• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

காதல் ராஜ வீதியில் - 21

நிதனிபிரபு

Administrator
Staff member
21

கயலுக்கு குபு குபு என்று கோபம் வந்து விட்டது.

அவள் இதயம் அடிபட்ட மானாய் அலறி தவிக்கும் போது ஒன்றையும் சொல்லக் காணோம். இப்போது கல்யாணம் பற்றி பேசுகிறாராம். அதுவும் நம்ம கல்யாணமாம்.

அப்படி என்றால் இவனுக்கு ஏற்கனவே இவள் உள்ளம் தெரிந்து இருக்கிறது. கல்லுளிமங்கன் ஒன்றும் தெரியாத மாதிரி படம் காட்டி இருக்கிறான். அப்படி இல்லை என்றால் இது அவனுக்கு புதிதாக ஞானோதாயம் ஆகி இருக்கிறது.

இருக்கட்டும். இருக்கட்டும்.

இப்படியே நின்றால் அது சரி வராது. என்னவென்று கேட்போம் என முடிவு கட்டிய கயல்,

“சாரி சார். சொன்னது சரியா கேக்கலை. உங்க ஆபிளிகேசன் எதுனாலும் நீங்க மொழி சார் கிட்ட சொல்லிடுங்க. வேற முக்கியமான விஷயம்னா நேர்ல வந்து பேசுங்க” என்றாள் கறாராக.

“நேர்ல தானே? வந்துருவோம். எங்கேயும் போயிராத. அரை மணி நேரத்துல வர்றேன்”

“ஐயோ சார், மொழி சார் இப்போ இல்லை. அவர் கம்பெனில இருக்கார். ரொட்டீன் ஒர்க்ஸ், பேசிக் ஒர்க்ஸ் நான் பார்த்துக்குவேன். வேற இம்பார்ட்டண்ட் விஷயம்னா மொழி சார் கிட்ட பேசிக்கோங்க”

“இம்பார்ட்டண்ட் தான். ஆனா உன்கிட்ட தான் பேசணும். இரு வர்றேன்”

சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டான் அந்த அரைகுறை.

சரியாகத்தான் கேட்டாளா? சரிதான். இருந்தாலும் மிதப்பாக பேச்சை தொடர்ந்தவளை கண்டு கொண்டு இருப்பானா? இல்லாத மாதிரிதான் இருந்தது. இருந்தாலும் இருக்கலாம். அது பற்றி அவளுக்கு என்ன? இப்படின்னா அப்படி, அப்படின்னா இப்படி என மாற்றி விடலாம். இத்தனை வருடத்தில் கொஞ்சம் பேச தெரிந்து இருக்கிறது. அதை வைத்து சமாளித்து விடலாம்.

இங்கே இவள் மனப்பால் குடித்துக் கொண்டு இருக்க, அதெல்லாம் தூசாக ஊதித் தள்ளும் உறுதியுடன் அவளைப் பார்க்க கிளம்பி கொண்டு இருந்தான் மதிவாணன்.

இத்தனை நாட்கள் அதாவது வருடங்கள் தங்கைக்காகவே பொறுத்து இருந்தான். தங்கைக்கு திருமணம் முடித்துவிட்டு தனது வழியை பார்க்கலாம் என நினைத்து இருந்தான் மதிவாணன். எப்போதோ கயல் எண்ணம் புரிந்து விட்டது.

ஆரம்பமே மணிமொழி மூலம் ஓரளவு உளவு பார்த்திருந்ததால் இப்போது உறுதியே ஆகிவிட்டது. இனி இவன் காட்டில் புது வசந்தம் தான். அவளை எப்போது இருந்தது தனக்கு பிடிக்கும் என்று யோசித்துப் பார்த்தால் நாள் நேரம் கூட இவனால் சொல்ல முடியும்.

எல்லாம் அந்த முதல் மருத்துவமனை சந்திப்புதான். அந்த சமயம் வேலைக்கு புதிதாக இருந்தாலும் கயலிடம் தெரிந்த அக்கறை, பதட்டம், வேலைகளில் இருந்த சுறுசுறுப்பு அவனை கவர்ந்து இருந்தது.

அந்த மருத்துவமனையில் உள்நோயாளிகளை ஆய்வு செய்ய மருத்துவர்கள் ரவுண்ட்ஸ் வரும்போது இளநிலையில் உள்ள மருத்துவனான இவனும் கூட வருவான். குறிப்புகள் எடுப்பான்.

அப்போது அந்த சமயங்களில் நோயாளி குறித்த அனைத்து விவரங்களையும் விரல் நுனியில் வைத்துக் கூறுவதோடு அதிக அக்கறையுடன் கவனித்துக் கொண்ட அவளை அவன் ஒவ்வொரு வினாடியிலும் வியந்து பார்த்தான். அந்த வியப்பு கொஞ்சம் கொஞ்சமாக பிடித்தம் ஆனது. பிடித்தம் காதலானது.

அவளைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருந்த நேரம் அவன் சுக காலம். ஆனாலும் அப்போதெல்லாம் அவன் அதை அறிய வில்லை.

அப்படி அன்று அந்த மருத்துவமனையில் இருந்து பணி முடிந்து அவன் வெளியே வந்த போது வெளியே சென்று விட்டு உள்ளே வந்து கொண்டு இருந்த கயலை நேருக்கு நேர் பார்த்தவன்,

“இப்ப பரவாயில்லையா?”என கேட்டான்.

அவளானால் “யாருக்கு?” என திருதிருத்தாள்.

புதிய வேலையில் சேர்ந்தவள் என்பதால் வேலை பழகி விட்டதா என்று கேட்கிறானா? அல்லது அந்த முதியவருக்கு உடல்நிலை பரவாயில்லையா என்று கேட்கிறானா? எனக் குழம்பி நின்றாள் கயல்.

அவளின் அந்த குழப்பமான முகம் தான் அன்றைய வேலையை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது.

ஆனால் இது போன்ற பல சந்தர்ப்பங்களில் பலரும் செய்திருந்தனர். அதற்கெல்லாம் மட்டும் அவன் அவளிடம் வீழவில்லை.

“இப்ப பரவாயில்ல” என பொதுவாக பதில் சொல்லிவிட்டு உள்ளே போக பார்த்தவள், “நான் ஐயாவுக்கு சொன்னேன்” என்று மீண்டும் சொன்னாள்.

அந்த மருத்துவ மனையிலேயே அனைத்து வசதிகளும் இருந்தாலும் கயல் நோயாளி உறங்கும் நேரம் அங்கிருந்த பூங்காவிற்கு சென்று உலவி விட்டு வந்திருந்தாள். இது தவறோ என்று அவள் உன் மனம் உறுத்தியதால் திருடனுக்கு தேள் கொட்டியது போல் மதிவாணனை கண்டதும் அதிர்ச்சி அடைந்து இருந்தாள். கூடவே அவன் விசாரிக்க வேறு செய்ததும் பயந்து விட்டாள்.


பின்னர் அவனுக்கு நாம் பயப்படத் தேவையில்லை என்ற அறிவு வந்து “நாங்க இருக்கிறது இருக்கட்டும். நீங்க எப்படி இருக்கீங்க?” என்றவளுக்கு “ஃபைன்” என்றபடி அவனும் விலகி செல்லத்தான் நினைத்தான். அவள் விடவில்லை.

“எத்தனை ரூபாய்?” என பூத்து சிரித்தாள் அந்த அழகி.

அது புரியாமல் முகம் சுருக்கினான் அவன்.

“அதாவது ஃபைன்”என எடுத்துக் கொடுத்தாள் அவள்.

“என்ன வேலையில் செட் ஆயாச்சு போல. வாய் நல்லா வருது” என சிரித்துக் கொண்டே அவன் கிளம்பி விட்டான்.

எத்தனை பேரை நாம் சந்தித்தாலும் நமக்கான ஒருவர் மட்டும் காரணம் இன்றி நம் மனதை தொடுவர் என்னும் காதலின் மற்றுமொரு விதிப்படி அந்த நிமிடம்தான் மதிவாணன் கயல் மீது காதல் கொண்டான் எனலாம்.

மிகவும் பிடித்து போனது அவளை. அதனால் தான் தொலைபேசியில் விசாரித்துக் கொள்ளலாம் என்றாலும் நேரிலே இல்லத்துக்கு போய் அந்த முதியவர் குறித்து விசாரிப்பதாக பெயர் பண்ணிக் கொண்டு கயலை சந்திக்கவே சென்றான் மதிவாணன்.

அவள் அவனை எதிர்பார்க்கவில்லை என்றாலும் மொழி மீது அக்கறையாக இருப்பது போல் இருந்தது அவனுக்கு. அப்படி என்றால் மொழி மீது கயலுக்கு விருப்பம் இருக்குமோ எனும் குழப்பத்தினால் மேற்கொண்டு எதுவும் பேசாமல், செய்யாமல் வந்து விட்டான் மதிவாணன்.

அன்று அவளைப் பார்த்துதான் சிரித்தான் மதிவாணன். அந்த சமயம் அவன் தங்கை வேறு வந்து விட்டாள். தங்கையை பார்த்து சிரித்ததாக பேர் பண்ணிக் கொண்டே அவனை விழிகளால் சுற்றும் கயலை கண்காணித்து வந்தான். அவள் மணிமொழியை அடிக்கடி ஆராய்வது தெரிந்தது. அடிக்கடியா என்றால் அவனுக்கு அப்படித்தான். அவனை மட்டுமே சுற்ற வேண்டிய அவள் கயல் விழிகள் அடுத்தவனை சற்று தொட்டு மீண்டாலும் சுணக்கம் தான்.

மொழி மீதுதான் கயலுக்கு விருப்பமா? அதனால்தான் அவனை சுற்றி சுற்றி வருகிறாளா? மதிவாணன் அப்போது அமைதியாகவே இருந்தான்.

இந்தப் பக்கம் கயலுக்கு அவனால் பாதிப்பு இருக்கிறதா என ஆராய்ந்தும் பார்த்து விட்டான். ஒன்ன்ன்றுமில்லை. நன்றாக தின்பதும் தூங்குவதுமாகத்தான் இருந்தாள் அவள். அப்புறம் அவன் என்னதான் செய்வது?

சில மாதங்கள் முன்புதான் மணிமொழி இவன் தங்கை மீது விருப்பம் இருப்பதாக தெரிவித்தான்.

ஓஹோ. அது இருக்கட்டும். பிறகு அதை பார்த்து முடிக்கலாம். ஆனால் உறுதி செய்துவிட வேண்டுமே இருவரும் என நினைக்க இப்போது உறுதியாகி விட்டது.

ஆக இப்போது அவனுக்கு காதல் ஜன்னல் திறந்து விட்டது. இனி அவனால் சும்மா இருக்க முடியுமா என்ன? அதுதான் உடனே போனை போட்டு விட்டான்.

இதோ அவள் சொன்னதும் அவளைப் பார்க்க கிளம்பியும் விட்டான் அடுத்த அரை மணி நேரத்தில் நிலாக்காலம் இல்லத்திற்குள் சென்று கயல் முன்னிலையில் அமர்ந்திருந்தான் மதிவாணன்.

“அப்புறம்”

“விழுப்புரம்”

“அதில்ல“

“சிதம்பரம் ஓகே வா?”

“இல்ல டாக்டர்”

“அதுவுமில்லையா?”

“டாக்டர்!”

மொக்கை காமெடிகளை உரையாடல் என்ற பெயரில் பேசிக் கொண்டிருந்தனர் இருவரும். ஏதாவது பேசு வேண்டுமே? சும்மா முகத்தை முகத்தை பார்த்துக் கொண்டு என்ன பேச என்று தெரியாது காலத்தை கடத்திக் கொண்டிருப்பதற்கு இதையாவது பேசுவோம் என பேசிக் கொண்டு இருந்தார்கள்.

மதிவாணனுக்கு இதுவும் நன்றாகத்தான் போய் கொண்டு இருக்கிறது. வெறுமனே கண்களால் பார்த்து நெஞ்சை இழுப்பதை தற்காலிகமாக விட்டு வைத்து இருக்கிறாளே கயல் விழியாள்? ஏதோ இரண்டு வார்த்தைகளை பேசி அவன் மனப்பசி ஆற்றுகிறாளே?

இப்படியே இருந்தால் போதுமா? இன்னும் நெருங்கி வர வேண்டுமே? தெரிவேனா மாட்டேனா என இவனை குழப்பும் அவள் மூக்கு நுனி மச்சத்தை அருகே போய் பார்த்து அதில் ஒரு முத்தத்தையும் கொடுத்து விட்டால் அவன் ஜென்மம் சாபல்யம் அடையும்.

அப்புறம் அவளின் அந்த வாய். புத்தி போன போக்கில் மண்டையை உலுக்கியவன் காலம் கடப்பதை உணர்ந்து நேரடியாக கயலிடம் நிஜமாகவே பேச்சை தொடங்கினான்.

“நான் உன்கிட்ட போன்ல சொன்னது பத்தி யோசிச்சியா”

“போன்ல என்ன சொன்னிங்க?”

“உள்ளதைத்தான் சொன்னேன்”

“அதுதான் என்ன?”

“எத்தனை நாளைக்கு தான் இப்படி கண்கட்டு வித்தை கட்டிக்கிட்டு இருப்பே கயல்? நிஜமா சொல்றேன், எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. உன்ன தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படுறேன். உனக்கு வேற ஏதாவது விருப்பம் இருக்கான்னு கேட்க மாட்டேன். உனக்கும் என்னை பிடிக்கும்னு எனக்கு தெரியும். நான் என் லவ்வ ஒத்துக்கிட்டேன். நீ எப்போ ஒத்துக்குவ? நீ ஒத்துகிட்டா நாம கட்டிக்கலாம்! பதில் சொல்லு” மந்தகாசமாக புன்னகைத்தான் மதிவாணன்.

இப்படி திடீரென்று கேட்பான் என நினைக்காத கயல் “நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல” என
கண்களை உருட்டிக் கொண்டே சொன்னாள்.

“புரியலை?”

“ம்ஹூம்“

“இங்கிலிஷ் மீடியமா?”

எதற்கு கேட்கிறான் என்று புரியாதவள்,
“ம்” என்றாள்.

“ஓ. அப்போ தப்பு என்மேல தான். ஓகே. இப்போ நான் சொல்றது புரியுதா பாரு” என அவளை தயார் படுத்திவிட்டு சொன்னான்.

“ஐ லவ் யூ“

அப்படியும் மயில் இறகாய் வார்த்தைகளை உச்சரித்த அவன் உதடுகளையே பார்த்துக் கொண்டு இருந்த கயல் அங்கேயே மயங்கி விழுந்து விட்டாள்.

பதறிப் போனான் மதிவாணன். உடனே நாடி பிடித்து பார்த்துவிட்டு டேபிள் மீது இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்த நீரை அவள் முகத்தில் தெளிக்க மெதுவே கண் விழித்தாள்

“அடியேய் என்னடி ஆச்சு? ஒருவேளை நேர்வஸ் வீக்னஸா இருக்குமோ? இல்லை ஹை பி பி யா? இவ்ளோ நேரம் நல்லா தானே இருந்தா? இவளை கட்டுனா மருந்து மாத்திரை வாங்கி குடுத்தே ஒரு வழி ஆகிருவேன் போலவே?”

இவன் புலம்பலில் சுறுசுறுவென கோபம் பொங்க “அப்போ நான் நோயாளிங்கிறீங்களா?” எனப் பாய்ந்தாள் அவனிடம்.

“நான் அப்படி எப்போ சொன்னேன்?
நேர்வஸ் வீக்னசோன்னு சொன்னேன்”

“அப்டின்னா?”

“திடீர்னு உன் காதலன் நான் வந்து நம்ம காதலை உன்கிட்ட சொன்னா? அதனால இருக்கும்னு சொன்னேன்”

“அப்போ பி பி?”

“திடீர்னு உன் காதலன் நான் வந்து நம்ம காதலை உன்கிட்ட சொன்னா? அதனால இருக்கும்னு சொன்னேன்”

திருப்பிப் படித்தான் அவன்.

“அப்போ மருந்து மாத்திரை வாங்கி குடுத்து ஒரு வழி ஆகிருவனோன்னு சொன்னது?”

“மருந்து மாத்திரை சாப்பிடாம பிள்ளைகளை பெத்து வளக்க முடியுமா?”

அவன் சமாளிப்பை முறைப்புடன் கேட்டவள்,

“நிஜமா எனக்கு தயிராய்ட் இருக்கு“ என்றாள்.

“அதான் உங்ககிட்ட சொல்ல பயமா இருந்துது“ என சேர்த்து சொன்னாள்.

“ மனுஷன்னா வியாதி இருக்கதான் செய்யும். இல்லாட்டி நாம எப்படி பொழக்கிறது?”

“நாமளா?”

“அதான் டாக்டர் பொண்டாட்டி ஆகிட்டியே? அப்போ நாமதான்”

பேசிக் கொண்டே அவள் அருகே நெருங்கியவன்,

“ஆமா. என்கிட்ட என்ன சொல்ல பயமா இருந்துது?” என கிளறி விட்டான்.

“அது..அது..”

கயல் கன்னம் சிவந்தாள்.

அவன் நிறைவாய் சிரித்தான்.
 
Top Bottom