• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

காதல் ராஜ வீதியில் - 20

நிதனிபிரபு

Administrator
Staff member
20

ஆடி ஓடி ஒரு நிலைக்கு வந்தது போல் கயல் நிலா காலம் வந்து சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. அவளுக்கும் இருபத்தைந்து வயது ஆகிறது.

அம்மா சொல்லும் மாப்பிளைக்கு ஆம் என்று சொல்லிவிடலாம் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தாள். அதை அன்னையிடம் சொல்லவும் செய்தாள்தான்.

அப்போது அவள் மதிவாணனை பார்த்திருக்கவில்லையே? அவள் இளம் நெஞ்சம் அப்போது எந்த பிணையிலும் இல்லையே?

நிலா காலம் வந்த சில நாட்களில் மணிமொழியை சந்தித்து இருந்தாள் கயல்.

அவனை பார்த்து உச்சபட்ச அதிர்ச்சி என்றெல்லாம் இல்லை. அதுதான் இங்கே இருந்தவன் தான் அந்த புகைப்படத்தில் இருந்தவன் என்று நன்றாக தெரியுமே? ஆனால் தன்னால் இப்படி ஒரு விஷயத்தை கண்டுபிடிக்க முடிந்ததை அவளால் கூட நம்ப முடியவில்லை. வாழ்க்கை ஒரு விசித்திரம் தான்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். அப்படி என்றால் அந்த புகைப்படத்தில் இருந்த சிறுமி யார்? அவளும் இங்கே உள்ளவள் தானா?

அதை அறிந்து கொள்ள ஒரு நூலிழையாவது கிடைக்காதா என்று மணிமொழியை சுற்றி வந்தாள்.

இந்த சமயத்தில் தான் இல்லத்தில் இருந்த முதியவர் ஒருவருக்கு மிகவும் உடல்நிலை சரியில்லாமல் போக அவரை மதிவாணன் மருத்துவராக பணி செய்யும் அந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கயல் பணிக்கப்பட்டாள்.

அவசர ஊர்தியில் அந்த முதியவருடன் சென்று இறங்கிய கயல், அவர்களை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவின் முன்னறையில் நின்று மருத்துவமனைக்குள் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல விடாமல் காபந்து செய்து சிகிச்சை சமயத்திலும் பெரும் உதவிகள் செய்த மதிவாணன் கவராமல் போனால்தான் அதிசயம்.

மணிமொழி அப்போது வெளியூரில் இருக்க, ஜார்ஜ் அப்போது உள்ளூரில் இல்லை. அவர் போனும் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளதாக சொன்னது.

அதற்கு மேலும் யோசிக்காமல் கயலை மதிவாணனின் மருத்துவமனைக்கு (!) போக சொன்ன மொழி மதிவாணனுக்கும் தகவல் தெரிவித்தான். அந்த மருத்துவமனைக்கும் அலைபேசியில் சொல்லி ஆம்புலன்ஸ் வர வைத்தான்.

“நீ கூடவே போ கயல். எல்லாம் மதி பாத்துக்குவான்” என்று தைரியம் கொடுத்து இவளை அனுப்பி வைக்க அதன்படி மதிவாணனும் நடக்க, நியாயப்படி மொழி மேல் ஈர்ப்பு வந்திருக்க வேண்டும். ஆனால் அவன் இன்னொருத்திக்கு சொந்தம் என அவள் மனம் கற்பனை செய்திருக்க அந்த கோணத்தில் மொழியை பார்த்தது கூட இல்லை அவள்.

ஆபத்து காலத்தில் உதவினான் என்ற இந்த ஒரு காரணத்துக்காக ஒருவன் மீது ஆர்வம் வந்ததை ‘போய் தொலைகிறது’ என்று ஏற்றுக் கொள்ளலாம் என்றாலும் அந்த சூழ்நிலையிலும் அவள் மீதான மதிவாணனின் தனிப்பட்ட பார்வைகளை கயல் உணர்ந்தே இருந்தாள்.

வந்த இடத்தில் வம்பு வேண்டாம் என்று வாயை பொத்திக் கொண்டு வந்து விட்டாள்.

ஆனால் அடுத்த சில நாட்களில் மதிவாணன் நிலா காலம் வந்தான். அந்த முதியவர் உடல் நலம் பற்றி விசாரிக்க வந்திருப்பான் போல என்று நினைத்தாலும் இதுதான் சாக்கென்று அவனை சுற்றி சுற்றி கண்களை ஓட்டிக்கொண்டிருந்த கயலுக்கு மதிவதனியின் வருகை எரிச்சலை தந்தது. அவர்கள் இருவரும் அண்ணன் தங்கை என்பதை அப்போது கயல் அறிந்திருக்கவில்லை அதனால் வனியிடம் கொஞ்சம் முகத்தை காட்டி விட்டாள்.

அவள் இருக்கும் இடத்திற்கு அப்படி பேசக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தாலும் அனுபவமற்ற கயலின் மனது அதை கேட்கவே இல்லை. மதிவதனியை வெறுப்பேற்ற பேசினாள் தான் என்றாலும் இறுதியில் நிஜமாகவே ஒரு வேலையாக உள்ளே செல்லத்தான் செய்தாள்.

அது அவர்கள் இருவரும் அதாவது மொழியும் மதியும் என்ன பேசிக் கொண்டார்கள் என்று தோட்டக்காரரிடம் கேட்டு அறிந்து கொள்வதுதான். நிச்சயம் அவர்கள் இருவரும் அந்த தாத்தா பற்றி பேசி இருப்பார்கள். பேச்சில் தன்னை பற்றி ஏதாவது ஒரு வார்த்தையாவது வந்ததா என்று அறிந்து கொள்ளும் குழந்தை தன ஆசையில் தோட்டக்காரரிடம் கேட்டாள்.

தான் கொத்து வேலை செய்து கொண்டு இருந்த தோட்டத்தில் பேசிக்கொண்டே மொழியும் மதியும் நடந்த போதும் அவர்கள் பேசிக் கொண்டதை கேட்டதை சொல்லவே இல்லை அந்த தோட்டகாரர்.

இங்கே வந்து பார்த்தால் வனியும் கிளம்பி இருந்தாள். சரி போகட்டும் போகட்டும். இப்போது அவளிடம் மூச்சை தொலைக்க முடியாது. இந்த டாக்டர் தூரத்தில் இருந்தே இவளை நோக்கி தலை அசைத்து புன்னகைத்ததாக அவள் நினைத்திருந்ததுடன் தன்னை கூட நம்பாமல் கையில் கிள்ளிக் கொண்டது என்ன? அவனானால் அந்த வனியை பார்த்து சிரித்தது என்ன?

இப்போது தெரிகிறதுதான் இருவரின் ரத்த பந்தம். இப்போதெல்லாம் வனியிடம் வைத்துக் கொள்வதே கிடையாது. எவ்வளவு நல்ல பிள்ளையாக இருந்தும் அவள் வேறு மூஞ்சை தூக்குகிறாள். சமாதானப்படுத்தலாம் என்றால் வனி இவளை கண்டு கொள்வதே இல்லை.

தன் பிரச்சனையே பெரிதாக இருக்க மொழியின் கடந்த காலத்தை நிகழ் காலத்தை ஆராய்ச்சி செய்வதில் அத்தனை ஆர்வம் காட்ட நேரமில்லை கயலுக்கு.

வனி இல்லத்துக்கு வந்தால் அவள் அண்ணன் பற்றி ஏதாவது வாயை விடுகிறாளா என்று ஒட்டுக் கேட்பது, ஓரக்கண்ணால் பார்ப்பது என குட்டிக் கரணம் அடித்துக் கொண்டு இருப்பாள் கயல்.

அதையும் மீறி இப்போதெல்லாம் எதிலும் நாட்டமில்லை. அவள் வாழ்வு ஏன் இப்படி ஆனது? அவளிடம் ஏன் மனதை வைக்கவில்லை மதிவாணன்? இவள் கிடந்து புலம்புகிறாளே?

நிஜமாகவே அவன் அவளால் சலனம் அடையவில்லையா? துளி கூட இவள் மீது அவனுக்கு நேசமில்லையா?

எப்படி இருக்கும்?

இவள் என்ன அவனைப் பார்த்து சிரித்தாளா? முறைத்தாளா? பக்கம் பக்கமாக காதல் வசனம் பேசினாளா? குறைந்தது தன் அன்பை அவனிடம் வெளிப்படுத்தும் ஒற்றை வாக்கியத்தைத் தான் சொல்லி அழுதாளா?

ஒன்றும் இல்லை!

இப்படி நேரத்திற்கு தின்பதும் தூங்குவதுமாக இருந்தால் யார்தான் இவளுக்கு இப்படி ஒரு மனம் உண்டு என்று அறிவார்கள்?

அதற்கு அவள் என்னதான் செய்வது? விடுதியில் இருந்த நினைவில் இங்கே சோற்றை போட்டதும் தட்டை தூக்கி விடுகிறாள். வேலைப்பளு மற்றும் உண்ட மயக்கம் காரணமாக படுத்ததும் உறங்கியும் விடுகிறாள்.

அதற்காக அவளுக்கு மனம் என்ற ஒன்று இல்லாமல் போய் விடுமா?

அதே நேரத்தில் தங்கள் இருவருக்கும் உள்ள ஏற்ற தாழ்வுகளையும் அவள் யோசிக்காமல் இல்லை.

அவளைப் பெண் எடுக்க அவன் வீட்டில் தயக்கம் இருக்கலாம். அதற்கு எத்தனையோ காரணங்கள் அவளுக்கு அவளே கற்பித்துக் கொண்டு மனதிற்குள் சொல்லிப் பார்த்து விரல்விட்டு எண்ணி வாய்விட்டு புலம்பிய நாட்கள் அதிகம்.

சொல்லப் போனால் அவனைப் பார்த்த பின்னான அவள் நாட்கள் எல்லாமே இப்படித்தான் இருந்தன.

தனக்கெல்லாம் ஏன் இந்த காதல் வந்தது? கொண்ட காதலை நிறைவேற்றிக் கொள்ளும், குறைந்தது அதை உரியவனிடம் போய் சொல்லும் தெம்பு இல்லாத தனக்கு, தன்னவனை நினைத்து நினைத்து நெஞ்சம் வெதும்பிப் போவதுதான் இப்பிறவியின் நோக்கமாக இருக்குமோ?

பெரிய நெஞ்சம் வெதும்பல், பிறவி நோக்கம், அடுத்த ஜென்மம் என்றெல்லாம் முதல் நாள் இரவில் படுப்பதற்கு முன் புலம்பிவிட்டு தூங்கும் கயல், மறுநாள் காலையில் காபி கப்பை எடுத்துக் கொண்டு காபி வாங்க ஓடிப் போய் வரிசையில் நின்று வாங்கி குடித்துவிட்டுத்தான் பல் துலக்கவே போவாள்தான்.

அது வேறு! இது வேறு!

அவள் அன்றாட பழக்க வழக்கங்களை பாதிக்காத காதல்! முக்கியமாக அவள் உறக்கத்தை பாதிக்காத காதல்!

அது அப்படித்தான்! அவளால் அத்தனை தெளிவாய் இருக்க முடிகிறது என்றால் அவள் காதலில் தீவிரம் இருக்கிறதா? என்று கேட்டால் உண்டு என்றுதான் அவள் சொல்வாள்.

அவள் கருத்தை வேறு யாரும் கேட்கவில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும் ஆனால் உரியவன் எதிர்பார்க்கிறானே?

எந்த பாதிப்பும் இல்லாத அவள் நடவடிக்கைகளில் அவன் என்ன கண்டு கொண்டானோ அல்லது எதையும் காணவில்லையோ கல் போன்று இருக்கிறான்.

அது தெரியாத கயல் எப்போதும் அவனுடைய சிந்தனைகளுக்குப் பின் “ம்!” என பெருமூச்சு விட்டு மீண்டும் தன் வேலையை பார்க்க ஆரம்பித்து விடுவாள்.

அன்றும் அப்படித்தான். இல்லத்தில் காலை வேலைகள் முடிந்து அரவம் அடங்கி இருந்த அந்த அரைமணி நேரத்தில் தன் வாழ்வு குறித்த நீண்ட யோசனைக்கு ஆட்பட்டாள் கயல்.

இல்ல வேலைகள் குறித்து அவளுக்கு முதலில் நேர அட்டவனை வழங்கப்பட்டது. அப்புறம் அவளுக்கே மனப்பாடம் ஆனதுடன் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுத்து செயலாற்றும் திறனும் வந்து இருந்தது. ஆகவே அது குறித்து எந்த தடுமாற்றமும் இல்லை அவளுக்கு. அந்த தெனாவெட்டில் தன் காதல் மற்றும் வாழ்வு பற்றி கொஞ்சம் பகலிலும் சிந்தித்து விட்டாள்.

அப்போது தோட்டக்காரர் வந்து, “கயலம்மா, டெலிபோன் அடிக்குது” என சொல்லிச் சென்றார்.

ரொம்பவும் தியான நிலைக்கு போய் விட்டாளோ? மணி சத்தமே அவளுக்கு கேட்கவில்லையே?

காலர் ஐ டி இருப்பதால் யார் அழைக்கிறார்கள் என்று தெரிந்துவிடும். அழைப்பு நிறுத்தப்பட்டுவிட்டால் மீண்டும் அழைத்து கேட்டுவிடலாம். ஆனாலும் எதிர் முனையில் இருப்பவர் இல்லத்துக்கு நன்கொடை வழங்க அழைத்து இருக்கலாம், அவரின் மனோ நிலையை மாற்றுவதற்குள் அழைப்பை ஏற்பதே சிறப்பு என்பதை அவளின் இதுவரையிலான வேலை அனுபவத்தில் உணர்ந்து கொண்டவள் உடனே வேகமாக ஓடினாள்.

வரவேற்பறைக்கு தொலைபேசியை நோக்கி விரைந்தவள் அவள் அந்த தொலைபேசியை அடையும் முன்பே அவள் விரல்கள் ஒலிவாங்கியை எடுத்துவிட்டன.

“ஹலோ. வணக்கம். இது நிலா காலம்”

அவசர அவசரமாக அவள் சொல்ல,

எதிர் முனை மெல்ல சிரித்தது.

அந்த சிரிப்பு!

கயல் தன் நெஞ்சத்தை இடது கையால் நீவி விட்டாள். ஆனால் அவள் அமைதி அதிர்ச்சி அவனுக்குப் புரிந்ததே?

“ஹலோ யாரு?”

உறுதிப்படுத்திக் கொள்ள கேட்டாள் அவள்.

“தெரியலையா? கஷ்டம்தான்” வந்த மதிவாணனின் பதிலில் அவள் குரல் வளையை நெறிக்கும் மென்மை தெறித்தது.

வன்மை மட்டும்தான் துன்பம் செய்யுமோ? இவன் மென்மையும் செய்கிறதே?

பேச்சற்ற அவள் மவுனமும் மூச்சு விடும் சத்தமும் அவனை சிலிர்க்க வைத்தது. சிறையில் அடைத்தது. அதிலும் அவள் மூச்சு சத்தம்!

கயலுக்கு எங்கோ எண்ணம் செல்ல சட்டென்று அதன் தலையில் கொட்டி வீங்க வைத்தவள், ‘என்ன திடீர்னு? இத்தனை நாள் நம்மளை கண்ணே தெரியலை. இப்போ தானா போன் வருதுன்னா? எதுவும் இத்து போன காரணம் இருக்கும். இல்லைனா முக்கியமான விஷயம், நம்ம இல்லம் பத்தின விஷயம் காரணமா இருக்கும். ஜொள்ளு விடாம என்னனு கேளு‘ என சொல்லி முடித்து, மூக்கை சுழித்துக் கொண்டு அழகு காட்டியவள்,

“தெரியுது சார். சொல்லுங்க சார். என்ன விஷயம்?” என அலுவலக பெண்ணாக பதிலளித்து விசாரித்தாள் கயல்.

“ஓகோ! தெரிஞ்சிருச்சோ? அப்போ இனி நம்ம கல்யாணம் பத்தி பேசலாமா? அதுக்குத் தான் கூப்பிட்டேன்” அலுங்காமல் அவன் கதை பேசினான், இவள் ஊமையானாள்.
 
Top Bottom