காதல் எங்கள் சொந்தம் - 14

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,210
16,607
113
Germany
பதினான்காம் அத்தியாயம்

காதல் எங்கள் சொந்தம்...14

கடலையோ நதியையோ எதிரில் பார்க்கும்போது, மனசு ரசிக்கும் மூடுக்கு போய்விடும். கடலைகளின் சங்கீதம், நதியின் ஓட்டம் எல்லாம் மனசை அப்படியே ஈர்த்துவிடும். கவலை விடைபெறும். ஓடும் நீருக்கு அந்த ஆற்றல் உண்டு. என்னோடு வா.. என்று மனசை இழுத்துக் கொண்டு போகும்.

ஹேமாவுக்கும் அப்படித்தான்.. ஏரி எதிரில் உட்கார்ந்ததும் அவள் ஸ்வாசம் சீரானது. மழை தந்த கொடை தான் நீரலைகள். படகு சவாரி செய்பவர்களின் குதூகல முகங்கள் அவள் முகத்தில் புன்னகையை வரவழைத்தது. எத்தனை இன்பமாக செல்கிறார்கள்.!

ஒரு தாய் தன் குழந்தையுடன் கொஞ்சிக் கொண்டிருக்கும் காட்சியை அவள் பார்த்தாள். தாயின் கண்களில் நட்சத்திர பிரகாசம்.... குழந்தை அம்மாவின் பிடியில் சொகுசாக உட்கார்ந்து கொண்டிருந்தது. எட்டு மாசம் இருக்குமா.? என்ன ஒரு சிரிப்பு.! அதுக்கு ஈடு இணை இல்லை என்று தோன்றியது. இப்படி தன் தாயின் கைச் சூட்டில் அவள் இருந்ததில்லை. அம்மா இருந்தால் தானே.?

“என்ன ஹேமா.? இங்க என்ன பண்ணிட்டு இருக்க.? அண்ணா கூட போன..” குரல் கேட்டு திரும்பினாள். நிர்மல். வெள்ளையாய் சிரித்த அவன் முகத்தில் குழந்தைத்தனம் தெரிந்தது.

“நீங்க இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க.? வீட்டுக்குப் போகலை.?”

அவனுக்கு பெஞ்சில் இடம் விட்டு, நகர்ந்து உட்கார்ந்தாள். அவனும் உட்கார்ந்தான். “வீட்டிலே எனக்கு இன்பாவைத் தவிர யார் இருக்கா.?”

“வீம்பு பிடித்து தனியா இருக்கீங்க. அப்புறம் குறை சொல்றீங்க. பிரபு அண்ணா கூட போய் இருக்க வேண்டியது தானே.?”

அவன் ஒரு கணம் முகம் வேறுபட்டு தலைகுனிந்தான்.

“ஹேமா.... நானும் என் அண்ணாவும் இப்ப நல்ல டெர்ம்சில் இல்லை. அது ஒரு காலம்.. அண்ணா தான் உலகம்ன்னு இருந்த காலம். சீன் மாறிடுச்சு. அண்ணன் தம்பி என்ற ரத்த சொந்தம் மட்டும் இணைக்கும் பாலம் இல்ல. அதுக்கு பிரெண்ட்ஷிப் இருக்கணும். நட்பு நோக்கில் பார்த்தால் தான் நிஜம் விளங்கும். அந்த தகுதியை நாங்க இழந்திட்டோம்.... எதிர் எதிர் திசையில்....”

“பேசி புரிய வைக்கலாமே நிர்மல்.. அதுக்காக சொந்தம் விட்டுப் போக அனுமதிக்கலாமா.?”

“ஒரு சந்தர்ப்பம் இருந்துச்சு. தவற விட்டேன். அந்த நிமிஷம் தொலஞ்சு போச்சு....”

இருவரும் பேசாமல் படகுகள் ஆங்காங்கே மிதந்து போவதை வேடிக்கை பார்த்தார்கள். மெதுவாக ஹேமா சொன்னாள்.

“என்ன உங்க பிரச்சனை.? சொன்னா நான் முடிஞ்ச உதவி செய்வேன். நா பாசாங்கு பண்ணலை. நிஜ கரிசனத்துடன் கேக்கறேன். விருப்பம் இருந்தா சொல்லுங்க..”

காற்று சற்று பலமாக வீச.... ஹேமாவின் உடல் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது.

“ப்பா.. குளிர் காற்று வீசுது. அதோ பாருங்க.. ஏரியின் நீர் கூட வட்ட வட்டமா காற்றுக்கு மயங்குது.. நல்லா இருக்கு இல்ல.?” என்றாள்.

அவன் வாழ்க்கை மாறிவிட்டது. சொகுசான பாதுகாப்பு வளையத்திலிருந்து அவன் வெளியே வந்துவிட்டான்.... அவனுக்கு அவனை நம்பும் ஒரு இதயம் வேண்டும்.. அது இவளாக இருக்குமோ.? “காத்து பலமா அடிக்குது. நடுங்கிட்டு இருக்க. வா வீட்டுக்குப் போலாம்...”

சட்டென்று தலையாட்டி எழுந்தாள். நோ.... சந்திரன் அண்ணா இதை விரும்ப மாட்டான்.. எழுந்தவள் மீண்டும் உட்கார்ந்தாள்.

“இன்னொரு நாள் வரேன்.. அண்ணா தேடிட்டு இருப்பான்.”

“ஹேமா.... உனக்கு என்ன வேணும்ன்னு நீ தான் முடிவு எடுக்கணும். அண்ணாவுக்கு பிடிக்காது.. ஆட்டுக்குட்டிக்குப் பிடிக்காதுன்னு தயங்கிக்கிட்டே இருந்தா.. நீ வாழ முடியாது.. காணாம போயிடுவே. நானும் அப்படித்தான் இருந்தேன்.... இப்ப உணர்ந்திட்டேன்... ஸாரி ஏதாவது தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சிடு....” என்றான் நிர்மல்.

அவன் வார்த்தைகள் தந்த வேகத்தில் “சரி வாங்க போகலாம்.” என்றாள். அந்த சமயம் அவள் ஃபோன் ஒலித்தது. சந்திரன்.... அது அடித்து ஓயும்வரை பார்த்துக் கொண்டிருந்தாள். ஸ்விட்ச் ஆப் பண்ணும் போது கை நடுங்கியது.. ஸாரி அண்ணா.. நா நிர்மல் கூட பேசிட்டு வரேன்.... முதல்முதலாக அவள் தைரியமாக முடிவு எடுக்கிறாள். நிர்மல் அவள் தைரியத்தை பாராட்டிவிட்டு....

“நீயும் நானும் அடங்கி இருந்து, அதன் வலியை புரிந்து கொண்டோம். நமக்குள் ஒற்றுமை. உன் கூட மனசு விட்டுப் பேச ஆசைப்படறேன்....”

இருவரும் நிர்மல் வீட்டை அடைந்தார்கள். என்னை விட்டிட்டா போனீங்க.... இன்பா சோகமாக கிடந்தது.

“ஹாய் இன்பா.... ஸாரிடா. இதோ வந்திட்டேன் பார்.... கம் கம்.”

நிர்மலின் அழைப்புக்கு செவி சாய்க்காமல் வாலை தன் கால்களுக்கு இடையில் வைத்து தன் கோபத்தைக் காட்டியது இன்பா.

இன்பாவை கொஞ்சி பிஸ்கட் கொடுத்து சமாதானம் செய்தாள் ஹேமா.

“உன்னை இன்பாவுக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. எனக்கும் தான்.” என்றான் நிர்மல்.

அவள் சுதாரித்து நிமிர்ந்து பார்த்தாள். ஹேமா இந்த மாதிரி பேச்சுக்கு மனசு நெகிழ்ந்து விடாதே. அகில் இப்படித்தானே சொன்னான். இன்னொரு காதல் தோல்வி வேண்டாம். அதை உன்னால் தாங்கமுடியாது.. உள்ளே ஒரு குரல் சொல்லியது.

“என்ன ஹேமா.? நா முன்னமே சொன்னது தான். நட்பு தான் நோக்கம். நா இருக்கும் மனநிலையில் காதல் என் பவுண்டரிக்குள் வராது. எனக்கு ஒரு முக்கியமான பணி இருக்கு.. அது தான் என் முதன்மையான டாஸ்க்.. நீ தைரியமா ஒரு பிரெண்டா என்னோட பழகலாம்....” என்றான். இவனுக்கு மைன்ட் வாய்ஸ் எல்லாம் கேக்குது.. அவள் அசடு வழிய சிரித்தாள்.

“ரிலாக்ஸ் ஹேமா. உக்காரு. உன் கிட்டே ஒரு உண்மையை சொல்லப் போறேன்.... நீ யார் கிட்டவும் சொல்லக் கூடாது.” அவளை நெருங்கி வந்தான். கண்ணுக்குள் பார்த்தான். மர்மமாக புன்னகைத்தான். அவன் முகம் தீவிரமாக இருக்க, கண்களில் ஒரு வெறித்தனம் தெரிந்தது. அவளை நடுங்க வைத்தது. என்ன இப்படி பார்க்கிறான்.! இது நார்மலா இல்லையே....

அவள் மனம் சுருங்கினாள். என்ன உண்மை.? கொலை கிலை பண்ணி இருப்பானோ.? அந்த ரகசியத்தை சொல்லி உதவி செய்ய கேட்கிறானோ.? பயத்துடன் விழித்தாள். கிரைம் நாவல் படித்து படித்து அவளுக்கு இப்படித் தோன்றியது. அவள் தைரியம் அவளைக் கைவிட்டது. ஓட யத்தனித்தாள்.

“எங்க ஓடற.. விட மாட்டேன்....” அவள் கையை கெட்டியாக பிடித்தான். அவள் கத்த நினைத்தாள்.. குரல் எழும்பவில்லை.

அவன் பிடி மெதுவாக தளர்ந்தது. கண்கள் செருகியது.. மயங்கி சோபாவில் சாய்ந்தான்.. கை கால்கள் இழுத்தது.. திடுக்கிட்டுப் பார்த்தாள். ஓடிவிடலாமா?. எப்படி இந்த நிலைமையில் விட்டிட்டு போக முடியும்.? மனிதாபிமானம் தடுத்தது.... அண்ணா என்று கத்தினாள். ஃபோன் வந்தது. நடுங்கியபடி ஆன் செய்தாள். யாரென்று கூட அவள் பார்க்கவில்லை.. “காப்பாத்துங்க....” என்றாள்.

“ஹேமா.. எங்க இருக்கே.? என்னாச்சு தங்கம்.?” சந்திரனின் குரல் கேட்டதும் தான் அவள் ஒரு நிதானத்துக்கு வந்தாள். நிர்மல் அசைவற்று கிடந்தான். பயத்தில் இருந்தாள். செத்துவிட்டானா.? அய்யோ.. “ஹேமா.. ஹேமா எங்க இருக்கே.?”

“அண்ணா.. நிர்மல் வீட்டில்.. அவன் அவன்.. செத்திட்டான் போலிருக்கு....” அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே நிர்மல் எழுந்து விட்டான். அவளிடமிருந்து போனை பிடுங்கினான்.

“நா உயிரோட தான் இருக்கேன் சந்திரன். உங்க சிஸ்டர் ஏதோ பயத்தில் உளறிட்டு இருக்காங்க. ஜஸ்ட் ஒரு டிப்ரெஷன்.. மயங்கிட்டேன்.. பயப்பட வேண்டாம்..” என்றான்.

“ஹேமா கிட்டே போனை குடுங்க..” என்று சந்திரன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நிர்மல் போனை கட் பண்ணி விட்டான்.

“ஹேமா.... என்னைப் பார்த்து எதுக்கு பயப்படற.? நா என்ன பயித்தியக்காரனா.? கொலைகாரனா.? நீ ஒரு கோழை. அண்ணனுக்கு அடிமையா இரு போ.... என் பிரச்சனையை காது கொடுத்து கேப்பேன்னு நினச்சேன்.. என் நம்பிக்கையில் மண் அள்ளி போட்டிட்டு ஓடப் பார்க்கிறே. நீ ஒருபோதும் தைரியமா உன் காலில் நிக்க மாட்டே...... நீ என் பிரெண்ட் இல்ல....”

அவள் திக்பிரமித்து நின்றாள். என்ன சொல்வது.. என்ன நினைப்பது என்று அவளுக்குத் தெரியவில்லை. நிர்மல் நல்லவனா.? கெட்டவனா.?

கார் சத்தம் கேட்டது. அடுத்த நொடி சந்திரன் ஓடி வந்தான்.. ஹேமா ஹேமா என்று கத்திக் கொண்டே வந்தான். ஹேமா அண்ணா என்று அவனிடம் ஓடி வந்து தோளில் சாய்ந்தாள்.

“நிர்மல்.... இனிமேல் என் தங்கையோடு நீ பேசக் கூடாது. மீறி அவ கூட பேசினே நா மனுஷனா இருக்க மாட்டேன். அவளோட நீ ஒரு போதும் வீட்டு விஷயமா பேச வேண்டாம்... வா ஹேமா.”

“ஸாரி ஸாரி சந்திரன்.... ப்ளீஸ்..”

அவன் பேசியதை காதில் வாங்காமல் சந்திரன் தன் தங்கையை அரவணைத்து ஒரு குழந்தையைப் போல் கூட்டிச் சென்றான்.

“சேச்சே.... சொதப்பிட்டேன். ஹேமா என்னை புரிஞ்சுக்குவான்னு நினச்சேன். தப்பு பண்ணிட்டேன்.... ஓ மை காட்..” என்று புலம்பிக் கொண்டிருந்தான் நிர்மல். ஃபோன் அடித்தது. பிரபு..

“ஹலோ..”

“என்னடா.. வழக்கம் போல் பார்ட்டியை பயமுறுத்தி வீட்டை வாங்க விடாமல் பண்ணிட்டே தானே.? திருப்தி தானே உனக்கு.? நீ திருந்தவே மாட்டியா.? என்னடா உன் பிரச்சனை.?” என்று கத்தினான் பிரபு. சந்திரன் அவனுக்கு ஃபோன் பண்ணி, நிர்மல் தன் தங்கையை பயமுறுத்தினதை சொல்லி.. உன் தம்பியை நல்ல டாக்டரிடம் காட்டு. அவன் ஒரு சைக்கோ மாதிரி இருக்கான்.. பி கேர்புல். இனி அவன் என் தங்கையிடம் பேசினால்.. போலீஸ் கம்பிலேன் கொடுப்பேன். சொல்லி வை.. என்று எச்சரித்து விட்டான். அதன் விளைவாக பிரபு தம்பிக்கு கால் பண்ணி திட்ட ஆரம்பித்தான்.

“நீயும் உருப்பட மாட்டே.. எங்களையும் நிம்மதியா இருக்கக் விட மாட்டே.... நீ என் தம்பி இல்லடா. யமன். சே.... ஹெல் வித் யூ.”

ஃபோன் பட்டென்று வைக்கப்பட்டது. நிர்மல் மனம் உடைந்து நின்றான். அப்போழுது அவன் முதுகை ஆதரவாக தடவி..

“நிர்மல்.. எனக்காக நீ இவ்வளவு ரிஸ்க் எடுக்கணுமா.? நா போயிடறேன்..... நீயும் பிரபுவும் ஒற்றுமையா இருந்தா, அதுவே எனக்குப் போதும்....” கண்ணீர் கண்களுடன் சொன்னப் பெண்ணைப் பார்த்து “அக்கா.... இல்லக்கா என்ன ஆனாலும் சரி.... நா இருப்பேன் அக்கா உனக்கு..” என்றான் நிர்மல்.

அங்கே பிரசாத்தை போலீஸ் பிடித்துக் கொண்டு போனது.

“தேங்க்ஸ் சந்திரன்.... நீங்க இல்லாட்டி இவன் வாட்ச்மேன் கந்தசாமியை கொன்று இருப்பான். மலர்விழி விடுதிக்கு கெட்ட பேர் ஏற்படுத்தனும்ங்கறது தான் இவன் நோக்கம்.” என்றாள் காவ்யா.

சொந்தம் தொடரும்.
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: காதல் எங்கள் சொந்தம் - 14
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
நிர்மல் கிட்ட பேசும் பெண் யார்????
என்னடா ஒரே மர்மா இருக்கு.....அக்காவா....
பிரபு & நிர்மல் ரெண்டு பசங்க தானே????