• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

காதல் எங்கள் சொந்தம் - 30

Vishakini

Moderator
Staff member
முப்பதாம் அத்தியாயம்
காதல் எங்கள் சொந்தம்...30
பிடிச்ச இடத்தில் கால் வைக்கும்போது.. மனசு ரெக்கை கட்டி பறக்கும். சந்திரனுக்கு அப்படித்தான் இருந்தது. காவ்யா வாழும் மண் என்று ஒரு சிலிர்ப்பு ஓடியது.
கொடைக்கானல் மலர்விழி விடுதி வந்து சேர்ந்தவுடன்....
“சித்தப்பா.... தங்கச்சிக்கு நல்ல வரன் பார்த்திருக்கோம். அது நல்லபடியா நடக்கணும். ரொம்ப சந்தோஷமா இருக்கு…. “
“ஹேமா இந்த வரனுக்கு ஒத்துக்கணுமே..” என்றார் கிரிதரன் கவலையுடன். சந்திரன் இங்கு மாற்றல் ஆகி வரும் இந்த நிமிடம் வரை அவர் புலம்பிக் கொண்டே தான் இருந்தார். “ஹேமா அங்க தனியா இருக்கா.... நா போறேன்னு சொன்னா நீ விடலை..”
“சித்தப்பா.... காவ்யா அவளை நல்லா பார்த்துக்குவா.” என்று சமாதானப்படுத்தி வந்தான்.
“மதுரை மீனாட்சி தாய் தான் ஆதரிக்கணும்.”
கேப் மலர்விழி விடுதி வாசலில் வந்து நின்றது. பார்த்ததும் ஓடி வந்து வரவேற்றனர் காவ்யாவும் ஹேமாவும். “அண்ணா.. அப்பா வந்தாச்சு.” என்றாள் ஹேமா குதூகலத்துடன். காவ்யா....
“வாங்க வாங்க.. சந்திரன் உங்க தங்கச்சியை பத்திரமா பார்த்துக்கிட்டேன். சந்தோஷம் தானே.? அய்யா உங்களுக்கும் சொல்றேன், ஹேமா ஆரோக்கியத்துடன் இருக்கா...”
“ரொம்ப நன்றி மா.” என்றார் கிரிதரன்.
“அண்ணா.. உன் கூட நான் நிறைய பேசணும். அப்பா.. உங்களுக்கும் மகிழ்ச்சியான ஒரு செய்தி சொல்லப் போறேன்..” என்றாள் ஹேமா.
“முதல்லே குளிச்சு.. சாப்பிட்டு அப்புறம் பேசலாம். அம்மா உங்க கூட பேசணும்னு சொன்னாங்க.. வாங்க..” என்று மேலே கூடிப் போனாள் காவ்யா. வேதவல்லி அம்மாள் முகம் பூரிக்க அவர்களை எதிர்பார்த்து அமர்ந்திருந்தார்கள். வணக்கமும் நலமும் விசாரித்த பின் அம்மாள் பேசினார்.. காவ்யா அங்கிருந்து சென்றுவிட்டாள். அம்மா என்ன பேசப்போகிறார் என்று அவளுக்குத் தெரியும். நேற்று தான் அவர்களிடையே பெருத்த விவாதம் நடந்தது.
“காவ்யா சந்திரனின் சித்தப்பாவிடம் பேசப் போறேன்... உன் கல்யாண விஷயமா..”
“அம்மா வேண்டாம். நிரஞ்சன் தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்துக்க என் மனம் இடம் கொடுக்காது. நீங்க பேசுவது வீண். என்னை நிம்மதியா இருக்க விடுங்க....”
“இல்ல.... எனக்கு படபடன்னு வருது. நா ரொம்ப நாள் இருப்பேன்னு தோனலை. பயமா இருக்கு. நிரஞ்சன் வர மாதிரி தெரியலை. அவனைப் பற்றிய தகவல் ஏதும் சரியில்ல. ஒரு அம்மாவா என் கடமையை செய்ய விடு. இல்ல நா இன்னிக்கே என் தங்கச்சி வீட்டுக்குப் போய்டுவேன், அப்புறம் வரவே மாட்டேன்.. பிறகு உன் இஷ்டம்.” என்றார் கடுமையாக.
“சரி பேசுங்க.... அதுக்காக நா சம்மதிச்சிட்டேன்னு அர்த்தமில்ல.”
இருவரும் முறுக்கிக் கொண்டார்கள்.
இப்ப சந்திரனை எதிரில் பார்த்ததும் அம்மாளுக்கு மனம் குளிர்ந்தது. அவனின் சித்தப்பாவிடம் பேச ஆரம்பித்தார்.
“எனக்கு சுத்தி வளைச்சு பேசத் தெரியாது. எங்க பொண்ணு காவ்யாவை உங்க சந்திரனுக்கு கொடுக்க ஆசைப்படறேன். உங்க விருப்பம் சொன்னா..”
“அம்மா.. ரொம்ப சந்தோஷம். எனக்கு இந்த சம்மந்தத்தில் முழு சம்மதம். சந்திரனுக்கும் விருப்பம் தான். ஆனா என் பொண்ணு ஹேமாவுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகட்டும். பிறகு தான்....”
வேதவல்லி அம்மாள் முகம் மலர்ந்தது.
“அதுக்கென்ன.? ஹேமா என் பொண்ணு மாதிரி தான். அவ கல்யாணம் முடியட்டும். அதுவரை காத்திருக்கோம்....”
ஹேமாவுக்கு வரன் பார்த்திருப்பதை சொன்னார்.
“நல்ல இடம். மாப்பிள்ளை ரொம்ப அன்டர்ஸ்டான்டிங் டைப். பொருத்தமான ஜோடியா இருப்பாங்க.... சாமான் எல்லாம் மதுரையிலிருந்து லாரியில் வருது. புது வீட்டுக்குப் போறோம். பால் காச்சறோம். உங்க ஆசிகள் வேணும்.” என்றார். அவர் எழுந்து கீழே சென்றார். சந்திரனும் எழுந்தான்.
“தம்பி உக்காருப்பா. நா உன் கூட பேசணும்.” சந்திரன் அமர்ந்தான். என்னப் பேசப்போறாங்க..? மரியாதை பொங்க அவரைப் பார்த்தான்.
“தம்பி.... என் கணவர் இறந்த ஒரு சில மணி நேரத்திலேயே எனக்கு ஹார்ட் அட்டாக் வந்துச்சு. பேஸ்மேக்கர் வச்சு விட்டாங்க. அது முதல் இந்த அறையே கதின்னு வாழறேன். பேஸ்மேக்கர் சப்போர்ட்லே தான் இத்தனை வருஷம் உயிர் பிழச்சு இருக்கேன். இப்பவெல்லாம் எனக்கு அதிகமா மூச்சி இரைக்குது. கண்கள் இருட்டிட்டு வருது. காவ்யாவை தனியா விட்டிட்டு போய்டுவேனோன்னு பயமா இருக்கு...” அந்த முதிய கண்களில் கண்ணீர் கண்டதும் சந்திரன் பதைபதைத்துப் போனான்.
“அம்மா.. ஆஸ்பத்திரி போலாம் வாங்க.”
“வேண்டாம் பா. ஆஸ்பத்திரி வைத்தியம் செய்து என்ன புண்ணியம்.? எனக்கு வைத்தியமே என் பொண்ணு கல்யாணம் தான். தம்பி நீங்க எக்காரணத்தைக் கொண்டும் காவ்யாவை கைவிட மாட்டேன்னு சத்தியம் செய்யுங்க. நிரஞ்சன் பொறுப்பில்லாம ஓடினவன்.. அவளை கடைசிவரை காப்பத்துவான்னுகறது என்னப்பா நிச்சயம்?.”
“அம்மா.. சூழ்நிலை சந்தர்ப்பம் தான் நிரஞ்சன் போனதுக்கு காரணமா இருக்கும். மனசை போட்டு குழப்பிக்காதீங்க. அவர் வருவார்ன்னு காவ்யா நம்பறாங்க.... காத்திருக்கலாமே..”
“தம்பி..... காத்திருக்கலாம் பா. ஆனா என் உயிர் காத்திருக்குமா.? இந்த விடுதி.. டீ எஸ்டேட் எல்லாம் எடுத்து நடத்றா. பொறாமை கொண்டவங்க அவளை விழ்த்த சதி செய்யறாங்க. அந்த பிரசாத் பண்ண ஆட்டுழியம் கொஞ்ச நஞ்சம் இல்ல. ஒரு ஆண் துணை இருந்தா அவங்க கொட்டம் அடங்கும்..”
“எனக்கு என்னவோ நிரஞ்சன் சார் வருவார்ன்னு தோணுது. என் தங்கச்சி கல்யாணம் நடக்கட்டும். இது பற்றி அப்புறம் முடிவு எடுக்கலாம் மா. உங்க மக மனசு மாறி என்னை ஏத்துக்கிட்டா நான் கண்டிப்பா அவங்களை கல்யாணம் செய்துக்குவேன். பக்கபலமா இருப்பேன். காத்திருக்கேன் இது உறுதி. கொஞ்சம் அவங்களுக்கு டைம் கொடுங்க. தைரியமா இருங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்..” என்றான் ஆறுதலாக. அம்மாள் கண்ணை துடைத்துக் கொண்டார்.
“ரொம்ப நன்றி தம்பி. என் பொண்ணு வேறு ஒருவனை காதலிப்பது தெரிந்தும்.. பெருந்தன்மையுடன் அவளை ஏத்துக்க சம்மதம்ன்னு சொன்னீங்க பாரு. அது தான் தூய்மையான உண்மைக் காதல். நிரஞ்சனுக்கு காவ்யாவை விட யாரோ, அல்லது எதுவோ தான் முக்கியமா பட்டிருக்கு. இல்லாட்டி அவன் அவளை தவிக்கவிட்டு ஓடியிருப்பானா.? உன்னைத் தான் நம்பி இருக்கேன் தம்பி.”
அவன் விடைபெற்று கீழே வந்தான். புது வீட்டை பார்க்க புறப்பட்டனர். “ஹேமா.. நீ வீட்டை சுத்தம் பண்ணி இருக்கே தானே.?”
“ஆமாப்பா.. வாங்க போலாம்..”
வீடு மூன்று அறை கொண்ட வசதியான வீடாக இருந்தது. பின்னால் தோட்டம் அழகாக இருந்தது. “அப்பா.. வீடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... நவீன வசதியுடன் விஸ்தாரமா இருக்கு.”
லாரி ஒன்பது மணி வாக்கில் வந்தது. சாமான்களை இறக்கி அதன் அதன் இடத்தில் வைக்க ரெண்டு நாள் ஆனது.
மூன்றாம் நாள் தான் அவர்களுக்கு சாவகாசமாக பேச நேரம் கிடைத்தது. மொட்டை மாடியில் மூன்று சேர் போட்டு மூவரும் அமர்ந்தனர். சித்தப்பா முகத்தில் பிரகாசம்.
“அம்மாடி ஹேமா. உனக்கு நல்ல வரன் அமஞ்சிருக்கு. உன்னைப் பற்றி விவரம் சொல்லிட்டேன். பிரச்சனை இல்லன்னு சொல்லிட்டாங்க. இந்தா மாப்பிள்ளை புகைப்படம்.” புகைப்படத்தை பார்க்காமல் அவரிடமே கொடுத்த ஹேமா சொன்னாள்....
“அப்பா.... நீங்க கொண்டு வந்த வரன் கண்டிப்பா நல்ல வரன் தான்.... ஆனா..” நிர்மல் பற்றி சொன்னாள். கற்பகம், சசி பாப்பா எல்லாம் பற்றி விரிவாகச் சொன்னாள்.
“அப்பா.. நிர்மல் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். தெரிந்தவர் கணவர் ஆவது குடுப்பினை. அதுவும் என் போன்ற ஒரு பெண்ணுக்கு..”
அப்பா சம்மதிப்பாரா.? கவலையுடன் அவர் முகத்தைப் பார்த்தாள். அவர் சின்னதாக ஒரு பெருமூச்சு விட்டார். சந்திரனைப் பார்த்தார்.
“நீ என்னப்பா சொல்றே.?”
“சித்தப்பா.... ஹேமா சந்தோஷமா இருக்கணும். அவளுக்கு பிடிச்சிருக்கு. அது போதும். நிர்மல் குடும்பம் பற்றி காவ்யா என்னிடம் நல்லவிதமாவே சொல்லியிருக்கா..”
“அப்ப எனக்கும் ஓ.கே.” ஹேமா முகம் மலர்ந்தது. அப்பாடா அவள் லைன் கிளியர்.
சித்தப்பா படுக்கப் போனதும் ஹேமா அண்ணனிடம் பேசினாள்.
“அண்ணா.. காவ்யா இன்னமும் நிரஞ்சன் வருவார்ன்னு நினைக்கிறா. உன் பக்கம் எதுவும் நிச்சயமில்லையே அண்ணா.?”
“ஹேமா..... நிரஞ்சன் வந்தா காவ்யா விருப்பம் போல் நடக்கட்டும். நா அவளை லவ் பண்ணுவது உண்மை. எங்க கல்யாணம் நடக்காம போலாம். பரவாயில்ல. அவ எங்கிருந்தாலும் வாழ்க. என் நெஞ்சில் புது ரோஜாவாக மனம் வீசிக் கொண்டே இருப்பாள். வேறு பெண்.. கனவில் கூட இல்லை.”
ஹேமாவுக்கு இந்த பதில் அதிர்ச்சியாக இல்லை. எதிர்பார்த்த பதில் தான். நிரஞ்சன் வருவானா.?
சொன்ன தேதியில் நிர்மல்.. ஹேமா நிச்சயதார்த்தம் நடந்தது. சசி இருவர் கையையும் பிடித்துக் கொண்டு ஊஞ்சலாடினாள். கற்பகம் இந்த வீட்டுப் பெண், எங்க சகோதரின்னு பிரபுசங்கர் சொந்தங்கள் முன் சொல்லி நெகிழ்ந்தான்.
கற்பகம் வளைகாப்பு நன்றாக அனைவர் ஆசியுடன் நடந்தது. எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி.
காவ்யாவை தனியாக சந்தித்தான் சந்திரன். அவர்கள் ஏரியில் படகு சவாரி செய்தபடி பேசினர்.
“சந்திரன்.. உங்க கிட்டே ஒரு கேள்வி.”
“சொல்லு காவ்யா. நானும் உன்னுடன் மனம்விட்டுப் பேசவே விரும்பறேன்.” ஏரி நீரின் சளசளப்பு ராகம் பாடியது. வானம் தூய நீலத்தில் இருந்தது. ரசித்துப் பார்த்தார்கள்.
“என்னை கல்யாணம் செய்துக்க முடியாதுன்னு அம்மா கிட்டே சொல்லிடுங்க சந்திரன். மனசில் ஒன்று வாழ்வில் வேறு ஒன்று என்று எப்படி வாழ முடியும் சந்திரன்.? நிரஞ்சன் மேல் யாரோ பழி போட்டதால், அம்மா ரொம்ப அப்செட் ஆகிட்டாங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு. நிரஞ்சன் மனசில் நான் மட்டும் தான்..”
“புரியுது காவ்யா. அம்மா கிட்டே இப்ப முகத்தில் அடித்த மாதிரி பேச முடியாது. அவங்க உடம்பு சரியில்லாதவங்க. இந்த இஷ்யூவை ஆறப் போடலாம். நிரஞ்சன் வந்தால் உங்க வாழ்க்கை அவரோட தான். நான் குறுக்கே வந்து கலாட்டா பண்ண மாட்டேன். எது காதல்?.. விரும்பியவள் கிடைத்தாலும் கிடைகாட்டியும் அவள் மகிழ்ச்சியாக வாழணும்னு நினைப்பது தான். நீயா விரும்பி என்னிடம் ஐ லவ் யூ சொன்னா தான் நான் சம்மதிப்பேன்.”
“தேங்க்ஸ் சந்திரன்... நிரஞ்சன் வருவது உறுதி.” என்ற காவ்யா அவன் கையைப் பற்றி தன் நன்றியை தெரிவித்துக் கொண்டாள்.
காவ்யா சந்திரனின் கைப்பிடித்துக் கொண்டு படகில் செல்வதை நிரஞ்சன் பார்த்தான்.
“நா உன்னிடம் சொன்னது உண்மைன்னு இப்ப நம்புவே தானே.? உன் காவ்யா உன்னை மறந்துவிட்டாள்.” என்றான் நிரஞ்சன் கூட நின்ற அவன் சிநேகிதன் ராமு.
சொந்தம் தொடரும்.




 
Top Bottom