• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

காதல் எங்கள் சொந்தம் - 24

நிதனிபிரபு

Administrator
Staff member
இருபத்தி நான்காம் அத்தியாயம்.

காதல் எங்கள் சொந்தம்.. 24

குளிர் காலம் ஆரம்பமாகிவிட்டது. மலைப் பாங்கான இடத்தில் தான் கலாவின் வீடு அமைந்திருந்தது. வசதியான நான்கு அறை கொண்ட தனி வீடு. தோட்ட மலர்கள் சிரித்துக் கொண்டிருந்தது.

“நிரஞ்சன்.. கோர்ட்டுக்கு போணும்.... காபியை குடிச்சிட்டு கிளம்புவோம். இந்த வீடு அருண் எனக்காக வாங்கினான். ஆனா அவன் பேரில் தான் இருக்கு. அவன் தான் ஜேனெட் பிரக்னன்சிக்கு காரணம்ன்னா.. நா இந்த வீட்டிலே இருக்க முடியாது.... என்ன நடக்குமோ.?”

“எல்லாம் நல்லபடியா நடக்கும். அருணை நம்பற தானே.?”
அவர்கள் வீட்டை பூட்டிக் கொண்டு, ராபின்சன் தெருவில் இருக்கும் டான்டினாங்க மேஜிஸ்டிரேட் கோர்டுக்கு சென்றார்கள். காரை டான்டினாங் பார்க் அருகே நிப்பாட்டினாள் கலா.

“நிரஞ்சன் நேரமிருக்கு.... வா பார்க்கில் கொஞ்ச நேரம் உலாவலாம். மனசு என்னவோ போல இருக்கு. உன்னை ரொம்ப தொந்தரவு செய்யறேன். ஸாரி நிரஞ்சன்.” கலா அழுதுவிடுவாள் போல் இருந்தாள். நிரஞ்சன் ஆறுதலாக சொன்னான்...

“கலா.. எதுவானாலும் பேஸ் பண்ணுவோம். ஜட்ஜ் என்ன சொல்றாங்க பார்ப்போம். அருண் சொல்வது உண்மையா.? இல்ல அந்த ஜேனட் சொல்வது உண்மையான்னு தெரிஞ்சுடும்....”
அவள் அழுகை நிற்கவில்லை. அவளை பெஞ்சில் உட்கார வைத்து நிரஞ்சன் சொன்னான்.

“மனசை தளரவிடக் கூடாது கலா. அருண் சொல்வதே உண்மையா இருக்கலாமில்லையா.? அப்புறம் ஜேனட் அவன் வாழ்விலிருந்து விலகிடுவா....”

“மூணு மாசமா எனக்கு தூக்கமில்ல. ஒரு நாள் ஜேனட் ஆவேசமா என் ஆஸ்பத்திருக்கு வந்தா. லஞ்ச் டைம். நான் சக நர்ஸ் கூட சாப்பிட்டிட்டிருந்தேன். கண்ணும் முழியும் பிதுங்க.. நெருப்பு பற்றியது போல வந்தா. எனக்கு ஒண்ணுமே புரியலை..”

“அவளை உனக்கு முன்னமே தெரியுமா.?”

“தெரியும்.. அருண் அறிமுகப்படுத்தி இருக்கான். இருவரும் ஹேலிபரி பள்ளியில் படித்த கிளாஸ்மேட்ஸ். அது ஒரு பணக்கார பள்ளி. ஜேனட் முழு பீஸும் கட்டி படிக்கும் அளவுக்கு அவள் வசதியான வீட்டுப் பெண். அவ அப்பா பீட்டர் கார் டீலர். அம்மா பாட்ரிகா கவுன்சிலர். இங்லாந்திலிருந்து இங்க வந்து குடியேறியவர்கள். இவங்க ஒரே செல்லப் பெண் தான் ஜேனட்....”

“அவங்க ரெண்டு பேரும் சைல்ட்ஹூட் ஸ்வீட் ஹார்ட்ஸ் என்று சொல்லலாமா.? அருண் அவளை லவ் பண்ணானா.?”
கலா முகம் இறுகியது. கண்களில் மீண்டும் புதுக் கண்ணீர் சுரந்தது.

“அவ அவன் மேல் கிரேசியா இருந்தா எனக்குத் தெரியும். என் பிரெண்ட் பிரேமி சொல்லியிருக்கா. பள்ளியில் ஒண்ணா படிச்சாங்க. அவ அவனை சுத்தி சுத்தி வருவாளாம். நான் அருணிடம் கேட்ட போது, எனக்கு அவளைப் பிடிக்கலைன்னு சொல்லியிருக்கான். அவளிடமிருந்து தப்பிப்பது எப்படின்னு என்னிடமே வழி கேட்டான். அவ அவன் பின்னாடி ஓடி வந்தா, அவன் என்ன செய்வான்னு மெத்தனமா இருந்தேன். கடைசியில் ஒரு குண்டைத் தூக்கி போட்டிட்டா. அவ பிரெக்னன்சிக்கு அருண் தான் காரணம்னு கத்திட்டுப் போனா.... அருண் எனக்கும் அவளுக்கு அந்த மாதிரி ரிலேஷன்ஷிப் இல்லவே இல்லன்னு சத்தியம் செய்தான். உலகமே இடிஞ்சு தலையில் விழுந்தது போல இருந்துச்சு நிரஞ்சன்.. அழக் கூட தெம்பு இல்ல இப்ப.

“அவன் பொய் சொல்ற மாதிரி எனக்குத் தெரியலை. அவன் படு ஹாண்ட்சம். வெள்ளைக்கார பெண்களிலிருந்து.. நம்ம ஊரு பெண்கள் வரை அவன் கண் பார்வைக்காக அலைவாங்க. இவன் எஸ் சொல்லணும்னு அவனை சுற்றி வட்டம் போடுவாங்க....”

“சரி.. இந்த ஜேனட்டிடம் எப்படி மாட்டினான்.? என்ன நடக்குது கலா.? நீ உண்மையை சொல்லு. இப்படிபட்ட உறவு உனக்கு எதுக்கு கலா.?”
கலா கண்களை துடைத்துக் கொண்டு சொன்னாள்.

“நா இருக்கும் வீடு.. நா பயன்படுத்தும் பி. எம். டபிள்யூ எலக்டிரிக் கார் எல்லாம் அவன் வாங்கிக் கொடுத்தது...”
அவன் எழுந்து கொண்டான்... என்ன பேசறா இவ என்று பார்த்தான்..

“கலா.... வீடு கார் இதை எல்லாம் விடு. அவன் உன்னை ஏமாத்தி தான் உன் மனசில் இடம் பிடித்தானா.? அவன் பொம்பளை பொறுக்கியா.? ஸாரி.. இப்படி சொல்றதுக்கு. நீ ஜேனட்டை நம்பறயா இல்ல அருணையா.? தெளிவா சொல்லு....”

“அருணை நா காப்பாத்தின பிறகு அவன் அம்மாவும் அப்பாவும் ஓடி வந்தாங்க. அவங்க கர்நாடகாவை பூர்வீகமா கொண்டவங்க. அம்மா கீர்த்தனா பிரபல டென்டிஸ்ட். அப்பா காமத் மும்பைகாரர். அவர் பிஸினஸ் மேன். ரொம்ப நன்றிமா.... என் ஒரே மகன். ஏதாவது ஆகியிருந்தா நாங்க செத்தே போயிருப்போம்... ரொம்ப பீல் பண்ணாங்க. மெல்ல மெல்ல எங்களுக்குள் நட்பு ஏற்பட்டுச்சு. அவங்க சம்மதத்தோட தான் நாங்க காதலிக்க ஆரம்பிச்சோம்....”

“ஜேனட் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா.? அவ கேரக்டர் பத்தி....”

“பெரிசா ஒண்ணும் தெரியாது. ஆளை பார்த்திருக்கேன். அருண் சொல்லியிருக்கான் அவள் அவன் மேல் பைத்தியமா இருக்கான்ணு. அது தாண்டி எதுவும் தெரியாது. திடீர்ன்னு ஆஸ்பத்திருக்கு வந்தவ கத்த அரம்பிச்சிட்டா..”

“என்ன சொல்லி கத்தினா.?” சொல்லவே பிடிக்காதது போல் மௌனமாக கண்களை கசக்கி கொண்டு, மூக்கை உறுஞ்சியபடி நின்னா. அன்று பட்ட அவமானம் அவள் முகத்தின் சிவப்பில் இன்று தெரிந்தது. “சொல்லு கலா. என்ன சொல்லி கத்தினா.?”

“யூ டர்ட்டி பிட்ச்.. ஹவ் டேர் யூ டேட் மை பாய்பிரெண்ட்...? இப்படி ஆரம்பித்து கெட்ட கெட்ட வார்த்தையா சொல்லி அசிங்கப்படுத்திட்டா.... லீவ் ஹிம் ப்ளடி பிட்ச்ன்னு கத்திட்டுப் போனா. அதுவரை எனக்கு இந்த விவகாரம் பத்தி தெரியாது நிரஞ்சன்.” பெரிய பெரிய கேவல்கள் அவளையும் மீறி கண்ணீரோடு வந்தது. மெதுவாக மென்மையான குரலில்..

“கலா அழாதே. அதான் நா இருக்கேன்ல.... இன்னமும் இவனை நீ நம்பிட்டு இருக்கியா.? இது எப்படி நடந்துச்சுன்னு தெரியுமா.?”

“ஏதோ எல்லோரும் குரூப்பா காம்பிங் போனாங்களாம். இங்கு அதெல்லாம் சகஜம். அங்கு தான் நடந்ததா ஜேனெட் சொல்றா.”
வாட்ச் பார்த்தாள். “இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு நிரஞ்சன். நாம கோர்ட்டுக்குப் போவோம். அருண் அவ குழந்தைக்கு நா அப்பா இல்லன்னு திட்ட வட்டமா சொல்லிட்டான். அவன் பெற்றோரும்.. என் மகன் அப்படிபட்டவன் இல்ல.. இதுவரை அவன் யாரையும் டேட் பண்ணவே இல்லன்னு சொன்னாங்க. நீ தான் எங்க மருமகன்ணு சொன்னாங்க... அவங்க என் பக்கம்ன்ணு ஆறுதல் அடஞ்சு.. அருணையும் நம்பினேன்.... அவ பொய் சொல்றான்ணு தான் நினச்சேன். ஆனா அவ குழந்தை உன்டாகி, அது அவன் குழந்தை தான்னு சொல்லி, கோர்ட்டுக்கு போவான்ணு எதிர்பார்க்கலை.... அதான் என்ன செய்யறதுன்னு தெரியாம உனக்கு ஃபோன் பண்ணிட்டேன்....” அவள் முகத்தில் வருத்தம் தெரிந்தது. என்னாலே உனக்கு கஷ்டம்.....

“சரி வா போலாம். லேட் பண்ணிடக் கூடாது. தைரியமா இரு. நான் இருக்கேன்ல. அதுக்குத் தான் நட்பு. நான் உன் பக்கம் இருப்பேன். உன்னை இப்படி தனியா விட்டிட்டு போக மாட்டேன்.” நிரஞ்சன் தைரியம் சொன்னான். அவள் நன்றியுடன் அவனைப் பார்த்தாள்.

“டி.என்.ஏ டெஸ்ட் நமக்கு சாதகமா தான் வரும்னு நா நம்பறேன்.”

நிரஞ்சன் கோர்ட் வாசலை மிதித்தது கிடையாது.

காவ்யா பிரச்சனை வந்த போது தான் முதல் முதல் பிரசாத்துக்கு எதிராக சாட்சி சொல்ல வேண்டி கோர்ட் படி ஏறினான் இந்தியாவில்.

காவ்யா மேல் உள்ள காதலுக்காக கோர்ட் படி ஏறினான். இங்கே நட்புக்காக கோர்ட் படி ஏறுகிறான். என் ராசி இப்படி போலிருக்கு. நான் நேசிக்கும் பெண், மதிக்கும் பெண் இருவருக்கும் கோர்ட் மூலமாகத் தான் பிரச்சனை வரணுமா.?
நாலு வருஷ நர்ஸ் படிப்பு.. பிறகு ரெண்டு வருஷ நர்ஸ் வேலை பார்க்கிறாள் கலா. இன்னமும் அவளுக்கு குடியுரிமை கிடைக்கவில்லை. அவன் வேலைப் பார்த்த சமயம், பத்து மாதத்தில் அவனுக்கு குடியுரிமை கிடைத்துவிட்டது. நாலு வருடத்தில் சிட்டிசன்ஷிப் கிடைத்தது. இப்ப ஆஸ்திரேலியா கவர்மெண்ட் ரொம்பவே கெடுபிடி செய்கிறது. கலா குடியுரிமை பெறாமல் வொர்க் விசாவில் இருக்கிறாள்.

“நான் இவனை வேண்டாம் என்று சொன்னால்.... இங்க நா இருக்க முடியாது நிரஞ்சன். அவனும் நானும் காதலர்கள். விரைவில் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறோம் என்ற தெம்பில் இருந்தேன். தப்பா ஏதும் நடந்துக்கலை. என் வொர்க் விசா விரைவில் முடிந்துவிடும். இந்த பங்களா, கார் வாழ்க்கை போயிடும். அத்தோடு நா இந்தியா போய்விட்டால்.. எனக்கு அங்கு யார் இருக்கா.? இங்க பழகிட்டு அங்க போய் வேலை தேடி.... எப்படி அந்த வாழ்க்கை அமையும்.? தெரியலை.. அதே சமயம்.. இவன் குழந்தை தான்னு தெரிஞ்சா நா இவன் கூட எப்படி வாழ முடியும் நிரஞ்சன்.? காற்றில் ஆடும் இலை போல் என் வாழ்க்கை வீழப் போறது.... அநாதை ஆயிட்டேன் நிரஞ்சன்.” மடிந்து உட்கார்ந்து அழுதாள் கலா.

“கலா எந்திரி.... நல்ல செய்தி கிடைக்கும். வா போகலாம்.” இருவரும் கோர்ட் வாசலுக்கு வந்தார்கள். அவர்களை செக் பண்ணிவிட்டு உள்ளே அனுப்பினார் அங்க உள்ள போலீஸ் அதிகாரி.
அங்கே அருண் கலாவை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தான். இவளைப் பார்த்ததும் ஓடி வந்தான்..

“கலா.. வந்திட்டியா.? நீ தான் ஜட்ஜ் கிட்டே எனக்காக பேசணும். நா அது மாதிரி டைப் இல்லன்னு வாக்குமூலம் கொடுக்கணும். உன்னைத் தான் நம்பியிருக்கேன்..” என்றான் கெஞ்சும் குரலில்.

“மிஸ்டர் அருண்.... கோர்ட் மூலம் டி.என்.ஏ டெஸ்ட் நடந்திருக்கு. அது உங்க குழந்தை தான்னு உறுதி ஆயிட்டா.... கலா என்ன சொன்னாலும் அதுக்கு வேல்யூ இருக்காது.. இது இந்தியா இல்ல ஆர்கியூமெண்ட் பண்ண. ரிசல்ட் என்ன சொல்லுதோ அது தான் இறுதி தீர்ப்பு.” என்றான் நிரஞ்சன்.
அவன் பதில் சொல்லும் முன் ஜேனட் தன் பெற்றோருடன் வந்துவிட்டாள். கலாவை ஏளனமாக, சுட்டு விடுவது போல் பார்த்தாள். கலா அந்த பார்வையில் சுருண்டு போனாள். அருண் அருகில் வந்து நின்ற அவள் “ஹீ இஸ் மைன்..” என்றாள்.

“போலீஸ் கூட இவன் மேல் புகார் கொடுத்திருக்காங்க. நானும் கொடுத்திருக்கேன்.. இவனை நான் விடவே மாட்டேன். ஹீ வில் மேரி ஒன்லி மீ. அன்டர்ஸ்டாண்ட்.... “ என்று சீறிவிட்டுப் போனாள்.

சேம்பருக்குள் போனது கலா, நிரஞ்சன்.. ஜேனெட் அருண் மட்டுமே. ஜட்ஜ் பாமில்லா ரோஸ் வந்து உட்கார.... வேறு யாரும் அந்த சேம்பரில் இல்லை. முதலில் சொல்லவேண்டிய பார்மாலிட்டி பேச்சுக்குப் பின், ஜட்ஜ் பாமில்லா ரோஸ் சொன்னார்.

“த டி.என்.ஏ ரிப்போர்ட் ஹஸ் கம். ஜேனெட்ஸ் பிரேக்னென்சி இஸ்....” சுற்றுமுற்றும் பார்த்தாள். கலா மூச்சைப் பிடித்துக் கொண்டு பயத்துடன் என்னவாக ருக்குமோ என்று பார்த்தாள். ஜேனெட் திமிராக அவள் பக்கம் பார்வையை செலுத்தினாள்.

“அருண் இஸ் த பாதர் ஆப் ஜேனெட்ஸ் சைல்ட். தட் இஸ் வாட் த ரிப்போர்ட் சேஸ்....”

மேலும் ஜட்ஜ் சொன்னதாவது.... குழந்தை பிறந்து, அதுக்கு பதினெட்டு வயசு ஆகும்வரை அருண் பிள்ளைக்கான எல்லா செலவையும் கட்டாயம் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான். ஜட்ஜ் எழுந்து போய்விட்டார்.

இடிந்து போய் உட்கார்ந்து விட்டாள் கலா. அருண் அவள் அருகில் வந்தான். “அருண் என்னை ஏமாத்திட்டியே....” என்று அழுதாள். அருணை இழுத்துக் கொண்டு ஜேனெட் போவதை துயரம் மிகுந்த கண்களுடன் பார்த்தபடி.. அங்கேயே மடிந்து உட்கார்ந்து கதறினாள் கலா. நிரஞ்சன் “கெட் லாஸ்ட்..” அருணைப் பார்த்து சொன்னான்.
இனி கலா என்ன செய்யப் போகிறாள்.!

சொந்தம் தொடரும்.
 
Last edited by a moderator:

Gowri Karthikeyan

Well-known member
காதலனே பொய்த்து போயிட்டான்....இப்ப தான் இந்த கலா வீடு, கார் போயிரும்னு பீல் பண்ணிட்டு இருக்கு.....
இவளுக்கு தான் நீ காவியை விட்டு வந்தியா டா
 
Top Bottom