• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

காதல் எங்கள் சொந்தம் - 2

நிதனிபிரபு

Administrator
Staff member
காதல் எங்கள் சொந்தம்

அத்தியாயம்.. 2

ஜில்லென்று இருந்தது சுற்றுபுறம். ஆனால் புழுக்கமாக இருந்தது மனசு. சந்திரன் என்ன செய்வது என்று தெரியாமல் காரின் கதவு மேல் சாய்ந்தபடி நின்றிருந்தான். தங்கையிடம் சொன்னான்.

“ஹேமா.... என்ன ஜென்மம் அந்தப் பெண்.? எவ்வளவு வாதாடினேன். அவள் மசியவே இல்லையே.”

“விடுங்க அண்ணா. மூடிய மனங்களின் முன் வாதாடுவது. சொல் விரயம். நேர விரயம். வேறே என்ன செய்யலாம்ன்னு யோசிப்போம்.”

“என் ஹோட்டலுக்குப் போக முக்கால் மணி நேரமாகும். அங்கே போய் ஏதாவது வழி பிறக்குமான்னு பார்ப்போம்..”

சந்திரன் காரை கிளப்பும் சமயம்....

“சார்.. சார்..” என்று ஒரு நபர் ஓடி வந்தார். சுமார் நாற்பது வயது இருக்கும். உள்ளூர் வாசி. நல்ல சிவப்பில் டி ஷர்ட் அணிந்திருந்தார். வேட்டியை மடித்துக் கட்டியதால் டிரவுசர் தெரிந்தது. கம்பளி கழுத்தை சுற்றிக் கிடந்தது.. டீ கார்டனில் வேலை பார்ப்பவர் என்று தோன்றியது.

“சொல்லுங்க சார். என்னாச்சு.? பதட்டமா இருக்கீங்க.” என்றான் சந்திரன்.

“என் குழந்தைக்கு உடம்பு சரியில்லை. ஆறு வயசு. மூச்சு திணறல். உடனே ஆஸ்பத்திரிக்கு போகணும். கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க சார்.. என் பேர் அமுதன். அதோ அந்த பார்க் பக்கத்தில் தான் என் வீடு....” சற்று தொலைவில் அவன் காட்டிய திசையில் பார்வையை ஓட்டினான் சந்திரன்.

அமுதன் கண் நிறைய கண்ணீர் தளும்பி நின்றது. அவன் வீட்டு வாசலில் ஒரு பெண் தோளில் ஒரு சிறுமியை போட்டுக் கொண்டு, இவர்களின் திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள். சந்திரனுக்கு நிலைமையின் அவசரம் புரிந்தது.

“அமுதன் சார் ஏறிக்கோங்க....” சந்திரன் முன் பக்க கதவை திறந்து விட, அவர் அவசர அவசரமாக பதட்டமுடன் ஏறிக் கொண்டார்.

கார் அமுதன் வீட்டு வாசல் முன் நின்றது.

“வள்ளி... சட்டுன்னு ஏறு. அய்யா ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போவாரு.” வள்ளி கண்களில் நிம்மதியும் நன்றியும் போட்டி போட்டது. ஏறி ஹேமா பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்.

ஆஸ்பத்திரி வரும்வரை யாரும் பேசவில்லை. துவண்டு கிடந்த சிறுமிக்கு மிஞ்சிப் போனால் ஆறு வயசுக்கு மேல் இருக்காது. தாய் வள்ளியின் கண்களில் மரண பயம் தெரிந்தது. பீதியுடன் மகளையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஆஸ்பத்திரி வந்தாச்சு.

வான் ஆலென் ஹாஸ்பிடல். சிறுமியை அமுதன் தோளில் போட்டுக் கொள்ள, இருவரும் அவசரமாக ஓடினார்கள். அட்மிட் பண்ணிவிட்டு மூவரும் நிற்க, ஹேமா காரிலேயே உட்கார்ந்து இருந்தாள். சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. அமுதன் கார் அருகே வந்தார். மனதின் தவிப்பை மறைத்து....

“அம்மா.... உங்களுக்கு எதனா வேணுமா.?..”

கால் முறிவு பற்றி சொன்னாள். வீங்கி இருப்பதால், காலை அசைத்தால் வலி உயிர் போகிறது என்றாள்.

“அச்சச்சோ..... மூலிகை சாறு பிழிந்து வைத்தியம் பார்க்கும் அன்னாசி இருக்கார். வலி குறையும்.... அப்புறம் கூட்டிப் போறேன்.”

“இருக்கட்டும் அண்ணா. நீங்க முதல்ல உங்க மகளைப் போய் பாருங்க. உங்க சம்சாரம் தனியா அழுதிட்டு இருப்பாங்க....”

“சரிம்மா.... பாப்பாவுக்கு சரியானதும் நீங்க எங்க வீட்டுக்கு வாங்க. என் தங்கச்சி மீனா இருக்கா. உங்களை பார்த்துப்பா..” என்றுவிட்டு “நான் வரேன் மா.... ஏதனா ஒன்னுன்னா ஃபோன் பண்ணுங்க..”

அவர் சென்றுவிட்டார். ஆனால் அவர் விட்டுச் சென்ற ஆறுதல் அவள் உள்ளத்தில் பால் வார்த்தது போல் இருந்தது. இறைவனுக்கு நிறைய வேலை இருக்கிறது. கோடான கோடி பக்தர்களின் பிரார்த்தனைக்கு பதில் சொல்ல வேண்டும்.... நாம கடைசி வரிசையில் இருக்கோம் போலிருக்கு.. என்று நொந்து போயிருந்த ஹேமாவுக்கு, இந்த எளிய மனிதரின் கருணை, உள்ளத்தை சிலிர்க்க வைத்தது. வரப்பிரசாதம்.

அந்த அமுதனின் அகம் அவர் முகத்தில் தெரிந்தது.

“கடவுளே.... நீ அந்த அண்ணாவின் மகளை நல்லபடியாக காப்பாற்றிக் கொடு..” என்று வேண்டிக் கொண்டாள். இடையில் அவளுக்கு பக்கத்து ஹோட்டலில் இருந்து இட்லி வாங்கிக் கொடுத்தார். சந்திரன் டாக்டரிடம் பேசிக் கொண்டிருக்கிறான் என்றார். “கொஞ்சம் சீரியஸ்ன்னு சொல்றாங்கம்மா. வள்ளி தாங்க மாட்டா. ரெண்டு பையன்களுக்குப் பிறகு பொறந்த பொண்ணு. உசிரா நினைக்கிறா. சரியாயிடும் இல்லே.?” என்றார் வழிந்த கண்ணீரை துடைத்தபடி. ஹேமாவின் கண்களும் கசிந்தது.

“அண்ணா.. கவலைப்படாதீங்க. உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும்.” என்றாள் உளமார.

“மன்னிச்சுக்க கண்ணு. மணி பத்தாயிடுச்சு. இப்ப தான் டைம் கிடச்சுது இட்லி வாங்கிக் கொடுக்க.. உனக்கு பசி..”

“என்னைப் பத்தி கவலைப்படாதீங்க. போங்க. நா சாப்பிட்டுக்கிறேன்.”

அவர் போனதும். அவள் சாப்பிட்டு முடித்தாள். சிறிது நேரத்தில் சந்திரன் வந்தான். “அண்ணா.. பாப்பாவுக்கு எப்படி இருக்கு.?”

“லங் கொலாப்ஸ் ஆகிடிச்சுன்னு டாக்டர் சொல்றாங்க. உதடு நீலாமாயிடுச்சு. ஆக்ஸிஜன் கொடுத்திட்டு இருக்காங்க...” என்றான்.

“சரி நீ எப்படி இருக்கே.?” என்று கேட்டான்.

ஹேமாவுக்கு ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது மிகவும் அசௌகரியமா இருக்க.. தொங்கப் போட்டு இருந்ததால், கால் பாதம் பன் போல் வீங்கிவிட்டது.

“என்னைப் பத்தி என்ன.? பாவம் அந்தக் குழந்தை குணமாகனும்..”

மதிய சாப்பாடும் வந்தது. சாப்பிட்டாள். பாத்ரூம் போக வேண்டும் போல் இருக்க, அவள் அண்ணணுக்கு ஃபோன் செய்தாள். அவன் ஒரு வீல்சேர் எடுத்துக் கொண்டு வந்தான். அவனும் அமுதனும் அவளை மெதுவாக வீல்சேரில் உட்கார்த்தி வைத்து தள்ளிக் கொண்டு போனார்கள். வள்ளி அவளை ரெஸ்ட்ரூமுக்கு கூட்டிச் சென்று கூட்டி வந்தாள். “ரொம்ப தேங்க்ஸ் அக்கா. இப்ப பாப்பாவுக்கு எப்படி இருக்கு.? டாக்டர் என்ன சொல்றார்.?”

“ஒண்ணும் தெரியலை மா. எனக்கு நம்பிக்கை இல்ல.” என்றாள். அவள் கண்களில் விரக்தி நுழைந்திருந்தது. கண்கள் வறண்டு கண்ணீர் சுவடு கன்னங்களில் தெரிந்தது.

“எல்லாம் சரியாயிடும் மா. குறுஞ்சி ஆண்டவரை வேண்டிக்கோங்க. கடைசியில் எல்லாம் சரியாகும்ன்னு நம்புங்க.”

இரவு பதினொரு மணிவரை போராடிப் பார்த்துவிட்டு, டாக்டர் முயற்சியை கைவிட்டார். சிறுமி அமலா பூ போல் உதிர்ந்து போனாள். அழுது அழுது வள்ளியின் கண்கள் ரத்தச் சிவப்பாகி விட்டது. சேலை தலைப்பு, அவள் கண்ணீரை துடைத்து துடைத்து நீரில் முக்கி எடுத்தது போல் ஆகிவிட்டது. அமுதன் வாய் விட்டு கதறினார். கடவுள் கடைசியில் கைவிட்டுவிட்டார்.

ஆஸ்பத்திரியிலேயே நாள் பூராவாக இருந்து, இறந்து போனதால், போஸ்ட் மார்ட்டம் அது இது என்று அலைக்கழிக்காமல் பாடியை கொடுத்து விட்டார்கள்.

சந்திரன் தன் கார்ட் மூலம் ஆஸ்பத்திரி செலவை கட்டினான்.

“தம்பி.. நாங்க கட்டிக்கிறோம்..” என்றார் அமுதன். முப்பதாயிரம் ஆகிவிட்டது. பாவம் அவர்களால் எப்படி கட்ட முடியும்.?

ஆம்பூலன்சில் வீடு வந்து சேர்ந்தார்கள். அவர் தங்கை மீனா ஓவென்று அழுதாள். அக்கம் பக்கம் கூடியது. பேரிழப்பு. அழுகை, சோகம் வலி. துயரம்.. மனித வாழ்வின் நிலையாமை இது.

இந்த துக்கத்திலும் மீனா ஹேமாவை கவனித்துக் கொண்டாள். ஹேமாவை கைதாங்கலாக பிடித்து உள்ளே ஒரு நாற்காலியில் உட்கார வைத்தாள். முற்றம் நிறைந்த மனிதர்கள்.

துக்கம் கேட்க வந்த ஒரு பெண்ணைப் பார்த்து இவளா.? இவள் எங்கே இங்கே.? என்று அலட்சியம் நிறைந்த கண்களோடு பார்த்தான் சந்திரன். அவள் தான் காவ்யா. அவளும் அவனைப் பார்த்து புருவம் உயர்த்தினாள். இவனா.?

சிறிய வீடு தான். கூட்டம் அதிகமாக இருந்தது. ஆளாளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். வள்ளி தன் நிலை மறந்து மகளின் மேல் விழுந்து கதறிக் கொண்டிருந்தாள்.

“வள்ளி.... மனசை தேத்திக்கோ. பார் உன் ரெண்டு மகன்களும் எப்படி அழறாங்கன்னு. நீ தைரியமா இருந்தா தானே..” என்றாள் காவ்யா.

“முடியலையே எஜமானி அம்மா... துள்ளத் துடிக்க என் ஆருயிர் கண்மணியை பறி கொடுத்திட்டேனே....”

இவளை எஜமானி அம்மா என்றா கூப்பிட்டாள் வள்ளி.? இந்த கர்வி இங்க எதுக்கு சீன் போட வந்திருக்கா.? என்று குமைந்தான் சந்திரன்.

காவ்யா உதவி செய்து கொண்டிருந்தாள். சிறுமியின் பாடியை எடுத்துக் கொண்டு போக ஊர்தியை வரவழைத்தாள். வள்ளியின் மகன்களை இருபக்கமும் சேர்த்து அணைத்து கொண்டு ஆறுதல் சொன்னாள்.

அமுதனை ஓரம்கட்டி கூட்டி வந்து, கையில் கத்தையாக பணம் எடுத்துக் கொடுத்தாள். “செலவுக்கு வச்சுக்கோ....”

“வேண்டாம் மா..”

“என் எஸ்டேட்டில் வேலை பார்க்கிறே.. இது கூட நா செய்யக் கூடாதா.?” என்றாள்.

சாப்பாடு மூன்று நேரமும் அவள் விடுதியில் இருந்து தான் வந்தது.

“இதுக்கு அந்தம்மா காசு வசூலிச்சிடுவாங்க இல்லே.?” என்று கூட்டத்தில் ஒருவன் கிசுகிசுக்க. மற்றொருவன்..

“சேச்சே.. அந்தம்மா வள்ளல். இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அவங்க நிறைய உதவி செய்வாங்க.... தாராள மனசு.” என்றான்.

விரட்டி அடித்த இவளுக்கா தாராள மனசு.? என்னமா நடிக்கிறா.!

சந்திரன் மூன்று நாளும் ஹேமாவை விட்டுவிட்டு அலுவலக மீட்டிங் சென்றான். இரவு ஏழு மணிக்கு, சாப்பாட்டுக்கு தோசை பார்சல் வாங்கி வந்தான்.

“எதுக்கு அண்ணா சிரமப்படற.? நீ அங்கேயே இரு. அலைய வேண்டாம்... மீனா பார்த்துக்குவா.” என்றாள்.

சொல்லிக்கொண்டிருக்கும் போதே....

காவ்யாவின் ஆட்கள் பெரிய எவர்சில்வர் கேரியரில் சாப்பாடு கொண்டு வந்து இறக்கினார்கள். காவ்யா கையில் ஒரு பார்சலுடன் வந்தாள். “ஹேமா.... இது உங்களுக்கு. ஸ்பெஷல் மினி இட்லி சாம்பார். வாங்கிக்கங்க.” என்க, சந்திரன் ஆத்திரமுடன்....

“என் தங்கைக்கு கொடுக்க எனக்குத் தெரியும். நீங்க யார் கொடுக்கறதுக்கு.? யார் பசியை யார் போக்கறது.?” அப்படியே தட்டி விட சாம்பாரும் இட்லியும் தரையில் வழிந்து வீணானது.

“நான்சென்ஸ். உணவை வேஸ்ட் பண்ணும் அநாகரீக செயலை வன்மையா கண்டிக்கிறேன்..” என்றாள்.

“காலையில் அவ்வளவு கெஞ்சினேன், உதவ மனசில்லை. மாலையில் மாகாத்மா ஆகிட்டீங்களோ.? ஈரமில்லாத மனசு. ஆக்ட் பண்ணாதீங்க.” என்றான் சந்திரன் மிகுந்த கடுப்புடன்.

“சார்.. யாரைப் பார்த்து ஆக்ட் பண்றவங்கன்னு சொல்றீங்க.? மன்னிப்பு கேளுங்க....” ரெண்டு மூன்று பேர் எகிறிக்கொண்டு சண்டைக்கு வர.. சந்திரன் திகைத்தான்.

சாத்தானுக்கு வக்காலத்து வேறயா.? “மன்னிப்பு கேக்க மாட்டேன். என்னடா செய்வீங்க.? உண்மையை சொன்னா உடம்பு எறியுதோ.?”

அடிக்க வந்தவர்களை தடுத்து நிறுத்தினாள் காவ்யா.

“விட்டிடுங்க.... வெளியூர்காரர். தெரியாம பேசிட்டார்.”

“அம்மா சொன்னதாலே விடறோம். இல்லே..” கண்ணை உருட்டி மிரட்டினர். அரசியல் செல்வாக்கு உள்ளவள் போலிருக்கு என்று எண்ணினான் சந்திரன். இருவரும் ஒருவரை ஒருவர் பகையுடன் பார்த்துனர். அமுதன் என்னாகப் போறதோ என்று பயந்தார்.

சொந்தம் தொடரும்.
 
Top Bottom