• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

காதல் எங்கள் சொந்தம் - 8

நிதனிபிரபு

Administrator
Staff member
எட்டாம் அத்தியாயம்

காதல் எங்கள் சொந்தம்.. 8

காதல் தோல்வியை மறக்க சிலர், புதுப் புது இடங்களுக்குச் சென்று தங்கள் மன வலியை காணாமல் போக்க முயல்வார்கள். ஹேமா இப்ப அந்த நிலையில் தான் இருந்தாள்.

குளித்துவிட்டு வந்த ஹேமா, நீல சூடியை தேடி எடுக்க பெட்டியைத் திறந்தாள். உடைகளை தள்ளி தள்ளிப் பார்க்கும்போது, சட்டென்று அவள் விரல்கள் நின்றன. ஒரு சூடியின் அடியில் இருந்த ஒரு பேப்பர் கட்டிங்கை பார்த்தாள். அவள் தான் கத்தரித்து அதை அட்டையில் ஒட்டி வைத்திருந்தாள். இன்னும் ஏண்டி அதை வச்சுக்கிட்டு இருக்கே.? கிழிக்க முயன்றாள்.... முடியவில்லை.

இத்தனை நாட்கள் மறைந்திருந்த சோகம் எட்டிப் பார்த்தது. படத்தை தடவிப் பார்த்தாள்.... கண்ணில் நீர் சுரந்தது. அவள் கண்ணில் நீர் வந்தால் போதும், தாங்கிக் கொள்ள மாட்டான்.. அப்படி இருந்தவன் தான். காதல் எங்கள் சொந்தம் என்று இருமாந்திருந்தாள்... அவள் முகத்தில் கரியை பூசிவிட்டுச் சென்றுவிட்டான்.

எந்த நாள் இனிய நாள் என்று நினைத்தாளோ.. அந்த நாள் கரிய நாளாக மாறியது.

வழக்கமாக சந்திக்கும் பார்க்கில் அவள் அவனுக்காக காத்திருந்த போது வந்தான். வழக்கமான மயக்கும் குரலில் ஹேமா டியர் என்று சொல்லாமல், புதிய குரலில் “எப்படி இருக்கே ஹேமா....?” என்றுவிட்டு ஒரு பத்திரிகையை நீட்டினான்....

“யாரோட கல்யாண பத்திரிகை அகில்.? ராகுலுடையதா.?” அவன் கல்லூரி நண்பன் ராகுல்.

“ஸாரி ஹேமா.... இது கல்யாண பத்திரிகை இல்ல. பெட்ராதல் இன்விடேஷன்.”

“ஓ.... நிச்சயதார்த்தத்தை கூட பத்திரிகையா.?” பத்திரிகையை பிரித்துப் பார்த்தாள்.

“என்ன அகில்.... இது.. இது.”

“என்னோட பெட்ராதல் பங்ஷன் தான்....”

“நேத்து கூட நல்ல பேசிட்டு இருந்த.... இன்னிக்கு பத்தரிகையை..”

அவள் குரல் உடைந்தது.

“ஸாரி ஹேமா. எப்படி சொல்றது.? உன் மென்மையான மனசை காயப்படுத்தனுமேன்னு சங்கடப்பட்டு தான்....” தலைகுனிந்தான்.

“காதலை தலைகுனிய வச்சுட்டே அகில்.”

“அப்படியில்ல ஹேமா. உன் குறை உறுத்துச்சு. பின்னாலே டிவோர்ஸ்ன்னு போனா அது உன்னை அதிகம் பாதிக்கும். நா உன்னை ஆதிலிருந்து சேவ் பண்ணிட்டேன் இல்லையா.? இந்த முட்டாளை மறந்திடு. உனக்கு ஒரு சென்சிபிள் பெர்சன் கிடைப்பார். யூ டோன்ட் நீட் திஸ் நாட்டி பாய்..” ஜோக்காம்.

“வாட் ஏ க்ருவல் ஜோக். நா உன்னை உண்மையா நேசிச்சேன்... நீ என்னை பொம்மைன்னு நினச்சயா.?”

“நீ இனி ரியாலிட்டியை எதிர்கொள்ள பழகணும். நீ நல்லா இருக்கணும். கூல் கூல்..” கூல் சொல்லி அவளை பூல் ஆக்கிவிட்டான். பத்திரிகையை கையில் வைத்திருப்பது நெருப்புத் துண்டத்தை வைத்திருப்பது போல் எரிந்தது. அதை தவற விட, அது மண் தரையில் விழுந்தது. புழுதிக் காற்றில் கரை படிந்து கிடந்தது.

இடியை தலையில் இறக்கிவிட்டு அவன் திரும்பிப் பார்க்காமல் போய்விட்டான். மெல்ல அந்த பத்திரிகையை எடுத்துப் பார்த்தாள். அவள் பேருக்கு பதில் ரோகிணி.. சோகம் நெஞ்சை பிளந்தது.

“உன் குறை பத்தி நீ ரொம்ப கவலைப்படற. அது எனக்கு ஒரு பொருட்டே இல்ல.” என்று வீர வசனம் பேசியவன்... இப்ப.? இரண்டு வருஷம் காதலித்தப் பின் தான் அவனுக்கு ஞானோதயம் ஏற்பட்டதா.? அவள் குறையை ஏற்றுக் கொள்ள முடியாதுன்னு.!

அகில் ஒரு டென்னிஸ் பிளேயர். அவன் ஒரு லீக் மாட்சில் வெற்றி பெற்றான். அவன் பரிசு வாங்குவதை படமாக போட்டிருந்தார்கள். அந்தப் படத்தை தான் கட் பண்ணி வைத்திருந்தாள். இன்னும் அவள் பெட்டியில் இருந்தது. படத்தை கிழித்து போடலாம் தான். ஆனால் மனசிலிருந்து அவனை கிழித்துப் போட முடியலையே.!

ஏதோ ஒரு உடையை எடுத்து உடுத்திக் கொண்டாள். மீண்டும் நிர்மலை சந்தித்து கெஞ்ச வேண்டும் என்று முடிவுடன் கிளம்பிக் கொண்டிருந்தாள். அந்த வீடு அவளுக்கு ரொம்ப ரொம்ப பிடித்துவிட்டது. நிர்மல் மனசை மாத்த முடியும் என்று நம்பினாள்.

அறைக் கதவில் விரல் முட்டியால் தட்டினாள் காவ்யா. ஹேமா கதவு திறந்தாள். “ஹேமா எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா.?”

“நிச்சயமா. என்ன உதவி.?”

“வந்து.... டீ எஸ்டேட் பக்கம் போகணும். அதுவரை விடுதியை மேற்பார்வை பார்த்துக்க முடியுமா ஹேமா.?”

நிர்மலை சந்திக்க பிளான் போட்டிருந்தாள்.... முடியாது போலிருக்கே

“ஹேமா.... ரொம்ப அவசரம். ரோசி பாரத்துக்குவா. நாலு அறைகள் காலியா இருக்கு. கஷ்டமர்ஸ் வந்தா என்ட்ரி பண்ணி அட்வான்ஸ் வாங்கணும். அந்த கஷ்டமர்ஸ் நல்ல ஆட்களான்னு செக் பண்ணணும். ரோசி பண்ணிடுவா. நீ என் சார்பா இருந்து பார்த்துக்க. அது போதும். ப்ளீஸ் ஹேமா.”

நடக்க முடியாத போது காவ்யா தன்னை அருமையாக பார்த்துக் கொண்டாள். அந்த நன்றியை மறக்க முடியுமா.? “சரி காவ்யா. நா பார்த்துக்கறேன். நீ நிம்மதியா போயிட்டு வா.”

“தேங்க்ஸ் ஹேமா..” விடுதலை பெற்றவள் போல் கிளம்பினாள். இவள் அளவுக்கு மீறி பரபரப்புடன் காணப்படுகிறாளே என்று ஹேமா எண்ணினாள். அந்த அவசரத்திலும் லேசாக திரும்பிப் பார்த்து. “ஹேமா.. சுதா சொன்னா.... அந்த வீட்டில் உள்ள நிர்மல் டிப்ரெஷனில் இருக்கானாம். யாரேனும் வீடு விலை பேச வந்தால், நாயை விட்டு பயமுறுத்தி விரட்டி விடறானாம். எதுக்கு வம்பு.? நீ இனிமே ப்ரொசிட் பண்ணாதே. நமக்கு வில்லங்கமான வீடு எதுக்கு.?” போய்விட்டாள்.

போடீ.. நீ யாரு அதை சொல்ல.? என்னோட அவுட்டிங்யை புஸ்வானம் ஆக்கிட்டே... சலிப்புடன் அமர்ந்தாள் ஹேமா. ரோசி அவளிடம் வந்து சில சந்தேகங்கள் கேட்டாள். அவளுடன் சென்று அன்று சமைக்க வேண்டிய மெனுவை பார்த்து டிக் பண்ணிவிட்டு, சில மாறுதல்கள் சொல்லிவிட்டு வந்தாள்.

“வேறு எதுவும் சந்தேகம் இருந்தா கேளு.. இங்க தான் இருப்பேன் காவ்யா வரும்வரை.” என்றாள்.

அறைக்குள் இருப்பது போர் அடித்தது. ஹான்ட் பேக்கில் இருந்த போனை எடுக்கும் போது பிரபுசங்கர் கொடுத்த விசிட்டிங் காரட் கீழே விழுந்தது. பிரபுவுக்கு ஃபோன் பண்ணி பேசினால் என்ன.? டக்கென்று நம்பர் பார்த்து அழுத்தினாள்.

“ஹலோ பிரபு ஹியர்..”

“நா ஹேமா பேசறேன்.”

“ஹேமா.? எந்த ஹேமா.? ஸாரி மறந்துவிட்டது.” ஞாபாகபடுத்தினாள்

“ஓ.... நீங்களா.? சொல்லுங்க சிஸ்டர்.” என்றான்.

அட டீசென்ட் பெல்லோ தான்.

“வீடு விஷயமா பேசலாமுன்னு. எனக்கு வீடு ரொம்ப பிடிச்சிருக்கு. விலை என்னன்னு சொன்னீங்கன்னா.... உங்க தம்பியை எப்படி சமாளிப்பது.? அவர் விட மாட்டாரே.”

“அவனை நா பார்த்துக்கறேன்.. வீடு பிடிச்சிருக்கா, அது தான் முக்கியம்.. நேரில் வரேன். ஹாவ் அன் அவர் டைம் கொடுங்க.” அவள் இருக்கும் இடம் விசாரித்துக் கொண்டான்.

மர்சிடஸ் பென்ஸ் வண்டி வந்து நிற்க, பிரபு இறங்கி வந்தான். ஹேமா வெளியே வந்து அவனை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றாள்....

“உக்காருங்க. அப்புறம் சொல்லுங்க பிரபு சார்.”

“சார் எல்லாம் எதுக்கு.? கால் மீ ஜஸ்ட் பிரபு. ஓ. கே..”

வீட்டின் விலை சொன்னான். “பழைய வீடு.... அதுக்கு கிரவுண்ட் வேலியூ தான். எங்க அப்பாவின் வீடு தான். நாப்பது வருஷம் ஆச்சு கட்டி.... இப்ப தம்பி பேரில் இருக்கு....” இழுத்தான்.

“அப்ப அவர் சம்மதம் முக்கியமாச்சே.... நீங்க இதில் எப்படி.?”

“ஒரு உண்மையை சொல்றேன் சிஸ். என் அம்மா புஷ்பா இறந்த போது எனக்குப் பத்து வயசு. அப்பா மறுகல்யாணம் பண்ணிக்கிட்டார். கோமதி சித்தி வந்தாங்க. ரெண்டு வருஷத்தில் நிர்மல் பிறந்தான். அவனும் நானும் நல்ல முறையில் தான் பழகினோம். சித்தி என்னை தன் மகன் போலத் தான் கவனித்துக் கொண்டார். அப்பா இறந்த போது வீட்டை சித்தி பேரில் எழுதி வச்சார். சித்தி உடனே அதை நிர்மல் பேருக்கு மாத்திட்டாங்க..”

“அப்ப உங்களுக்கும் அந்த வீட்டுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லே தானே.? அப்புறம் எப்படி நீங்க பொறுப்பு ஏத்துக்க முடியும்.?”

“நிர்மலுக்கு அவன் அம்மா தான் உலகம். புதுக் கார் வாங்கினான். அம்மாவை காரில் ஏற்றி கோவிலுக்குப் போனான். எப்படியோ ஆக்சிடென்ட் ஆகிவிட்டது. கோமதி அம்மாவுக்கு நல்ல அடி. ஆஸ்பத்திரியில் வைத்து டிரீட்மெண்ட் கொடுத்தும்.... அவங்க நிர்மல் மடியிலேயே இறந்து போனாங்க... அந்த குற்ற உணர்வில் நிர்மலுக்கு கடுமையான டிப்ரஷன் வந்துவிட்டது....”

“அச்சச்சோ.. கேக்கவே சங்கடமாக இருக்கு பிரபு சார்.”

“அவன் என்னை விட பன்னிரெண்டு வயது சின்னவன். அவனை என்னோடு வந்து இருக்கச் சொல்றேன். என் மனைவி சுகுணாவும் அதை தான் சொல்றா. அவன் எங்களை அவாய்ட் பண்ணறான். ஏன்னு தெரியலை. முன்னே அப்படி இருந்ததில்ல. என் மேலே அவனுக்கு ரொம்ப மதிப்பும் அன்பும் உண்டு. எதுக்கு இப்படி பிடிவாதம் பண்ணறான்ன்னு எனக்கே புரியலை. வீடு பார்க்க வரும் நபர்களை.. நாயை விட்டு விரட்டறான். ஒரு ஆளை அது கட்டித்துவிட்டது. அவருக்கு சிகிச்சை செய்து.. அது பெரிய கதை. அவனை எப்படியாவது சம்மதிக்க வச்சிடுறேன்..”

யோசனையுடன் பிரபுவை பார்த்தாள் ஹேமா.

“ஸார்.... அண்ணா கிட்டே கன்சல்ட் பண்ணிட்டு சொல்றேன்..”

“சிஸ்.... நல்ல பதிலா சொல்லுங்க. அம்பதாயிரம் கூட குறச்சு கொடுங்க. என் தம்பி எங்க கூட வந்து செட்டில் ஆகணும். படிச்சிருக்கான்.... வேலை தேடாமல் டிப்ரஷனில் இருக்கான். பயமா இருக்கு. தனியா உக்காந்துக்கிட்டு என்னவாவது விபரீதமா செய்துக்கிட்டா.? அதான் கவலையா இருக்கு. சரி நா வரேன். நீங்க உங்க அண்ணாவை கன்சல்ட் பண்ணிட்டு கால் பண்ணுங்க..”

அவன் சென்றுவிட, ஹேமா பலத்த யோசனையில் ஆழ்ந்தாள். இந்த பிரபு நல்ல மனுஷனா, தம்பி மேல் பாசம் உள்ளவனா தான் தெரியுது. ஏன் நிர்மல் பிடிவாதம் பண்ணணும்.? பாவம் அம்மாவின் மரணத்துக்கு தானே தான் காரணம்ன்னு குற்ற உணர்வில் தவிக்கிறான். அது சரி.. அப்ப அண்ணன் சொல்வது போல் ஆறுதலாக அவர் கூட போய் இருக்கலாமே.! அது தான் உதைக்கிறது. ஏதோ ஒரு காரணம் இருக்க வேணும். நிர்மல் கூட பேசிப் பார்ப்போம். அவன் மனசில் உள்ள பயம் என்னன்னு தெரிஞ்சுக்க முயற்சி செய்வோம்.... மாலையில் காவ்யா வந்தாள்.

அவள் கண்கள் அழுதழுது சிவந்து போயிருந்தது. என்னாச்சு.? ஹேமா பதறிப் போனாள்.

“காவ்யா.. உடம்பு சரியில்லையா.?”

காவ்யா மயங்கி ஹேமா தோள் மேல் சரிந்தாள்.

சொந்தம் தொடரும்.
 
Top Bottom