• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

காதல் எங்கள் சொந்தம் - 19

நிதனிபிரபு

Administrator
Staff member
பத்தொன்பதாம் அத்தியாயம்.

காதல் எங்கள் சொந்தம்.... 18

பூமாலை ஒன்றை கட்டிக் கொண்டே வரும்போது. சடாரென்று ஒரு கண்ணி அறுந்து பூக்கள் உதிர்ந்து.... சிதறி விடுவது போல்.... அழகிய பாதையில் போய் கொண்டிருந்த நிரஞ்சனின் வாழ்க்கை துண்டிக்கப்பட்டது போல் ஆகிவிட்டது.

“நிரஞ்சன் என்னால் உனக்கு கஷ்டம்..” என்று மனம் வருந்தி சொன்னாள் கலா.

“இந்த மலைத் தொடர்.. அபூர்வ பூக்கள்.. சுத்தமான காற்று.. வாவ் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு கலா.”

“நிரஞ்சன்.... நா என்ன சொல்றேன்.... நீ என்ன பேசிட்டு இருக்க.? என்னாலே உன் காதல் வாழ்க்கை பட்டுன்னு கட் ஆயிடுச்சு. நீ கிளம்பு. நான் பார்த்துக்கறேன்....”

“நீ எதுவும் பேசாதே கலா. இந்த மாதிரி சமயத்தில் உன்னை விட்டிட்டு போனா.... நான் மனுஷனே இல்ல..”

அந்நிய மண்ணில்.... ஒரு சிக்கலோடு போராடிக்கொண்டிருக்கும் கலா.... நிலைமை வெடித்துவிட்ட பின், வேறு வழி தெரியாமல் தான், நிரஞ்சனுக்கு ஃபோன் செய்து அழுதாள்.

“அந்த நேரம் எனக்கு உலகமே இடிஞ்சு விழுந்தது போல ஆயிடுச்சு. இப்ப உணர்ந்திட்டேன்.. உன்னை நான் கூப்பிட்டிருக்கக் கூடாது. பாவம் காவ்யா. அவளுக்கு இப்படியா லெட்டர் எழுதி வச்சிட்டு வருவே.? என் சோகம் என்னோட. நீ கிளம்பு நிரஞ்சன்....”

அவர்கள் ஆஸ்திரேலிய நாட்டின் கோல்ட் கோஸ்ட் கடற்கரை மணலில் கடலைப் பார்த்தபடி நடந்து கொண்டிருந்தார்கள்.

இது பாதுகாப்பான நாடு. இங்க வந்து படித்து, வேலை தேடிக் கொண்டு செட்டில் ஆகலாம் என்று வருபவர்கள்.. இங்கே உள்ள கலாச்சார சிக்கலில் மாட்டி.... பாதுகாப்பை இழக்க நேரிடுகிறது. எல்லோரும் அப்படி இல்லை.... கலா போல் ஒரு சிலர் சந்திக்கும் சிக்கல்.... கலா தவித்துப் போனாள். கோர்ட் வரை போயாச்சு. பழசை சிந்திக்க ஆரம்பித்தாள் அவள்.

கலாவுக்கு உறவு என்று சொல்லிக் கொள்ள இருந்தது மரகதம் சித்தி ஒருத்தி தான். அவளை ஆஸ்திரேலியாவுக்கு மேல் படிப்பு படிக்க அனுப்பி வைத்தார். அதோடு தன் கடமை முடிந்துவிட்டது போல் கண்ணை மூடிவிட்டார். படிப்பு பாதியில் நிற்கிறது. அடுத்த செமஸ்டருக்கு பீஸ் எப்படி கட்டுவது.? இருதலை கொள்ளி நிலை. தாய் நாடு திரும்பிவிடுவதா.? இல்லை வங்கிக் கடன் வாங்கி படிப்பை தொடருவதா.? வெளிநாட்டு வாழ் இம்மிகிரண்ட்ஸ்சுக்கான வட்டி விகிதம் அதிகம்.... வட்டியை கட்ட முடியுமா?.. அவள் இந்தியா திரும்பிவிட முடிவு செய்கிறாள். சே கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகிறதே என்ற கவலையுடன் அவள் பஸ் நிறுத்தத்தில் நின்ற போது.... சிக்கலில் மாட்டிய தருணம் அது தான்..

“விதி அவனை சந்திக்க வைத்தது. படிப்பை தொடர வழி செய்தது.. ஆனால் அதே விதி என்னை கோர்டுக்கு இழுத்து விட்டிருக்கு..” என்று கண்ணை கசக்கினாள் கலா. அவள் தோளில் கை வைத்து தட்டிக் கொடுத்தான் நிரஞ்சன்.

“அதே விதி தான் உன்னை எனக்கு அறிமுகப்படுத்தி இருக்கு. அதை நினைக்க மறந்திட்டே..” என்றான் நிரஞ்சன்.

“இப்ப என்ன செய்ய நிரஞ்சன்.? என் வாழ்வில் உள்ள சிக்கல் போதாதென்று உன் வாழ்விலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கேன்..”

அவர்கள் குவீன்ஸ்லாண்ட் மாகாணத்தில் உள்ள கோல்ட்கோஸ்ட் புஷ் வாக்கிங் வந்திருந்தார்கள். சுற்றிலும் காட்டு மரங்கள்.. மலைதொடர்கள்.... மெல்லிய நீர்வீழ்ச்சிகள்.. அபூர்வ பறவைகளின் இன்னொலிகள் என்று இயற்கை கடை விரித்து இருந்த பகுதி அது. அதிகாலையிலேயே எழுந்து, நூக் எக்ஸ்ப்ரஸோவில் சூடான காபி குடித்த பின் சூரிய உதயம் பார்க்க நடந்தார்கள். மிக அற்புதமாக சூரியன் உதயமாவதை பார்க்க ரெண்டு கண்கள் போதவில்லை.

“கடலையும், ரெயின் பாரெஸ்ட் மரங்களையும் பார்த்துக் கொண்டு நடக்கும் போது.. கவலையை நினைத்து மறுகுவது சில்லின்னு தோணுது நிரஞ்சன்....”

எக்கோ பீச் வந்து சேர்ந்தார்கள். நீலக் கடலலைகள் வெள்ளை நுரை ரிப்பன்களுடன் கரையில் மோதி, பின் செல்லும் அழகை இன்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் போல் இருந்தது.

“சொல்லு.... அருண் என்ன சொல்கிறான்.?”

“அவன் விபத்தில் சிக்கிய போது நான் பஸ் நிறுத்ததில் நின்று கொண்டிருந்தேன். என் எதிரில் விபத்து. ஆம்புலன்ஸ், ஆஸ்பத்திரி.... என்று கூடவே சென்றேன். அவனை யார் என்று எனக்குத் தெரியாது... அவன் அப்பா அம்மா ஓடிவந்தார்கள்.... அவர்கள் வரும் முன் அவனுக்கு ரத்தம் தேவைப்பட்டது அவசரமாக.. கொடுத்தேன். அவன் பிழைத்தான்....”

“கடவுள் போட்ட முடிச்சு அது.” என்றான் நிரஞ்சன்.

“எல்லாம் நடந்து முடிந்த கதை. அவனும் அவன் பெற்றோரும் அங்கு வந்து செட்டில் ஆகி இருபது வருடங்கள் ஆகிவிட்டது. செல்வாக்கு நிறைந்தவர்கள். பணக்காரர்கள்.. என் மகன் உயிரை ரத்தம் கொடுத்து காப்பாத்திட்ட. உன் படிப்பு செலவை ஏத்துக்கறோம் என்றார்கள். எனக்கு அப்ப அது ஒரு வரப்பிரசாதமா அமைஞ்சுது.”

“உண்மை தான் கலா.”

“ஆமா நிரஞ்ஜன்.... ஆனா அதோடு நின்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அருணுடன் காதல்.... இப்ப என் வாழ்க்கை தத்தளிக்கிறது..” கண்ணீர் நிரம்ப நின்ற அவளை அன்புடன் தேற்றினான்.

“நா வேணா அருணுடன் பேசிப் பார்க்கவா.?”

“அதில் பிரயோஜனம் இருக்கும்ன்னு நினைக்றியா நிரஞ்சன்.?”

“முயன்று பார்க்க வேண்டியது என் கடமை கலா. நீ அருண் உயிரை ரத்தம் கொடுத்து காப்பாத்தின மாதிரி.... என்னையும் தானே காப்பாத்தினே.! சொல்லு நன்றி மறக்க முடியுமா.?”

நிரஞ்சன் ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வந்தான். அவன் ரூஃபிங் கான்டிராக்டராக வேலை பார்த்த சமயம் அது. பழைய கட்டிடம். கண மழை பெய்த போது அந்த வீட்டின் மேற்கூரையில் தொய்வு ஏற்பட்டது. அதை சரி பண்ண, மேலே ஏறி வேலை பார்த்தான். பழய காலத்து டைல்ஸ். உயரத்திலிருந்து சறுக்கி கீழே விழுந்தவன் தான்.. பின் மண்டையில் பலமான அடி. கோமா ஸ்டேஜ். கலா நர்ஸ். அவள் வேலை பார்த்த ஆஸ்பத்திரியில் தான் அவன் சேர்க்கப்பட்டான். அவனை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டாள் கலா. டாக்டர்கள் மருந்து கொடுத்தார்கள்.. ஆனால் அக்கரையுடன் அவள் அவனிடம் பேசிப் பேசி கொஞ்சம் கொஞ்சமாக அவனை நினைவுக்கு கொண்டு வந்ததால் தான், அவன் புது மனுஷனாக உயிர்பெற்று வந்தான்.

“நான் ஒரு வெஜிடபிள் போல் கிடந்திருப்பேன். என்னை மனுஷனா ஆக்கியது உங்க கவனிப்பு தான். ரொம்ப நன்றி.” என்றான்.

“நீ என்றே கூப்பிடலாம். நானும் உங்க வயசு தான். இனிமே ஜாக்கிரதையா வேலை பாருங்க.”

“என்னையும் நீ என்றே கூப்பிடலாம். என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை நா இந்தியா போணும். என்னை மறுபடியும் இந்த உலகத்தில் மனுஷனாக வாழ வச்சதை நா மறக்க மாட்டேன்.” கை எடுத்து கும்பிட்டான். “நோ.. கை எடுத்து கும்பிட வேண்டாம். என் கடமையை செய்தேன். அதுவும் இந்தியாவிலிருந்து வந்த உங்களுக்கு செஞ்சது எனக்கு மிகவும் மகிழ்ச்சியா இருக்கு....”

ரெண்டு மாசம் அவளுடன் பேசினான். பழகினான். அவள் மேல் அவனுக்கு மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது. அன்பும் வந்தது. கண்கலங்க விடை கொடுத்தாள்.

“நிரஞ்சன்....நீ இந்தியா போய் நல்லபடியா வாழ வாழ்த்துக்கள்.... அம்மாவை கேட்டதா சொல்லு. திரும்ப வருவியா.?” என்று ஆவலுடன் கேட்டாள்.

“சந்தேகம் தான். அம்மாவுக்கு ரொம்ப முடியலை. அவங்களை பார்த்துக்க யாருமில்ல. அதான் போறேன். என்ன உதவி தேவையா இருந்தாலும் என் பெயர் உன் நினைவுக்கு வரணும். என் ஃபோன் நம்பர் குறுச்சுக்க. எனக்கு சிடிசன்ஷிப் இருக்கு. எப்ப வேணா நா இங்க வந்து வேலை பார்க்கலாம்.... இருக்கலாம்.”

சொந்த நாட்டை விட்டு அந்நிய மண்ணில் கிடைக்கும் உதவி இருக்கிறதே அதை மறக்க முடியாது. கலா மட்டும் அவனை கவனமாக அன்புடன் பராமரித்து பார்த்திருக்கா விட்டால், அவன் முழு மனுஷனாக பழைய நிலமைக்கு வந்திருக்கவே முடியாது, என்பது தான் சத்தியமான உண்மை. விடைபெற்ற போது மீண்டும் இப்படி சந்திக்கப் போவது அவர்களுக்கு அப்ப தெரியாது.

இந்தியா வந்த நிரஞ்சன் அம்மாவை கோடைகானல் அழைத்து வந்தான். அம்மாவுக்கு அந்த அமைதியான சூழ்நிலை தேவையாக இருந்தது. ஆறு மாசம் ஓடிப் போனது.... அவன் அம்மா மெல்ல தேய்பிறை போல் உடல் நலிவு அடைந்தார்கள். ஒரு நாள் அமாவாசை போல் அவன் வாழ்வை இருட்டாக்கிவிட்டுச் சென்றார்கள். அழுதான். கதறினான்.

“இரவல் தந்தவன் கேட்கின்றான், அதை இல்லை என்றால் அவன் விடுவானா.? உறவை சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா.? போனால் போகட்டும் போடா....” இறப்பு குறித்து விரக்தியில் கதாநாயகன் பாடிய கண்ணதாசனின் பாட்டு அது. அதி அற்புத வரிகள். இவை. கூக்குரலாலே கிடைக்காது, கோர்ட்டுக்கு போனால் ஜெயிக்காது. அந்த கோட்டையில் நுழைந்தால் திரும்பாது.... எல்லாம் புரிகிறது. ஆனால் அவனுக்கு இரும்பு மனசில்லையே..! வெகு நாட்கள் அழுது அழுது ஓய்ந்தான். அப்புறம் தான் மலர்விழி விடுதிக்கு வேலைக்கு வந்தான். அங்கு அவன் காவ்யாவை சந்தித்தான்.

அவள் அன்பும் கனிவும் கண்டான். அம்மாவின் அன்பை அவளிடம் பார்த்தான். அவளுக்கு சகல உதவிவும் நெஞ்சார செய்தான். அங்கு அவளுக்கு நடந்த திடுக்கிடும் பிரச்சனைகளை சமாளிக்க கை கொடுத்தான். கொலை கேஸ்.. பிரசாத் மோசடி.. அப்பாவை இழந்த காவ்யாவின் துயரம்.... எல்லாமே அவன் இருந்ததால் காவ்யா தலை நிமிர்ந்து நடக்க ஏதுவாக இருந்தது. அவள் அவனைக் காதலித்தாள்... வன்டை தேடிய பூவாக. அவனுக்கு அது சிறந்த நிழலாகப் பட்டது. அவள் காதலை ஆதரித்தான். கல்யாணம் வரை வளர்ந்த காதல் அது.. அதற்குள் கலா எல்லாவற்றையும் கலைத்து விட்டாள். கனவாகவே நின்று விடுமோ.?

“நிரஞ்சன்.. நான் பெரிய சிக்கலில் இருக்கேன். ப்ளீஸ் வாங்க.. எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை.. ப்ளீஸ் வாங்க. இல்ல நான் பயத்திலேயே செத்திடுவேன்....” போனில் கதறி அழுதாள் அவள். அது அவன் மனசை உலுக்கியது. காரணம் கேட்காமலேயே வாக்கு கொடுத்தான்.

“கண்டிப்பா வரேன். அமைதியா இரு கலா..”

“என் கூடவே இனி இருக்கணும். எனக்கு உன்னை விட்டா யாருமில்ல. எனக்கு வாழ வழி தெரியலை.... என் கழுத்துக்கு மேலே கத்தி ஒண்ணு தொங்குது. ஐ மே டைய்....” மேலும் கதறல். இரவு முழுக்க யோசித்தான்.

காவ்யாவுக்கு என்ன பதில் சொல்வது.? அவளிடமிருந்து எப்படி விடை பெறுவது.? கல்யாணத்துக்கு தேதி மட்டும் தான் குறிக்கவில்லை.. அன்பான காதல் நிரம்பிய அந்த கண்களைப் பார்த்து போறேன்.. வந்தா தான் வருவேன்னு எப்படி சொல்வது.? உயிரை காப்பாற்றியவளா.? உயிராக இருப்பவளா.? யாருக்கு நான் சொந்தம்.? கடமை சொந்தமா.? காதல் சொந்தமா.?

மறுஜென்மம் கொடுத்தவள் முன் வரிசையில் முகம் காட்டினாள். அந்த உயிர் அவள் தந்தது. அவளுக்கே அது பயன்படவில்லை என்றால்.? அவன் உயிர் வாழ்வதற்கு என்ன அர்த்தம் இருக்கிறது.? காவ்யாவின் காதல் உள்ளம் ரெண்டாம் வரிசைக்கு தள்ளப்பட்டது. காவ்யா டியர்.... கலாவின் பிரச்சனை என்னவென்று எனக்குத் தெரியாது. நான் அங்கேயே இருக்க வேண்டி வருமோ என்னவோ.... நீ என்னால் பாதிக்கப்படக் கூடாது. உன் வாழ்வு பட்டுப் போகக் கூடாது.. நீ பூவோடும் பொட்டோடவும் வளமாக வாழ வேண்டுமம்மா.... அவன் சிந்தனை இப்படித்தான் ஓடியது. எத்தனை முறை பாடியிருக்கிறான்..

“பொட்டு வைத்த முகமோ.. கட்டி வைத்த குழலோ.. பொன்மணி சரமோ.. அந்தி மஞ்சள் நிறமோ.?”

அவள் அழகாக வெட்கப்படுவாள்.. அந்த அழகை மனதில் நிறுத்தி பார்த்து.. பிரிவை நினைத்து அழுதான். பேனாவில் முட்களை நிரப்பி அவன் எழுதிய கடிதம் தான் இன்னமும் காவ்யா கையில் இருக்கிறது. அவள் நெஞ்சை பிளந்து கொண்டு.... ஒரு ஃபோன் கூட அவனிடமிருந்து வரவில்லை. அவள் அழைப்புகள் எல்லாம் வாய்ஸ் மெசெஜுக்கு போனது.

சொந்தம் தொடரும்.
 
Top Bottom