• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

காதல் எங்கள் சொந்தம் - 3

நிதனிபிரபு

Administrator
Staff member
காதல் எங்கள் சொந்தம்

அத்தியாயம்...4

இங்கிருந்து போய்விட வேண்டும் என்ற உறுதியுடன் நின்ற சந்திரன் தங்கையை தூக்க தயாராக கைகளை நீட்டினான். அதற்குள்..

“சின்னம்மா.... இங்க வாங்களேன்..” பெரும் குரலில் ரோசி அலறியது கேட்டது. காவ்யா விரைந்து உள்ளே சென்றாள்... “இருங்க வரேன்.. போயிடாதீங்க..” என்றுவிட்டுப் போனாள்.

“அண்ணா.... நீங்க போய் பாருங்க. என்னவோ பயமா இருக்கு..”

“சரி ஹேமா. நீ இந்த சேரில் உக்காரு. இப்ப வந்திடறேன்..”

சத்தம் வந்த அறைக்குச் சென்று பார்த்தான்.. காவ்யாவின் குரல் கேட்டது. பார்வையை செலுத்தினான். கண்கள் செருகியிருக்க ஒரு பெண் மயக்கமாக இருந்தாள். அவளருகே சுமார் பத்து வயது மதிக்கத்தக்க சிறுமி ‘அம்மா அம்மா..’ என்று அரற்றிக் கொண்டிருந்தது.

காவ்யா முகத்தில் பதற்றம் தெரிந்தது.

“ரோசி ஆம்புலன்சுக்கு ஃபோன் பண்ணு. சீக்கிரம்...”

“என்னாச்சுங்க.?” சந்திரன் கேட்க..

அவன் வந்து கேட்டது அவளுக்கு ஒரு தெம்பை தந்தது.

“தெரியலை சந்திரன் சார். சிறுமிக்கு ஒண்ணும் தெரியலை. பேசிக்கிட்டே இருந்தாங்களாம்.. அப்படியே கண் செருகி சாஞ்சிட்டாங்களாம்..”

“பயப்படாதீங்க. என் காரில் ஆஸ்பத்திரி கூட்டிப் போறேன். ஆம்புலன்ஸ் வர நேரமாகும்.. பாப்பா அழாதே அம்மாவுக்கு ஒண்ணுமில்லே.” என்று சிறுமியை தட்டிக் கொடுத்தான்.

“அங்கிள்.... அம்மா குன்னூர் பார்க் போலாம்ன்னு சொன்னாங்க.... திடீருன்னு சாஞ்சிட்டாங்க..” தேம்பினாள்.

அந்த சிறுமியின் உள்ளத்தில் எவ்வளவு பயம் இருக்கும்ன்னு அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

“அப்பா எங்க இருக்காங்க கண்ணு. ஃபோன் பண்ணலாமா.?”

கொஞ்சம் தயங்கிவிட்டு....

“அப்பா சிங்கப்பூர் போயிருக்காங்க.....” என்றாள்.

“அப்ப அவருக்கு ஃபோன் பண்ணி சொல்லிடலாம்.” என்றாள் காவ்யா.

“வேணாம் காவ்யா. வீணா அவரை காப்ரா படுத்த வேணாம். நிலைமை என்னன்னு பார்த்திட்டு ஃபோன் பண்ணலாம்.”

“சந்திரன் சார்.. நீங்க இருக்கறது பக்கபலமா இருக்கு.”

“சார் மோர் எல்லாம் வேண்டாம். சந்திரன்னு சொன்னாலே மதி.”

அவளுக்கு அந்த பதில் பிடித்திருந்தது போலிருக்க.. அவனுள் மெல்லிய சந்தோஷம் கிளர்ந்தது. ரோசியும் அவளும் அந்தப் பெண்ணை தூக்கிக் கொண்டு அவன் காரின் பின் சீட்டில் படுக்க வைத்தார்கள்.

“நானும் வரேன்....” காவ்யாவும் ஏறிக் கொண்டாள். தங்கையிடம் உள்ளே போ.... ரொம்ப நேரம் உக்காந்து இருக்க வேணாம்.. ரோசி ஹெல்ப் பண்ணுங்க.. என்று சொல்லிவிட்டு காரை கிளப்பினான்.

ஆஸ்பத்திரி வந்தது. பரபரவென்று ஆட்களுக்கு சொல்ல.... அப்பெண்மணி ஸ்ட்ரெச்சரில் உள்ளே அழைத்து செல்லப்பட்டார்.

“இது ரெண்டாம் முறை இந்த ஆஸ்பத்திரிக்கு வரேன்.... “

“வள்ளியின் குழந்தையை அட்மிட் பண்ணியதுக்கு வந்தீங்க....”

“சாதாரண மயக்கம் தானே.? சீரியஸ் இல்லைன்னு நம்பறேன்”

அவள் தலையாட்டினாள். நேரம் கால் முளைத்து விரைவாக சென்றது. சிறுமியை கட்டிப்பிடித்துக் கொண்டு இருந்தாள் காவ்யா. சிறுமி சசி சிறிது நேரத்தில் காவ்யா மடியில் உறங்கிப் போனாள். அவன் ஆஸ்பத்திரி வெளியே வந்து நின்றான்.

அவனுக்கு ஃபோன் வந்தது.

“ஹலோ..”

“ஹலோ சந்திரா.... எப்படி போச்சு மீட்டிங்.? உனக்கு அங்க ப்ரமோஷனோடு மாற்றல் கிடைக்கப் போவுதுன்னு சொன்னியே. கன்பர்ம் ஆயிடுச்சா.?”

“இன்னும் இல்ல சித்தப்பா. கடைசி நாளில் தான் தெரியும். இன்னும் ரெண்டு நாள் இருக்கே..”

சந்திரனின் சித்தப்பா கிரிதரன் தான் அவனுக்கு எல்லாம்.

“சரி.... ஹேமா எப்படி இருக்கா.? சீக்கிரம் வந்து சேருங்க.”

சித்தப்பாவிடம் அவன் ஹேமாவின் கால்வீக்கம் பற்றி சொல்லவில்லை. தெரிஞ்சா அடித்து பிடித்துக் கொண்டு ஓடிவந்து விடுவார். ரொம்ப பயந்து போவார்.

“சரிப்பா வைக்கறேன்..... ஹேமாவ பார்த்துக்க.”

அவருக்கு ஹேமா ஒரே மகள். அவர் மனைவி பார்வதியின் மறைவு, சந்திரனின் பெற்றோர் மறைவு, எல்லாம் அடுத்தடுத்து நடந்தது. அது முதல் கிரிதர் தன் அண்ணன் மகன் சந்திரனை தன் மகளுடன் சேர்த்து வளர்த்து வருகிறார்.

கிரிதர் மட்டும் இல்லை என்றால் இவர்கள் அநாதை ஆகி இருப்பார்கள். அம்மா இல்லாததால் இருவரும் ஒரு தவித்த நிலையிலேயே வளர்ந்தார்கள். அதனால் அந்த சிறுமியை பார்த்தபோது கண்கலங்கி விட்டான் சந்திரன். அம்மா இல்லாதவர்களுக்குத் தான் தெரியும் அம்மாவின் அருமை. சசியின் தாயை அவளுக்கு மீட்டுக் கொடுத்திடணும். கடவுளே அந்த சகோதரி நலமாக வேணும்ன்னு பிரார்த்தித்தான்.

“சுற்றுலா என்று வரும் இடத்தில் அசம்பாவிதம் நடந்தால்.... அது ஒரு பயத்தை கொடுக்கிறது....” என்றபடி வந்தாள் காவ்யா.

“பாப்பா....”

“நர்ஸ் உள்ளே அழைத்து காலி பெட் ஒன்றில் படுக்க வச்சிட்டாங்க.”

“நானும் தங்கையும் மூணு நாள் நல்லா சுத்திப் பார்த்தோம். பைன் பாரெஸ்ட் பார்க்கப் போனோம். குதிரை ஒன்று அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தது. இவளை நோக்கி வரவும், பயந்து போய் ஓட, பூமிக்கு மேலே வளைந்து நீட்டிக் கொண்டிருந்த மரத்தின் வேர் தடுக்கி மடாரென்று விழுந்துவிட்டாள். கால் மரத்தின் திக்கான வேரின் வளைவுக்குள் மாட்டிக் கொண்டது. பாதம் டுவிஸ்ட் ஆகிவிட்டது.. எடுத்தவுடன் பார்த்தா.. பாதம் புஸ் புஸ்ன்னு வீங்கிடுச்சு. வலியில் துடித்துவிட்டாள்....”

“நிலைமை தெரியாமல் நா ரூடா நடந்துக்கிட்டேன்....”

அவள் கண்களில் இப்படி செய்துவிட்டோமே என்ற வெட்கம் இருக்க.. தலைகுணிந்தாள்.

“சரி விடுங்க...... ரொம்ப பீல் பண்ண வேண்டாம். சில சமயம் நம்மை அறியாமல் நாம இரக்கமில்லாம நடந்துப்போம். சில நேரங்களில் சில மனிதர்கள்....”

“நா அப்படி நடந்ததுக்கு ஒரு காரணம் இருக்கு....”

மேலே பேசமுடியாமல் ஆழ்ந்த மௌனத்துக்குப் போனாள். அவள் கண்ணில் சோகமும் அச்சமும் தெரிந்தது.

அவன் மேலே பேசுவதுக்கு முன் நர்ஸ் வந்தாள்.

“என்னாச்சு.? எப்படி இருக்காங்க.?” என்று கேட்டான் சந்திரன்.

“ரொம்ப லக்கியா தப்பிச்சிட்டாங்க. மைல்ட் ஹார்ட் அட்டாக். டாக்டர் பயமில்லைன்னு சொல்லிட்டார்.....”

“தேங்க்ஸ் சிஸ்டர்....”

வெள்ளை நிற தேவதை சென்றுவிட..

“அப்பாடா.... இப்ப தான் நிம்மதி..” என்றான் சந்திரன்.

“இந்த இக்கட்டான சூழ்நிலையில் நீங்க அருகே இருந்தது எனக்கு ரொம்ப ரொம்ப ஆறுதலா இருந்துச்சு....” காவ்யா கலங்கிய கண்களுடன் சொன்னாள்.

“மனுஷ ஜென்மம் ஒருவரை ஒருவர் அண்டி தான் வாழணும். அனுசரித்து போகணும். இது கடமை.”

குற்ற உணர்வில் மனம் வெதும்ப நின்றாள் காவ்யா.

“இப்ப நினச்சா கூட கூசுது. ஸாரி.. ஸாரி..”

“எத்தனை ஸாரி சொல்வீங்க.? ஒண்ணு கேக்கலாமா.? உங்களுக்கு ஆண்கள்ன்னா பிடிக்காதா.?” என்றான்.

“அப்படியில்ல.... எனக்கு நிரஞ்சனை ரொம்ப பிடிக்கும்..”

“யாரு நிரஞ்சன்.?”

“அவரைத் தான் நா லவ் பண்ணறேன்.. இப்ப ஊரில் இல்ல.”

“ஓ....” சந்திரன் மனம் அமாவாசை ஆனது. ஒரு சின்ன ஈர்ப்பு. அது நீர்முட்டை போல் உடைந்து போனது.


“என்ன ஏதோ யோசனையில் இருக்கீங்க.?”

நா எவ்வளவு அன்லக்கின்னு நினச்சேன்.... என்று மனசுக்குள் எண்ணிக் கொண்டான்.

“ஒண்ணுமில்லே போலாமா?....”

விடியும் நேரம் அந்தப் பெண்மணி ராதாவுடனும் அவள் மகள் சசியுடனும் விடுதிக்கு திரும்பினார்கள்.

மூன்று நாட்கள் நிம்மதியாக போயிற்று. அன்று சாயங்காலம் சந்திரன் விடுதிக்கு வந்தான்.

“ஹேமா.... எனக்கு பிரமோஷன் கிடச்சிருக்கு. இனி இங்க தான் வேலை. டியூட்டி ஜாயின் பண்ண ஒரு மாசம் டைம் கொடுத்திருக்காங்க. நாம நாளை காலையில் கிளம்பி மதுரை போயிடலாம். சித்தப்பா காத்திட்டு இருப்பாங்க..”

“அப்பா எனக்கு ஃபோன் பண்ணினார். என் கால் எலும்பு முறிவு பத்தி நா சொல்லலை. அவர் டென்ஷன் ஆயிடுவார்.” என்றாள் ஹேமா.

“நல்ல காரியம் செஞ்சே. இன்னும் கொஞ்ச நாள் நீ பெட்ரெஸ்டில் இருக்கணும். காரில் தான் போறோம். நீ வரமுடியும் தானே.?”

“பின்னே இங்க தனியா உக்காந்துகிட்டு நா என்ன செய்யப் போறேன்.?”

காவ்யா அவர்கள் அறைக் கதவை தட்டிவிட்டு அனுமதி கிடைத்து உள்ளே வந்தாள். “ராதாவும் அவங்க மக சசியும் நல்லா இருக்காங்க. எல்லாம் சாரோட புண்ணியத்தால்....”

“கடவுள் புண்ணியத்தால்ன்னு சொல்லுங்க.... அப்புறம் காவ்யா நாங்க நாளை கிளம்பறோம்.. பட் திரும்ப வருவோம்..”

தனக்கு வேலை கிடைத்தது பற்றி சொன்னான்.

“வாவ் தட் இஸ் கிரேட். ஹேமா இங்க இருக்கட்டும். நீங்க வரும் வரை.. “ என்றாள் காவ்யா.

“இல்லில்ல.... நா போனும் அப்பா தேடுவார்.”

“சரி.. இன்னும் உங்களுக்கு உயிர் போறா மாதிரி பெயின் இருக்கு. டாக்டர் செக் பண்ணி கிரீன் சிக்னல் கொடுக்கட்டும். அப்புறம் போலாம்.. என்ன சரிதானே சந்திரன்.?”

யோசையுடன் சிறிது நேரம் நின்றான். பின்..

“அதுவும் சரிதான்....” என்றான். காவ்யா டாக்டர் குமாரை வரவழைத்து செக் பண்ண சொன்னாள்.

“இன்னும் ஒரு வாரம் அவங்க ஸ்டிரெயின் பண்ணாம இருக்கணும். விழுந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகியும் நார்மல் ஆகலன்னா.. ஷீ நீட்ஸ் பர்தர் டிரீட்மெண்ட். ஆஸ்பிடலில் அட்மிட் பண்ணுவது நல்லது. ஹேர்லைன் ப்ராக்சர்யாக இருந்தாலும் ஆறு வாரம் கம்ளீட் ரெஸ்ட் தேவை. எம். ஆர். ஐ ஸ்கான் எடுக்கணும்.....”

“என்ன டாக்டர் இப்படி சொல்றீங்க.?”

“இவ்வளவு நாள் டிரீட் மெண்ட் இல்லாம அப்படியே வச்சிருக்கீங்க.? என்ன நினச்சிட்டு இருக்கீங்க.? அப்புறம் நடக்கவே முடியாம போயிடும். பயப்பட வேணாம். இம்மிடியட்டா ஹாஸ்பிடலில் சேர்க்கணும்....”

“டாக்டர்.. காரில் தான் போறோம். அப்படியே கூட்டிக் கொண்டு போறேன். மதுரை எங்க ஊரு. அங்கே....”

“படிச்சவங்க தானே நீங்க.? சீரியஸ்னஸ் புரியாம பேசிட்டு இருக்கீங்க. அசைவே கூடாது. காஸ்ட் போடணும்..” சொல்லிவிட்டு

அவர் சென்றுவிட்டார். காவ்யா சொன்னாள்....

“சந்திரன் கவலைப்படாம போங்க. நான் பார்த்துக்கறேன். என்னை நம்புங்க. ஹேமா என் கூடப் பிறந்த சகோதரி மாதிரி.”

அவனுக்கு மளுக்கென்று கண்ணீர் வந்தது. ஹேமா திக்கென்று உணர்ந்தாள். கால் பிரச்சனையின் பயம்.. அதைவிட காவ்யாவிடம் இருக்க வேண்டிய சூழ்நிலை....

“சரி.... நா இப்ப வரேன்.”

அவன் திரும்ப வந்தபோது மீனாவுடன் வந்தான்.

“இவ எதுக்கு.?” என்றாள் காவ்யா.

“ஹேமாவை இவ நல்லா பாரத்துக்குவா..”

காவ்யா முகம் வாடியது. அவன் தன்மேல் நம்பிக்கை வைக்காமல் மீனாவை கூட்டி வந்தது அவளுக்கு வலித்தது. அந்த வலி தெரிந்த கண்களை பார்த்தபோது அவனுக்கும் மனசுகுள் வலித்தது.

“ஹேமாவுக்கு மீனா மேல் ரொம்ப நம்பிக்கை.. அதான்.” என்றான் மெல்லிய குரலில். கண்ணில் நிரம்பிய நீருடன் அவள் புன்னகை செய்து தலையாட்டினாள்.

ஹேமாவை ஹாஸ்பிடலில் டாக்டர் குமாரிடம் ஒப்படைத்துவிட்டு அவன் கிளம்பினான். ரெண்டு நாளில் வந்திடுவேன் ஹேமா....

ஒரே வாரத்தில் என்னென்னவோ நடந்துவிட்டது. உல்லாச டூர் சங்கடத்துடன் முடிந்திருக்கிறது.

சொந்தம் தொடரும்.
 
Top Bottom