றது. எழுந்து கொள்ள முயன்றான்.

“தம்பி ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல.. பயப்படாதீங்க....” மெல்ல கை கொடுத்து அவளும் ஹேமாவும் தாங்கியபடி கட்டிலில் படுக்க வைத்தார்கள். “ரொம்ப களைப்பா இருப்பார்.... ரெஸ்ட் எடுக்கட்டும்.” போர்த்தி விட்டாள். இவள் என் அம்மா மாதிரி என்று நிர்மல் சொன்னது நிஜமே.

இருவரும் அறையை விட்டு வந்தனர்.

“ரொம்ப பயந்துட்டேன் மா. இப்படி அடிக்கடி வருமா.?”

“அம்மாவோட நினைவு வரும்போது தான்... டாக்டர் கிட்டே காட்டினார் பிரபு. டாப்லெட் தினமும் எடுத்துக்கணும். மறந்திட்டார் போல.. அதான். பயப்பட வேணாம். பார்த்துக்க மா. கண் முழிச்சதும் டாப்லெட் போட்டுக்க சொல்லு. நா சமையல் பண்ண போகட்டா.? எழுந்ததும் ரொம்பப் பசிக்கும்....”

“சரிங்கம்மா. நா பார்த்துக்கறேன்.... “

மங்களம் மாமி கீழிறங்கி போனதும், ஹேமா அவன் அறைக்குள் நுழைந்தாள். அவள் ஆடிப் போய்விட்டாள். அவளுக்குள் பலவித கேள்விகள். ஏன் இப்படி இந்த பிரச்சனையோடு தனியே இருக்கிறான்.! பிரபு சொல்வது போல் அவருடன் போய் இருக்க வேண்டியது தானே.? வீட்டை விற்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்க என்ன காரணம்.?

பத்து நிமிடம் இருக்கும் லேசாக கண் விழித்தான்.

“நிர்மல் ஸார்.. இப்ப எப்படி பீல் பண்ணறீங்க.? ஏதாவது சாப்பிட கொண்டு வரட்டுமா.?..” கனிவுடன் அவள் சொல்லி அவனை அன்புடன் பார்த்தாள்.

“உங்களுக்கு தொந்தரவு கொடுத்திட்டேன். ஸாரி.. மங்களம் மாமி வந்திருக்காங்களா.? அவங்க குரல் மாதிரி கேட்டுச்சு..”

“ஆமா நிர்மல். அவங்க வந்தது நல்லதாப் போச்சு. சாப்பிட ஏதேனும் கொண்டு வரேன்..” அவன் பதிலுக்கு காத்திருக்காமல் அவள் கீழே சென்றாள். உப்புமா கிண்டும் வாசம் வந்தது.

“மாமி.. நிர்மல் கண் முழிச்சிட்டார். ஏதேனும் சாப்பிட கொண்டு போகவா.?” சுடச் சுட உப்புமாவை ஒரு தட்டில் வைத்து ஒரு ஓரத்தில் சீனியும் வைத்தாள்.

“தம்பிக்கு சீனி வச்சு சாப்பிட பிடிக்கும்.. கொண்டு போம்மா. ஆனா..”

தட்டை வாங்கிக் கொண்ட ஹேமா “என்ன மாமி.?”

“நீ யாரும்மா.?”

“நான் ஜஸ்ட் வாக்கிங் போயிட்டு இருந்தேன். இவரும் வந்தார். பேசிக்கிட்டே வந்தோம்... வீட்டை விற்க..”

“கண்ணு.. அந்த பேச்சை இனிமே எடுக்காதே. வீட்டை விக்க தம்பிக்கு துளியும் இஷ்டமில்ல. சரி.. நீ அவருக்கு உப்புமாவை ஊட்டி தான் விடணும். எடுத்து சாப்பிட கையில் தெம்பு இருக்காது. நீ கொடுப்பியா.? இல்ல நீ அடுப்ப பார்த்துக்க, நா போய் ஊட்டி விடறேன்..” என்றார் மாமி.

“அய்யோ அடுப்படி வேலை வேண்டாம். நானே ஊட்டி விடறேன்..”

“ரொம்ப சந்தோஷம் தாயி. பாவம் அந்த பிள்ளை. அம்மாவை பறிகொடுத்திட்டு.. தன்னைத் தானே வருத்திக்குது.. நீ ஆறுதலா பேசு..” மங்களம் கீரையை வதக்க ஆரம்பித்தார்.

அப்பொழுது பிரபு அங்கு வந்து நின்றான்.

“நீங்களே இங்க தான் இருக்கீங்களா.? வாங்க நிர்மல் கிட்டே பேசிடலாம். உங்க டீடெயில்ஸ் கொடுங்க பத்திரம் எழுதிடலாம்.”

“வேண்டாம் பிரபு ஸார். நான் வீட்டை வாங்கலை. உங்க தம்பி இருக்கும் மனநிலையில்.... நீங்க விக்கணும்ன்னு சொல்றது நியாயமில்ல. ப்ளீஸ் டிராப் த ஐடியா.”

அவள் பேசியதை மாடிப்படி வளைவில் நின்றிருந்த நிர்மல் கேட்டான். அவன் மனசுக்கு ஆறுதலாக இருந்தது.

சொந்தம் தொடரும்.
 
Top Bottom