• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

காதல் ராஜ வீதியில் - 22

நிதனிபிரபு

Administrator
Staff member
22

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி
சேதி தெரியுமா?
என்ன விட்டுப் பிரிஞ்சி
போன கணவன்
வீடு திரும்பல

களை இழந்த அன்னை முகத்தை பார்த்து மகிழ்வுடன் பாடிக் கொண்டு இருந்தாள் மதிவதனி. அவளின் மகிழ்ச்சி அப்பாவின் மீதான அன்னையின் அன்பிற்கு.

“சும்மா இருடி. நானே பயத்துல இருக்கேன். அப்பா ரெண்டு நாளா போன் பண்ணவும் இல்ல. எங்க இருக்கார்னு தெளிவாவும் சொல்லல. எனக்கு பக்கு பக்குன்னு இருக்கு. நீங்க ரெண்டு பேரும் கவலை இல்லாம இருக்கீங்க. கொஞ்சமாவது அப்பாவை காணலன்னு தேடறீங்களா? உங்களுக்கு அப்பா மேல பாசமே இல்லை”

மலர், வனி என்று இல்லாமல் மொத்தமாக பிள்ளைகளை கடிந்து கொண்டார்.

“அம்மா, பாடுனது அவ. திட்டு எனக்கும் சேர்த்தா?”

மதிவாணன் செல்லமாக கோபப்பட்டான்.

“இப்போ நீங்க பவுசு காட்டறதுக்கா நேரம்? போங்க பேசாம. நானே உங்க அப்பாவைக் காணோம்னு இருக்கேன்” தளு தளுத்த குரலை சரி செய்து கொண்டு சொன்னார் மலர்.

மற்றபடி பிள்ளைகள் அறிய கணவரிடம் குழைந்து கூட பேச மாட்டார் அவர்.

பின்னே பருவ வயதிலும் காதலின் ஜாடை அறியாமல் அவர்கள் பிள்ளைகள் வளர இதுதானே காரணமாக இருக்க முடியும்? பின்னாளில் அவர்கள் சுதாரித்துக் கொண்டது காதலின் கட்டாயம்.

ஆனால் கணவர் மீது மலர் உயிரையே வைத்து இருக்கும் போது அவர் நேசம் பிறர் கண்களை அதுவும் பெற்ற பிள்ளைகள் கண்களை கட்டி விடுமா என்ன?

“சரி விடும்மா. எங்களுக்கு அக்கறை இல்லை. உனக்கு இருக்கு தானே? சொல்லு பாப்போம். அப்பா எங்கே போயிருக்கார்?”

“அது…அப்பா..பெருசா ஒன்னும் சொல்லிக்கலைடா”

“ம்மா. உண்மையை சொல்லுங்க”

“உண்மையிலேயே தெரியாதுடா. ஆனா ஒரு சின்ன பிரச்சனை”

“என்ன?”

“அப்பா ஊருக்கு போற முன்னாடி ஒரு விஷயம் சொன்னார். அது சம்பந்தமா கொஞ்சம் பதட்டமா இருந்தார். அப்புறம் வெடுக்குன்னு வெளியூர் கிளம்பி போனார். அப்புறம் போன் பண்ணி வர ஏழு நாள் ஆவும்னு சொன்னார். சொல்லி ரெண்டு நாள் ஆவுது. இன்னும் அடுத்து போன் ஒன்னும் காணலை. எனக்கு பக்கு பக்குன்னு இருக்கு. நீங்க சிட்டுகுருவி பாட்டு பாடிட்டு இருக்கீங்க“

“நான் ஒன்னும் பாடலை. அவதான் பாடுனா”

அம்மாவும் பையனும் இப்படி பேசிக் கொண்டு இருக்க,

“இன்னிக்கு அவனுக்கு டியூட்டி இல்லியாம். அதான் இங்கே பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்கான் சொம்பு இல்லாம. நீ கவலை படாதம்மா. அப்பா என்ன சின்ன குழந்தையா? சீக்கிரம் வந்துருவார். அடுத்து போன் பண்ணும் போது வரும்போது எனக்கு ஹேர் கிளிப் ஏதாது வாங்கிட்டு வர சொல்லும்மா. நான் என் சொந்த கடைக்கு கிளம்புறேன். இன்னிக்கு வியாபாரம் நிறைய இருக்கும்”

அண்ணனிடம் தன் பெருமையை பறை சாற்றி விட்டு அப்பாவின் செல்லம் என்பதையும் உறுதி படுத்தி அன்னையிடம் விடை பெற்றாள் வனி. போகிற போக்கில் “பை ணா” சொல்லவும் மறக்கவில்லை அவள்.

இப்போது அன்னையின் பக்கம் நன்றாக திரும்பி அமர்ந்தான் மதிவாணன்.

“இப்ப சொல்லுங்க. என்ன விஷயம்? அப்பா எங்க போயிருக்கார்னு உங்களுக்கு தெரியுமா? அநேகமா உங்களுக்கு தெரியும். அட்லீஸ்ட் எந்த இடம்னு கெஸ்ஸிங் இருக்கும் இல்லியா? அங்கே ஏன் போயிருக்கார்னு காரணம் தெரியுமா?”

மலரின் கூம்பிய முகத்தை பார்த்துக் கொண்டே கேட்டான் மதிவாணன்.

தமிழ் பலமுறை அலுவலக ரீதியாக வெளியூர் போய் இருக்கிறார்தான், அந்த வெளியூர் பயணம் சில நாட்கள் பல நாட்கள் என்று நீண்டு இருக்கிறதுதான். இருப்பினும் இப்போது போல் மலரின் மனம் முன் எப்போதும் தவித்ததில்லை.

அது போக அப்போதெல்லாம் இப்படி மலர் புலம்பியதில்லை. அதனால் பிள்ளைகளும் இப்படி அப்போதெல்லாம் கேட்டுக் கொண்டதும் இல்லை. இப்போது மதிவாணனின் சின்ன கேள்வியில் மலர் உள்ளுக்குள் தவித்து போனார்.

தன்னுடைய குறையை கேட்கவும் ஒருவன் இருக்கிறான், அவன் அவர் ஐயிரண்டு மாதங்கள் பெற்றெடுத்த அவர் மகன் என்பதில் அவர் நெஞ்சம் பெருமையில் விம்மியது. கண்கள் கார் கால மேகமென கலங்கின. அது தன் கணவரை குறித்த கவலையினாலா அன்றி மகனை குறித்த பெருமையினாலா என்பதை அவர்தான் செல்ல வேண்டும்.

அம்மாவின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்த மதிவாணன் ஏதோ சுமாரான பதில் ஒன்று சொல்லிவிட்டு மலர் அங்கிருந்து அகன்று போவார் என்றுதான் நினைத்திருந்தான்.

இன்றைக்கு அவனுக்கு விடுமுறை கிடையாது. அவன் தான் எடுத்து இருந்தான். இன்று கயலை சந்திக்க போக வேண்டும் என்று நினைத்திருக்கிறான்.

கயலிடம் காதலை சொல்லி ஒரு நாள் தான் ஆகிறது. உடனே போய் பார்க்க வேண்டும் என உள்ளம் அரித்துக் கொண்டு இருக்கிறது. ஒருநாள் தான் ஆகிறதா அவளைப் பார்த்து? என அவன் மனம் சுணங்கினாலும் இது காதல் போடும் கட்டுப்பாடுகளில் ஒன்று அல்லவா? அதற்காகத்தான் இன்று விடுமுறை எடுத்திருந்தான். ஆனால் வீட்டில் ஒரு பூகம்பம் கிளம்பும் போலிருக்கிறதே?

மதிவாணன் மலரை கூர்ந்து பார்த்தான்.

“சொல்லும்மா. உன் மனசுல என்ன இருக்கோ அதை சொல்லு” என்று அமைதியாக கேட்டான்.

இதற்கு மேல் ஒரு தூண்டுகோல் மலருக்கு தேவையான இருக்கவில்லை. உடனே ஆதியிலிருந்து அந்தம் வரை அவர் அறிந்த விஷயங்கள் அனைத்தும் மதிவதனி குறித்து சொன்னார்.

“இப்போ அந்த மணிமொழி தம்பி நம்ம பாப்பாவை கல்யாணத்துக்கு கேக்குது போல. அது உங்க அப்பாவுக்கு பிடிக்கல. அந்த தம்பி பார்க்கிற வேலை அப்பாவுக்கு பிடிக்கலை. சொந்த கம்பெனியினாலும் அந்த கம்பெனி அப்பாவுக்கு பிடிக்கலை. தவிர அவர் ஆசிரமத்துல வளர்ந்த பிள்ளைன்னு அப்பாவுக்கு அவரை பிடிக்கல.

எதனாலன்னு உறுதியா தெரியலனாலும் மொத்தத்துல நம்ம பாப்பாவுக்கு மணிமொழி தம்பியை கட்டி வைக்கிறதுக்கு அப்பாவுக்கு சம்மதம் இல்லை. முன்ன காலத்தில நடந்த பால்ய விவாகம் பத்தி பாப்பா கிட்ட சொல்ல அப்பாவுக்கு பயமா இருக்கு. மொழி இந்த விஷயத்தை நம்ம வனி கிட்ட சொல்லிட்டாரா இல்ல அதை சொல்லி அவ மனசு மாத்துவாரான்னு அதை நினச்சு அப்பாவுக்கு குழப்பமா இருந்துச்சு.

இவகிட்ட இது விஷயமா சொல்ல நினைச்சா அதுவும் முடியல. இவளுக்கு வேற கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு பார்த்தா வேலை, வெட்டி வேலைன்னு இருக்காளே தவிர கல்யாணத்துக்கு பிடி கொடுக்கவும் மாட்டேங்கிறா. அதனால நம்ம அப்பா மணிமொழி நம்ம தங்கச்சியை விட்ரணும்னு அந்த ஜம்புவை பார்க்க போயிருப்பார்னு நான் நினைக்கிறேன். அதனால தானோ என்னவோ எனக்கும் உள்ளுக்குள்ள பயமா இருக்கு. மூட நம்பிக்கையை நானும் நம்பல. ஆனா அதெல்லாம் செஞ்சதுக்கு அப்புறம் தான் நம்ம வீடு நல்லா இருக்கு. அதுக்காக அதையே நாங்க பிடித்துக்கொண்டு இல்ல. எங்களை பத்தி நீ தப்பா நினைச்சுட கூடாதுன்னு இதை சொல்றேன்”

நீளமாக பேசி முடித்தார் மலர்.

அம்மா பேசியதை கேட்டு அதிர்ச்சியில் மூச்சு கூட விட மறந்து இருந்தான் மதிவாணன். மூச்சு விட மறந்தான் என்று சொல்வது தவறுதான். மூச்சு பாவம் அது பாட்டுக்கு போய்க் கொண்டுதான் இருந்தது. அவன் மனம் தான் ஓரிடத்தில் உறைந்து இருந்தது.

அவன் அப்பா செய்தது தவறுதான். எத்தனையோ மருத்துவ முன்னேற்றம் உள்ள இந்த காலத்தில், இந்த நகரத்தில் இப்படி ஒரு மூட நம்பிக்கை காரியத்தை அவர் செய்ததை இவனால் நம்பக்கூட முடியவில்லை.

அதுவும் பால்ய விவாகம் என்பது எத்தனை பெரிய குற்றம்? சட்டப்படி இது தவறானது என்பதோடு அதற்கு காரணமான இவனின் தந்தைக்கு அப்போது பிடிபட்டு இருந்தால் தண்டனையும் கிடைத்திருக்கும்.

காலங்கள் ஓடி இருந்தாலும் தவறு தவறு தானே? இப்போது அந்த இருவரும் மேஜர் ஆகிவிட்டார்கள். இனி அதைக் குறித்து பேசுவது சரியல்ல என உணர்ந்த அவனுக்கு இப்போது தன் அன்னைக்கு உண்மையை எடுத்துச் சொல்வது முக்கியமாகப்பட்டது.

“அம்மா அம்மா. எனக்கு ஆக்சிடென்ட் ஆனப்போ நல்ல ஹாஸ்பிடல்ல சேர்த்து நல்லா தான் பாத்துக்கிட்டீங்க. நான் ஆட்டோமேட்டிக்கா சரியாகி இருப்பேன். நிஜமா அப்டிதான் சரி ஆனேன். இட்ஸ் ஓகே. எப்டியோ நமக்கு பாப்பா கிடைச்சது லக்கு தான்.

அப்புறம் பாப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது..அப்பவும் நீங்க பார்த்த டாக்டர் அவளை நல்லாதான் பார்த்திருக்கிறாங்க.

அம்மா… அப்படியே ஜீபூம்பா போட்டதும் உடம்பு சரி ஆகிடாது. கொஞ்சம் கொஞ்சமா தான் சரியாகும். அது தான் சரி. உங்க ஜம்பு போட்ட மந்திரம் காக்கா உக்கார பனம் பழம் விழுந்த கதைதான்.

இப்போ என்ன? மறுபடியும் அவர் கிட்ட தான் அப்பா போயிருப்பார்னு சொல்றீங்களா? கஷ்டம்தான்.

உங்க கிட்ட நான் இன்னொரு விஷயம் சொல்லணும். அது என்னன்னா நீங்க நடக்க கூடாதுன்னு ஆசைப்பட்டபடி மொழி நம்ம தங்கச்சிகிட்ட கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிட்டார். ஆனா நீங்க ஆசைபட்டபடி அந்த சைல்ட் மேரேஜ் பத்தி சொல்லல”

அலட்டிக் கொள்ளாமல் சொன்னான் மதிவாணன்.

“என்னடா சொல்ற?” மலர் அதிர்ந்து போய் மகனைப் பார்த்தார்.

“சொல்றதுக்கு என்னமா இருக்கு? இந்த விஷயம் முன்னவே எனக்கு தெரியும். அதாவது மொழி நம்ம தங்கச்சியை விரும்புறது. மொழி நல்ல பையன். நல்ல படிச்சிருக்கார். நல்ல பொஷிசன்ல இருக்கார். நல்ல சம்பாத்தியம்.

ஆனால் நம்ம தங்கச்சிக்கு விருப்பம் இல்லாமல் நாம எதையும் திணிக்க கூடாதுன்னு நான் எதுவும் பேசல.

அதே நேரம் அப்பாவுக்கு இந்த சம்பந்தத்துல விருப்பம் இல்லைன்னு ஒரு சின்ன சந்தேகம் இருந்தது. எதுவும் காலத்தின் கையில் இருக்க நான் அமைதியாக இருந்தேன்.

அதே நேரம் தங்கச்சியை கண்காணிக்கிறதையும் விடல. அப்படியே என் வேலையையும் பார்த்துகிட்டேன்” என்றவன் தலையை கோதிக் கொண்டான்.

அவன் பார்த்துக் கொண்ட இன்னொரு வேலையை வேறு சொல்ல வேண்டும். பாப்போம். முதலில் இதை முடிப்போம் என நெஞ்சை தட்டிக் கொண்டவன்,

“மொழி தங்கச்சி கிட்ட பேசி சம்மதம் வாங்கிட்டார். இப்போ அப்பா கிட்ட சொல்றதுன்னு முடிவு பண்ணி இருக்கார். அப்பா ஊர்ல இருந்து வந்ததும் பேசி கல்யாணத்த முடிக்கணும்னு நாங்க பேசிகிட்டு இருக்கோம். கோபப்படாதீங்கம்மா இது தங்கச்சிக்கு தெரியாது” அன்னயை சமாதானப்படுத்த முயன்றான் மதிவாணன்.

“ஓஹோ! அவளுக்கு ஒன்னும் தெரியாதோ? ஒருத்தன்கிட்ட கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி வீட்டுல சுத்தி வர்றா, இவளுக்கு ஒன்னும் தெரியாதா? இவளுக்காகவா என் புருஷன் காடு மேடல்லாம் சுத்திகிட்டு இருக்கார். முன்னவே இதை சொல்லி தொலைஞ்சு இருந்தா எங்களுக்கு வேலை மிச்சம் ஆகி இருக்கும். பாழா போன மனுஷன் நன்றி கெட்ட பிள்ளைகளை நம்பி இப்படி ஓடா தேயராரே?”

மலர் ஏற்கனவே கணவரை காணாத சோகத்தில் இருந்தார். பிள்ளைகள் மீது செல்லமாக இருந்தாலும் கோபத்தில் இருந்தார். இப்போது மதிவாணனின் பேச்சில், பிள்ளைகள் விவரமாக இருப்பதும் தன் கணவன் ஏமாளியாக இருப்பதும் போன்ற தோற்ற மயக்கத்தை தோற்றுவித்துக் கொன்டு, கிடைத்த பலியாடான மகனை திட்டி குவித்தார் அவர்.
 
Top Bottom