• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

காதல் எங்கள் சொந்தம் - 9

நிதனிபிரபு

Administrator
Staff member
ஒன்பதாம் அத்தியாயம்.

காதல் எங்கள் சொந்தம்.. 9

உணர்வுகளின் பிடியில் இருக்கும்போது எந்த முடிவும் எடுக்கக் கூடாதுன்னு சொல்வாங்க. அந்த சமயம் சரின்னு தோணும். அந்த அவசர முடிவு பிறகு தப்பாப் படும்.

மகள் அமலாவின் மரணம் தந்த பாதிப்பால் வள்ளி சசியை மகளாக நினைத்து ஏற்றுக்கொண்டாள். ஒரு வேகத்தில் அப்படி தோன்றியது. சசி அவளுக்கு இப்ப பாரமாக தோன்ற ஆரம்பித்தாள். சசியை எங்கே கொண்டு தள்ளுவது என்று மனசு அலைபாய்கிறது.

“சசி.... வயசு பத்தாவுது. பத்து பாத்திரம் தேய்க்கத் தெரியலை. கத்துக்க. மீனாவுக்கு ஒத்தாசையா இரு.. புரியுதா.?” வள்ளி சொல்வதைக் கேட்டு மீனாவே குழம்பிவிட்டாள். ஏனென்றால் சசி காப்பி டபரா, கப்புகளை தான் கழுவிக் கொண்டிருந்தாள். கண் கலங்கி லேசாக விசும்பினாள் சசி. வள்ளி அந்தண்டை போனதும்....

“வள்ளி அம்மாவுக்கு என்னைப் புடிக்கலையா.?” என்று மீனாவிடம் கேட்டாள் சசி. அந்த அழகிய முகத்தில் கலவரம் தெரிந்தது. மீனாவும் அண்ணியின் போக்கை புரிந்து தான் வைத்திருந்தாள்.

“அப்படியெல்லாம் இல்ல சசி. அண்ணி பாவம், அமலாவை பறிகொடுத்த தவிப்பில் இருக்காங்க. நீ கவலைப்படாதே.. சரியாயிடும்.... நீ எனக்கு தங்கச்சி மாதிரி. நா இருக்கேன் உனக்கு.” என்றாள். அந்த வார்த்தைகளில் இருந்த பிரியமும் உண்மையும் சசிக்கு தெம்பை கொடுத்தது. இருந்தாலும்....

“எனக்கு எங்க அம்மாவைத் தேடுது..” என்று கண்ணில் நீர் மல்க நின்றாள். அந்த வலியை எப்படி போக்குவது.?

சசியின் தந்தைக்கு ஃபோன் பண்ணினாள் வள்ளி. எப்படியாவது சசியை அவனிடம் தள்ளிவிட்டால்.. நிம்மதி. அவன் “ஹலோ..” என்றதும் அவளுக்கு உற்சாகம் வந்தது. அப்பாடா போனை எடுத்து விட்டான். எங்கே அவன் எடுக்க மாட்டானோ என்று பயந்தாள்.

“ஸார் நா தான் வள்ளி பேசறேன்.... உங்க கடமையிலிருந்து நீங்க தப்பிக்க பார்க்கரீங்க. எப்படி பார்த்தாலும் சசி உங்க குழந்தை தானே.? அவளை அழைச்சிட்டுப் போங்க.”

“நான்சென்ஸ்....யாருமா நீ.? உங்க சென்ட்டிமென்ட் எல்லாம் பத்தி எனக்கு கவலை இல்ல. எத்தனை அநாதை விடுதி இருக்கு, அங்க போய் விடுங்க. உங்களை யார் பார்த்துக்க சொல்றாங்க?... இனிமே ஃபோன் பண்ணி தொந்தரவு செய்தா போலீஸ் கம்பிலேன்ட் கொடுப்பேன். மைன்ட் இட்....” கிணறு வெட்ட பூதம் கிளம்புகிறது. போலீஸ் கம்பிலேன்டாமே.. இருக்கிற பிரச்சனை பத்தாதா.? சசி என்ற பாரத்தை சுமந்து தான் ஆகணும் போலிருக்கே..

சிங்கப்பூர் போனதும் அவனுக்கு மூளை மழுங்கிவிட்டது போலும். சே.... இப்ப என்ன செய்வது.? யாரிடம் இந்த வாண்டை தள்ளுவது.?

அமலாவின் போட்டோவை வைத்து பாரத்துக் கொண்டிருப்பதே வள்ளியின் முழு நேர வேலையாக மாறிவிட்டது.

“இத பாரு வள்ளி. அந்தப் புள்ள பொறுப்பை நாம ஏத்துக்கிட்டோம். இப்ப தீடீருன்னு அவ வேண்டாம்ன்னு சொன்னா எப்படி.? பாவம் அந்த சின்னைப் பொண்ணு எங்கே போவும்.? அம்மா செத்து ஒரு மாசம் கூட ஆகலை. அப்பா சொந்த அப்பா இல்லையாம். என்ன செய்யறது.? விதி. நீ இனிமே அந்த பிள்ளையை அன்போட பார்த்துக்கணும். சரியா.?” கணவனிடம் புலம்பி பிரயோஜனமில்லை. நாளுக்கு நாள்.. சசியை பார்க்க பார்க்க வள்ளிக்கு எரிச்சலே வந்தது.

மீனா தான் முழு சமையலும். கூடமாட சசி உதவுவாள். வள்ளி அமலா போட்டோவுடன் பேசிக்கொண்டிருப்பாள். குழந்தையை பறிகொடுத்திட்டு இருக்கா பாவம் என்பார் அமுதன்.

சசியை நல்ல பள்ளியில் சேர்த்துவிட்டார் அமுதன். வள்ளிக்குப் அது பிடிக்கவில்லை. “எதுக்கு வீண் செலவு?..” முகம் சுளிப்பாள்.

“வள்ளி.. காவ்யாம்மா தான் நம்ம மீனாவையும் சசியையும் படிக்க வைக்றாங்க. நீ ஏன் பீஸ் பத்தி கவலைப்படறே.? மனசை பரீயா வச்சுக்க அம்மணி....” அன்புடன் சொன்னார்.

“பீஸ் மட்டுமா ஆகுது.? அந்த கிளாஸ் இந்த கிளாஸ்ன்னு புடுங்குறாங்க. மீனாவுக்கு செலவு செய்ய வேண்டியது நம் கடமை. சசிக்கு எதுக்கு.?” கசப்பு மண்டிய குரலில் அவள் கூறும் போது அமுதனுக்கு என்ன இப்படி ஆகிவிட்டாள் என்று வருத்தம் ஏற்படும்.

“இத பார் வள்ளி செல்லம்.. மீனா வேறு சசி வேறு இல்ல. இதுக்கு மேலே பேசாத டீ. பொறுப்பை ஏத்துக்கிட்டா அதிலிருந்து நழுவலாமா.?” திடமாக சொல்ல, வள்ளி வாயை மூடிக் கொண்டாள்.

வள்ளி மேல் அவருக்கு உசிரூ. வள்ளி மனசு இப்படி மாறிடுச்சே.! துக்கம் அவளை பையித்தியக்காரியாக மாத்திடுச்சு....

வள்ளி மேல் கோபப்பட அவருக்கு மனசில்லை. மீனாவையும் சசியையும் அன்புடன் பார்த்துக் கொண்டார். அவரால் அதை தான் செய்ய முடிந்தது. மனசாட்சிக்கு பயந்தவர் அவர்.

அன்று இரவு வந்த அமுதன் வள்ளியிடம் புலம்பினார்.

“வள்ளி.. காவ்யாம்மா இன்னிக்கு ரொம்ப நொந்து போயிட்டாங்க.”

“ஏங்க.? நஷ்டம் ஆயிடுச்சா.? டீ எல்லாம் நல்லாத் தானே ஏற்றுமதி ஆகியிருக்கு.? என்னாச்சு அவங்களுக்கு.?”

மீனா கொடுத்த டீயை உறுஞ்சிக் குடித்த அமுதன்..

“பயமா இருக்கு வள்ளி. அந்த பிரசாத் சிறையிலிருந்து ஜாமீனில் வந்திட்டான். கொலைகாரப் பாவி. அதான் கவலையா இருக்கு.”

“அடப் பாவமே.. என்ன சொல்லி மிரட்றான்.? போலீசில் புகார் பண்ண வேண்டியது தானே.?”

“அதிலே ஒரு சிக்கல். விடுதியில் நாலு வருஷம் முந்தி சகோதரிகள் ரெட்டை கொலை வழக்கு நடந்துச்சு இல்லையா?... திரியும் அந்த வழக்கை தோண்டித் துருவி உன்னை அசிங்கப்படுத்தறேன் பாருன்னு சவால் விடறான். உன் மலர்விழி விடுதிக்கு களங்கம் வரும். யாரும் வந்து தங்க மாட்டாங்க. அதை இழுத்து மூட வேண்டியது தான்னு சிரிக்கிறான்...”

“செருப்பால அடிக்கணும் ராஸ்கல்... யாரு இந்த நாயிக்கு ஜாமீன் கொடுத்தது.? அம்மா என்ன சொல்றாங்க.?”

“வேதவல்லி அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. நிரஞ்சன் அய்யா இங்க இல்ல. அம்மா நொந்து போயிருக்காங்க. தனியா என்ன பண்ணுவாங்க.? எனக்கு ரெண்டு கோடி கொடு. நான் போயிடறேன்னு சொல்றான்..”

“கொடுக்கவே கூடாது. பொறுக்கி ராஸ்கல். இதுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணுங்க.” என்றாள் வள்ளி.

ப்ரசாத் காவ்யாவை மிரட்டும் போது அமுதன் மட்டும் தான் கூட இருந்தான். “ஏய் காவ்யா.... வேணி ராணியை நான் தான் கொலை செஞ்சேன்னு சாட்சி சொன்னே.... உன்னை சும்மா விட மாட்டேன்.” ப்ரசாத்தின் மிரட்டல் கேட்டு காவ்யாவோடு அமுதனும் அதிர்ந்தான்.

“தற்கொலைன்னு நாடகம் ஆடின.... இப்ப அது பத்தி எதுக்கு பேசிட்டு இருக்கே.?” கடுமையாக பேசினாள் காவ்யா.

“இந்த கேசில் வழங்கப்பட்ட தீர்ப்பில் எனக்கு திருப்தி இல்லை... உயர்நீதி மன்றத்தில் மேல்முறையிடு செய்யப் போறேன். நீ தப்பிக்க முடியாது மேடம்..... என்னையா சிறைக்கு அனுப்பினே.? உன்னை உண்டு இல்லைன்னு பண்ணிடறேன்.”

“கொலை செய்த உனக்கு இவ்வளவு தமிரா.? ஜாமீனில் தானே வந்திருக்கே. ஒரு கம்பிலேன் கொடுத்தேன் வை. உன் ஜாமீன் ரத்தாயிடும். போடா போடா..”

அவன் அட்டகாசமாக சிரித்து.... “பெமஸ் கிரிமினல் லாயர் வேதாச்சலம் என் பக்கம். அவர் ஜெயிக்காத கேசே இல்ல.... நீ இதிலிருந்து தப்பிக்கணும்னா இரண்டு கோடிய தள்ளு. நா அப்பீட் ஆயிடறேன்.”

“கடவுளே வந்து வாதாடினாலும் கொலை செஞ்சது நீ தான்ங்கறது மாறாது. ஒரு பைசா கொடுக்க முடியாது. கெட் லாஸ்ட்.”

தைரியமாக சொல்லிவிட்டு வந்துவிட்டாளே தவிர அந்த அழுத்தம் காவ்யாவை பலகீனமாக்கியது. விடுதிக்கு வந்ததும் கண்ணீரோடு மயக்கமும் வந்து ஹேமா தோளில் சாய்ந்து விட்டாள்.

“ரோசி.. ரோசி..” ரோசி ஓடி வர. “தண்ணீர் கொண்டு வா....” பதற்றமாக சொன்னாள் ஹேமா.

“அய்யோ அம்மாவுக்கு என்னாச்சு.?” பறந்த போய் நீர் கொண்டு வந்தாள். ஹேமா நீரை காவ்யா முகத்தில் தெளிக்க, காவ்யா மெல்ல கண் திறந்தாள். “ரோசி நீ போ.. நா பார்த்துக்கறேன்.”

ரோசி போனதும் கதவை சாத்திவிட்டு..

“சொல்லு காவ்யா.... என்னாச்சு.? அண்ணாவை வேணா வரச் சொல்லட்டா.? எனிதிங் சீரியஸ்.?”

காவ்யா சற்று யோசித்தாள். இவளிடம் மனம் திறந்து பேசலாமா.? ஹேமா அதை புரிந்து கொண்டாள். இவளிடம் ஒரு சோகம் இழையோடியதை அன்றே ஹேமா கணித்து விட்டாள். அது உண்மை ஆகிவிட்டது.

“தாராளமா எந்த ரகசியத்தையும் என் கிட்டே சொல்லலாம். அதுக்குத் தானே நட்பு!.... என்ன உன் குழப்பம்.? பகிர்ந்துக்க காவ்யா.” எத்தனை பேர் இப்படி நிஜமாக சொல்லப் போகிறார்கள்!

அந்தக் குரல் காவ்யாவை நெகிழ வைத்தது. இக்கட்டான சூழ்நிலையில், எந்த இதயம் வந்து சங்கடத்தில் பங்கு கொள்கிறதோ.. அங்கே தான் மனிதநேயம் வாழ்கிறது. ஹேமா கையை அழுத்திப் பிடித்து “தேங்க்ஸ் ஹேமா..” என்றாள்.

“இட்ஸ் ஓ.கே சொல்லு.”

“நிரஞ்சன் போனதிலிருந்து.... ஸாரி நிரஞ்சன் யாருன்னு உனக்குத் தெரியாதே.... அவர் என் உயிர். ஒரு நாள் திடீரென விட்டுப் போய்விட்டார். அதிலிருந்து நா என் சோகம் வலி எல்லாத்தையும் உள்ளுக்குள்ளேயே புதச்சு வச்சிக்கிட்டேன்....”

“அவர் திரும்ப வருவார்..”

“எப்படி சொல்றே.?”

“உன் உண்மையான காதல் அவரை உன்கிட்டே வந்து சேர்த்திடும். காதல் எண்ணத்துக்கு அந்த வலிமை உண்டு....” ஹேமா சொன்னாள்.

காவ்யா ஹேமாவை ஊடுருவலாகப் பார்த்தாள். இந்த உணர்வுபூர்வமான சொற்கள் நிஜம். ஹேமாவும் அடிபட்டிருக்க வேண்டும்.

“உன் அனுபவம் பேசுதா.?”

“உனக்கு ஒரு நிரஞ்சன். எனக்கு ஒரு அகில்.... வாராதிருப்பாரோ? தேடாதிருப்பாரோன்னு சதா தோணிக்கிட்டு தான் இருக்கு.”

வேறு வேறு பாதையில் சென்று கொண்டிருந்த இருவர் ஒரு புள்ளியில் சந்தித்ததை போல அவர்கள் மனம் ஒன்றுபட்டது.

“ஒரு முக்கியமான பணி நிமித்தம் போறேன். திரும்ப வருவேனா தெரியாது. என்னை நம்ப வேண்டாம்.. நீ உன் வாழ்க்கையை பார்த்துக் கொள்.. எழுதிவிட்டுப் போயிட்டார். அந்த வரிகள் முள் போல் குத்தி நெஞ்சை கிழிக்குது. வாசலில் வந்து நிற்பார் என்று பயித்தியக்காரி போல் காத்திட்டு இருக்கேன்..” என்றாள் காவ்யா.

“சேம் ஹியர். நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது அவருக்கு. இன்னும் நம்பிக்கை மிச்சம் வச்சிருக்கேன்....”

“ஓ காட். நமக்குள் என்ன ஒரு ஒற்றுமை.!”

“சரி சொல்லு காவ்யா வாட் இஸ் ட்ரப்லிங் யூ.?”

“நிரஞ்சன் இருந்தால் கண்ட நாய் வந்து என்னிடம் சவால் விட முடியுமா.? பிரசாத் என்ற புல்லுருவி மிரட்டிக்கிட்டு இருக்கான்.” அவனைப் பற்றியும் கொலை பற்றியும் சுருக்கமாக சொன்னாள்.

“அண்ணா கிட்டே சொல்றேன்... கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவார். கவலைப்படாதே காவ்யா. நீ ஜாக்கிரதையாக இருக்கணும்.”

காவ்யா முகம் மலர்ந்தது. அடுத்த நிமிடம் வாடியது.

சொந்தம் தொடரும்.
 
Top Bottom