காதல் எங்கள் சொந்தம் - 23

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,210
16,607
113
Germany
இருபத்தி மூன்றாம் அத்தியாயம்.

காதல் எங்கள் சொந்தம் ...23

தன்னிகரில்லா அழகு மங்கை அவள் அப்படின்னு கதையிலே நாவலிலே சொல்வாங்க.... அதை அன்னைக்கு நேரில் பார்த்தாள் ஹேமா. வானத்திலிருந்து வரம் பெற்ற பூமாலை போல் அல்லவா இருக்கிறாள்!. அப்பழுக்கில்லாத பளிங்கு முகம் கற்பகத்துக்கு.

அம்பாளே இறங்கி வந்தா மாதிரி இருந்துச்சு. பத்து தேவதைகள் சேர்ந்து உருவான பேரழகு.! வாயடைச்சி நின்னா ஹேமா. கற்பகம் சாதாரண பெண் இல்லை. இந்த நேர்த்தியான அழகு அவளுக்கு அவள் அம்மா கோமதியிடமிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்று சுலபமாக சொல்லிவிடலாம்.

கோமதி அம்மாவை பார்த்ததும், நிர்மல் அப்பா காதல் வயப்பட்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. கோமதி அம்மாவுக்கு வேலி கிடச்சுது.. ஆனா வேலியோரத்து பூவா ஆயிட்டாங்க. பாதுகாப்பு இல்ல. அவரை என்ன வேணா சொல்லலாம்ன்னு ஒரு நிலை. ஏன்னா கேட்க நாதியில்லை. உறவுகளின் அலட்சியம். பணமோ, பெரிதாக படிப்போ இல்லை. பயந்து பயந்து தன்னயே பாதுகாக்க தெரியாமல் இருந்தாங்க. மகளை தன்னுடன் தக்க வைத்துக் கொள்ள போராடத் தெரியலை. அந்த தலைமுறை பெண்களுக்கு அழுகை தான் அவர்களின் அதிக பட்ச எதிர்ப்பு. குழந்தையைப் பிரிந்து, மனம் அவிந்து, வாழ்ந்த வாழ்க்கையில் என்ன இன்பம் இருந்திருக்க முடியும்.? அவர் டைரி சொல்லும் உண்மை இது தானே.? ஹேமா மனம் கரைந்தது. அம்மா நிலை அப்படி என்றால் மகள் கற்பகம் நிலை அதுக்கும் மேலே. எவ்வளவு துயரமான குழந்தை பருவத்தை கற்பகம் கடந்திருக்க வேணும்!. இன்னமும் மறைக்கப்பட்ட பூவாக.... எப்போ இவருக்கு நியாயம் கிடைக்கும்.?

இவளைப் பார்த்ததும்.... கற்பகம் கண்டுபிடித்து விட்டாள்..

“நீ ஹேமாவா இருக்கணும்.. சரியா.?” கற்பகம் கண்களில் கொள்ள அன்பு. கை நீட்டுகிற தாயின் அரவணைப்பு.

“ஆமா.... உங்களை சந்திச்சதில் ரொம்ப சந்தோஷம்....” என்றாள் ஹேமா. எனக்கும் தான்.. வாங்க உள்ளே போய் பேசலாம்..

“நிர்மல்.... எப்படி இருக்கே.?” கேட்டாள் கற்பகம்.

சோபாவில் உட்கார்ந்ததும்.. எங்க மங்களம் மாமி.? என்றாள்.

“வாம்மா கண்ணு.. நீ வருவேன்னு நிர்மல் தம்பி சொல்லிச்சு. மாசமா இருக்கே.. அதான் உனக்குப் பிடிச்ச பலகாரம்.. ஸ்வீட் செஞ்சிட்டு இருக்கேன். அம்மா உயிரோட இருந்திருந்தா எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கும். அடுப்பு காயிது.. கைமுறுக்கு சுத்திட்டு இருக்கேன்..”

“மாமி எதுக்கு நீங்க சிரமப்பட்டுக்கிட்டு.? அம்மா இல்லாத குறையை தீர்த்தவங்க நீங்க.”

மாமி சூடாக டீ கொண்டு வந்து வைத்தாள். மூவரும் குடித்த பின் நிர்மல் சொன்னான்..

“அக்கா.. உன் சீமந்தம் இந்த வீட்டில் நடக்கப் போவுது. பிரபு அண்ணா சுகுணா அண்ணி.. மகள் பாமினி எல்லோரும் வராங்க. அது மட்டுமல்ல.. உறவினர்கள் அம்பது பேர் வராங்க. நீ தான் எங்க சகோதரின்னு எல்லார் முன்பும் அண்ணனே இன்ட்ரோ பண்ணப் போறான்.. அம்மாவின் ஆசை நிறவேறப் போகுது....”

ஹேமா முகம் மலர்ந்தது.. தாமதமாக நியாயம் கிடச்சிருக்கு....

“கற்பகம் அக்கா.. வந்து, உங்களை அப்படிக் கூப்பிடலாமா.?..” தயங்கி கேட்டாள்.

“ஹேமா.. உன்னப் பத்தி தம்பி போனில் சொல்லாத நாளில்லை. நான் அவனுக்குத் தான் அக்கா. உனக்கு அண்ணி.... நீ சம்மதம் தெரிவிச்சா.. என் சீமந்தம் நடக்கும் அன்னைக்கே.. நீ தான் என் தம்பிக்கு பார்த்திருக்கும் பொண்ணுன்னு சொல்லிடலாம்....” என்றாள்.

ஹேமா முகம் சிவந்தது. அது நாணத்தால் அல்ல. கலவரத்தால். அவள் நிர்மலைப் பார்த்தாள். கற்பகத்துக்கு தெரியுமா இவள் குறை பற்றி.? தெரியும் என்று கண்ணால் சொன்னான் நிர்மல். தெரிந்துமா.? என்று கண்ணை அகல விரித்தாள் ஹேமா.

நிர்மல் தன் அக்கா பற்றி சொல்கிறான்.

“சசியின் நிலை தான் என் அக்காவுக்கு. குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்.? பெரியவர்கள் செய்யும் தவறுகளுக்கு குழந்தைகள் தண்டனை அனுபவிக்கிறார்கள்..” என்றான் நிர்மல்.

“அப்பா அம்மா சேர்ந்து தானே கல்யாணம் நடத்தி வச்சாங்க.? பிரபு அண்ணாவும் சுகுணா அண்ணியும் பாமினியும் வந்தாங்களா.?”

“இல்லே ஹேமா. அப்பா எவ்வளவு சொல்லியும் அண்ணா வர மறுத்திட்டாராம். கல்யாணம் துபையில் நடந்ததாம். மாப்பிள்ளை அர்ஜூன் தங்கம். நல்ல வேலை.. அன்பான அவர் பெற்றோர்கள், காத்திருப்போம் மா....உன் அண்ணா மனம் மாறும்ன்னு சொன்னாங்களாம். எனக்கும் கூட அக்கா கல்யாணம் நடந்தது தெரியாது.... அப்ப உள்ள குழப்பத்தில் எனக்கு ஒரு அக்கா இருக்கான்னே அப்பா தெரிவிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டார்.... எனக்கு அதில் தான் அப்பா அம்மா இருவர் மேலேயும் கோபம்.... என்ன அயோக்கியத்தனம்ன்னு அப்பா மேல் கோபம் வந்துச்சு.. ஒரு சகோதரிக்காக எவ்வளவு ஏங்கி இருக்கேன் தெரியுமா.? சகோதரி இருந்தும்.. அவளை நான் அப்பா அம்மா இறந்த பின் தான் தெரிஞ்சுக்கிட்டேன்.. என் மனசு ஆறவே இல்ல.” குரல் உடைந்து போனது அவனுக்கு. நீர் முத்துக்கள் திரண்டன.

“ஹேமா.. என் கல்யாணத்துக்கு அப்பாவும் அம்மாவும் ஜோடியாக வந்து கன்னிகாதானம் செய்தாங்க.. எனக்கு அது போதும். நடந்து போனதை நினைத்து கோபப்பட்டு என்ன புண்ணியம்.? வெகு நாள் வரை அப்பாவை நான் நேரில் பார்த்ததில்லை. அவர் மனசு மாறியது சட்டுன்னு ஏற்பட்டதல்ல. அவர் மனசில் ஒரு குற்ற உணர்வு இருந்திருக்கு... அது எனக்குப் புரிஞ்சுது. இந்த சமுதாயத்தின் மேல் அர்த்தமற்ற பயம் அவருக்கு..” என்றாள் கற்பகம்.

“அக்காவை நேரில் பார்த்ததும்... அவளின் பாசமான பேச்சைக் கேட்டதும், அவர் மனசு சட்டுன்னு பூத்திடுச்சு. எவ்வளவு புத்திசாலிப் பெண்.! எவ்வளவு பாசமான பெண்.! இவளையா நா புறக்கணிச்சேன்னு சொல்லிச் சொல்லி வருத்தப்பட்டாராம், அம்மா சொன்னாங்க. எப்படியோ அவ கல்யாணம் இருவரும் சேர்ந்து நடத்தி வச்சதை கேட்டு கொஞ்சம் மன்னிச்சேன்....” என்றான் நிர்மல்.

“நிர்மல் கேக்கலாமா.? தப்பா நினைக்க மாட்டேங்களே.? பிரபு அண்ணா எப்படி சம்மதிச்சு அக்காவை ஏத்துக்கிட்டாங்க.?”

மாமி கைமுறுக்கு.. திரட்டுப் பால், போளி எல்லாம் தட்டில் கொண்டு வந்து வைக்க.. ரொம்ப தேங்க்ஸ் மாமி என்றாள் ஹேமா.

“ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு..” பாராட்டிய கற்பகம் எழுந்து சென்று மாமியை கட்டிக் கொண்டு.. “நீங்க மாமி இல்ல.. அம்மா.” என்றாள் நீர் மல்கும் கண்களுடன்.

“விடு கற்பகம் கண்ணு. அழாதே. இப்ப தான் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதே சந்தோஷமா இருக்கு.... பாமினி கல்யாணம் தான் நின்னு போச்சு.. அதான் வருத்தம்....”

“நின்னு போச்சா.?” ஆச்சரியமாகக் கேட்டாள் ஹேமா.

“நல்லவேளை நடக்கலைன்னு தான் சொல்லணும். அந்த சிவசைலம் ஒரு ப்ராடு. அந்த மாப்பிள்ளை மகேந்திரன் இல்லீகல் பிசினஸ் பண்ணறான்.... இந்த நல்ல விஷயம் நடந்தது ஹேமாவால் தான். ப்பா பாமினிக்கு மட்டும் அந்த கேடு கெட்டவனோடு கல்யாணம் நடந்திருந்தா!.. அய்யோ நினைக்கவே மனசு நடுங்குது....”

“அம்மா தான் தெய்வமா இருந்து இந்த சம்பந்தத்தை தாட்டி விட்டிட்டாங்க.... நா கும்பிடும் முருகனுக்கு பால்குடம் எடுக்கப் போறேன்..” என்றாள் மாமி.

“பிரசாத் சிவசைலத்தின் கையாள் ஹேமா.. அவரும் மலைச்சாரல் ரிசார்ட்ஸ் என்று நடத்தி வருகிறார். பொறாமை.... மலர்விழி ரிசார்ட்டை நடத்திய காவ்யாவை மேல் வன்மம் கொண்டார். அங்கு சாப்பாடு நல்லா இருக்கும்.... அதே சமயம் ரேட்டும் கம்மிங்கறதாலே அங்க விட இங்க கூட்டம் அதிகம் வரும்....”

“அப்படியா.? அதான் காவ்யாம்மாவுக்கு தொந்தரவு கொடுத்தார் போலிருக்கு.?” என்று மூக்கின் மேல் விரல் வைத்தாள் மாமி.

“தொந்தரவா.? அழிக்கும் திட்டம் மாதிரி இல்ல இருக்கு.”

“ஆமா. எப்படியாவது மலர்விழி விடுதிக்கு கெட்ட பெயர் உண்டாக்கணும். பிரசாத்தை ஏவி விட்டார் சிவசைலம். காவ்யாவின் அப்பா உயிரோடு இருக்கும்வரை அவர் வாலை சுருட்டிக் கொண்டு இருந்தார். அவர் போனதும் ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டார்....”

“ஓ.. புரியுது. பிரசாத் அங்க வந்து ஒரு கொலைய பண்ண பிளான் போட்டுக் கொடுத்தானா அந்த பாவி சிவசைலம்.?” கேட்டாள் மாமி .

“எதிர்பாராமல் ராணி வேணி கொலை நடந்து போச்சு. மற்றபடி கலாட்டா பண்ணி நாறடிக்கத் தான் வந்தான். காவ்யா ஆதாரத்தோடு பிரசாத்தை போலீசில் பிடிச்சுக் கொடுத்திட்டா. அந்தக் கதையை காவ்யா சொல்லக் கேட்டேன். தற்கொலை என்று செட்டப் பண்ணி தப்பிக்கப் பார்த்தான் பிரசாத். பெண்களை கூட்டி வந்து மலர்விழி விடுதியில் தங்கிய சந்தோஷ் தலைமறைவு ஆகிவிட்டான். காதலி ராணியை தங்கச்சின்னு சொல்லியிருக்கான். அதன் பிறகு தான் காவ்யா ஆண்களை விடுதியில் அனுமதிக்க மறுத்துவிட்டா.” என்றாள் ஹேமா.

“ஆக, பெரிய மனுஷன் என்ற பேரில் வாழும் சிவசைலத்துக்கும் பிரசாத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கு. அவர் ஏவி விட்ட ஆள் தான் அவன். எப்படியாவது என் பேரில் உள்ள இந்த வீட்டை கையகப்படுத்த திட்டம் போட்டான். அண்ணாவிடம் பாமினியை பெண் கேட்டு வந்தான். நல்ல சம்பந்தம்ன்னு அண்ணா நினச்சிட்டார். பணக்காரன், அந்தஸ்து உள்ளவன், பெரிய பங்களாகள், டீ எஸ்டேட்டு.. என்று வாழ்பவன். நல்ல மனுஷன்னு அண்ணா மயங்கிட்டார். அவனோட ரெண்டு ஆட்கள், வீட்டுப் பத்திரத்தை திருடப் போவதா பேசியதை ஹேமா கேட்டுட்டா. என் பேர் அடிபடுவதால் சந்தேகம் கொண்டு என்னிடம் வந்து சொன்னா.... பத்திரம் திருட வந்தவங்க ஏமாந்து போனாங்க. ஹேமா எச்சரித்து இருந்ததால், நா உஷாரா அதை அக்கா கிட்டே கொடுத்திட்டேன். ரெண்டு பேரும் சிசிடிவியில் சிக்க.. போலீசில் அதை ஒப்படைக்க, அவங்க நெடுநாள் தேடப்படும் ரவுடிகள் இவங்கன்னு சொல்லி அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அவங்க அடி உதைக்கு பயந்து இதை செய்யச் சொன்னது சிவசைலம் தான்னு வாக்கு மூலம் கொடுத்திட்டாங்க.... ஸோ த கேட் இஸ் அவுட் ஆப் த பேக்.. அவர் சதி அம்பலமானது.”

“ஹேமா.. உனக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்.... எங்களையெல்லாம் எப்பேர்ப்பட்ட சிலந்தி வலையிலிருந்து காப்பாத்தி இருக்கே....” என்று உணர்வுபூர்வமாக சொன்னாள் கற்பகம்.

“ஆமா ஹேமாவுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை. அவர் மேல் பலரும் கேஸ் போட்டிருக்காங்கன்னு தெரிய வந்துச்சு.. சந்தேகத்தின் பேரில் அவரையும் அவர் மகன்.. மகேந்திரனையும் அரஸ்ட் பண்ணிட்டாங்க.... நிறைய பேரிடம் ஏமாற்றி வீடு நிலம்னு வாங்கி போட்டிருக்காங்க.. கஞ்சா விற்பனையும் நடந்திருக்கு.. நாம தப்பிச்சோம். அண்ணன் சொன்னான்....ரொம்ப நன்றி டா நிர்மல்.. நீ இல்லாட்டி.. நா அந்த அயோக்கியன் மகேந்திரனுக்கு பொண்ணை கொடுத்திருப்பேன். நினச்சாலே நடுங்குது.... எனக்கு இப்ப புரியுது. அப்பா கற்பகம் தங்கச்சிக்கு செய்த பாவம் தான் இப்படி நம்மை ஆட்டி வைக்குது.... நானும் உன் அண்ணியும் கற்பகத்துக்கு ஊரை கூட்டி, சீமந்தம் சிறப்பா நடத்த தீர்மானிச்சிட்டோம். எல்லோருக்கும் இவ தான் என் தங்கைன்னு சொல்லிடப் போறோம்னு சொல்லிட்டார்.... எல்லாம் ஹேமா உபயம்.” என்றான் நிர்மல்.

“பிரபு அண்ணா என்னை நேரில் வந்து பார்த்து மன்னிப்பு கேட்டார். சேச்சே.. என்ன அண்ணா நீ.. நேரம் காலம் கூடி வந்திருக்கு. உங்க மேலேயும் தப்பு சொல்ல முடியாது. இப்ப நாம ஒண்ணு சேரப் போறோம் அது தான் சந்தோஷம்ன்னு சொன்னேன்.” என்றாள் கற்பகம். “அப்புறம்.. என் சீமந்தம் நடக்கும் அதே நாளில், நிர்மல் உனக்கும் ஹேமாவுக்கும் நிச்சயம் பண்ணிடலாமா.? ஹேமா உன் பதில் என்ன.?” ஆவலுடன் கேட்டாள் கற்பகம்.

“எனக்கு கல்யாணமே வேண்டாம்.. என்னை நிம்மதியா இருக்க விடுங்க ப்ளீஸ். “ என்று சொல்லி எழுந்து கொண்டாள் ஹேமா. நிர்மல் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. கற்பகம் மனம் வாடியது.

சொந்தம் தொடரும்.
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: காதல் எங்கள் சொந்தம் - 23
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.