• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

காதல் எங்கள் சொந்தம் - 31

Vishakini

Moderator
Staff member
முப்பத்தி ஒன்றாம் அத்தியாயம்.
காதல் எங்கள் சொந்தம்..31
வதந்திகள் வேகமாக பரவும். ராமு தான் கேட்ட விஷயத்தை தான் சொல்கிறான். நிரஞ்சனால் அதை நம்பமுடியவில்லை.
காவ்யா வேறு ஒரு ஆடவனுடன் கைபிடித்து படகில் போகிறாள் என்பதற்காக அவள் மனசு மாறிவிட்டாள் என்று அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“ராமு.... எனக்கு காவ்யா பற்றி நல்லாத் தெரியும். அவள் மனசில் இந்த நிரஞ்சன் மட்டும் தான் நிறஞ்சிருக்கான்..”
“நீ அவ மனசில் நிறஞ்சிருக்கலாம். ஆனால் அவள் கல்யாணம் செய்து கொள்ளப் போவது சந்திரனைத் தான்..”
“தப்பா பேசாதே ராமு..”
“வேண்டுமானால் அவளையே கேட்டு தெரிஞ்சுக்க. அதான் இங்க வந்திட்டியே. டீ எஸ்டேடில் வேலை பார்க்கும் அத்தனை பேருக்கும் இது தெரியும். உன் தயவால் எனக்கு அங்க தான் வேலை கிடச்சுது. வேதவல்லி அம்மாவே சொன்னாங்களாம். நான் ஏம்ப்பா பொய் சொல்லப் போறேன்.? சரி வரேன்.. எனக்கு வேலைக்கு நேரமாச்சு.”
ராமு சென்றுவிட நிரஞ்சன், மனசு நிறைய கேள்விகளுடன் ஹோட்டல் அறைக்கு வந்தான். அவன் அம்மா வீடு இருந்தது. அதை வாடகைக்கு விட்டுவிட்டான். பிரோகர் மூலம் தான் ஏற்பாடு பண்ணினான். “நல்ல மனுஷா நிரஞ்சன் சார்.” என்று சொல்லியிருந்தார். குடியிருப்பவர்களை பார்த்து பேசணும் என்று நினைத்திருந்தான். அதற்கு நேரம் வாய்க்கவில்லை.
சாப்பாட்டை ஆர்டர் பண்ணிவிட்டு உட்கார்ந்தான். அவனுக்கு எதுவும் ஓடவில்லை. அவன் மனசாட்சி அவனை உறுத்தியது. நீ யாரை வேண்டுமானாலும் கல்யாணம் செய்து கொள்.. உன் வாழ்வை அமைத்துக் கொள்.... நீ தானே சொல்லிவிட்டு கோழை போல் ஓடினாய்? இப்ப அவ உனக்காக காத்திருப்பாள்ன்னு எதை வச்ச நம்பிட்டு இருக்கே.? இது தான் உன் காதலின் லட்சணமா?.... சொல்லிக்கொண்டாவது போயிருக்கலாம்.... மனம் இடித்துக் கூறியது. அவனுக்கே அவனைப் பிடிக்கவில்லை.
கலா பிரச்சனை ஒரு முடிவுக்கு வரலை என்றால், நீ இன்னமும் அங்கு தானே இருந்திருப்பே?... ஒரு தொடர்பும் கொள்ளாமல், மாசக் கணக்கில் இருந்துவிட்டு.. அவள் மனம் என்ன பாடுபட்டிருக்கும்ன்னு ஒரு முறை கூட எண்ணாமல்.. நிரஞ்சன் இதுக்குப் பேர் காதலா.?
மனசு சரியில்லை. அவனும் அவளும் சேர்ந்து பார்த்த ஒரு பழைய படத்தின் பாடலை கேட்க மொபைலை ஆன் பண்ணினான். மன சாந்திக்காக பாட்டு கேட்டான்.
காவ்யாவின் பிறந்தநாள் வந்தபோது அவன் அந்தப் படத்திலிருந்து தான் ஒரு பாடலைப் பாடி வாழ்த்தி இருந்தான்....
‘பூவினும் மெல்லிய பூங்கொடி.. பொன்னிறம் காட்டும் பைங்கிளி.. சிறு மாவிலை பின்னிய தோரணம்.. சிறு மைவிழி நாடக காவியம்.. அவள் வாழ்க.. தினம் வாழ்க.. இந்த ஏழை நெஞ்சின் கோவிலில் தெய்வப் பெண்ணாக..’
அவன் கண்ணில் நீர் துளிர்த்தது. கேக் வெட்டி அவளுக்கு ஒரு துண்டு ஊட்டியது அவன் நியாபகத்துக்கு வந்தது.
அதே சமயம் காவ்யாவும் அந்தப் பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்தாள் தன் மொபைலில்... அது தான் காதலின் சக்தியோ.? எப்படி அதே சமயம் அவளுக்கும் அந்தப் பாடலை கேட்கத் தோன்றி இருக்கும்.! அவன் ஆண் பாடிய பாடலை கேட்டான். இவள் பெண் பாடிய பாடலை கேட்கிறாள்.. காதலில் தோற்ற பெண்ணின் பாடல் அது.... தனக்கும் காதல் தோல்வி தான் என்று எண்ணி, அவள் அந்தப் பாடலை கேட்டு ஆறுதல் அடையப் பார்க்கிறாள்.
‘பூவினும் மெல்லிய பூங்கொடி.. பொன்னிறம் காட்டும் பைங்கிளி.. சிறு மாவிலை பின்னிய தோரணம்.. சிறு மைவிழி கண்ணீர் காவியம்.... அவள் வாழ்க.. தினம் வாழ்க.. அந்த ஏழை நெஞ்சின் கோவிலில் தெய்வப் பெண்ணாக....’
அவள் அவன் நெஞ்சில் தெய்வப் பெண் தான்.. மைவிழியில் கண்ணீர் நிரம்புகிறது.
அவன் கேட்டுக் கொண்டிருந்த பாடலின் அடுத்த வரிகள்..
‘அந்த வானில் செல்லும் மேகமே.. அந்த வானுக்கென்ன சொந்தமோ.?.. அங்கு நானும் அந்த மேகமே.. இனி நாளை காலம் மாறுமோ.?....’ தன் விதியை தானே எழுதிக் கொண்டது போல.. அவனுக்கு அவள் கிடைப்பாளா என்ற சந்தேகத்தில் வந்த வரிகள்..
காவ்யா கேட்ட பாடல் வரிகள் அதற்கு பதில் சொல்வது போல அமைந்திருந்தது.
‘ஓடும் மேகம் ஓடினால்.. தேடும் நெஞ்சம் தேடலாம்.. தேடும் நெஞ்சம் தேடினால்.. செல்லும் மேகம் திரும்புமோ.?’
காதல் பறிபோன அந்த வினாடி திரும்ப வருமோ.? வராது. அது சென்றுவிட்டது. துக்கத்தை விதைத்துவிட்டுச் சென்றுவிட்டது.
‘அன்று காதல் தேவன் பாடினான்.. அதை காலத் தேவன் மூடினான். அன்று பாடச் சொன்ன பாடலை.... ஏன் மூடச் சொன்னாய் தெய்வமே?.....’
பட்டென்று இருவருமே அந்தப் பாடலை நிறுத்தினர். இருவர் கண்களிலும் தோற்றுப் போன காதலின் வலி.
காவ்யாவை தேடி ஹேமா வந்தாள். “சாப்பிட வா காவ்யா.”
“வேணாம் ஹேமா. அம்மாவின் பிடிவாதம்.. எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை. உன் அண்ணாவை நா எப்படி.?”
“காவ்யா.... என் கல்யாணம் முடியும் மட்டும் உனக்கு நேரம் இருக்கு. நன்றாக சிந்தித்து பதில் சொல்லு. உன் மனசு என்ன சொல்லுதோ அதைக் கேள். மற்ற யார் பற்றியும் நீ கவலைப்பட வேண்டாம்.”
“அம்மாவை பற்றி தான் நா கவலைப்படறேன். அவங்க உடம்பு சரியில்லாதவங்க. பி.பி இப்ப ஜாஸ்தி ஆகிவிட்டது. டாக்டர் எச்சரித்துவிட்டுப் போயிருக்காங்க..”
“இந்த நிரஞ்சன் ஏன் தொடர்பு கொள்ளாம இருக்கார்.?”
“மொபைலில் பார்த்த படங்கள் தான் அம்மாவின் மனசை மாத்திடுச்சு. நிரஞ்சன் நல்லவன் இல்லை, திரும்ப வரமாட்டான், அங்கேயே செட்டில் ஆகிட்டான்னு முடிவு பண்ணிட்டாங்க... சந்திரனை என் மனம்..” முடிக்காமல் அழுதாள்.
“நீ மனசை போட்டு குழப்பிக்காதே. சசி உன்னை எங்கேன்னு கேட்டுக்கிட்டு இருக்கா. சாப்பிட வா முதல்ல.”
சாப்பிட பிடிக்கவில்லை. பேசப்பிடிக்கவில்லை. தூங்கப் பிடிக்கவில்லை. எல்லாமே இருளாக இருந்தது. வேதவல்லி அம்மா மகளை மீண்டும் கூப்பிட்டு உபதேசம் செய்ய ஆரம்பித்தார். பொம்மை போல் கேட்டுக் கொண்டிருந்தாள் அவள். உள்ளே கண்ணீர் வழிந்தது. உதட்டில் சின்ன சிரிப்புடன் கேட்டுக் கொண்டாள். பெற்று வளர்த்து ஆளாக்கி, பாசமும் நேசமும் காட்டி வளர்த்த அம்மாவை எதிர்க்க அவளால் முடியவில்லை. காரணம்.. அவனிடமிருந்து எந்த தகவலும் இல்லை. போனும் இல்லை....
இருவரும் ஒரே ஊரில் இருந்து கொண்டு.... இந்த நவீன உலகில்.. தொடர்பு கொள்ளாமல் இருப்பது அதிசயம் தான். நிரஞ்சன் மனசில் இன்னும் ஒரு தெளிவு பிறக்கவில்லை.. காவ்யா சந்திரனை கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போவது நிஜம் என்றால்.. இடையில் புகுந்து அதை கெடுப்பது என்ன நியாயம்.? ஒருவேளை அவளே விரும்பி தான் சந்திரணை கல்யாணம் செய்ய ஒப்புக் கொண்டாளா.?
அவளை ஒரு முறை சந்தித்து பேசினால் என்ன.? ரொம்ப யோசனைக்குப் பின் அவன் காவ்யாவின் அம்மாவுக்கு ஃபோன் செய்தான். அவன் செய்தி மிகப் பெரிய தவறு அதுவே. அவன் மனம் திக்திக்கென்று அடித்துக் கொண்டது. வேதவல்லி அம்மாள்.. யாரு புது நம்பரா இருக்கே.. எடுத்து..
“ஹலோ.. யாரு பேசறது.?” என்றார். எச்சிலை முழுங்கிக் கொண்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு....
“நா தான் நிரஞ்சன் பேசறேன்....” என்றான். ஒரு முழு நிமிடம் எந்த பதிலும் இல்லை. அந்த ஒரு நிமிடம் அவன் ஆயிரம் முறை செத்து செத்துப் பிழைத்தான்.
“தம்பி.. எங்கிருந்து பேசற.?” அவர் குரலிலிருந்து எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.
“இங்க தான்.... தாமரா ஹோட்டலிலிருந்து....”
“ஓ.. கொடைக்கானல் வந்திட்டியா.? சரி சொல்லு. என்ன வேணும்.?”
என்ன இப்படி கேக்கறாங்க.? விட்டேத்தியா பதில் சொல்றாங்க.
“வந்து.. எப்படி இருக்கீங்க மா.? உங்களை பார்க்க வரலாமா.?”
“நல்லா இருக்கேன். என் பொண்ணு காவ்யாவுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணியாச்சு. உனக்கு என் வாழ்த்துக்கள்..”
ராமு சொன்னது நிஜம் தான் போலிருக்கு. அவன் இதயம் சுக்குநூறாக உடைந்தது.
“எனக்கு வாழ்துக்களா.?”
“ஆமா.. கலா என்ற பெண்ணுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழற போலிருக்கு. அவளும் நீயும் சேர்ந்து இருக்கும் போட்டோ வந்துச்சு. தம்பி கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க. காவ்யா வாழ்க்கை செட்டில் ஆகிடிச்சு. குழப்பம் பண்ண வேண்டாம். நீ இங்க வரவேண்டாம்..” பட்டென்று ஃபோன் வைக்கப்பட்டுவிட்டது.
நிரஞ்சன் அதிர்ந்து போனான். யாரு இந்த சில்மிஷ வேலையை செய்திருப்பார்கள்.! இதற்கு மேல் அங்கு போய் பேசி என்ன பிரயோஜனம்.? வெற்று மனம் பாலைவனம் போல் ஆக.... சிந்திக்க மறந்து சிலையாக உட்கார்ந்து விட்டான்.
அதன்பின் அறையை விட்டே அவன் வெளிவரவில்லை.
ஹேமாவின் கல்யாணம் இனிதே நடந்தது. ஒரு மாசம் ஓடிவிட்டது. காவ்யா கல்யாண தேதியை குறிக்க வேதவல்லி அம்மாள் ஜோசியரை அழைத்திருந்தார். அடுத்த வாரம் நாள் நல்லா இருக்கு....
“காவ்யா.... உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்றால்.... நா விலகிவிடுவேன்.... தள்ளிப் போடலாமா.?”
“சந்திரன்.. தள்ளிப் போட்டாலும் இதே நிலைமை தானே வரும்.? நிரஞ்சனிடமிருந்து எந்த தகவலும் இல்லை. அம்மா ஆசையாவது நிறைவேறட்டும். சந்திரன்.. உங்க கூட வாழ எனக்கு டைம் வேணும்.” அவள் வருத்ததுடன் மேலும் சொன்னாள்..
“நா உங்க வாழ்க்கையை ஸ்பாயில் பண்ணப் போறேனோன்னு பயமா இருக்கு....”
“எனக்கு புரியுது காவ்யா. உன் மனசு மாற, ஒரு வருடம்... இரண்டு வருடம். டேக் யுவர் வோன் டைம். நா காலமெல்லாம் காத்திருப்பேன்....”
கல்யாண வேலைகள் நடக்க ஆரம்பித்தது.
இங்கு நிரஞ்சன் ரூமே கதி என்று கிடந்தான். அவனுக்கு வேணுங்கறதை ரூம் பாய் வாங்கிக் கொடுத்தான்....
ராமு அவனிடம்..”காவ்யாவுக்கு மாங்கல்ய பட்டு எடுத்தாச்சு. பந்தக்கால் விஷேஷம் முடிந்தது..” என்று நடப்பதை ரன்னிங் கம்மென்டரி பண்ணி வந்தான்....
காவ்யா எத்தகை பெண்.! விடுதியை நடத்தும் அவள் சாதூர்யம்.. கோர்ட் படி ஏறி கொலை கேசை சந்தித்த தைரியம்.... தன் எஸ்டேட்டில் வேலை பார்க்கும் தொழிலாளிகளின் குழந்தைகளை படிக்க வைக்கும் வள்ளல் தன்மை.... அப்புறம் மென்மையான காதல் மனசு.... அவளல்லவோ பெண்.! அவளுக்கு நான் ஜோடியா.?
காவ்யா என்ற தேவதையை தவிக்கவிட்டு ஓடிய நா எப்படி அவளுக்கு பொறுத்தமானவன் ஆவேன்.? எங்கிருந்தாலும் அவள் நன்றாக இருக்கட்டும். காவ்யா அம்மாவுக்கு என் மேல் நம்பிக்கை வரலை.. எப்படி வரும்.? கலாவுக்காக ஓடியவன்.... மீண்டும் ஓட மாட்டான் என்பது என்ன நிச்சயம்.? என்று தானே நினைப்பார்கள்.!
சரி இனிமேல் இங்கு இருந்து என்ன பயன்.? மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கே போக வேண்டியது தான். காவ்யாவின் கல்யாணத்தன்று அவன் இங்கு இருக்க விரும்பவில்லை. சிங்கப்பூர் ஏர்லைன்சில் டிக்கெட் கிடைத்தது.
தன் வீட்டில் குடியிருப்பவர்களை பார்த்து பேசிவிட்டு வர சென்றான். அவன் பெல் அடிக்க, கதவு திறந்துவிட்டது காவ்யா தான்.
நிரஞ்சன் வேகமாக திரும்பிச் சென்றான்.
சொந்தம் தொடரும்.


 
Top Bottom